இரட்டை நிலவு – 1

இரட்டை நிலவு – 1
“காதல் என்பது என்ன??
வரையறைகளுக்குள் வகுக்க முடியாத ஒன்று
முட்டாள்தனங்களின் முதல் முடிச்சு
மடத்தனங்களின் மூலதனம் அது
புரிந்தவர்களுக்கோ புனிதமானதொரு பொக்கிஷம்
புரியாதவர்களுக்கோ பிதற்றலாகி போன புலம்பல்
காற்றில் தாவும் கருவண்டிலும் காதல்
காட்டாற்று வெள்ளத்தில் கரைபுரளும் காதல்
காதல் காதல் காதல்
எத்தனை ஆண்டுகளுக்கு தான் இந்த முட்டாள்தனம்
புரிதலின்மையால் பிதற்றல்களும் போராட்டங்களும்
வாழ்வின் ஒரு அங்கமாகி போன ஒன்றில்
தொலைந்து போனவர்கள் பலர்
தொலைய மறுப்பவர்கள் சிலர்
ஓருணர்வுக்கு பயந்து கட்டுப்பாடுகள் விதித்து
அதே சிறையில் நாமும் அகப்பட்டு
ஏன் இந்த விபரீதமான கருத்துக்களும் கொள்கைகளும்
அழிவு தான் என்றால் அரைமணி போதுமானது
ஆக்கம் என்றால் ஆண்டாண்டு காலமாகும்
மறுப்புக்களை தெரிவித்து மனங்களை நோகடிக்காது
சுதந்திர பறவையாக காதலில் கட்டுண்டு
கட்டளையிட்டு கரையை அடைவோம்..”
கவிதையின் கடைசியில் கருத்தரங்கமே கரகோசத்தில் நிறைந்து விட, கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரியான அமீக்காவோ சற்றும் அலட்டி கொள்ளாமல் கீழே இறங்கினாள்..
பெண்களுக்கு உரித்தான ஒரே நேர்கோட்டில் அடுத்தடுத்த பாதங்களை பதித்து நளினமான நடை அவளிடமில்லை.. கருங்கூந்தலின் நீளம் இடையை தொட்டிருந்தாலும் சுருள் சுருளாக காற்றில் தவழும் அழகியல் அவளிடமில்லை.. பார்வையை தனித்து காட்டக்கூடிய கருமை கொண்ட கண்கள் அவளிடமில்லை.. கலகலவென சிணுங்கும் வளையல்களோ கொலுசு முத்துக்களோ அவளிடமில்லை.. அவ்வளவு ஏன் இளவயது மன்மதங்களை வீழ்ந்தும் மாயதூரிகையான துப்பட்டா தோள்களில் அணிந்து கொள்ளும் பழக்கம் அவளிடமில்லை..
இல்லை இல்லை என்று எதிர்மறையாக பேசி கொண்டே சென்றால் அவளுக்கான வர்ணனை தான் என்ன?? லட்சணமான தேகமுக வடிவமைப்பு என்றாலும் கவனிப்பு என்பது சிறிதுமின்றி தற்காலிகமாக பொலிவை இழந்திருந்தது.. கரங்களில் அந்த மென்மை இன்னமும் தேங்கியிருந்தாலும் அவளின் பிடியினால் வன்மையாக மாறியிருந்தது.. ஜீன்சுக்கும் ஷீல்வ்லஸ் ஷேர்ட்டுக்கும் சொந்தக்காரி.. மொத்தத்தில் தனிக்காட்டு ராணி.. இல்லயில்லை அவளின் தனுவிற்கான ராங்கியவள்..
மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த அமீக்காவின் கரங்களை ஒவ்வொரு மாணவிகளும் பிடித்து வாழ்த்துக்கள் கூறிட, “ம்ம்..” என பெற்று கொண்டாள்.. சுற்று வட்டாரத்தில் பிரபலமான புரட்சியை தனது பேச்சு திறத்தால் திறம்பட நிகழ்த்தும் மேடை பேச்சாளர்.. சமூக ஆர்வலர் என்றால் இந்த கூட்டம் கூட இல்லாமல் இருக்குமா?? அக்கல்லூரியில் புகழ் பெற்றிடவும் மாணவிகளிடையே பிரபலம் என்பதற்கு இந்த ஒரு தகுதி மட்டும் போதாதே ஒரு தலைவனுக்கு..
கல்லூரியில் எங்கு சச்சிரவுகள் இருப்பினும் அவளின் தலையீடு இருந்தால் நிச்சயம் சரியான முடிவு கிட்டும் என்பது பரப்பபடாத புகழ்.. அவளின் நடவடிக்கை மட்டுமல்ல.. தேவைக்கு மட்டும் திறக்கும் அவளின் அதரங்கள் பேசும் வார்த்தைகளில் அத்தனை ஆணித்தரமான உண்மையும் நியாயமும் இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை..
விடுதிக்கு வந்த அமீக்கா, தனது பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருக்க, “அமீ.. நீ இன்னைக்கே கிளம்பி ஆகணுமா??” என வந்து நின்றாள் லில்லி.. “ஏன்?? நாளைக்கு கிளம்புனா என்ன?? காலேஜை அப்படியே பெயர்த்து கொண்டு போய் இமயத்துல வச்சிடுவாங்களா??” என்று கேலியை கூட கடுமையாக கேட்டவளிடம் “நாளைக்கு ஜூனியர்ஸ் நமக்கு பேர்வெல் பார்ட்டி தர்றாங்க.. நீயும் கூட இருந்தா சந்தோசப்படுவாங்க..” என எடுத்துரைத்தாள் லில்லி..
“நோ லில்லி.. இந்த லேட் நைட் பார்ட்டி, பெர்வேல் பார்ட்டில எல்லாம் ஐ யம் நாட் இன்ட்ரெஸ்ட்டட்.. நான் இப்போவே கிளம்பியாகனும்..” என்ற அமீக்கா ட்ராலியை அழுத்தி ஜிப்பினை பூட்டினாள்.. தரையில் உருண்டு வந்த ட்ராலிக்கு நிகராக நடந்து வந்த லில்லியிடம், “நீ என்னோட பிரெண்ட் தான் லில்லி.. அதுக்காக என்னை வீடு வரை வந்து டிராப் பண்ணனும்னு எக்ஸ்பெக்ட் பண்ண மாட்டேன்..” என மறுத்தாள் அமீக்கா..
“இல்ல அமீ.. உன்கூட வந்தா எனக்கு சாட்டிஸ்பெக்ஷனா இருக்கும்..” என்றவள் எவ்வளவு கூறினாலும் நிறுத்தப்போவதில்லை என்பதால் தடுக்கவுமில்லை.. “ஒய்.. நிமல்..” என கையை காட்டினாள் அமீக்கா.. புல்லட்டில் சாய்ந்து நின்றவன், லில்லியை அங்கே எதிர்பாராதவனாக வெட்கத்தை பூசி கொள்ள “டேய்.. உன்னோட சீக்ஸ் ப்ளஷ் ஆகுது.. ஐ தின்க் உன்னோட சோல்மேட்டை மீட் பண்ணியிருக்குற..” என கூறி கொண்டே அமீக்கா பெட்டியை புல்லட்டில் கட்டினாள்..
நிமலுக்கும் லில்லிக்கும் நடுவே கண்களால் காதல் பரிமாற்றம் நடைபெற்று கொண்டிருக்க, “டேங் பில் பண்ணிட்டியா??” என தோள்களை தட்டினாள் அமீக்கா.. “பாவி.. லவ்வ கோர்த்தும் விட்டு கத்தரியால கட் பண்ணியும் விடுறா..” என கருவி கொண்டவன் “பண்ணிட்டேன்..” என்றான்..
“சரி.. லேட் ஆகுது.. லில்லிய பத்திரமா ஹாஸ்டல்ல கொண்டு விட்டுடு.. உன்னோட பொறுப்பு தான்..” என கட்டளையிட்ட அமீக்கா புல்லட்டை கிளப்பி கொண்டு நகர, கல்லூரியின் மாணவர்களோடு சேர்த்து மாணவிகளுமே, அந்த ஆளுமையை நின்று ரசிப்பில் லயித்தனர்..
ராகவன் இல்லம்,
“அண்ணி, பாப்பாக்கு எல்லாம் ரெடியா??” என கையில் தாம்பூல தட்டோடு பரப்பரப்பாக வந்து நின்ற வாசுகி வினவ, “எல்லாம் நேத்து நைட்டே எடுத்து வச்சிட்டேன் வாசு.. லேட்டா எழுந்து இப்போ குளிக்க போயிருக்குறா..” என்ற நிர்மலா மற்றொரு தாம்பூலத்தை அடுக்கி கொண்டிருந்தார்.
“சரி.. சரி.. தூங்குறதுல ஒன்னும் தப்பில்லையே அண்ணி.. பொறுமையாவே குளிச்சிட்டு வரட்டும்.. நான் ரெடி பண்ணி கூட்டிட்டு வர்றேன்.. அது வரைக்கும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட ஏதாவது பேச்சு குடுத்துட்டு இருங்க சரியா..” என நிர்மலாவை விரட்டி விட்ட வாசுகி அவ்வறையில் கண்களை அலைபாய விட்டார்….
கட்டில் முழுவதும் பட்டு சேலைகளும் இதர பொருட்களான ஊக்குகள், நகைகள், ஸ்ட்ரைட்னர் காஸ்மெடிக்ஸ் என்று ஒரு பெரிய பட்டியலே இரைந்து கிடக்க, சேலையின் தலைப்பினை பிரித்து மடிப்பினை தொடங்கினார்.. அவ்வீட்டின் குட்டி இளவரசியை பெண் பார்க்க வருவதற்கு தான் இத்தனை ஏற்பாடுகள்..
அப்பொழுது,
“வாசுகி..” என கண்ணியமான உள்ளே நுழைந்த குகன், யாருமில்லாத அறையில் தனது மனைவி என்றதும் மீசை குறுகுறுக்க கண்களில் குறும்பை மின்னவிட்டார்.. “சரியா வந்தீங்களே.. வாங்க.. வந்து பாருங்க.. பொருளெல்லாம் எப்படி போட்டு வச்சிருக்குறா உங்க மருமக.. இதுக்கு தான் அவளுக்குன்னு தனி ரூம் குடுக்கலாம்னு சொன்னேன்.. குழந்தை சின்ன ரூம்ல இடுக்கி பிடிச்சிட்டு இருக்குற மாதிரி தெரியுது..” என குடும்பத்திற்கு தேவையான கருத்து ஒன்றினை கடிதலாக கூறி கொண்டிருந்த வாசுகியை காதலாக பின்னால் இருந்து அணைத்தார் குகன்.. “ஏங்க, என்ன பண்றிங்க.. நேத்து தான் கல்யாணம் ஆன மாதிரி கொஞ்சுறீங்க.. யாராவது வந்துட போறாங்க..” என வெட்கத்தில் நெளிந்தார்..
“யார் வந்தா என்ன?? என் பொண்டாட்டிய நான் கொஞ்சுறேன்.. யார் என்னை கேப்பா..” என கொஞ்சிய குகனை, “யாரும் கேக்க மாட்டா.. நீங்க பெத்து வச்சிருக்குற ஒன்னு வந்துதுன்னா தையா தக்கான்னு குதிச்சுடுவா..” என எச்சரித்து கொண்டிருக்கும் போதே குளியலறை கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் தன்வி.. தனது அறையில் அத்தை மாமாவின் அனோன்யத்தை கண்டதும் மரியாதையின் நிமித்தம் திரும்பி கொண்டாள்..
“விடுங்க..” என கடிந்தவாறே குகனின் பிடியில் இருந்து விடுபட்டு கொண்ட வாசுகி, “சொல்லும் போதே கேட்டிருக்கணும்..” என காலில் நறுக்கென மிதித்தும் வைத்தார்.. அசடாக சிரித்து கொண்ட குகன், “தன்விமா.. ரெடி ஆகி சீக்கிரம் வந்துடு..” என அசடாய் கூறி விட்டு மறக்காமல் மனைவியிடம் கண்ணடித்து விட்டும் சென்றார்..
“நரைச்சது தெரிஞ்சும் சின்ன பையன் மாதிரி சேட்டை.. இங்க வாம்மா.. தன்வி..” என அழைத்த வாசுகி ஆசைஆசையாக செய்து வைத்திருந்த நகைகளை அலங்காரமாய் அணிவிக்க, கண்ணாடியில் தெரிந்த தன்வியின் முகத்தில் புன்னகை குடிகொண்டிருந்தாலும் ஆனந்தம் அதிலில்லை.. ஏற்கனவே பொலிவான தன்வியை அந்த பட்டுசேலையும் ஜடையில் சூழ்ந்த மல்லிகையும் அழகு சிலையாக மாற்றியிருந்தது..
“மீகா இன்னும் வரலியா அத்தை..” என மெல்லிய குரலில் ஏக்கமாக கேட்ட தன்வியின் முகத்தை ஏந்திய வாசுகி, “உனக்கு நல்ல காரியம்னா அவ இல்லாமலா?? ஆன் தி வே… க்ரூப்ல செல்பி எடுத்து போட்டு அவளும் அவங்க அப்பாவும் பண்ணின அலப்பறை மெசேஜஸை கவனிக்கலையா??” என கேட்டார்..
“இல்லையே அத்த.. சாரி.. இருந்த நர்வஸ்ல மொபைலை கவனிக்க மறந்துட்டேன்..” என தலையில் அடித்து கொண்ட தன்வியை “என் கண்ணே பட்டுடும் போல இருக்கு..” என திருஷ்டி கழித்தார்.. வாசுகி தன்வியின் பிணைப்பை தூரமாக நின்று கவனித்து கொண்டிருந்த நிர்மலா, கன்னத்தில் வழிந்து நின்ற ஆனந்த கண்ணீரை துடைத்து கொண்டார்..
சிறு வயதிலேயே தாய் தந்தையரை விபத்தில் பலி கொடுத்து விட்ட நிர்மலா தன் தம்பி குகனை தாய் போல கவனித்து கொண்டார்.. குகனின் வற்புறுத்தலின் பெயரில் திருமணம் செய்து கொண்டாலும், தனது தம்பிக்கு ஒரு வாழ்க்கை அமையும் வாழ்க்கையை தொடங்க வேண்டாம் என்று தள்ளிபோட்டார்..
குகனை நன்கு புரிந்த வாசுகியே அவருக்கு துணையாக வந்து விட, அடுத்தடுத்து தன்வியும் அமீக்காவும் பிறக்க, அதே வருடத்தில் நிர்மலாவின் கணவர் இராணுவ போரில் உயிரிழந்தார்.. ஒரு சேர இன்பமும் துன்பமும் சேர்ந்து அலைக்கழித்திட, நிர்மலா தனது வட்டத்தை சுருக்கி கொண்டார்.. அதன் பின் இருகுடும்பமும் அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்து வந்தாலும் மனதால் ஒன்றாகவே வீற்றிருந்தனர்..
அப்பொழுது வாசலில் காரின் ஹாரன் ஒலி சத்தம் கேட்டதும் உள்ளே அமர்ந்திருந்த தன்வி கைகளை பிசைய, தொண்டைக்குள் ஏதோ ஒன்று சிக்கியது.. மொத்த குடும்பமும் உற்சாகத்தோடு வெளியே சென்று வரவேற்க, தனித்திருந்த தன்விக்கு கைகால்களில் நடுக்கம் ஏற்பட்டு ஜில்லிட்டது. ஏனோ திருமணம் என்ற சொல்லை கேட்டாலே படபடக்கிறது மனம்..
“வாங்க மாப்பிள்ளை..” என இரு தாய்மார்களும் வரவேற்க, பகுமானமாய் காரை விட்டு இறங்கினான் பத்ரி.. பெண்களை கட்டியிழுக்கும் தோரணையான உருவம் என்றாலும் அவனை தேராக மாற்றி வீதிக்கு பெண் பார்க்க இழுத்தது தன்வியின் காந்த விழிகளல்லவா.. வீட்டினுள் நுழையும் பொழுது செருப்பை நேர்த்தியாக கழற்றி விட்ட பத்ரியை பூரிப்புடன் வாசுகி நோக்க, அவனுடைய மரியாதையை குகன் மெச்சி கொண்டார்.. ஆனால் பெண் பார்க்கும் படலத்திற்கே இத்தனை பகட்டாய் ஏற்பாடு செய்திருக்க வேண்டாம் என்று நிர்மலாவிற்கு உறுத்தினாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை..
பெரிய வீட்டு சம்பந்தம் என்றால் சற்று முன்னும் பின்னுமாக இருக்கும் என்று எதிர்பார்த்த பெண் வீட்டார்களுக்கு பத்ரி பணிவாக மரியாதையாக நடந்து கொள்வதும், மகனின் விருப்பத்திற்காக என்று வேண்டா வெறுப்பாக அல்லாமல் மனமுவந்து வருகை தந்த மாப்பிள்ளை வீட்டார்களையும் மிகவும் பிடித்து போனது.. வாசுகி முன்நின்று மாப்பிள்ளை வீட்டுகாரர்களை வரவேற்று இனிப்பு வழங்கிட, “பொண்ண பார்க்கலாமா??” என்றார் பத்ரியின் தாயார் பரிமளா.. “வாசுகி…” என குகன் கண்ணசைக்க, தன்வி அழைத்து வரப்பட்டாள்.. கோவிலில் பார்த்த அதே தெய்வகடாட்சத்தோடு வீட்டிலும் வலம் வந்த தன்வியை அள்ளி பருக இருகண்கள் போதவில்லை பத்ரிக்கு..
“பையனுக்கு பிடிச்சிருக்குன்னு மட்டும் பொண்ணு பார்க்க வரலை.. எங்களுக்கும் பிடிச்சதுனால தான் வந்திருக்குறோம்.. பொண்ணோட குணமே வீட்டை பத்தி சொல்றதுனால எங்க பக்கம் இருந்து வீட்டை பத்தி எதுவும் விசாரிக்கல.. பொண்ணை இப்படியே கூட்டிட்டு போறதா கூட ஒரு ப்ளான் இருக்கு..” என கலகலப்பாக பேசிய பரிமளாவின் கைகளை பற்றினான் பத்ரி..
“பாருங்க.. கூச்சப்படுறான்.. இவனுக்கு இதெல்லாம் தெரியும்னு எனக்கே இப்போ தான் புரியுது.. நாங்களே பேசிட்டு இருக்குறோம்.. என் பையனை பிடிச்சிருக்கா பொண்ணுக்கு..” என பரிமளா விளிக்க, அனைவரின் பார்வையும் தன்வியின் மீது பதிந்தது.. “உங்க இஷ்டம்..” என்றால் “இதென்ன கெட்ட பழக்கமா இருக்குது தன்விமா.. உன்னோட விருப்பத்தை உடைச்சு பேசு.. பெரியவங்க முடிவு எடுக்குறது மட்டுமா கல்யாணம்.. உன்னோட அபிப்ராயம் என்னன்னு சபையில தைரியமா சொல்லு..” என்று தைரியம் ஊட்ட முயற்சிக்கும் குகன் கண்டிப்பார்.. எனவே, “ம்ம்..” என தற்சமயத்திற்கு மட்டும் தலையாட்டினாள்..
“சரிப்பா.. ரெண்டு பேருக்கும் பிடிச்சு போச்சு.. அங்க ஓரமா போய் நின்னு உங்களுக்குள்ள பேசிக்கோங்க.. பெரியவங்க நாங்க மத்த விஷயம் பேசுறதுக்கு ப்ரைவசி கொடுங்க..” என பத்ரியின் தந்தை கூறவும் “அவங்களுக்கு ப்ரைவசி கொடுக்க சொன்னா நமக்கு கேக்குறீங்க..” என்று குகன் சிரித்தார்.. இருவருமாக அங்கிருந்து நகர, மொத்த கூட்டமும் கேலி செய்வதற்காக சிரிக்க, ஆளை விடுங்க சாமி என்பது போல வேகமாக படியேறினான் பத்ரி.. உள்ளே அனைத்தும் ஏகபோகமாக நிகழ்ந்து கொண்டிருக்க, முக்கிய நிகழ்வை தவற விட்ட அமீக்கா லாவகமாக புல்லட்டை நிறுத்தினாள்..
அவளின் ஹாரன் சத்தத்தில் வெளியே வந்த வாசுகி, “ஏண்டி வந்து சேருற நேரமா இது?? எப்போ பாத்தாலும் தனுமா.. தனுமான்னு ஒட்டிகிட்டே திரிவியே.. முக்கியமான நேரத்துக்கு கூட இல்லாம ஊரை சுத்திட்டு வந்து நிக்குற..” என கடிந்து கொண்டார்..
“யோ மம்மி.. ஏன் வந்ததும் வராததுமா சீரியல் மாமியார் மாதிரி கையா முய்யான்னு கத்திக்கிட்டு இருக்குற.. அதான் வந்துட்டேன்ல.. பாரு மாப்பிள்ளையும் பொண்ணும் டெரசில தான நின்னு பேசுறாங்க..” என்றவள், “ஹாய் தன்வி.. ஹலோ ப்ரோ..” என கரமசைத்தாள்..
இருவரும் அவளை கண்டு முறுவலிக்க “ஏண்டி.. இப்படி கத்தி ஊரை கூப்பிடுற.. இப்போ தான் அவங்களே தனியா பேச போயிருக்காங்க..” என கூறவும், “யோ மம்மி.. உனக்கு அறிவில்லே.. இப்படி ஒரு பொம்பள புள்ளைய பையன் கிட்ட தனியா பேச விட்டிருக்கியே.. அபச்சாரம் ஆகாதா?? கலாச்சாரத்தை கெடுக்க பாக்குறியே..” என நாலு கால் பாய்ச்சலில் மேலே ஓட சென்றவளை பிடித்து இழுத்து தலையில் ஒரு கொட்டினை வைத்தார் வாசுகி..
“ஆளையும் ட்ரஸ்யும் பாரு.. முதல்ல ஒரு நல்ல புடவைய கட்டலைன்னாலும் பொண்ணா லட்சணமா ஒரு சுடிதாரை போடு.. கலாச்சாரம் பத்தி பேச வந்துட்டா.. நாய்க்குட்டி மாதிரி கழுத்துல ஒரு டேகை கட்டிகிட்டு..” என அவளின் சோக்கர் நெக்லஸை கலாய்த்து விட உதடு பிதுக்கினாள் அமீக்கா.. பலவாறாக திட்டி ராகம் பாடி கொண்டே உள்ளே அழைத்து செல்ல, அங்கிருந்த அனைவரையும் எகத்தாளமாக அவள் பார்க்கவிடினும் கன்னங்கள் சுவைத்து கொண்டிருந்த சுவிங்கம் அப்படியாக எடுத்தியம்பியது..
உள்ளுக்குள் சென்று ஒரு சுடிதாருக்குள் புகுந்து கொண்ட அமீக்கா, வெளியே ஒரு நாற்காலியில் சாவகாசமாக சரிந்து அமர்ந்தாள்.. பத்ரியின் அம்மாவின் பார்வை, “பொம்பளபுள்ளயா இருக்குதா பாரேன்..” என்பது போல தீண்டி செல்ல அப்பார்வையையும் அமீக்கா கண்டுகொண்டாளில்லை..
திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் பேசி கொண்டிருக்க, அமீக்கா வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.. பத்ரியின் வீட்டார், “நீங்க உங்க பொண்ணுக்கு என்ன வேணா போடுங்க.. ஆனா பொண்ணு எங்க மருமகளா வேணும்.. ஆங்..” என வரதட்சனையை மதிக்காமல் பேசி கொண்டிருக்க அவ்விடத்தில் அமீக்காவின் ஆத்திரமான சொற்பொழிவு தேவையற்று போனது.. அவளை வைத்து கொண்டு பேசும் பொழுது வாசுகிக்கு நெஞ்சமெல்லாம் பதறினாலும் பாதகமின்றி முடிந்ததே என்று நிம்மதி கொண்டார்..
பேச்சு வார்த்தைகள் முடிந்து அனைவரும் கிளம்ப, டாட்டா பாய் பாய் கூட சொல்லாமல் அறைக்குள் புகுந்து கொண்டாள் அமீக்கா.. பரிமளா தான் வந்ததில் இருந்தே அவளின் மீதிருந்த பார்வையை நகர்த்தாமல், தன்வி இருக்கும் அதே வீட்டில் தான் இவளும் வாழ்கிறாளா என சந்தேகமாய் நோக்கினார்… அறையில் அமர்ந்து ப்ரீபயர் விளையாடி கொண்டிருந்த அமீக்காவை ஆருரமாய் தன்வி கட்டிகொள்ள, “முதல்ல கையை எடுடி..” என அதிகாரமாய் கூறினாள்..
அந்த வார்த்தையில் தன்வியின் முகம் சுணங்க, “ஒ.. கல்யாணம் களை வந்ததும் அழுகுறதுக்கும் பழகிக்கிட்டியா?? அந்த நெய் டப்பா அதை தான் சொல்லி தந்தானா??” என கேட்டு கொண்டிருக்கும் போதே, “மாப்பிள்ளைய பார்த்து என்ன பேச்சு பேசுற.. மரியாதையா பேசு.. தன்விக்கு வரப்போற மாப்பிள்ளை.. அந்த மதிப்பு மனசுல இருக்கட்டும்.. அப்புறம் இன்னைக்கு பேசுன மாதிரி நாளைக்கு அவர் முன்னாடி பேசிடாத…” என கண்டித்த வாசுகி அறையை சுத்தம் செய்ய, “அப்படியா??” என்பது போல தன்வியை நோக்க, “நீ எப்படி வேணாலும் கூப்பிடு..” என உதட்டை சுழித்தாள் அவள்..
“ப்ச்.. இந்த ரேடியோவை விட்டு தள்ளு.. உன் ரோமியோ என்ன சொன்னான்??” என அமீகா ஆர்வத்தோடு விளிக்க, “அதை பத்தி கேக்காத மீகா..” என சலிப்புற்றவளாக படுக்கையில் அமர்ந்தாள் தன்வி.. வாசுகியின் வெளியேறலுக்காக காத்திருந்த அமீக்கா, “அப்படி என்னமா கேட்டான் அந்த நெய் டப்பா..” என பரபரத்தாள்.. “பார்ன் பாப்பியான்னு கேட்டான் போதுமா??” என கோபமாக கேட்டு விட்டு அவள் பாட்டிற்கு படுக்கையில் வீழ்ந்து கொள்ள, “வாட்??” என முகத்தை சுருக்கினாள் அமீக்கா..
“பாலியல் பற்றி நம்மளோட பார்வை எப்படி இருக்குது?? முன்காலக்கட்டத்துல இல்லாத அளவுக்கு இன்றைய நாட்கள்ல அதிக பாலியநோய்கள் அதிகரிச்சதுக்கான காரணம் என்ன?? அதிக மனநலமருத்துவமனைகளும் செயற்கை கருத்தரிப்பு மையமும் உருவானதிற்கான காரணம் என்ன??
உறவுகள் குறித்தும் பாலியல் குறித்தும் சரியான புரிதல் இல்லை.. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வெளிப்படையா பேசவும் தயக்கம் கொள்வது.. பாலியல் மற்றும் உடலுறவு பற்றிய பேச்சுகள் உச்சத்திற்கோ இல்லை அடிநிலைக்கோ செல்கிறதே தவிர இயல்பான கோட்டில் பயணிப்பதில்லை.. வயதிற்கு மீறிய தகவல்களை தெரிந்து கொள்ளும் ஒரு தலைமுறையினர்.. வயது வந்த பின்னும் இதுகுறித்து அறிந்து கொள்ளாத மற்றொரு தலைமுறையினர்..
உடலுறவு குறித்த பார்வையும் வழிமுறைகளும் பல இருப்பினும் பாலியலில் பல சிக்கல்களும் சீரழியும் சிந்தனைகளும் உருவாகி வருகிறது.. தனது பிரச்சினைகளை வெளியில் பகிர்ந்து கொள்வதில் ஒரு பயம்.. பெற்றோர்கள் ஏற்றுகொள்வார்களா என்ற பதட்டம்.. இப்படியாக பல கேள்விகளுக்கு இடையே பல பாலியல் பிரிவுகள் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது..
-அமீக்கா