இதயம் – 21

eiHJN6N67051-445ef996

இதயம் – 21

தன் அன்னை, தந்தையைப் பற்றி இத்தனை நாட்களாக மனதிற்குள் வெகுவாக ஏங்கித் தவித்துப் போயிருந்த பூஜா இன்று இத்தனை மாதங்கள் கழித்து அவர்கள் இருவரையும் தன் கண் முன்னால் பார்த்து விட்ட சந்தோஷத்தில் வார்த்தைகளை பரிமாற்றிக் கொள்ள முடியாமல் கண்கள் கலங்கி நிற்க, அவளது கண்களைத் துடைத்து விட்ட செல்வி, “பூஜா எப்படிடாம்மா இருக்க?” என்று கேட்க,

அவளோ, “இப்போ தான் என்னை உங்களுக்கு ஞாபகம் வந்ததாம்மா?” என்றவாறே அவரது தோளில் சாய்ந்து கொண்டாள்.

“செல்வி, வீட்டுக்கு வந்த பொண்ணை வாசலிலேயை வைத்து பேசாமல் முதலில் அவளை உள்ளே அழைச்சுட்டு போ” என்றவாறே அவளது தலையை வருடிக் கொடுத்த பரசுராமன்,

“சக்தி எங்கே?” சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டபடி அங்கிருந்து அவனைத் தேடிச் செல்லப் போக,

சட்டென்று அவளது கையை எட்டிப் பிடித்துக் கொண்ட பூஜா, “நம்ம குடும்பத்துக்கு நடுவில் அவங்க எதற்குப்பா? வாங்க உள்ளே போகலாம்” என்று விட்டு அவரது கையை விடாமல் உள்ளே அழைத்துக் கொண்டு செல்ல, பரசுராமனும், செல்வியும் ஒருவரை ஒருவர் கவலையோடு திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.

தன் அன்னையையும், தந்தையும் அருகருகே அமரச் செய்து விட்டு அவர்கள் இருவரது கால்களையும் கட்டிக் கொண்ட படி கீழே தரையில் அமர்ந்து கொண்ட பூஜா தன் கண்களை மூடி அமர்ந்திருக்க, அவளது தலையை மெல்ல வருடிக் கொடுத்த செல்வி, “பூஜா நீ நல்லா இருக்க தானேடா” என்று கேட்க,

தன் கண்களைத் திறவாமலேயே மறுப்பாக தலையசைத்தவள், “நான் நல்லா இல்லைம்மா, நான் நல்லா இல்லை. எனக்கு என் வாழ்க்கையில் கொஞ்சம் போல ஒட்டியிருந்த சந்தோஷத்தையும் அந்த சக்தி பறிச்சுட்டாங்க. எனக்குன்னு இருந்த அந்த சந்தோஷமும் போன பிறகு நான் எப்படிம்மா நல்லா இருக்க முடியும்?” என்றவாறே அவர்களை விட்டு விலகி அமர்ந்து கொண்டாள்.

“ஏன் பூஜா இப்படி எல்லாம் பேசுற? அந்த தம்பியால் தானே இன்னைக்கு நாம எல்லோரும் ஒன்றாக இருக்கோம்?” பூஜா சொன்ன விடயங்களைக் கேட்டு கவலை கொண்ட செல்வி அவளது முகத்தை தன் புறமாக திருப்ப,

சிறு சலிப்புடன் அவரது கையை விலக்கி விட்டவள், “இத்தனை நாட்கள் கழித்து நான் உங்களை பார்த்து பேசி இருக்கேன், நீங்க என்னைப் பற்றி பேசாமல் அந்த சக்தியைப் பற்றி பேசிட்டு இருக்கீங்க. சக்தியைப் பற்றி எதுவும் பேச வேண்டாம்மா. சரி நீங்க சொல்லுங்க, நீங்க எப்படி இருக்கீங்க? நீங்க இரண்டு பேரும் எப்போ இங்கே வந்தீங்க? அப்புறம் அப்பா உங்களுக்கு என் மேலே இருந்த கோபம் போயிடுச்சா?” என்றவாறே பூஜா பரசுராமனைத் திரும்பிப் பார்க்க,

அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவர், “இவ்வளவு நேரம் உன் மேல் எனக்கு எந்தவொரு கோபமும் இருக்கல பூஜா, ஆனா இப்போ நீ கடைசியாக சொன்ன விடயத்தைக் கேட்டதும் தான் எனக்கு உன் மேல் முன்னை விட அதிகமாக கோபம் வருது. ஏன் பூஜா நீ மறுபடியும் மறுபடியும் தப்பாகவே முடிவுகளை எடுக்குற? வாழ்க்கையில் ஒரு தடவை தப்பான முடிவை எடுத்து கஷ்டப்பட்ட பிறகும் உனக்கு பக்குவம் வரவில்லையா? இல்லை, எல்லாம் தெரிந்தும் வீம்புக்காக இப்படி இருக்கியா?” என்று விட்டு கோபமாக எழுந்து நின்று கொள்ள, அவளோ அவரைக் குழப்பமாக பார்த்தபடி எழுந்து நின்று கொண்டாள்.

“என்னாச்சுப்பா? நான் என்ன தப்பான முடிவு எடுத்தேன்?”

“ஏன் நான் எதைப்பற்றி பேசுறேன்னு உனக்குத் தெரியாதா?”

“ஐயோ அப்பா! சத்தியமாக நீங்க எதைப்பற்றி பேசுறீங்கன்னு எனக்குப் புரியல”

“பூஜா நீ…”

“என்னங்க கொஞ்சம் அமைதியாக இருங்க. இத்தனை நாள் கழித்து வீட்டுக்கு வந்த பொண்ணு கிட்ட இப்படித்தான் பேசுவீங்களா?” பூஜாவைப் பார்த்து மேலும் கோபத்துடன் பேச ஆரம்பித்த தன் கணவரின் தோளில் கை வைத்து அவரை சிறிது சமாதானப்படுத்திய செல்வி அவரையும், பூஜாவையும் அமரச் செய்து விட்டு அவர்கள் இருவருக்கும் முன்னால் இன்னுமொரு நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்து கொண்டார்.

“பூஜா உன் மேல் தப்பு சொல்லணும்னு நினைத்து அப்பா இப்படி எல்லாம் பேசல. ஏதோ ஒரு அவசரத்தில் அப்படி கோபப்பட்டுட்டாங்க, அதோடு நீ பேசுவதை வைத்துப் பார்த்தால் சக்தி தம்பி நாங்க எப்படி இங்கே வந்தோம் என்கிற விடயத்தை இன்னும் உன் கிட்ட சொல்லல போல இருக்கு. நானும், உன் அப்பாவும் இன்னைக்கு உன் முன்னாடி இப்படி எந்த ஆபத்தும் இல்லாமல் உயிரோடு இருக்க காரணமே சக்தி தான்”

“என்ன? சக்தியா?” தான் அன்னை சொன்ன விடயத்தை நம்ப முடியாதவளாக பூஜா அதிர்ச்சியாக அவரைப் பார்க்க,

அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவர், “ஆமா நீ அன்னைக்கு கடைசியாக எங்களை வந்து பார்த்து விட்டு போன பிறகு அந்த ரவுடிங்க நம்ம வீட்டுக்கு வந்து இருந்தாங்க. நீ எங்கே இருக்கேன்னு கேட்டு என்னையும், அப்பாவையும் ரொம்ப தொந்தரவு பண்ணாங்க” என்று விட்டு அன்றைய நாளின் நினைவுகளின் தாக்கத்தில் தன் கண்களை மூடிக் கொள்ள, பூஜா அவரது கையை ஆதரவாக அழுத்திக் கொடுத்தாள்.

“ஏன் செல்வி நிறுத்திட்ட? முழுமையாக சொல்லு. அந்த ரவுடிங்க என்ன எல்லாம் பண்ணாங்கன்னு சொல்லு” பரசுராமன் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டவராக தன் மனைவியைப் பார்த்துக் கூற, அவரையும் தன் அன்னையையும் திரும்பிப் பார்த்தவள், “அம்மா அவங்க உங்களை என்னம்மா பண்ணாங்க? சொல்லுங்க ம்மா, என்னம்மா பண்ணாங்க?” பதட்டத்துடன் அவரது தோளைப் பற்றி வினவ,

தன் கண்களை துடைத்து விட்டுக் கொண்டவர், “என்னையும், உங்க அப்பாவையும் அடிச்சாங்க” என்று கூறவும், அவளோ அதிர்ச்சியில் தன் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைக் கூட அறியாதவளாக அமர்ந்திருந்தாள்.

“உங்களை…உங்களை அடிச்சாங்களா? இது..இது எல்லாவற்றுக்கும் நான் தானே காரணம்? சின்ன வயதிலிருந்து எனக்கு கூட யாரையும் அடிக்க நீங்க விட்டது இல்லை, அப்படி இருக்கும் போது உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வர நான் தானே காரணம். எல்லாத் தப்பும் என்னோடது தான். எல்லாத் தப்பும் என்னோடது தான்” பூஜா தன் தலையில் கை வைத்துக் கொண்டு அழ ஆரம்பிக்க,

அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்ட பரசுராமன், “அதெல்லாம் நடந்து முடிந்த விடயங்கள் பூஜா. நீ அடிக்கடி இப்படி எல்லாம் அழக்கூடாது ம்மா. நீ அழுதால் என்னால் தாங்க முடியாது, அப்புறம் எனக்கும் அழுகை வந்துடும்” என்று கூற,

அவசர அவசரமாக தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள், “இல்லை ப்பா, நான் அழல பாருங்க” என்று விட்டு,

“சக்தி எப்போ அங்கே மறுபடியும் வந்தாங்க?” அவரைப் பார்த்து கேள்வியாக நோக்கினாள்.

“அன்னைக்கு ராத்திரி மறுபடியும் சக்தி தம்பி வந்தாங்க. எங்களுக்கு உண்மையாகவே நீ இருக்கும் இடம் தெரியாதுன்னு அவங்களுக்கு புரிந்ததால் என்னவோ எங்க இரண்டு பேரையும் அப்படியே விட்டுவிட்டு அவங்க போயிட்டாங்க. அக்கம்பக்கத்தில் இருந்த யாரும் உதவிக்கு வரல, நானே மெல்ல எழும்பி உன் அம்மாவையும் அழைச்சுட்டு ஹாஸ்பிடல் போகலாம்னு வீட்டில் இருந்து வெளியே வரும் போது சக்தி வந்தாங்க. நாங்க இருந்த நிலைமையைப் பார்த்துட்டு உடனே எங்களை ஹாஸ்பிடல் கூட்டிப் போய் மருந்து வாங்கி கொடுத்து அவங்க பிரண்ட்ஸ் வீட்டில் தங்க வைத்தாங்க. அதற்கு அப்புறம் மறுபடியும் அந்த ரவுடிங்க தேடி வரலாம்னு சொல்லி அவங்க பிரண்ட்ஸ் மூலமாக என்னையும், உங்க அம்மாவையும் இங்கே அழைச்சுட்டு வர வைத்தாங்க. அதற்கு அப்புறம் இந்த இடத்தில் எங்க இரண்டு பேரையும் தங்க வைத்து ஒவ்வொரு நாளும் சொந்த பையன் போல எங்களை அந்தளவிற்கு அன்பாக கவனிச்சுட்டு வந்தாங்க. இன்னும் சொல்லப்போனால் அந்த தம்பியை இந்த குடும்பத்தில் ஒருத்தராகத் தான் நாங்க பார்த்தோம்.
ஒவ்வொரு நாளும் உன்னைப் பற்றி எல்லா விடயங்களையும் எங்க கிட்ட வந்து சொல்லுவாங்க. நீ அந்த தம்பியோட கம்பெனியில் தான் வேலை செய்யுற, அவங்க ஆபிஸிற்கு பக்கத்தில் இருக்கும் லேடிஸ் ஹாஸ்டலில் தான் நீ தங்கி இருக்கன்னு எல்லா விபரங்களும் அந்த தம்பி வந்து சொல்லும். ஒரு வாரத்திற்கு முன்னாடி இங்கே வந்து இருந்த போது கூட இன்னும் கொஞ்ச நாளில் உன்னை இங்கே கூட்டிட்டு வர்றேன்னும் சொல்லி இருந்தாங்க. அதற்கு அப்புறம் கொஞ்ச நாள் சக்தி கிட்ட இருந்து எந்தவொரு தகவலும் இல்லை. அப்புறம் நேற்று நைட் தான் எனக்கு கால் பண்ணி உனக்கும், அவருக்கும் திடீர்னு கல்யாணம் ஆகிடுச்சு, நீ இப்போ அவங்க வீட்டில் தான் இருக்க, நாளைக்கு நேரில் வந்து நடந்த விடயங்களைப் பற்றி பேசுறேன்னு சொல்லி இருந்திச்சு அந்த தம்பி. இப்போ சொல்லு அந்த தம்பி எங்களுக்கும், உனக்கும் கெடுதல் பண்ணணும்னு நினைத்து இருந்தால் இவ்வளவு தூரம் கஷ்டப்படணுமா? சொல்லும்மா பூஜா” பரசுராமன் நடந்த விடயங்களை எல்லாம் பூஜாவிற்கு தெளிவுபடுத்தி விட்டு அவளது பதிலுக்காக காத்திருக்க, அவளோ அவர் சொன்ன விடயங்களை எல்லாம் தனக்குள் மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

தன் உயிருக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று எந்தவொரு பிரச்சினையைப் பற்றியும் சிந்திக்காமல் தன்னுடைய அன்னை, தந்தையின் உயிரைக் காப்பாற்றி இன்று அவர்களை பழைய படி தன்னோடு சுமுகமாக பேச செய்து தனது வாழ்க்கையையே தன்னிடம் மீண்டும் கொண்டு வந்தவனைப் பற்றி தவறாக நினைத்து இருந்தோமே என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவள் அவனை உடனேயே பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவளாக தன் அன்னை, தந்தையின் அழைப்பையும் பொருட்படுத்தாமல் அவனைத் தேடி ஓடி வந்தவள் அவனைப் பார்த்த அடுத்த கணமே சிறிதும் தாமதிக்காமல் அவனைத் தாவி அணைத்திருந்தாள்.

தனக்காக அவன் இதுநாள் வரை செய்த எல்லா விடயங்களையும் நினைத்துப் பார்த்தபடி பூஜா தன்னை மறந்து நிற்க, மறுபுறம் சக்தி அவளது செய்கையில் திகைத்துப்போய் நின்றான்.

கடந்த இரண்டு நாட்களாக பூஜா தன் மேல் அளவில்லாத கோபத்தில் இருந்ததைப் பார்த்து மனதளவில் வெகுவாக கவலை கொண்டிருந்தவன் இப்போது அவள் தன்னை அணைத்துக் கொண்டு நிற்கும் நிலையைப் பார்த்து சந்தோஷம் கொள்வதா? இல்லை மறுபடியும் அவள் கோபம் கொண்டு விடுவதற்குள் அவளிடமிருந்து விலகி நிற்பதா? என்று தெரியாமல் தன் இரு கைகளையும் அவளைத் தொடாத வண்ணம் விலக்கியே வைத்திருந்தான்.

வெகு நேரமாக பூஜாவிடமிருந்து எந்தவொரு சத்தமும் இல்லாமல் இருக்க, “பூஜா ஆர் யூ ஓகே?” வார்த்தைகளுக்கு வலித்து விடக்கூடுமோ என்பது போல சக்தி மென்மையாக அவளைப் பார்த்து வினவ, அவனது குரல் கேட்டு மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் தான் அவனுடன் நின்று கொண்டிருந்த நிலையைப் பார்த்து விட்டு சட்டென்று அவனிடமிருந்து விலகி நின்று கொண்டாள்.

‘ஐயோ பூஜா, இப்படி பண்ணிட்டியே. உனக்கு எதையுமே யோசித்து பண்ணத் தெரியாதா? ஓவர் சந்தோஷத்தில் உன்னையே மறந்துட்டியே’ சிறு கண்டிப்புடன் தனது தலையில் தட்டிக் கொண்டவள் சக்தியை நிமிர்ந்து பார்க்க, அவனும் அதே சமயம் அவளைத் தான் பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்னாச்சு பூஜா? அம்மா, அப்பா எங்கே?” அவனது கேள்வியில் தன்னை சிறிது நிதானப்படுத்திக் கொண்டவள்,

“அது…அது…அவங்க உள்ளே… நான் இங்க உங்களை…நீங்க…அவங்க” என்று தடுமாற,

“பூஜா ரிலாக்ஸ் ம்மா. எதற்கு இவ்வளவு பதட்டம்?” என்று வினவ, தன் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டுக் கொண்டவள் மீண்டும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

பூஜாவின் பார்வையில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பது போல சக்திக்கு தென்படவே, அவளைப் பார்த்து கேள்வியாக தன் புருவம் உயர்த்தியவன், “என்னாச்சு பூஜா? எப்போதும் விடாமல் பேசிட்டே இருப்ப, இப்போ என்னடான்னா ரொம்ப அமைதியாக இருக்க. ஏதாவது பேய், பிசாசு பிடிச்சுடுச்சா என்ன?” என்று கேட்க,

அவனை முறைத்துப் பார்த்தவள், “இன்னும் எனக்குத் தெரியாமல் என்ன என்ன எல்லாம் செய்து இருக்கீங்க சக்தி?” என்று கேட்க, இப்போது அமைதியாக நிற்பது சக்தியின் முறையாகிப் போனது.

“உனக்குத் தெரியாமலா? நீ…நீ என்ன கேட்குற பூஜா? எனக்குப் புரியல”

“என் அம்மா, அப்பாவுக்கு ஒரு பிரச்சனைன்னு தெரிந்ததும் அவங்களை இங்கே அழைச்சுட்டு வந்து அவங்களுக்கு பாதுகாப்பாக இருக்க ஒரு இடம் அமைத்துக் கொடுத்து, ஒவ்வொரு நாளும் அவங்களை உங்க அம்மா, அப்பா மாதிரி அவ்வளவு பாசத்தோடு பார்த்துட்டு வந்து இருக்கீங்க. அந்த ரவுடிங்க கிட்ட இருந்து என்னை மட்டும் இல்லாமல் என் அம்மா, அப்பாவையும் ஒவ்வொரு நாளும் பாதுகாத்துட்டு வந்து இருக்கீங்க. நீங்க ஏன் என் கிட்ட இந்த விடயத்தைப் பற்றி முன்னாடியே என் கிட்ட சொல்லல?” என்று கேட்க,

அவனோ, “எதைப்பற்றி?” என்றவாறே மீண்டும் அவளைப் பார்த்து கேள்வியாக நோக்கினான்.

“நம்ம திருச்சியில் இருந்து வந்த இரண்டாவது நாளே அம்மாவையும், அப்பாவையும் நீங்க இங்கேயே அழைச்சுட்டு வந்து இருக்கீங்க, ஆனா என் கிட்ட நீங்க இதைப்பற்றி சொல்லவே இல்லையே. ஏன் சக்தி? அவங்க இங்கே நான் இருக்கும் ஊரில் தான் இருக்காங்கன்னு தெரிந்து இருந்தால் ஒவ்வொரு நாளும் வந்து நான் அவங்களை பார்த்து பேசி சமாதானப்படுத்தி இருப்பேனே”

“அதற்காகத்தான் உன் கிட்ட சொல்லல”

“என்ன?” சக்தி சொன்ன பதிலைக் கேட்டு பூஜா குழப்பத்தோடு அவனைப் பார்க்க,

“நீ அடிக்கடி இங்கே வந்து போவதை யாரும் பார்த்து நாளைக்கு உன் அம்மா, அப்பா உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்திடுச்சுன்னா. அதுதான் நான் உன் கிட்ட சொல்லல. கொஞ்ச நாள் போனதும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் போயிடுச்சுன்னு தெளிவாகத் தெரிந்த பிறகு உன் அம்மா, அப்பாவோட கோபம் குறைந்த பிறகு உன் கிட்ட சொல்லலாம்னு தான் காத்துட்டு இருந்தேன், ஆனா சூழ்நிலை எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிடுச்சு. இப்போ கூட அந்த ரவுடிங்க நம்மைப் பின் தொடர்ந்து வந்து இருக்கலாம். யாருக்கு தெரியும்?” என்று விட்டு சக்தி சுற்றிலும் தன் பார்வையை சுழல விட, பூஜா சிறிது அச்சத்தோடு அவனது கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

“பூஜா ரிலாக்ஸ். நான் ஒரு பேச்சுக்கு தான் அப்படி சொன்னேன். ஒருவேளை இங்கே நாம மட்டும் தான் இருக்கலாம்”

“இல்லை சக்தி, எனக்கு என்னவோ பயமாக இருக்கு. அம்மாவையும், அப்பாவையும் இங்கே விட்டுட்டு போக வேண்டாமே”

“நீ சொன்னாலும், சொல்லலேன்னாலும் நான் அவங்களை நம்ம கூட அழைச்சுட்டு போகத்தான் வந்து இருக்கேன்”

“நிஜமாவா சக்தி?” சிறு குழந்தை போல் கண்களை விரித்து ஆச்சரியமாக கேட்ட தன் மனைவியைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன்,

“அவங்க நம்ம வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் எங்க தாத்தவோட வீட்டில் தங்க எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டேன். நம்ம வீட்டில் நம்ம கூட வந்து இருக்க அவங்களுக்கு அவ்வளவிற்கு இஷ்டம் இல்லை, அதனால் தான் இந்த ஏற்பாடு, ஷோ இனிமேல் அவங்க எப்போதும் உன் பக்கத்தில் தான் இருப்பாங்க, அதுவும் என் பாதுகாப்போடு” என்று கூற, அவளோ சந்தோஷம் தாளாமல் துள்ளிக்குதித்தபடி மீண்டும் வீட்டை நோக்கி ஓடிச் செல்ல, சக்தி தன் முகத்தில் புன்னகை ததும்ப அவள் சென்ற வழியையே பார்த்துக் கொண்டு நின்றான்.

‘உன்னோட முகத்தில் வர்ற இந்த சந்தோஷத்திற்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் பூஜா’ தன் மனதிற்குள் நிறைந்து போய் இருக்கும் பூஜாவின் நினைவுகளால் தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொண்டவன் சிறிது நேரத்தில் பரசுராமன், பூஜா மற்றும் செல்வியோடு அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்று அவர்கள் தங்குவதற்கு ஏதுவாக எல்லா ஏற்பாடுகளையும் அவர்களுக்கென ஒழுங்குபடுத்தப்பட்ட வீட்டில் செய்து கொடுத்தான்.

காலையில் இருந்து வெளியே பல்வேறு வேலைகளில் ஓடியாடித் திரிந்ததனால் என்னவோ வெகுவாக களைத்துப் போயிருந்த சக்தி குளித்து உடை மாற்றி விட்டு அப்படியே கட்டிலில் விழுந்து உறங்கிப் போய் இருக்க, அவனை சாப்பிட அழைத்துச் செல்ல வந்த பூஜா அவனது களைத்துப் போன தோற்றத்தைப் பார்த்து விட்டு அவனை தொந்தரவு செய்யாமல் அவனருகில் சென்று நின்று கொண்டாள்.

பூஜா இதுநாள் வரை அவனை இப்படி எந்தவொரு தடங்கலும் இல்லாமல் நேருக்கு நேராகப் பார்த்தது இல்லை.

இன்று தான் முதல் முறையாக அவனை இந்தளவிற்கு நெருக்கத்தில் வெகுநேரம் பார்க்க அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

நேற்றும், இன்றும் சக்தியின் சிறு சிறு அக்கறையான செயற்பாடுகளைப் பார்த்து அவள் மனதிற்குள் அவன் மீதிருந்த கோபம் சிறிது குறைந்து தான் இருந்தது.

இப்போதும் வெகு நாட்களாக பிரிந்திருந்த தன் அன்னை, தந்தையைப் பார்த்த சந்தோஷத்தில் என்னவோ அவன் மேல் அவளுக்கு கோபம் எதுவுமே இல்லை என்பது போலத்தான் இருந்தது.

காலையில் இருந்து வெகு நேரமாக அங்குமிங்கும் ஓடியாடி வேலை பார்த்ததில் அடித்துப் போட்டாற் போல தூங்கிக் கொண்டிருந்த சக்தியையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றவள் அவனை நேராக தூங்க வைக்க எண்ணி அவனது தலையை தன் ஒரு கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டு மற்ற கையினால் அவனது உடலை நேராக்கி விட்டு விட்டு அவனது தலையை மெல்ல வருடிக் கொடுத்தாள்.

குளித்து விட்டு வந்திருந்ததனால் சிறிது நீர்த்துளிகள் அவனது கேசத்தில் படிந்திருக்க, அருகில் இருந்த டவலால் அவனது தலையை மெல்ல துவட்டி விட்டவள் அவனது நெற்றியிலும், முகத்திலும் தெறித்திருந்த நீர்த்துளிகளைத் துவட்டி விடப் போக, அதற்குள் சக்தி தன் தூக்கம் கலைந்து விழித்திருந்தான்.

சக்தி தூக்கத்தில் இருந்து எழுந்து விடுவான் என்று எதிர்பாராத பூஜா தன் கையிலிருந்த டவலை அப்படியே அவனது முகத்தில் போட்டு விட்டு சட்டென்று அவனை விட்டு விலகி நிற்க, தன் முகத்தில் கிடந்த டவலை விலக்கி விட்டபடியே சக்தியும் முழுமையாக தன் தூக்கம் கலைந்து எழுந்திருந்தான்.

‘அச்சச்சோ! இப்போ இவங்க கேள்வியாக கேட்டுக் கொல்லப் போறாங்க. நான் எப்படி சமாளிப்பேன்? எனக்குத் தான் இவங்க மேல ரொம்ப கோபம் ஆச்சே, அப்புறம் எதற்கு இப்படி எல்லாம் பண்ணுறேன்? அடக்கடவுளே! எனக்கு ஒண்ணுமே புரியல’ சக்தியை நேர் கொண்டு பார்க்கத் துணிவின்றி தன் கையை பிரிப்பதும், கோர்ப்பதுமாக நின்று கொண்டிருந்தவளைப் பார்த்து தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொண்டவன், “பூஜா, நீ எதற்காக இங்கே வந்தேன்னு எனக்கு நல்லாத் தெரியும். இதற்கு மேலேயும் நீ என் கிட்ட எதையும் மறைக்க முடியாது” என்று கூற, அவனது கூற்றில் அதிர்ச்சியாக அவனைத் திரும்பிப் பார்த்தவள் திருதிருவென விழித்துக் கொண்டு நின்றாள்.

“என்ன…என்ன சொல்லுறீங்க நீங்க? நான் இங்கே சும்மா…கீழே சாப்பாடு… உங்களுக்கு தூக்கம்”

“ரிலாக்ஸ், ரிலாக்ஸ். இப்போ என்ன ஆச்சு? நீ எனக்குத் தெரியாமல் என்ன பண்ணேன்னு நினைச்சு இங்கே வந்தாயோ அது எனக்குத் தெரிந்து போச்சு”

“அது…அது… நான்…” தான் அவனை அவனறியாமல் வெகு நேரமாக பார்த்துக் கொண்டு இருந்ததை அவன் கண்டு பிடித்து விட்டானோ என்கிற பதட்டத்துடன் பூஜாவிற்கு வார்த்தைகள் தடுமாற,

அவளை நோக்கி இரண்டு அடியெடுத்து வைத்து நின்றவன், “நீ இந்த டவலை எடுத்துப் போகத் தானே வந்த?” என்று வினவ, அவனது கேள்வியில் குழப்பமாக அவனைப் பார்த்தவள் அவனது இதழோரம் தவழ்ந்த சிரிப்பைப் பார்த்து விட்டு அவனுக்கு எல்லாம் தெரிந்தும் தன்னிடம் அதைப்பற்றி கேட்காமல் தவிர்க்கிறான் என்பதைப் புரிந்தவளாக அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“என்னாச்சு பூஜா மேடம்?” பூஜாவின் அமைதியான தோற்றத்தைப் பார்த்து அவளின் முகத்தின் முன்னால் சொடக்கிட்டவன் என்ன என்பது போல நோக்க,

அவளோ, “உங்களுக்கு என்னால் மேலும் மேலும் நிறைய சிரமங்கள் தான் வருது, அப்படியிருந்தும் ஏன் இப்படி எல்லாம் பண்ணுறீங்க சக்தி?” தன் கண்கள் கலங்க அவனைப் பார்த்து கேள்வியாக நோக்கினாள்.

“சிரமமா? நான் அப்படி சொன்னேனா?” அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் விழித்துக் கொண்டு நிற்க,

அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன், “இதோ பாரு பூஜா. நீ எப்போ, எப்படிக் கேட்டாலும் இதற்கு எல்லாம் ஒரே ஒரு பதில் தான்” என்று விட்டு அவளைப் பார்க்க, அதேநேரம் அவளும் அவனது முகத்தையே தான் ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவளது முகத்தில் தெரிந்த ஆவலைப் பார்த்ததும் காதல் கொண்ட சக்தியின் மனம் அவளை நெருங்கிச் செல்ல அவனைத் தூண்ட, அவனது கண்களோ அவளது கழுத்தில் கிடந்த தாலியில் நிலைகுத்தி நின்றது.

‘அவசரப்பட்டு அவளைக் காயப்படுத்தி விடாதே சக்தி’ அவனது மூளை நிதர்சனத்தை அவனுக்கு இடித்துரைக்க தன் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன்,

“நான் இதை எல்லாம் பண்ண ஒரே ஒரு காரணம் நான் உன்னை என்னை விடவும் அதிகமாக நேசிக்கிறேன். உன் முகத்தில் வர்ற அந்த ஒரு சின்ன சிரிப்புக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். அவ்வளவுதான்” என்று விட்டு அங்கிருந்து வெளியேறிச் சென்று விட, பூஜாவோ அவன் சென்ற வழியையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்……
**********
சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்
மெட்டிக்கொண்டு மெட்டிக்கொண்டு தவிக்கும் ஓர் இதயம்
காதல் என்னும் கைக்குழந்தை கதறி அழுகிறதே
மறுநாள் நெனச்சு உள்ளம் இப்போ போராடுதே
**********

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!