Nee Enaku Uyiramma–EPI 12

189613085_863389437581725_4803627891963141566_n-ed2e0f85

Nee Enaku Uyiramma–EPI 12

அத்தியாயம் 12

கன்னத்தில் ஈரமாய் எதுவோ பட, மெல்ல கண் விழித்தான் நேதன். அவன் முன்னே முன் பல்லைக் காட்டி சிரித்தப்படி அமர்ந்திருந்தான் கேஷவ். அந்தக் குட்டி மனிதர்தான் இவனை கன்னத்தில் முத்தமிட்டு எழுப்பியது. காலையில் கிடைத்த அழகான தரிசனத்தில் புன்னகை முகிழ்க்க, சின்னவனைத் தூக்கி தன் நெஞ்சில் அமர்த்திக் கொண்டான் நேதன்.

இரவில் அழுது கொண்டிருந்த வேணியை அப்படியே விட்டு செல்ல மனம் வராமல் அங்கேயே தங்கி விட்டான் அவன். அம்மா, மகன் இருவரையும் மெல்ல ரூமுக்கு நடத்தி சென்றவன், சின்னவனைக் கட்டிலில் படுக்க வைத்தான். வேணியைக் கட்டிலில் அமர்த்தி, அவள் கன்னத்தைத் துடைத்து,

“படும்மா, நாளைக்குப் பேசிக்கலாம்!” என முதுகைத் தடவிக் கொடுத்தான்.

தேம்பிக் கொண்டே,

“தம்பிக்கு பேம்பர்ஸ் மாத்தனும்” என்றாள்.

“நான் மாத்தறேன்! நீ தூங்கு”

“பாத்ரூம் போகனும்”

கேஷவின் பெரிய வெர்ஷனை அவளிடம் பார்த்தவனுக்கு புன்னகை வந்தது.

“நீயே போய்டுவியா? இல்ல நான் கூட்டிப் போகனுமா?”

“போடா!” என்றவள் எழுந்து பாத்ரூம் போனாள்.

கையோடு நைட்டி மாற்றி வந்தவள் மகனை கவனிக்கப் போக,

“படுன்னு சொன்னேன்ல!” என கடிந்துக் கொண்டே கேஷவைத் தன் புறம் இழுத்துக் கொண்டான்.

“நீ கெளம்பலையா?”

“என் வைப்பும் மகனும் அப்செட்டா இருக்கறப்போ எப்டி விட்டுட்டுப் போக! இன்னிக்கு இங்கயே தங்கிக்கறேன்” என சொல்ல இவள் மறுத்துப் பேசவில்லை.

அலமாரியில் இருந்த புதிய கைலியையும், துவைத்த டவலையும் அவனிடம் எடுத்துக் கொடுத்தவள்,

“ப்ரேஷ் ஆகிக்கோ! எக்ஸ்ட்ரா மெத்தை ஒன்னும் இல்ல. பாய்தான் இருக்கு, ஓகேவா? இல்லை பரவாயில்ல, நீ இங்கப் படுத்துக்க, நான் வெளிய பாய் போட்டு படுத்துக்கறேன்” என்றாள்.

“பாய்லாம் பழக்கம் இல்லைதான்! ஓன் டே அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்! யூ டோண்ட் வொரி” என்றவன் சின்னவனுக்கு பேம்பர்சை கழட்டி சுத்தமாகத் துடைத்து புதிய பேம்பர்ஸ் போட்டுவிட்டான்.

வேணியைக் கேட்டு அவனுக்கு உடையையும் மாற்றி அவள் அருகே படுக்க வைத்தான். சின்னவனுக்கு நெற்றியில் முத்தமிட்டவனை இவள் பார்த்துக் கொண்டே இருந்தாள். பட்டென அவள் நெற்றியிலும் முத்தமிட்டவன்,

“குட் நைட்” என சொல்லி ஹாலுக்குப் போய் விட்டான்.

அவனிட்ட முத்தம் மனதின் வலியை கொஞ்சமாய் மறக்கடிக்க, கண் மூடி உறங்கிப் போனாள் அம்சவேணி.

“நேதன், ப்ரேக்பஸ்ட் செஞ்சு வச்சிருக்கேன். கேஷவுக்கு வேண்டியது எல்லாம் நான் செஞ்சிட்டேன். உனக்கு எதாச்சும் வேலை இருக்கா?”

“இன்னிக்கு ஃப்ரீதான் நான்”

“அப்போ இவர கொஞ்சம் பார்த்துக்கறியா? நான் மார்க்கேட் போய்ட்டு வந்துடறேன்! ஸ்டாக் வாங்கி வைக்கனும் கடைக்கு. ஏற்கனவே லேட்டா எழுந்துட்டேன்” என காலில் சுடுநீர் ஊற்றிக் கொண்டதைப் போல பரபரத்தாள்.

“ஹே, ரிலேக்ஸ்! நான் கூட ஹெல்ப்புக்கு வரவா?”

“இல்லல்ல! இவன மட்டும் பார்த்துக்கோ போதும்”

“நீ எவ்ளோ நேரம் வேணும்னாலும் எடுத்துக்கோ! நாங்க காய்ஸ் ரெண்டு பேரும் மேனேஜ் பண்ணிப்போம்” என அவன் சொல்லிய நொடி வெளியே நடந்திருந்தாள் அவள்.

கேஷவிற்கு விளையாட பொருட்கள் எடுத்துப் போட்டவன், குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான். வெளியே வந்தால், கேஷவ் கதவு பக்கம் அமர்ந்திருந்தான்.

“இங்கயே தேடி வந்துட்டீங்களா?” என சிரிப்புடன் அவனைத் தூக்கிக் கொண்டான் நேதன்.

கிச்சனில் சின்ன சாப்பாட்டு மேசை இருந்தது. அதில் உணவு மூடி வைக்கப்பட்டிருக்க, திறந்துப் பார்த்தான் நேதன். கிண்ணத்தில் உப்புமாவும், ப்ளாஸ்க்கில் டீயும் இருந்தது.

“எனக்கு உப்புமான்னா தொண்டையில அடைக்கும்னு உங்க அம்மாகிட்ட சொல்லி வைக்கனும் கேஷவ் குட்டி!” என்றவன் உப்புமாவைப் தட்டில் போட்டு அதில் தேநீரை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டான்.

அதன் பிறகு இருவரும் என்னென்னவோ பேசிக் கொண்டே விளையாடினார்கள். இவன் தரையில் கால் நீட்டி அமர்ந்து கொள்ள, கேஷவ் வந்து அவன் மடியில் படுத்துக் கொண்டான். சின்னவனின் தலைக் கோதியவனின் கண்கள் சுவரில் மாட்டி இருந்த வேணியின் கணவன் போட்டோ மேல் பதிந்தது. முடி அங்கங்கே நரைத்திருக்க, கன்னம் ஒட்டிப் போய், மிகவுமே வயதானவர் போல தெரிந்தார் அந்த மனிதர். கேஷவுக்கும் அவருக்கும் நிறத்தில் மட்டும்தான் ஒற்றுமை இருந்தது. மற்றப்படி இவன் பார்க்க வேணியைப் போலவே இருந்தான்.

மூன்று மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்தாள் வேணி. கை நிறைய பொருட்களோடு வந்தவளுக்கு கதவைத் திறந்து விட்டான் இவன். இன்னும் காரில் காய்கறிகள் இருக்கிறது என சொல்ல, இவன் கார் சாவியை வாங்கிக் கொண்டு கீழே இறங்கினான் எடுத்து வர. ஒரு வழியாக எல்லாவற்றையும் ஸ்டோர் செய்து விட்டு, குளித்து விட்டு வந்தாள் வேணி. அவளுக்காக ஜூஸ் கலக்கி வைத்திருந்தான் நேதன்.

“தேங்க்ஸ்டா, தொண்டைக் காஞ்சுப் போச்சு” என்றவள் மடமடவென அதை பருகினாள்.

“லஞ்ச் வாங்கிட்டு வரவா வேணி?”

“நம்ம ரெண்டு பேருக்கும் நான் சிக்கன் ரைஸ் வாங்கிட்டு வந்துட்டேன். இவருக்கு மட்டும் கொஞ்சம் சாதம், காய்கறிலாம் போட்டு பண்ணிடறேன்” என்றவள் வேலையைப் பார்க்கப் போனாள்.

“எதாச்சும் ஹேல்ப் வேணுமா?”

“இந்த கிச்சன்ல ஒரு ஆள்தான் நிக்க முடியும்! கொஞ்ச நேரத்து வேலை இது. நீ முன்னுக்கு உட்காரு, நான் முடிச்சிட்டு வரேன்”   

கேஷவ் சிணுங்க ஆரம்பிக்க,

“அவனுக்கு தூக்கம் வந்துடுச்சு! ரூம்ல படுக்க வை நேதன்! பொரண்டு பொரண்டு தூங்கிடுவான்” என்றாள் வேணி.

வேணி சொன்னதைப் போல படுக்க வைக்க, ஐந்து நிமிடத்தில் உறங்கி இருந்தான் அவன். அவனை சுற்றி தலையணைகளை இவன் அடுக்க, வேணி வந்து எட்டிப் பார்த்தாள்.

“தூங்கிட்டாரு!”

“மத்தப் புள்ளைங்க மாதிரி தூங்க மாட்டேன்னு அடம்லாம் பண்ண மாட்டான். கரேக்டான டைமுக்கு கரெக்டா தூங்கிடுவான்” என சொல்லி புன்னகைத்தாள் வேணி.

மகன் அருகே கட்டிலில் அமர்ந்தவள், அங்கிருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியைக் காட்டி இவனை அமர சொன்னாள்.

“நாம கொஞ்சம் பேசிடலாம் நேதன்” என அவள் சீரியசாக ஆரம்பிக்க,

“கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதே வேணி! நேத்து நான் தான் உன் புருஷன்னு அறிமுகப்படுத்தனதுல இருந்து ரொம்ப சந்தோசமா இருக்கேன்! அந்த சந்தோசத்துல நெருப்ப வச்சிக் கொளுத்திடாதே” என இவனும் சீரியசாக சொன்னான்.

அவனை முறைத்தாள் வேணி.

“ஏன் முறைக்கிற?”

“கல்யாணம் பண்ணிக்க இஸ்டமில்லாமத்தான் உன்னை வீட்டுல தங்க வச்சி மாப்பிள்ளை உபசாரம் பண்ணறேன்னா?” என கேட்டவள், தலையணையை அவன் மேல் விட்டடித்தாள்.

அதை கேட்ச் பிடித்தவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

“இப்பத்தான் நிம்மதியா ஃபீல் செய்யறேன் நான்!”

“ஆனா எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு நேதன்”

“சொல்லு”

“நான் இந்த கபே நடத்தறத விடமாட்டேன்”

“சரி”

“பைனன்சியலி உன்னை டிபெண்ட் பண்ணி இருக்க மாட்டேன்”

புருவம் லேசாக சுருங்கியது இவனுக்கு.

“நீ சம்பாரிக்கறத நீ என்ன வேணும்னாலும் செய்யலாம் வேணி! ஆனா என் மனைவி, பிள்ளைக்குனு செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கு! அத நீ தடுக்கக் கூடாது”

பணத்துக்கு உன்னை எதிர்ப்பார்க்க மாட்டேன் என இவள் சொல்ல, உன்னை எதிர்ப்பார்க்க விடாமல் நானே செய்வேன் என இவன் முடித்து வைத்திருந்தான்.

சற்று நேரம் அமைதியாய் இருந்தவள்,

“உன்னோட பணத்தையும், ஆடம்பர வாழ்க்கையையும் எதிர்ப்பார்த்து நான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கல! நேத்து வீடேறி வந்து என் குடும்பத்துல உள்ளவங்க நம்மல பத்தி தப்பா பேசிட்டாங்களேன்னும் சம்மதிக்கல! எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குடா! உன்னோட அக்கறை, அன்பு, கேஷவ் மேல நீ வச்சிருக்கற பாசம், எல்லாமே ரொம்பப் பிடிச்சிருக்கு. உன் கூட இருக்கறப்போ பாதுகாப்பா இருக்கற ஃபீல் வருது! மனசு நிம்மதியா இருக்கு. அந்தப் பிடித்தம் கண்டிப்பா நமக்குள்ள ஒரு நல்ல உறவ மலர வைக்கும்ன்னு நம்பிக்கை இருக்கு. அதுக்குத்தான் ஒத்துக்கிட்டேன்.” என்றவள்,

“ஆனா மனசுக்குள்ள ஒரு மூலையில பயமா இருக்குடா” என முடித்தாள்.

“என்ன பயம்? எதா இருந்தாலும் என் கிட்ட சொல்லு வேணி. நாம பேசி சரி பண்ணிக்கலாம்”

“என் கதைய கேட்டுட்டு என்னை வேணான்னு சொல்லிட மாட்டியே! இந்த சில நாட்களா கஸ்டம்னா தோள் சாஞ்சிக்க நீ இருக்கன்ற நினைப்பே எனக்கு அவ்வளவு ஆசுவாசத்தக் குடுக்குது நேதன். நமக்குள்ள சரி வரைலைன்னா நான் மறுபடி எப்படி தனியா எல்லாத்தையும் தாங்குவேன்னு பயமா இருக்கு. அந்த எண்ணமே பேசாம இப்படியே இருந்துடுவோமான்னு நினைக்க வைக்குது” என தொண்டைக் கமர சொன்னவளை, எழுந்து போய் அணைத்துக் கொண்டான் நேதன். அவள் முகத்தைத் தன் வயிற்றில் அழுத்திக் கொண்டவன், அவள் தலையை வருடிக் கொடுத்தான்.

“நமக்கு நாப்பது வயசாகுதுடி! வாழ்க்கை எனும் புத்தகத்துல நடுப்பக்கத்துல நிக்கறோம். சின்ன வயசு ஜோடிங்க மாதிரி எந்த வித அதீத எதிர்ப்பார்ப்பும் இல்லாம மணவாழ்க்கையில அடி எடுத்து வைப்போம். நல்லதையே யோசிப்போம் வேணி, நல்லதே நடக்கும்”

மெல்லத் தன் கையை உயர்த்தி அவனை இடுப்போடு கட்டிக் கொண்டாள் வேணி. அமைதியாக அப்படியே இருந்தனர் பல நிமிடங்கள்.

“உட்காரு” என அவள் சொல்ல, கட்டிலில் வேணியின் அருகிலேயே அமர்ந்துக் கொண்டான் இவன்.

“எனக்கு ஸ்கூல் டைம்ல உன் மேல ரொம்ப பொறாமையா இருக்கும் நேதன். ஃபோர்ம் ஓன்(இடைநிலைப் பள்ளியின் முதல் வகுப்பு) சேர்ந்தப்போ எல்லோரும் டேவான்ல(மண்டபம்) பேரென்ட்ஸோட குழிமி இருந்தாங்க. நான் மட்டும் தனியாத்தான் நின்னிருந்தேன். என் முன்ன நீயும் உன் அம்மா அப்பாவும் நின்னிருந்தீங்க. உங்கப்பா உன்னைக் கிண்டல் செய்ய, உங்கம்மா உன் முடியைக் கலைச்சு விளையாட, நீ விடுங்க என்னைன்னு கோவிச்சுக்கன்னு பார்க்கவே அவ்ளோ அழகா இருந்தது அந்தக் காட்சி. நமக்கு இப்படி யாரும் இல்லையேன்னு ஒரு பொறாமை உணர்வுல உன்னையேத்தான் பார்த்திருந்தேன். அந்தக் கடுப்புலத்தான் அடிக்கடி உன்னை வம்பிழுப்பேன். இப்போ நெனைச்சுப் பார்த்தா ரொம்பவே சின்னப்புள்ளைத்தனமா இருக்கு” என்றவளுக்கு அந்த நினைவுகளில் மெல்லிய புன்னகை வந்தது.

அவனுக்குமே சிரிப்பு வரத்தான் செய்தது.

“எனக்கு அப்பா சரியில்ல! தண்ணி கேசு. எங்கம்மா கடும் உழைப்பாளி! ஆனா ஆசாமி பக்தி அதிகம். என்ன புரியலையா? யாராச்சும் சாமி ஆடி குறி சொல்றாங்க, சாமி பார்க்கறாங்க, ஜாதகம் பார்க்கறாங்கன்னா அங்க இவங்கத்தான் முதல்ல போய் குறி கேக்க நிப்பாங்க. எங்கப்பா தண்ணி சாப்பிடறத விடனும்னா இந்த சாங்கியமெல்லாம் செய்யனும்னு சொல்லி, பார்க்கற சாமியாரெல்லாம் இவங்க பணத்த கரைச்சதுதான் மிச்சம். சம்பாரிக்கறத எல்லாம் தட்சணை, சாங்கியம், தீட்டு கழிக்கறதுன்னு வாரி இறைச்சே ஓஞ்சிப் போனாங்க. நான் எஸ்.பி.எம்(இடைநிலைப்பள்ளியின் பொதுத் தேர்வு. 17/18 வயதில் இந்த தேர்வு வரும்-இது முடிந்ததும் காலேஜ், பாலிடெக்னிக், யூனிவெர்சிட்டி இப்படி படிக்கப் போவார்கள். சிலர் இதோடு படிப்பை நிறுத்தியும் கொள்வார்கள்) எழுதி முடிச்சக் கையோட அப்பா கல்லிரல் டேமாஜாகி இறந்துட்டாங்க. அதுக்கு அப்புறம்தான் எனக்குப் புடிச்சது செவென் தேர்ட்டி”

“ஏன் என்னாச்சு?”

“அன்புக் கணவன் இறந்ததும் எங்கம்மாவுக்கு உலகமே இயக்கத்தை நிறுத்திடுச்சு. கிண்டலா சொல்லலடா, நெஜமாத்தான். அவர் இறப்ப அவங்களால தாங்கிக்க முடியல! அதோட அவர் ஆத்மா சாந்தியடையாம இங்கயேத்தான் சுத்திட்டு இருக்கு. அதுக்கு பரிகாரம் பண்ணனும்னா பத்தாயிரம் வேணும்னு எங்கயோ சாமி பார்க்கப் போன இடத்துல சொல்லிட்டாங்கன்னு ஒரே அழுகை. அந்த அளவுக்கு பணம் இல்லையே! தெரிஞ்ச இடத்துல எல்லாம் கடன் கேட்டுப் பார்த்தும் கிடைக்கல! அதுவே அவங்கள ரொம்ப பாதிச்சிருச்சுடா. ஏற்கனவே என் தம்பிகள நான் தான் வளர்த்தேன். எங்கம்மா படுத்தப் படுக்கையானதும் எல்லா பொறுப்பும் என் தலையில விழுந்துடுச்சு. மேல படிக்க முடியாத நிலமை. அம்மா வேலை செஞ்ச காபி தூள் தயாரிக்கற பேக்டரிலயே வேலைக்குப் போனேன். வீட்டு வேலை, அம்மாவப் பார்த்துக்கறது, தம்பிங்க, கம்பேனி வேலைன்னு பெண்டு நிமிர்ந்திடும்”

அவள் கையைப் பிடித்து அழுத்திக் கொடுத்தான் நேதன்.

“கொஞ்ச நாளுலேயே இவங்களும் அப்பா கூட போய்ட்டாங்க! நாங்க மூனு பேரா நின்னோம்! சொந்த பந்தமெல்லாம் இருந்தாங்க. அப்பப்போ வந்துப் பார்த்துட்டுப் போவாங்க. ஆனாலும் எங்களுக்கு நாங்கத்தான். இவனுங்கள படிக்க வச்சேன். ரெண்டு பேரும் வேலைக்குப் போன போது எனக்கு முப்பதாகிடுச்சு! கல்யாணத்துக்கு கேட்டு வந்தாங்கத்தான். நான் தான் பிடிக் கொடுக்கல. இவனுங்கள கரையேத்திடனும்னு மட்டும்தான் மனசுல இருந்துசே தவிர நாம கரையேறனும்னு தோணல. பெரிய தம்பி காதல்னு வந்து நின்னான். கல்யாணம் பண்ணி வச்சேன். கல்யாணம் சொர்க்கத்துல நிச்சயிக்கப்படுதுன்னு சொல்வாங்க. அவனோட கல்யாணம் எனக்கு நரகமாயிடுச்சுடா!”

மெல்லிய பெருமூச்சு அவளிடம். தூக்கத்தில் அசைந்த மகனைத் தட்டிக் கொடுத்தவள் தன் கதையைத் தொடர்ந்தாள்.

“அவனோட பொண்டாட்டிக்கு நான் அவங்க குடும்பத்துக்கு பாரமா இருக்கற ஃபீல்! தம்பி வீட்டுல இல்லாதப்போ குத்திக் குத்திப் பேசுவா! இத்தனைக்கும் நான் வேலைக்குப் போய் சம்பாரிச்சுட்டுத்தான் இருந்தேன். பெரிய தம்பி அக்கா அக்கான்னு என் கிட்ட பாசமா இருக்கறது அவளுக்குப் பொறுக்கல. சின்னத் தம்பி வெளியூர்ல தங்கி வேலைப் பார்த்துட்டு இருந்தான் அந்த டைம்ல. இவளோட அண்ணன்காரன், அதான் நீ பார்த்தியே அன்னைக்கு, அவன் வேற அடிக்கடி வீட்டுக்கு வந்து ஈன்னு இளிக்க ஆரம்பிச்சான். ஒரு தடவை என் கையைப் புடிச்சுகிட்டு, என் பொண்டாட்டி புள்ளைங்கள உனக்காக விட்டுட்டு வந்துடறேன்! எனக்கு நீ வேணும்னு அசிங்க அசிங்கமா பேச ஆரம்பிச்சிட்டான். இத என் தம்பி வைப் பார்த்துட்டா! எவ்ளோ கேவலமா பேசமுடியுமோ என்னை அவ்ளோ கேவலமா பேசிட்டா! கல்யாணம் ஆகாம இத்தனை வயசு வரைக்கும் இருக்கறதே, எவன் எவன் கிடைப்பான்னு அலையறதுக்குத்தான். என் அண்ணா குடும்பத்தையே சீரழிக்க உனக்கு எவ்ளோ திமிர் இருக்கனும் உடம்புல! அப்டி இப்டின்னு காது குடுத்து கேக்க முடியாத வார்த்தை எல்லாம் பேசிட்டா. கோபத்துல சப்புன்னு அறைஞ்சிட்டேன். ஒரே ரகளையா போச்சு! ரெண்டு பேருமே அந்த குமரனாலத்தான் பிரச்சனைன்னு வாயத் திறக்கல! என் தம்பிக்குத் தெரிஞ்சா வெட்டுக் குத்துன்னு ஆயிடும். எங்கக்காக்கு அடங்கி இருக்கறதுனா இருன்னு இவன் சொல்ல, அவ மூட்டை முடிச்ச கட்ட, கடைசில நாந்தான் இறங்கி வந்து மன்னிப்பு கேட்டு சமாதனம் செஞ்சு வச்சேன். எனக்கு வீடே நரகமாச்சு. வீட்டை விட்டுப் போயிடலாம்னா, எங்க போவேன் நான்? பிறந்ததுல இருந்து வாழ்ந்த வீடு அது! அந்த வீடு தந்த பாதுகாப்ப வெளியே போய் நான் எங்க தேடுவேன்? அப்போத்தான் கடைசித் தம்பியும் காதல்னு வந்து நின்னான். அந்தப் பொண்ணோட தூரத்து சொந்தம்தான் கேஷவோட அப்பா”

கண்களில் சடசடவென மழை பெய்தது அவளுக்கு. சட்டென இழுத்து அணைத்துக் கொண்டான் நேதன்.

 

(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி செல்லம்ஸ்..இன்னிக்கு ரஹ்மான என்னால எழுதவே முடியல..கொஞ்சம் பெர்சனல் இஸ்யூஸ்! அதனாலத்தான் இந்தக் கதையாச்சும் போடலாம்னு போடறேன்! நாளைக்கு ரஹ்மான கூட்டி வர ட்ரை செய்றேன்! லவ் யூ ஆல் டியர்ஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!