ஆட்டம்-9

ஆட்டம்-9

ஆட்டம்-9

“அம்மாஆஅஅ!!!” அனைவரின் இதயமும் படபடக்கும் வண்ணம் அலறலோடு உத்ரா ஓடிவர, மகளின் கத்தலில் ஏற்கனவே வேறொரு யோசனையில் இருந்த ரஞ்சனி, பயந்து போய் எழ, மற்ற அனைவரும் கூட, பதறியடித்து ஓடிவரும் உத்ராவை பார்த்து அதிர்ந்துவிட்டனர்.

“உத்ரா நில்லு” அவள் பின்னேயே நறுமுகையும் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு ஓடிவர, அதெல்லாம் அவள் செவிகளில் விழுந்தால் தானே.

தரையில் கல்லை மிதிக்கிறோமா மண்ணை மிதிக்கிறோமா என்று கூட தெரியாது கண்மண் தெரியாது ஓடி வந்தவள், அன்னையை சென்று அழுகையுடன் அணைத்துக் கொள்ள, ரஞ்சனிக்கு என்னவோ ஏதென்று கண்ணீரே வந்துவிட்டது.

“என்னாச்சு? என்னாச்சு?” அனைவரும் சூழ்ந்துகொள்ள, அன்னையின் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவள், இளைப்பாறிக் கொண்டிருக்க, அவளுடன் ரேசில் ஓடி வருவது போன்று ஓடி வந்த நறுமுகையாலும் பேச முடியவில்லை. மூச்சு வாங்கியது பெண்ணவளுக்கு.

அனைவரும் உத்ராவிடம் கேள்வியை கேட்க, அவளோ அன்னையிடம் இருந்து விலகவும் இல்லை, மற்றவர் கேட்டது அவள் செவியையும் எட்டவில்லை.

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நீரஜா மகளிடம், “நறுமுகை என்னாச்சு?” என்று கேட்க, அனைவரும் அவள் பக்கம் திரும்பினர்.

“ஐயோ அம்மா. என்ன இது. எல்லாரும் இப்படி லுக் விடறீங்க. ம்ம்ம்..” மூச்சை வாங்கியவள், “இந்த லூசு பெரிய பொண்ணாகிட்டா.. அதை சொன்னதுக்கு தான் இப்படி பயந்துட்டு ஓடி வர்றா” என்று சொல்ல, அனைவருக்கும் மனதில் இருந்த பயம் புஸ்ஸென்று கழன்று ஓடினாலும், சந்தோஷம் தாளவில்லை. இமையரசி திக்குமுக்காடிப் போனார்.

விக்ரம் உட்பட அனைத்து ஆண்களும் புன்னகைத்தபடி நகர்ந்துவிட, உத்ராவின் பாவாடையை கண்ட இமையரசி, “டேய் தங்கம்” என்று பூரிப்பு தாங்காமல் அவளை அணைக்க, அவளோ அப்போது தான் பயம் ஓய்ந்து, அழுகை அடங்கி அன்னையையும், இமையரசியையும் நிமிர்ந்து பார்த்தாள்.

கண்ணீர்க் கோடுகள் மட்டும் கன்னத்தில் தடமாய் இருந்தது!

“லூசு இதுக்காடி அழுதே?” ரஞ்சனி மகளை அதட்டினார். அவள் அழுது கொண்டு வந்ததை பார்த்து அவள் என்னமோ ஏதோ என்றல்லவா நினைத்தார்.

“பயமா இருந்துச்சு” என்றவள் அதற்கு மேல் எதையும் கூறவில்லை.

பெண்கள் அனைவரும் சூழ்ந்துகொள்ள, “இன்னைக்கு எவ்வளவு நல்லநாள் தெரியுமா? வாழ்க்கைல இனி உனக்கு அதிர்ஷ்டம் தான்” இமையரசி அவளின் கன்னத்தில் நெட்டி முறித்து கூற, காரில் தனது கைப்பையில் வைத்திருந்த சானிட்டரி நாப்கினை எடுத்து வந்து அன்னையிடம் நீரஜா நீட்ட, அதை வாங்கிய ரஞ்சனி, நீரஜாவை பார்க்க, அவரும் நீரஜாவை பார்த்தார்.

வெறுமையாக இரு ஜோடி விழிகளும் சந்தித்துக் கொண்டன. ஆனால், இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பேச முடியாத சூழ்நிலையும், மனநிலையும் இருவருக்கும்.

இமையரசி, “நீ வர வேணாம் ரஞ்சனி. அம்மா வரக்கூடாதுனு சொல்லுவாங்க. நாங்க மூணு பேரும் போறோம்” என்று குடும்பத்தோடு வந்தால் தங்குவதற்கு என்றே அவர்களுக்கு அங்கு ஒரு வீடு இருக்க, அங்கு மருமகள்களுடன் உத்ராவை அழைத்துக் கொண்டு நுழைந்தார் இமையரசி. அவ்வீட்டினுள் அவளை அழைத்துச் சென்றவர்கள் விஷயத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, சிறியவளை பார்க்க, அவளோ கூச்சமும், சங்கோஜமுமாக திருதிருவென்று விழிக்க,

“நீங்க போங்க நான் பாத்துக்கறேன்” என்ற அழகி, தங்கையையும் மாமியாரையும் வெளியே அனுப்ப, அவளுக்கு சிலதை எடுத்துக் கூறியவர், அப்போது தான் அவள் கரம் சிவந்திருப்பதை கண்டார்.

“என்னாச்சு டா?” அவள் கரத்தை தொட்டுப் பார்த்தபடி அவர் வினவ,

“அப்..” எனத் தொடங்கியவள், பின் என்ன நினைத்தாலோ, “கிணத்துல இடிச்சுட்டேன்” என்றாள்.

“சரி சரி” என்றவர் அவளை அழைத்துச் செல்ல தயார்ப்படுத்த, செய்து வைத்திருந்த மதிய உணவை, செல்லும் வழியில் ஆசிரமத்தில் கொடுத்து விடலாம் என்று எண்ணியவர்கள் வெளியில் அனைத்தையும் எடுத்து வைக்கத் தயாரானார்கள்.

“அக்கா எங்க?” என்று வந்த மித்ராவின் குரலில் திரும்பிய அபிமன்யு,

“ஹே நீ இங்க என்ன பண்ற?” என்று வினவ, விளையாடுவதைக் கூறியவள், “அக்கா பாவம். எங்காவது தொலைஞ்சு போயிட போறா?” தன் பூவிதழ்களை குவித்துக் கொண்டு கூற, “அண்ணா உத்ராவை காணோம்” என்ற தங்கையை பார்வையாலேயே கண்டித்தான் அபிமன்யு.

“உன்னையே தோட்டத்துக்கு உள்ள யாரும் பெரியவங்க இல்லாம இங்க வரக்கூடாதுனு சொல்லியிருக்கேன் ரைட்?” அவன் கடுமையான குரலில் வினவ,

“அ.. ண்.. ணா” என்றவளுக்கு குரல் திக்க, “சரி வாங்க போலாம்” என்றவனின் கரத்தை உயரம் எட்டாது குதித்துப் பிடித்த குட்டி வாண்டு, “அக்காவை காணோம்” என்றது பாவமாக.

“அவ போயிட்டா” அவன் எப்படி கூறுவது என்று தெரியாது கூற,

“பிக்.. பஃப்பலோ.. மங்கி” என்று அக்காளை திட்டிய மித்ரா, “விட்டுட்டே போயிட்டா. அம்மாகிட்ட சொல்ல போறேன்” என்று கூற, மித்ராவின் பேச்சில் அதிசயமாக சிரித்தவன்,

“உன் அக்கா பெரிய பொண்ணு ஆகிட்டா. அதான் ஓடிட்டா” என்றான் சின்னவளின் கரத்தோடு கரம் கோர்த்தபடி.

“வாட்?” என்று அதிர்ந்த வாண்டு, “பெரிய்யயயயய பொண்ணு ஆகிட்டாளா?” என்று வாய் பிளந்து சிரிப்பும் ஆச்சரியமுமாகக் கேட்க,

அபிமன்யு அருகே இருந்த மேக்னாவோ, “ஓய் குட்டி பாப்பா. உனக்கு பெரிய பொண்ணு ஆகறதுனா என்னனு தெரியுமா?” என்று அவளின் நாசியை பிடித்து ஆட்டி வினவ,

“ஓஓஓஒஒ தெரியுமேஏஏஏஎஎ..” தலையை ஆட்டி கூறியவள், “நிறைய புது ட்ரெஸ், நிறைய ஸ்வீட்ஸ் தருவாங்க.. மேக்அப் எல்லாம் போட்டுவிட்டு ஃபோட்டோஸ் எடுப்பாங்க.. அப்புறம் எல்லா கேர்ள்ஸும் ரொம்ப அழகாயிடுவாங்க..” என்றவள் அபிமன்யுவை பார்த்துவிட்டு ரகசியம் சொல்ல மேக்னாவை அருகில் அழைத்தவள், பெரியவள் தன் உயரத்திற்கு குனிந்தபின், அவள் காதருகே சென்று,

“அப்புறம் வயிறு வலிக்குமாம்” என்று அதை மட்டும் ரகசியமாக கூற, அது அபிமன்யுவின் காதையும் எட்டிவிட, அனைவரும் சத்தமாய் வாய்விட்டு சிரிக்க, “ஷ்ஷ்” என்றாள் வாயின் மேல் விரலை வைத்தபடி.

அபிமன்யுவை நிமிர்ந்து பார்த்தவள், “இந்த அக்கா யாரு?” என்று கேட்க, “பிரண்ட்” என்றான்.

“ஓஹ்..” என்று அவர்களுடன் நடந்தவள், “ஹையோ எவ்வளவு தூரம்” என்று முட்டியின் மேல் இருகைகளையும் வைத்து, சோர்வாய் இருப்பது போலக் கூறியவள், ஒரே ஜம்ப்பில் அபிமன்யுவின் கரத்தினை மீண்டும் நன்றாக பற்றிக்கொண்டு, “அப்படியே ஊஞ்சல் மாதிரி இருக்கு” என்று ஆடியவள், “அப்படியே கூட்டிட்டு போங்களேன்” என்று தன் பன்னீர் திராட்சை விழிகளால் கெஞ்சிக் கேட்க, இதழோரங்கள் புன்னகையில் உதிர, தன் கையால் அவளை ஆட்டிக்கொண்டும், அதே சமயம் விழுந்து விடாமல் பார்த்துக் கொண்டும் அவன் அவளை தூக்கிக் கொண்டுச் செல்ல, தோட்டத்திற்குள் இருந்து வெளியே வந்தவனை பார்த்த அனைவரும் வாய்மேல் விரல் வைக்காத குறைதான்.

யாரையும் தன்னிடம் நெருங்க விடாதவன் அவன்!

யாராக இருத்தாலும் அவனிடம் தள்ளி நின்று பேச வேண்டும் அவனுக்கு!

வந்தவன் கிளம்பலாமா என்று பொதுவாக கேட்க, “சுவாமிஜி வந்திருக்காராமா அபி.. தாத்தா, பாட்டி பாக்க போயிருக்காங்க” என்றார் அரிமா.

“ஓஹ்” என்றவன் வேறு எதுவும் கேட்கவில்லை.

அவனின் கையில் ஆடிக்கொண்டிருந்த மித்ராவை ரஞ்சனி முறைக்க, அன்னையின் பார்வையை தூசு போலத் தட்டியவள், தன் மீன்குஞ்சு இதழ்களால் நாக்கை துருத்தி அன்னையிடம் பழிப்புக் காட்ட, ‘குரங்கப் பெத்துட்டு நான் படற பாடு இருக்கே’ நினைத்தவர், வீட்டிற்குள் இருந்து அழகியுடன் வெளியே வந்த மகளைப் பார்த்த ரஞ்சனிக்கு, மகள் புதிதாகத் தெரிய, சிலைபோல் இருக்கும் மகளை கண்குளிர ரசித்தார், உத்ராவின் அன்னை.

சுவாமிஜியை பார்க்க வந்த, “சாமி நல்ல சமயம் பாத்துதான் வந்திருக்கீங்க. எங்க வீட்டுல..” இமையரசி கூறும் முன் புன்னகையுடன் அவரையே பார்த்தவர், “எல்லாமே தெரியும்” என்றார்.

குடும்பத்தில் எந்தவொரு நல்ல காரியம் நடந்தாலும் இவரைக் கேட்காமல் நடக்காது. இமையரசி, விஜயவர்தன் திருமணத்தையே கண்டிப்பாக நடத்த வேண்டுமா என்று இவரிடம் முதலில் கூறியபோது கேட்டார்.

இதையெல்லாம் மிகவும் நம்புவர்களும் இவர்கள் கிடையாது.

எந்தவொரு நல்ல காரியம், அதாவது இடம் வாங்குவது, நல்ல செய்தியை சொல்வது, வீட்டின் விஷேசங்களுக்கு அழைப்பது என்பது அவர்களுக்கு வழக்கம். அவரிடம் சொல்லிவிட்டு செய்தால் ராசியாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

“நல்ல நேரம் தானே சாமி?” இமையரசி கூற,

“அருமையான நேரம். இந்த பொண்ணு பெரிய பொண்ணான நேரம் குடும்பத்துக்கே ரொம்ப ராசி” என்று கூற, மனதால் குளிர்ந்து நிறைந்து போனார் இமையரசி.

“சாமி இது இப்ப கேக்க கூடாது தான். ஆனா மனசு கேக்காம விடமாட்டிது” என்றவர், “விக்ரமுக்கும் உத்ராவுக்கும் சரி வருமா?” அவர் கேட்டுவிட, அமைதியாய் இமையரசியை பார்த்து புன்னகைத்தார்.

அத்தனை சாந்தமான முகம்!

“யாரு கையை பிடிச்சிருந்தாளோ, அவன் எப்பவுமே அவ கையை விடமாட்டான். இவளே வேணாம்னு சொன்னாலும்” என்று கூற இமையரசியின் மனதில் அது விக்ரம் என்று தான் பதிந்தது. ஆனால், சுவாமிஜி மனதில் அபிமன்யுவுக்கு தான் உத்ரா என்று ஆண்டவன் கணக்கிட்டது அவருக்குத் தெரிந்தாலும் இப்போது அவர் சொல்ல எண்ணவில்லை.

இவருக்கு இவர் என்ற முடிச்சை யாராலும் அவிழ்க்க முடியாது அல்லவா!

கணவனும் மனைவியும் வெளியே வர, கோதையிடம், “உத்ரா எங்க?” என்று வினவினார் இமையரசி.

“கார்ல அத்தை” என்றார் கோதை.

“சரி நான், மாமா, ரஞ்சனி, உத்ரா, நீரஜா எல்லாரும் ஒரு கார்ல போறோம். நீங்க வந்திடுங்க” என்று கூற, ரஞ்சனியின் விழிகளும் நீரஜாவின் விழிகளும் ஒரே நேரம் மீண்டும் சந்தித்துக் கொண்டது.

பாரமாய் கனத்தது ரஞ்சனியின் மனம்.

“அம்மா நான் அபி மாமா கூட வர்றேன்” என்ற மித்ரா அன்னையின் பதிலை எதிர்பார்க்காமல் அபிமன்யுவிடம் ஓட, மகளை முறைக்க மட்டுமே முடிந்தது அவருக்கு அந்நிலையில்.

காரின் முன்னே சிம்மவர்ம பூபதியும், இமையரசியும் ஏறிக்கொள்ள, நீரஜா ஒருபக்கம் ஏற, ரஞ்சனி மறுபக்கம் ஏற, நடுவில் விடப்பட்டாள் உத்ரா. கார் புறப்பட்டதும் உத்ரா சிறிது நேரத்தில் அன்னையின் மடியில் தூக்கத்தில் தலையை சாய்க்க, கார் சீட்டின் மேல் இருந்த நீரஜாவின் கரத்தை அழுத்திப் பிடித்தார் ரஞ்சனி.

அந்த அழுத்தத்தில் மன்னிப்பு!

தோழியின் கரம் கொடுத்த அழுத்தத்தை உணர்ந்த நீரஜாவிற்கு தொண்டை அடைக்க, வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் அழக்கூடாது என்ற வைராக்கியத்துடன் இறுக்கமாய் அமர்ந்து வர, “ஸாரிடி” என்று தழுதழுத்த குரலோடு ரஞ்சனி தனது மன்னிப்பை தோழியிடம் யாசித்தார்.

அழுகையை அடக்கிக் கொண்டு வந்ததில் நீரஜாவின் தொண்டைக் குழிகள் ஏறி இறங்க, “ம்ம்” என்ற பதில் மட்டும் வந்தது.

முன்னே அமர்ந்திருந்த இமையரசிக்கு விழிகளில் இருந்து கண்ணீர் கீழே விழ, சிம்மவர்ம பூபதிக்கு கண்கள் கலங்கிப் போனது.

வீட்டிற்கு வந்தவர்கள், தங்கள் சம்பிரதாயங்கள் அனைத்தையும் செய்ய, இமையரசி, “ரஞ்சனி, அவன் வர்றாம தப்பிக்க நினைக்கலாம். ஆனா விதியே அவனை இங்க வர வைக்க முடிவு பண்ணிடுச்சு போல. அவனை எவ்வளவு சீக்கிரம் வர சொல்ல முடியுமோ வர்ற சொல்லு” என்று ரஞ்சனியிடம் ஆணையாக கூறியவர், கணவருக்கு விஷயத்தைத் தெரிவித்து அவரை வரவும் கூறினார்.

மனதால் கூட தவிர்க்க முடியாத சூழ்நிலை!

“அக்கா!!!” பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு அக்காளை சந்தித்த விஜயவர்தன், நா தழுதழுத்து குரல் உடைய அழைக்க, இமையரசியோ, “வா” என்று மட்டும் அழைத்தவர், அங்கு நிற்கவில்லை.

அவர் அறைக்கதவு அறைந்து சாத்தப்பட்டது!

அனைவரும் அவரைப் பார்க்க, கணவரை பாவமாகப் பார்த்த ரஞ்சனி, தலை கவிழ்ந்து நின்றார். அவரின் இந்நிலைக்கு அவரும் ஒரு காரணம் அல்லவா.

குற்றம் உள்ள மனம் குறுகுறுத்தது!

சிம்மவர்ம பூபதி விஜயவர்தனை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைய, “ஏன் அப்பாவை இன்சல்ட் பண்றாங்க?” அன்னையின் கையில் இருந்த மித்ரா கோபத்தில் கீச் குரலில் கத்த, அவளின் வாயில் சுண்டிவிட்டார் ரஞ்சனி.

மித்ராவோ அன்னையின் அடியில் அழத் துவங்க, உத்ரா அன்னையை பாவமாகப் பார்க்க, அவரோ இடமும் வலமும் தலையை ஆட்டியவர், “இதெல்லாம் பெரியவங்க விஷயம் உத்ரா. நீ தெரிஞ்சுக்க வேணாம்” என்றவர் அழுது கொண்டிருந்த மித்ராவை மிரட்டி சத்தம் வெளியே வராது செய்ய, அன்னையின் மடியில் இருந்து காலை உதறி இறங்கியவள், தங்களுது அறைக்குள் ஓடினாள்.

அறைக்குள் நுழைந்த விஜயவர்தன், “அக்கா பேசுக்கா. நாலு அடி கூட அடி வேணும்னா. பேசாம இருக்காதக்கா. ப்ளீஸ்” அவர் கெஞ்ச, இமையரசியின் மனமோ கரையவில்லை.

தம்பியின் உயிருக்காக பயந்தவர் தான். என்ன சூழ்நிலையில் அந்த முடிவை எடுத்தானோ என்று மருகியவர்தான். ஆனால், கோபம் இல்லை என்றெல்லாம் அவரால் பொய் சொல்ல முடியாது.

பத்து மாதம் சுமந்து பெற்ற தன் தங்கக் கிளி, இப்போது தனியாய் நிற்பதை பார்க்கும் போதெல்லாம் அவருக்கும் கொதித்தது தான். தாயாய் மகளின் சூழ்நிலை எந்தளவுக்கு அவரை பாதிக்கிறது என்றெல்லாம் சிம்மவர்ம பூபதிக்கு மட்டும்தான் தெரியும்.

‘அழகு இருந்து என்ன? மத்த பொண்ணுக மாதிரி வாழ குடுத்து வைக்கலியே’ அவர்களின் சொந்தங்கள் அவர்கள் முன்னே பேச தைரியமற்றவர்கள் என்றாலும் பின்னால் பேசுவதை அவரும் அறிவாரே.

மகன்கள் நல்ல நாட்களில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கையில், மகள் மட்டும் பொய்யான சிரிப்புடன் வலம் வருவதை பார்த்து துடித்துக் கொண்டிருப்பவர் அவர்.

அந்தக் கோபம் வராமலா இருக்கும்?

அதுவும் தம்பியைக் கண்டவுடன் திருமணம் நின்ற நாள் நினைவு வந்து, அனைவரும் துடியாய் வேதனையில் உழன்றது நினைவு வர, ஆறப்போட்டிருந்த சீற்றம் சூறாவளியாய் எழுந்து கொண்டிருந்தது.

“அக்கா என்னை பாருக்கா. மூஞ்சிய கூட பாக்காத அளவுக்கா நீ என்னை வெறுக்கிற” என்று அக்காளின் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தவர் அவரின் மடியில் கண்ணீர்விட்டு அழ, இமையரசியின் விழிகளில் இருந்து ஒரு சொட்டு நீர் விஜயவர்தனின் கரத்தில் விழுந்தது.

அவர் இமையரசியை நிமிர்ந்து பார்க்க தன்னை அடக்க முடியாமல் அவரின் கன்னத்தில் பளாரென இமையரசி அறைய, விஜயவர்தனோடு உள்ளே வந்திருந்த சிம்மவர்ம பூபதியே மனைவியின் ஆத்திரத்தில் அதிர்ந்து தான் போனார்.

“ஒரு வார்த்தை என்கிட்டையாவது சொல்லி இருக்கலாம்லடா. என் தங்கம் இப்ப தனி மரமா நிக்கறாளே” தம்பியின் சட்டையை பற்றி கேட்டவர், அழுகையில் வெடித்துச் சிதற, விஜயவர்தனும் சகோதரியின் கண்ணீரில் அழுதுவிட்டார்.

“உன் மூஞ்சில முழிக்க முடியாமதான் நான் வரலக்கா. ஆனா பாப்பா பெரிய பொண்ணு ஆகிட்டானு சொன்னோன முடியல” அவர் கூற,

“அப்ப என்னை பாக்க நீ வரலையா டா” படீரென்றே தம்பியின் தோளில் கண்ணீரோடு அடித்தவர், பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு பார்ப்பவனை நன்கு கவனித்தார்.

அப்படியே இருந்தார். ஆனால், வெளிநாட்டு வாசம் அவரை இன்னும் மாறாறியிருக்க, கண்ணாடி மட்டும் எக்ஸ்ட்ராவாக அணிந்திருந்தார் விஜயவர்தன்.

“நல்லா இருக்க இல்ல?” இமையரசி கேட்க,

“ம்ம்!!! நீ?” விஜயவர்தன் வினவ, தலையை ஆட்டினார் சிம்மவர்ம பூபதியின் மனையாள்.

மனைவியின் தோளைத் தொட்ட சிம்மவர்ம பூபதி, “இங்க யார் மேலையும் தப்பு இல்ல அரசி.. சூழ்நிலை. அதுவும் இல்லாம உன் பொண்ணோட பிடிவாதம். நினைச்சிருந்தா ஒரு கல்யாணம் பண்ணியிருக்கலாம் இல்ல. பிடிவாதமா இருந்துட்டா. வீம்பா இருந்தா யாரும் இங்க வாழ முடியாதுன்னு அவளோட பிடிவாதம் எனக்கு நல்லா புரிய வச்சிருச்சு” அவர் தன்னையும் உணர்ந்து கூற, இமையரசியும் தலையை ஆட்டினார்.

மூவரும் வெளியே வர அடுத்த பதினைந்து நாட்கள் கழித்து, உத்ராவிற்கு சடங்கு சுற்றலாம் என்று முடிவெடுத்தவர்கள், அதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் தடபுடலாக நடைபெறத் துவங்கினர். அதாவது உத்ராவிற்கு நடக்கவிருக்கும் சடங்குகளுக்காக அனைத்தும் அரண்மனையில் கோலாகலமாக ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.

இந்த பதினைந்து நாட்களில் எதிரிலேயே போனாலும், நீரஜா அவ்வளவாக யாரிடமும் பேசவில்லை. அவருக்குள் ஒன்று உடைந்து கொண்டிருந்தது.

தனக்குள் புதைத்த வலி!

அபிமன்யு அறையை விட்டே வெளியே வராது, கூண்டுப் புலி போல வெறியுடன் அறைக்குள் உறுமிக் கொண்டிருந்தான். அவனால் விஜயவர்தன் குடும்பத்தை தன் குடும்பம் சேர்த்துக் கொண்டதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

நீண்ட நேரமாக அடங்காத ஆங்காரத்தையும், எதிரில் யார் வந்தாலும் குதறிவிடும் வெறியுடனும் நடந்து கொண்டிருந்தவன், தன்னை சமன் செய்ய முடிவெடுத்தவனாக, தன்னுடைய பெட்டியில் இருந்த செஸ் போர்டை எடுத்து விரித்தான். எதிரில் யாருமில்லாமல் இருந்தாலும், தன்னைச் சுற்றி அனைத்தையும் கடினமாக்கி வைத்தவன் அதைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.

முடிச்சை அவிழ்ப்பது சிரமம் என்றால், அந்த முடிச்சை போடுவதும் அதை விட சிரமம் தானே?

இன்டர்நேஷனல் செஸ் சாம்பியன் அவன்!

நீண்ட நேரம் செஸ் போர்டையே பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகளில் எதிரில் இருந்தவர்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது.

வேங்கையின் வெறியும், திட்டமும் ஒரே நேரத்தில் சமமாக கலக்க, ஒரே அடியில் வேறோடு சாய்க்க வேண்டும் என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தவனுக்கு, ஒரே ஆயுதமாக விழிகளில் பட்டது என்னவோ ஒய்யாரமாய் அனைவரின் பாதுகாப்பிலும் இருந்த ராணி தான்.

எப்போதும் போல முக்கியமான நேரங்களில் தன் இடது கையால் வலது புருவத்தை நீவும் பழக்கம் கொண்டவன், இப்போதும் அதை செய்துவிட்டு, இறுக்கத்தை சுமந்த முகத்துடனே, எதிரில் இருந்த ராணியை தனது தன் அதிபயங்கிற தந்திரத்தால் தட்டிவிட்டு வெளியே தள்ளியவன், அந்த ராணியை தனது கரத்தில் எடுத்துப் பார்த்தான்.

இனி அவள் அவனிடம் மட்டுமே!

சில வருடங்களில் அவனவளாக!

அவனுக்கு மட்டுமேயான அவளாக!

அதை அவனும் அறியவில்லை.

அடுத்த நாள் சடங்குகள் அனைத்தும் ஒரு குறையில்லாது முடிவடைய, அபிமன்யுவோ வெளியே வரவே இல்லை. அழைத்துப் பார்த்த அன்னையை முறைப்பையே பதிலாகத் தந்தவன், தன் வேலைகளில் மூழ்கிப் போனான். எப்போதடா இங்கிருந்து கிளம்புவோம் என்றிருந்தது அவனுக்கு.

நீரஜாவோ, சடங்குகளுக்கு கீழே வந்து நின்றவர், அனைத்தும் முடிந்தபின் மேலே சென்று அடைந்து கொண்டார்.

அரிமா பூபதி ஒட்டியும் ஒட்டாது நின்றார். குழந்தைகளிடம் கோபத்தை அவரால் காட்ட முடியவில்லை.

அடுத்த இரு நாட்களில் நால்வரும் யூ.எஸ் கிளம்ப, அனைவரும் நால்வரையும் வழியனுப்ப, சிம்மவர்ம பூபதி மற்றும் இமையரசியிடம் ஆசிர்வாதம் வாங்கிய உத்ராவை மனதார ஆசிர்வதித்தவர்கள், “நல்ல இருடா” என்று கூற, இமையரசி உத்ராவிற்கு நிறைய அறிவுரைகளை வழங்கி அனுப்பினார்.

தந்தையுடன் காரில் ஏறச் சென்றவள், ஏதோ தன் முதுகைத் துளைக்கும் உணர்வைக் கொடுக்க, திரும்பிப் பார்த்தாள். யோசனையுடனே மேலே பார்த்தவளின் விழிகள் பனியாய் உறைந்து நகர மறுக்க, மேலே நின்றிருந்த அபிமன்யு அவளையே பார்த்துக் கொண்டிருக்க, உள்ளுக்குள் அரண்டு போனாள் பெண்ணவள்.

வேங்கையின் விழிகளை ஒத்த பார்வை போன்று, அவனின் விழிகளில் ஏறியிருந்த கோபமும், அந்த கோபத்தாலும் காலை சூரியனின் செயலாலும் அவனின் விழிகள் பளபளக்க, அதில் தெறித்த தீர்மானமான உக்கிரத்தையும், உறுதியையும் கண்டு, நெஞ்சில் நீர் வற்றிப் போனவள், அடுத்த நொடியே காரினுள் ஏறி அமர்ந்து கொண்டாள்.

இனி அடுத்த முறை வரும்பொழுது அவள் தன் நாடு, திரும்ப முடியாது என்றும், திரும்பிச் சென்றாலும் உத்ரா சித்தார்த் அபிமன்யுவாக தான் திரும்பப் போகிறோம் என்று அப்பொழுது அவள் அறியவில்லை.

Leave a Reply

error: Content is protected !!