இதயம் – 01

eiHJN6N67051-e2432fa3

இதயம் – 01

திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில்


அன்று வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாள் என்பதால் வழக்கத்திற்கு மாறாக கோவிலில் கூட்டம் நிரம்பி வழிய, அந்த கூட்ட நெரிசலுக்கு நடுவில் ஒரு ஜோடி திருமணக் கோலத்தில், முகம் முழுவதும் பதட்டம் சூழ்ந்தவர்களாக பிள்ளையார் சந்நிதானத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அய்யர் ஒருவர் மந்திரங்களை சொல்லி பூஜை செய்து கொண்டிருக்க, மாலையுடன் நின்று கொண்டிருந்த அந்த பெண்ணின் கரங்கள் தன் அருகில் மாலையுடன் நின்று கொண்டிருந்த அந்த ஆடவனின் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்தது.

“விஷ்வா, எல்லாம் நல்ல படியாக நடக்கும் தானே?” கண்களில் பயத்தை தேக்கி அவள் கேட்க,

சிறு புன்னகையுடன் அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “பூஜா, எதற்கு இவ்வளவு பதட்டம்? என்னைக் காதலிக்கும் போது, உன் வீட்டில் நம்ம காதலைப் பற்றி சொல்லும் போது, ஏன் உன் வீட்டில் என்னோடு தான் இனி வாழுவேன்னு சொல்லிட்டு வரும் போதெல்லாம் இவ்வளவு பதட்டம் இல்லையே. இன்னைக்கு மட்டும் ஏன் இவ்வளவு பதட்டம்?” என்று கேட்டான்.

“என்னன்னு சொல்லத் தெரியல விஷ்வா. மனசுக்குள்ள ஏனோ ஒரு மாதிரி இருக்கு. ஒரு வேளை அம்மா, அப்பா இல்லாமல் இவ்வளவு பெரிய விடயத்தை செய்யப் போகிறேன்னு பதட்டமோ தெரியலை. அதோடு வேறு யாராவது பிரச்சினை செய்வாங்களோன்னும் பயமாக இருக்கு விஷ்வா”

“நான் உன் கூட இருக்கும் போது உனக்கு எதற்கு பதட்டம்? இந்த திருச்சி மொத்தமும் இந்த விஷ்வா கட்டுப்பாட்டில் இருக்கு. என்னை மீறி உனக்கு எந்த பிரச்சனையும் வராது. ஒட்டுமொத்த போலீஸ் அன்ட் லோக்கல் ரவுடி எல்லோருமே என் கன்ட்ரோலுக்கு கீழேதான் இருக்காங்க. யாராவது பிரச்சினை பண்ணால் நான் பார்த்துட்டு சும்மா கை கட்டிட்டு நிப்பேனா என்ன? என்னைத் தாண்டி உனக்கு எந்த பிரச்சனையும் வராது பூஜா. அதோ அய்யர் பூஜையை முடித்து விட்டு தாலியைக் கொண்டு வர்றாங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் மிஸ். பூஜா, மிஸஸ் பூஜா விஷ்வாவாக மாறப் போறீங்க. அதை நினைத்து சந்தோஷமாக இருங்க மேடம்”

“அந்த ஒரு தருணத்திற்காகத் தானே இந்த மூணு வருடங்களாக காத்துட்டு இருக்கேன் விஷ்வா” சற்று முன்னர் இருந்த பதட்டமான சூழ்நிலை மறைய இயல்பான புன்னகையுடன் பூஜா விஷ்வாவைப் பார்க்க, அவனும் அவளைப் புன்னகை முகமாக பார்த்துக் கொண்டு நின்றான்.

சிறிது நேரத்தில் அய்யர் பூஜையை முடித்து விட்டு தாலியைக் கொண்டு வந்து அவர்கள் முன்னால் நீட்ட, பூஜாவை பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தியவன் அவளது சிவந்த முகத்தை பார்த்தபடியே அந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சுகளை போட்டு விட்டான்.

விஷ்வாவின் கையிலிருந்து அந்த தாலி தன் கழுத்தில் ஏறும் வரை அவனது முகத்தையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டு நின்றவள் அவன் தாலியைக் கட்டி முடித்ததும் அவன் தோளில் சாய்ந்து கொள்ள, “அண்ணா, அண்ணி சேர்ந்து நில்லுங்க. ஒரு போட்டோ எடுத்துடுவோம்” என்றவாறே நான்கு, ஐந்து நபர்கள் அவர்கள் முன்னால் வந்து நின்றனர்.

அவர்களது தோற்றத்தை பார்த்தாலே அவர்கள் சாதாரண நபர்கள் அல்ல என்பது தெளிவாகத் தெரிந்தது.

பரட்டைத் தலையும், நீண்ட தாடியும், முதுகுப் புறமாக சட்டையின் மேலால் தெரிந்த அரிவாளின் பிடியும், பேண்ட் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியுமே அவர்கள் என்ன வகையான வேலை செய்பவர்கள் என்பதை சொல்லாமல் சொல்லியது.

“டேய் டேவிட், இங்கே எதற்கு வந்த? நான் உங்களை கீழே தானே இருக்கச் சொன்னேன்” விஷ்வா தன் முன்னால் நின்றவர்களைப் பார்த்து சிறிது கோபமாக கேட்க,

“உங்களைத் தனியாக எப்படிண்ணே இவ்வளவு நேரம் விடுறது? நம்ம தொழில் அப்படி. கீழே நம்ம பசங்க ஐந்து பேரு இருக்காங்கண்ணே. நீங்க வீணாக டென்ஷன் ஆக வேணாம். இப்போ தான் உங்களுக்கு கல்யாணம் ஆகி இருக்கு, அதனால சந்தோஷமாக இருங்கண்ணே” என்று விஷ்வாவால் டேவிட் என்று அழைக்கப்பட்ட நபர் கூற,

அவர்களைப் பார்த்து சலிப்போடு தன் தலையை அசைத்தவன்,
பூஜாவின் புறம் திரும்பி, “பூஜா கிளம்பலாமா?” என்று கேட்க அவளும் அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

பூஜா மற்றும் விஷ்வா கோவில் படியிறங்கி தங்கள் வாகனத்தில் ஏறுவதற்குள் அவர்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.

விஷ்வா திருச்சி நகரத்தை ஒட்டுமொத்தமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், அதேநேரம் அந்த ஒட்டுமொத்த நகரைப் பற்றியும் அனைத்து தகவல்களையும் தன் விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு மிகப்பெரும் ரவுடி.

சிறு வயதில் தன் அம்மா, அப்பா இறப்பின் பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் ஊர் ஊராகச் சுற்றி திரிந்தவன் தன் பத்தாம் வயதில் திருச்சியை வந்து சேர்ந்திருந்தான்.

அங்கே வந்து ஒரு சில மாதங்கள் தன் வயிற்றுப் பசிக்காக சிறு சிறு தவறுகளை செய்யத் தொடங்கியவன், நாளடைவில் பல பெரிய ரவுடிகளுடன் சேர்ந்து சிறிய தவறிலிருந்து பெரிய தவறுகளை செய்ய ஆரம்பித்தான்.

அவன் செய்யும் தவறுகளை யாராவது தட்டிக் கேட்க நினைத்தால் அடுத்த கணம் அவர்களை அந்த இடத்திலேயே இல்லாதபடி செய்து விடுவான்.

அவனது அந்த முரட்டு தனத்தை பார்த்து பல பேர் பயந்து போக, அந்த பயமே அவனுக்கு பலமாகிப் போனது.

விஷ்வா சிறு வயதில் இருந்தே நன்கு விவேகமாக யோசித்து செயல்படுபவன், அது மட்டுமின்றி நன்றாக படிக்கும் ஆற்றலும் அவனுக்கு உண்டு.

என்னதான் அவனது தொழில் தவறானதாக இருந்தாலும் அந்த நிலையிலும் அவன் தன் படிக்கும் ஆசையைக் கை விடவில்லை.

எம்.காம் வரை நன்றாக படித்தவன் அவனுடைய காலேஜில் கோல்ட் மெடல் எடுத்தவன் என்று சொன்னால் எல்லோரும் அவனை ஆச்சரியமாகவே பார்ப்பர்.

எல்லா விடயங்களிலும் எப்படி தான் முதல் நிலையாக‌ இருக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை இருந்ததோ, அதைப்போலவே அவனது தொழிலிலும் அவனே முதன்மையானவனாக இருக்கிறான்.

விஷ்வா பார்ப்பதற்கு அத்தனை முரட்டுத் தனமானவனாக, கடினமானவனாக தென்பட மாட்டான், மாறாக ஆறடி உயரத்தில், ஆஜானுபாகுவான தோற்றத்தில்‌, பலபேர் மனதைக் கவரும் வகையிலான தோற்றத்திலேயே இருப்பான்.

விஷ்வா இது நாள் வரை செய்த தவறுகளுக்கு எல்லாம் அவனின் கீழ் வேலை பார்க்கும் அடியாட்கள் பொறுப்பு ஏற்று விடுவர், அதனால் என்னவோ இது நாள் வரை அவனது பெயரில் சட்ட ரீதியாக எந்த ஒரு பிரச்சினைக்குரிய பதிவுகளும் இருந்ததில்லை, இனியும் இருக்குமா என்பது தெரியாது.

ஆனால் எப்போதாவது அவனின் பேரில் சட்டரீதியாக ஒரு பதிவு வந்து விடாதா என்று பல காவல்துறையினர் தங்கள் மனதிற்குள் எண்ணாமல் இருந்ததில்லை என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய ஒரு நிதர்சனம்.

இன்னும் ஒரு சில நாட்களில் விஷ்வா தன் முப்பத்திரண்டாம் வயதை நெருங்க இருக்க, அவனை விரும்பி, அவனையே திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்து இப்போது அவனுடன் திருமண பந்தத்தில் இணைந்து இருக்கிறாள் பூஜா.

பூஜா சாதாரண ஒரு மத்தியதர வர்க்க குடும்பத்தில் வளர்ந்த பெண்.

அவளது தந்தை பரசுராமன் பேங்க் ஒன்றில் கணக்காளராக பணி புரிந்து வருகிறார், அவளது அன்னை செல்வி டிரயில்வே டிபார்ட்மெண்டில் கிளார்க்காக பணி புரிந்து வருகிறார்.

பூஜா சற்று சிவந்த நிறமுடையவள், சற்று பூசினாற் போல தேகம் கொண்டவள்.

அவளது துறுதுறு நடவடிக்கைகளை போலவே அவளது கண்களும் துறுதுறுவென தன்னைச் சுற்றி இருக்கும் இடத்தை ஆராய்ந்து பார்த்துக் கொண்டே இருக்கும்.

அது மட்டுமில்லாமல் பூஜா இரண்டு வருடங்களுக்கு முன்புதான் தன்னுடைய கல்லுரி படிப்பை முடித்தும் இருந்தாள்.

பரசுராமன் மற்றும் செல்விக்கு பூஜா ஒரே குழந்தை என்பதால் அவளை அவர்கள் மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர், நாளை அதுவே அவளை அவள் வாழ்க்கையில் பெரிய பிரச்சினைக்கு தள்ளப் போகிறது என்பதை அறியாமல்.

பூஜா மற்றும் விஷ்வாவைப் பற்றி சிறு அறிமுகம் முடியும் நேரம் சரியாக அவர்கள் இருவரும் தங்கள் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை வந்து சேர்ந்திருந்தனர்.

“வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்த்துக்கள் அண்ணி” அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த விஷ்வாவின் அடியாட்கள் பூஜா மற்றும் விஷ்வாவிற்கு தங்கள் வாழ்த்துக்களை சொல்ல புன்னகையுடன் அவர்களுக்கு எல்லாம் நன்றி சொன்னவர்கள் தங்கள் காரில் ஏறி அமர்ந்து கொண்டனர்.

விஷ்வா காரை இயக்க அந்த காரின் முன்னாலும், பின்னாலும் இரண்டு ஜீப்களில் அவனது அடியாட்கள் ஏறிக் கொள்ள புழுதியைக் கிளப்பிக் கொண்டு அவர்களது வாகனங்கள் அந்த உச்சிப் பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றது.

காரில் ஏறி அமர்ந்த நொடி முதல் பூஜா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அவளது கையை மெல்ல அழுத்திக் கொடுத்த விஷ்வா, “பூஜா,ஏன்டா செல்லம்மா அமைதியாக இருக்க?” என்று கேட்க,

சற்று நகர்ந்து அவனது தோளில் சாய்ந்து அமர்ந்து கொண்டவள், “அம்மா, அப்பாவைப் பார்க்கணும் போல இருக்கு விஷ்வா” என்று கூற,

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டவன், “இவ்வளவு தானா? என் பொண்டாட்டி கேட்டு நான் எதையும் செய்யாமல் இருப்பேனா? இந்த திருச்சி மொத்தமும் என் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இந்த விஷ்வாவைக் கட்டுப்படுத்தும் ஒரே ஆளு நீ தான் செல்லம்மா. அதனால் உனக்கு என்ன வேணுமோ தயங்காமல் என் கிட்ட சொல்லணும் சரியா? அன்ட் இப்போ நாம அத்தை, மாமாவைப் பார்க்கப் போகலாம். ஓகே தானே? கொஞ்சம் சிரித்த மாதிரி இருடா செல்லம்மா” என்று விட்டு அவளது கன்னத்தில் தட்டியவன் தனது அடியாட்களிடமும் தாங்கள் போகும் இடத்தை சொல்ல பூஜா முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவனது தோளில் இன்னும் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து ஒரு வீட்டின் முன்னால் அவர்கள் கார் நிற்க, தவிப்போடு விஷ்வாவின் கையைப் பிடித்துக் கொண்ட பூஜா, “அம்மாவும் சரி, அப்பாவும் சரி ஏதாவது கோபமாக பேசினால் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோ விஷ்வா” கெஞ்சலாக அவனைப் பார்த்துக் கூற,

அவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்துபடியே அவளது தலையை வருடிக் கொடுத்தவன், “என் செல்லம்மா மனது நோகும் படி எதையும் நான் செய்ய மாட்டேன் டா. அவங்க என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டாலும் என் பூஜாவுக்காக அதையும் நான் தாங்கிப்பேன், ஏன்னா ஐ லவ் யூ டா செல்லம்மா” என்றவாறே அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு, அவளது கையைப் பிடித்துக் கொண்டு அந்த காரில் இருந்து இறங்கி நின்றான்.

இதற்கு முன்னர் ஒன்றிரண்டு தடவை விஷ்வா அந்த பகுதிக்கு வந்து சென்றிருந்தாலும், அவனது குணாதிசயங்கள் அந்த திருச்சியில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்திருந்தால் அவனது காரைப் பார்த்த அடுத்த கணமே அந்த தெரு ஒட்டுமொத்தமாக நிசப்தத்தில் மூழ்கிப் போனது.

மேலோட்டமாக அந்த பகுதியை நோட்டம் விட்டவன் பூஜாவின் கையைப் பிடித்து கொண்டு அவளது வீட்டிற்குள் நுழைய, அங்கே அவளது அன்னையும், தந்தையும் ஆளுக்கொரு மூலையில் அழுது அழுது உடம்பில் இருந்த சக்தி எல்லாம் ஒட்டுமொத்தமாக இழந்ததைப் போல சோர்வாக அமர்ந்திருந்தனர்.

அவர்கள் இருந்த நிலையைப் பார்த்ததுமே பூஜா கண்கள் கலங்க விஷ்வாவைத் திரும்பி பார்க்க அவளைப் பார்த்து, ‘ஒன்றும் இல்லை’ என்பது போல தலையசைத்தவன்,

தன் குரலை சரி செய்து கொண்டு, “அத்தை. மாமா” என்று அழைத்தான்.

திடீரென அங்கே கேட்ட குரலில் திடுக்கிட்டு போய் நிமிர்ந்து பார்த்த செல்வி மாலையும், கழுத்துமாக நின்று கொண்டிருந்த பூஜா மற்றும் விஷ்வாவைப் பார்த்ததும் அதிர்ச்சியில் தன் அருகில் இருந்த சுவற்றை இறுக்கிப் பிடித்துக் கொள்ள, மறுபுறம் பரசுராமன் கண்கள் கலங்க தான் அமர்ந்திருந்த நிலையிலேயே எந்தவிதமான மாற்றமும் இன்றி அமர்ந்து கொண்டிருந்தார்.

“அப்பா…”

“உன் வாயால் என்னை அப்படி கூப்பிடாதே. இருபத்தைந்து வருடங்களாக உன்னை பார்த்து பார்த்து வளர்த்த எங்களுக்கு ரொம்ப பெரிய கைம்மாறு பண்ணிட்ட. மரியாதையாக இங்கே இருந்து போயிடு. ஏற்கனவே நாங்க பாதி உயிரோடு தான் இருக்கோம், மீதி உயிரையும் எங்க கிட்ட இருந்து பறிக்காமல் போயிடு” பரசுராமன் கோபம் கொந்தளிக்க பூஜாவைப் பார்த்து விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய,

அவளோ, “அப்பா, ஏன்பா இப்படி எல்லாம் பேசுறீங்க? என் சந்தோஷம் தானே உங்க சந்தோஷம் என்று ஒவ்வொரு நாளும் சொல்லுவீங்க. இப்போ மட்டும் என் சந்தோஷம் உங்களுக்கு சந்தோஷமாக ஏன்பா இல்லை?” என்றவாறே அவரைப் பார்த்து தவிப்போடு வினவினாள்.

“இப்போதும் நான் அதைத்தான் சொல்லுறேன். என் பொண்ணு சந்தோஷம் தான் எங்க சந்தோஷம், ஆனா நீ எங்க பொண்ணு இல்லை. அவ நேற்றே செத்துப் போயிட்டா”

“அப்பா!”

“என்னை அப்படி கூப்பிடாதேன்னு சொல்லிட்டேன். ஊரு உலகத்தில் எத்தனையோ பேர் இருந்தும் போயும் போயும் ஒரு ரவுடி தானா உனக்கு கிடைச்சான்? நீ படிச்ச பொண்ணு, எல்லாம் தெரிஞ்ச பொண்ணுன்னு நினைச்சேன், ஆனா நீ படிச்ச முட்டாள் ஆகிட்ட. நீ இங்கே நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு கோபம் கோபமாக வருது. மரியாதையாக இங்கே இருந்து போயிடு” பரசுராமன் கோபத்தோடு அவர்கள் இருவரையும் பார்த்து சத்தமிட,

கண்களில் கண்ணீர் வடிய நின்று கொண்டிருந்த பூஜாவை தன் ஒரு கையால் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட விஷ்வா, “ஒரு அம்மா, அப்பாவாக உங்க கோபம் நியாயமானது தான் மாமா. அந்த கோபத்தை நான் மதிக்கிறேன், அதே நேரம் முழுமையாக அந்த கோபத்தை ஏற்றும் கொள்கிறேன், ஆனால் அதற்காக என்னை நம்பி வந்த உங்க பொண்ணை நான் கை விட மாட்டேன் மாமா. இன்னும் எத்தனை வருடம் போனாலும், என் உடம்பில் உயிர் இருக்கும் வரைக்கும் பூஜா தான் என் மனைவி. அதேபோல நீங்க தான் என் மாமா, அவங்க தான் என் அத்தை. எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா” என்றவாறே அவரது காலில் விழப் போக அவரோ மற்றைய புறமாக திரும்பி நின்று கொண்டார்.

அவரது செய்கையில் சிறு புன்னகையுடன் பூஜாவைத் திரும்பி பார்த்தவன் அவளை செல்வியின் முன்னால் அழைத்துச் சென்று அவரது காலில் விழப் போக, அவரும் அவ்வாறே கண்ணீரோடு அவர்களிடமிருந்து சற்று தள்ளி விலகி நின்று கொண்டார்.

“பரவாயில்லை அத்தை. பரவாயில்லை மாமா. உங்க ஆசிர்வாதம் இன்னைக்கு எங்களுக்கு கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் கூடிய சீக்கிரம் கிடைக்கும் என்று நான் நம்புறேன்” என்று விட்டு பூஜாவின் புறம் திரும்பிய விஷ்வா,

“கண்டிப்பாக ஒரு நாள் அத்தையும், மாமாவும் நம்மளை மனதார ஏற்றுக் கொள்ளத் தான் போறாங்க பூஜா. நீ ஆசைப்பட்ட மாதிரியே நாம எல்லோரும் ஒன்றாக இருக்கத்தான் போறோம். நீ எதற்காகவும் இப்படி கலங்கக்கூடாது பூஜாம்மா. சரி, வா. நாம நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று விட்டு அவளை அழைத்துக் கொண்டு செல்ல அவளோ பாடசாலைக்கு முதல் நாள் செல்லும் பிள்ளை தன் அன்னை, தந்தையை விட்டுச் செல்லும் போது அவர்கள் முகத்தையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு செல்வதைப் போல சென்று கொண்டிருந்தாள்.

பூஜா மற்றும் விஷ்வா ஒருவித சோகமான மனநிலையுடன் அவர்கள் காரை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை திடீரென எங்கிருந்தோ ஒரு துப்பாக்கி தோட்டா பாய்ந்து வர, அதைப் பார்த்து நொடி நேரத்திற்குள் தன்னை சுதாரித்துக் கொண்ட பூஜா, “விஷ்வா” என்றவாறே அவனைத் தன் புறமாக இழுக்க, அதற்குள் அந்த தோட்டா அங்கிருந்த மரமொன்றில் சென்று பாய்ந்தது.

“விஷ்வா, உனக்கு ஒண்ணும் இல்லை தானே? உனக்கு எதுவும் ஆகல தானே? நீ நல்லா இருக்க தானே? உனக்கு அடி எதுவும் படல தானே?” பூஜா பதட்டத்துடன் விஷ்வாவை மேலிருந்து கீழாக ஆராய்ந்து பார்க்க, அவள் போட்ட சத்தத்தில் வீட்டிற்குள் இருந்த அவளது பெற்றோரும், வெளியே நின்று கொண்டிருந்த அவனது அடியாட்களும் அவர்களைச் சூழ்ந்து வந்து நின்று கொண்டனர்.

“அண்ணே, உங்களுக்கு எதுவும் ஆகல தானே? டேய் பசங்களா சீக்கிரம் வாங்கடா. அண்ணா, அண்ணியை சுற்றி நிள்ளுங்கடா. நாலு பேரு வெளியே போய்‌ யாரு இப்படி‌‌ பண்ணதுன்னு பாருங்கடா” என்றவாறே டேவிட் சத்தமிட்ட படி விஷ்வா மற்றும் பூஜாவை நோக்கி வர, அதற்குள் நான்கு, ஐந்து அடியாட்கள் அவர்கள் இருவரையும் வளையம் போல சூழ்ந்து கொண்டனர்.

அதே சமயம் இன்னும் நான்கு, ஐந்து பேர் வெளியே யாரும் இருக்கின்றார்களா என்று நோட்டம் விட ஓடிச் செல்ல, அந்த நேரத்திற்குள் பரசுராமன் மற்றும் செல்வி பூஜா நின்று கொண்டிருந்த இடத்தை வந்து சேர்ந்திருந்தனர்.

பூஜாவை சுற்றி நின்ற‌ அடியாட்களை விலக்கி விட்டு அவளது கையைப் பற்றி தன் புறமாக இழுத்த‌ செல்வி, “சந்தோஷாமா? உனக்கு இப்போ சந்தோஷமா? சொல்லுடி. இப்படி எல்லாம் பிரச்சினை வந்துவிடக்கூடாதுன்னு தானே நாங்க அவ்வளவு தூரம்‌ உனக்கு எடுத்துச் சொன்னோம். இப்போ என்ன நடந்ததுன்னு பாரு. கழுத்தில் கட்டிய தாலியில் இருக்கும் மஞ்சளோட ஈரம் கூட காயல, அதற்குள்ள இப்படி எல்லாம் நடக்குது. கொஞ்ச‌‌ நேரம் தாமதமாகி இருந்தால் என்ன ஆகி இருக்கும் சொல்லு” அவளது தோள் பற்றி உலுக்கி வினவ,

அவளோ, “உங்க பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நீங்க தானேம்மா ஆசிர்வாதம் பண்ணணும். அதை விட்டுட்டு இப்படி பேசினால் எப்படி ம்மா?” கண்ணீர் மல்க அவரைப் பார்த்து வினவினாள்.

“உன்னை இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வளர்த்ததற்கு நீ இதுவும் பேசுவ, இதற்கு மேலேயும் பேசுவ. உன் வாழ்க்கை அநியாயமாக போவதைப் பார்த்து நாங்க எப்படி நிம்மதியாக இருக்க முடியும் சொல்லு? இதை எல்லாம் எடுத்துச் சொன்னால் நாங்க…”

“செல்வி” பூஜாவிடம் கோபமாக பேசப்போன செல்வியைத் தன் புறமாக இழுத்த‌ பரசுராமன்,

“நீ யாருகிட்ட பேசிட்டு இருக்க செல்வி? அவங்க பெரிய ரவுடி சாரோட மனைவி மிஸஸ் பூஜா விஷ்வா, நம்ம பொண்ணு பூஜா இல்லை. தேவையில்லாமல் அவங்க வாழ்க்கையைப் பற்றி நீ பேச வேண்டாம். அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துக் கொள்ளுவாங்க. தேவையில்லாமல் நமக்கு எதற்கு ஊர் வம்பு? நம்ம பொண்ணுக்கு நாளைக்கு மூணாம் நாள் காரியம் பண்ணணும். அந்த வேலைகளைப் பார்க்கலாம் கிளம்பு” என்று விட்டு,

பூஜாவின் புறம் திரும்பி, “என் மனைவியை மன்னித்துக் கொள்ளுங்க. அவளுக்கு யாரு கூட, என்ன பேசணும்னு தெரியலை. அதோடு உங்க இந்த ரவுடி பஞ்சாயத்தை எல்லாம் வேறு எங்கேயாவது வைத்துக் கொள்ளுங்க. இங்க அக்கம் பக்கத்தில் இருக்கும் ஆளுங்க கிட்ட எங்க மானம், மரியாதை எல்லாம் போக வேண்டாம். ஏற்கனவே எங்க பொண்ணு செய்த வேலையால் நாங்க கூனிக்குறுகி போய் நிற்கிறோம், இதற்கு மேலேயும் எங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டாம். தயவுசெய்து இங்கே இருந்து போயிடுங்க. ப்ளீஸ் கிளம்புங்க” என்று கையெடுத்துக் கும்பிட, பூஜா அவசரமாக அவரது கையைப் பிடிக்கப் பார்க்க, அதற்குள் அவர் தன் கையை இறக்கி விட்டு செல்வியையும் அழைத்துக் கொண்டு வேகமாக தங்கள் வீட்டிற்குள் நுழைந்து கதவை பட்டென்று சாத்தி கொண்டார்.

பரசுராமனின் நடவடிக்கைகளைப் பார்த்து பூஜா விக்கித்துப் போய் நிற்க, அங்கு இதற்கு மேலும் நிற்பது சரியில்லை என்பதை உணர்ந்து கொண்ட விஷ்வா அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டபடியே அழைத்துச் சென்று காரில் அமரச் செய்து விட்டு மனம் நிறைந்த கவலையுடன் நொடியும் தாமதிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்…….

***********
தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
**********

Leave a Reply

error: Content is protected !!