ஆட்டம்-37
ஆட்டம்-37
ஆட்டம்-37
அபிமன்யு-உத்ராவின் திருமணங்கள் இனிதே முடிவடைய, அதனைத் தொடர்ந்து இருந்த மற்ற சம்பிரதாயங்கள் சிலதை அங்கேயே முடித்தவர்கள் மணமக்களை அழைத்து வர, வீட்டை அடைந்ததும் இருவரையும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து பால் பழம் சாப்பிட வைக்க, உத்ராவிடம் வந்த இமையரசி அவளை அழைக்க, அவளின் கரத்தை இறுக்கமாக பற்றியிருந்தான் காலை அவளைத் தன் மனைவியாக்கி இருந்த அவளது பிடிவாதக் கணவன்.
பேத்தியின் கரத்தை பேரன் விடாது பிடித்திருப்பதை கண்ட இமையரசி, “அபி! அவ ரெஸ்ட் எடுக்கட்டும்.. இரண்டு நாளா சரியா தூங்கியிருக்க மாட்டா..” என்று கூற அவளின் கரத்தை மென்மையாய் விடுவித்தவன், தனது அறைக்குச் சென்றுவிட, உத்ரா கீழே இருந்த அறைக்குள் சென்று தலையில் இருந்த அலங்காரங்களை பிரிக்கத் துவங்கினாள்.
‘ஹப்பா எவ்வளவு வெயிட்டா இருக்கு’ ஜடையை பிரித்தவள் தன் முடியை பார்க்க, அதுவோ இரண்டு நாட்களாக மேக்கப் ஆர்ட்டிஸ்டின் டூல்ஸிலும், மௌஸிலும் அகப்பட்டு ஏதோ மாதிரி இருக்க, அழுந்த சீவி வெறுமனே பின்னியவள் அங்கிருந்த படுக்கையில் விழ அப்போது தான் கால்வலி, தூக்கம், அயர்வு என எல்லாம் அவளுக்கு உணர முடிந்தது.
‘உப்ப்ப்..’ என்று தலை மேல் கை வைத்தவள் மணியை பார்க்க அதுவோ பதினொன்றரை தான் ஆகியிருத்தது. அபிமன்யுவின் மனைவியாகி ஆறு மணி நேரங்கள் ஆகியிருக்க தங்கையை அழைத்தவள், “மித்து! என்னோட ட்ராலி பாட்டி ரூம்ல ஒண்ணு இருக்கு.. அப்படியே தள்ளிட்டு வாடி” என்று கேட்க,
“முடியாது போடி.. நான் மாமாகிட்ட பேச போறேன்” என்றவள் வேண்டுமென்றே சகோதரியை வெறுப்பேற்றிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க, எது கூறினாலும் பதிலடி கொடுக்கும் சகோதரியிடம் இருந்து பதிலே வராது இருக்க, யோசனையுடன் மித்ரா திரும்ப, அவளை பார்த்து வெறுமையாக புன்னகைத்த உத்ரா,
“நானே எடுத்துக்கறேன் விடு” என்று கூறியவளின் அருகே சென்ற மித்ரா, கட்டிலில் அமர்ந்திருந்த அக்காளின் அருகே அமர்ந்து,
“ஏன் இப்ப எல்லாம் என்கிட்ட சரியாவே பேச மாட்டிறா? சண்டை போட மாட்டிற? நான் மாமாகிட்ட பேசறது புடிக்கலையா?” என்று கேட்க, தங்கையை பார்த்து புன்னகைத்த உத்ரா, ‘இல்லை’ என்பது போல தலையசைக்க,
“அப்புறம் என்னாச்சு உனக்கு?” வினவியவள் உத்ராவின் நாடியை பற்றி நிமிர்த்தி, “ஏதாவது பிரச்சனையா?” என்று வருத்தமும், பதட்டமுமாக கேட்க, அவளின் கரத்தைப் பிடித்து இறக்கிய உத்ரா,
“மித்து! நான் உன்னை குப்பை தொட்டில இருந்து எடுத்திட்டு வந்ததா சொல்லி அழ வச்சுட்டேன் இருப்பேன் ஞாபகம் இருக்காடி” வினவியவள்,
“ஆனா இப்ப எனக்கு தான்..” என்றவளின் வாயில் படீரென்று அடித்த சிறியவள்,
“லூசு மாதிரி பேசாத.. அப்புறம் அடிச்சிடுவேன்.. இரண்டு அப்பா அம்மா இருப்பாங்கனு சந்தோஷப்படுவியா.. உக்காந்து கண்டதையும் யோசிச்சுட்டு இருக்கா” என்று திட்டியவள் அக்காளை அணைக்க, உத்ராவும் மித்ராவை இறுக அணைத்துக் கொள்ள,
“இப்ப யாருகிட்ட என்ன கேக்கறதுனே தெரியலடி.. எதுவா இருந்தாலும் நீரஜா அம்மாகிட்ட கேக்கணுமா ரஞ்சனி அம்மாகிட்ட கேக்கணுமானு தெரியல மித்து” என்று கூற, அக்காளிடம் இருந்து குறும்புடன் விலகிய மித்ரா,
“அபி மாமாகிட்ட கேக்கணும்” என்றவளை முறைத்த உத்ரா, “மூடிட்டு வெளிய போடி எருமை” என்று திட்ட,
“நீ போடி பிக்(pig)” என்று எழுந்து பதிலுக்குத் திட்டியவள், அக்காளை இறுக அணைத்து அவளின் கன்னத்தை வேறு கடித்து வைக்க, “ஸ்ஸ்ஆஅ!” சிறு குரலில் கத்திய உத்ரா,
“மாடு! மாடு!” என்று தங்கையை அடிக்க, அனைத்தையும் வாங்கிக் கொண்டு பழிப்பு காட்டிவிட்டு சென்றுவிட்டாள் அந்த சின்னசிட்டு.
உத்ராவின் ட்ராலியை எடுத்து வந்தவள் உள்ளே வைத்துவிட்டுச் செல்ல, உள்ளே வந்த ரஞ்சனி, “உத்ரா! சாயிந்திரம் வரைக்கும் இந்த முகூர்த்த புடவையை மாத்தாத?” என்றவர் மகளின் தலையை பாத்து,
“என்னடி இப்படி சீவியிருக்க?” என்று கேட்க, “ம்மா! போம்மா.. எப்ப பாரு ஏதாவது வந்து பேசிகிட்டே” என்று வள்ளென்று விழுந்தவளை முறைத்த ரஞ்சனி,
“சும்மா சும்மா என்னை எதுக்கு குதற்ற.. சொன்னதை செய்” என்று திட்டிவிட்டுப் போக, அப்படியே படுக்கையில் விழுந்தவள் கோபத்துடனே தூங்கிப் போக, இரண்டு மணி நேரம் கழித்து அவளை வந்து எழுப்பிய கோதை,
“வா உத்ரா.. சாப்பிடலாம்.. எல்லாரும் உனக்காக தான் வெயிட் பண்றாங்க” என்றிட விழிகளை சிரமப்பட்டு திறந்தவள், “அத்தை ரொம்ப தூக்கமா வருது.. செம டயர்டா இருக்கு” என்று மீண்டும் உறங்க முயல,
“கண்ணுல்ல.. வந்து சாப்பிட்டு மறுபடியும் தூங்கு.. தாத்தா திட்டுவாருமா எங்களை,, வந்து சாப்பிடு” என்றழைக்க, சலிப்புடனே எழுந்தவளின் புடவை மாராப்பு முழுவதும் ஒரு பக்கம் சென்றிருக்க, அதை சரி செய்துவிட்ட கோதை,
“உத்ரா புடவை எல்லாம் கட்டுனா பாத்து கட்டணும் சரியா.. இங்க பாரு எப்படி வந்திருக்குன்னு.. நீயும் அபியும் இருக்கும் போதுன்னா பரவாயில்ல.. மத்தவங்க யாராவது இருந்தா” என்று கூறியபடியே அவளின் புடவையை சரி செய்துவிட்டு, அவளின் வதனத்தைப் பார்க்க கொட்டாவி விட்டபடியே கண்களை கசக்கிக் கொண்டிருந்த உத்ராவை பார்த்தவருக்கு அவள் இன்னமும் சிறு பெண் போலவே தெரிய,
“உத்ரா! அபி பாக்கதான் அழுத்தமா இருப்பான்டா.. பிடிவாதம் அதிகம் தான்.. அது ஆம்பிளைகளுக்கு மட்டும் இல்ல இந்த வம்சாவழியில பொறந்த பொண்ணுக்கும் இருக்கு.. உங்க அம்மாவே அதுக்கு எக்ஸாம்பிள்.. நீதான் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கணும்” என்று கூற, தலையை நான்கு பக்கங்களிலும் ஆட்டி வைத்தவள் முகத்தை கழுவிவிட்டு வந்து தலையை ஒழுங்காக சீவி, பன்னீர் ரோஜா இதழில் இருந்த தண்ணீர் போன்று இருந்த வதனத்தைத் துடைத்தவள் எதுவும் போடாது, வெறும் நெற்றிப் பொட்டையும் நெற்றி வகிட்டில் குங்குமத்தையும் வைத்து முடித்து வெளியே வந்தவளுக்கு, அனைவரும் சாப்பிடாது தனக்காக காத்திருப்பது புரிய, டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவள், அனைவரையும் மன்னிப்புக் கேட்கும் பார்வை பார்க்க, “நல்ல தூக்கமா?” என்று கேட்டு வந்த உறவுக் கார பாட்டி ஒருவர்,
“இப்பவே தூங்கிக்க.. அப்புறம் உன் புருஷன் தூங்கவிட மாட்டான்” என்று குறும்பு பேசிவிட்டு செல்ல, உத்ராவுக்கு அந்த மூதாட்டியை சாத்தலாமா என்றிருந்தது.
வலுக்கட்டாயமாக புன்னகைத்து வைத்தவள் பரிமாறப்படும் உணவுகளை உண்ண, காட்டுப் பசி போல, விஜய்யின் அருகே அமர்ந்திருந்த நீரஜாவிற்கு தான் சாப்பாடே இறங்கவில்லை. மகளை தாரை வார்க்கும் பொழுது அவரிடம் தலையாட்டியவர் அவரிடம் இப்போது வரை ஒரு வார்த்தை பேசவில்லை.
பேச முடியவில்லை! பேச தெரியவில்லை! பேச வரவில்லை!
இளைய மகளின் பார்வை தன் மேல் படிவதை உணர்ந்தவர் அரைகுறையாக சாப்பிட்டு முடித்து எழ, நீரஜா எழுந்து செல்வதையே பார்த்த விஜய், சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவிட்டு வர, விஜயவர்தன் அவரை பார்க்க, இவரும் அவரைப் பார்க்க இருவருக்கும் தனிமை தேவைபட்டது.
இருவருமே எதுவும் பேசாது வீட்டின் பின்பக்கம் செல்ல, நண்பனை இறுக அணைத்த விஜயவர்தனின் முதுகு அழுகையில் குலுங்க, விஜய்யும் அவரை இறுக அணைத்துக் கொள்ள, “உன்னை இந்த ஜென்மத்துல மறுபடியும் பாப்பேன்னு நினைச்சு கூட பாக்கல விஜய்” என்று கண்ணீருடன் கூற,
“நானும் உங்களை பாப்பேன்னு நினைக்கலடா” என்று தழுதழுத்த குரலில் கூறியவரிடம் இருந்து விலகிய விஜயவர்தன், “என்னடா ஆச்சு?” என்று கேட்க, ஒரு புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்தவர்,
“பொறுமையா அதை பத்தி பேசலாம் வர்தா.. உள்ள எல்லாரும் இருப்பாங்க” என்று கூற, இருவரும் உள்ளே ஒன்றாய் வர, விஜயவர்தனின் செவியருகே சென்றவர்,
“ஆமா நீரஜா ரூம் எங்க இருக்கு?” என்று கேட்டு மாடிப்படிகள் ஏற, வரவேற்பறையில் அமரந்திருந்த விக்ரம் அபிநந்தன் தனது வாள் போன்ற கூர் விழிகளால் விஜய்யையே பார்க்க, சாப்பிட்டு முடித்துவிட்டு மேலே யாருடனோ ஃபோனில் உரையாடிக் கொண்டிருந்த அபிமன்யு, மேலே வரும் விஜயவர்தனையே விடாது தன் கழுகுக் கண்களால் துளைத்துக் கொண்டிருக்க,
தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யுவின் பார்வையை சளைக்காது சந்தித்து, அவனை கடந்து சென்றவர் மனதுக்குள், ‘சின்ன வயசுல இருந்து இன்னும் மாறல போல.. என் பொண்ணுகளும் முக்கியமாம் என் பொண்டாட்டியும் முக்கியமாம்’ மனதுக்குள் பொசசிவ்நஸ்ஸில் இரு மருமகன்களையும் திட்டியவர், ‘இந்த வயசுல இவங்க அத்தையை கூட்டிட்டு ஹனிமூனா போக போறேன்’ என்று கடுப்புடன் நினைக்க,
அந்த இரு சகோதரர்களையும் படைத்த பிரம்மனே, “அட போப்பா.. இவனுக நல்லவனுகளா கெட்டவனுகளானு படைச்ச எனக்கே கணிக்க முடியல” என்று சலித்துக் கொண்டார்.
நீரஜாவின் அறைக்குள் நுழைந்த விஜய், கதவைத் தாளிட, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து மேசையில் தலை சாய்த்திருந்த நீரஜாவின் விழிகளில் இருந்து கண்ணீர் ஒரு பொட்டு வழிய, தன்னவளின் அருகே சென்றவர் நீரஜாவின் தலையை வேதனையுடன் வருட, அவரின் விசும்பல் அதிகம் தான் ஆனது.
தன்னவளின் கண்ணீரை பார்ப்பதற்கா அவர் இத்தனை நாட்கள் அந்த நரகத்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு படாதபாடு பட்டார்.
அவரின் தலையை வருடிக் கொடுத்து தோளை அழுத்தமாக பிடித்தவர், “அம்மாடி கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்க, இத்தனை நாள் தனது காதல் இல்லாமல் போய்விட்டது, அதுவும் தன்னுடைய விஜய் இந்த உலகில் இல்லாமல் போய்விட்டார் என்று தினமும் உயிர் போகும் வலியை அனுபவித்துக் கொண்டிருந்தவருக்கு, அவரின் வார்த்தைகளில் உள்ளுக்குள் இருந்த துன்பங்கள் சுனாமியாய் எழ, சடாரென அவர் எழுந்த வேகத்தில் அவர் அமர்ந்திருந்த நாற்காலி படீரென்று விழ, விஜய்யின் நெஞ்சத்தில் தஞ்சம் புகுந்தது அந்த பெண் சிங்கம்.
மகள்கள் உலகம் என்றால், அவர் உயிர் அல்லவா!
தனக்கு நடந்ததை நினைத்து ஆக்ரோஷத்துடன் அழுது கொண்டு அவரின் சட்டையை இறுக பிடித்துக் கொண்டே, “ஏன் விஜய் என்னை இப்படி தனியா விட்டுட்டு போனீங்க.. நீங்க இல்.. இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா.. எத்தனை வருஷத்தை இழந்திருக்கோம் தெரியுமா?” என்று கேட்டவர் அவரை நிமிர்ந்து பார்த்து கேவலுடன்,
“உங்களை இழந்தப்ப பாதி செத்துட்டேன்.. உத்ராவை கொடுத்தப்ப மீதி போயிடுச்சு.. நறுமுகை மட்டும் இல்லைனா பைத்தியம் ஆகியிருப்பேன்” என்றவர்,
“நீங்க இல்லாம இந்த சொசைட்டீல ரொம்ப கஷ்டம் விஜய்.. அப்பாக்கு நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கலைனு கோபம்” என்றவர் அவர் சொத்தை உத்ரா பெயருக்கு எழுதி வைத்ததை எல்லாம் கூறி,
“நானே இந்த ஹாஸ்பிடல்ல இவ்வளவு தூரம் கொண்டு வந்தேன் விஜய்” என்று மூச்சு வாங்க மெதுவாக கூறியவர்,
அவரின் நெஞ்சில் மேலும் புதைந்தது, “தனியா இருக்கவ தானே.. இவளுக்கு அந்த ஆசை எல்லாம் இல்லாமையா போயிடும்னு எத்தனை பேர் தப்பா பேசி, தப்பா பாத்திருக்காங்க தெரியுமா? அப்பா, அண்ணன், அண்ணன் பசங்கன்னு எல்லாரும் இருந்ததுனால எவனுக்கும் நேரா கேக்க தைரியம் இல்ல.. இல்லைனா..” என்றவருக்கு அதரங்கள் துடிக்க, நீரஜாவை ஒரு கரத்தால் இறுக அணைத்து, மறு கரத்தால் கன்னம் பற்றி நிமிர்த்தியவர்,
“ரொம்ப ஸாரி அம்மாடி” என்று கேட்டு அவரின் நெற்றியில் முத்தமிட, அவரின் கன்னம் தொட்டவர், “இத்தனை நாள் எங்க இருந்தீங்க? என்ன ஆச்சு?” என்று தவிப்புடன் கேட்க,
அவரின் நெற்றியோடு நெற்றி முட்டியவருக்கு தன்னவளின் அழுகையில் விழிகள் கலங்க, “எல்லாம் கெட்ட கனவு.. எதையும் கேக்காத.. நேரம் வரும்போது நானே சொல்றேன்” என்றவரிடம், ‘சரி’ என்று தலையாட்ட, நீரஜாவின் நெற்றியில் மீண்டும் அழுத்தமாய் அவர் தன் இதழை பதிக்க, இருவரின் ஆன்மாவும் ஒன்றோடு ஒன்று கலந்துவிட்ட திருப்தி இருவருக்கும்.
‘ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்’ என்பது பொய்! காதலும் புரிதலுமே இறுதி வரை மெய்!
நீரஜாவின் முகத்தையே பார்த்திருந்தவர், “அம்மாடி எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு தெரியுமா.. இவ்வளவு பெரிய ஆளா நீ நிக்கறதை பாக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு.. அதுவும் நம்ம பொண்ணுகளை ஒரு நல்ல பசங்ககிட்ட ஒப்படைச்சிருக்கோம்” என்றிட, சலாரென கணவரை நிமிர்ந்து பார்த்தவர்,
“அதை மட்டும் சொல்லாதீங்க விஜய்.. எவ்வளவு கஷ்டபடுத்திட்டாங்க தெரியுமா நம்ம பொண்ணுகள.. நறுமுகை ஒரு வருஷம் கஷ்ட பட்டானா.. அதை ஒரே நாள்ல உத்ரா அனுபவிச்சா.. செத்து பொழச்சு வந்தா என் கைக்கு.. ஆனா, இரண்டு பேருக்கும் வலி ஒண்ணு தானே” என்ற மனையாளின் நாசி கோபத்தில் மிளகாயாய் சிவந்து போனதை ரசித்தவர், அவரின் நாசியில் முத்தமிட்டு,
“என்ன அம்மாடி அதிசயமா இருக்கு.. இரண்டு பேர் மேலையும் கோபம்லாம் வருது.. இடுப்புலையே தூக்கி வச்சுட்டு இருந்தியே” என்றவரின் தோளில் அடித்தவர்,
“அவங்க இரண்டு பேரும் பண்ணி வச்ச வேலைக்கு அவங்களை அடிக்காம இருக்கிறதே பெருசு” என்று முகம் சினத்தில் தெறிக்க கூறியவரின் இடுப்பை சுற்றி போட்டு அவர் பிடிக்க, கூச்சத்தில் நெளிந்தவர், அவரை நிமிர்ந்து பார்த்து,
“என்னலாம் ஆச்சு தெரியுமா?” என்று ஒன்று விடாமல் கணவரிடம் ஒப்பித்து முடித்து, “நம்ம நறு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா தெரியுமா.. அவளை நான் எவ்வளவு பாசமா வளத்தியிருப்பேன்.. உங்க இரண்டு பேர் இடத்தை நறு மட்டும் தான் எனக்கு தந்தா.. ஒவ்வொரு பொண்ணும் ஆசையோட கல்யாணமான இரவை எதிர்பார்த்திருப்பாங்க விஜய்.. ஆனா எப்படி அழுதுட்டு ஓடி வந்தா தெரியுமா.. அதுக்கு அப்புறம் ஒரு ஸாரி கூட விக்ரம் நறுகிட்ட கேக்கல.. உள்ளுக்குள்ள கோபமா இருந்தாலும் விக்ரம் மேல இருந்த பாசத்துனாலையும் நறுக்காக அமைதியா இருந்தேன்..
அதைவிட அபிமன்யு.. உத்ராவை எங்க எதுக்கு கூட்டிட்டு போனானே தெரியல.. ஆனா, அங்க ஏதோ பெருசா இரண்டு பேருக்கும் சண்டை நடந்திருக்கு.. அவளை காணோம்னு சொன்னோன அம்மாவா அதை வெளிய காட்டிக்க முடியாமா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் தெரியுமா.. உள்ளுக்குள்ள எவ்வளவு பதட்டமா இருந்துச்சு தெரியுமா.. என் கையில திரும்பி எப்படி வந்தா தெரியுமா விஜய்.. உடம்புல ஒரு ட்ரெஸ் இல்ல என் பொண்ணு உடம்புல.. அம்மாவா உயிர் போயிடுச்சு.. அப்புறம் சிபிஆர் பண்ணி அவளை கொண்டு வந்தப்ப அவளை மறுபடியும் பெத்து எடுத்த மாதிரி இருந்துச்சு.. இவ்வளவையும் பண்ணிட்டு வந்து அமைதியா நின்னா நான் இரண்டு பேரையும் சும்மா விடுவனா?” என்று கோபத்தில் இரைந்தவரின் நெற்றியை நீவிவிட்ட விஜய்,
“நடந்த எல்லாம் எனக்கும் சொன்னாங்க.. அவங்க இரண்டு பேரும்.. பட் அம்மாடி.. நடந்ததை மாத்த முடியாது.. எனக்கும் கோபம் வந்துச்சு.. இரண்டு பொண்ணுகளையும் பாக்காதப்பவே எனக்கு கோபம் வந்தப்ப.. கண்டிப்பா இரண்டு பேரையும் பக்கத்துல இருந்து பாத்த உனக்கு கொலை வெறியே வரும்.. ஆனா, எல்லாமே அவங்கவங்க வாழ்க்கை அம்மாடி.. இப்ப என் மேல எவ்வளவு கோபம் வரணும் உன் அப்பாக்கு?” என்று கேட்க,
“உங்க மேல எதுக்கு கோபம் வரணும்?” என்று வெடுக்கென்று கேட்டவரின் குரலில் புன்னகைத்தவர்,
“உன் பொண்ணுக பட்ட கஷ்டத்துக்கே உனக்கு இவ்வளவு கோபம் வருது.. என்னோட அம்மாடி இத்தனை வருஷமா பட்ட கஷ்டத்துக்கு அவருக்கு கோபம் வராதா?” என்று நீரஜாவின் கன்னங்களை அவர் வருட, அவரின் கரத்தை தட்டிவிட்ட நீரஜா,
“பர்ஸ்ட் இடுப்புல இருந்து கை எடுங்க.. கூச்சமா இருக்கு” என்று நெளிந்தவரின் இடையை மேலும் உடும்பாய் இறுக்கி பிடித்த அவரின் விஜய், “இரண்டு பொண்ணுக இருக்கு.. இப்ப போய் கூச்சமா?” என்று கேலி செய்ய,
“ஆமா, பக்கத்துல வராமையே அவளை என்கிட்ட தந்துட்டு போயிட்டீங்க.. இதுல கல்யாணம் ஆகியிருந்தா ஒரே பிரசவத்துல பத்து குழந்தை பிறந்திருக்கும்” என்று பதிலுக்கு கிண்டல் செய்ய, பல் வரிசை தெரிய அழகாய் சிரித்தவர், நீரஜாவின் இதழ்களில் இதழ் பதித்துவிட்டார்.
நீண்டதொரு முதல் முத்தம்!
காலம் கடந்தும் காதல் மறக்காத முத்தம்!
மொத்தத்தில் ஆண் சிங்கத்திடம் பெண் சிங்கம் சரண்டைந்தது!
தன்னவளின் பட்டு இதழ்களின் மென்மையை அறிந்தவர் அவரிடம் இருந்து விலக, விழிகளை மூடி இன்னமும் முதல் இதழொற்றலில் இருந்து வெளி வராது நின்றிருந்த நீரஜாவின் இதழ்கள் படபடப்பில் நடுங்க, அவரின் நாடி பற்றி நிமிர்த்தியவர், “அம்மாடி” என்றழைக்க, “ம்ம்” என்றவர் விழிகளை திறந்தார்.
“கீழ போகலாமா.. நான் மேல வரும்போதே என்னோட இரண்டு வில்லனுகளும் பாத்துக்கிட்டே இருந்தாங்க” என்று கேலி செய்ய, அவரின் கரத்தில் பட்டென்று அடித்தவரை மேலும் தன்னுடன் இறுக்கி நிற்க வைத்தவர்,
“உனக்கு தான் அவங்க மேல கோபம்ல.. அப்புறம் ஏன் அடிக்கறே.. அடி மனசுல அவ்வளவு பாசம்?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி அவர் வினவியதில், அவரிடம் இருந்து விலகியவர், குடுகுடுவென அறையில் இருந்து வெளியே வர, வெளியே அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த அபிமன்யுவை பார்த்ததும், சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொண்டு தலையை வேறு பக்கம் திருப்பியபடி தனது தோரணை குறையாது நடந்து செல்ல,
அபிமன்யு, “அம்மாவும் பொண்ணும் ஒரே மாதிரி.. இந்த வீராப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல” என்று வாய்விட்டே கூற, அது செவிகளில் விழுந்தாலும் விழாதது போன்று அங்கிருந்து அகன்றவரை தொடர்ந்து விஜய்யும் வெளியே வர, அபிமன்யு நிற்பதை பார்த்தவர்,
‘இன்னுமா இங்க இருந்து போகல..’ என்று நினைத்தவர் சிகையை ஸ்டைலாக கோதியபடியே அங்கிருந்து அகல, அபிமன்யுவின் இதழுக்கிடையில் புன்னகை தவழ்ந்தது. இன்று காலையில் நடந்தது அனைத்தையும் நினைத்து பார்த்தது அவனின் மனம்.
திருமணத்தில் பேசியவர்களின் வாயை அடைத்திருந்தான் விக்ரம்!
உத்ராவை தாரை வார்த்து கொடுத்த பின் ஐயரிடம் இருந்த மைக்கை வாங்கியவன், “உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்ல எங்க பேமிலிக்கு கடமை இருக்கு” என்று கூற அனைவரும் அவனையே எதிர்பார்ப்பும் ஆவலுமாய் பார்த்து வைக்க, ‘இதை மட்டும் நல்லா காதை தீட்டி கேளுங்கடா’ உள்ளுக்குள் நினைத்தவன், புன்னகை மாறாது,
“எங்க அத்தையை உங்க எல்லாருக்குமே தெரியும்.. அவங்க கல்யாணம் நின்னு போனதும் இங்க நிறைய பேருக்கு தெரியும்.. விஜய்வர்தன் மாமா எங்க தாத்தா பாட்டிக்காக கல்யாணத்துக்கு சம்மதிச்சு, கடைசியா அத்தைக்கு அவரோட காதல் தெரிஞ்சதுனால அவங்க தான் இவங்களை யூ.எஸ் அனுப்பி வச்சாங்க.. இங்க ஒரு கல்யாணத்துக்கு தேவை இரண்டு பேரோட மனப்பூர்வமான சம்மதம் மட்டும் தான்.. இதுல யாரோட தப்பும் சொல்ல போனா இல்ல.. அத்தை அடுத்து வெளியூர்ல படிக்க போனப்ப தான் இவரை மீட் பண்ணாங்க.. ஹீ இஸ் டாக்டர் விஜய். மாமாவை மீட் பண்ணி தாத்தா சம்மதத்தோட ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க..” என்றவரன் கூட்டத்தை முழுதாக ஒருமுறை பார்க்க, பாதி பொய் மீதி மெய்யை பேசிக் கொண்டிருந்த அந்த சாணக்கிய ஜாம்பவானின் தந்திரமிக்க பேச்சில் மொத்த குடும்பமும் உறைந்து போயிருந்தது.
“அப்பவே சொல்லாம இப்ப சொல்றோமேன்னு தானே உங்க கேள்வினு புரியுது.. இந்த காலம் மாதிரி அந்த காலம் இல்ல, எல்லாத்தையும் ஏத்துக்கிறதுக்கு.. அதுவும் இல்லாம எங்க பாட்டி ஹார்ட் பேஷன்ட்” என்றிட, இமையரசிக்கோ, ‘என்னையை ஏன்டா இழுக்கற” என்றே இருந்தது.
“இவனை பாத்தீங்களா.. என்னை பேஷன்ட்னு ஊருக்கு எல்லாம் சொல்றான்” கணவரின் காதை இமையரசி கடுப்புடன் கடிக்க, அவரோ சிரமப்பட்டு சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தார்.
“அதுவும் இல்லாம மாமாக்கு சொந்த கால்ல நிக்கணும்னு ஆசை.. அதனால யூ.எஸ் போயிட்டாரு.. அப்ப இரண்டு பேருக்கும் பிறந்த பொண்ணு தான் உத்ரா.. அப்பதான் மாமாக்கு ஆக்ஸிடென்ட் ஆகி நினைவை இழந்திட்டாரு.. இங்க நறுமுகையும் வந்த அப்புறம் இரண்டு பேரையும் பாத்துட்டு ஹாஸ்பிடல்ல பாத்துக்க முடியலைன்னு உத்ராவை அங்க கொடுத்து விட்டாங்க.. அங்க உத்ராவை பாத்துக்கிட்டது எல்லாமே வர்தன் மாமாவும் ரஞ்சனி அத்தையும் தான்.. இப்ப ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் விஜய் மாமாவுக்கு நினைவு திரும்புச்சு.. பெத்தவங்க இவங்களா இருந்தாலும்.. வளத்தவங்க இவங்க.. அதுதான் இரண்டு தம்பதியா இருந்து உத்ராவை தாரை வார்த்துக் கொடுத்தாங்க” என்று உரைத்து முடித்தவன், புன்னகையுடன் அனைவரையும் பார்க்க, இது தெரிந்ததே பெரிது என்று நினைத்துக் கொண்டார்களோ என்னவோ, அவர்களுக்குள் பேசிக் கொண்டு புன்னகைத்துக் கொண்டார்கள்.
அதற்கு மேல் இவர்களிடம் கேள்வி கேட்கவும் யாருக்கும் தைரியம் இல்லை. கேட்டால் என்னாகும் என்று அவர்களுக்கே தெரியும்.
விஜயவர்தனும் நீரஜாவும் கீழே வர, உத்ராவும் நறுமுகையும் அறைக்குள் பேசிக் கொண்டிருக்க, இருவரும் உள்ளே நுழைந்தனர். அன்னையையும் தந்தையையும் கண்டு இருவரும் புன்னகையுடன் எழ, மகள்களிடம் வந்த விஜய்யிற்கு விழிகள் பனித்தது.
வைரக் கட்டிகளாக நின்ற மகள்களை கண்ட பூரிப்பு.
நால்வரும் அறையில் இருந்த மேசையில் அமர, மகள்கள் ஒருபுறமும் புதுத் தம்பதிகள் மறுபுறமும் அமர, நால்வருக்குமே என்ன பேசுவது என்று தெரியவில்லை. வெகு அமைதியாக சூழ்நிலை சென்று கொண்டிருக்க, மேசைக்கு அடியே கணவரின் கரம் மேல் கரம் வைத்த நீரஜா, அவரின் கைகளை இறுக பற்றிக் கொள்ள, மற்றொரு கரத்தால் மனையாளின் கரத்தைத் தட்டிக் கொடுத்து,
“இவ்வளவு நாள் கழிச்சு அப்பா வந்ததுல ஏதாவது கோபமாடா?” என்று வினவ, இருவரின் தலையும், ‘இல்லை’ என்பது போல அசைந்தது.
“அப்பா!” என்றழைத்த நறுமுகை, “இப்படி யாரையுமே நான் கூப்பிட்டது இல்ல.. உங்களை தான் நினைவு தெரிஞ்சு கூப்பிடறேன்.. தாங்க்ஸ் ப்பா” என்றவள் எழுந்து வந்து விஜய்யை அணைத்துக் கொள்ள, மகளின் தோளை தட்டிக் கொடுத்தவர்,
“உன்னை பாத்தா அப்பாக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா.. உன்னை கையில் இந்த உலகத்துக்கு கொண்டு வந்தப்ப எவ்வளவு சந்தோஷப்பட்டனோ அதே சந்தோஷம் இப்பவும் உன்னை பாக்கும் போது” என்று தலையை வருடியவர் நீரஜாவை பார்க்க, அவரோ இருவரையும் பார்த்து புன்னகைத்தார்.
மூவரும் எதிரே இருந்த உத்ராவை பார்க்க அவளோ தலை கவிழ்ந்து அமர்ந்து தன் விரல்களுடன் விரல் கோர்த்து ஏதோ செய்தபடி இருக்க, அவளின் அருகே சென்றமர்ந்த விஜய், “உத்ரா” என்றழைக்க, தலை கவிழ்ந்தபடியே அவரின் தோள் சாய்ந்தவள்,
“நான் உங்களை அங்கையே பாத்தேன் ப்பா.. நீங்க எப்படி அவனுககிட்ட..” என்றவளின் வாய் பொத்தியவர், “தெரியும்டா.. அது நடந்ததை மறந்திடு” என்று கூற, தந்தையின் கரத்திற்குள் கரம் நுழைத்து, அவரின் தோளில் அழுத்தமாக சாய்ந்தவள்,
“நம்ம நாலு பேரும் ஒண்ணா இருந்திருந்தா எப்படி இருந்திருப்போம்.. நிறைய மிஸ் பண்ணிட்டோம்” என்று கூறியவளின் அருகே வந்த நீரஜா மகளின் தலையை வருட, நறுமுகையின் கரத்தை மறுபக்கம் விஜய் பிடித்திருக்க, நால்வரும் நின்றிருந்த காட்சியை கண்ட அந்த பிரம்ம தேவனுக்கே, பாவம் செய்துவிட்டோமோ என்று தோன்றியது.
அப்படியொரு அழகான குடும்பமாய் நின்றிருந்தார்கள்.
நிறைய நிறைய பேசியவர்கள், வாய்விட்டு சிரிக்க, விஜய் “மாப்பிள்ளை நல்லா பாத்துக்கிறாமா?” என்று மூத்த புதல்வியிடம் வினவ, சிறு வெட்கப் புன்னகை உதட்டில் தவழ்ந்து நெளிய, கன்னங்கள் இரண்டும் ரோஜா நிறத்திற்கு போட்டியிட தலையை, ‘ஆம்’ என்பது போல அசைத்தவளின் முகத்தை வைத்தே நிம்மதி அடைந்த பெற்றோர்களின் உள்ளம், அப்படியே உத்ராவை பார்க்க, அவளோ முகத்தை, உர்ர்ர்ர்ரென்று வைத்து கொண்டிருந்தாள்.
“உத்ரா!” என்ற தந்தையின் அழைப்பில் அவரைப் பார்த்தவள்,
“அவனை பத்தி என்கிட்ட கேக்காதீங்க” என்று சினத்தில் முகத்தில் கோபம் வெடிக்க கூறியவளை பார்வையாலேயே அடக்கிய நீரஜா, “என்ன அவன் இவன்னு பேசிட்டு இருக்க.. அடிச்சு தோளை உரிச்சிடுவேன் பாத்துக்க” என்று விரலை ஆட்டி மிரட்ட,
“நீங்க உங்க அண்ணன் மகனுக்கு தானே சப்போர்ட் பண்ணுவீங்க” என்றவள் தந்தையை பார்த்து, கோபமாய் “இவங்களை எப்படி லவ் பண்ணீங்க? அப்பவும் இப்படி தான் பேசிட்டு இருந்தாங்களா?” என்று கேட்க, அவரோ படக்கென்று சிரித்துவிட்டார்.
விஜய்யை பார்வையாலேயே வெட்டிய நீரஜா, “உங்களுக்கு இருக்கு அப்புறம்” என்று பல்லைக் கடிக்க,
நறுமுகை, “அதே சந்தேகம் தான் எனக்கும்.. ஏன் ப்பா அப்பவும் அம்மா இப்படிதான் அண்ணன் பசங்களுக்கு பில்ட்டப் தந்து ஹைப் கொடுத்துட்டு இருந்தாங்களா?” என்று கேட்க, இருவரையும் அடிக்க நீரஜா எழுவதற்குள் இருவரும் வெளியே ஓடிவிட்டனர்.
****
அன்று இரவிற்காக, உத்ராவை அனைவரும் பார்த்துப் பார்த்து தயார் செய்து கொண்டிருக்க, கண்ணாடி முன் அமர்ந்திருந்தவளுக்கு அடி வயிற்றில் சுண்டெலி நிற்காமல் ஓடுவதைப் போன்ற உணர்வு.
கிளி பச்சை நிறத்தில் அடர் ரோஸ் நிற கரை கொண்டு இருந்த மைசூர் பட்டில் இருந்தவளுக்கு தலையை பின்னிக் கொண்டிருந்த கோதை, அவளுக்கு ஆங்காங்கே தலையில் பின் குத்த அங்கே வந்த ஒரு பாட்டி, “இதெல்லாம் எதுக்கு? அப்புறம் பேரனுக்கு குத்த போகுது..” என்று கூற, உத்ரா திரும்பி அவரை முறைத்த முறைப்பில் அவர் ஓடியேவிட்டார்.
மெல்லிய தங்க நகைகளை அணிந்தவள் முகத்திற்கு ஒப்பனை இன்றி செல்லப் பார்த்தால் மற்றவர்கள் விட்டால் தானே!
விழிகளுக்கு அஞ்சனமிட்டு, உதட்டிற்கு தேன் ப்ளேவர் லிப்ஸ்டிக் மிக மிதமாக போட்டு, அது இது என்று சகோதரியை நறுமுகை தயார் செய்ய, இமையரசி பேத்தியின் தலையில் சூட நான்கு முழ மல்லிகை சரங்களை எடுத்து வந்தார்.
அவளை மொத்தமாய் தயார் செய்து முடிக்க, அங்கு வந்த திலோவும் மித்ராவும் அவளிடம் ஏதோ கேலி பேச, இருவரின் முதுகிலும் ஒரு போடு போட்ட அழகி, “வாயாடிகளா.. போங்க” என்று இருவரையும் விரட்டி விட்டு, கோதையிடம் விழிகளை காட்ட, கோதையும், நறுமுகையும் அவளை அபிமன்யுவின் அறைக்கு அழைத்துச் செல்ல, உத்ராவின் இதயத்துடிப்புகள் டமார் டமார் என்று விநாடிக்கு விநாடி அவளுக்கே கேட்டுக் கொண்டிருக்க, படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் போதே அந்த ஐந்து நாட்கள் வஞ்சியவளின் உள்ளத்தில் நினைவு வரத் துவங்கியது.