ஆட்டம்-32

ஆட்டம்-32

ஆட்டம்-32

உத்ராவின் அருகே அமர்ந்திருந்த நறுமுகை அவளின் வதனத்தையே பார்த்துக் கொண்டிருக்க, அவளின் மனதில் பல பல எண்ணங்கள் சுழலாய் சுழன்று கொண்டிருந்தது.

அனைத்தும் அன்னையை பற்றியே! வாழ்வில் எத்தனை கஷ்டங்கள்!

அனைத்தையும் தனியாளாய் போராடி, இப்போது இந்த மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலையாக இருப்பவரை நினைக்க நினைக்க பெருமையாக இருந்தது பெண்ணவளுக்கு.

உத்ராவை பார்த்தாள்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இத்துடன் ஒரு தினத்துக்கு மேல் ஆகிவிட்டது. அன்னையின் வதனத்துடன் அவளை ஒப்பிட்டு பார்த்தாள்!

புருவம், நாசி, உதடு, கன்னங்கள் அனைத்தும் அன்னையை போன்று அச்சு வார்த்து இருக்க, முக வடிவம், விழிகள் இரண்டும் இமையரசியை போன்று இருந்தது.

முக்கிய அம்சமான முக வடிவமும், விழியும் இமையரசியை போன்று இருந்ததால் தான் யாராலும் எளிதில் உத்ராவையும் நீரஜாவையும் ஒப்பிட்டு பார்க்க தோன்றவில்லை.

பார்ப்போர் அனைவரும், “அப்படியே உன் அக்கா மாதிரி வர்தா” என்று தான் விஜயவர்தனிடம் கூறியிருக்கிறார்கள். அதனாலேயே வேறெந்த கேள்விகளும் முளைக்கவில்லை.

ஆனால், காரிகையவள் அழும்பொழுது, நெரியும் புருவங்களையும், துடிக்கும் இதழ்களையும், முழுதாய் சிவந்து போகும் விழிகளையும் பார்த்தால் தான் தெரியும் அவள் யாருடைய அச்சு என்று.

உத்ராவின் கரத்தை பற்றி தன் கரங்களுக்குள் வைத்த நறுமுகை ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தவளிடம், “இப்ப நீ இருக்க வேண்டிய இடத்துல தான் நான் இருக்கேன்.. அம்மா உன்னை விட்டுக் கொடுத்தா, நீ எனக்கு அம்மாவை விட்டுத் தந்திருக்க” என்ற நறுமுகையின் தழுதழுத்த குரலில், உத்ராவின் கரம் நறுமுகையின் கரத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ள, சகோதரியை பார்த்து புன்னகைத்தவள், “உத்ரா!!!” என்றழைத்தாள்.

பதிலில்லை. இமைகள் மூடியிருந்தது. ஆனால், கரத்தை மட்டும் இறுக பற்றியிருந்தாள்.

உடனே அங்கேயிருந்த நர்ஸ் உத்ராவை பரிசோதித்து, “ஐ திங்க் இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவாங்க” என்றிட, “அம்மாகிட்ட இன்பார்ம் பண்ணுங்க” என்றாள் நறுமுகை.

அடுத்த ஐந்து நிமிடங்களில் ரௌன்ட்ஸில் இருந்த நீரஜாவிற்கு விஷயம் தெரிவிக்கப்பட, மற்றொரு மருத்துவரிடம் வேலைகளை ஒப்படைத்தவர், மகளின் அறைக்குள் வர, உள்ளே வர இருந்த மற்றவர்களை, “இப்ப நான் மட்டும் போறேன்.. நான் கூப்பிடும் போது ஒவ்வொருத்தரா வாங்க” என்று மறுத்து உள்ளே நுழைந்தார்.

உள்ளே வந்தவர் நறுமுகையை பார்க்க, “அம்மா! உத்ரா..” என்று உத்ராவிடம் பார்வையை காட்டி உள்ளத்தில் உவகையும், இருவரின் பிணைப்பை நினைத்து பூரித்து போய் கனமும் இணைந்து மீற கூறி, அன்னையை அழைத்தாள்.

மறு ஜனனம் அடைந்திருந்தாள் அல்லவா! கிட்டத்தட்ட மீண்டும் தன் படிப்பால் மகளை மற்றொரு முறை பெற்றிருந்தார் நீரஜா!

நறுமுகையின் அருகே வந்தவர், உத்ராவின் கரத்தை பிடித்திருந்த நறுமுகையின் கரம் மேல் கரம் வைக்க, உத்ராவின் மூடியிருந்த இமைகளில், அவளின் கருவிழிகள் மெதுவாக அசைந்தாடியது.

அன்னையுடன் எழுந்து நின்ற நறுமுகையும் உத்ராவையே பார்த்திருக்க, மெல்ல மெல்ல விழிகளை இலேசாக திறந்தும், அரை மயக்கத்தில் மீண்டும் மூடியும் என்றிருந்தவள், விழிகளை முழுதாக திறக்க,

கிட்டத்தட்ட முப்பத்தி ஆறு மணி நேரங்களுக்கு பிறகு கண்களை விழித்தவளுக்கு அனைத்தும் மங்கலாகத் தெரிய, தான் இருப்பது மருத்துவமனை என்று புரிந்தாலும், அவளுக்கு நடந்தது அனைத்தும் சட்டென மூளைக்கு எட்டவில்லை.

கரு விழிகளை மெல்ல மெல்ல உருட்டி சூழலவிட்டவளின் பார்வை இறுதியாக நீரஜாவிடமும் நறுமுகையிடமும் பதிய, புருவங்கள் நெறிய, ஏதோ கூற வர முயன்றவள் மீண்டும் எச்சிலை விழுங்கி, “அம்மாவை பாக்கணும்” என்றாள் தழுதழுத்த குரலில்.

நறுமுகை நீரஜாவின் தோளை ஆறுதலாக பற்ற, நறுமுகையை திரும்பி பார்த்த நீரஜா, புன்னகையையே சிந்தினார். இதை அவர் எதிர்பார்த்தது தான். வருத்தப்படவில்லை. எதார்த்தத்தை ஏற்க வேண்டும் தானே.

மூத்தவளிடம், ‘இல்லை’ என்பது போல தலையாட்டியவர், “உத்ரா டூ யூ ஃபீல் பெட்டர் (Uthra, Do you feel better)” என்று வினவ, “ம்ம்” என்றவளின் தலை அசைந்தது.

உத்ராவை பரிசோதித்தவர், அவளுக்கு கொடுத்திருந்த மருந்துகளின் அளவைப் பற்றி நர்ஸிடம் கூறியவர், “இனி டோஸஸ் கம்மி பண்ணியே தாங்க” என்றுவிட்டு, அவரே உத்ராவின் கரத்தில் ஏறிக் கொண்டிருந்த சலைன் பாட்டிலை மாற்ற, எப்போதுமே செவிலியர் செய்யும் வேலையை இன்று நீரஜா செய்வதை உத்ரா கவனிக்கவில்லை.

அனைத்தையும் முடித்தவர் பெட் பாத்திற்காக (Bed bath) நின்றிருந்த செவிலியரிடம் கரத்தை நீட்டினார். முதலில் எதுவும் புரியாத செவிலியர் நீரஜா ஏதோ கேட்கிறார் என்று நினைத்தவர், “டாக்டர்?” என்று புரியாமல் பார்க்க,

“நானே பண்ணிடறேன்.. தந்துட்டு நீங்க உங்க லன்ஞ்சுக்கு போங்க” என்றவர் நறுமுகையை அர்த்தமாக பார்க்க, அன்னையின் பார்வை புரிந்தவள், பெட்டை சுற்றி நான்கு பக்கங்களிலும் திரையை மூடிவிட்டு திரைக்கு வெளியே கைகளை கட்டியபடி நிற்க, சுடுநீரில் முக்கி எடுத்த டவலை பிழிந்து மகளின் முகத்தில் தொடங்கியவர், நெற்றியில் துவங்கி உடலில் தொடர்ந்து பாதத்தில் முடித்திருந்தார்.

பாதத்தை நன்கு துடைத்து முடித்தவர், உத்ராவிற்காக வைத்திருந்த உடையை மாற்றிவிட, அரை மயக்கத்திற்கு அவ்வப்போது சென்று வந்து கொண்டிருந்தவளுக்கு, தனக்கு இதையெல்லாம் செய்து கொண்டிருப்பது நீரஜா என்பது புரிந்தாலும் அசைய முடியாத நிலை.

பழைய உடை, மற்ற அனைத்தையும் திரைக்கு வெளியே வைத்துவிட்டு, சானிடைஸ் செய்து கொண்டே வந்தவர், மகளின் தலையை நீவ, உத்ரா மீண்டும் கண் விழிக்கத் துவங்க, நறுமுகையும் திரையை விலக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்.

கண் விழித்தவளின் விழியில் இருந்து கண்ணீர் வழிய, “அம்மா!!!” என்று மெல்லமாய் உச்சரித்தவள் தன்னை அழைப்பது போன்று இருந்தாலும், அடி உள்ளத்தில் இருந்து ஆர்ப்பரித்துக் கொண்டு எழும் உன்னதமான தாய்மை உணர்வை அடக்கியவர்,

“வர சொல்றேன்” என்று வெளியே வர, அபிமன்யுவும் விக்ரமும் நின்றிருந்தனர்.

உத்ரா விழித்துவிட்டதாக இமையரசி தான் அழைத்திருப்பார் என்று சரியாக கணித்த நீரஜா அன்னையை முறைத்தவர், “நீங்க மொதல்ல வீட்டுக்கு கிளம்புங்க..” என்று அதட்ட, கழுத்தை நொடித்துக் கொண்டு தலையை திருப்பிக் கொண்டார் இமையரசி.

நீரஜாவையே பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யு உத்ராவை பார்க்க உள்ளே செல்ல எத்தனிக்க, கதவிற்கு முன் வழியை மறித்தபடி நின்ற நீரஜா, “பேஷன்ட்டுக்கு நீங்க என்ன ஆகுது?” என்று எள்ளலாக வினவ,

“நீங்க என்ன ஆகுது?” என்றான் அவனும் சளைக்காது.

“லண்டன்ல வாங்குன பர்த் சர்ட்டிபிகேட்ல தான் அவ உத்ரா விஜயகுமார். பட் இங்க இருக்க சர்ட்டிபிகேட்ல இன்னும் இவ உத்ரா விஜய்தான்..” என்றவர், “அவ கண்ணு முன்னாடி கொஞ்ச நாள் போகாத அபி..” என்று அபிமன்யுவை உத்ராவிடம் இருந்து எச்சரிக்கையாக தள்ளி நிறுத்தியவர்,

ரஞ்சனியை பார்த்து, “உன்னைதான் கூப்பிடறா.. போய் பாரு” என்று அவரை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு, தந்தையிடம் திரும்பி, “அப்பா! உங்க பொண்டாட்டியை தயவு செஞ்சு வீட்டுக்கு அனுப்புங்க” என்று கூற விக்ரமின் இதழ்கள் சிரிப்பை சிரமப்பட்டு அடக்கியது.

“நான் ஏன் போகணும்?” இமையரசி நீரஜாவிடம் எகிற,

“பின்ன? இங்க நடக்கிறதை எல்லாம் அப்டேட் பண்ணிகிட்டு இருக்கீங்களா உங்க பேரனுகளுக்கு.. இன்னொரு தடவை ஏதாவது இப்படி பண்ணீங்க அம்மானு கூட பாக்காம ஹாஸ்பிடலுக்கு உள்ளேயே விடமாட்டேன்.. இந்த எட்டப்பா வேலை எல்லாம் உங்க மருமகளுகளை அப்பப்ப மகனுககிட்ட போட்டு தர்றதோட நிறுத்திக்கோங்க” என்று அன்னையை மிரட்டிவிட்டுச் செல்ல, கோதையின் அருகே நின்றிருந்த திலோத்தமை,

“உன் மனசுல இருக்கிறது எல்லாம் அத்தை கொட்டிட்டாங்க போல ம்மா?” என்று கூறி நாக்கை கடித்து சிரிக்க, “ஷ்ஷ்” என்று மகளை அடிக்கியவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருக்க, சிம்மவர்ம பூபதிக்கும் அதே நிலைதான்.

“என்ன பேச்சு பேசிட்டு போறா பாத்தீங்களா?” இமையரசி கணவரிடம் புகைய,

“என்ன பண்றது.. எத்தனை நாள் எங்களை மாதிரியே அமைதியா இருப்பா?” என்ற கணவரை முறைத்த இமையரசி கடுப்புடன் அமர்ந்து கொள்ள, அப்போது தான் அபிமன்யு அங்கே இல்லை என்பதை கவனித்தார் சிம்மவர்ம பூபதி.

விக்ரமிடம் அவர் விழியாலேயே வினவ, அவனோ உதட்டை பிதுக்கி, ‘இல்லை’ என்று தோளை குலுக்கியவன், அவருடன் தனியாக செல்ல, “அபி ஏதாவது சொன்னானா விக்ரம்?” என்று வினவ,

“நான் எதுக்கு அவன்கிட்ட பேசணும்?” என்றவனை அவர் விசித்திரமாக பார்க்க,

“உத்ராவுக்காக கூட போனேன்.. முக்கியமா அத்தைக்காக.. அதுக்காக நாங்க பேசணும்னு அவசியம் இல்லையே” என்றவனை பார்த்தவருக்கு வந்த ஆத்திரத்தின் அளவுக்கு எல்லையே இல்லை.

‘ஈகோ புடிச்சவன்.. இவர்களை திருத்த முடியாது’ என்று நினைத்தவர், அதை பற்றி இனிமேல் இருவரிடமும் பேச போவதில்லை முடிவெடுத்துவிட்டார்.

அபிமன்யுவை தேடியவர், அவனுக்கு ஃபோனில் அழைத்து, “எங்க இருக்க அபி?” என்று வினவியவர், ஃபோனை அணைத்துவிட்டு, விக்ரமை பார்க்க அங்கிருந்த கண்ணாடியை பார்த்து தலையை கோதிக் கொண்டிருந்தவன்,

“எங்க இருக்கான் தாத்தா?” என்று வினவியவிடம் மேலே என்பது போல ஒற்றை விரலை அவர் மேலே காட்டினார்.

மருத்துவமனையின் டெரசில் இரு பாக்கெட்டிலும் கரத்தை நுழைத்து, தனது அழுத்தமான தாடையை உயர்த்தி வானைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த அபிமன்யுவின் உள்ளத்தில் சீறிக் கொண்டிருந்த சீற்றம் நிறைந்து வழிந்த ஆக்ரோஷத்தில், அவனின் ஒவ்வொரு அணுவிலும் கொந்தளித்துக் கொண்டிருந்த அக்னித் தனல்களில், மாலை நேரத்துக் கதிரவன் இந்த சித்தார்த் அபிமன்யுவின் பன் மடங்கான கோபம் தாளாது தன் செந்நிறக் கதிர்களை அச்சம் கொண்டு உள்ளிழுத்துக் கொள்ள, கருகருவென்று நொடிப் பொழுதில் மாறிப் போன வானிலையில், பறவைகளும், மற்ற ஐந்தறிவு ஜீவிகளும் அரண்டு போய் பாதுகாப்புத் தேடி மறைந்து கொள்ள, மேலே வந்த சிம்மவர்ம பூபதிக்கு முதுகு காட்டி அபிமன்யு நின்றிருந்த தோரணையையும், அழுத்தத்தையும் காண, அவனும் அவனைத் தாண்டி தெரிந்த வானை கிழித்துக் கொண்டு இறங்கிய பேரிடியைக் கண்டு, அவனை வழி நடத்தியவராய் யூகித்துக் கொண்டார், தன் பேரனின் மனதில் ஓடிக் கொண்டிருப்பது என்னவென்று.

“அபி” என்றழைத்தவரின் குரலில் திரும்பியவன், அங்கிருந்த தடுப்பில் கால் ஊன்றி கைகளை கட்டி நிற்க, “என்ன முடிவு பண்ணியிருக்க?” என்று வினவினார்.

சரியாக அரிமா பூபதி, அதியரன் பூபதி, விஜயவர்தன் மேலே வர சரியாக இருக்க, அவர்களைத் திரும்பிப் பார்த்த விக்ரமின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.

மேலே வந்தவர்களை நிதானமாக பார்த்தவனின் விழிகள் விஜயவர்தனின் மீது பதிய, சிம்மவர்ம பூபதி, “யார் இதை பண்ணாங்களோ அவன் உயிரோட இருக்கக் கூடாது.. அவன் மட்டுமில்ல இதுல சம்மந்தப்பட்ட எல்லாரும்” என்று உறுமியவரை பார்த்து தன்னுடைய கொடிய புன்னகையை உதிர்த்தவன்,

“அதை உங்க இரண்டாவது பேரன்கிட்ட கேளுங்க.. நேத்து ட்ராக் பண்ணதுல உத்ராவை தூக்கிட்டு போன காரையும் காணோம்.. காருல இருந்த ஆளுகளையும் காணோம்.. ஃபோன் வச்சு கூட யாருனாலையும் ரீச் பண்ண முடியல” கூறிவிட்டு கைகளை கட்டிக் கொண்டு சாதாரணமாய் நின்றுவிட, இத்தனை நேரம் தன்னுடன் ஒன்றும் அறியாதது போன்று முடியை கோதியபடி வந்த விக்ரமை, உடல் முழுதும் பல்லாயிரம் இடிகள் தாக்கியது போன்று அதிர்ந்து பார்க்க,

‘இத்தனையை செய்துவிட்டு இவ்வளவு அமைதியாக ஒருவனால் நிற்க முடியுமா?’ என்று பிரமிக்க வைக்கும் வகையில் நின்றிருந்தவனை கண்டு அவரால் எதுவும் பேச முடியவில்லை.

“விக்ரம்!!!” என்ற அதியரன் பூபதிக்கு அப்போது தான் நேற்று மகனது காரில் இருந்த வேட்டையாடும் ட்வெல்வ் காஜ் ஷாட் கன் (12 Gauge shot gun) நினைவு வர, “இருக்காங்களா?” என்று கேட்டவரிடம், தோரணையாக தோளை குலுக்கினான்.

விஜயவர்தனை பார்த்த சிம்மவர்ம பூபதி, “நீ என்ன முடிவுல இருக்க வர்தா” என்று வினவ அபிமன்யுவை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவர்,

“உத்ராவோட முடிவு தான் எங்களோட முடிவு..” என்றார் திடமான குரலோடு.

மகனின் மனம் அறிந்தவராய் அரிமா பூபதி, விஜயவர்தனிடம், “கல்யாணம் பண்ணி வச்சிடலாமே வர்தா” என்க,

“எதுக்கு அரிமா.. மறுபடியும் இப்படி அவளை படுக்க வைக்கவா? ரஞ்சனி அவளை இங்க அனுப்பவே வேணாம்னு சொன்ன.. நான்தான் கேக்காம உங்க யாரையும் மீறி எதுவும் நடக்காதுனு நம்பிக்கைல அனுப்பி வச்சேன்.. நீரஜா எவ்வளவு நம்பிக்கை வச்சு அவளை ஒப்படைச்சிருப்பா.. செத்து பொழச்சு இப்ப இருக்கா.. நீரஜா முகத்துல கூட என்னால முழிக்க முடியல” என்று மகளின் நிலையை எண்ணி கோபத்தில் கொதித்து பேசியவர்,

“எதுவா இருந்தாலும் உத்ரா சொல்லட்டும்” என்று விடுவிடுவென்று கீழே சென்றுவிட, அபிமன்யு அப்போதும் அசைந்தான் இல்லை.

மகனை பார்த்த அரிமா பூபதி, “உத்ராவோட முடிவை தாண்டி அவகிட்ட எதுவும் பேசாத அபி” என்று கூறிய தந்தையை, “அப்படியா?” என்பது போல புருவம் உயர்த்தி பார்த்தவன்,

“வரும்போது நம்ம ஜோசியர்கிட்ட ஃபோன் பேசிட்டு தான் வந்தேன்.. அடுத்த மாசம் நல்ல நாளாம்.. அப்பவே கல்யாணத்தை அரேன்ஞ் பண்ணிடுங்க” என்றவனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பார்த்து வைக்க, அனைத்தையும் அசட்டை செய்தவன்,

“உத்ராகிட்ட நான் பேசிக்கறேன்” என்று இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம் என திருமண பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரிமா பூபதியிடமும், அதியரன் பூபதியிடமும்,

“வீட்டுல இனிமே செக்யூரிட்டிஸ் அதிகம் பண்ணுங்க.. யாரையும் தனியா எங்கையும் அனுப்பாதீங்க.. முக்கியமா அத்தை, நறுமுகை, உத்ராவை” என்றவன் ஒரு பெரிய முடிவை எடுத்தவனாக தந்தையையும், சித்தப்பாவையும் பார்த்து, தனது தீவிரக் குரலில்,

“இரண்டு வீட்டுக்கு நடுவுல இருக்க மதிலை முதல்ல எடுத்திட்டு.. முதல்ல ப்ளான் பண்ண மாதிரி இரண்டு வீட்டுக்கும் பிரிட்ஜ் போட்டுக்கலாம்” என்றவனை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தார் சிம்மவர்ம பூபதி.

குடும்பத்தின் நெருக்கம் ஒவ்வொரு நொடியும் பிணைப்புடன் இறுகுவதை உணர்ந்தவர், பேரனின் அருகே மெல்ல மெல்லமாய் சென்று அவனின் தோளில் பெருமையாய் கை வைத்து, “உன்னையும் விக்ரமையும் பாக்க பாக்க வருத்தமாவும், கோபமாவும் இருந்தாலும்.. ஒரு நம்பிக்கை அபி எப்பவுமே உங்க மேல.. உனக்கும் உத்ராவுக்கும் இடைல என்னாச்சுனு எனக்கு தெரியாது.. ஆனா, அவளை நல்லா பாத்துப்பேன்னு தோணுது” என்றவரிடம் அபிமன்யு புன்னகைக்க, விக்ரமும் இருவரையும் பார்த்து புன்னகைத்தபடி நின்றிருந்தான்.

அங்கிருந்து அனைவரும் கலைந்துவிட, கீழ் தளத்திற்கு வந்த அபிமன்யு, அப்போது தான் அழகி இரவு உணவிற்காக, உத்ராவிற்கும், இரவு அங்கு தங்க இருந்த ரஞ்சனிக்கும் தனக்கும் டிபனை எடுத்து வந்தார்.

அன்னையை கண்டவுடன் அவரருகில் அவன் செல்ல மகனிடம் இருந்து முகத்தை திருப்பியவர், உள்ளே செல்ல அன்னையின் பின்னேயே தானும் உள்ளே நுழைந்தான்.

நறுமுகையும், ரஞ்சனியும் தான் உள்ளே உத்ராவுடன் இருந்தனர்.

தன் பின்னேயே வந்த மகனை கண்ட அழகி, “அபி! எதுக்கு உள்ள..” தொடங்கியவரை முடிக்க விடாது அன்னையின் கரம் பற்றியவன்,

“ஏன்மா என்கிட்ட பேச மாட்டிறீங்க” என்றவனின் கரத்தில் இருந்து தன் கரத்தை உருவிக் கொண்டவர், மகனை கலங்கிய விழிகளுடன் நிமிர்ந்து பார்த்து, “எல்லாரு முன்னாடியும் நான் அம்மாவா தலை குனிஞ்சு நிக்கறேன் அபி.. நீ பண்ணி வச்சிருக்க காரியத்துல” மகனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவர்,

“ஏன் அபி இப்படி பண்ண? அவ வீட்டுலையே இருந்திருந்தா இப்படி எல்லாம் ஆகியிருக்குமா?” என்று மனம் பதைபதைக்க கேட்டவர், “உன்னை பெத்ததை நினைச்சு அம்மாவா எவ்வளவு பெருமை பட்டிருக்கேன் தெரியுமா? ஆனா, இந்த ஒரு காரியம் என்னை ரொம்ப கூனி குறுக வச்சிடுச்சு அபி..” என்றவரிடம், எதற்கும் யாருக்கும் அசையாத அபிமன்யுவின் மனம் அசைந்தது.

நீரஜா, நறுமுகை, உத்ரா, திலோத்தமையின் மேல் கொண்ட பாசமும் அளவு கடந்தது என்றாலும், அதில் யாரிடமும் நின்று இப்படி அவன் கேட்டதில்லை. யாருக்கும் அடங்காத அஞ்சா நெஞ்சம் அன்னையிடம் அசைந்தது.

“அம்மா! அவளுக்கும் எனக்கும் சண்டை வந்தது உண்மைதான் ம்மா.. பட் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. ஐ லவ் ஹெர் ம்மா” என்றவனை ஒரு எதிர்பார்ப்புடன் ஏறிட்டவர் நீர் ததும்பும் விழிகளுடன்,

“அப்ப உத்ராவை கல்யாணம் பண்ணி நல்லா பாத்துக்க அபி” என்று மகனின் விழிகளை ஊடுருவி பார்த்தபடியே கூறியவரிடம், வார்த்தைகளில் அழுத்தம் கூட, நடந்தே தீரும் என்ற தொணியில், “அடுத்த மாசம் பிப்ட்டின்த் மேரேஜ்” என்று உடும்பின் உறுதியோடு அபிமன்யு கூறிய அடுத்த விநாடி,

“அந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்” என்ற உத்ராவின் ஆத்திரம் சிதறிய குரலில், மகனைத் தாண்டி அழகி உத்ராவை எட்டிப் பார்க்க, உள்ளே வந்தவுடனே அபிமன்யுவின் குரலில் கண் விழித்திருந்தவள், அவன் திருமணம் என்றதும் கொதித்து எழுந்துவிட்டாள்.

அபிமன்யு அவளை சாதாரணமாக தலையை மட்டும் திருப்பிப் பார்க்க, அன்னையிடம் இருந்து டிபனை வாங்கியவன், “நான் தனியா பேசணும்.. கொஞ்சம் எல்லாரும் வெளிய இருங்க” என்றவனின் கட்டளைக் குரலில்,

“எனக்கு உங்ககிட்ட பேச சுத்தமா இஷ்டம் இல்ல.. வெளிய போங்க” என்றவள் அருகிலிருந்த காலி சலைன் பாட்டிலை எடுத்து அபிமன்யுவின் மீது ரௌத்திரத்தில் எறிய, அசராது அதை கரத்தில் பிடித்தவன், அனைவரையும் பார்த்து,

“வெளில போக சொன்னேன் எல்லாரையும்” என்றவனின் ஆளுமையில் நறுமுகையும், அழகியும் வெளியேற, அபிமன்யுவிடம் ஒவ்வொரு அடியாய் எடுத்து வந்த ரஞ்சனி,

“முதல்ல உங்களை நம்ப தோணல.. இப்ப ஏதோ நீங்க உள்ளுக்குள்ள படற கஷ்டம் புரியறதுனால விட்டுட்டு போறேன்..” என்றவரின் விழிகள் தன் மேல் தெரிந்த நம்பிக்கையிலும், மகளின் மேல் கொண்ட பாசத்திலும் தவித்ததில், “ம்ம்” என்று குரலை செருமியபடி பதிலளித்தவனிடம் புன்னகையை உதிர்த்தவர், மகளை திரும்பிப் பார்த்தபடி வெளியே செல்ல, அபிமன்யுவின் அவளோ, எதிரில் இருப்பவனை எரித்துப் பொசுக்கிவிடும் அளவில் ஆத்திரத்துடன் அமர்ந்திருந்தாள்.

அன்னை கொண்டு வந்த பையில் இருந்த தட்டை எடுத்து வைத்தவன் அவளுக்கு இரண்டு இட்லிகளை தட்டில் வைத்து, தன்னவளின் அருகே கொண்டு சென்றான்.

அருகே சென்றவன், “வி ஹாவ் டு டாக் லாட் (We have to take lot).. பட் பர்ஸ்ட் சாப்பிடு” என்றவன் இட்லியை பிட்டு அவளுக்கு ஊட்டிவிட செல்ல, உள்ளம் முழுதும் ருத்ரம் ஆக்கிரமிக்க, மென் வதனம் வன்மையில் அனல் கொதிக்க, கோபம் அளவைக் கடந்திருக்க, அபிமன்யுவின் கரத்தில் இருந்த தட்டை, அதில் இருந்த உணவுகள் சிதறியடிக்க சினத்துடன் தள்ளிவிட்டாள் அவனின் உத்ரா!

error: Content is protected !!