ஆலாபனை-13

WhatsApp Image 2022-11-29 at 8.00.56 PM-e65accf3

ஆலாபனை-13

  • Yagnya
  • December 2, 2022
  • 0 comments

13

 

“I do sin, but I am not the devil”

 

 

நிழலுக்கும் நிஜத்திற்கும் இடையேயான நிறம் மட்டும் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்றைய எனது நிஜம் இன்றைய உனது பொய். இன்றைய எனது பொய் நாளை உனது நிஜம். நீ நிஜமென்றால் நான் பொய்யாவேன். நீ பொய் என்றால் நான் நிஜமாவேன். வாழ்க்கை எனும் ராட்டினத்தில் நிழலும் நிஜமும் மாற்றி மாற்றி மேலேறும் பொழுது அதற்கேற்றது போல முகங்களை மாட்டிக்கொள்கிறேன். அடுத்த பெட்டிக்காரன் பார்த்துவிடாமல் இருக்க.

 

 

அவிரன் செல்வதையே பார்த்தபடி அமர்ந்துவிட்ட வீயன் தன்னுணர்வுக்கு வருவதற்கு சில நிமிடங்கள் பிடித்தன. அவன் சென்ற திசையையே பார்த்தபடி எழுந்தவன் தன் முடிவில் திண்ணமானவனாய் ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருந்த பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டான். இனி அவன் வேடிக்கை பார்ப்பதில் பிரயோசனம் இல்லை.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு…

 

 

தனது அறையைப் பெருக்கி துடைத்ததில் உடலில் இருந்த தெம்பெல்லாம் உருவியது போலாக ஹப்பாடா என்று தன் படுக்கையில் விழுந்த வீயனுக்கு திடீர் எண்ணம். அவிரனின் அறையையும் சுத்தம் செய்யும் எண்ணம். இதுவரை அதற்கான நேரம் அவனுக்கு வந்ததில்லை. ஆம்! அவிரனின் அறை எப்பொழுதுமே பளிச்சென்றிருக்கும்.  அவன் அப்படி வைத்திருப்பான். பொதுவாகவே வீயன் சுத்தம் செய்வதில் அத்தனை நாட்டம் இல்லாதவன் ஆதலால் அப்பக்கம் செல்ல வேண்டிய கட்டாயமே எழுந்ததில்லை அவனுக்கு. அவிரனும் இதுவரை என் அறை உன் அறை என்றெல்லாம் பிரித்து உணர்த்தியதில்லை. அதிலும் பாதி நாட்கள் வீயன் வீடு தங்குவதேயில்லையே! இருந்தும் ஏனோ சிறு தயக்கம் முதலில் எட்டிப் பார்க்க அதை அப்படியே தலையில் தட்டி தள்ளிவிட்டவனாய் வாளி, மாப், வாரியல் சகிதம் அவிரன் அறையினுள் நுழைந்தான் வீயன். அவன் நினைத்தது போலவே அறை வெகுவாய் சுத்தமாகத் தான் இருந்தது. ஆனால் அவிரனின் அறை இது என்று சொல்லும் சுத்தம் இல்லை. எதுவோ குறைந்தது.

 

என்னாச்சு இவனுக்கு? காலேஜ்ல ஏதும் சரியில்லையோ? என்ற சிந்தனை ஒரு புறம் ஓட பெருக்கி துடைக்கத் தொடங்கினான் வீயன். அப்படி மாப் போட்டுக்கொண்டிருந்தவன் கண்களில் விழுந்தது அந்த கப்போர்ட் இடுக்கில் மாட்டிக்கொண்டிருந்த துணி. கதவை அடைத்த பொழுது இடுக்கில் மாட்டியிருக்கக்கூடும். மாப்பை அப்படியே போட்டுவிட்டு கப்போர்ட் அருகில் வந்தவன் கதவைத் திறந்தான். அப்படி ஒரு நேர்த்தி! மேலை வரிசையாய் ஹாங்கரில் தொங்கிய சட்டையும் கீழே ஒரே ஒரு அளவில் மடித்து வைக்கப்பட்டிருந்த துணியையும் பார்த்தவனுக்குத் தன்னையறியாமல் புன்சிரிப்பொன்று இதழோரங்களில் இழைந்தன. அச்சிரிப்பு ஒரு கணம் அப்படியே உறைந்து பிறகு முகத்தில் மென்மையாய் ஓர் அலை படர்ந்தது அவன் கண்டதில். ஒரு ஊதா நிற சட்டையை மட்டும் தனியாய் ஹாங்கரில் மாட்டித் தனித்துத் தெரியும்படி வைத்திருந்தான் அவிரன். அது அவனுக்கு முதன் முதலில் வேலை கிடைத்த பொழுது வீயன் பரிசளித்தது. அதை இன்னும் பத்திரமாய் பாதுகாத்துக்கொண்டிருக்கிறான் போலும். மெல்ல அச்சட்டையை வருடின வீயனின் விரல் நுனியும் பார்வையும். உள்ளுக்குள் எதுவோ இளகியது.

 தன்னை மறந்து அதையே சில நிமிடங்கள் பார்த்திருந்தவனின் கவனத்தை எதுவோ கலைத்து அவன் பார்வையில் கூர்மையைக் கூட்டியது. அது அதே சட்டைக்குப் பின்னால் இருந்த அந்த கப்போர்டின் முதுகு பகுதி. அதில் எதுவோ வித்தியாசமாகப்பட ஹாங்கர்களில் கிடந்த துணிகளைச் சரித்து நகர்த்தியவன் பார்வை அதிர்ச்சியும் குழப்பமுமாய் விரிந்தது. அந்த கப்போர்டின் முதுகு பகுதியில் இருந்த திறப்பைப் பார்த்து. மேலே வலக்கை ஓரத்தில் இருந்த ஹூக்கை எடுத்துவிட்டு அதைத் திறக்க அவன் கனவிலும் காண விருப்பப்படாத சிலதை பார்த்துக்கொண்டு நின்றான் வீயன். இரண்டாய் கதவுகளை போலப் பிரிந்த பலகை முழுதும் மிளிராவின் புகைப்படங்களும் போலாரைட்களும். அவள் அவளறையில் தூங்குவது போல் ஒன்று. எழுவது போல் ஒன்று. கையில் காபி கோப்பையுடன் அவள் வீட்டு பால்கனியில் நிற்பது போல் ஒன்று. காரில் இருந்து இறங்குவது போல் ஒரு புகைப்படம். லைப்ரரியினுள் இருந்து வெளியேறுவது போல் ஒன்று என அதைப் போலப் பல புகைப்படங்களும் அதைக் குறிக்கும் ஸ்டிக்கி நோட்களும் பென் ட்ரைவ்களும் காமிராவும். மிளிராவின் பழைய நோட்பேடும் மற்ற சிலதும் என அவ்விடமே மிளிராவின் மொத்த தகவல்களை தன்னுள் அடக்கிக்கொண்டு நின்றன. அதிர்ந்து நின்றிருந்த வீயனுக்கு பார்த்த சில கணங்களிலேயே புரிந்துவிட்டது. அவிரன் இத்தனை வருட காலமாய் மிளிராவை ஸ்டாக் செய்வது.

புகைப்படங்களைப் பார்க்கையில் இன்னமும் பின்தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறான் என்பது ஐயமறப் புரிந்து போனது. வீயன் பலகையை முதலில் இருந்தது போலவே வைத்து கதவுகளை மூடினான். முதலில் இருந்தது போலவே அத் துணியை இடுக்கில் மாட்டிக்கொண்டது போல் வைத்து கப்போர்ட் கதவை அடைத்தான். அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

 

வீயனுக்கு புரிந்தது. அத்தனையும் மிளிரா பொய் சொல்கிறாள் என்பதை நிரூபிப்பது போல் இருக்கையில் அவன் மட்டும் அவளை நம்புவதற்கு முக்கிய காரணமே அவன் அவளை அத்தனை வருடங்களாய் பின் தொடர்ந்திருக்கிறான். அவளைவிட அவளைப்பற்றி அத்தனையும் அவன் அறிந்து வைத்திருக்கிறான். அவிரனுக்கு மிளிராவை பற்றி அனைத்தும் தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவள் சொல்வதனைத்தையும் அவனால் நம்ப முடிகிறது. அவள் அத்தனை வருடம் தனியாய் இருந்திருந்தாலும் இல்லாவிடினும். அவள் இப்பொழுது சொல்வது நிஜமாகவே இருந்தாலும் அல்லது முழு பொய்யாய் இருந்தாலும். அதை அவிரன் அவனுக்கு சாதகமாய் ஆக்கிக்கொள்ளப் பார்க்கிறான். அவனுக்கு மிளிரா வேண்டும். அதைச் சுலபமாக்கிக் கொடுப்பதைப் போல அவளே அவனிடம் வந்து உதவியென நின்றிருக்கிறாள். அவனும் உடும்பெனப் பற்றிக்கொண்டான். அவிரன் மிளிராவை காப்பாற்ற வரவில்லை. அவனிடம் இருந்துதான் மிளிராவை காப்பாற்ற வேண்டும். இனி இவன் என்ன சொல்லியும் அவன் கேட்க போவதில்லை. அவன் ஸ்டாக்கராகவே இருந்தாலும் வீயனால் அவிரனை அப்படியே விட்டுவிட இயலாது. அவனுக்கு அவிரன் வேண்டும். இத்தனை நாள் பின் தொடர்ந்துகொண்டிருந்த அவிரன் இனி அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்குள் அவனை நிறுத்தியாக வேண்டும். பெரிதாய் ஏதும் விபரீதம் நடப்பதற்குள் அதை இவன் நிறுத்தியாக வேண்டும்!

நடுக்கடலை நோக்கி சென்றுகொண்டிருந்த படகில் இருந்த வீயனின் கைகள் அவன் தோள் பையை இறுக்கியது. அவனது பார்வை கறையையே வெறித்திருந்தது. திரும்பி வருகையில் அவனது அவிரன் இதில் இருந்தெல்லாம் வெளியில் வந்திருப்பான். வர வேண்டும். அவன் வர வைப்பான். படகு நீரைக் கிழித்துக்கொண்டு விரைந்தது.

 

 

தனது அறையினுள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருந்த அவிரனுக்கு தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல் இருந்தது. முட்டாள்! முட்டாள்! எத்தனை பெரிய முட்டாள்தனம்! அன்று இரவு மிளிராவை அவர்களுடன் அனுப்பியது. அவர்களை அங்கு எதிர்பாராமல் முதலில் அதிர்ந்து தடுமாறியவன் நொடிப் பொழுதில் சுதாரித்தான். திட்டமிட்டான். இப்பொழுதிற்கு அவன் எந்த ஒரு எதிர்ப்பும் இன்றி மிளிராவை அவர்களுடன் அனுப்பி வைப்பதுதான் புத்திசாலித்தனமாய் பட்டது. அதையே செய்யவும் செய்தான். தன்னையே வெறித்துப் பார்த்தபடி மௌனமாய் மிளிரா அன்று அப்படிச் சென்றது.. இன்னும் உள்ளுக்குள் வலித்தது. ச்சே! அதற்கு இது நேரமில்லை. அப்படி வாசல் வரை துணிவாய் வந்து கூட்டிச் சென்றனர் என்றால் அதற்கு நிச்சயம் வீயன் தான் காரணம் என்பதை நன்றுணர்ந்தவன் அவர்கள் செல்லும் வரை தன்னுணர்வுகள் அனைத்தையும் மூச்சோடு சேர்த்துப் பிடித்து வைத்திருந்தான். அன்று அதற்குப் பிறகு  வீயனிடம் அப்படிச் சண்டையிட்டுவிட்டு வெளியேறியவன் தான். இரண்டு நாட்கள் கழிந்து இப்பொழுது தான் வீட்டிற்கு வருகிறான். எப்பொழுது மிளிராவிடம் இருந்து எங்காவது சென்றுவிடலாம் என்ற வார்த்தை வந்ததோ அப்பொழுதே அவன் அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டான். அது சம்பந்தமாய் தான் அன்று இரவும் அவன் வெளியேறியது. ஒருவேலை அன்று அவன் அவர்களுக்குப் பின்னாலேயே சென்றிருக்க வேண்டுமோ!

ஏனெனில் கடந்த இரு தினங்களையும் மிளிராவின் வீட்டைக் கண்காணிப்பதிலேயே கழித்தவனுக்கு அவளும் அந்த வீட்டில்தான் இருக்கிறாள் என்பதைச் சொல்வதுபோல் இல்லை. ஆம் அவளைக் காணவில்லை! இரண்டு நாட்களாய் தேடிக்கொண்டிருக்கிறான் மிளிராவை. அவளைக் காணவில்லை. அவன் உயிரையே எவரோ அவனிடம் இருந்த உருவி ஒளித்து வைத்திருப்பதுபோல் இருந்தது. இல்லை. இது சரிவராது. அவனால் மிளிராவை இழக்க இயலாது. அவிரன் ஆணித்தரமாய் நம்பினான். அத்தனையும் இழந்திருந்த அவன் வாழ்க்கையின் ஒரே பதில் மிளிராதான். அவள் மட்டும்தான். அவனுக்கு அவளுடனான ஒரு அமைதியான வாழ்க்கை வேண்டும். அது இங்கிருந்தாலும் சரி வேறு எங்கிருந்தாலும் சரி. இதை வீ இப்பொழுது புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. என்றேனும் புரிந்துகொள்வான். அவிரன் பார்க்கக் கூடாத பலதை கண்ணெதிரே பார்த்துவிட்டான். விருப்பமின்றி பார்த்திருந்தாலும் அவை யாவும் அவன் கண்ணை விட்டு இறங்குவதாய் இல்லை. கனத்த கண்களுடன் அலைந்தவனின் பார்வை முதன்முதலாய் தெளிவானது அவன் மிளிராவை பார்த்தபொழுது. அவள் அவளறியாமலே அவன் வாழ்க்கையில் வசந்தம் தந்தாள். யாருமற்ற உலகில் தான் மட்டும் தனித்து நிற்பதாய் நினைத்தவனுக்கு அவனைப்போலவே ஒருத்தி.. அவன் கை பிடித்து நிற்க ஒருத்தி என வந்தாள். இல்லை. இவன் இப்படி உட்கார்ந்திருப்பதில் பயனில்லை. அவிரன் எழுந்துகொண்டான். தள்ளியிருந்து பார்த்த காலம் முடிந்துவிட்டது. அவளே அவனிடம் வந்துவிட்டாள். இனியும் பார்த்துக்கொண்டிருப்பதில் பயனில்லை. இனி நேருக்கு நேராய் பார்த்துவிட வேண்டியதுதான்.

 

 

கண்விழித்த மிளிராவிற்கு சில நொடிகள் தேவைப்பட்டன தான் எங்கிருக்கிறோம் என்பது பிடிபடவே. பார்வை இன்னும் மங்கலாய் இருக்க அப்படியே விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தவளின் முன் இரவு விளக்கின் ஒளி மங்கலாய் தெரிந்தது. நாலைந்து முறை கண்களை மூடித் திறந்த பின்பே சற்று தெளிவானது. அவள் இருப்பது அவளது அறைதான் என்பது உறைத்தது. அதுவும் அவள் படுத்திருப்பது தரையில் என்பது புரிய இன்னும் சில கணங்கள் தேவைப்பட்டன. அப்படியே படுத்திருந்தாள் மிளிரா. அவளுக்கு எழுந்திருக்கக் கூட தோன்றவில்லை. ஏன் எதுவுமே தெளிவாய் தோன்றவில்லை.

மெல்லத் தலையைத் திருப்பி வால் க்ளாக்கை பார்த்தாள். இரண்டு நாட்கள் ஓடிவிட்டது புரிந்தது. ஆனால் அந்த இரண்டு நாட்களும் என்ன நடந்தது என்றுதான் புரியவில்லை. மந்தமாய் இருந்தது. அவளது கடைசி நினைவு அம்மா வந்ததது தான். ஆம்! அன்று அப்பா வந்தது போல அம்மாவும் வந்தாள். இவளிடம் எதையோ சொல்லிவிட முயற்சி செய்தாள். அதைச் சரிவரச் சொல்ல முடியாது போகத் திணறினாள். அவளுக்குக் குரல் வரவில்லை. எதையோ சொல்ல நினைப்பதும் பிறகு தவிப்பதுமாய் இருந்த அம்மாவைப் பார்க்க மிளிராவிற்கு பாவமாய் இருந்தது. அம்மாவுக்கு வல புறம் இருந்த வழி குறுகிக் கொண்டே போனது. அது அவள் செல்ல வேண்டிய கட்டாயத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. கடைசியில் எதுவுமே முடியாது போக அம்மா இவளை நோக்கி கையை நீட்டினாள். ஏனென்று புரியாமல் போனாலும் இவள் கை தானாகவே நீண்டுவிட்டது. ஆனால் நொடியில் சுதாரித்தவளாக இவள் இழுத்துக்கொள்ள பார்க்க அதற்குள் இவள் கையை பற்றிவிட்டவள் தன்னுடன் சேர்த்து இழுக்கத் தொடங்கினாள்.

 அதிர்ந்த மிளிரா அம்மாவைப் பார்க்க அவள் கண்களில் இருந்து சரம் சரமாய் கண்ணீர் மழை வழிந்துகொண்டிருந்தது. ஆனால் பிடி அதற்கு மாறாய் இறுகியது. வேகமாய் இழுக்கத் தொடங்கினாள். மிளிராவும் கையை உருவிக்கொள்ள முயன்றாள். கடைசியில் கை பலமாய் பிடித்து இழுக்கப்பட்டதில் கால்கள் தரதரவென தரையில் தேய மிளிரா நகர்ந்தது தான் நினைவில் இருக்கிறது. அது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. அதற்குப் பிறகு என்னவானது ஏதானது என்று எதுவும் தெரியவில்லை. மொத்தமாய் கருப்பாகிவிட்டது. அதற்குப் பிறகு இப்பொழுதுதான் கண் விழிக்கிறாள் இவள்.

சில நிமிடங்கள் கடந்தன. விளக்கு ஒளி இப்பொழுது இன்னும் தெளிவாகத் தெரியத் தொடங்கியது. மெல்ல வந்தது அவிரனின் நினைவு. அவளால் இன்னும் நம்பவியலவில்லை. அவிரனா அவளை அப்படிக் கைவிட்டது? அதுவும் அவ்வளவு நேரம் அத்தனை இணக்கமாய் பேசிக்கொண்டிருந்தவனா திடீரென நிறம் மாறி இவர்களுடன் தன்னை அனுப்பி வைத்தது? அப்போ அவன் கண்களில் அவள் கண்ட அந்தக் காதல்? அதுவும் பொய்யா? இல்லை! நிச்சயம் இல்லை! அவள் உணர்ந்த அவனது காதல் நிச்சயம் பொய்யில்லை! அவன் அப்படி நடந்துகொண்டதற்குக் கூட ஏதேனும் காரணம் இருக்கலாம். அவிரன் அவளை அப்படி விட்டுவிட மாட்டான்! நிச்சயம் தன்னை இதில் இருந்து மீட்பான் அவன்! முழுமனதாய் நம்பினாள் மிளிரா.

 

 

எண்ண அலைகள் கரை மோத அப்படியே கிடந்தவளின் கவனம் கலைந்தது பால்கனி பக்கம் எழுந்த மெல்லிய சத்தத்தில். யாரோ அவள் பால்கனி வழியாய் ஏறி வருகிறார்கள்! ஆனால் யார்? அதுவும் இந்த நேரத்தில்? மெல்ல சப்தமெழாதவாறு எழுந்தவள் அருகில் இருந்த டேபில் லாம்ப்பை கையை எடுத்துக்கொண்டு பால்கனி கதவருகில் ஒளிந்து நின்றுகொண்டாள். அன்று அவள் உடைத்த கண்ணாடி இன்னும் சரி செய்யப் பட்டிருக்கவில்லை. தாறுமாறாய் வரையப்பட்ட வட்டம் போல் இருந்த உடைசல் வழியாய் நிலவொளி அறை முழுதும் படர்ந்துகொண்டிருந்தது. லாம்ப்பை வலக்கையால் இறுகப் பிடித்தவளின் இதயத் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் எகிற தொடங்கியது, அவ்வுருவம் கதவை நெருங்க நெருங்க.

 

மூன்று.. இரண்டு.. ஒன்று.. இதோ! அவ்வுருவம் கதவைத் சத்தமெழாதவாறு திறந்து கொண்டு உள்ளே நுழையவும் மிளிரா லாம்ப்பை ஓங்கவும் சரியாய் இருந்தது. நொடிப்பொழுதில் சுதாரித்த உருவம் தன் இடக்கையால் அந்தரத்தில் உயர்ந்த மிளிராவின் வலக்கையை அப்படியே அந்த லாம்ப்புடன் சுவரோடு சேர்த்துப் பிடித்து வலக்கையால் அவளது இடக்கையை அவள் முதுகுக்குப் பின்னால் இடையோடு சேர்த்து தன்னுடன் அணைத்தபடி சுவரில் சாய்த்தது.

 

வசமாய் சிக்கியவள் திமிறித் தப்ப நினைக்க அவளது முயற்சி எல்லாம் சட்டென நின்றது அவ்வுருவத்தின் முகத்தைக் கண்டு.

 

“ஷ்ஷ்! மிரு நான் தான்” என்ற அவிரனின் குரலும் நிலவொளியில் தெரிந்த அவன் முகமும் அத்தனை நேரம் இருந்த அத்தனை கலக்கங்களையும் களைந்து அவளுள் பரவசத்தைப் படரவிட்டன. அவனது பிடி தளரவும் லாம்ப்பை கீழே வைத்தவள் தன் உயரத்திற்குக் குனிந்து நின்றவனைக் கழுத்தோடு சேர்த்து அணைத்து அவன் கழுத்து வளைவில் முகத்தை புதைத்துக்கொள்ள அவள் இடையை இறுக்கமாய் அணைத்தபடி அவளை அப்படியே தூக்கிக்கொண்டான் அவிரன். தரையில் பாவாத கால்கள் இப்பொழுது அவளுக்குப் பயத்தைக் கொடுக்கவில்லை.

 

 

தன் கழுத்து வளைவிலேயே இன்னும் இன்னும் அழுத்திக்கொண்டிருந்தவளைத் தன்னுணர்வு வரச் செய்தான் அவிரன்.

 

“ஷ்! மிரு நாம கிளம்பனும்” என்றவனின் கிசுகிசுப்பான குரலில் தலையை மட்டும் தூக்கி அவனைப் பார்த்தாள் மிளிரா.

 

“எங்க?”

 

“ப்ச்.. மறந்துட்டியா?” என்றவனின் முகத்தில் விளையாட்டுத்தனமான அதட்டல். அவன் எதைச் சொல்கிறான் என்பது நொடியில் புரிந்துவிட அவள் புருவங்கள் இரண்டும் ஆச்சரியத்தில் வளைந்தன.

 

“நிஜமாவா?” என்று

 

அவிரன்,”ம்ம் நிஜமா” என்று அவள் அவள் நெற்றியில் முட்டியவன் அவளைக் கீழே இறக்கிவிட்டான்.

 

“சீக்கிரமா! யாரும் வரதுக்குள்ள இங்கருந்து கிளம்பனும்” என்று அவள் புறம் கையை நீட்ட இளநகையொன்றுடன் அவன் கரம் பார்த்தவள் பிறகு அதை இறுக்கமாய் பற்றிக்கொள்ளவும் அவளது சிரிப்பு அவனையும் தொற்றிக்கொண்டது. பால்கனி வழியே வெளியேறியவர்கள் அந்த ஆளரவமற்ற சாலையில் ஓடினர். அன்று இரவு அவள் ஓடிய அதே சாலை. ஆனால் அன்றிருந்த பயம் பதட்டம் எதுவுமின்றி அவிரனின் கையை பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த மிளிராவினுள் தனி நிம்மதி. புது நம்பிக்கை. பின்னால் திரும்பி அவள் முகம் பார்த்தவன் வதனத்திலும் அதே புன்னகை. அதொரு வித பனித் துளி நினைவாய் மனதினுள் படிந்து போயின மிளிராவிற்கு.

 

அந்த கரையை அடைந்தவர்கள் மூச்சுவாங்கியபடி நின்றுவிட மிளிராவிடம்,”ஒரு நிமிஷம்” என்ற அவிரன் அவ்விருளினுள் மறைந்துவிட்டான். முழுதாய் ஒரு நிமிடம் காத்திருந்த மிளிராவிற்கு பய பந்து மெல்ல மெல்ல உருளத் தொடங்க அவள் பார்வை அவனுக்காய் அலைபாய்ந்தது. அப்பொழுதுதான் அவளுக்கே புரிந்தது அது இங்கிருந்து முழுதாய் செல்லும் வரையிலும் அவளுக்கு முழு நிம்மதி என்பது சாத்தியமில்லை என.

 

மிளிரா,”அவி! அவி!” என்று அழைத்தவாறே கணுக்கால் வரை நீரில் நனைய அங்குமிங்குமாய் ஓடியவள் ஒரு கணம் தாமதித்து பிறகு கடலுக்குள் இறங்க எத்தனிக்க அதற்குள்,”மிரு” என்ற அவிரனின் அழைப்பு அவளுக்கு தன் ஜீவனை திருப்பி கொடுத்தது. வலப்பக்கம் இருந்து குரல் வர அத்திசையையே வெறித்தவளின் பார்வை அவ்விருளுக்குப் பழகித் தெளிவாக சில நொடிகள் பிடித்தது. தூரத்தில் அவிரன் நிற்பது அவள் பார்வையில் விழவும் நீருக்குள் இறங்கியவள் எதைப்பற்றியும் சிந்தியாது கண்மண் தெரியாமல் அவனை நோக்கி ஓடினாள். அவள் வருவதைக் கண்டவன் தன் கைகளை அகல விரிக்க ஓடி வந்தவள் அதனுள் புகுந்துகொண்டாள்.

 

“இருனு தானே சொன்னேன் உன்ட்ட” அவிரனின் குரல் அவள் கூந்தலுக்குள் நுழைந்தது. அவளது அணைப்பு ஒரு நொடி இன்னும் இறுகி பிறகு தளர்ந்தன.

 

“என்ன தனியா விட்டுப் போகாத” அமைதியாய் வந்த குரலில் இருந்து எந்த உணர்வும் பிடிபடாவிட்டாலும் ஏனோ அதைக் கடைசி கடைப்பிடித்திட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மாயமந்திரம் போல் அவனுள் ஒலித்தது.

 

மிளிரா விலகிக்கொள்ளவும் அவளை அழைத்து சென்றவன் அங்கு நின்ற ஓர் படகில் ஏறிக்கொண்டவன் பிறகு அவள் புறம் தன் கரத்தை நீட்டினான்.

 

இந்த கரத்தைப் பற்றினால் போதும்! இனி இந்த வாழ்வு அவளைத் தொடராது! கரையின் மறுபுறத்தில் புதியதொரு வாழ்வு அவளுக்காகக் காத்திருக்கிறது! அவிரனும் அவளும் மட்டுமான ஓர் உலகம்! அத்தனை வருடம் ஒட்டிக்கொண்டு வந்த வாழ்க்கையை உதறித் தள்ளுபவள் போலத் தோளை அசைத்தவள் அவன் கைப்பிடித்து படகில் ஏறினாள். படகு கிளம்பியது.

 

அவர்களுக்கு அந்த நிலவும் பனிக்காற்றும் கடலோசையுமே வழித்துணையாகிடப் படகும் பரவசமாய் பறந்தது அத் தீவை நோக்கி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!