ஆட்டம்-48
ஆட்டம்-48
ஆட்டம்-48
கௌதம்-திலோத்தமையின் நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. வீட்டில் கூறிய ஒரு வாரத்தில் நிச்சயத்தை வைத்துவிட்டனர். ஆனால், சிறியவளின் படிப்பு முடிந்தபின் தான் திருமணம் என்று கௌதம் உறுதியாக இருக்க, அது மட்டும் அடுத்த வருடம் என்ற ரீதியில் இருந்தது.
மருத்துவமனையில் பேஷன்ட்டை பார்த்துக் கொண்டிருந்த உத்ராவிற்கு எரிச்சல் தான் மண்டியிருந்தது. முகத்தின் மேல் மாஸ்க் அணிந்து ஸ்கேல்லிங் (scaling) செய்து கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாதவள், “ஸார்! பல் விளக்கிட்டு வந்தீங்களா இல்லியா?” என்று தாள முடியாத எரிச்சலுடன் கேட்டு வைக்க, பல்லை காட்டிய அந்த பேஷன்ட்,
“டென்டிஸ்ட் கிட்ட தானே வர்றோம்னு பண்ணல மேடம்” என்று கூறியவுடன், ஏற்கனவே கணவனின் மேல் கொண்ட ஆத்திரத்தில் சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு வந்ததே ஒரு கொலை வெறி.
அவரை முறைத்து பார்த்தவள், “அதுக்காக நாங்களே பல்லு விலக்கிவிடுவோம்… நீங்க இப்படி இருக்கனால தான் இப்படி பல்லு கறை பிடிச்சு இருக்கு” என்று சற்று கடுமையாகவே திட்டியவளின் குரலில் அவர் வாய் பிளந்து சற்று எழ,
“படுங்க… அப்பறம் எப்படி க்ளீன் பண்றது” என்று சிம்பியவள், பல்லை சுத்தம் செய்தே அனுப்பிவிட்டாள்.
(இந்த சீன் எதுக்குன்னா மக்களே… எனக்கு இது நடந்திருக்கு… யக்க்க்க்)
“அடுத்த ஓபி இருக்கா?” என்று உத்ரா எழுந்தபடி செவிலியரிடம் வினவ,
“இல்ல மேடம்… இனி லன்ஞ் அப்புறம் தான்” என்றவுடன் கைகளைக் கழுவிக் கொண்டு வந்த உத்ராவின் முன் நின்றது என்னமோ நீரஜா தான்.
கைகளை சானிடைஸ் செய்தபடியே, “என்ன ம்மா?” அவரின் மகள் வினவ, நீரஜா செவிலியரை பார்க்க, புரிந்து கொண்ட பெண்ணோ வெளியேறிவிட்டாள்.
மகளுக்கு எதிரே அமர்ந்த நீரஜா, “ஏன் இப்ப எல்லாம் டென்ஷன் ஆகற உத்ரா?” என்று அக்கறையுடன் வினவ,
“பின்ன டாக்டர்கிட்ட வர்றாங்கனு பல்லு கூட விளக்காம வந்தா டென்ஷன் ஆகாதா… எவ்வளவு பேட் ஆடர் (Bad odour) தெரியுமா… நிக்கவே முடியல என்னால” என்று எரிச்சலுடன் பேசியவள் கரத்தின் மேல் கரம் வைத்தவர், பொறுமையாக,
“சிலர் அப்படி தான் இருப்பாங்கடாமா… பொறுமையா சொல்லு… இப்படி புருஷன் மேல இருக்க கோவத்தை மூட்டை கட்டிட்டு வந்து வர்றவன் மேல காட்டுனா, இந்த ஹாஸ்பிடல் சேர்மேனான உன் புருஷனுக்கும், உன் விக்ரம் மாமாக்கும் தான் லாஸ்” என்றிட, அன்னையை முறைத்தாள் நீரஜாவின் கோபமகள்.
“ஆனா உங்க மூத்த மருமகன் திமிரும், அழுத்தமும் எல்லாம் இந்த உலகத்துல யார்கிட்டையும் இருக்காது தெரியுமா?” என்றவள்,
“அதுக்குன்னு உங்க சின்ன மருமகன் சாதாரணம் கிடையாது… இது இந்த ரகம்னா உங்க சின்ன மருமகன் சொல்லாமையே தான் நினைக்கிறதை அடுத்தவங்களை பார்வையாலேயே செய்ய வைக்கிற ஆளு” கடுப்புடன் பொரிந்தவள்,
“எல்லாத்துக்கும் காரணம் நீங்களும், இந்த தாத்தாவும் தான்… எங்களுக்கு எல்லாம் குழந்தை வந்தா முதல்ல உங்ககிட்ட எல்லாம் விடக்கூடாது… அப்புறம் எங்களை மாதிரி எவ வந்து பாடுபட போறாளோ” என்றவளின் அலைபேசி அடிக்க, திரையை பார்த்தவள், “இவ வேற” என்று கட் செய்துவிட்டாள்.
மருமகன்களின் புகழை மகள் பாடியதில் சிரித்துக் கொண்டிருந்த நீரஜா, “யாரு?” என்று வினவ,
“திலோ தான் ம்மா… கௌதம் அண்ணா பிசி ஆகிட்டா எனக்கு இல்லைனா மித்து இல்லைனா நறுக்கு கூப்பிட்டு காதல் வசனம் பேசிட்டு இருப்பா… கடவுளே” என்று நெற்றியில் கை வைக்க, வாய்விட்டுச் சிரித்த நீரஜா,
“பொறாமையா உனக்கு உன் புருஷன் பக்கத்துல இல்லைனு” என்று கேட்ட அன்னையின் கேள்வியில் உத்ராவின் மனம் சுருங்கிப் போனது.
‘ஆமா பக்கத்துல இருந்துட்டா மட்டும்’ என்று யோசித்தவள், அன்னையிடம் பேச்சை மாற்றி, “பசிக்குது” என்று கூற, இருவரும் மதிய உணவிற்காக செல்ல, அங்கு ஏற்கனவே மகளுக்காகவும், மனைவிக்காகவும் காத்திருந்தார் விஜய்.
மூவரும் சாப்பிட அமர, தந்தையும் அன்னையும் ஒற்றுமையாக பேசுவதைக் கண்ட உத்ராவின் இருதயம் கணவனை நினைத்து ஏங்கியது.
அவளுக்கு எதுவும் வேண்டாம். சமுத்திரத்தில் இருந்தபோது தன்னிடம் இயல்பாக பேசியது போன்று பேச மாட்டானா என்ற ஏக்கமே அனுதினமும் துடிக்கும் பெண்ணவளுக்குள். தன்னவனின் பிடிவாதம் தெரிந்தும், அவன் மனதில் ஓடும் எண்ணங்கள் புரிந்தும் அவளால் முதல் அடி எடுத்து வைக்க முடியவில்லை என்பதே உண்மை.
ஏன் அவர் விட்டுக்கொடுத்தால் என்ன?
என்னிடம் கூடவா இறங்க மாட்டார்?
அப்படி என்ன என்னிடம் கூட கரையாத இரும்பு மனம்?
மனதால் பல்வேறு கேள்விகளை தன்னவனிடம் கேட்டுக் கொண்டிருந்தவள், “அப்பா உங்களுக்கும் அம்மாக்கும் லவ் பண்ணும் போது சண்டையே வந்தது இல்லையா?” என்று வினவ, நீரஜாவின் விழிகளும், விஜய்யின் விழிகளும் சந்திந்து மீள,
“சொல்லட்டுமா அம்மாடி?” என்ற கணவனிடம் நீரஜா மிரட்டலுடன் விழிகளை உருட்டி எச்சரிக்க, அன்னை தந்தையின் பார்வை பரிமாற்றங்களை பார்த்துக் கொண்டிருந்த உத்ராவின் செம்பருத்தி அதரங்கள் ரசனையாய் புன்னகைத்தன.
“அப்பா நீங்க சொல்லுங்க” என்று கெஞ்சலும் சிணுங்கலுமாக கேட்ட மகளின் செய்கையில் குரலை செறுமிய விஜய், மனைவியை பார்வையாலேயே கொஞ்சிவிட்டு மகளிடம் கூறத் தயாரானார்.
“உங்க அம்மாவை நீ சாதாரணமா நினைக்காத உத்ராமா?” என்று விஜய் துவங்க,
“தெரியும் தெரியும்” என்ற உத்ரா அன்னையை கேலியாக ஓரவிழி கொண்டு பார்க்க, “என்னடி கொழுப்பா?” என்று மகளை அதட்டினார் நீரஜா.
“இப்ப லவ் எல்லாம் சகஜமான ஒண்ணு ஆகிடுச்சு… அந்த காலத்திலேயே லவ்வை தைரியமா நேருக்கு நேர் சொன்னா… அப்புறம் நான் அக்ஸெப்ட் பண்றதுக்குள்ள மேடம் பண்ண செயல்லாம் இருக்கே…” என்று காதல் கதையை கூறியவர்,
“சுருக்கமா சொன்னா உங்க அம்மா லேடி கெட்டப்ல இருக்க அபிமன்யு, விக்ரம் மிக்ஸ்ட்(mixed)…” என்று கூறி சிரித்தவரின் கரத்தில் அடிபோட்ட நீரஜா, “ஆமா இவரு ஒண்ணும் தெரியாத ஆள் பாரு” என்றவரால் மகளின் வதனத்தை எதிர்கொள்ள முடியவில்லை.
பழையதை எல்லாம் நினைத்துப் பார்க்க, தன்னை நினைத்து அவருக்கே நாணம் எட்டிப் பார்த்துது.
“அப்புறம் அப்பப்ப சண்டை வரும்… என்கிட்ட வந்து ரஞ்சனி தவிர யாராவது பேசுனா அவ்வளவு தான்… பார்வையாலேயே பஸ்பம் ஆக்கிடுவாங்க மேடம்… ஒரு தடவை என்கிட்ட வந்து ஒரு ஜூனியர் பொண்ணு டவுட் கேக்கறேன்னு ப்ளர்ட் பண்ணிட்டுபோனா பாவம்… அந்த நாள் நைட் ஹாஸ்டல்ல அவங்க மொத்த பேட்ச்சுக்கும் ராக்கிங் வச்சு, நைட்மூணு மணி வரைக்கும் இல்லாத கலாட்டா நடத்தியிருக்காங்க மேடம்…
அப்புறம் ஒரு தடவை தெரியாம உங்கம்மாகிட்ட விளையாட வர்தன் ஒரு கன்னடா பட நடிகையோட ஃபோட்டோவை என் பர்ஸ்ல வச்சுட்டான்… உங்கம்மாகிட்ட போட்டும் கொடுத்திட்டான்… அன்னைக்கு ஒரு மினி ருத்ரதாண்டவம் ஆடுனாபாரு உங்கம்மா… கடவுளே… கோபப்பட்டு, அழுது, என்னை அடிச்சு, கடைசில ரஞ்சனி வந்து சொன்னவுடனே வந்துச்சு பாரு ஒரு கொலை வெறி இவளுக்கு… விட்டா வர்தனை அன்னைக்கே கடிச்சு குதறியிருப்பா… நானும் ரஞ்சனியும் கன்சோல் பண்றதுக்குள்ள அன்னைக்கு படாதபாடு… வர்தனைஉங்க தாத்தா பேரை வச்சு மிரட்டி… பாவம்!” என்று நண்பனுக்காக பரிதாபம் கொண்ட கணவனை முறைத்த நீரஜா,
“எது மாமா பாவமா?” என்று முறைக்க, “இல்லஅம்மாடி, நீதான் பாவம்” என்று தாடையை பிடித்து கொஞ்சியவரை முறைத்தார் நீரஜா.
“பொண்ணை பக்கத்துல வச்சுட்டு” வெட்கமும் கோபமுமாக கடைசி பிடியை சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவ செல்லும் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்த விஜய், மகளை மென்னகையுடன் பார்த்தார்.
“ஆனா உங்க அம்மா அளவுக்கு என்னால கூட அவளை லவ் பண்ண முடியாது… இவ்வளவு பிடிவாதமா இருக்கா இல்ல… நான்னு வரும்போது எவ்வளவு அட்ஜஸ்ட்பிள் தெரியுமா… இந்த மாதிரி வாழ்க்கைல ஒரு பொண்ண அடைய ரொம்ப குடுத்து வச்சிருக்கனும்… இரண்டு பேர்ல ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணி போறது தான் வாழ்க்கை உத்ரா…
அங்க வீட்டுக்கு முதல் முறை வந்தப்ப என்னால மாமனார் வீட்டுல இருக்க முடியாதுனு தோணுச்சு… அதாவது எல்லா ஆம்பிளைக உள்ளேயும் இருக்க திமிர் கொஞ்சம் எட்டி பாத்துச்சு… நான் சொல்லி இருந்தா உங்கம்மா உடனே வெளியே என்கூட வந்திருப்பா… ஆனா இத்தனை வருஷம் தனியா இருந்தவ எப்படி தனியா இருப்பா… அவ எனக்காக காத்திருந்த இத்தனை வருஷத்துக்காக நான் இதுகூட பண்ணலைனா எப்படி சொல்லு… இது உன்னோட லைஃபுக்கு கூட நீ ஏத்துக்கலாம்” என்று அறிவுரை போன்று கூறிவிட்டு எழுந்து செல்ல, சற்று விநாடிக்கு முன் காதலோடு கூறியவரின் காதல் வழியும் விழிகளை பார்க்கவே சிறியவளின் விழிகள் ஆசையில் நனைந்தது.
‘எத்தனை காதல்! எத்தனை அன்பு!’ என நினைத்தவளால் தன் மனதை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இப்போதே தன்னவனிடம் ஓடிச்சென்று, ‘ஏன் என்னை தவிர்க்கிறாய்?’ என்று கத்த வேண்டும் போல இருந்தது.
யோசித்துக் கொண்டே கைகளை கழுவியவளுக்கு அழைப்பு வந்தது. மித்ராவிடம் இருந்து.
“சொல்லு மித்து” என்று பெண்ணவள் எடுக்க,
“நாங்க இண்டியால இருக்கோம்” என்று தங்கை கூறியது தான் தாமதம், ஃபோனை காதில இருந்து எடுத்தவள் தங்கை அழைத்திருப்பது இந்திய எண் என்று தெரிந்த பிறகு, “வர முடியாதுனு தானடி சொன்னீங்க” என்று கோபமும் சிரிப்புமாக கேட்டாள்.
“சும்மாடி… உனக்கு சர்ப்ரைஸ் தர்ற தான்… அதுவும் இல்லாம என்னால எப்படி என் மாம்ஸ் இல்லாம இருக்க முடியும் சொல்லு” என்று கூற, ஃபோனிலேயே அனல் பறக்க எரிச்சல் அடைந்தவள்,
“வந்து இருக்குடி உனக்கு” என்று வைத்தாள். ரஞ்சனியும், விஜய்யும் கூட வந்திருந்தனர்.
அன்று மாலை நடன பள்ளிக்கு அழைத்தவள், இன்று தான் வர இயலாது என்று கூறிவிட்டு விரைவாகவே வீட்டிற்குச் சென்றாள். அனைவரிடமும் பேசி சிரித்துக் கொண்டிருந்தவளுக்கு அவ்வப்போது கணவனின் நிழல் மனதினுள் தோன்ற, அவ்வப்போது முகம் மாறி மீண்டும் பெண்களுடன் பேச்சில் லயித்துக் கொண்டிருந்தது.
பேத்தியின் முக மாறுதலைக் கண்ட இமையரசி, அப்போது வீட்டினுள் நுழைந்த விக்ரமிடம், “அபிஎப்ப விக்ரம் வர்றான்?” என்று கேட்க, உத்ராவை ஒரு முறை பார்த்த விக்ரம், “இரண்டு நாள்ல பாட்டி” என்றுவிட்டு மனையாளின் அருகே அமர்ந்தான்.
ஏழாவது மாதத்தை நறுமுகை அடைந்திருக்க, அடுத்த வாரம் வளைகாப்பு வைபவம் நடக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. சிவப்பு நிற நைட்டியை அணிந்திருந்த நறுமுகையின் வயிறு, உருண்டை பந்து போன்று முன்னே வந்திருக்க, வயிற்றின் மீது கை வைத்து அமர்ந்திருந்தவளிடம் விக்ரம் பேசிக் கொண்டிருக்க, நறுமுகையின் வதனத்தில் சிறு சோர்வு.
“டயர்டா இருக்கா?” விக்ரம் வினவ,
“லைட்டா… சார் தான் அடங்கவே மாட்டிறீங்களே… அப்புறம் எப்படி டயர்ட் ஆகாம இருப்பேன்… இந்த அக்கறைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல… இதே வாய்தான் நேத்து அப்படி பேசி பேசி மயக்குச்சு” என்று கணவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பொரிந்தவள், யாருமறியாது அவனின் உதட்டில் சுண்டியும் விட்டாள்.
உதட்டை தேய்த்தபடியே மனையாளை முறைத்தவன், “இவ்வளவு பேசறவ… நேத்து எதுக்குடி ஆ…உ” என்று தொடங்கும் முன் கணவனின் வாயை கரம் கொண்டு பொத்தியவள், “என்ன பண்றீங்க” என்று தலையில் அடித்துக்கொள்ளாத குறையுடன் வினவ,
தோளைக் குலுக்கி மனைவியிடம் இருந்து விலகியவன், “உண்மையை சொல்லணும்ல” என்றிட, ‘ச்சை… விவஸ்தை இல்லாத மனுஷன்’ என்று உள்ளுக்குள் அடித்துக் கொண்டவள், கணவனின் தோளில் சாயவும் தவறவில்லை.
மனையாளின் தோள் சுற்றி கரம் போட்ட விக்ரம், தன்னவளின் வயிற்றின் மீது கரம் வைத்து மெதுவாய் வருடிக் கொடுக்க, தந்தையின் ஸ்பரிசம் உணர்ந்ததும் உள்ளே இருந்தவன், தந்தையின் கரம் மேல் தனது காலால் ஹைபை கொடுக்க, விலுக்கென விழித்தாள் தன்னவனின் குட்டி வேங்கையை சுமந்து கொண்டிருக்கும் அந்த இளம் தாய்.
அவள் பட்டென விழி விரிந்து தன்னவனின் மீது இருந்து எழுந்து, விக்ரமை விவரிக்க முடியாத தாயின் பரவசம் கொண்டு பார்க்க, விக்ரமின் கரங்களும் உணர்ந்தது தனது மகவின் அசைவை!
“நறு! அசஞ்சான் தானே?” என்று வினவ, தன் வயிற்றின் மேலிருந்த கணவனின் கரத்தை மேலும் தன்னோடு அழுத்திப் பிடித்துக் கொண்டவள், “ம்ம்” என்று தாராளமாய் விரிந்து கொண்ட புன்னகையுடன் குனிந்து வயிற்றை பார்த்து, “அசையறான்” என்றாள் பூரிப்புடன்.
இவர்களின் சம்பாஷணைகள் கேட்டு அருகில் வந்த மித்ராவும், திலோவும் விக்ரமின் கரத்தை விலக்கிவிட்டு தங்களின் காதுகளை வைக்க, உள்ளே இருந்தவனுக்கு வந்த கோபத்தை பற்றி சொல்லவா வேண்டும்!
அதுவும் அவனின் தந்தை யார்! பெரிய தந்தை யார்!
வேகமாக அன்னையின் வயிற்றில் இருந்து அத்தைக்கும், சித்திக்கும் அவன் ஓங்கி ஒன்று கொடுக்க, இருவருக்குமே அவனின் தொடுகையை உணர்ந்த சமயம், நறுமுகை, “அம்மா!” என்று அலறிவிட்டாள்.
“என்னாச்சு?” விக்ரம் பதற, “உதைக்கறான் மாமா” என்றவளின் கரம் பற்றிய விக்ரம் பதட்டத்துடன்,
“வலிக்குதா? டாக்டர் கிட்ட போகலாமா?” என்று வினவ, “நார்மல் பெயின் தான்” என்றவளின் கரத்தை நீவிக் கொடுத்தவன், தங்கையையும், மித்ராவையும் பார்க்க,
“க்ளீன் போல்ட்” என்றனர் இருவரும் கேலியாக.
இருவரையும் முறைத்தவன், பின் தங்கையிடம், “கௌதம் அளவுக்கு இல்ல… கம்மிதான்” என்று கூறி கேலி செய்தவன், “மித்து ஹஸ்பன்ட் எல்லாம் அதைவிட பாவம் தான்… விட்டா வேலையை விட்டுட்டு கூடவே இருக்க சொல்லிடுவே” என்று கூற, இருவரும் நாணத்தில் ஓடிவிட்டனர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உத்ராவோ விடுவிடுவென்று படிகளில் ஏற, உத்ராவையே பார்த்துக் கொண்டிருந்த விக்ரம், “ப்ளான் சக்ஸஸ்னு நினைக்கறேன்” என்று கூற,கணவனும் மனைவியும் ஹைபை அடித்துக்கொள்ள, திலோவும் மித்ராவும் ஹைபை அடித்துக்கொள்ள, மீண்டும் குட்டி வேங்கை அன்னைக்கு இம்முறை வலிக்காதவாறு ஹைபை கொடுத்து, முத்தம் பதித்தான்.
அறைக்குள் வந்தவுடன் தனது அனைத்து வீம்புகளையும் விட்டுக் கொடுத்தவள், உணர்ச்சிகளிலும், ஏக்கத்திலும் மூழ்கித்திண்டாடித் தவித்துக் கொண்டிருந்த மனதை கட்டுப்படுத்தி, கணவனின் எண்ணிற்கு அழைத்தாள்.
முழுதாக அழைப்பு செல்ல, அபிமன்யு ஏற்கவில்லை!
மீண்டும் அழைத்தாள்!
பதிலில்லை!
மீண்டும் மீண்டும் அழைத்தாள்!
முழுத் தோல்வி!
கோபத்துடன் அலைபேசியை இறுக பிடித்தவளுக்கு அழுகை எட்டிப் பார்க்க, கண்ணீர் விழிகளில் தேங்கி பளபளக்க, அபிமன்யுவின் படுக்கை அறைக்கு வந்தவள், தன்னவனின் படுக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்.
சுற்றியும் முற்றியும் பார்த்தவளுக்கு அங்கிருந்த அபிமன்யுவின் படங்கள் தெரிய, ‘இன்னும் கல்யாண ஃபோட்டோ மட்டும் மாட்டவே இல்ல’ என்று முனுக்கென்று கோபம் வர, கூடவே கண்ணீரும் வந்தது.
கணவனின் படுக்கையை தடவிப் பார்த்தவள், அப்படியே பூவையாய் படுக்கையில் ஒருக்களித்து சாய, தன்னவனின் மணம் அவளின் மொட்டு நாசியைத் துளைக்க, விழிகளை மூடி ஆழ்ந்து போனவளுக்குத் தெரிந்து போனது இதற்கு மேல் அவளால் தன்னவனிடம் வீராப்பை காட்ட முடியாது என்று.
விழிகளை மூடியிருந்தவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிய, அபிமன்யுவை இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவளின் மனதை போட்டு பிசைந்து எடுத்தது.
செழித்த செந்தாமரையைப் போன்ற அழகிய வதனம் ஏக்கத்திலும், காதலிலும், பிரிவிலும் சிவந்து போக, அங்கு சுவற்றில் இருந்த டிஜிட்டல் காலண்டரை பார்த்தாள் அபிமன்யுவின் மனைவி. இன்றுடன் கணவனை அவள் பார்த்து இரு மாதங்கள் ஆகியிருந்தது.
ஆம்! பெண்ணவள் அபிமன்யுவை பார்த்து இரு மாதங்கள் ஆகியிருந்தது!
செல்லும் போது சொல்லிவிட்டுத் தான் சென்றிருந்தான்!
ஆனால், அவளுக்கு இத்தனை நாள் என்று தெரியாதே!
முதலில் பதினைந்து நாள் என்றுதான் நினைத்திருந்தாள். முதல் ஒரு மாதம் முதலில் கடந்திருந்தது.
அப்போது தான் பெண்ணவளுக்கு தெரிந்தது. யூ.எஸ்ஸில் ஒரு மாதம் தங்கி வேலையை முடித்துவிட்டு அபிமன்யு அடுத்த ப்ராஜெக்ட்டிற்காக அப்படியே கனடா சென்றுவிட்டான் என்று. விக்ரம்செல்ல வேண்டியது. நறுமுகை இருக்கும் நிலையை கருத்தில் கொண்ட அபிமன்யு, தானே சென்றிருந்தான்.
அதை நினைத்தபடி கோபத்துடன் திரும்பிப் படுத்தவளின் மாங்கல்யம் உடைக்குள் இருந்து வெளியே வந்து விழ, தன் வெண் பிஞ்சு விரல்களால் அதை எடுத்துப் பார்த்தவளின் கரங்கள் காரணமின்றி நடுங்க, தாலியை நெஞ்சோடு இறுகப் பற்றிக் கொண்டவள், ஒரு முடிவுடன் மறு கரத்தால் அலைபேசியை எடுத்தாள்.
வாட்ஸ் அப்பிற்கு சென்றவள், தன்னவனின் மேல் கொண்ட காதல் பன்மடங்காக, மேனியிலும் உள்ளத்திலும் காதல் மூழ்க, சிறிது சிறிதாக வெடிக்கும் மனதுடன், வாய்ஸ் ரெக்கார்ட்டை அழுத்தியவள், “மாமா!” என்றழைக்கும் பொழுதே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்திருந்தது.
“உங்களை என்னோட லைஃப்ல பர்ஸ்ட் டைம் பாக்கும்போது, நான் நினைக்கவே இல்ல நீங்க என்னை இப்படி உங்க மேல இவ்வளவு அப்சஸ்ட்்ஆக்கி வச்சிருப்பீங்கனு… அந்த வயசுலையே நீங்க மித்துகிட்ட பேசும்போது எனக்கு பொறாமை வந்துச்சு தெரியுமா… எல்லார்கிட்டையும் பேசுவீங்க சிரிப்பீங்க… ஆனா நான் மட்டும் ஆகாதுல்ல உங்களுக்கு… உங்க முன்னாடி தான் பெரிய பொண்ணு கூட ஆனேன்… அப்ப என் கையை நீங்கதான் புடிச்சு இருந்தீங்க…
பொண்ணுகளுக்கு சின்ன சின்ன விஷயம் கூட மறக்காது… உங்களை விடவே எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு… நறுமுகை சொன்னவுடனே உங்க கை லேசா நடுங்கி என் கையை விட்டுச்சு… என்னால அதை அப்பவே உணர முடிஞ்சுது… அப்ப கூட எல்லாரும் ஏன் அழறேன்னு கேட்டப்ப கூட என்னால உங்களை சொல்ல முடியல… ஆனா யூஎஸ் போன அப்புறம் எத்தனை தடவை இதை நினைச்சு எனக்கு ஷைனஸ் வந்திருக்கு தெரியுமா… அப்ப எல்லாம் அது என்னனு புரியல போல…
மித்து உங்க கூட மெசேஜ் பண்ணும் போதெல்லாம் அவளை அடிச்சிருக்கேன்… வேணும்னே வைபையை ஆஃப் பண்ணி விட்டிருக்கேன்… ஏன் என்கூட பேச மாட்டிறீங்கனு நிறைய டைம் யோசிச்சிருக்கேன்… விக்ரம் மாமா கல்யாணத்துல உங்கள பாக்கணும்னு ரொம்ப ஈகரா இருந்தேன்… ஆனா அம்மா தான் என்னை இண்டியா பக்கமே விடல…
நேர்ல தாத்தா வீட்டுல உங்கள பாத்தது ஞாபகம் இருக்கா… மயங்கியே விழுந்துட்டேன்… ரொம்ப நாளா மனசுல பதிஞ்சிருந்த முகம் பக்கத்துல பாத்த நெர்வஸ்ல தான் விழுந்தேன்… அன்னைக்கு தான் திலோ எல்லாம் சொன்னா… உங்கள லவ் பண்ண சொல்லி ஐடியா தந்ததும் அவதான்… அப்ப பயமா இருந்துச்சு… ஆனா, உங்களை முன்னாடி இருந்தே உள்ளுக்குள்ள பிடிச்சதுனால தான் நான் அன்னைக்கு சிரிச்சனோ என்னமோ…
இதெல்லாம் நினைக்க நினைக்க அழுகையா வருது… நான் ஏன் அன்னைக்கு உங்க லேப்டாப்பை பாத்தேன்… ஏன் அதுக்கு அடுத்து எல்லாம் நடந்துச்சுனு இருக்கு… நான் என்னை மறந்து என்னையே இழக்கிற அளவுக்கு உங்க மேல லவ்ல இருந்தேன்… இது உங்களுக்கும் தெரியும் தானே… அப்புறம் ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க” என்று கேட்கும்போது அழுதுவிட்டாள் பெண்ணவள்.
அபிமன்யுவின் ஆளை இழுத்து அடக்கிக் கொள்ளும் காதலுக்கு ஏங்கிய பாவையவளின் இதழ்கள் அழுகையில் துடிக்க, தன்னவனின் முரட்டுத்தனமான காதலை நினைத்துப் பார்த்தவள், “நான் உங்களோட பேசாம போனதுக்கு சரியான காரணம் இருக்கு… ஆனா உங்களுக்கு அப்படி இருக்கா… நான் அவாய்ட் பண்ணதை மட்டும் சொல்லிடாதீங்க… உங்களை விட நான் ரொம்ப வயசுல சின்னப் பொண்ணு… என்கிட்ட மனசு விட்டு ஏதாவது சொன்னீங்களா… சொன்னதுக்கு அப்புறம் தான் அவாய்ட் பண்றீங்களே… உங்களை நான் எப்படி புரிஞ்சுக்கிறது?
நீங்க இப்படி இருக்கிறதை எல்லாம் பாத்தா, அன்னைக்கே செத்து போயிருக்கலாம்னு தோணுது… இங்க எல்லாரும் அவங்க அவங்க புருஷன் கூட ஹாப்பியா இருக்காங்க… நான் மட்டும் தனியா இருக்கேன்… தாத்தா பாட்டில இருந்து உங்க தங்கச்சி வரைக்கும்… திலோ ஃபோன்ல பேசுனாலும் எவ்வளவு ஹாப்பியா இருக்கா தெரியுமா?
நீங்க இங்க இருந்து போனதுல இருந்து ஒரு ஃபோன் கூட இல்ல… அந்த அளவுக்கு என்கூட ஈகோவா சொல்லுங்க… எனக்கு உங்க கூட லைபை ஸ்டார்ட் பண்ணனும்… என்னால இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது… எனக்கு நீங்க வேணும்…” என்பதை தீவிரமான குரலில் கூறியவளின் தொனியில் ஆக்ரோஷமான காதல் தெறிக்க, கணவனுக்கு அந்த ரெக்கார்ட்டை அனுப்பி வைத்தாள்.
அனுப்பிவிட்டு ஃபோனை வைத்தவள், அவனின் போர்வையையே தன் மேல் சுற்றிக் கொண்டு கணவனின் படுக்கையில் சிற்பி செதுக்கிய சிற்பமாய் துயில் கொள்ள, கனடாவில் அப்போது தான் அறைக்குள் வந்த அபிமன்யு சோர்வுடன் ஃபோனை எடுத்திருக்க, மனையாளின் மெசேஜ் வந்திருப்பது பார்த்தான்.
எப்படியும் சண்டை போட்டுத்தான் அனுப்பியிருப்பாள் என்ற எதிர்பார்ப்புடன் அபிமன்யுகுறும்புடனும், மென்னகை கலந்துகொள்ள, மனையாளின் மெசேஜை திறந்தான்.
அடுத்து ஓடிய தன்னவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஆடவனின் மூளையை மரத்துப்போகச் செய்ய, தன்னவளின் அழுகுரலை கேட்ட அபிமன்யுவின், உடல், பொருள், ஆவி அனைத்தும் ஆடிப்போக,
தன்னவளின் சிறு மனதில் இருந்த பெரும் வேதனையும், ஏக்கமும் அவளின் மேல் அளவில்லாத காதலை கொண்டவனின் இதயம் மௌன மொழியை கடைபிடித்தாலும், அவனின் இரும்பு உள்ளத்தை அவனவளின் வார்த்தைகள் கடுந்தீயாய்மாறி உருக்கிக் கொண்டிருந்தது.
அதுவும், ‘செத்து போயிருக்கலாம்’ என்ற பெண்ணவளின் வார்த்தை இந்த அபிமன்யுவின் சகலத்தையும் ஆட வைத்திருக்க, தன்னவள் கண்ணீருடன் நேரில் நிற்பதை போன்று உணர்ந்த அபிமன்யுவின் கரங்கள் முதல்முறை நடுங்கியது.
அடுத்த நொடி யோசிக்கும் சக்தியை கூட இழந்த அபிமன்யு, தன்னவளுக்கு அழைக்க, நன்றாக சுகமாய் தன்னவனின் படுக்கையில் பொதிந்து உறங்கிக் கொண்டிருந்தவள், ஃபோனைசைலன்ட்டில் போட்டிருந்தாள்.
மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தவனுக்கு மனம் கேட்கவில்லை. நாளை ஒரே ஒரு வேலை மட்டும் மிச்சம் இருந்தது. இப்போதே செல்ல வேண்டும் என்ற பரபரப்பு அவனுக்குள்.
நீண்டதொரு யோசனைக்கு பிறகு இதை செய்யலாமா என்று பல மணித்துளிகள் யோசித்தவன், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு பின், தனது இடது கை பெருவிரலால் தனது வலது புருவத்தை அழுந்த வருடி, முழு மனதுடன், உத்ராவிற்கு, “ஸாரி” என்ற ஒற்றை மெசேஜை அனுப்ப, உத்ராவின் அலைபேசிவிட்டால் அபிமன்யு கொடுத்த அதிர்ச்சியில் வெடித்துச் சிதற காத்திருக்க, அபிமன்யுவின்அலைபேசி கோமாவிற்கு சென்றது.
வேங்கையெனச் சிலிர்த்தெழும் ஆடவன், இப்போது தன்னவளுக்காக முற்றிலுமாக தன் மொத்த பிடிவாதத்தையும், கோபதாபங்களையும் தூக்கி எறிந்திருக்க, எப்போதும் இருக்கும் வேங்கையைத் தாண்டி, காதலே என் குருதி எனும் அந்த அபிமன்யுவின் அற்புத வதனத்தை பார்க்க, நிலவு மகள் சொக்கிப் போனாள்.
அடுத்த இரண்டு நாட்களில் அபிமன்யு சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்க, அபிமன்யுவின் ராட்சஷ கருப்பு நிற புகாடியுடன் விக்ரம் நின்றிருந்தான். தனக்கென்ற திமிரும், ஆணவமும் கலந்த தோரணையும் ஆக்ரோஷமுமாக அபிமன்யு வந்து காரை உயர் வேகத்தில் எடுக்க, சகோதரனின் அருகே அமர்ந்தான் விக்ரம்.
ஆம்! உத்ரா மீண்டும் கடத்தப்பட்டு இருந்தாள். அவள் மட்டுமல்ல, நீரஜா, நறுமுகை, திலோத்தமை, மித்ரா ஆகியோரும்.