இதயம் – 12

eiHJN6N67051-c1808747

இதயம் – 12

சக்தியின் வீட்டின் ஒரு பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மல்லிகைப் பந்தலின் கீழ் நின்று கொண்டிருந்த பூஜா சிறிது நேரத்திற்கு முன்பு அங்கே வந்திருந்த பெண்மணி சொன்ன விடயங்களைக் கேட்டு முற்றிலும் நிலைகுலைந்து போனவளாக தன் கைகள் இரண்டிலும் முகம் புதைத்து அழுது கொண்டிருக்க, அவளின் பின்னாலேயே ஓடி வந்த சக்தி அவளது அந்த நிலையைப் பார்த்து முற்றிலும் கலங்கிப் போனான்.

பூஜாவின் முகத்தில் ஒரு சிறு கவலை கூட தெரிந்து விடக்கூடாது என்று எத்தனையோ கனவுகளை சுமந்திருந்தவனுக்கு அவளது இந்த உடைந்து போன தோற்றம் ஏதோ ஒரு பெரிய பாறாங்கல்லை தன் மனதிற்குள் வைத்து அழுத்துவது போல இருந்தது.

அவளது அந்த நிலையைப் பார்த்து அவனுக்கு மனமும், கால்களும் தள்ளாட, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவளை நோக்கி அடியெடுத்து வைத்து நடந்து சென்றவன், “பூஜா” என்று அழைக்க, மனதிற்குள் ஏதேதோ சிந்தனைகளுடன் அழுது கொண்டிருந்த பூஜாவின் செவிகளுக்கு அவனது குரல் சரியாக சென்றடையவில்லை.

தான் அழைத்தது அவளுக்கு கேட்கவில்லை போலும் என்ற எண்ணத்தோடு சக்தி மீண்டும் சிறிது சத்தமாக, “பூஜா” என்றழைக்க, அப்போதும் அவள் அவனின் புறம் திரும்பவில்லை.

இப்படியே அவளை அழுது கொண்டிருக்கும்படி விடுவது சரியில்லை, அவளை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு சிறிது தயக்கத்துடன் அவளருகில் சென்ற சக்தி அவளது தோளில் தன் கையை வைக்க, அவனது தொடுகையில் சட்டென்று தன் கைகளில் மூடியிருந்த தன் முகத்தை நிமிர்த்தியவள் ஒரு சிறு நொடியும் தாமதிக்காமல் அவன் மேல் சாய்ந்து கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவனுடைய சட்டையை தன் இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டு தேம்பி தேம்பி அழுபவளை எப்படி ஆறுதல் படுத்துவது என்று தெரியாமல் சக்தியின் கைகள் இரண்டும் அந்தரத்திலேயே நிற்க, அவனது மனமோ பந்தயக் குதிரையை விட வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

பூஜாவை இதற்கு முன்னர் இப்படியான நெருக்கத்தில் அவன் ஒரு முறை சந்திருந்தாலும், அன்று இருந்த நிலைமைக்கும் இன்று இருக்கும் நிலைமைக்கும் பல வித்தியாசங்கள் இருந்தது.

பூஜாவை ஏதாவது பேசி சமாதானப்படுத்தி விடலாம் என்று எண்ணி வந்த சக்தி இப்போது பேச வார்த்தைகளே இன்றி மௌனமாகி நிற்க, தன் அண்ணனைத் தேடி வெளியே வந்த மீரா சக்தி மற்றும் பூஜா நின்று கொண்டிருந்த நிலையைப் பார்த்து விட்டு அவர்களை தொந்தரவு செய்யாமல், தான் வந்த தடயமே இல்லாமல் மீண்டும் வீட்டிற்குள் திரும்பி சென்றாள்.

பூஜாவின் அழுகை முற்றாக நிற்கும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தவன் அவளது அழுகை நின்று விட்டதை உறுதிப்படுத்தியவனாக அவளது முகத்தை மெல்ல நிமிர்த்தினான்.

வெகு நேரமாக அழுதழுது அவளது முகமும், கண்களும் சிவந்து போய் இருக்க அவளது கண்களை மெல்ல துடைத்து விட்டவன், “பூஜா, ஒரு தடவை என்னை நிமிர்ந்து பாரு” என்றவாறே அவளது முகத்தை இன்னமும் தன்னைப் பார்க்கும் படி நிமிரச் செய்தான்.

சக்தியின் குரலுக்கு கட்டுப்பட்டவள் போல மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்த பூஜா அவனைப் பார்த்து விட்டு மீண்டும் கண்கள் கலங்க போக, “உஸ், என்ன இது? சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டே இருக்கலாமா பூஜா? நான் உன்னை ரொம்ப தைரியமான பொண்ணுன்னு இல்லையா நினைத்து இருந்தேன், ஆனா இப்போ நீ நடந்து கொள்ளுவதைப் பார்த்தால் அப்படி இல்லை போல இருக்கே” என்றவாறே சக்தி அவளது கலங்கிய கண்களை மீண்டும் துடைத்து விட, சிறிது நேரம் அமைதியாக நின்றவள் அப்போதுதான் தான் அவனுடன் எவ்வளவு நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறோம் என்பதைக் கவனித்துப் பார்த்தாள்.

‘ஐயோ! பூஜா. நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க? சும்மாவே உனக்கு இவரைப் பக்கத்தில் பார்க்கும் போது பதட்டமாக இருக்கும், இப்போ இப்படி இவரை அணைத்துக் கொண்டு நிற்கிறாயே? அவர் உன்னைப் பற்றி என்ன நினைக்கப் போறாரு? உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை பூஜா’ தன் மனதிற்குள் தன்னைத் தானே திட்டிக் கொண்ட படி அவனிடமிருந்து சட்டென்று விலகி நின்று கொண்டவள் மற்றைய புறமாக திரும்பி நிற்க, அவளது பதட்டம் மாத்திரம் முன்பிருந்ததை விட இப்போது அதிகமாக ஆகி விட்டதைப் போல இருந்தது.

ஏற்கனவே வீட்டிற்குள் நடந்த சம்பவங்கள் அவளை மிகவும் பலவீனமாக மாற்றியிருக்க, இப்போது சக்தியுடனான இந்த நெருக்கம் அவளை இன்னமும் பலவீனமாக மாற்றியிருந்தது.

அவளது மூளை அவளை அங்கிருந்து நகர்ந்து செல்லும் படி கட்டளையிட்டாலும், அவளது கால்களோ ஒரு அடி எடுத்து வைக்கவே வெகுவாக தடுமாறியது.

‘ஐயோ! பூஜா, இங்கே இருந்து போ. உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியே போ’ என்று பூஜாவின் மனம் அவளுக்கு அறிவுறுத்த, ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டவளாக அங்கிருந்து நகர்ந்து செல்லப் போனவள் மனதளவில் மிகவும் பலவீனமாக இருந்ததால் என்னவோ கால்கள் தடுமாறி கீழே விழப் போனாள்.

கீழே விழுந்து விடக்கூடாது என்ற எண்ணத்தோடு சட்டென்று தன் கையை அருகில் இருக்கும் ஏதாவது தூணில் பிடித்து நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு பூஜா நீட்ட, அவளுக்கு எப்போதும் துணையாக, ஆதரவாக நான் இருப்பேன் என்பது போல அவளது கரம் சக்தியின் கரத்தால் பிடிக்கப்பட்டது.

சக்தியின் ஸ்பரிசத்தில் பூஜா தன் விழிகள் விரித்து அவனைப் பார்க்க, அவளை நெருங்கி மெல்ல அவளை சரியாக நிற்கச் செய்தவன் அவள் முன்னால் வழி மறித்தவாறு வந்து நின்று கொண்டான்.

அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் பூஜாவின் கண்கள் அலைபாய அவளது தவிப்பை உணர்ந்து கொண்ட சக்தி அவளை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று எண்ணிக் கொண்டு, “பூஜா முதல்ல உள்ளே நடந்த எல்லா விடயங்களுக்கும் ஐ யம் சாரி, தயவுசெய்து அவங்க சொன்ன எதையும் நீங்க மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம். எனக்காக அவங்களை மன்னிச்சுடுங்க பூஜா. உங்க ஹஸ்..ஹஸ்பண்ட் விஷ்வா ரவுடியாக இருந்தாலும் உங்களுக்கு அவங்க எந்தக் கெடுதலும் பண்ணி இருக்க மாட்டாங்க, இன்னும் சொல்லப்போனால் அவங்களை நான் கடைசியாக சந்தித்த போது கூட அவங்க அவ்வளவு பெரிய ரவுடியாக இருக்க மாட்டாரோன்னு தான் நினைத்தேன்.
ஊரில் உள்ளவங்க அவரோட கடந்த காலத்தை வைத்தே இப்போதும் அவரைத் தப்பாக நினைத்து இருக்கலாம். அவர் உண்மையிலேயே திருந்தி வாழ நினைத்து அவருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தால் நிச்சயமாக அவங்க பேசியது எல்லாம் உங்களைக் காயப்படுத்தி இருக்கும். ஊரில் உள்ளவங்க ஆயிரம் பேசுவாங்க, எது உண்மை, எது பொய்ன்னு தெரிந்த நம்ம அதை எல்லோருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க மனதுக்கு எது சரின்னு தோணுதோ அதை சொல்லுங்க, அது படியே எல்லாம் செய்யுங்க. யாரும் உங்களைத் தடுக்கப் போவதில்லை. அதோடு உங்களுக்கு இன்னைக்கு ஏற்பட்ட எல்லா சிரமத்துக்கும் ரியலி ரியலி சாரி பூஜா. இன்னைக்கு நடந்த விடயங்களை எல்லாம் ஏதோ ஒரு தேவையில்லாத விடயமாக நினைத்து தூக்கிப் போட்டு விடுங்க. ஓகே வா?” என்று சக்தி கேட்க,

அவன் பேசிய விடயங்கள் எல்லாவற்றையும் கேட்டு அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு நின்றவள், “நீங்க இப்போ வரைக்கும் என் வாழ்க்கையில் எப்படி வந்தீங்கன்னு எனக்குத் தெரியாது சக்தி சார், ஆனா நான் ஏதாவது ஒரு கஷ்டத்தில் இருக்கும் போது எங்கே இருந்தாலும் சரி, எனக்காக, என் கவலையை ஒண்ணுமே இல்லாமல் செய்து விடுவதற்காக என் முன்னால் நீங்க வந்து நிற்குறீங்க. என்னோட பிரச்சினைகளைப் பற்றி நான் யோசிக்க முதல் எனக்காக நீங்க யோசிக்குறீங்க. இதற்கு எல்லாம் என்ன சொல்லுவதுன்னு எனக்குத் தெரியலை, ஆனா என் வாழ்க்கை முழுவதும் உங்களை நான் மறக்கவே மாட்டேன்.

நான் உள்ளே அவங்க பேசிய விடயங்களை எல்லாம் கேட்டு அப்செட் ஆனது உண்மை தான், ஆனா இப்போ அதைப்பற்றி எல்லாம் யோசிக்க மாட்டேன், ஏன்னா ஊருக்காக நல்லவங்களாக நடிப்பதை விட உண்மையான கெட்டவனாக வாழ்ந்து விட்டு போவது எவ்வளவோ மேல். இதுவரைக்கும் நீங்க பண்ண எல்லா உதவிக்கும் ரொம்ப ரொம்ப நன்றி சார். எனக்கு ரொம்ப லேட் ஆகிடுச்சு, நான் ஹாஸ்டல் கிளம்புறேன், வீட்டில் உள்ளவங்க கிட்ட சொல்லிடுங்க, அதற்காக நான் கோபமாக கிளம்பி போறேன்னு நினைக்க வேண்டாம். நான் இன்னொரு நாள் கண்டிப்பாக உங்க வீட்டுக்கு வருவேன்னும் சொல்லிடுங்க சார். நான் கிளம்புறேன்” அவனைப் பார்த்து சிறு புன்னகையுடன் தலையைசைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி சென்று விட சக்தியின் பார்வை அவளின் மீதே லயித்திருந்தது.

அந்த இடத்தில் இருந்து விட்டால் போதும் என்பது போல நடந்து சென்ற பூஜாவைப் பார்த்து பெருமூச்சு விட்டபடியே தன் வீட்டிற்குள் சக்தி நுழைய, அங்கே ஹாலில் கூடியிருந்த அனைவரும் ஒருவிதமான கனத்த அமைதியுடன் அவனைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

சக்தி மட்டும் தனியாக வருவதைப் பார்த்து விட்டு அவனின் பின்னால் தன் பார்வையை சுழல விட்டபடியே அவனருகில் வந்த சந்திரா, “சக்தி, பூஜா எங்கே பா?” என்று கேட்க,

சிறு புன்னகையுடன் அவரது கன்னத்தில் தட்டிக் கொடுத்தவன், “யாரும் எதுவும் நினைக்க வேண்டாம். பூஜா ரொம்ப நேரமாக லேட் ஆகிடுச்சு போகணும்னு சொல்லிட்டு இருந்தா, அதுதான் கிளம்பி போயிட்டா. யாரும் எதுவும் தப்பாக நினைக்க வேண்டாம். இன்னொரு நாள் அவ கண்டிப்பாக வீட்டுக்கு வருவேன்னு சொல்லி விட்டு தான் போனா. அப்புறம் ஊரில் ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக பேசுவாங்க, அதெல்லாம் நாம பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. என்ன ஆன்டி நான் சொல்றது சரிதானே?” என்றவாறே அங்கே அமர்ந்திருந்த லீலாவைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்த, அவரோ அவனைப் பார்த்து சமாளிப்பது போல சிரித்து விட்டு வேறு பேச்சுக்களை பேச ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் சண்முக பிரகாஷ் மற்றும் ராஜேஷ் தங்கள் பிள்ளைகளின் திருமண விடயங்கள் பற்றி பேச ஆரம்பித்து விட, அவர்களுக்கு நடுவே அமர்ந்திருந்த சக்திக்குத் தான் அவர்களது பேச்சோடு முழுமையாக ஒன்றிப் போக முடியவில்லை.

அவன்‌‌ மனம் முழுவதும் பூஜாவைப் பற்றிய எண்ணங்களே நிறைந்து போய் இருந்ததால் என்னவோ எந்த ஒரு விடயத்திலும் அவனால் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட முடியவில்லை.

காலையில் இருந்து இப்போது வரை தன் அண்ணனின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக் கொண்டிருந்த மீரா இன்றைக்கு எப்படியாவது பூஜாவுக்கும், அவனுக்கும் இடையே என்ன நடக்கிறது என்று தெரிந்தே ஆகவேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்துக் கொண்டு தன்‌ வேலைகளைக் கவனிக்கத் தொடங்க, சிறிது நேரத்தில் ராஜேஷின் குடும்பத்தினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் புறப்பட்டுச் சென்று சிறிது நேரத்திலேயே சக்தி தன் அறையை நோக்கிச் செல்லப் போக அவசரமாக அவனருகில் ஓடி வந்து அவனது கையைப் பிடித்துக் கொண்ட மீரா, “சக்திண்ணா, நான் உன் கூட கொஞ்சம் பேசணும். என் கூட வா” என்றவாறே அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல, அவனோ அவள் எதற்காக தன்னை அழைத்துச் செல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு அமைதியாக அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

“அண்ணா, லீலா ஆன்டி சொன்னது எல்லாம் உண்மையா? பூஜாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?”

“…….”

“சொல்லுண்ணா. ஏன் அமைதியாக இருக்க?”

“ஆமா, கல்யாணம் ஆகிடுச்சு. இப்போ அதற்கு என்ன?”

“அப்போ முன்னாடியே ஏண்ணா அதெல்லாம் எங்ககிட்ட சொல்லல?”

“என்ன சொல்ல சொல்லுற மீரா? அவ வாழ்க்கையில் மறக்க நினைக்கும் விடயங்களை எல்லாம் மறுபடியும் மறுபடியும் பேசி அவளைக் காயப்படுத்த சொல்லுறியா?”

“நடந்து முடிந்த விடயங்களா? நீ சொல்லுறது எனக்குப் புரியலண்ணா”

“கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி லீலா ஆன்டி சொன்னது எல்லாம் உண்மை தான் மீரா. பூஜாவுக்கு கல்யாணம் ஆனது உண்மை, அவ காதலித்து கல்யாணம் பண்ண பையன் திருச்சியில் மிகப்பெரிய ரவுடி என்கிறதும் உண்மை, அதோடு அந்த பையன் இப்போ உயிரோடு இல்லை என்பதும் உண்மை தான். உன் சந்தேகம் தீர்ந்துடுச்சா? போதுமா, நான் என் ரூமுக்கு போகலாமா?” சக்தி மீராவைப் பார்த்து சிறிது கோபமாக பேசி விட்டு அங்கிருந்து செல்லப் போக,

அவனை அந்த இடத்தில் இருந்து நகர விடாமல் அவன் முன்னால் வந்து நின்று கொண்டவள், “நீ பூஜாவைக் காதலிக்கிற தானே சக்திண்ணா?” என்று கேட்க, அவளது கேள்வியில் சக்தியின் முகம் அதிர்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

“என்னடா இவ இப்படிக் கேட்குறான்னு நீ நினைக்கலாம். நான் பூஜாவையும், உன்னையும் முதன்முதலாக உன் ஆபிஸில் வைத்து பார்த்த போதே ஏதோ ஒரு விடயம் உங்க இரண்டு பேருக்கும் நடுவில் இருக்குன்னு எனக்குத் தெரியும். அது நூறு சதவீதம் உறுதியானது இன்னைக்கு தான். பூஜாவுக்கு ஒரு கஷ்டம்ன்னு வந்ததும் நீ எவ்வளவு துடிச்சுப் போனேன்னு நான் பார்த்தேன். இதற்கு மேலும் நீ என் கிட்ட அப்படி எதுவும் இல்லைன்னு மறுக்க முடியாது. உண்மையை சொல்லு சக்தி ண்ணா, உனக்கு பூஜாவை எப்போதிலிருந்து தெரியும்?” மீராவின் அந்தக் கேள்வியில் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன் சிறு தவிப்போடு அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“எனக்கு பூஜாவை ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்தே தெரியும் மீரா. உனக்கு ஒரு எக்ஸாம் எழுத நாம இரண்டு பேரும் திருச்சி போனோமே, அப்போதிருந்து தெரியும். பூஜாவை முதல் தடவை பார்த்ததுமே எனக்குள்ள ஒருவிதமான ஈர்ப்பு, அதற்கு அப்புறம் நாளாக நாளாக அவ என் வாழ்க்கையில் வந்தால் நல்லா இருக்கும்னு தோணிச்சு. அதற்கு அப்புறம் அவ இல்லாமல் என் வாழ்க்கை இல்லைன்னு தோணுச்சு. அந்த நேரம் என் கிட்ட சரியான ஒரு வேலை கிடையாது, நான் லைஃபில் எதுவும் சாதிக்கல, அப்படி இருக்கும் போது கல்யாணம் பற்றி எல்லாம் யோசிக்க முடியாதுன்னு தான் லண்டனிற்கு மேல் படிப்பிற்காக போக வந்த வாய்ப்பை நான் தவறவிடல. லைஃபில் கொஞ்சம் உறுதியான ஒரு நிலைமைக்கு வந்த பின்னாடி பூஜா கிட்டயும், அவ வீட்டிலும் பேசி என் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம்னு நான் நினைத்திருக்க, இங்கே நடந்தது என்னவோ வேறு.
சரி, பரவாயில்லை. எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்னு நினைத்து நான் ஊருக்கு திரும்பி வரத் தயாராகி நின்ற நேரம் தான் எதிர்பாராத விதமாக பூஜாவையும், விஷ்வாவையும் ஒரு கும்பல் கொலை செய்ய விரட்டிப் போவதைப் பார்த்தேன். ஏதோ ஒரு தைரியத்தில் பூஜாவைக் காப்பாற்ற நினைத்துப் போய் அவளைக் காப்பாற்றினேன், ஆனா விஷ்வாவைக் காப்பாற்ற முடியல. அதற்கு அப்புறம் பூஜாவுக்கு அந்த திருச்சியில் இருக்கவும் இடம் கிடைக்கல, அதனால தான் அவளுக்கு என் ஆபிஸில் வேலை கொடுத்து இங்கே ஒரு ஹாஸ்டலில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தேன். என்னோட வாழ்க்கையில் இனி பூஜா வர முடியுமா? இல்லையான்னு எனக்குத் தெரியாது, ஆனால் அவளை என் கண் முன்னால் எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் இல்லையா? எனக்கு அது போதும்” என்றவாறே சக்தி தன் தங்கையைப் பார்த்து புன்னகைக்க முயல, அவனது மனவலியை உணர்ந்து கொண்டது போல அவனது கையை ஆதரவாக தட்டிக் கொடுத்த மீரா அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

“சக்தி ண்ணா, நீ எதற்கும் கவலைப்படாதே ண்ணா. எல்லா விடயங்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நடக்குமாம், அதேமாதிரி இத்தனை வருடங்களுக்கு அப்புறம், அதுவும் இப்படியான ஒரு பிரச்சினைக்கு பிறகு அந்த‌ விதி பூஜாவை உன் வாழ்க்கையில் மறுபடியும் கொண்டு வந்து இருக்குன்னா அதற்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும் ண்ணா. அதோடு எனக்கு என்னவோ பூஜாவுக்கும் உன் மேல ஏதோ ஒரு பீலிங் இருக்கு” என்று தன் தோளில் சாய்ந்தவாறே கூறிய மீராவை தன்னை விட்டு விலக்கி நிறுத்தியவன்,

“எப்படி, எப்படி சொல்லுற மீரா?” சிறிது பதட்டத்துடன் அவளைப் பார்த்து வினவினான்.

“நூறு சதவீதம் என்னால் அப்படி உறுதியாக சொல்ல முடியலேன்னாலும் ஒரு எண்பது சதவீதம் சொல்ல முடியும். இன்னைக்கு பூஜா நம்ம வீட்டுக்கு வந்ததிலிருந்து கிளம்பி போகும் வரைக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு வேலை செய்ய உன் சம்மதத்தை தான் அதிகமாக எதிர்பார்த்தாங்க. அதை வைத்துப் பார்த்து தான் நான் இதை சொல்லுறேன்”

“அட நீ வேற! அவ ஏதோ நான் அவ எம்.டி என்கிற நினைப்பில் பர்மிஷன் கேட்டு இருப்பா. இதெல்லாம் ஒரு விஷயமா?”

“சரி, நீ சொல்லுற மாதிரியே இருக்கட்டும். இப்போ நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லு. தனக்கு ஒரு கஷ்டம் வரும் போது நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க கிட்ட தானே நாம நம்ம பீலிங்கை வெளிக்காட்டவோ, பகிர்ந்து கொள்ளவோ நினைப்போம், கரெக்டா?”

“ம்ம்ம்ம், ஆமா”

“அப்போ இன்னைக்கு பூஜா தன்னோட கவலையை யாரு கிட்ட பகிர்ந்துகிட்டா? உன் கிட்ட தானே? அதுவும் சாதாரணமாக இல்லை, உன் மேலே சாய்ந்து, உன்னை இறுக்கமாக பிடித்துக் கொண்டே தன்னுடைய கவலையை எல்லாம் உன் கிட்ட இடம் மாற்றிக் கொடுத்துட்டா. என்ன கரெக்டா?” என்று கேட்ட மீராவைப் பார்த்து அதிர்ச்சியான சக்தி,

“அது…அது உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்க, அவளோ அவர்கள் இருவரையும் தேடி வந்த நேரம் தான் பார்த்த விடயத்தையும், அதன் பின்னர் அவர்களைத் தொந்தரவு செய்ய கூடாது என்று அங்கிருந்து நகர்ந்து சென்றதையும் சிறு புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கூறியிருந்தாள்.

“அது…அது ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி ஆகிடுச்சு. அந்த நேரம் நான் மட்டும் தான் அவ பக்கத்தில் இருந்தேன், அதனால கூட அப்படி அவ நடந்து இருக்கலாம். அதை எல்லாம் இப்படி நீ வீணாக மாற்றி சொல்லாதே” சிறு கண்டிப்போடு மீராவைப் பார்த்து கூறி விட்டு சக்தி வேகமாக தன்னறைக்குள் வந்து அடைந்து கொள்ள,

அவனைப் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்ட மீரா, “போ ண்ணா, போ. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் என்று நானும் பார்க்கத் தானே போறேன். இப்போ நீ என்னை சமாளித்து இருக்கலாம், ஆனா நான் சொன்ன விடயங்களை எல்லாம் நீயே மறுபடியும் ஒரு தடவை யோசித்துப் பாரு. அப்போ உனக்கு எல்லாம் தெரியும்” என்று கூறியபடியே தன் முகத்தில் மாறாத புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

தன்னறைக்குள் வந்து தஞ்சம் அடைந்து கொண்ட சக்தி சிறிது நேரத்திற்கு முன்பு பூஜாவின் கண்ணீர் தடங்களால் நனைந்து போன தன் சட்டையை வருடிக் கொடுத்தபடியே அங்கே இருந்த ஆளுயுயரக் கண்ணாடி முன்னால் வந்து நின்று கொண்டான்.

“ஒரு வேளை மீரா சொல்வது போல பூஜாவுக்கும் என் மேல் ஏதாவது அபிப்பிராயம் வந்து இருக்குமா?” அன்றைய நாள் முழுவதும் தன் வீட்டில் பூஜா தன்னிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தபடியே தன்னறைப் பால்கனியில் வந்து நின்று கொண்டவன் அன்றைய நாள் தனக்கு கொடுத்த எல்லாவிதமான சந்தோஷமான தருணங்களையும் எண்ணியபடியே ஒருவிதமான பூரிப்பான மனநிலையுடன் நின்று கொண்டிருக்க, இதே சந்தோஷம் அவனின் இனி வரப்போகும் நாட்களிலும் நீடித்திருக்குமா? இல்லையா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…..

**********
ஐந்தாறு கண்டங்கள் நீ தாண்டி சென்றாலும்
அங்கேயும் உனை வந்து பெண் பார்ப்பேன்
செவ்வாயில் நீ சென்று வாழ்ந்தாலும்
நான் உந்தன் செவ்வாயில் ஓரத்தில் தேன் வார்ப்பேன்
என்னுயிரே… என்னுயிரே…
மெய்யாக நான் இங்கு பொய்யானேன்
என்னுயிரே… என்னுயிரே…
பொய்யல்ல நான் இங்கு நீயானேன்
சட்டென சட்டென இதயம்
பல சில்லென சில்லென உடையும்
அத்தனை சில்லிலும் உன் பிம்பமே…
**********

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!