இந்திரனின் சுந்தரியே
இந்திரனின் சுந்தரியே
🌷🌷17❣❣
சூர்யாவின் கேள்வியில் ராணியும், இந்திரனும், தாசும் திகைத்துப் பார்க்க, அவர்களது பதிலை எதிர்ப்பார்த்தவாறு அவரும் நின்றுக் கொண்டிருந்தார்..
சில நிமிடங்கள் அமைதியுடனும் திகைப்புடனும் கழிய, “என்ன அமைதியா இருக்கீங்க? நான் நிஜமா தான் கேட்கறேன்.. சுந்தரியை பார்த்துக்க அங்க போறீங்களா?” சூர்யா கேட்கவும், இந்திரன் புரியாமல் பார்த்தான்.
“என்ன சார் விளையாடறீங்களா? எப்படி சார் அங்க போக முடியும்? அங்க போறது எல்லாம் சரி படாது..” இந்திரன் உடனே மறுத்தான்.
“அப்போ உங்களுக்கு சுந்தரியைப் பத்தி கவலையே இல்லையா? அவ எப்படி போனாலும் பரவால்லையா? உங்களுக்கும் அவளுக்கும் சுத்தமா டச் விடாம இருக்குமேன்னு நான் பார்க்கறேன்.. நீங்க சொல்றதைப் பார்த்தா.. நீங்க நினைக்கிறது நடக்கற வரை சுந்தரியை கண்டுக்காம தனியா விடப் போறீங்களா? அவங்களை அதுக்குத் தான் கல்யாணம் செய்தீங்களா?” சூர்யா கேட்கவும்,
“இல்ல சார்.. அப்படி இல்ல.. அவளை அனுப்பிட்டு நாங்க மட்டும் நிம்மதியாவா இருக்கோம்? அது அப்படி இல்ல சார்.. அவளை அனுப்பிட்டு பின்னாலையே நாங்க போய் நின்னா அது வேற மாதிரி ஆகும்.. அது சரி வராது சார்.. எனக்கும் அவளைப் பார்க்கணும் போல தான் இருக்கு.. ஆனா.. விடுங்க.. வேற வழியை யோசிக்கலாம்..” இந்திரன் மறுக்க, சூர்யா உதட்டைப் பிதுக்கினார்..
“உங்களுக்கு இப்போ அது தான் பிரச்சனையா? அப்படி எல்லாம் யாரும் அங்க நினைக்க மாட்டாங்க இந்திரன்..” அவனை சமாதானப்படுத்த,
“இல்ல.. இது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. அப்பறம் எங்க காதல் மேலேயே டவுட் வர நிறைய சான்ஸ் இருக்கு.. நான் பணத்துக்காக தான் அவளை கல்யாணம் பண்ணினேன்கற மாதிரி ஆகிடும்.. அது தான் சொல்றேன்.. இது சரி வராது..” இந்திரன் காரணத்தைக் கூற, சூர்யா அவனை கூர்ந்து நோக்கினார்.
“இந்திரன் அது அப்படி இல்ல.. உங்க அக்கா சொன்னது போல சுந்தரியை பார்த்துக்கிட்ட திருப்தி உங்களுக்கு கிடைக்கும்.. சுந்தரிக்கும் உங்க கூட ஏதோ ஒரு வகையில தொடர்பு இருக்குன்னு கொஞ்சம் திருப்தியா இருக்கும்.. எல்லாம் கொஞ்ச நாளைக்கு.. நீங்க நினைச்சது சாதிக்கிற வரை..” சூர்யா மெல்ல இந்திரனுக்கு எடுத்துச் சொல்ல, இந்திரன் ராணியைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினான்..
அவனுக்கு அவர்கள் வீட்டில் ராணிக்கு எப்படி மரியாதை கிடைக்கும் என்ற தயக்கம் ஏற்பட.. அதை விட தங்களது பிரிவுக்கு அவர்களையும் பலிகடா ஆக்க வேண்டாம் என்று நினைத்தவன், “எப்படி சார்? அக்கா எப்படி அங்க போய் அவளைப் பார்த்துக்கறது? அவங்க அம்மா அங்க இருக்காங்களே.. அனுமதிப்பாங்களா? அதும் தவிர எங்க அக்கா எனக்காக ஏன் மாமாவை விட்டுட்டு போகணும்.. அவங்களுக்கு அங்க என்ன மரியாதை இருக்கும்?” ஆவலும் ஏக்கமுமாக இந்திரன் கேட்க, சூர்யா ஆமோதிப்பாக யோசனையுடன் தலையசைத்தார்.
“அங்க போகலாம்.. ஆனா.. அவங்களோட உறவா இல்ல.. அது.. அது வந்து..” அதற்கு மேல் சொல்ல முடியாமல் அவர் தயங்க, மற்ற மூவரும் குழப்பத்துடன் பார்த்தனர்.
“சொல்லுங்க சார்.. வேற எப்படி போக முடியும் அவங்க வீட்டுக்குள்ள?” ராணி கேட்க,
“வேலை செய்யறவங்களா” சூர்யாவின் பதிலில் மூவருமே திகைத்து போயினர்..
முதலில் சுதாரித்த இந்திரன், “வேண்டாம் சார்.. வேண்டவே வேண்டாம்.. எங்க அக்காவை எல்லாம் அப்படி அனுப்ப முடியாது.. அவ பேர் மட்டும் இல்ல.. எங்களுக்கு அவளும் ராணி தான்.. நீங்க வேணா உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல ஆளா அதுக்கு அனுப்புங்க.. அவங்க மூலமா நம்ம சுந்தரியை பார்த்துக்கலாம்.. இது எல்லாம் சரிபடாது..” திட்டவட்டமாக இந்திரன் சொல்ல, ராணி அவனது அன்பில் நெகிழ்ந்து போனாள்.
அவர்களது முகத்தைப் பார்த்தவர், “நான் இப்படி சொல்றேனேன்னு நினைக்காதீங்க.. இங்க இருந்து போன சுந்தரி ரொம்ப உடைஞ்சு போயிருக்காங்க.. வீட்டுக்கு போனதுல இருந்து ரொம்ப அழுகையாம்.. எப்பவுமே முகத்துல சிரிப்போட சுத்தர பொண்ணு அப்படி இருக்கவும் அவங்க தாத்தாவுக்கு மனசு தாங்கல.. தூங்கனும்ன்னு போன பொண்ணு முடியாம தூக்க மாத்திரை வேணும்னு வாங்கி சாப்பிட்டு தூங்கி இருக்காங்க.. அடுத்த நாளும் மாத்திரை வேணும்னு கேட்டாங்க போல.. ரூம் உள்ளே அடைஞ்சு கிடக்காங்க போல.. இப்படியே போனா அந்தப் பொண்ணோட நிலையை யோசிச்சீங்களா? உங்களுக்கும் அவங்க மேல அக்கறை இருக்கு தானே..” அவர் சொல்லச் சொல்ல, இந்திரனின் கண்களில் கண்ணீர் வழிந்தது..
‘சுந்தரி..’ அவனது மனது அவளது அருகாமைக்கு ஏங்க, அவனது முகத்தைப் பார்த்த சூர்யா,
“அந்தப் பொண்ணு அவ்வளவு கஷ்டப்படறது உங்களுக்கு பொறுக்குமா? அங்க பெரியவருக்கும் அவங்களைப் பார்க்கும்போது ரொம்ப கவலையா இருக்காம்.. அதனால சுந்தரியை பார்த்துக்க ஒருத்தர் வேணும்ன்னு சொன்னாங்க.. அதே போலவே சுந்தரிக்குன்னு பாடிகார்ட் போல டிரைவர் வேணும்.. ஏன்னா சுந்தரியோட அம்மாவை நம்ப முடியாதுன்னு பெரியவர் ஃபீல் பண்றார்..
இப்போ அவங்க வீட்ல இருக்கற டிரைவர்ல ரெண்டு பேர் அவங்க அப்பாயின்ட் பண்ணினவங்க தான்.. ஒருவேளை அந்த டிரைவர வச்சு இவங்க ஏதாவது ப்ளே பண்ணிடுவாங்களோன்னு அவருக்கு பயமா இருக்குன்னு எனக்கு கால் பண்ணி சொன்னார்.. சுந்தரி இதுக்கும் மேல எதுவும் தாங்க மாட்டா இல்ல.. பாவம் அந்தப் பொண்ணு.. ஆசைப்பட்டவனை கல்யாணம் பண்ணியும் இப்படி பிரிஞ்சி இருக்கறது கஷ்டம் தானே..” பெரியவர் போனில் தன்னிடம் கேட்டதைச் சொன்னவர், இந்திரனைப் பார்த்தார்..
அவனோ சுந்தரியின் நினைவில் சிலையென அமர்ந்திருக்க, “நான் வரேன் சார்.. எனக்கு டிரைவிங் தெரியும்.. லைசன்ஸ் இருக்கு.. என் தங்கச்சிக்கு துணையா இருக்கறதை விட நான் வேற என்ன செய்யப் போறேன்? என்ன இங்க இருந்தா மச்சானுக்கு ஹெல்ப்பா இருக்கும்.. ஆனா.. அதை விட என் தங்கச்சியை பார்த்துக்கணும்.. இப்போ அது தான் முக்கியம்.. இங்க என் மச்சான் அவ எப்படி இருக்கா என்ன ஏதுன்னு தெரியாம தவிக்கிறதைப் பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு.. அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு பாலமா நான் இருக்கேன்.. அவனுக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.. நிம்மதியா சீக்கிரமே அவனோட குறிகோள எட்டிடுவான்..” தாஸ் முன்னே வர, இந்திரன் நன்றியுடன் அவனைப் பார்க்க,
அவனது தோளைத் தட்டிய தாஸ், “எங்களுக்கு மூத்த குழந்தை நீ தாண்டா.. உன்னோட நிம்மதி ரொம்ப முக்கியம் இல்லையா? எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான்.. நான் நம்ம டெலிவரி போக்குவரத்து எல்லாம் பார்த்துக்கறதுக்கு சொல்லி வச்சிருக்கேன்.. ரொம்ப நல்ல பையன் தாண்டா.. தைரியமா நம்பலாம்.. உனக்கு துணையா அவனை வச்சிக்கோ.. நான் அங்க சுந்தரியை பார்த்துக்கறேன்..” தாஸ் அவனுக்கு தைரியம் சொல்ல, ராணி இருவரையும் பார்த்துவிட்டு,
“சார்.. சுந்தரிக்கு துணையா இருக்க நான் வரேன் சார்.. இங்க என் தம்பி சமாளிச்சுக்குவான்..” என்று சொன்னவள், இந்திரன் திகைப்புடன் பார்க்கவும், ஆமோதிப்பாக தலையசைத்து,
“உன்னை விட காரணம் என்னன்னே தெரியாம உடைஞ்சு போய் இருக்கற அவ கூட இருக்கறது எனக்கு இப்போ முக்கியமா படுது.. நீ இங்க சமாளிச்சுப்ப இல்ல.. அங்க அவ பாவம்டா.. ஆசை ஆசையா கல்யாணம் பண்ணி ஒரே நாள்ல அவங்க வீட்டுக்கு போன்னு அனுப்பினா அவளுக்கு எப்படி இருக்கும்.. நான் அவ கூட இருக்கேன்.. அது தான் மாமா கடைக்கு ஆளை வச்சிருக்காங்களே.. நீ கூட மாட வச்சு பார்த்துக்கோ..” ராணியும் சுந்தரியின் வீட்டிற்கு கிளம்பத் தயாராக, இந்திரன் இருவரையும் பார்த்து புன்னகைத்தான்.
“ஹ்ம்ம்.. ரெண்டு பேருக்கும் என்னை விட அவ ரொம்ப முக்கியமா போயிட்டா இல்ல..” இருவரையும் பார்த்து கேலியாக கேட்டவன், இருவரின் கையையும் பிடித்துக் கொண்டு, கண்ணீருடன் நன்றி கூறினான்.
“ச்சே.. போடா.. தைரியமா போய் உழைக்கிற வழியைப் பாரு.. நாங்க அவளுக்கு துணையா இருக்கோம்..” தாஸ் சொல்லவும், புருவம் சுளித்து யோசித்தவன்,
“சார்.. இவங்க எங்க அக்கா மாமான்னு அவங்களுக்கு தெரியும் தானே.. எப்படி இவங்களை வீட்டு உள்ள விடுவாங்க?” இந்திரன் சந்தேகம் கேட்க,
“இல்ல இந்திரன்.. அவங்க இவங்களைப் பார்க்கவே இல்லையே.. நானே திரும்ப வரும்போது தானே பார்த்தேன்.. அதனால தெரிஞ்சிக்க சான்ஸ் இல்ல.. சுந்தரி சொன்னா தான் உண்டு.. சுந்தரி என்ன நிலைமையில இருக்கான்னே புரியல.. ஆனா என்னோட நம்பிக்கை என்னன்னா கண்டிப்பா நீங்க அங்க இருந்தீங்கன்னா சுந்தரிக்கு ஆறுதலா இருக்கும்.. பாவம்ல அந்தப் பொண்ணு..” என்றவர், ராணி மற்றும் தாசைப் பார்த்தார்..
இந்திரன் தொலைந்த குழந்தைப் போல இருவரையும் பாவமாக பார்த்துக் கொண்டு நிற்க, அதை கவனித்த சூர்யா “என்னாச்சு இந்திரன்?” என்று கேட்க,
“இல்ல சார்.. சுந்தரியும் இல்லாம.. இவங்களும் இல்லாம நான் எப்படி இருப்பேன்னு நினைச்சேனா.. ஒரு மாதிரி இருக்கு.. போன வாரம் எல்லாம் இப்படி ஒரு நிலைமையில இருப்போம்ன்னு நானும் சுந்தரியும் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கல.. இப்போ ரெண்டு பேரும் இப்படி நிக்கறோம்.. அவளை நான் போக சொன்னது அவளுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.. மனசு ஒடிஞ்சு போயிருப்பா.. என் சுந்தரிக்காக தான் நான் இவங்களையும் அனுப்பறேன்..” சுந்தரிக்காக என்று மனதைத் தேற்றிக் கொண்டவன், அவர்களை அனுப்ப சம்மதித்தான்.
“தட்ஸ் குட் இந்திரன்.. அடுத்து நான் எனக்கு தெரிஞ்ச பேங்க் மேனேஜர்கிட்ட பேசி வச்சிருக்கேன்.. நீங்க உங்களுக்கு எப்போ முடியும்ன்னு சொல்லுங்க.. போய் பேசிட்டு வரலாம்.. சீக்கிரம் வீடு கட்ட ஸ்டார்ட் பண்ணுங்க.. உங்க கடின உழைப்புக்கு கண்டிப்பா நல்லா வரலாம்..” அவனுக்கு நம்பிக்கை கூறியவர்,
“நாளைக்கு கிளம்ப ரெடியா இருங்க.. நான் வந்து உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போறேன்.. அந்த வீட்ல வேலை செய்யறவங்களையும் வீட்ல ஒரு ஆள் போல தான் பார்த்துப்பாங்க.. அங்கேயே தங்க இடம் தருவாங்க.. வீட்டுக்கு பின்னால அவுட்டவுஸ் இருக்கு.. அங்க நீங்க தங்கிக்கலாம்..” மற்ற விவரங்களை அவர் சொல்ல, இந்திரன் ராணியைப் பார்த்தான்.
“நீ கண்டிப்பா போகனுமா அக்கா?” தனது அக்காவையும் விட்டுக் கொடுக்க முடியாமல், மீண்டும் அவன் துவங்கவும்,
“அட போடா.. போய் வேலையைப் பாரு.. நாங்க போய் கிளம்ப ரெடியாகறோம். எனக்கு என் தம்பி பொண்டாட்டியை பார்த்துக்கறது தான் இப்போ இருக்கற வேலையே..” என்று அவனது தலையை கலைத்த ராணி, நகர்ந்து சென்றுவிட, இந்திரன் சூர்யாவைப் பார்த்தான்..
“என்ன இந்திரன் என்ன யோசனை? கவலைப்படாதீங்க.. அங்க உங்க அக்காவுக்கு எந்த மரியாதை குறைவும் இருக்காது.. அங்க வேலை செய்யறங்களை கூட பெரியவர் மரியாதையா தான் நடத்துவார்.. இவங்கள கண்டிப்பா நல்லாவே பார்த்துப்பார்.. கவலைப்படாதீங்க..” சூர்யா ஆறுதல் கூற,
“அது நீங்க அவ்வளவு உறுதியா சொல்லும்போது கொஞ்சம் பரவால்லையா இருக்கு சார்.. இப்போ என்னோட கவலை எல்லாம் சுந்தரி பத்தித் தான்.. நான் சுந்தரியை நல்லா வச்சுக்கணும்ன்னு நினைக்கிறேன் சார். அவளை கல்யாணம் பண்ணும்பொழுது கூட பெரிய வீட்டு பொண்ணு இப்படி வந்து என்னை கல்யாணம் பண்ணிக்குதே.. அவளை நல்லா வச்சுக்கணும்ன்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு பெரிய இடம்ன்னு எனக்குத் தெரியாது..
ஆனா.. இப்போ கொஞ்சம் பயமா இருக்கு சார்.. என்னால அவளை அந்த உயரத்துல வச்சுக்க முடியுமா? ஏதோ தைரியத்துல அந்த நேரம் அனுப்பிட்டேன்.. ஆனா.. இப்போ கொஞ்சம் பயம் வருது..” இந்திரன் கவலையுடன் கேட்க, அவனைத் தட்டிக் கொடுத்தவர்,
“மனமிருந்தால் மார்கமுண்டு.. உங்களுக்கு உழைக்க தைரியம் இருக்கு.. கண்டிப்பா அவங்களை நல்லா வைச்சுப்போம்ங்கற நம்பிக்கையில தான் நீங்க அவங்களை கல்யாணம் செஞ்சு இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. சரி சொல்லுங்க.. நீங்க என்ன எல்லாம் ஐடியா வச்சிருக்கறீங்க? ஏதாவது யோசிச்சீங்களா? நானும் ஏதாவது எனக்கு தெரிஞ்சதை செய்யறேன்.. சொல்றேன்” அவர் கேட்கவும், இந்திரன் சுந்தரி தனக்கு ஏற்படுத்திக் கொடுத்த வியாபாரத்தை பற்றிச் சொல்ல, சூர்யா அவனைத் தட்டிக் கொடுத்தார்..
“நிஜமா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. ஒரு பக்கம் உங்க ரெண்டு பேரோட அன்பைப் பார்த்து சந்தோஷமா இருந்தாலும்.. இப்படி பிரிய நேரிட்டதை நினைச்சு கஷ்டமா இருக்கு.. சரி இந்தர்.. நாளைக்கு காலையில நான் அக்காவையும் மாமாவையும் கூட்டிட்டு போறேன்.. அப்பறம் வந்து உனக்கும் வீடு கட்ட என்ன பிளான் என்ன ஏதுன்னு டிஸ்கஸ் பண்ணலாம்.. சரியா?” என்று கேட்க, இந்திரன் தலையசைத்தான்..
மறுநாள் பொழுதும் விடிந்தது.. சுந்தரி வீட்டிற்கு வந்த இந்த இரு தினங்களில் அவள் அறைக்குள்ளேயே அடைந்துக் கிடக்க, பெரியவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.. முந்தய நாள் தான் வத்சலாவும் வீட்டிற்கு திரும்பி வந்தார்..
தனது மகள் எந்த நிலையில் இருக்கிறாள் என்று கூட பார்க்காமல் அவர் தனது வழக்கமான அலுவல்களை பார்க்க, அவரது நடவடிக்கையைப் பார்த்த பெரியவர் நொந்தே போனார்..
அறையில் அடைந்துக் கிடந்த சுந்தரிக்கு உணவும், பாலும் எடுத்துக் கொண்டு அவர்கள் சென்றாலும், அதை அவள் மறுத்து திருப்பி அனுப்ப, அவர்கள் கவலையுடன் பெரியவரிடம் சென்று கூறினர்.. இரவில் மட்டும் அவரிடம் வந்தவள், தூக்க மாத்திரை கேட்க, அவளது அந்த நடவடிக்கை அவருக்கு கவலைக் கொடுக்க, அவளைப் பார்த்துக் கொள்ளவே ஒரு ஆள் தேவை.. அதுவும் அன்னை போலவே அன்பும் ஆதரவும் காட்ட ஒருவர் தேவை என்று பெரியவர், சூர்யாவிடம் கலந்தாலோசிக்கும் பொழுது, அவர் கூறியது தான் ராணியை அங்கே அனுப்பும் யோசனை..
“அவங்க வந்தா சரியா இருக்குமா? அவங்க நிலைமையை நாம தப்பா எடுத்துக்கறோம்ன்னு அவங்க நினைச்சிடப் போறாங்க.. அது சரியா இருக்காது இல்ல..” பெரியவர் தயங்க, சூர்யா அவரைத் தேற்றினான்..
“இல்ல சார்.. அது அப்படி இல்ல.. மே பி அவங்க அந்த இடத்துலேயும் இவ்வளவு வசதியை விட்டு.. கொசுலையும் அந்த சின்ன வீட்டுலயும் சந்தோஷமா இருந்தாங்கன்னா அவங்க அன்பும் அங்க இருந்திருக்கு இல்ல.. அவங்களும் நல்லா பார்த்துட்டு இருந்திருக்கனும்.. எதுக்கும் கேட்டுப் பார்ப்போமே.. அவங்களும் கண்டிப்பா இதுக்கு ஒத்துப்பாங்க.. அவங்களும் சுந்தரியை நினைச்சு கவலை தான் படறாங்க..” என்று சொல்லவும், பெரியவர் ஒருவாறு சம்மதித்தார்..
“ஒருவேளை அவங்களுக்கு இங்க இருக்க பிடிக்கல.. அசவுகரியமா இருக்குன்னா அவங்க திரும்பப் போயிடலாம் சூர்யா.. அதுவும் சொல்லியே கூட்டிட்டு வாங்க.. வேலைக்குன்னு நாம வெளிய சொல்லிக்கிட்டாலும்.. அவங்க தம்பி பொண்டாட்டியை பார்த்துக்க தான் வராங்கன்னு சொல்லிடுங்க..” பெரியவர் தீர்மானமாய் சொல்ல, சூர்யா தனது முயற்சியில் இறங்கினார்..
இந்திரன் முதலில் மறுத்தாலும், சுந்தரிக்காக வென்று சம்மதிக்கவும், சூர்யாவிற்கு நிம்மதி பிறந்தது..
மறுநாள் காலையிலேயே ராணியும் தாசும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாலும், இந்திரன் அவர்களைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.. தாஸ் கூறிய அந்தப் பையனும் வந்துவிட, “அக்கா.. உனக்கு அங்க பிடிக்கலைன்னா உடனே கிளம்பி வந்திடுங்க..” பலமுறை இந்திரன் சொல்லவும், ராணி அவன் அருகே சென்றாள்.
“நாங்க அங்க சந்தோஷமா இருக்க போகல.. என் தம்பி பொண்டாட்டியை பார்த்துக்க போறேன்.. அது எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. இங்க நீ கடையை பார்த்துக்கறேன்னு ஒழுங்கா சாப்பிடாம இருக்காதே.. நல்லா சாப்பிடு.. நாங்க அங்க போனாலும் நினைப்பு இங்க தான் இருக்கும்.. உன்னை தனியா விட்டுட்டு போறோமேன்னு நினைக்காதே.. எனக்கு சுந்தரி நினைப்பாவே இருக்கு.. அது தான்..” என்றவள், மெல்ல தனது பையை எடுத்து வைக்க, தாஸ் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான்.
“நான் தான் கூட இருக்கேனே.. கவலைப்படாதே.. இவன் பேரு திரவியம்..” என்று தான் கூறிய பையனை அறிமுகப்படுத்தியவன்,
“திரவியம்.. அவனையும் கொஞ்சம் பார்த்துக்கோ என்ன? நான் சொன்னது நியாபகம் இருக்கா? இவன் என் மகன் மாதிரி.. ஜாக்கிரதை..” என்று தாஸ் சொல்லிவிட்டு, தனது பையுடன் நகர, சூர்யா அவர்களுக்காக காத்திருந்தார்..
இந்திரனின் முகத்தைப் பார்த்தவர், “கவலைப்படாதீங்க இந்திரன்.. கண்டிப்பா அங்க எந்த மரியாதை குறைவும் நடக்காது.. பெரியவர் நீங்க தப்பா எடுத்துக்கப் போறீங்கன்னு தான் பயப்படறார்..” என்று ஆறுதல் கூறியவன், இந்திரன் சோபையாக புன்னகைக்கவும், அவனது தோளைத் தட்டிவிட்டு, அவர்களுடன் கிளம்பினார்..
சுந்தரியின் வீட்டை நெருங்க நெருங்க, ராணிக்கு சிறிது படபடப்பாக இருந்தது.. தாசை அவள் நிமிர்ந்துப் பார்க்க, “உன் தம்பி சமாளிச்சுக்குவான் கவலைப்படாதே.. நாம இங்க இவளைப் பார்த்துக்கலாம்..” ஏதோ ஒரு யோசனையில் கிளம்பி விட்டாலும், இருவருக்குமே சுந்தரியை எதிர்கொள்வதைப் பற்றிய சிந்தனை தான் ஓடிக் கொண்டிருந்தது..
சுந்தரியின் வீட்டில்…
டைனிங் ஹாலில் அமர்ந்திருந்த வத்சலா, தன்னுடைய செல்போனை பார்த்துக் கொண்டே காலை உணவை உண்டுக் கொண்டிருக்க, “வத்சலா… சுந்தரி சாப்பிட்டு ரெண்டு நாள் ஆகுது.. கொஞ்சம் அவளைப் பார்த்து என்ன ஏதுன்னு கேட்கலாம் தானே..” பெரியவர் தன்மையாக கேட்க,
“இத்தனை நாளா நான் பார்த்தா அவ சாப்பிட்டா.. இல்ல அந்த குடிசையில அவ என்ன வேளாவேளைக்கு சாப்பிட்டு இருக்கப் போறாளா? எல்லாம் நல்லா வயிறு காஞ்சா வந்து சாப்பிடுவா.. போயும் போயும் ஓடிப் போய் ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ நினைச்சாளே.. அந்த இடத்துல என்ன தினமுமா நல்ல சாப்பாடு கிடைச்சு இருக்கப் போகுது.. எல்லாம் இந்த பட்டினி எல்லாம் பழகி இருக்கும்.. ரெண்டு நாள் ஆனா சாப்பிடுவா.. இப்போ எனக்கு அவளை எல்லாம் கொஞ்சிக்கிட்டு இருக்கறதுக்கு நேரம் இல்ல.. எனக்கு ஒரு மீட்டிங் கிளம்பனும்.. அப்படியே ராத்திரி பாங்காக் போறேன்.. வர ஒரு வாரம் ஆகும்..” என்றவர், கையைக் கழுவிக் கொண்டு கிளம்பிச் செல்ல, ஒரு பெருமூச்சுடன் பெரியவர், சுந்தரியின் அறைக்கதவைத் தட்டினார்..
கதவைத் திறந்தவள், தனது அறையின் வாயிலில் அவர் நிற்கவும், பதறி, “என்ன தாத்தா.. நீங்க எதுக்கு முட்டி வலியோட இப்படி மேல வந்து இருக்கீங்க” பரிதவிப்புடன் அவள் கேட்க,
“என் பேத்தி சாப்பிடாம நானும் ரெண்டு நாளா சாப்பிடாம இருக்கேன்.. இந்த வயசானவனுக்கு பசிக்குது.. இதுக்கும் மேல தாக்குப் பிடிக்க முடியல.. அது தான் உன்னை கூப்பிட வந்தேன்.. கை கால் எல்லாம் வளவளன்னு ஆகுது..” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவர் சொல்லவும், சுந்தரி பதறிப் போனாள்.
“ஹையோ தாத்தா.. நீங்க சுகர் மாத்திரை எல்லாம் போடணும் இல்ல.. ஏன் தாத்தா இப்படி இருக்கீங்க.. எனக்கு சாப்பிடவே பிடிக்கல தாத்தா.. சாப்பிட்டு என்ன செய்யப் போறேன்னு இருக்கு.. அது தான்.. நீங்க வாங்க.. நாம சாப்பிடலாம்..” தன் மீது பாசம் வைத்த அந்த முதியவர் மீது இறக்கம் கொண்டு அவரை அழைத்துக் கொண்டு உணவு அறைக்கு வர, அங்கிருந்த வேலைக்கார்கள் சுந்தரியை புதிதாகப் பார்த்தனர்..
அவள் புடவை அணிந்து வந்ததையும், அவளது கழுத்தில் இருந்த மஞ்சள் தாலியையும் பார்த்தவர்கள் திகைப்புடன் நிற்க, அவர்களைப் பார்த்தவர் ஒரு முடிவுக்கு வந்தவராய் டைனிங் டேபிளில் அமர்ந்து, அவர்களை உணவு பரிமாறுமாறு கைக் காட்டவும், அவர்களும் வேகமாக அடுத்த வேலையை செய்யத் துவங்கினார்..
“சொல்லும்மா.. என் பேத்தி வீட்டுக்காரர் என்ன செய்யறார்? எப்படிப்பட்டவர்? அழகனா? பேரழகனா? சொல்லும்மா?” அவர் பேச்சுக் கொடுக்க, சுந்தரியின் கண்கள் கலங்கியது..
அவள் கண்களைத் தழைத்துக் கொள்ள, “ரொம்ப நல்லவராம்மா?” உணவை வேலை செய்பவர் பரிமாற, அவளது அமைதியை உடைத்து பெரியவர் மீண்டும் மீண்டும் கேட்கவும், தலையை மேலும் கீழும் அசைத்தவள்,
“ரொம்ப நல்லவர் தாத்தா.. என் மேல உயிரையே வச்சிருக்கார்.. என்னை விட்டு ஒரு நிமிஷம் இருக்க மாட்டார்.. ஆனா. இப்போ எப்படி என்னை இங்க அனுப்பிட்டு இருக்காருன்னே எனக்குத் தெரியல.. சில விஷயங்கள் எனக்கு புரியல.. மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு..” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கத் துவங்கியது..
அவளது தலையை கோதிக் கொடுத்தவர், “அவர் பேர் என்னம்மா? என்ன செய்யறார்?” மிக மிக மென்மையாக அவர் கேட்கவும்,
“இந்திரன் தாத்தா.. சொந்தமா காய்கறி கடை வச்சிருக்கார்.. கூடவே ஆன்லைன்ல நான் அவருக்கு தொடங்கிக் கொடுத்த பிசினசையும் அவர் பார்த்துக்கறார் தாத்தா.. ரொம்ப உழைப்பாளி.. ரொம்ப நேர்மையும் கூட.. ஆனா.. என் விஷயத்துல பொய்யா போயிட்டார் தாத்தா.. உன்னை விட்டு ஒரு நிமிஷம் இருக்க முடியாதுன்னு சொன்னவர்.. கொஞ்ச நேரத்துலையே என்னை இங்க அனுப்பிட்டார்..” சுந்தரி குலுங்கி அழத் துவங்க, அதைக் கேட்ட வேலை செய்பவர்கள் அதிர்ந்து பார்த்தனர்..
பெரியவர் அவர்களை நிமிர்ந்துப் பார்த்த பார்வையில், இந்த விஷயம் இந்த இடத்தைத் தாண்டி செல்லக் கூடாது என்ற உத்தரவு இருக்க, அவர்கள் மெல்ல அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.. சூர்யா கூறியதில் இருந்து, அந்த வார்த்தைகளை எந்த தருணத்தில் அவன் கூறி இருக்க முடியும் என்று யோசித்தவருக்கு மனம் வலித்தது.. ‘சந்தோஷமா இருந்தவங்களை இப்படி பிரிச்சு கூட்டிட்டு வந்திருக்காளே.. இவ தான் ஒழுங்கா வாழலைன்னாலும் பொண்ணையும் இப்படி செய்யறாளே..’ மனதினில் வருந்தியவர், சுந்தரியின் தலையை தடவைக் கொடுத்தார்..
“உன்னோட நல்லதுக்கு கூட இருக்கலாம்ல..” அவர் கேட்கவும்,
“என்ன என் நல்லதுக்கு தாத்தா? சொல்லுங்க.. அதுக்குத் தான் என் கழுத்துல தாலி கட்டினாரா? அதுக்குத் தான் என்னை அவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்தி.. அவ்வளவு பத்திரமா பார்த்துக்கிட்டாரா? இதுக்கு பேசாம என்னை அந்த தண்ணியிலேயே விட்டு சாகடிச்சு இருக்கலாம்.. காப்பாத்தி இப்படி உயிரோட சாகடிச்சு இருக்க வேண்டாம்.. அதுவும் தாலி கட்டி ஒரு நாள் முடியறதுக்குள்ள..” என்றவள் தொண்டையடைக்க,
“ஆரம்பத்துல இருந்தே நீ யாருன்னு சொல்லு.. ஏன் இங்க வந்து இருக்கன்னு சொல்லுன்னு கேட்டுட்டு இருப்பார். அம்மாவைப் பத்தி தெரியாம.. எப்போப் பாரு உங்க அம்மா உன்னை அப்படி சொகுசா பார்த்துக்கிட்டாங்க தானே.. என்ன பிரச்சனை சொல்லு.. நாம அதை சமாளிக்கலாம்.. இங்க எல்லாம் நீ இருக்க வேண்டாம்.. நீ யாருன்னு சொல்லு.. சொல்லுன்னு சொல்லிட்டு.. கடைசியில என்னை அவர் எண்ணப்படி அனுப்பியும் வச்சிட்டார்.. எத்தனை தடவ எங்க அம்மாவைப் பார்த்துட்டு முடிவு பண்ணுங்கன்னு தலையால அடிச்சிக்கிட்டேன்.. கேட்கவே இல்லையே.. அவர் நினைச்சதை தானே சாதிச்சார்?” அவள் சொன்னதைக் கேட்ட பெரியவர் அதிர்ந்தாலும், பின்பு அவள் கோபத்தில் இந்திரனைப் பற்றி கூறியதில், மனதில் நிம்மதியாக உணர்ந்தவர், அவளைப் பார்க்க, சுந்தரி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“என்னை பத்திரமா பார்த்துக்கற அவரோட கடமை முடிஞ்சது.. இனிமே எனக்கு டிரைவர் வேலை.. பாடிகார்ட் வேலை எல்லாம் பார்க்க வேண்டாம் பாருங்க.. காலையில நான் சாப்பிட்டேனா.. என்ன சமைச்சேன்? டிபன் பாக்ஸ் எடுத்துக்கிட்டேனா? அடிக்கடி வேற உடம்பு சரி இல்லாம போகும்போது என்னை கவனமா பார்த்துக்க வேண்டாம்.. லீவ்ல வீட்ல இருக்கும்போது என்ன பண்ணிட்டு இருக்கேன்னு எல்லாம் பார்க்க வீட்டுக்கு வர வேண்டாம் பாருங்க.. அதோட அந்த மலர் என்னை என்ன செய்வான்னு கவலைப்பட வேண்டாம்.. கடையை பார்த்துக்கலாம்.. இன்னும் ரெண்டு கஸ்டமரை பிடிக்கலாம்.. நாலு இடத்துல வட்டிக்கு கொடுத்து வாங்கலாம்.. எவ்வளவோ உருப்படியான வேலை பார்க்கலாமே..” நக்கலாக அவள் சொல்ல, அதிர்ச்சியுடன் பெரியவர் அவளைப் பார்த்தார்..
“என்னம்மா சொல்ற.. யார் அந்தப் பொண்ணு? என்ன செஞ்சா?” அவர் கேட்கவும், சுந்தரி நடந்த விஷயங்களைச் சொல்ல, இப்பொழுது இந்திரன் மீது அவருக்கு பெரும் மதிப்பே உருவானது..
‘ரொம்ப நல்ல பையன் தான்.. இவங்க இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டாம்.. எல்லாம் சரி பண்ணுவோம்..’ என்று நினைத்துக் கொண்டவர், அவளது தலையை வருடி,
“ஹ்ம்ம்.. என்ன சொல்றது போ.. எல்லாம் நேரம்.. சரி சாப்பிடும்மா..” என்றவர், சூர்யாவை எதிர்ப்பார்த்துக் கொண்டே உணவை உண்ணத் துவங்கினார்..
சுந்தரி சொன்னதைக் கேட்ட அந்த வீட்டின் சமையல் பெண், திகைத்து நிற்க, “அங்க போய் நீயே சமைச்சியா? என்ன எல்லாம் சமைச்ச? எனக்கு ஒரு நாள் சமைச்சுக் கொடேன்..” மெல்ல சுந்தரியை இதமாக்க பெரியவர் கேட்க, சுந்தரி இதமாக புன்னகைத்தாள்.
“என் சமையல இந்தர் கேலி பண்ணிட்டே சாப்பிடுவார்.. நான் ஏதாவது புதுசா செய்யலாம்ன்னு ஆபீஸ்ல இருந்து வந்து செய்வேனா? நீ சமையல் செஞ்சு என் தூக்கத்தை கெடுத்துட்டன்னு சொல்லி கிண்டல் செய்வார்.. அவருக்கு பிடிக்கும்..” மீண்டும் அவள் இந்திரனின் நினைவிற்குள் மூழ்க, பெரியவருக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது..
அவருக்கு அப்பொழுதே இந்திரனைப் பார்க்க வேண்டும் போல இருக்க, ‘ஹ்ம்ம்.. போவோம்..’ என்று நினைத்துக் கொண்டு, தட்டில் இருந்த உணவை முடித்தார்..
இந்திரனின் நினைவில் மூழ்கியவளுக்கு உணவு தொண்டையில் இறங்க மறுக்க, உணவை விழுங்க முடியாமல் விழுங்கி தவித்துக் கொண்டிருந்தவளின் நிலையைப் பார்த்த பெரியவர், “சாப்பாடு பிடிக்கலைன்னா வச்சிடு.. நான் வேற செஞ்சுத் தரச் சொல்றேன்..” என்று கூற,
“வேண்டாம் தாத்தா.. நான் மெல்ல சாப்பிட்டுடறேன்..” என்றவள் மெல்ல உண்டுவிட்டு எழுந்துக் கொள்ள, பெரியவர் அவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டே எழுந்துக் கொண்டார்.
வீட்டை நெருங்கிய ராணிக்கு அந்த இடத்தின் வளமை கிலியை கிளப்பியது.. பதட்டத்துடன் அவள் தாசை பார்க்க, தாஸ் அவளது கையைத் தட்டிக் கொடுத்தான்.
“இவ்வளவு பெரிய இடத்துல இருந்த பொண்ணு எப்படிங்க அங்க இருந்தா? அதுக்கு தான் தம்பி வாய் ஓயாம அவளை அனுப்பிடச் சொன்னானா? எப்படிங்க அவ தம்பி கூட இருக்க முடிவு செய்தா?” அங்கலாய்ப்பாக கேட்டவளைப் பார்த்த சூர்யா,
“அப்போ அவங்களுக்கு இந்தர் சம்திங் ஸ்பெஷல் தானே.. ஹ்ம்ம்.. அவருக்கும் சுந்தரி ரொம்ப ஸ்பெஷல் தான்.. ஏன்னா பிரிஞ்சு இருக்கப் போறது கஷ்டம்ன்னா கூட.. அந்த பிரிவை ஏத்துக்கிட்டு அவங்களை சுகமா வாழ வைக்கணும்ன்னு நினைக்கிறார் இல்ல..” சூர்யா ராணிக்கு ஆறுதல் சொல்ல, தாஸ் அவர்களைப் பார்த்து புன்னகைத்தான்..
வீட்டின் உள்ளே நுழைந்ததும், அந்த வீட்டைப் பார்த்த ராணியின் கண்கள் விரிந்தது.. அரண்மனை போல இருந்த வீட்டில் நின்றிருந்த கார்களைப் பார்த்த தாஸ் ராணியைத் திரும்பிப் பார்த்தான்.. அவனது கண் முன் இந்திரனுடன் பைக்கில் ஆவலுடன் கிளம்பும் சுந்தரியின் முகம் வந்து போனது..
பயமும், பதட்டமும், சுந்தரியை எதிர்கொள்ளும் ஆவலும் போட்டிப் போட, இருவரும் அந்த வீட்டில் கால் பதித்தனர்.. இருவரையும் சூர்யா ஊரு அறைக்குள் அழைத்துச் செல்ல, அங்கு உயரமும், கம்பீரமுமாக அமர்ந்திருந்த ஒருவரைப் பார்த்தவர்களுக்கு, அவரது முகத்தில் இருந்த கடினம் மேலும் பயத்தைக் கொடுத்தது..
மனதைத் தருவாள்..
🌹🌹💔💔💔🌹🌹🌹🌹💔💔💔🌹🌹🌹🌹💔💔💔🌹🌹🌹🌹💔💔💔🌹🌹