ஆதிரையன் -அத்தியாயம் 1

Screenshot_2021-07-27-16-11-56-1-5108213e

ஆதிரையன் -அத்தியாயம் 1

தேவைக்காய் உறவுகளை பயன்படுத்திக்கொள்ளும் உலகிது. உன்னதமாய் போற்றும் நட்பைக் கூடவா சுயநலமாய் தன் தேவைக்கு பயன் படுத்திக்கொள்ளும் பின்னே தூக்கியும் எறியும். மனம் கணத்து போனது பெண்ணவளுக்கு. தன் தந்தை எத்தனை வலியோடு இதனை எழுதியிருப்பார். கண்கள் கலங்கினாலும் அழுவதெல்லாம் அவள் இயல்பல்லவே. முகத்தில் அத்தனை இறுக்கம். தன் தந்தை தோள் அணைத்து எடுத்த புகைப்படத்தில் தன் தந்தை தோள் வளைவில் இருந்தவரை தன் பேனாவினால் சுற்றி வட்டமிட்டவள், ‘என்னை சந்திக்கும் அந்நாள் உன் வாழ்வின் நீ சந்திக்கவே விரும்பாத கடைசி நாள்.’ என்று மனதோடு கூறிக்கொண்டு அக்கடிதத்தினை மடித்து தன் கவி புத்தகத்தினுள் பத்திரப்படுத்தினாள்.

 

இருள் சூழ்ந்திருக்க வானில் மேகங்கள் ஒளிந்திருக்க, உடுவெல்லாம் சிதறி மின்னிக் கொண்டிருக்க, பிறை நிலவோ மெல்லமாய் உலா வர ஜன்னல் வழியே அதை பார்திருந்தவள் முகமோ கதிரவன் சாயல். எப்போதும் கறை மறைக்க ஒளியேற்றும் நிலவல்ல அவள். எப்போதும் பிரகாசிக்கும் தன்னைக்கொண்டு ஒளியேற்றும் ஆதிரையனின் தேவி அவள்.

 

அவளே ‘அதிதி’ என்று தன் தந்தை உலகுக்கு அறிமுகம் செய்ய அவளோ ‘அதிதீ…’ யாய் உருமாறிக் கொண்டிருப்பவள்.

 

பட்டம் பெற்று, பதவி ஏற்று மூன்று வருடங்கள் முடிந்தாயிற்று. இருந்தும் தனக்கு தேவையான தகவல் இன்னும் கிடைத்தப்பாடில்லை. இலகுவில் எடுத்திடலாம் இருந்தும் சிறு துரும்பும் அசைவது தெரிய இவளால் அதன் பின் ஒரு அடியேனும் நகர முடியாது போய்விடும். தன்னிடம் எல்லாமே சாட்சியாக சரிவர இருந்தும் அனைத்தும் பொய்யாகி போக மிகை வாய்ப்பு. எனவே ஒரே ஒரு வாய்ப்புக்காக பல நாட்களாய் காத்திருந்து இதோ இன்று கைக்கு கிடைத்த கடிதத்தில் பெருமிதம் அவள் முகத்தினில்.

 

இதைக்கொண்டு அணுகுவது எளிது, இருந்தும் எப்போதும் தன் சுய தேவைக்காக தன் சேவையை பயன்ப்படுத்தியதாய் ஆகிட வேண்டாம் என தக்க தருணம் வரும்வரை காத்திருக்கலாம் என்று முடிவெடுத்தாள்.

 

எத்தனை இன்பமாய் கழிந்த சிறு பருவம். அத்தனையும் அதற்கு தலைக் கீழாய் தன் இளம் பருவம். தன் அன்னை முகத்தினில் எப்போதும் இருந்த சோகமும், அதன் பின்னே தான் தனித்து கழித்த சில வருடங்கள் எல்லாம் அவள் ஜன்னல் வழி பார்த்திருந்த அவ்வானில் படங்களாய் கண்டாள்.

 

என்னவோ அவள் மனதுக்கு கொஞ்சம் இதம் தருவது வாரம் ஒருமுறை அவளை தேடி வரும் அந்தக் கவிக் கடிதமே.

 

முகநூல் நண்பர்கள் பெருகிடும் இக்காலத்தில் அலைபேசி வழியே உறவாடும் நட்புக்கள் இடையே, சமூகத்தளங்கள் ஏராளமாய் குவிந்து கிடக்க அவளுக்கு ஓர் பேனா நண்பன். முகமறியா முகவரி அறியா விதி வழி அவள் மனம் இதமாக்கும் ஓர் உறவு. அவர்களின் உறவு அத்தனை அழகாய் இருந்தது. அவன் ‘கவிநேசன்’ அப்படித்தான் அவனை அழைப்பாள்.

அத்தனை அருமையாய் எழுதுவான். தமிழ் மேல் அத்தனைக் காதல். சொல்லுவான் பல அழகாய் வாசித்திட அவளுக்கும் அத்தனை இனிதாய் இதமாய் இருக்கும். அவன் தமிழ் படிப்பவளுக்கோ அத்தனை ஆர்வம். நான்கைந்து பக்கங்களில் வந்து விடும் அவன் கடிதம். எப்போதும் ஏதாவது புதிதாய் கற்றுக்கொடுப்பான். அவனைக் கொண்டே அவளும் கற்று தேர்ந்தாள். பின்னே அவனுக்கு பதில் பாட ஆரம்பித்தாள். ரசித்தான் அவனும். ரசிகை ஆனாள் அவளும்.

அவர்களிடையே தமிழ் மட்டுமே பிரதானமாய் என்றிருக்க தமிழ் கொண்ட சங்கக் காதல் அவர் இருவருள்ளும் வேர்விட்டு தளிர் விட்டு வளர்வதை புரிந்து இருவருள்ளும் அத்தனை போராட்டம். காட்டியதில்லை ஒரு போதும் காட்டிப் பயனில்லை எப்போதும். அறிந்து அதில் இருவரும் தெளிவாகவே இருந்தனர்.

 

நாளை முதல் புது இடத்தில் வேலை, அங்கு செல்ல முன்னமே அவ்வூர் பற்றிய தகவல் திரட்டியிருந்தாள். சிக்கல்கள் பல அவற்றை சீரமைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அதனோடு தன் பலநாள் தேவையையும் அதனூடே நிறை வேற்றிக்கொள்ள வேண்டும். விடிந்ததும் வேலைக்கு செல்ல தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தவள், தனிமை தனிமை துணையோடு உறங்கிப்போனாள்.

 

 

 அன்று…

 

 

கிராமம் விட்டு கொஞ்சமாய் நகர் வாழ்வை தொட்டுக்கொண்டிருக்கும் ஊர் அது. நேரத்துக்கு வந்து செல்லும் பேருந்துக்கள் தான் இன்னும். நண்பகல் வெயில் சுட்டெரிக்க பேருந்து விட்டிறங்கினார் அருள் குமரன். அவருக்காய் தரிப்பிடத்தில் காத்திருந்த தன் நண்பனை பார்த்தவர், வண்டியிலிருந்து கொண்டு வந்த உரப் பைகளை இறக்க நண்பனும் கைத்தர இருவருமாக இறக்கினர்.

 

“என்ன குமரா இன்னிக்கு வண்டி இத்தனை லேட்டா வந்துட்டான். நான் ஒரு மணி நேரமா இங்க இருக்கேன்.” சொல்லிக்கொண்டே அப்பைகளை தங்களுடைய வண்டியில் ஏற்றினர். பின் இருவருமாக வண்டியில் ஏற குமரனின் நண்பனான மதியழகன் வண்டியை செலுத்தினார்.

 

“வழில வண்டி பஞ்சர் ஆச்சுடா. அதான் லேட்டாச்சு.அதை விடு, நம்ம ஐயாகிட்ட உன்னை பற்றி சொல்லிருக்கேன். கண்டிப்பா இந்த வாட்டி கொடுக்குறேன் சொல்லிருக்காங்க. “

 

“ஓஹ் ” மதியழகனிடம் சற்றே தோய்ந்த குரலில் பதில் வர,

“என்னடா?”

“அதெல்லாம் சரிவருமா தெரிலயே.ரொம்ப செலவாகும் குமரா. நம்ம தகுதிக்கு ஏத்தாப்புல ஆசை படனும். இங்க நாளுக்கு திங்கவே கஷ்டம். இதுல அரசியல் எல்லாம்…”

 

“மதி உனக்கு இந்த பேச்சு ஆரம்பிக்குற அன்னிக்கே சொல்லிட்டேன். ஊர்ல என்னை எலெக்ஷன் நிக்க சொல்றாங்கன்னா அதுக்கு காரணம் ஒன்னு என் மேல இருக்க மரியாதை அதோட அந்த மரியாதையை தேடித்தந்த இதோ நம்மளை சுத்தி இருக்க நம்ம இடம். அதனோட பெறுமதி. எனக்கு எப்போவும் இந்த அரசியல் எல்லாம் சரியா வராது. அதோட உதவனும், சேவை செய்யணும்னா அரசியல் பண்ணனும்னு இல்லையே. அதெல்லாம் நா பார்த்துப்பேன். உனக்குத்தான் சின்ன வயசுல இருந்தே ஈடுபாடு இந்த அரசியல்ல. என் சார்பா உன்ன நிக்க வெக்கலாம்னு பேசியிருக்கேன். நீ ஒரு நிலமைக்கு வர்ற வரைக்கும் இந்த நிலமெல்லாம் வச்சு உனக்கு தேவையானது எடுத்துக்கலாம். என்னோட நிலம் அப்படியே இருக்கும். உனக்கும் அதை வச்சு உன் தேவை நிறைவேற்றி கொள்ளலாம். எனக்கு என் நிலம் தான் எப்போவும். இதெல்லாம் இப்படியே நிலமாவே மக்களுக்கு உணவு தர்றதுக்காக மட்டுமே பயன் படுத்தணும்னு நினைக்கிறேன்.”

 

குமரன் சொல்லிக்கொண்டே அவர்கள் வண்டி செல்லும் பாதை இரு பக்கமும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை பார்க்க, வயல் நிலங்கள் ஒருபக்கமும் அடுத்தப்பக்கம் தென்னை பயிரிடப்பட்டு ஆறு மாதங்களாக சீராக பராமரித்து வரிகின்றதையும் கண்ணுற்றவருக்கு அத்தனை பொழிவு தன் முகத்தினில். தன் உழைப்பல்லவா.

 

மதியழகன் யோசனையாகவே வர,

 

“மதி என்னடா யோசிக்குற?”

 

“இல்ல குமரா, விட்ல ஏற்கனவே அரசியல் பேசுனாலே என்கூட மல்லுக்கு நிப்பா. இப்போ அரசியலே பண்ணப்போறேன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவாளோ.”

 

குமரன் சத்தமா சிரித்தவர், “இதுக்குத்தான் இத்தனை யோசனையா? நீதான் ரெண்டு வரில கவிதையா படிச்சு உன் பொண்டாட்டிய வழிக்கு கொண்டு வந்துருவல்ல. அப்புறம் என்னடா? மதி, அரசியல்ன்னு இறங்கிட்டா இறங்குனது தான். அதுக்குள்ள ஏகப்பட்டது. நாம நம்ம மனசுக்குள்ள ஒரு உறுதி எடுத்துக்கணும். அதன் படி நடந்துக்கணும். நம்மளுக்குத்தான் ஏராளமா சொத்து இருக்கே. பணம் சம்பாதிக்கணும்னு இல்லையே. நம்மளால மக்களுக்கு என்ன பண்ணலாம்னு தான் இருக்கணும். உன்னால முடியும்டா.”

 

குமரன் நம்மளுடையது என்று குறிப்பிட அது மொத்தமும் அருள்குமரனுடையது 

மட்டுமே. அவர் தந்தை பின்னே அவர் உழைப்பில் சேர்த்த சொத்துக்கள். அந்த ஊரின் நிலங்களில் மொத்தத்தில் பாதிக்கும் மேல் அவருக்கானது மட்டுமே. அவ்வூர் மக்கள் மொத்தமும் அந்நிலங்களிலேயே வேலையும் செய்ய அவ்வூர் சந்தைக்கு மிகக் குறைந்த விலையில் அவர் நிலங்களில் விளையும் பொருட்கள் கொடுத்து மீதமாய் மிக சிறிய அளவிலேயே வெளி ஊருக்கு விற்கப்படுகின்றது. மதியழகனும் இரண்டொறு தடவை இலாபம் பார்க்க வழி கூறினும், மறுத்து விட்டார் குமரன்.

 

எப்போதும் தன் நண்பனை அவரில் பிரித்து பார்த்ததில்லை. ஊர்விட்டு ஊர் வந்த மதியழகன் குமரனிடம் நட்பாகி ஐந்து வருடங்களாகின்றது. மதியழகனுக்கு ஆறு வயதில் பையன் இருக்க, குமரன் திருமணமாகி ஏழு வருடங்கள் பின்னே இப்போது தான் பெண் பிள்ளை பெற்று உள்ளம் இன்னும் மகிழ்ச்சியில் திலைத்திருக்கிறார். ஊரே அவளைத் தாங்கும். ஆறு மாதம் தான் மழலைக்கு. அத்தனையும் குமரனோடு இருக்கும் மதிப்பும் பாசமும். அவர் மனைவி தில்லையும் எப்போதும் இன் முகமாகவே இருப்பார். நண்பர்கள் இருவரது வீடும் அருகருகே. ஒரே முற்றம். இருவரும் சேர்ந்தே அத்தனையும் கடந்த நான்கு வருடங்களாக பார்த்து வருகின்றனர்.

 

நண்பனோடு அவர் மீது கொண்ட நம்பிக்கை தாண்டி அவர்கள் உறவில் அத்தனை பிரியம் குமரனுக்கு. சொந்தங்கள் என்று உறவாட ஒருவரும் இல்லாது இருந்தவருக்கு மதியழகன் எல்லாமுமாகிப்போனார்.

அவர் மகன் என்றாலே குமரனுக்கு அத்தனை அன்பு.

 

“சரிடா ரெண்டு நாள் கழிச்சு நம்ம அதி பாப்பா பெயர்ல இருக்க சொத்துக்கெல்லாம் உன்னை பொறுப்பா வச்சு எழுதிரலாம். அப்போ உன்னால அதை வச்சு உனக்கு பயன்படுத்திக்கலாம். சரியா? அதெல்லாம் யோசிச்சிட்டு இருக்காத.அடுத்த வாரம் போய் ஐயாவை பார்க்கலாம். உன் பேச்சுல, நீ பேசுற தமிழ்ல அவரு உனக்கு ரசிகன் ஆகிறணும்டா.”

 

கொஞ்சமாய் சிரித்துக்கொண்டே அந்த பெருமிதத்தில் தன்னாலே மதியழகன் தன் மீசை நீவிக்கொண்டார். தன் வீட்டின் முன்னே வண்டி நிறுத்தவும் வேலையாள் வண்டிச் சத்தம் கேட்டு வெளியே வந்து உரப்பைகளை வடிவிட்டிறக்க, வீட்டினுள்ளே இருந்து ஓடி வந்த மதியழகனின் மகனை தூக்கி தோள்களில் சுற்றிப்போட்டு அமர வைத்துக்கொண்டவர்,

 

“என்னடா ஆதி, உன் செல்லம்மா என்ன சொல்றா? ” கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தார் அருள் குமரன்.

 

இன்னுமே தெளியாத யோசனையோடு மதியழகனும் தன் வீட்டை நோக்கி சென்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!