ஆலாபனை-12

WhatsApp Image 2022-11-29 at 8.00.56 PM-90d0edbb

ஆலாபனை-12

  • Yagnya
  • December 1, 2022
  • 0 comments

12

 

“Is there no way out of the mind” – Sylvia Plath

 

மனதிற்கு மட்டும் ஓர் கதவு இருந்துவிட்டால் எத்தனை வசதி! ஏனெனில் என்னை நானே துடிக்கத் துடிக்க துரத்துகையில் அக்கதவு என்னை காப்பாற்றலாமே! கதவுக்குப் பின் சொர்க்கம் இருந்தால் என்ன பாதாளம் இருந்தால்தான் என்ன? என்னைவிடவா என்னை எதுவும் கடித்துக் குதறிவிடப்போகிறது? மறுபுறமிருப்பது புதைகுழி என்றறிந்தாலும் தாராளமாய் விழுவேன்! இம்மன குழியினுள் மாட்டி அனுஅனுவாய் மாண்டுவிடுவதற்குப் புதைகுழியின் மூச்சடைப்பே முக்தி நிலை. இம்மனதைக் கழட்டி வைக்க இயன்றிருந்தால் நானும் வாழ்ந்திருப்பேனோ ஓர் நொடியாது.

 

 

“அவிரன்” என்று காற்றுக் குரலில் பெரும் நிம்மதியும் சிறு சிரிப்புமாய் சொன்னவள் அப்படியே அவன் நெஞ்சில் விழுந்து கீழே சரியத் தொடங்கவும் சுதாரித்தவனாய் அவளை நெஞ்சோடு சேர்த்தணைத்தபடி உள்ளே கொண்டு வந்தான் அவிரன். உடல் தோய்ந்திருந்தவளை அவனது மெத்தையில் இருத்திவிட்டு மறுபுறம் இருந்த குவளையில் இருந்து நீர் வார்த்துக் கொண்டு வந்து அவள் அருகில் அமர்ந்தான்.

 

வெள்ளை நிற சாட்டின் இரவு கௌன் அதற்கு மேலே அதே நிறத்தில் பெரிய கோட். கால்களில் செருப்பில்லாமல் வந்ததினால் வெளிறி விறைத்திருந்த பாதத்தில் ஆங்காங்கே கன்றிச் சிவந்த தடங்களென அமர்ந்திருந்தவளையே வெறித்திருந்தவனின் பார்வை அவள் கைகளிலேயே கூர்மையாய் படிந்தன.

 

மேலும் கீழுமாய் வழுக்கி உருண்டுகொண்டிருந்த அவளது தொள தொள கோட் இன்னொரு முறை சற்றே அதிகமாய் கீழே இறங்குகையில் அதை அவன் பார்த்துவிட்டான். அதென்ன கையில்? கட்டுதானே! அதுவும் இவ்வளவு பெரிதாய்!

 

“கைல என்னாச்சு மிரு? ஏன் இவ்ளோ பெரிய கட்டு?” என்றவன் குரலிலும் உடலிலும் அப்பட்டமாய் பதட்டம் பரவிக் கிடந்தது.

 

அதில் அப்பொழுதே நினைவு வந்தவளாய் வலக்கையை சற்று தன் பார்வையில் படுமாறு தூக்கிப் பார்த்தவள் பிறகு அது ஒன்றுமில்லை என்பதுபோல் அலட்சியமாய் உதறிக் கீழிறக்கிவிட்டாள்.

 

 

“இது.. நேத்து யாரோ என்ன மழைல பால்கனில வச்சு பூட்டிட்டாங்க, குளிர் தாங்க முடியல.. கதவை ஒடைக்க வேண்டியதா போயிடுச்சு..” என்றவள் அவனது குழப்பப் பாவனையைக் கண்டுவிட்டு

 

“க்ளாஸ் டோர்” என்றாள் தெளிவு படுத்தும் விதமாய். அதுதான் என நினைத்து. ஆனால் அவனோ அவள் கொஞ்சமும் எதிர்பாராத நேரம் அவள் கழுத்திலும் நெற்றியிலும் மாற்றி மாற்றி  தொட்டுப்பார்த்தான். அவன் நினைத்தது போலவே உடல் கொதித்தது.

 

“ஓ மை காட்! கொதிக்குது மிரு” என்றவன் பரபரவென இரண்டெட்டு முன்னும் பின்னும் வைத்தான். பிறகு நின்று எதையோ யோசித்தான். சட்டெனக் குனிந்தவன் மெத்தை நுனியில் அமர்ந்திருந்தவளை ஆட்டுக்குட்டியாய் தூக்கிக்கொண்டு முழங்காலை மெத்தையில் பதித்து அவளை வசதியாய் நடு மெத்தையில் சாய்த்து அமர வைத்தான். அவனது திடீர் தீண்டலில் மிளிராவினுள் திடுக்கென்றது. அவனது திடீர் ‘மிரு’ அழைப்பும்தான். அவள் கால்களை நீட்டி வைத்தவன் ஒரு பெரிய ‘ரக்’கை எடுத்து வந்து அவளைச் சுற்றினான். பிறந்த குழந்தைகளைத் துணிக்குள் பொதிவதைப்போல அவளை அந்த வெள்ளை நிற ரக்கிற்குள் பொதிந்தவனின் பார்வை தனக்கு வெகு அருகில் தன்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த மிளிராவின் விழிகளினுள் விழுந்தது.

 

 

அந்த வெள்ளை உடையும் அவளைச் சுற்றி புஸ் என்றிருந்த கனத்த வெள்ளை நிற ரக்கும் அதனுள் ஒளிந்து கிடக்கும் அவளது குட்டி உருவமும், அவளை ஒரு பனிப்பந்தாய் காட்டின. அதுவும் குளிரில் வெளிறிய தேகத்தில் அநியாயத்திற்கு சிவந்திருந்த இதழ்கள் ஆகப் பெரிய ரகஸியம் எதையோ முணுமுணுத்து இழுத்தன. அவளும் அவனையேதான் பார்த்திருந்தாள். எப்பொழுது நெருங்கினான் என்றே உணராமல் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவனைப்போல அதிலேயே ஆழ்ந்து அமிழ்ந்து வெகு அருகில் நெருங்கிவிட்டவனின் அமிழ்தலில் சட்டென்று ஒரு சலனம். மந்திரமெல்லாம் நொடியில் உடைந்து மாயமானது.

 

தன்னையுமறியாது,”மாயாவி” என்றவன்

 

அவள்,”ஆஹ்?” என்று கேள்வியாய் நோக்கவும் சுதாரித்தவனாய் அகன்று, “உனக்கு டீ கொண்டு வரேன்” என்றுவிட்டு அறையில் இருந்து வெளியேறிவிட்டான்.

இஞ்சி துருவலுடன் சுடச்சுடத் தயாரித்த தேநீரை ஒரு கோப்பையில் நிரப்பியவன் ஒரு நொடி தயங்கினான், வீயனின் அறை வாசலைப் பார்த்து. உள்ளே அவன் இருக்கிறானா இல்லையா என்று எதையுமே முடிவாய் சொல்லிவிட முடியாதொரு அமைதி நிலவியது அங்கே. தலையை மெல்ல இடவலமாய் அசைத்துக்கொண்டவன் தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

 

 

அவள் கைகளுக்கும் அக்கோப்பையை வைத்து அழுத்தியவள் சில்லிட்ட அவள் உள்ளங்கைகளின் வெப்ப பரவலை நிம்மதியுர பார்த்திவிட்டு அதே மெத்தையில் அவள் எதிரில் அமர்ந்தான்.

 

சுடச்சுட கமகமத்த இஞ்சி டீயை ஒரு சிப் இழுத்தவளுள் அப்படியொரு சுகானுபவம்! நிம்மதி படரல்.

 

 

எதிரில் அமர்ந்த அவிரன் மெல்ல அவள் கால்களை இழுத்து தன் மடியில் வைத்துக்கொண்டதில் டீயை மறந்து திடுக்கிட்டவளின் முன் அவிரனது தீவிர முகமே தெரிய அமைதியாய் பார்த்திருந்தாள். எழுந்து சென்ற அவிரன் திரும்பி வருகையில் கையில் ஒரு சிறு பெட்டியும் ஈரத்துணியும் இடம் பெற்றிருந்தது.

 

மறுபடியும் அவள் பாதங்களைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டவன் மிக ம்ருதுவாய் அதை தொடைக்கத் தொடங்கினான். அவனது செயல் என்னவோ, முதல் முறை குழந்தையைத் தூக்கும்பொழுது எங்கு வலித்துவிடுமோவென பார்த்துப் பார்த்து தூக்கும் ஒரு பரிவு இருந்தது.

 

கன்றிச் சிவந்திருந்த பாதங்களில் மயிலிறகாய் தீண்டிச் செல்லும் அவன் விரல்களும் அத்துணியும் அத்தனை இதத்தைத் தந்தாலும் ஆங்காங்கே முணுமுணுவென இணுக்கு வலி இருக்கத்தான் செய்தது. ஆனால் அது அத்தனையும் தாண்டி மிளிராவின் விழிப்பார்வை மொத்தமும் வெகு கவனமாய் அசைந்துகொண்டிருந்த அவிரனையே ஒருவித ரிதத்துடன் பின்தொடர்ந்துகொண்டிருந்தன. அவனது கரிசனம் தரும் கதகதப்பில் மற்றனைத்தும் பறந்துதான் விட்டது அவளுக்கு.

 

 

பாதங்களைச் சுத்தம் செய்தவன் அதில் ஆங்காங்கே சிராய்த்திருந்த காயங்களுக்கு மருந்திட்டு மீதி காயங்களுக்கு ப்ளாஸ்திரி போட்டு என வெகு கவனமாய் அவ்வேலையை முடித்துவிட்டு நிமிர அத்தனை நேரம் அவனையே பார்த்திருந்த மிளிராவின் பார்வையில் தடுக்கினான். “ஹ்க்ம்” என்று சட்டெனத் தலையைத் திருப்பி தொண்டையை சீர் செய்பவனைப் போலப் பாவனை செய்தவன் அவள் கால்களை மட்டும் இன்னும் கீழே வைத்தபாடில்லை.

 

“செருப்பு கூட போட முடியாதளவு என்ன அவசரம் மிரு?” என்றவனின் குரலில் இருந்ததென்ன? மெல்லிய அதட்டலா? அல்ல கனத்த கரிசனமா?

 

மிளிரா,”போட முடியாத சூழல் அவிரன்”

 

அவிரன் புருவங்கள் சுருங்க,”புரியல.. திடீர்னு என்னாச்சு?”

 

குழப்பமே அவனிடம் கொட்டிக் கிடந்தன.

 

மிளிரா,”என்ன எதோ ஹாஸ்பிடலுக்கு மாத்த ப்ளான் பண்றாங்க அவிரன். அப்படி அவங்க என்னை எங்கயாவது மாத்திட்டா.. அப்பறம் நான் நினைச்சாலும் உன்ன பார்க்க முடியாது.. எதுவும் பண்ண முடியாது.. எனக்கு அங்க போக பயமா இருக்கு அவி” என்றவள் குரலில் மெய்யாகவே பயத்தின் சாயல்.

 

அவிரனுக்கு தொண்டையில் ஏதோ இடறியது. சொந்த வீட்டிற்குச் செல்ல பயப்படுபவளைப் பார்க்க ஆற்றாமையாய் இருந்தது. இந்த குட்டி உடலில் எத்தனை காயங்கள்? இதில் எதையாவது ஒன்றை அவனால் தடுக்க முடிந்ததா? இல்லையே! வெறுமனே நின்று வேடிக்கைதானே பார்த்துக்கொண்டிருக்கிறான். அவளை எப்படியாவது இங்கிருந்து காத்துவிட வேண்டும் என்ற வேகம் மட்டும் நீண்டுகொண்டே போனது. அவள் கால்களை எடுத்து கீழே வைத்தவன் அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான்.

 

 

போர்வைக்கும் இருந்த அவள் கைகளை மெல்ல தனதினுள் பத்திரப்படுத்தியவாறு மெல்லிய குரலில்,”நாம இங்கருந்து எங்கயாது தூரமா.. ரொம்ப தூரமா போயிடுவோமா மிரு? யாரும் வர முடியாத தூரத்துக்கு?” என்று கேட்டவனின் அடர்ந்த இமையோர இழைகள் ஏக்கமாய் வளைந்தன.

 

 

சில நொடிகள் மௌனத்தில் கழிந்தன. அவன் முகத்தையே பார்த்திருந்த மிளிரா ஒரு முடிவெடுத்தவளாய்,”போயிடலாமா அவி?” என்றாள். அதில் அவளை அப்படியே அணைப்பில் இறுக்கியவன் அவள் முதுகை மென்மையாய் வருடினான், “போயிடலாம் மிரு” என்றவனின் குரல் அந்த அணைப்பினுள்ளே அடங்கிக் கலந்தது.

அணைப்பு தந்த இதத்தில் லயித்திருந்தவளுக்கு நிதர்சனம் உரைக்க மெல்ல விலகினாள் அவனிடம் இருந்து.

 

ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்த அணைப்பு திடீரென  உடைபட. குழப்பமாய் பார்த்த அவிரன் முன் தன் கைகளைப் பார்த்து அமர்ந்திருந்தாள் மிளிரா.

 

அவிரன்,”மிரு? என்னாச்சு?” என வினவினான், உண்மையான கவலையுடன். ஒருவேளை அடிப்பட்ட இடத்தில் அழுத்திவிட்டானோ? அல்லாது அவளது அனுமதியின்றி அணைத்துவிட்டானோ? அப்படிதான் என்றால் எப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனத்தை செய்துவிட்டான் அவன்! என்று எண்ணங்கள் எல்லாம் எரி கல்லாய் விழுந்திட அதைத் தடை செய்வதுபோல் வந்தது மிளிராவின் தயக்க குரல்.

 

 

மிளிரா,”அப்போ.. உன் ஃபாமிலி அவி? உன் வேலை? உன் லைஃப்? எனக்கு வேற வழியில்ல நான் போகனும்.. ஆனா நீ? நீ ஏன் வரனும் அவி? நீ ஏன் எனக்காக எல்லாத்தையும் தூக்கி போடனும்?” அவள் குரலில் இருப்பது இன்னதென்று அவனால் உறுதியாய் சொல்ல முடியவில்லை. ஆனால் அவள் சொல்ல வருவது புரிந்தது. ஒரு முடிவெடுத்தவனாய் பால்கனியை சுட்டிக்காட்டியவன்,”அங்க போலாமா மிரு?” என்று கேட்க அவனது சம்பந்தமற்ற கேள்வியில் குழம்பினாலும், “ம்ம்” எனத் தலையசைத்தாள் மிளிரா.

 

 

எழுந்து சென்றவன் பால்கனி நடையில் அமர்ந்துகொண்டு அவளையும் அழைக்க, போர்வையுடன் எழுந்தவள் அவனருகில் இருந்த குறுகிய இடத்தில் அமர்ந்துகொள்ள அப்பொழுது தான் கவனித்தாள். அங்கிருந்து தெரியும் வானை. அத்தனை அழகாய் வெகு அருகில் படர்ந்திருப்பதைப்போலொரு பிரமை. தேய் பிறை வெகு அருகில் தெரிய அதைச் சுற்றித் தூவப்பட்டிருந்த நட்சத்திர சாரலுடன் தோள் உரசும் தொலைவில் அவிரன். அவ்விரவு ஒன்றும் அத்தனை மோசமானதாய் படவில்லை அவளுக்கு.

 

அவிரன்,”எனக்கு அப்பா மட்டும்தான். அவர் ஒரு அல்கஹாலிக். ரொம்ப அப்யூஸிவ். அதுக்காக அல்கஹால்னால தான் அவர் அப்படினு சொல்லிட முடியாது.. ஹ்ம் அவர் குடிக்காம இருந்து நான் பார்த்ததில்லை அப்படியே இருந்தாலும் அவர் இப்படியேதான் இருப்பாருனு ஒரு எண்ணம்..”

 

அவிரன் தன் பாட்டில் வானைப் பார்த்தவாறே பேசிக்கொண்டிருக்க என்ன முயன்றும் மிளிராவிற்கு கண்கள் கலங்கிவிட்டன. சட்டெனத் தலையை மறுபுறம் திருப்பி அவள் கண்களை துடைத்துக்கொள்ள அதில் கவனம் கலைந்த அவிரன் அவள் கன்னங்களை பற்றிக்கொண்டான்.

 

 

“அய்யோ.. அழாத மிரு! அதெல்லாம் முன்னதான்” என்று கேலிக்குரலில் பேசியவனை அவள் புரியாமல் பார்க்க அவனோ குரலைச் சரி செய்துகொண்டவனாய்,”ம்ம்.. அவருக்கு டெரஸ்ல சில சமயம் ட்ரிங் பண்ற பழக்கம் இருந்துச்சு.. அப்படியொரு நாள் போதைல தவறி விழுந்ததுல..” அவள் முகத்தைப் பார்த்தவன்,”இறந்துட்டாரு” என்று முடித்தான்.

 

இன்னும் அவள் முகம் தெளியாமல் இருக்க அந்த ஒடுங்கிய இடத்தில் சற்று அவள் புறமாய் திரும்பியது போல் அமர்ந்தவன்,”என் ஃபாமிலி.. என் வேலை.. என் லைஃப்.. ம்ஹ்ம்.. இரண்டாவது பெரிசா தெரியல.. மூனாவதுல நிச்சயம் நீயும் இருக்கனும்னு நினைக்கறேன் மிரு.. ப்ளீஸ் என்ன வர வேண்டானு சொல்லிடாத” என்று தன் கைகளைப் பற்றிக்கொண்டவன் வருவதைப் பற்றி மட்டும் பேசவில்லை என்பதை அவளால் உணர முடிந்தது. அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் அவள் தலையே அவன் தோளில் சாய்த்துக்கொண்டாள். அதற்கு மேல் அவனும் எதுவும் கேட்கவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. சுவர்க்கோழி மட்டும் எங்கோ சத்தமிட்டுக் கொண்டிருக்கப் பிறை நிலவும் பனி இரவுமாய் கழிந்தன சில மணி நேரங்கள். ஆம்! சில மணி நேரங்கள் மட்டுமே.

 

மிளிரா,”எனக்கு ஒரு இடம் தெரியும் அவி” என்றாள் அமைதியாய்.

 

 

அவிரன்,”ம்ம்?” அவனிடம் வினாக்கள் பல.

 

“இன்ஃபேக்ட் எனக்கு மட்டும்தான் தெரியும்” என்று கண்களில் சிறு ஒளி பிறக்கச் சொல்லியவளைப் பார்த்தவன்,

 

“புரியல மிரு” என்றான்.

 

மிளிரா,”ஆமா அவி! அது எனக்கும் அப்பாம்மாக்கும் மட்டுமே தெரிஞ்ச இடம். ஸோ வேற யாருக்குமே தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை..” என்றவள் சுற்றுமுற்றும் பார்வையைச் சுழலவிட்டு அவிரனின் செவி அருகே சென்றாள்.

 

“அது ஒரு குட்டி தீவு அவி.. அங்க எங்களுக்கு ஒரு வீடு இருக்கு.. எங்க ஆன்சஸ்டர்ஸ் வீடு மாதிரினு வச்சுக்கோயேன்.. அங்க எங்களுக்கு மட்டும்தான் வீடு இருக்கு.. அப்படி ஒரு தீவு இருக்கதே யாருக்கும் தெரியாது..”

 

 

அவிரன்,”இந்த சிட்டிக்கிட்ட அப்படியொரு ஐ லாண்ட் இருக்கா?” என்றான் ஆச்சரியமாய்.

 

மிளிரா,”ஆமா அவி! அம்மாவும் அப்பாவும் இருக்கறப்ப நாங்க மூனு பேரும் அடிக்கடி போய் ஸ்டே பண்ணுவோம்.. அது எங்க வெகேஷன் ஹோம் மாதிரி.. அங்கேயே காய்கறி பழம்னு கிடைக்கறதுனால மத்தத மட்டும்தான் கொண்டுபோவோம்.. நாம இப்போதைக்கு வேணா அங்க ஸ்டே பண்ணிக்கலாம் அவி” என்றாள் சிந்தனையாய்.

 

மிளிரா பேசுவதைக் கேட்டுக்கொண்டே தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்த அவிரன் எதையோ சொல்ல வாயெடுக்கவும் கதவை யாரோ தட்டவும் சரியாய் இருந்தது. அதில் இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ந்து பார்த்துக்கொள்ள வாய் மீது விரலை வைத்துக் காட்டிய மிளிரா மெல்ல எழுந்து சென்றவள் பீப் ஹோல் வழியாய் வந்திருப்பவரை பார்த்ததுதான் தாமதம்! அவள் சர்வமும் அடங்கியது வெளியில் நின்ற ஜெயனைக் கண்டு.

 

திரும்பி வந்தவளின் பார்வையிலேயே எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்தவன் அது ஏனென தெரிந்ததும் துரிதமாய் செயல்பட்டான்.

 

அவளை அமர வைத்து அவளெதிரில் அமர்ந்தவன் பதறியவளின் தோள் பற்றித் தான் இருப்பதாய் கண்களை மூடித்திறந்தான். அதற்கு அவளும் மேலும் கீழுமாய் தலையசைக்க எழுந்து சென்று கதவைத் திறந்தவன்தான் அதற்குப் பின் அவளை அவர்களோடே அனுப்பி வைத்தது.

 

அவன் மிளிராவை நம்புகிறான். எவர் என்ன சொன்னாலும் அவன் அவளைத்தான் நம்புவான். வினி சொல்லும் கதை நம்பும்படியாகவே இருந்தாலும் அவன் அவளைத்தான் நம்புவான்.

 

 

அந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று மேல்சட்டையற்ற தனது வெற்றுடலையே வெறித்து நின்றான் வீயன். அல்லது பல வருடங்களுக்கு முன்பு சின்டூ? ஆங்காங்கே சூடிழுக்கப்பட்ட தழும்புகளும், வெட்டுக்காயங்களும், வடுக்களுமாய் இப்பொழுது பார்க்கவே பயமாய் இருக்கும் இதே காயங்களை ரத்தம் வழிய வழிய வாங்கியபொழுதும் இதே போல்தான் உணர்ச்சியற்ற பார்வை பார்த்து நின்றான் அவன். இந்த உலகம் அவனை வஞ்சித்துவிட்டது. அவன் எதுவும் அறியா மழலையாய் இருந்த பொழுதே அவன் மழலை அவனிடமிருந்து பிடுங்கப்பட்டது. சின்டூவாய் அவன் சந்தித்த துயரங்களைச் சொல்லில் அடக்கிவிட இயலாது. மறந்தும் எவருக்கும் தீங்கு நினைத்திடாத மழலையைத்தான் இவ்வுலகம் மரணம் வரை பிடித்துத் தள்ளியது. ஓடினான். அத்தனையில் இருந்தும் ஓடினான். அவனிடம் இருந்தே ஓடினான். அவன் ஓட ஓட ஒரு கட்டத்தில் சின்டூ தேய்ந்து வீயன் ஆனது. பெரிதாய் எதுவும் மாறிவிடவில்லை. ஆனால் முன்பிருந்த மற்ற சில பயங்கள் அறுந்துபோயின. மீதி எங்கு மீண்டுவிடுமோ என்ற பயத்திலேயே வாழ்க்கை மெல்லிய நீரோடையாய் சென்றுக் கொண்டிருக்கையில் தான் அவிரன் வந்தான். அவன் வாழ்க்கையின் ஒரே பற்றுக்கோலாய் ஆனான் அவிரன். வாழ்க்கையை வாழத் தொடங்கினான் வீயன். அவிரன் அவனுக்கு இந்த உலகத்தைப் போல! அப்படிப்பட்ட அவிரனுக்கு ஒன்றென்றால் வீயன் எதையும் செய்யத் தயங்கமாட்டான். அது அவிரனின் உலகத்தை அழிப்பதென்றாலும்.

 

படாரென கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த அவிரனின் முகமே சொல்லியது அவன் சுமுக பேச்சுக்கு வரவில்லையென. கணப்பொழுதில் ஒரு போலோவை எடுத்து மாட்டிய வீயன் உணர்வுகளற்ற பாவனையுடன் நின்றிருந்தான்.

 

 

அதில் இன்னும் கடுமையானது அவிரனின் அவிரனின் கடவாய் இறுக்கம். கண்ணிமைக்கும் பொழுதில் வீயனது சட்டையைக் கொத்தாய் பற்றியவனின் முகத்தில் அத்தனை கோபமும் வெறுப்பும். முதன் முதலாய் அது வீயனை பாதித்தது.

 

 

அவிரன்,”நீதான? நீதான வீ அவங்களுக்கு கால் பண்ணது?” என்றான் இன்னும் பிடியை இறுக்கியபடி.

 

 

மெல்ல அவன் கைகளைப் பற்றி பிடியைத் தளர்த்திய வீ,”உனக்கு இது வேண்டாம் அவிரா” எனவும் அவிரனின் முகத்தில் அப்படியொரு நம்பமாட்டாத பாவம். அயர்வு. எல்லாம்.

பட்டெனப் பிடியை விட்டவன் திரும்பிச் செல்ல எத்தனிக்க அவன் கையை பற்றி நிறுத்தினான் வீ,”ப்ளீஸ் அவி” என்று

 

 

அவிரன்,”கைய விடு வீ” என்றான் திரும்பியும் பாராது.

 

வீயன் விடுவதாய் இல்லை,”ஐ நோ வாட் யூ ஆர் டூயிங் அவி. இப்போ நீ போனா இதுதான் கடைசி” என்றதில் அதிர்ந்து திரும்பிய அவிரன்

 

“என்ன மிரட்றியா வீ” என்று கையை உருவிக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

 

அவிரன் அப்படி கையை உருவிக்கொண்டு செல்வான் என்பதை எதிர்பார்த்திராத வீயன் அதை ஏற்கவியலாது அப்படியே அமர்ந்துவிட்டான்.

 

 

எங்கோ,

 

அந்த இரவு நேரத்திற்கு ஏற்ப வெளியில் சுவர்க்கோழியும் இன்னபிற பூச்சிகளின் சத்தமுமாய் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்க இருளில் முக்கிய அந்த வானை கீறிக்கொண்டிருந்தது அந்த சன்னலில் இருந்து வரும் மஞ்சள் நிற ஒளி.

 

அவ்வறையே அசாத்திய அமைதியில் இருந்தது. அதற்குச் சற்றும் சம்பந்தமில்லாது மஞ்சள் நிற விளக்கொன்று அங்குமிங்கும் ஆடியபடி அவ்வறையையே பளீரென்று வைத்திருந்தது. வெளியில் பேய் மழையை உறுதி செய்யும் தூறல் தொடங்கியிருந்தது. அறையின் மூலையில் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த மினர்வாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவள் நெற்றியில் இருந்து வழிந்துகொண்டிருந்த ரத்தம் ஒரு பக்க முகத்தையும் கூந்தலையும் பிசுபிசுக்க வைத்தபடி ‘சொட்..சொட்’ எனத் தரையில் விழுந்து சிதறிக்கொண்டிருந்தது. அவளால் அவள் கை கால்களை உணர முடியவில்லை. ஏன் மனமுமே மரத்துக் கிடக்க எதிரில் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆதியையே வெறித்திருந்தாள் அவள். அவள் கால் அருகில் கிடந்த சுத்தியலையும்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!