ஆதிரையன் -அத்தியாயம் 02

Screenshot_2021-07-27-16-11-56-1-875ed613

ஆதிரையன் -அத்தியாயம் 02

அத்தியாயம் -02

கலெக்டர் அலுவலகம் இன்று சற்றே பரபரப்பாய் காணப்பட்டது.

 

“என்னடா இன்னிக்கு இவ்ளோ காலைல பைல் எல்லாம் தூசு தட்டுறீங்க? “

கேட்ட படியே அவ்வலுவலகதில் வேலை பார்க்கும் ஒருவர் உள்ளே வந்தப்படி கேட்க,

 

“இன்னிக்கு புது கலெக்டர் வராங்க சார்.”

 

“ஓஹ்! இன்னிக்கே வராங்களா? நானும் ஒருவாரம் விட்டுதான் ஜோயின் பண்ணுவாங்கன்னு இருந்தேன். கொஞ்சம் ஒர்க் பெண்டிங் இருக்கே.அதுக்குள்ள எப்பிடிடா முடிக்கிறது?”

 

“முடிச்சிருங்க சார். மாடம் ரொம்ப ஸ்ட்ரிக்டாம். கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்க விடமாட்டாங்களாம். அதோட எப்போவும் பீல்ட் ஒர்க் தான் ஜாஸ்தினு  சொன்னாங்க.”

 

“என்ன ஆனந்த் இப்படி சொல்றீங்க, கூடுனா ரெண்டுமாசம் பண்ணுவாங்ளா? அதோட எங்க பேசுனா எப்டி வரும்னு பார்த்து அப்படியே சுலையா எடுத்துட்டு அவங்க இடம் விட்டு நகரமாட்டாங்க.

என்ன ஒன்னு அதுவரைக்கும் நாமளும் கொஞ்சம் வேலை பார்க்கணும். அப்புறமா நம்மளையும் சேர்த்தே கவனிப்பாங்க.”

 

“இவங்களும் அப்டி இருப்பாங்கன்னு தோணல சார்.”

 

“விடுங்க ஆனந்த் பார்த்துக்கலாம்.”

 

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கவுமே அலுவலகத்தின் முன்னே அரசாங்க  வண்டியில் வந்திறங்கினாள் அவ்வூரின் புதிய கலெக்டர் அதிதி அருள்குமரன்.

 

வண்டி விட்டுறங்கியவளைக் கண்ட, அவ்விடம் இருந்த அனைவரது முகத்திலும் ஓர் ஆச்சர்யம் கலந்த பார்வை.

 

அத்தனை இளமையாய் எதிர் பார்க்கவில்லையோ!

அவள் வயதிற்கு அத்தகுதி மிகையென்று நினைத்தார்களோ!

 

வண்டிவிட்டுறங்கியவள் இடக்கையில் அவளது கைப்பை இருக்க மறு கையில் கொஞ்சம் காகிதக் கட்டுக்கள். அலுவலக வாயிலில் நின்றிருந்த ஆனந்தன் என்பவர் அவ்வலுவலகத்தின் துணை உதவியாளர். ஓடி வந்து அவள் கையிருந்த கட்டுக்களை எடுக்க இன்முகமாய் அவருக்கு முன்னே இவளோ காலை வணக்கம் சொன்னாள்.

 

ஏனோ உயர் பதவிகள் அமரும் நபர்களின் முகங்களின் சிடு சிடுப்பை, அலட்சியத்தை பார்த்து பழகியவர்கள் இவள் இன்முகம் கண்டு அவர்கள் முகமும் கொஞ்சம் பொழிவுற, ஒரு சிலரோ, ‘இப்டி சிரிச்சு வச்சு எப்டி இவ்ளோ பெரிய பொறுப்பை செய்வாளோ’ என்று அலட்சியமாயும் பார்த்து வைத்தனர்.

 

உள்ளே நுழைந்து கொண்டிருந்தவளுக்கோ உள்ளுக்குள் சிரிப்பு. இதேதான் இவள் முதல் முதலாக பதவியேற்று சென்ற நாளும் சந்தித்தாளே. கண்ணாடித் தடுப்பினைத் தாண்டி தன் அலுவலக அறையினுள் நுழைத்தவள் தன் இருக்கையில் அமர்ந்த அடுத்த நொடிமுதலே வேலையில் மூழ்கியிருந்தாள். மதிய உணவு இடைவேளைக்கு பத்து நிமிடம் என்றிருக்க, அவள் மேசையிலிருந்த அழைப்பு மணி அழுத்தியவள், ஆனந்தன் உள்ளே வரவும்,

 

“என்ன ஆனந்தன் இவ்ளோ சோர்வா இருக்கீங்க? நாம இன்னிக்கு வேலை பார்க்கவே இல்லையே.”

 

அவர் முழித்துக்கொண்டிருக்கவும், சிறுநகை செய்தவள்,

“ஆனந்தன் காலைல ரொம்ப தூசு தட்டுனீங்களோ? “

 

“அப்டில்லாம் இல்லமா.”

 

“மிஸ்டர் ராமை கொஞ்சம் வரச்சொல்லுங்க. அப்றமா நாளைக்கு நாம கொஞ்சம் 

பீல்ட் போகணும்.”

 

“சரிம்மா.”

 

இவர் வெளி செல்ல உள்ளே வந்த ராமை எதிர்கொண்ட அதிதி,

 

“மிஸ்டர். ராம் நீங்க உங்களுக்கு கொடுத்திருந்த வேலையை இன்னும் சப்மிட் பண்ணலையே. ஏற்கனவே ஒருவாரம் முடிஞ்சு போச்சு.சரின்னா நீங்க நேத்திக்கு அதை பண்ணி முடிச்சிருக்கணுமே?”

 

“அது… இன்னும் கொஞ்சம் பெண்டிங் இருக்கு மேம்.”

 

“அதற்குத்தான் காலைல இருந்து நான்கு மணித்தியாலம் தந்திருக்கேன் ராம்.

எனக்கு இன்னிக்கு நீங்க போக முன்ன சப்மிட் பண்ணிருங்க. நாளைக்கு அதை வச்சுத்தான் என் ஒர்க் இருக்கும். நான் இந்த இடத்திற்கு புதுசா இருக்கலாம். அதுக்காக பழைய வேலை அப்படியே விற்ற மாட்டேன். ஏற்கவே பண்ணிட்டு இருந்த வேலைகளை தொடர்ந்து பண்ணுவேன். சில பைல்க் கூட தூசு தட்ட வேண்டியிருக்கும் போல. இப்டி டிலே பண்ணிட்டு இருந்தா பிரச்சினையெல்லாம் நிறைஞ்சு நம்ம ஆபிஸ் வாயில்ல மக்கள் கூட்டம் பெறுக ஆரம்பிச்சிரும். அப்றம் அவங்க கேள்விக்கு பதில் நான் மட்டும் தான் சொல்லணும் இல்லையா? சோ, நீங்க போக முன்ன முடிச்சு கொடுத்துட்டு கிளம்புங்க. “

 

“சரிங்க மேம்.”

 

‘பார்க்கத்தான் சின்னப்பிள்ளையா இருக்கா, எத்தனை நாளைக்குன்னுதான் பார்ப்போம். நாம  பார்க்காத கலெக்டரா?’ ராம் புலம்பிக்கொண்டே தன் இருகைக்கு வந்தவர் பகல் உணவையும் மறந்து இவள் கேட்டிருந்ததை முடித்து கொடுக்க ஆரம்பித்தார்.

 

அவ்வூரின் செழுமை நன்கு அறிந்து வைத்திருந்தாள் அதிதி. வளர்ந்துவரும் கிராமத்தை நகராமயமாக்கிக் கொண்டிருக்கிறது இன்றைய அரசாங்கம். எல்லாவிதமான வசதி வாய்ப்புக்களும், மக்களின் தேவைகளும் கிடைக்கச் செய்திட எதற்கு கிராமத்தின் இயல்பை மாற்ற வேண்டும். அதன் உருவத்தை ஏன் திருத்த வேண்டும். இன்னும் சில வருடங்கள் கழிய நம் பின்னே வரும் சந்ததிகளுக்கு இதிகாசக் கதைகள் போலத்தான் கிராமங்கள் பற்றி கூற நேரிடுமோ? நம் பிள்ளைப் பருவம் போல நம் பிள்ளைகளுக்கு நிலம் மிதித்து நடக்கும் வாய்ப்பு கூட இல்லாது போகும் போல.

 

அவ்வூரின் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் முன்னே எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்துக்கொண்டு தன் சிந்தனையில் இருந்தாள்.

 

இத்தனைக்கும் பார்க்கும் புகைப்படத்தில் எல்லாம் தன் தந்தையை, தந்தையின் உழைப்பையே பார்த்திருந்தாள். ‘ஒருவரால் ஆக்க முடிந்திட அதைவிட எத்தனை இலகுவில் அழிக்க முடிகிறது. எஞ்சியிருக்கும் நிலமாவது நிலமாகவே இருக்க வேண்டும், அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டிட மாட்டேன்.’ மனதோடுக் கூறிக்கொண்டாள் அதிதி.

 

அடுத்த நாள் அவ்வூரின் மக்களை நேரே சந்தித்து, சில பல தகவல்களை  சேகரித்துக்கொண்டவள், அவர்களின் அன்றைய குறைபாடுகள், சேவை தடைகள் என்பவற்றை கேட்டறிந்துக் கொண்டாள். ‘தன்னை நேரே சந்தித்து தங்கள் தேவைகளை கூற தயங்க வேண்டாம், தன்னால் முடியுமான காரியமாக இருக்க செய்து தருவேன்’ என்றும் கூறினாள்.

 

ஊரின் நடுவே கிட்டத்தட்ட ஊரின் பரப்பில் நான்கில் ஒன்றை உள்வாங்கி இருந்த அரிசி ஆலை முன்னே வண்டியை சற்று நிறுத்தக் கூறி இறங்கிக் கொண்டாள். அவ்வூர் மக்கள் அதிகமாய் வேலை செய்வது இங்குதான். கேள்வி பட்டிருக்கிறாள். அது ஒன்று மட்டும் தான் நன்மை அவ்விடம்.

 

“ஆனந்தன், முன்ன இந்த இடம் மொத்தமும் தென்னந்தோப்பு தானே. எதுக்கு அதை எல்லாம் அழிச்சு இப்படி ஒரு மில் கட்டுனாங்க?”

 

“அம்மாக்கு முன்னமே இந்த இடம் பத்தி தெரியுமாமா? “

 

“ஹ்ம் கேள்வி பட்டிருக்கேன்.”

 

“இது நம்ம அமைச்சரோடதும்மா. இன்னும் ஏதோ ஒரு கம்பனியும் கட்டப் போறதா சொல்லிட்டு இருக்காங்க. நம்ம பசங்க படிப்பு முடிய அதுலையே வேலை பார்க்க முடியும். நகராக்கம், அப்றம் வீடமைப்பு துறை அமைச்சர்ல. அதான் நம்ம ஊரும் இப்போ மாறிட்டே வருது.”

 

ஆனந்தன் கூறக் கேட்டுக்கொண்டே அவ்விடத்தினை தன் கண்களால் உள்வாங்கிக்கொண்டிருந்தாள்.

 

“எப்போ? என்ன கம்பனினு எதாவது தகவல் இருக்கா?”

 

“அது ஏதோ ஏற்கனவே அவங்க மினரல் வாட்டர் கம்பனி ஒன்னோட பிரிவா இங்க திறக்கப் போறதாத்தான் பேசிக்கிட்டாங்க. அதோட ஐயாவோட பையனுக்கு அதுல இஷ்டம் இல்லை போல. அதான் இன்னும் வேலை ஆரம்பிக்கல. இல்லனா அமைச்சர் எப்போவோ முடிச்சிருப்பாங்க.”

 

“அமைச்சரோட வீடு கூட இங்கதானா? “

 

“இல்லம்மா ரொம்ப நாள் முன்னமே போய்ட்டாங்க. இப்போ ஒரு இரண்டு வருஷமாத்தான் அவங்க பையன் இந்த மில்லை நடத்திட்டு இருக்காங்க. அதுனால அவர் மட்டும் இங்கதான் இருக்காங்க. அதுவும் அப்பப்ப வந்துட்டு போவாங்க.”

 

“ஓஹ்! உங்களுக்கு எப்டி? “

 

“என் தங்கையோட பையன் அங்கதான் அக்கௌன்டனா வேலைப் பார்க்குறான்மா. தம்பி கூட நல்ல பழக்கம். அவன் சொல்லித்தான் தெரியும்.”

 

சிரித்தவள், “சரி கிளம்பலாம். என்னை வீட்ல ட்ரோப் பண்ணிட்டு நீங்க கிளம்புங்க ஆனந்தன். “

 

“சரிம்மா. “

 

அவள் வீடு வரவும் வண்டி விட்டுறங்கியவள், “அங்கிள் நீங்க வீட்ல இறங்கிட்டு டிரைவருக்கு வண்டியை கொண்டுப்போகச் சொல்லுங்க.”

 

அவரோ அவளை ஏறிட,

 

இன்முகமாகவே, “வேலை முடிச்சிட்டேன், வேலைல இருக்கப்போ என் பதவிக்கு ஏற்றது போல நடந்துக்கணும், இப்போ உங்க வயசுக்கு மரியாதை தரணும்” என்றவள்,

“காலைல எட்டுமணிக்கெல்லாம் வந்துருங்கண்ணா.” டிரைவரிடம் கூறிக்கொண்டே வீட்டுக்கு சென்றாள்.

 

அதிதி வீட்டுக்கு வந்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு, அவளுக்காய் காத்திருந்த அவ்வாரத்தின் மடலை பிரித்தபடி கட்டிலில் சாய்வாக அமர்ந்துகொண்டாள்.

 

மடலில்…

“அன்பிற்கு இனிய தீ நீ

என் கவிக்கு நீயோ தீனி…”

 

வாசிக்கவுமே அவள் முகத்தினில் ஒட்டிக்கொண்டது புன்னகை. இருவருக்கும் இருவரது மனங்கள் பற்றி மட்டுமே தெரிந்திருந்தது. நேர் மறை தானே ஒன்றை ஒன்று ஈர்க்கும். அவள் கவி என்றிட  அவனோ கவி எழுதும் கவிஞனாய் .

 

வீட்டினை பற்றி, தொழில், உறவுகள் பற்றி பேசிக்கொண்டதில்லை. இவள் கல்லூரி இறுதி ஆண்டு முதல் ஆரம்பமான உறவிது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தொடர்கிறது. என்னவென்று சொல்ல இவ்வுறவை? என்ன வேலை என்று அவனும் கேட்டிருக்கவில்லை. இவளும் பகிர்ந்தது இல்லை. அதனால் இப்போது வேலையில் மாற்றல் என்று மட்டுமே கூறியிருந்தாள். அவள் ஏற்கனவே இருந்த வீட்டின் முகவரியே அவனிடம் இருக்க அதற்கே கடிதம் அனுப்ப சொல்லியிருந்தாள். அங்கு அனுப்பப்பட்ட கடிதம் அங்கிருந்து இவளது முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது.

 

“வேலையிடம் பொருந்திப்போனதா? இருப்பிடம் உன் விருப்பப்படி அமைந்ததா?அதிகமாய் உடல் மனம் சோர்ந்திட உழைக்காதே பெண்ணே. மனம் எப்போதும் அமைதியாய் இருப்பதை விட நிம்மதியாய் இறுதிக்கொள்ளவே வேண்டும். அதிகம் இரவை பார்க்காதே, கண்களுக்கு ஓய்வு கொடு…”

 

இப்படியாய் அவன் வரிகள் ஒவ்வொன்றும் அவள் நலன் மிகையாய் கேட்டு, நலனாய் இருக்கக் கூறி, பின்னே ஆசானாய் மாறி தமிழ் கற்று கொடுத்து முடித்தே கடிதத்தை முடித்திருந்தான்.

 

அவன் மடல் படித்து மடித்து வைத்திட ஏனோ மனம் இலகுவானதாய் உணர்ந்தாள். கிடைக்காது என்று புரிந்தும், தன்னோடு இறுதிவரை உடனிருக்கும் ஓர் உறவு என்று மட்டுமே மனதில் பதித்துக்கொண்டு விட்டாள். அதைக்கொண்டே இவ்வுறவை தொடர்ந்துக் கொண்டிருக்கிறாள்.

 

*****

அன்று…

 

ஆதியை தோளில் சுமந்து வீட்டின்னுள்ளே நுழைந்த குமரன்,

“என்னம்மா, பாப்பா ரொம்ப தொந்தரவு  பன்றாளா? சமச்சாச்சா? “

 

“ஆச்சு மாமா. ஆதி இருந்தான்ல அவகூட  வச்சுட்டு இப்போதான் சமச்சு முடிச்சேன். “

 

சரிடாம்மா, நான் குளிச்சிட்டு வந்துர்றேன்… சேர்ந்தே சாப்பிடலாம்,’

‘ஆதி இன்னிக்கு மாமா கூட சாப்பிடு. “

 

“அம்மா அழும், பாவம்ல நா போய் அம்மாகூட சாப்பிட்டு வந்து செல்லம்மா கூட விளையாடறேன். நீ சாப்பிடு மாமா.” கூறிக்கொண்டே அவனின் செல்லம்மாவின் கன்னத்தில் இதழ் பதித்து தன் வீட்டுக்கு ஓடினான்.

 

“எப்போவும் அவன் ரேவதி கூடத்தான் சாப்பிடுவான் மாமா.”

 

“அதான் டா நானும் அவன் என்ன சொல்ரான்னு பார்க்கக் கேட்டேன்.” தில்லை துவாளை கொடுக்க எடுத்துக்கொண்டு குளிக்க சென்றார் குமரன்.

 

இருவருமாக உண்டு முடித்திட, அப்படியே சாய்ந்து அமர்ந்துக்கொண்ட குமரன், “தில்லை நம்ம மதிக்கு அரசியல்ல இறங்கணும்னு நினைக்கிறான். அதோட இந்த தேர்தல்ல ஐயா என்னை நிக்க சொல்லி ரொம்ப தடவை கேட்டுட்டாங்க. என்னாலதான் அதெல்லாம் பண்ண முடியாதே. அதான் என் சார்பா மதியை நிறுத்தலாம்னு. நீ என்ன சொல்ற?”

“நான் சொல்ல என்ன இருக்கு மாமா. நீங்க பார்த்து எதுன்னாலும் யோசிச்சு பண்ணுங்க.”

 

“எலெக்ஷன்னு வர்றப்ப காசு செலவாகும், அவங்களும் தருவாங்கதான், ஆனாலும் நாமலும் வச்சிருக்கணும். அதுனால நம்ம அதி பாப்பா பெயர்ல இருக்க நிலத்தோட பத்திரத்தை வச்சு அவனுக்கு கொடுக்கலாம்னு இருக்கேன் மா.

அவனே திருப்பி கொடுத்துருவான்.”

 

“பார்த்து பண்ணுங்க மாமா. எனக்கு அதைப் பத்தில்லாம் தெரியாது. உங்க மரியாதை எங்கயும்; எப்போவும்; யாருக்காகவும் தாழ்த்திக்காதப்படி பார்த்துக்கோங்க. அது போதும் எனக்கு. “

 

“அப்டில்லாம் ஒன்னும் இல்ல தில்லை. நிலத்தை வித்தெல்லாம் கொடுக்கலையே. நம்மகிட்டதான் இருக்கப்போகுது. அதோட அவன் மீட்ட முன்ன நானே முடிஞ்சாலும் மீட்டிக்குவேன்.”

 

“சரி மாமா. ரேவதி தான் எப்போவும் அரசியல்னாலே சண்டைக்கு நிப்பாளே. ஒத்துப்பாளா?”

 

“தெரில பேசி பார்க்குறேன்னு போனான். அதான் நல்லா பேசுவானே, சமாளிச்சுக்குவான்.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கவுமே அவர்களின் மழலை அழு குரல் கேட்டிட, நல்லை எழுந்து போகும் முன்னே ஆதி உள்ளே ஓடி வந்திருந்தான்.

 

” அட செல்லம்மா அழுறாங்களே. நான் சாப்பிட போயிருந்தேன் அதுக்குள்ள தேடி அழுரீங்க. “

 

“அட பார்ரா…’ சிரித்தவர், ‘பாப்பா பசிக்கு அழுறா ஆதி. நீ இங்க வா பாப்பா வருவா.” என ஆதியை குமரன் அருகே அழைத்து அமர்த்திக்கொண்டார்.

 

“ஓஹ்! என்னை தேடிதான் அழுறான்னு ஓடி வந்தேன்.”

 

முகம் வாடிப்போனது அவனுக்கு. அதைக் காண சகியாதவர்,

“உன்னையும் தேடுனா, அப்பறம் பசிவேறயா அதான் ரொம்ப சத்தமா அழ ஆரம்பிச்சுட்டா. இப்போ சாப்டான்னா உன்கூட சமத்தா விளையாடுவா சரியா?”

 

இப்படியாக நாட்கள் நகர, அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பினை அருள் குமரன் மூலமாக மதியழகனுக்கு கிடைக்க தேர்தலிலும் வெற்றிப்பெற்று அத்தொகுதி எம்.எல். ஏ ஆனார். மக்களிடையே தன் பெயர் மதியழகனினால் கிடைத்தது எனும் பெயர் போக்கிட பணத்தினை நீராய் செலவு செய்திருந்தார்.

 

“மதி,பார்த்து பண்ணு. எல்லா விஷயத்துலயும் நிதானம் இருக்கணும். “

 

“கண்டிப்பா குமரா. சீக்கிரமாவே 

உன் நிலத்தை மீட்டிருவேன். அதைப் பற்றியெல்லாம் யோசிக்காத என்ன.”

 

“டேய், நான் அதுக்காக சொல்லல. “

 

“தெரியும் குமரா. என்னால முடியும் இறங்கிட்டேன், இனி நானாவே நீந்தி வரணும்னு நினைக்கிறேன்.யாரையும்  நம்பி இதுல இருக்க முடியாது, எனக்கு நான்னு இருக்கணும் அப்போதான் இதுல முன்னேறலாம்.”

 

மதியழகனின் பேச்சில் வித்தியாசம் உணர்ந்த அருள் குமரனுக்கு மனக்கஷ்டம் அதிலும், அவன் ‘தனித்தே செய்துகொள்வேன் ‘ என்ற பொருளில் பேசியது தன்னை தள்ளி இருக்கக் கூறுவதை உணர்ந்துக்கொண்டார். அன்றோடு மதியழகன் அரசியல் பேச ஆரம்பிக்க அருள்குமரன் தன் நிலமே கதியென்று அதனோடு இருக்கப் பழகிக்கொண்டார். நல்லை இதை உணர்ந்த போதிலும் கணவன் மனம் நோகச் செய்திடல் ஆகாது என்று எப்போதும் போல இருந்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!