ஆலாபனை-14

WhatsApp Image 2022-11-29 at 8.00.56 PM-3732a674

ஆலாபனை-14

  • Yagnya
  • December 3, 2022
  • 0 comments

14

 

“At every moment of our lives, we all have a one foot in a fairy tale and the other in the abyss” – Paulo Coelho

 

இறப்பை என்றுமே நூறு சதவீதம் நியாயப்படுத்த இயலாது. இறந்தவன் எத்தனை பெரிய கேடனாய் ஜீவித்திருந்தாலும் அவன் என்றேனும்.. ஒரே ஒரு நாளேனும்.. ஒரு மணி நேரமேனும்.. ஏன் ஒரு கணமேனும்.. எவரோ ஒருவரின் வாழ்வில் வசந்தத்தை பரப்பியிருப்பான். அவ்வொருத்தருக்கு அவனது மரணம் மன்னிக்க இயலாதவையாய் அமையும். மரணங்கள் மரணிப்பவரின் தண்டனை அன்றி, அவருடன் பயணித்தவர்களுக்கான தண்டனையாகிறது.

 

 

படகு அக்கரையை முட்டி நின்றதுதான் தாமதம், ஒரு மலையை புரட்டி போட்ட உணர்வு மிளிராவிற்கு. அவளால் இன்னும் நம்ப இயலவில்லை. ஆழ மூச்சிழுத்தவள் கடல் காற்றை தன் சுவாசப் பைகளினுள் நிரப்பிக்கொண்டாள். அவள் இதழோரங்களில் சிறு முறுவல் ஒன்று அழகாய் பிறந்தது.

 

 

“இங்கதான் அவி” என்றவள் படகில் இருந்து நீரினுள் தொப்பென்று குதித்துவிட அதில் பதறிய அவிரனோ,

 

“ஏ! ஏ!” என்று கத்தியவாறே நொடி தாமதியமல் தானும் நீரினுள் குதித்தான். அவனுக்குப் படபடப்பு அவள் செயலால். ஆனால் அவன் பிபியை எகிற வைத்தவளோ அவன் கையை பிடித்துக்கொண்டு கலகலவென கண்கள் சுருங்க  சிரித்துக்கொண்டிருந்தாள். சுட்டு விரலை அவன் புறம் கிண்டலாய் காட்டியவாறு சிரிப்பவளையே போலி கோபத்துடன் இடுப்பில் கை வைத்து முறைத்தவன் அவள் எதிர்பாராத சமயம் சட்டென அவள் விரலைப் பிடித்து இழுத்து அணைத்தவன் அப்படியே நீரினுள் சரிந்தான்.

 

மீண்டும் நீரினுள் இருந்து எழுந்த இருவரின் மூச்சிரைப்புடன் சேர்ந்த அவர்களது நகையொலி அத்தீவையே சுற்றிப் பறந்தது சிறு சிட்டுக்குருவியாய்.

 

இமையோரங்கள் சுருங்க வாய்விட்டுச் சிரிப்பவளையே பார்த்திருந்த அவிரனின் சிரிப்பு சத்தம் மெல்லத் தேய்ந்து அவன் பார்வை அவளில் ஆழமானது. கனவிலும் கண்டானா அவன்? அவன் மிளிராவுடன் இப்படியொரு நாள் அவனுக்குக் கிடைக்குமென? இத்தனை அருகில் அவளை பார்ப்போமென நினைத்துக்கூடப் பார்த்திருப்பானா? அதுவும் அவளுக்கும் அவனை பிடித்திருக்கிறது! இது அவர்களுக்கான உலகம்! புது உலகம்! கடந்த காலம் அனைத்தையும் கழட்டி எரிந்துவிட்டு வந்திருக்கும் புது பூமி! இதை மற்றவரால் புரிந்துகொள்ள முடியாது. அவனை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. வீயன்கூட விடயம் தெரிந்தால் புரிந்துகொள்வானா என்று தெரியவில்லை. ஆனால் உலகத்தைப் போல அவன் இவனை என்றுமே ஒதுக்கிவிட மாட்டான். உலகம் இதற்கு என்ன பெயரை வேண்டுமானாலும் வைத்துவிட்டுப் போகட்டும் அவனுக்கு இது காதல்! பரிபூரணமான காதல்! எவரது ஒப்புதலுக்கும் அவசியமற்ற காதல் இது! அவன் கிடைக்குமா என்று தினம் தினம் ஏங்கிய ஓர் உலகம் இப்பொழுது அவன் கைகளில்! கடைசியாய் அவனது உடோபியாவை அவன் அடைந்துவிட்டான்!

 

அவிரனின் பார்வை அவனுக்கு முன்னால் இருந்த தீவில் படிந்தது. அவ்விருளில் ராட்சத தனமாய் பரந்து படர்ந்துக்கிடந்த மரங்கள் அவனை மிரட்டவில்லை. மாறாய் பிரமிக்க வைத்தன. அவள் சொன்னது போல் அது ஒரு குட்டி தீவுதான். ஆனால் சற்றே விசித்திரமான தீவு அது. மரங்களுக்குப் பின்னால் நடுவில் சென்ற பாதை அதற்கு எழும்பி நின்ற அந்த மலைப்பகுதியையும் அதற்கு மேல் மிகப் பிரமாண்டமாய் நின்ற மாளிகையையும் ஏதோ ஒரு ஃபேண்டஸி படத்திற்குள் நுழைந்துவிட்ட உணர்வைக் கொடுத்தது அவனுக்கு. இத்தனை பிரம்மாண்டத்தை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

அவன் கை பற்றியவள்,”வா அவி” என்று அவனையும் இழுத்துக்கொண்டு அனாயாசமாய் அந்த மலை நிலத்தில் ஏறிட, முதல் முறை என்பதால் அவன் தான் சற்று தடுமாறிப்போனான்.

 

சரியாய் ஐந்து நிமிடங்கள் பிடித்தன அவர்களுக்கு அந்த மலையை ஏறுவதற்கு.

 

மூச்சிரைக்க நின்றவனின் முன் பயங்கரமான காட்சிகளில் வருவதுபோல் அசாத்திய உயரத்தில் அகலமாய் இரு இரும்பு கதவுகளும் அதைத் தாண்டி தெரிந்த அதைவிடப் பெரிதான பழைய மாளிகை ஒன்றும் விழுந்தன.

 

தன்னையறியாது,”வாவ்” என்றவனையே ரசனையாய் பார்த்தவளோ பிடித்திருந்த அவன் கையை விடாது மறு கையால் கதவை திறந்துகொண்டு வீட்டை நோக்கி ஓடினாள்.

 

லேசாய் மக்கின வாடையும் உப்புக்காற்று வாசமும் வீச மங்கிய மஞ்சள் ஒளியில் அவ்விடமே தேவலோகமாய் காட்சியளித்தது. உயர்ந்த மேற்கூரையால் வெகு தொலைவில் தெரிந்த முதல் தளம். அங்குச் செல்வதற்குத் தோதாய் அகலமாய் சென்று இரு புறமும் வளைந்து திரும்பும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட படிக்கட்டுகள். அப்படிக்கட்டின் முகப்பில் சீராய் செதுக்கப்பட்டிருந்த மர வேலைப்பாடுகள். பழையதாய் இருந்தாலும் வசீகரமாய் காற்றில் ஆடியபடி நின்ற திரைச்சீலைகள் தந்த அந்த வின்டேஜ் லுக் செஸ் போர்டை போலக் கருப்பு வெள்ளையில் இருந்த தரைதளம் என அவ்விடமே ஏதோ அவனொரு ஃபேரி டேலுக்குள் வந்துவிட்ட உணர்வை தந்ததன.

 

“முதல் ஃப்ளோர்ல பழைய வார்ட்ரோப் இருக்கும் அவி” என்று வந்த மிளிராவின் குரலைக் கேட்டதற்குப் பிறகு தான் இருவரும் சொட்ட சொட்ட நனைந்து நிற்பதே உரைத்தது அவனுக்கு.

“ம்ம்” என்றவன் தலையசைக்கப் படியேறினர்.

 

முதல் தளத்தில் இருந்த அந்த படுக்கை அறையில்தான் இருந்தது அந்த வார்ட்ரோப். படுக்கையறை என்றுவிட முடியாதளவு அவ்விடம் பரந்து விரிந்ததிருந்தது. ஒரு புறம் பெரிய படுக்கையும் அதற்கு இடப்பக்கம் வார்ட்ரோபும் அதையடுத்து குளியலறையும் என ஒரு பகுதியும் இன்னொரு பாதி முன்பு லிவிங் ஏரியாவாய் இருந்திருக்க வேண்டும் இப்பொழுது அவ்வளவு பெரிய இடத்தில், நட்ட நடுவில் ஒரே ஒரு குட்டி சோஃபா மட்டும் அமர்ந்திருந்தது.

 

அவிரனின் பார்வை அறையைச் சுற்றி வந்துகொண்டிருக்க அதற்குள் இருவருக்குமான இரவு உடையுடன் வந்த மிளிரா ஒன்றை அவன் கையில் திணித்துவிட்டு அவளும் உடை மாற்றும் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

 

 

உடைமாற்றிய அவிரன் தொப்பென்று அப்படுக்கையில் விழுந்தான். படுக்கை அவனை அமிழ்த்திக்கொண்டது. அந்த இலகுவான சாட்டின் உடையும். அமிழ்த்தியிருந்த இலவம்பஞ்சு மெத்தையும் தந்துவிடாத ஒருவித சுகத்தை மிளிராவின் சிறுசிறு அசைவில் எழும் சத்தம் அவனுக்குத் தந்தது. அப்படியே தலையைத் திருப்பி உடை மாற்றும் அறையில் இருந்து கதவைத் திறந்து வெளியில் வந்துகொண்டிருந்த மிளிராவையே பார்த்திருந்தான் அவிரன். ஆலிவ் நிற அங்கி போல் இருந்த இரவு உடையில் இருந்தாள் அவள். எப்பொழுதும் போல் கூந்தல் தாறுமாறாய் இல்லாமல் ஓரளவு சீராய் முடியப்பட்டிருந்தது. அவள் மெத்தை அருகில் வந்து மறுபுறம் அமரும்வரை அவளையே பின்தொடர்ந்தன அவன் விழிகள். அவனையே கவனித்துக்கொண்டிருந்த மிளிரா பார்வையால் என்ன என்று கேட்டிட ‘ப்ச் ப்ச்’ என்றுவிட்டு கண்களைச் சிமிட்டியவன் சில நிமிடங்களுக்கு பிறகு எழுந்துகொண்டான்.

 

 

“ஓகே மிரு.. நான் பக்கத்து ரூம்ல படுத்துக்கறேன்” என்க மிளிராவின் பார்வை கண்டித்தது.

 

மிளிரா,”என்ன தனியா விட்டு போகாதனு சொன்னேன்”

 

அவிரன் விளையாட்டுத்தனத்துடன் முகத்தை சிந்தனையாய் சுருக்கியவன்,”எனக்கு நிறைய கெட்ட கனவு வருமே” என்றான் இதழ் பிதுக்கலுடன்.

 

அதற்கு அவளும் அதே போல் இதழைச் சுளித்து,”எனக்கும் நிறைய கெட்ட கனவு வருமே” என்றாள் பாவமானதொரு பாவனையில்.

 

அவளது செயலில் வரத்துடித்த சிரிப்பை அடக்கியவன் மெல்ல மெத்தையில் முழங்காலைப் பதித்து ஏறியவாறே,”அப்போ சரி.. உன் கனவ நான் விரட்டறேன் என் கெட்ட கனவ நீ விரட்டு..” என்று ஒப்பந்தமிட்டபடி அவளருகில் வந்து படுக்க அவளும்,

 

“ம்ம் ம்ம்” என்று வேகமாய் தலையசைத்தவளாய் அவனை ஒட்டி படுத்துக்கொள்ள அவனும் அவளை பின்னிருந்து தன் அணைப்பிற்குள் அடக்கிக்கொண்டான்.

 

சில நிமிடங்களில் இருவரின் சீரான மூச்சுக்காற்றே அவ்வறையின் நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டிருந்த இருவரும் நிச்சலனமான ஓர் உறக்கத்தினுள் ஆழ்ந்தனர். அவர்களது ஒப்பந்தத்தினாலோ என்னவோ அன்று இரவு இருவருக்குமே கனவுகள் ஏதும் அற்ற கனிந்த இரவாகவே அமைந்தது.

 

 

முதன் முறையாய் கிட்டிய நிம்மதியான நித்திரை என்பதாலோ என்னவோ நீண்ட நேரம் தூங்கிவிட்ட அவிரன் மெல்லத் துயில் கலைந்தான். விழிகளைத் துளி பிரித்தவன் அவனுக்கெதிரே தொங்கிக் கொண்டிருந்த அந்த கால கடிகாரத்தில் மணியைப் பார்க்க அது காலை நேரம் காணாமல் போய்விட்டதை அறிவித்துத்துக்கொண்டிருந்தது. அவனுக்குப் புரியவில்லை. அப்படியென்றால் அறை ஏன் இன்னும் இப்படி மதமதப்பாய் இருக்கவேண்டும்? பார்வையை சுழட்டினான். பெரிய பெரிய சன்னல்களில் அதைவிடப் பெரிதாய் இருந்த திரைச்சீலைகள் தொங்கிக்கொண்டிருந்தன. காரணம் புரிந்தது. அறையின் அமைதி அசாத்தியமாய் இருக்க மெல்லத் திரும்பினான். அருகில் மிளிராவை காணவில்லை! சட்டென இதயம் இடறியது அவனுக்கு. கூப்பிடக்கூடத் தோன்றாதவன் போல அப்படியே எழுந்து ஓடினான். முதல் தளம் முழுதும் தேடியவன் அவள் தடம் ஏதுமில்லாமல் போக

 

“மிரு! மிரு!” என்று அந்த இடமே அதிரும்படி குரல் எழுப்பினான்.

 

கீழே எங்கோ ஒரு மூலையில் இருந்து குரல் வந்தது,”இங்க இருக்கேன் அவி” என்று.

 

குரல் வந்த திசையை நோக்கி ஓடியவன் அங்கு சமையலறையில் நேற்று அணிந்திருந்த அதே உடையின் மேல் ஏப்ரனை கட்டிக்கொண்டு தையில் ஸ்பாட்டுலாவுடன் நின்ற மிளிராவைக் கண்டதும் ஒரு நொடி அப்படியே வாசலில் சாய்ந்து நின்று நிம்மதி மூச்சு விட்டவன் பிறகு இரண்டே எட்டில் அவளை அடைந்து தன் அணைப்பினுள் இறுக்கிக் கொண்டான். புரியாமல் விழித்தாலும் அவள் அசையாது நிற்க,

“உன்ன தனியா விட்டுப் போக கூடாதுனு சொல்லிட்டு நீ தனியா விட்டு போற” என்றவன் அணைப்பை இன்னும் இறுக்கவும் தன்னை சுற்றியிருந்த அவன் கையில் மெல்லத் தட்டிக்கொடுத்தவள்,

 

“எழுந்ததும் உனக்கு பசிக்கும்ல..” என்றதும்,”ஹே! உனக்கு சமைக்கத் தெரியுமா?” என்றவாறே அவன் அடுப்பில் இருந்த பானை எட்டிப்பார்த்தான். ஏதோ ஒரு மீனை ரோஸ்ட் செய்துகொண்டிருந்தாள்.

 

மிளிரா,”கொஞ்சம்.. இத்தனை நாளும் சவி இருந்ததால அந்த பக்கம் போனதில்ல” என்றவளையும் அந்த பானயுமே அவன் சந்தேகமாய் பார்க்கவும் அவன் கையில் நறுக்கெனக் கிள்ளினாள் மிளிரா.

 

“ஸ்ஸ் ஆ!” என்று கைகளைத் தேய்த்துக்கொண்டவன் பிறகு ஆச்சரியம் குறையாது,”மீன் எப்படி?” எனவும் மறுபடியும் அவனை முறைத்தவள்,”லிட்ரலி நாம இப்ப ஒரு ஐலாண்ட்ல இருக்கோம் அவி” எனவும் அவன் விழிகள் இன்னும் விரிந்தது.

 

“நீயே பிடிச்சியா? தனியா போனியா கீழ வரை?”

 

“ம்ம்..” என்றவள் சிறு இடைவேளைக்கு பிறகு,”எந்த ரிஸ்க்கும் கிடையாது அவி.. இந்த தீவுலயே நாம மட்டும்தான் இருக்கோம்” என்றவளின் வார்த்தையில் அவ்வளவு பெரிய முரண் இருந்தாலும் அதுதான் உண்மை எனப்பட்டது அவிரனுக்கு.

 

அவ்வளவு மக்கள் சுற்றிச் சூழ்ந்திருந்த இடத்தில்தான் அவர்களது வாழ்க்கை பயத்திலும் பதறலிலும் கழிந்தது. இங்கு மனிதர்களே இல்லை என்றாலும் இங்கு தான் அவர்களுக்கு பாதுகாப்புணர்வும் சுவாசிக்க இடமும் கிடைக்கிறது.

 

 

மிளிரா,”எல்லாம் ரெடி! வா அவி சாப்பிடலாம்” என இருவரும் ஒவ்வொன்றாய் மேசைக்கு மாற்றி உண்ணத் தொடங்கினர். பேச்சும் சிரிப்புமாய் கழிந்தது அவர்களது முதல் சாப்பாடு.

 

சாப்பிட்டு முடித்து எல்லாவற்றையும் ஒதுங்க வைத்தவர்களுக்குச் செவிப்பறையில் மோதிக்கொண்டிருந்தது அலையோசை. சமையலறை சன்னல் வழியாய் தூரத்தில் தெரிந்த கரையைப் பார்த்து நின்றவள் திடீரென கேட்டாள்.

 

“அவி விளையாடலாமா?”

 

கண்களில் ஆர்வம் மின்னக் கேட்பவளைக் கண்டவனும் தலையசைக்க அடுத்த கணம் இருவரும் கரையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்.

 

அவர்கள் மதிய நேரம் முழுதும் சிப்பி பொறுக்குவதிலும்.. கடல் நீரில் விளையாடுவதிலும் கழியக் கருக்கல் வேளையிலேயே வீடு திரும்பினர் இருவரும். மரங்களாலோ, மலையாலோ அல்ல அந்த கடலாலோ என்னவோ சீக்கிரமாகவே இருட்டத்தொடங்கிவிட்டது அங்கே. நேற்று போல் இலகுவான உடை எதுவும் கண்ணில் படாமல் போகச் சிவப்பு நிற உடையை மடியில் எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் மிளிரா. அதையே பார்த்துக்கொண்டு. அவிரன் மெல்ல அவள் தோள் தொடச் சுயநினைவு திரும்பியவளாய் தலையைத் திருப்பியவள் அவ்வுடையைப் பார்வையால் சுட்டிக்காட்டினாள்.

 

“அம்மாவோட ட்ரெஸ்”

 

அவிரனின் கை அரவணைப்பாய் அவள் தோளைச் சுற்றியது. சில நொடிகளில் எழுந்துகொண்டவள் உடைமாற்ற சென்றுவிட அவனும் வார்ட்ரோபினுள் இருந்து ஒரு கருப்பு நிற பேண்ட்டும் அதற்கேற்றாற்போல வெள்ளை நிறச் சட்டையும் எடுத்துக்கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றான்.

 

உடை மாற்றித் திரும்பி வந்தவனின் கால்கள் வாசலிலேயே உறைந்துவிட்டன அவனைப்போலவே.

அடர்ச்சிவப்பு நிறத்தில், முழு நீள பலூன் ஸ்லீவ்ஸும் ஸ்வீட் ஹார்ட் நெக்குமாய் ஒரு பக்கம் தொடையில் இருந்து ஒரு ஸ்லிட்டுடன் பால் கௌனை போலிருந்த அவ்வுடையில் கூந்தல் தோள்களிலும் முதுகிலும் புரள நின்றிருந்த மிளிராவைப் பார்த்ததில் அப்படியே நின்றுவிட்டான் அவிரன்.

 

அவன் இதழ்கள் அவன் அனுமதி இன்றியே காற்றில் ‘வாவ்’ என்றது. அதில் பார்வையை வேறு புறம் திருப்பிய மிளிரா பிறகு சிரிப்பை அடக்கியவளாய் அவனது புஜத்தில் தட்டிவிட்டு படிகளில் இறங்கி ஓடிவிட்டாள்.

அதில் தன்னிலை மீண்ட அவிரன் கீழே இறங்கி வரவும் பியானோ இசை அவ்விடத்தை நிறைக்கத் தொடங்கவும் சரியாய் இருந்தது. அங்கு ஓரத்தில் இருந்த பழைய பியானோவில் ஏதோ ஒரு க்ளாஸிகலை வாசித்துக்கொண்டிருந்த மிளிராவின் பார்வை இறங்கி வரும் அவிரனையே சீண்டிக்கொண்டிருந்தது. அதைக் கவனித்த அவிரன் அவள் அமர்ந்திருந்த பெஞ்சில் அவளருகில் நெருக்கமாய் அவள் இடையில் கைபோட்டு தன்னருகில் இழுத்தபடி பியானோவுக்கு முதுகு காட்டிக்கொண்டு அவள் முகம் பார்த்தவாறு அமர்ந்தான்.

 

“உனக்கு பியானோ வாசிக்க தெரியுமா?” அவிரனின் குரல் அவள் காது மடல்களை உரசியது.

 

“ம்ம் சின்ன வயசுல கத்துக்கிட்டேன்..” மிளிராவின் குரல் அமிழ்ந்துவிட்டது.

 

“என்ன வாசிச்ச?” என்றவன் அவளை இன்னும் சீண்டினான்.

 

“தெரியல.. என் ட்யூட்டர் கத்துக்கொடுத்தது இது” என்றவளின் கை எதிலோ பட்டு அந்தச் சத்தம் அந்நிலையைக் கலைக்க, வந்த சிரிப்பை கடவாயில் அடக்கிய அவிரனோ,”அப்போ எனக்காக ஒன்னு வாசிப்பியா?” எனவும் பதிலேதும் சொல்லாது அவனையே பார்த்தவள் மெல்ல மீட்டத் தொடங்கினாள் அப்பாடலை.

 

“நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..

நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி..

அயராத இளமை சொல்லும்

நன்றி.. நன்றி..

அகலாத தனிமை சொல்லும்

நன்றி.. நன்றி..

உயிரே.. வா..”

 

அவளது காதோர கூந்தலை ஒதுக்கிக் கொண்டிருந்த அவிரனின் விரல்கள் அவள் மெல்ல மெல்ல இறங்கி அவள் இதழோரத்தை தீண்டின.. மிளிராவின் கை மீட்டலை நிறுத்தியது. இருவரின் பார்வையும் இரண்டு நொடிகள் சந்தித்துக்கொண்டன. மெல்ல நெருங்கியவனின் சிறு தயக்கம் அறிந்து அவன் கன்னங்களை தன் உள்ளங்கைகளால் அவள் பற்றிக்கொள்ள இதழ்வரி பாடலின் ஆலாபனை தொடங்கியது அங்கே.

 

மெல்ல அவளை எழுப்பியவன் தன் வலக்கையால் அவளது கையையும் மறு கையால் இடையையும் அணைத்தவாறு மெல்ல அசைய இசை நின்றிருந்தாலும் அந்த மோன நிலையில் அவர்களுக்குள் அவர்களுக்கெனவே ஒலித்துக்கொண்டிருந்த அப்பாடலுக்கேற்றபடி அசையத் தொடங்கினர். சில நடனங்களுக்கு இயற்கையே இசையாகிவிடும். சன்னல் வழியாய் வந்த காற்றுகூட அவர்களது ரிதத்திற்கு ஏற்றார்போல் தீண்டிச் சென்றது.

 

“மாயாவி”

 

தன் காதினுள் ஒலித்த விளிப்பில் மிளிரா தலை நிமிர்ந்தாள். சிறு கேள்விக்குறி அவள் விழிகளில் தொக்கி நின்றது. அதில் பெரிதாய் சிரித்தவன் அவள் மூக்கில் உரசியபடி மறுபடியும்,”மாயாவி நீ” என்றான்.

 

“ஏனாம்?” என்றவளின் சிறு குரலில் அவளை அப்படியே தூக்கிக்கொண்டவன் முதல் தளத்திற்கு ஏறினான்.

 

“ம்ம்.. ஏன்னா மாயாவினா இருக்கறத  மறைச்சு இல்லாதத காட்றவங்கனு அர்த்தம்.. நீ என் வாழ்க்கைல இருக்கற கஷ்டத்தலாம் மறச்சு எனக்கு சந்தோஷமான ஒரு உலகத்த காட்டற மாயாவி” என்றவன் அவள் நெற்றியில் முட்ட அவளும்,”நீயும்” என்றாள்.

 

அவன் புரியாத பார்வை பார்க்கவும் அவள்,”என் வாழ்க்கைய வாழ்க்கையா காட்டற மாயாவி நீ அவி..” என்றவள் அவன் அவளைப் படுக்கையில் அமர்த்தவும் அவனையும் அமருமாறு சைகை செய்ய. அவளெதிரே அமர்ந்தவனின் பார்வை முழுதும் அவளிடம்.

 

தன் முன்னால் படுக்கையில் கிடந்த அவன் கையை மெல்லப் பற்றிக்கொண்டவள்,”அவி நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றாள் தயக்கமாய்.

 

அதில் இன்னும் குழம்பிய அவிரன்,”சொல்லு மிரு” என்றவள் கைகளைப் பிடித்துக்கொள்ள

 

“எனக்கு நிறைய கெட்ட கனவு வரும் அவி” என்றாள்.

 

அவிரன் அதனால் என்ன என்பதுபோல் பார்க்க

 

“முழிச்சிருக்கும்போதும்..” என்றவளின் குரல் உணர்ச்சிகளற்று வந்தது.

 

“நான் அம்மாவ பாப்பேன்.. அவங்க ஏதோ சொல்ல முயற்சி பண்ணுவாங்க.. ஆனா முடியாம போகவும் என்னையும் பிடிச்சு இழுப்பாங்க.. இப்ப கொஞ்ச நாளா அப்பாவும் வராரு.. என்ன அவர் கூட வரச் சொல்லி கூப்பிடறாரு.. என்னால என்ன செஞ்சும் இதை நிறுத்த முடியல அவி.. ஆனா உன்ன பாக்கும்போது எனக்கு வேற எதுவுமே தோணறதில்லை அவி.. என்னால நிம்மதியா சுவாசிக்க முடியுது.. வாழனும்னு ஆசை வருது.. அப்போ நீ என் மாயாவி தானே?” என்றவள் முடிப்பதற்குள்ளே அவளை தன் அணைப்புக்குள் அடைகாத்துக்கொண்டான் அவிரன். பனித்துவிட்ட விழிகளை இறுக மூடிக்கொண்டு. இரு சொட்டு நீர் மணிகள் விழுந்து தெறித்தன. அவள் தோள்களைப் பற்றியபடி விலகி அவள் முகம் பார்த்தவன் அவளது உச்சந்தலையில் முத்தமிட்டான்.

 

எப்பொழுது கண்ணயர்ந்தனர் எப்படிக் கண்ணயர்ந்தனர் என்று அறியாமலே ஒருவரை ஒருவர் கட்டியபடி உறங்கிவிட்டிருந்தனர் இருவரும். திடீரென ‘டமால்’ என்று எதுவோ பலத்த சத்தத்துடன் விழுந்ததில் அவிரனின் துயில் முற்றிலுமாய் கலைந்தது. மெல்ல எழுந்தவன் அருகில் இருந்த மிளிராவை பார்த்தான். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஓசையெழுப்பாத வண்ணம் எழுந்தவன் படி இறங்கி சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தான். அது வீட்டிற்கு வெளிப்புறம் இருக்கும் அறை. இப்பொழுது சத்தம் வராமல் இருந்திருந்தால் அப்படி ஒரு இடம் இருப்பதே அவனுக்குத் தெரிந்திருக்காது. அப்படி ஒரு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது அவ்வறை. கதவருகில் சென்றவன் ஒரு கணம் யோசித்தான். வெளி பக்கமாய் பூட்டப்பட்டிருந்த அவ்வறையைப் பார்த்துவிட்டு. கூர்ந்து செவிமடுத்தவனுக்கு இன்னும் ஏதோ முணுமுணுப்பாய் ஏதோவொரு சத்தம் உள்ளிருந்து வருவது போல் இருக்கக் கதவைத் திறந்துவிட்டான்.

 

கண்கள் அவ்வறையில் இருளுக்குப் பழக சில நொடிகள் பிடித்தது. அறை நடுவே தொங்கிக்கொண்டிருந்த மங்கிய ஒளியின் கீழே உடைந்த நாற்காலியோடு கட்டப்பட்டு கீழே விழுந்துக்கிடந்த உருவமே பட.. அதில் அதிர்ந்த அவிரன் மெல்ல நெருங்கினான். ஆங்காங்கே ரத்த காயங்களுடன் கிடந்த ஆளின் முகத்தைத் திருப்பி பார்த்தவனின் சர்வமும் அடங்கியது.

 

“வீயா!!” என்று அதிர்ச்சியில் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டான் அவிரன்.

 

நொடியில் சுதாரித்தவனாய் அரை உயிராய் கிடந்தவனை மடியில் தூக்கி வைத்துக்கொண்டவன் கண்களில் வழிந்த கண்ணீரை தொடைக்க மறந்தவனாய் அவன் கன்னத்தில் தட்டினான்.

 

“வீ.. வீ.. ப்ளீஸ்டா.. எழுந்திரு வீ! என்னடா ஆச்சு? வீ! இங்க பாரு வீ!” என்றவனுக்கு அழுகை அடைத்துக்கொண்டு வந்தது. கடைசியாய் அன்று அவன் வீயை பார்த்த பொழுது கனவிலும் நினைத்தானா மறுமுறை அவனை இந்த கோலத்தில்தான் பார்க்கப் போகிறான் என.

 

“வீ என்ன பாரு வீ.. ப்ளீஸ் வீ” என்றவன் கெஞ்சிக் கொண்டிருக்க வெகுவாய் பிரயத்தனப்பட்டு விழி திறந்தான் வீயன்.

 

“அ..வி” என்றவனின் முகத்தில் அந்நிலையிலும் சிறு நிம்மதி பரவுவதைக் கண்ட அவிரனுக்கு அய்யோ என்ற அலறிக்கொண்டு அழுகை எழுந்தது.

 

“டேய்! என்னடா ஆச்சு உனக்கு? யார்டா இப்படி பண்ணா?” என்று பதறித் துடித்த அவிரனுக்கு இதற்குக் காரணமானவரைக் கொன்று புதைத்துவிடும் வெறி எழுந்தது.

 

வீயன் எதையோ சொல்ல முயற்சி செய்வது புரிய அவன் வாயருகே குனிந்தவன் அவன் சொன்ன பெயரில் ஒரு கணம் உலகமே புரியாதவன் போலப் பார்த்தான்.

 

அவன் காதுக்கு எதுவுமா? இல்லையே! அவன் சரியாய்தான் கேட்டான் வீயன் சொன்ன,”மிளிராவை”  ஆனால் அதை அவன் மூளைதான் ஏற்க மறுத்தது.

 

அவன் அதிர்ந்து அமர்ந்திருக்க அவன் தொடையில் கை வைத்துத் தள்ளினான் வீயன், அங்கிருந்து தப்பிப் போய்விடுமாறு. அவிரனின் கண்களில் இருந்து தானாய் வழிந்துகொண்டிருந்தது இன்னும்.

 

வீயனின் கையை இறுகப் பற்றிக்கொண்டவன்,”இல்லை! நான் உன்னையும் கூட்டிட்டு தான் இங்கருந்து போவேன்! நாம சேர்ந்துதான் வீட்டுக்கு போவோம்” எனவும் கோபமாய் அசைந்தது வீயின் தலை.

 

“முட்டாள்.. முட்டாள்! நீ அவள கடத்தினதா நினைச்சிட்டு இருக்க அவதான் உன்ன கடத்திருக்கா.. இங்கருந்து எப்படியாது போய்டு அவி.. ப்ளீஸ்” என்று அத்தனை வலியிலும் அடிக்குரலில் சீறினான் வீயன்.

 

அதைக் காதில்கூட வாங்காதவனாய் அவன் கட்டுக்களை அவிழ்த்த அவிரன் அவனைத் தூக்கிக்கொள்ள முயல வீயனின் விழிகள் செருகின.. அவன் கன்னத்தில் தட்டியபடி,”வீ ஸ்டே வித் மீ  இங்க பாரு! இங்க பாரு!” என்று அவிரனின் கதறல்களை நிறுத்தியது வீயனின்,”லவ் யூ பேப்” என்ற வார்த்தைகளுடனான அவனது கடைசி மூச்சு. தீவே அதிரும்படி அலறத் துடித்த நாவை அடக்கி அத்தனையும் விழுங்கினான் அவிரன். வீயனையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவன் முகத்தை அழுந்த தொடைத்துக்கொண்டு வெளியேறினான்.

 

 

அன்று,

 

 

அது ஒரு மதிய சாப்பாட்டு இடைவேளை. அப்பள்ளி மாணவர்கள் அனைவரும் அந்த கேண்டீனை நிரப்பியிருந்தனர். தான் பேசுவது தனக்கு எதிரில் இருப்பவருக்குக் கூட கேட்காத அளவு இரைச்சல் அங்கே.

 

ஒரு ஓரத்து இருக்கையில் அமர்ந்து தன் உணவை முடித்திருந்த அவிரனின் பார்வை முழுதும் அவனுக்கு இரண்டு மேசை தள்ளி அமர்ந்திருந்த ஒரு ப்ரைமரி சிறுமி தன் நண்பர்களுடன் அளவளாவியபடி தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு ஸ்ட்ராபெர்ரி கேண்டி ஒன்றைப் பிரித்து பிறகு அதைச் சுவைப்பதிலேயே படிந்திருந்தது. அது ஏக்கமா, ஆசையா என்று பிரித்தறிய முடியா பாவனையில் இருக்க அவனையே பார்த்திருந்த மிளிரா அன்று மதியம் பிஈ வகுப்பு முடிவதற்குள் அதே கேண்டியை வாங்கியவள், வகுப்பில் யாருமில்லாத சமயமாய் பார்த்து அதை அவிரனின் புத்தகத்தின் நடுவில் வைத்துவிட்டு வெளியேறினாள். அவிரனின் பார்வை அவளைப் பாதித்திருந்தது. அது ஏக்கமோ ஆசையோ! ஆனால் அவன் நினைத்த ஒன்று அவனுக்குக் கிடைத்துவிட வேண்டும் என்ற வேகம் அவளிடம். அதுவாக கிடைக்காவிட்டால் அவளாய் அதை ஏற்படுத்தாமல் விடமாட்டாள்.

 

ஆனால் கடைசிவரை மிளிராவிற்கு தெரியவில்லை. அவிரன் பார்த்தது அந்த கேண்டி அன்று அச்சிறுமியை என.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!