ஆட்டம்-8(2)

ஆட்டம்-8(2)

ஆட்டம்-8(2)

நறுமுகையிடம் பேசிக் கொண்டிருந்த அபிமன்யுவை அழைத்த சிம்மவர்ம பூபதி, அவனிடம் ஏதோ பேசத் துவங்க, அவருடன் அவன் பேச்சில் மும்முரமாகிவிட, அண்ணன் மகனின் பேச்சையும், கம்பீரத்தையும் ரசித்துக் கொண்டிருந்த நீரஜா, “நம்ம அபி ரொம்ப கெட்டி ப்பா” என்று பாராட்ட, நறுமுகை கோவிலை சுற்றி வர எழ, விக்ரமும் எழுந்தான்.

நுறுமுகை கோவிலை பார்வையிட்டபடியே சுற்றிக் கொண்டிருக்க, “ம்கூம்” என்ற கனைப்பில் திரும்பியவள், அவனை நேருக்கு நேர் சற்று அருகில் கண்டதில திகைத்தாலும், திரும்பிச் செல்ல முனைய, “யாரு அது?” என்றான், அதிகாரம் குரலில் மிகுதியாய் தெறிக்க.

அவனின் கோபம் கிலியை பரப்பினாலும், அவள் கேள்வியாய் அவனையே பார்க்க, “ராம்” என்றான் அழுத்தமாக.

அவனின் கேள்வியில் அவளுக்கு எரிச்சல் உண்டானாலும், “நான் எதுக்கு உங்ககிட்ட சொல்லணும்?” ஆரம்பத்தில் தொடங்கிய குரலின் ஸ்ருதி, பின் அப்படியே இறங்கி ஒலித்தது.

விக்ரமின் பார்வை அப்படி!

ஒருவரின் ஆன்மாவை அசைத்துப் பார்த்துவிடும் கூர்மை அவ்விழிகளுக்கு!

அவளின் அருகே சென்று சற்று இடைவெளியிட்டு, நின்றவனின் உடலில் கொதித்த அணுவை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அவளின் இதயம் நின்று நின்று துடிக்க, அவளின் தொண்டை குழிகள் ஏறி இறங்க, அதைக் கண்டவனின் விழிகள் இடுங்க, இதழோரத்தில் மெல்லிய கோடுகள்.

ரசனையிலா? கோபத்திலா?

அவளின் காதருகே குனிந்தவன், “எவ்ரி ஆக்ஷன்ஸ் ஆஃப் யோர்ஸ் இஸ் இம்ப்ரின்டட் இன் மை மைன்ட் (Every action of yours is imprinted in my mind)” உன்னுடைய ஒவ்வொரு செயல்களும் என் மனதில் பதிந்து கொண்டிருக்கிறது அவன் கூற, அவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள் உள்ளுக்குள் உதறலெடுத்தும், அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே தான் நின்றிருந்தாள்.

நீரஜாவின் வளர்ப்பு!

‘யாரிடமும் உன் பலவீனத்தை மட்டும் காட்டிவிடாதே’ என்று அவர் மகளுக்கு ஒவ்வொரு நாளும் கூறுவது. ஆனால், அதுவே அவளுக்கு வாழ்க்கையில் பின்னாளில் வேதனையாக மாறக்கூடும் என்பதை எவரும் அறியவில்லை.

“எல்லாத்துக்கும் நீ ஒரு நாள் ஆன்சர் பண்ணிதான் ஆகணும்” அவன் கூற, அவனின் சூடான மூச்சுக்காற்றில் இருந்து விலகியவள், திரும்பி அதரங்களை கடித்து அவனுக்கு தெரியாத வண்ணம் தன் அச்சத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள, அவனுக்கோ அது விழிகளில் விழவில்லை.

அவளோ ஏதோ சொல்ல வர திரும்ப, அங்கு அவனைக் காணவில்லை. முன்னால் விரைந்து வந்தவள் அவனைத் தேட, அவனோ பொங்கல் வைக்கும் இடம் நோக்கிச் சென்று கொண்டிருக்க, அவளோ பெருமூச்சுடன் நின்றிருந்தாள்.

பொங்கலை நல்லபடியாக வைத்து முடிக்கவும், அபிமன்யுவின் நண்பர்கள் மூவர் வந்து இறங்கவும் சரியாக இருந்தது. அனைவரையும் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தவன், அவர்கள் ஆசைக்கு இணங்க அவர்களுக்கு தென்னந்தோப்பை சுற்றிக்காட்ட கிளம்பினான்.

“அபி மதியமும் இங்கதான் கண்ணா. சீக்கிரம் சுத்தி காட்டி கூட்டிட்டு வந்திடு. அவங்களுக்கும் பசிக்கும்ல” இமையரசி கூற, தலையை மட்டும் ஆட்டியவன் அவர்களுடன் செல்ல, தனது லேப்டாப்பை எடுத்து வந்திருந்த விக்ரம் அதனுள் மூழ்கிவிட்டான்.

தோட்டத்திற்குள் நுழைந்ததுமே அபிமன்யுவுடன் மேக்னா கை கோர்க்க, தனது கரத்தை விடுவித்துக் கொண்டவன் அவளைப் பார்த்து புன்னகைக்க, “என்ன அபி இது? நான் உங்கள எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?” அவள் தன் மேனி அவன் ஒருபக்க கரங்களில் சாய கூற,

“இது யூ.எஸ் இல்ல. தள்ளி நின்னு பேசு மேக்னா” என்றான் கடுமையாக.

“அபி, அங்கேயும் நீங்க தள்ளி தள்ளிதான் போறீங்க” அவள் குறைபட,

“உனக்கு அதுதான் பிரச்சனையா?” அவன் நக்கலாக வினவ, உள்ளுக்குள் சுதாரித்தவள் வெளியே சிரித்துக் கொண்டே, “இல்ல அபி. உங்க கூட எனக்கு டைம் ஸ்பென்ட் பண்ணனும்” என்றாள். இவர்கள் பேசத் தொடங்கும் முன்பே மற்ற இரு நண்பர்கள் வேறு பக்கம் சென்றார்கள்.

“நான் கிட் (kid) இல்ல மேக்னா. எனக்கு உன்னோட எக்ஸ்பக்டேஷன்ஸ் தெரியும். பட் எனக்கு உன் மேல அந்தளவுக்கு இன்னும் இன்ட்ரஸ்ட் வரவே இல்ல. இன்பாக்ட் நான் உன்னை கூப்பிட்டதே என்னோட ஃபாமிலியை காமிக்க தான். யூ ஸீ தெம் ரைட்? (You see them right?)” என்றவன்,

“நான் செலக்ட் பண்ற பொண்ணு எனக்கு மட்டும் இல்ல. என்னோட ஃபேமிலிக்கும் செட் ஆகணும். வர்ற பொண்ணோட ஆம்பிஷன்ஸ்ல யாரும் தலையிட மாட்டாங்க. பட் எங்களுக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு. நான் இந்த பேலஸோட அடுத்த வாரிசு. ஸோ அந்த குவாலிட்டிஸ் இருந்தா தான் எனக்கு வைஃப்பா வர்ற முடியும்..” என்றவனின் பார்வை அவளின் உடையை மேலிருந்து கீழ் பார்த்தது.

முட்டி கால் வரை ஸ்கர்ட்டும், மேலே டாப்ஸும் அணிந்திருந்தாள். அவன் இம்மாதிரி உடைகளுக்கு எதிரியல்ல. ஆனால், இடத்திற்கு ஏற்றவாறு அணிய வேண்டும் என்று நினைப்பவன். பேசவில்லை என்றாலும் திலோத்தமை வரை என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று கவனித்துக் கொண்டிருப்பவன்.

“ஜஸ்ட் கை பிடிக்கிறதுல என்ன இருக்கு?” அவள் ஆதங்கமாகக் கேட்க,

“நீ கையை மட்டும் புடிச்சா பரவாயில்ல மேக்னா” என்றான் ஒற்றை வரியில்.

“பொண்ணுங்க அவங்க ஃபீலிங்க்ஸ் காட்டறது தப்பா?” அவள் கேட்க,

“டெபனட்லி தப்பே இல்ல. ஆனா, நான் இன்னும் உங்கிட்ட ஓகே சொல்லாம இருக்கேன். ஐ மீன் இத்தனை நாள் நான் உன்கூட பழகியும் எனக்கு உன் மேல அந்த மாதிரி பீலிங்ஸ் வர்றாம இருக்க சமயத்துல நீ இப்படி பண்றது தப்புன்னு சொல்றேன்” என்றான் நெற்றியில் அடித்தது போன்று.

“அப்புறம் ஏன் வர்ற சொன்னீங்க அபி?” அவள் கேட்டுவிட,

“சொன்னனே என் ஃபாமிலியை காட்ட.. ஐ திங்க் நான் உன்கிட்ட பாக்கலாம்னு சொல்லியிருக்கக் கூடாது.. அப்பவே நோ சொல்லியிருக்கனும்.. யோசிப்போம்னு விட்டுட்டேன்.. பட் ஐ ஸ்டேட் இன் லிமிட் (But I stayed in limit)” என்றவன் தெளிவாகக் கூற, அவளுக்கோ விழிகளில் நீர்த் தேங்கியது.

“இப்ப என்ன ப்ரேக் அப்பா?” அவள் வினவ,

“லவ் பண்ணா தானே ப்ரேக் அப் மேக்னா” என்று முடித்துவிட்டான். அவளுக்கு புரிந்து விட்டது அவன் எப்போதோ முடிவெடுத்துவிட்டான் என்று. அவளுக்கும் அது பெரிதாக பாதிக்கவில்லை.

கஷ்டமாக இருந்தாலும், ஐயோ அம்மா என்னும் அளவுக்கு எல்லாம் அவளுக்கு இருக்கவில்லை. அதுவும் இல்லாமல் அபிமன்யுவின் குடும்பத்தைப் பார்த்தால் மிகவும் பாரம்பரியமாக அவளுக்குத் தோன்றியது. தினமும் பப் சென்று வருபவளுக்கு இங்கு ஒத்துவரும் என்றும் தோன்றவில்லை. தனது தனிப்பட்ட சுதந்திரம் என்று வரும்பொழுது அபிமன்யு கூட அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

“இட்ஸ் ஓகே அபி” என்றவள் புன்னகைக்க, அவனும் புன்னகைத்துக் கொண்டான். இருவரும் பேசியபடியே நடக்க, படிப்பை பற்றி பேசிக் கொண்டிருந்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

ஒளிந்து விளையாட சற்று நேரத்திற்கு முன் தொடங்கிய உத்ரா, திலோத்தமை, மித்ரா மூவரும் தோட்டத்திற்குள் வர, “ஹைய்யோ இங்க செமயா ஒளிஞ்சு விளையாடலாம்” என்றாள் மித்ரா விளையாடியது போதாது. மூவரும் சாட் பூத் த்ரிச் போட, ஔட் ஆகி நின்றதோ உத்ராதான்.

“சரி நீங்க போய் ஒளிஞ்சுக்கங்க.. நான் பிப்டி சொல்லிட்டு வர்றேன்” என்றவள் மரத்தில் முகத்திற்கு இருபுறமும் கை வைத்து எண்ணத் துவங்க, மித்ராவும், திலோத்தமையும் சென்று ஒளிந்து கொண்டனர்.

இருவரும் ஒளிந்த இடமோ கிணற்றுக்கு பக்கம் இருந்த சுவற்றிற்கு பின்னால். இரு குட்டிப் பெண்களும், அங்கு அமர்ந்து வாயின் மேல் கைகளை வைத்து ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, உத்ராவோ கிணற்றுக்கு எதிர் திசையில் அவர்களைத் தேடிச் சென்றாள்.

அங்கு மரத்திற்கு பின் யாரோ நிற்பதை உணர்ந்த உத்ரா, ‘மாட்டுனீங்களா?’ உள்ளுக்குள் நினைத்து சிரித்துக் கொண்டவளுக்குத் தெரியவில்லை, மாட்டியது அவள்தான் என்று.

மரத்திற்கு அருகில் அமைதியாய் பூனைபோல் சென்றவள், “பேபேஏஏஏஏ!!!!” என்று மரத்திற்கு முன் குதிக்க, அதிர்ந்து போனது அவள் மட்டும் அல்ல, மேக்னாவும், அபிமன்யுவும் தான். அதுவும் இருவரின் இதழ்களும் அருகருகே இருந்திருக்க, இருவரும் அதிர்ந்து போய் விலகிக்கொள்ள, அதை சரியாக பார்க்காத உத்ராவிற்கோ அவர்கள் முத்தமிட்டுக் கொண்டிருப்பது போலத்தான் இருந்தது.

மரத்தின் மேல் சாய்ந்திருந்த மேக்னாவிடம் அபிமன்யு பேசிக் கொண்டிருக்க, “சரி போகலாம் மேக்னா தேடுவாங்க” என்று ஒரு எட்டு முன்னே வைத்தவன், அங்கிருந்த மட்டை தடுக்கி அவள் மேல் விழப்போக, அவளின் இதழ் அருகில் அவன் இதழ் நெருங்கிய சமயம், அவளுக்கு பின்னிருந்த மரத்தில் கை வைத்து, தன்னை நிலைப்படுத்திக் கொண்ட சமயம்தான், உத்ராவின் கத்தல் இருவரையும் திடுக்கிடச் செய்தது.

இருவரும் நின்றதைக் கண்டு ஏற்கனவே பயந்து போனவள், அது அபிமன்யு என்று அறிந்தவுடன், அங்கிருந்து ஓடப்பார்க்க, அவளைப் பார்த்தே அவள் என்ன யூகித்திருப்பாள் என்று நினைத்தவன், ஓட நினைத்தவளின் ஜடையை பிடித்து இழுக்க, “ஆஆஅஅஅ அம்மா!” என்று வலியில் கத்திவிட்டாள் சிறியவள்.

சட்டென அவளின் கரத்தைப் பிடித்தவன், “எங்க ஓடற?” என்று அதட்ட,

“என்னை விடுங்க நான் போறேன்.. ப்ளீஸ்” சிறியவள் கண்களில் நீர் தேங்கக் கூற,

“போய்????” அவன் விடாமல் கேட்க, அவளோ புரியாது திருதிருவென்று விழித்தாள்.

“போய் யாருகிட்டையும் சொல்லக்கூடாது” அவனே கூற, அவளோ அவனை முறைத்தாள். அவன் பிடித்திருந்தது அவளுக்கு வலியைக் கொடுக்க, அவனை சரியாய் அறியாதவள் வலியால் முறைத்துவிட்டாள்.

அதை தவறாக புரிந்து கொண்டவனோ, “என்ன முறைக்கிற?” என்று கர்ஜிக்க, அவனின் குரலில் உடல் நடுங்க அவனைப் பார்த்தவளுக்கு, அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் தரதரவென்று வழிய, “அபி, சின்ன பொண்ணு பாவம்” மேக்னா கூற,

மேக்னாவை திரும்பிப் பார்த்து புன்னகைத்தவன், “இவளா சின்ன பொண்ணு.. நறுமுகை கிட்ட பாய் பிரண்ட் பத்தி கேக்கறா?” அவன் கேலியாய் மேக்னாவிடம் கூற, அந்த அழுகையிலும் சிறிவளுக்கு தன்னை மீறி கோபம் உடைப்பெடுக்க, அழும் குரலுடனே,

“நீங்களும் தான் இந்த அக்காவை கிஸ் பண்ணிட்டு இருந்தீங்க” என்று தொண்டை கிழிய கத்த, அவளின் அந்தப் பேச்சும் தன் மேல் அவள் சொன்ன பழியும் அவனுக்கு ஆத்திரத்தை விளைவிக்க,

“ஷட் அப்” என்றவனின் உறுமலில் மீண்டும் அழத் துவங்கினாள் சின்னவள்.

“இருங்க விக்ரம் மாமாகிட்ட சொல்றேன்” அவள் அழுதுகொண்டே விடாது அவனின் கோபத்திற்கு எதுவெல்லாம் தகுந்ததோ அதையெல்லாம் தூபம் போட,

“சரி இந்தா என் ஃபோன். அவனை கூப்பிடு” என்றான் தனது ஃபோனை அவளிடம் கொடுத்து விக்ரமின் எண்ணை வாயால் கூறியபடி.

இமையரசி கூறி சிறியவர்களை தேடி வந்த நறுமுகை உத்ராவின் கரத்தை பிடித்தபடி நின்றிருந்த அபிமன்யுவை பார்த்து, ‘ஓ மை காட்’ என்று உள்ளுக்குள் பதறினாள். அதுவும் அழும் உத்ராவை பார்த்தவளுக்கு என்ன ஆயிற்றோ என்ற அதிர்வு இன்னமும் எகிறியது.

அவனின் திமிரான பேச்சும், தன்னை மிரட்டும் தோரணையையும் பார்த்த உத்ராவுக்கு மீண்டும் மீண்டும் அவன் மீது கோபம் வந்தது. அன்னை தந்தை கூட சிறிதும் அதட்டாது வளர்ந்தவளுக்கு கண்மண் தெரியாமல் கோபம் வர, “போடா” என்று கத்த, அவனின் கரம் கோபத்தில் அவளின் கரத்தை அவனறியாமலே இறுக்க, வலியில் முகம் சுருங்கியவள், நறுமுகை அருகே செல்வதற்குள், தோட்டத்தின் அனைத்து திசைகளில் இருந்த பறவைகளும் அதிரும் வண்ணம் வீலென்று அலறினாள் உத்ரா.

மேக்னா, “அபி” என்று பதற, “ஹே நான் அவளை எதுவுமே பண்ணல. அவ நல்லா நடிக்கறா?” என்றான் தரையில் கால்களை மடித்து அழுது கொண்டிருக்கும் சிறியவளை பார்த்தபடி.

இன்னும் அவள் கரம் அவன் கரத்திற்குள்!

நறுமுகை, “மாமா” என்று ஓடிவர,

“நீயுமா? ஷீ இஸ் ஆக்டிங் (She is acting)” என்றான் சலிப்புடன்.

உத்ராவோ தலையை நிமிராதே இருக்க, ஒரு கரம் அவனுக்குள் இருக்க, மற்றொரு கரம் அவள் வயிற்றை பொத்தியபடி அழுதுகொண்டே இருக்க, அவளின் அருகே வந்த நறுமுகை, அவளின் பட்டுப் பாவடையின் பின்புறம் இருந்த சில உதிரத் திட்டுக்களை பார்த்து ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

அதைக் கடந்து வந்தவளுக்குத் தெரியாததா?

மீண்டும் விழிகளை கசக்கிப் பார்த்தவளுக்கு அது என்னவென்று புரிய, “மாமா அவ பெரிய பொண்ணு ஆகிட்டா” நறுமுகை உத்ராவின் மேல் இருந்த பார்வையை அகற்றாது கூற, அதுவரை அவளின் கரத்தைப் பிடிவாதத்தோடும், அடங்கா திமிரோடும், ஆணவத்தோடும், அவளை தன்னிடம் மன்னிப்பை கேட்க வைத்துவிடும் வீம்போடும், ஆங்காரத்துடனும் நின்றிருந்த அபிமன்யுவின் கரங்கள் அந்நொடியே தன்னவளின் கரத்தை விடுவித்தது.

சற்று நிமிடங்களுக்கு முன் குதியாட்டத்தில் இருந்தவள் குமரியானாள்!

Leave a Reply

error: Content is protected !!