இராசாத்தி அம்மன் வரலாறு

இராசாத்தி அம்மன் வரலாறு

இராசாத்தி அம்மன் – 3

 

பாட்டு

பகலினிலா அல்ல இரவினிலா வெற்றி

பக்குவம் உண்டாகும் சொல் தோழா

பகல் வெல்லும் காக்கையை இரவிலே கூகம் வெல்லும்

பார்த்தவர் சொல்வதுண்டு சொல் தோழா

தைரியமா அல்ல தந்திரமா எது

சாதிக்கும் என்றே சொல் என் தோழா

தைரியம் ஒரே ஒரு வேல் தந்திரம் பற்பல கோல்

சாதனை மனம் போல் ஆம் சொல் தோழா

வீரனுக்கா அல்ல சேரனுக வெற்றி

விரைவினில் கிட்டும் என்று சொல் தோழா

வீரநேதிரிலும் சோரன் மறைவினும்

வெற்றியைக் காண்பான் என்றே சொல் தோழா

வானிலா அல்ல சோளினிலா வெற்றி

வன்மை உண்டாகும் என்று சொல் தோழா

வாளுக்கு பகல், வெளிச்சம், கோளுக்கு இருள், தூக்கம்

வழி செய்யும் வெற்றிக்கேன்றே சொல் தோழா

காலம் செல்ல செல்ல காரிருளும் கூடிக் கொண்டே வந்தது. இப்போது கயவர்களும் நகர்ந்து நகர்ந்து கள்ளர்வென்றானின் அருகாமையை அடைந்தனர். அரசனின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்த அந்த பாவிகள் அரசப்பன், அம்மையார் மடியில் தூங்குவதையும், கயிலி கூட கண்மூடி சாய்ந்திருப்பதையும், அடியானும், கிளியும் கூட அங்கில்லை என்பதையும் நன்றாகவே தெரிந்து கொண்டனர். இதுவே நம் சமயம் என்று அனிச்சன் சீறி எழுந்தான். வலது கையில் தனது உடைவாளை எடுத்தான். இடதுகை மந்திரக் கோலைப் பிடித்து மந்திரங்கள் ஜெபித்தான். வாளுக்கு முத்தமிட்டான்.

“நண்பர்களே, இந்த கோலை நீட்டியவுடன் எல்லா உயிர்களும் தூங்கும். இந்த உடைவாள் அவர்கள் உயிரைக் குடிக்கும். நீங்கள் சமயம் அறிந்து உதவிக்கு வாருங்கள்.” என்று நண்பர்களுக்கு கட்டளையிட்டான்.

பிறகு பூனை போல் நடந்து கடம்ப மரத்தை அணுகினான். அடியான் மறைந்திருந்த திசையும் அவனுக்குத் தெரிந்தது. அவனுக்கு மறுமுனை  வழியாக நுழைந்தான். மரத்தின் நிழல் மேலும் இருளை உண்டாக்கி பேய் போல் நின்றது. மெதுவாக நாகம் போல் நகர்ந்து நகர்ந்து இப்போது அவர்களை அனுகிவிட்டான்.

அப்போது திடீரெண்டு மேகத்தால் சூழப்பட்ட சந்திரன் முழுமையாக மறைந்துவிட்டான். விதிதேவன் தன் சக்தியைப் பிரயோகித்தான். இதனால் தைரியம் அடைந்த அனிச்சன் கடம்பமரத்தின் வடபகுதியில் இருந்து எழுந்தான். மரத்தின் நிழல் விரிந்து பாவிக்கு உதவியாய் இருந்தது. தன் மந்திரக்கோலின் சக்தியால் அரசனையும் அம்மையாரையும் மயங்கச் செய்தான்.

மரத்தின் தென்புறத்தில் மாபாவி வந்து நின்றான். மன்னனையும் தேவியையும் மந்திரத்தால் மயக்கி விட்டான். பூனை போல் அருகில் சென்றான். புலி போல் பதுங்கி நின்றான். நாகம் போல் படம் எடுத்தான். நரி போல் கபடம் செய்தான்.

துஞ்சுகின்ற காதலர்கள் சுடர்முகத்தை காணலுற்றான். வஞ்சகத்தில் வலை விரித்தான். வாள் பிடியை கைப்பிடித்தான். தன் முகத்தை தடவிப் பார்த்தான். தாழ்வுகளை நினைத்துப் பார்த்தான். அம்பு போல் அருகில் பாய்ந்தான், அரசனையும் வெட்டி விட்டான். அன்னம் அவள் கண் விழித்தால், அடுத்த வெட்டில் சாய்ந்து விட்டாள்.

மன்னனது மார்பிலே, மாமயிளால் உயிர் விட்டாள். மகதரியைக் கொன்ற மகன், வஞ்சனையில் வீழ்ந்து விட்டான். வாழ்வதற்கு வந்த மகள், வல்வினையால் மாண்டுவிட்டாள்.

கண் இமைக்கும் நேரத்திலே இத்தனை கொடுரமூம் நடந்து விட்டது. அணிச்சன் ஆணவத்தால் கொக்கரித்தான். கூட்டாளிகள் கூத்தாடினர். இப்படியாக அதர்மம் ஜெயித்தது, அறம் கவிழ்ந்தது. இப்படி எத்தனை வினாடியோ அதைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தான் கால தேவன். அடுத்த வினாடியில்,

அரவம் கேட்டா அரசடியான் அரைக் கணத்தில் விழித்து விட்டான். அடங்காத அருங்கிளியும் அணிச்சனைக் கண்டதுவே. மூக்கதனை கொய்த கிளி முன்னே வந்து நிற்க கண்டான். நாக்கதனைக் கடித்துக் கொண்டான், நல்ல பாம்பாய் சீறி நின்றான்.

திடீரென கூண்டுக்கிளி கருப்பனாகி குவலயமே நடுநடுங்க, அரிவாளைக் கையில் கொண்டு அனிச்சன் உடல் துண்டு செய்தான். துணையாய் வந்த மூவரையும் அரசடியான் வெட்டி வீழ்த்தி காலனுக்கு விருந்து அளித்தான், கழுகுகளுக்கு இரை கொடுத்தான்.  அற்பர்கள் வாழ்வு முடிந்தது, தர்மம் ஜெயித்தது.

மூன்று பாவியரையும் வெட்டி வீழ்த்தியும் அரசடியானின் துக்கம் அடங்கவில்லை, சினம் தீரவில்லை.

காவலனான தன்னால் அரசனைக் காப்பாற்ற முடியவில்லையென ஏங்கினான். அன்று அரசியாருக்கு குடுத்த வாக்குறுதியை நினைவு கூர்ந்தான். உலக வாழ்வை வெறுத்தான். அவ்வளவுதான், தன் நீண்ட வல்லயத்தை ஓங்கித் தரையில் குத்தி நிறுத்தினான். அந்தக் கழுவின் மீது குப்புற வீழ்ந்து உயிரை மாய்த்தான். இப்படியாக அரசடியான் கழுவடியான் ஆனான்.

இத்தனைக்குப் பிறகு தெயவாம்சமான கருப்பன், மதுரைக்கு விரைந்து தன்னைக் கயிலி அம்மைக்காக அனுப்பி வைத்த மீனாம்பிகையின் திருப்பாதத்தை வணங்கினான்.

அம்பிகை கருப்பனை நோக்கி, “மகனே! சகலமும் யாம் அறிவோம், வாழ்வினைப் படி நடக்க வேண்டியது நடந்து விட்டது. நீ மறுபடியும் கிளியாக மாறி ராணி ராசாத்தி அம்மையிடம் நடந்தவற்றை அறிவிப்பாயாக.” என பணித்தாள்.

கருப்பன் மறுபடியும் கிளியாக மாரிசென்று மகாராணியாரின் மாளிகை நுழைந்து அம்மையாரின் எதிரில் நின்றது. திடீரென்று தன் எதிரில் வந்து நின்ற கிளியையும், கிளியின் சோகத் தோற்றத்தையும் கண்ட அரசியார் நிதானிக்கும் முன்பு,

என்ன ஆச்சரியம்! கிளியே வாய் திறந்து பேசியது. அஞ்சுகம் பேசும் அழகு தமிழே இன்ப ஊற்று அல்லவா சுரக்க வேண்டும். ஆனால் அந்தக் கிளியோ அனலைக் கக்கியது. மன்னன் மாண்டுவிட்ட முழு விவரத்தையும் ஒன்று விடாமல் கூறியது, அத்துடன் தானும் அம்மையாருடன் எந்த நேரமும் இருக்கும் ராக்கம்மையாரும் இன்னார் என்ற முழு விவரத்தையும் கூறியது.

வெந்த புண்ணில் வேல் நுழைவது போல தன் இரு காதுகளிலும் ஒலித்த கிளியின் சொல்லை கேட்ட அரசியார், உயிர் ஊசலாட, நிலை குலைந்து தடாலென தரையில் வீழ்ந்தார்.

“அரசியாரே! இந்த மாநிலத்தை நிர்வகிக்கும் நீங்கள் சாதாரண பிரஜை போல் துக்கம் வந்ததும் இவ்வாறு அழுவது சரியில்லை. பகலும் இரவும் போல தானே பிறப்பும் இறப்பும் ஒரு நியதியாக உள்ளது. ஆயினும் உறவுகள் செய்ய வேண்டிய பல கடமைகளும் உண்டல்லவா? ஆகவே முதலில், அமரர் ஆகிவிட்ட அரசனைக் காண்போம். அதுவே உங்களது கடமை.” என நினைவூட்டினாள்.

உடனே இரண்டு குதிரைகள் தயாரானது. அரசப்பன் ராசாத்தி தம்பதியருக்கு இரு சிறு குழந்தைகள் இருப்பதால், ஒரு குழந்தையை ராக்கம்மை அம்மையாரும் வாங்கிக் கொள்ள, மற்றொரு குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு கிளியான கருப்பன் வழி காட்ட, ராக்கமையார் துணையாக வர, குதிரைகளை தானே ஓட்டிக்கொண்டு கரிசல்குளம் விரைந்தனர்.

குதிரைகளா வேகமாக பாய்ந்து செல்ல, கரிசல்குளம் எங்கே? என் கணவர் மடிந்த இடம் எங்கே? அருகில் வந்துவிட்டோமா என்று அவள் மனத்திலும் எண்ணத்திலும் நிறைந்து இருந்தன. குதிரைகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தன.

முடி சார்ந்த மன்னரும் மற்றுள்ளோரும் முடிவில்

முடி சாம்பலாய் சிவந்து வெந்து மண்ணாவது கண்டும், எத்தனை எத்தனை ஆசைகள், எத்தனை எத்தனை எக்கனல் மனிதனிடம்? ராசாத்தி அரசியாரின் கோலத்தை எண்ணுகையில் பரிதப்பம் தோன்றுகிறது. மணமகளைக் காணாப் பாதம் முள் வழியைக் கண்டதம்மா, கானகத்தைக் காணாக் கண்கள் கண்ணீரில் கரைந்ததம்மா, துக்கமதை எண்ணா நெஞ்சம், விக்கி விக்கி அழுததம்மா,  மெத்தையிலே புரண்ட உடல் வீதியிலே துவண்டதம்மா, ஆணையிட்டு அடக்கிய வாய் அழுகையிட்டு ஒலித்தம்மா.

இவ்வாறு ஏக்கநிலை அடைந்த ராசாத்திக்கு, தூக்கத்திற்கும் பசிக்கும் அழும் பாலகனின் குரல் தான் கேட்டிடுமோ?

காணும் இடமெல்லாம் கரிசல்குளம் இதுதானா? என் கணவர் மாண்ட இடம் இடம் இதுதானா? என்பதே கிளியிடம் கேட்கும் கேள்வியை இருந்தது. இவ்வாறு புலம்பி பல காத தூரம் கடந்து ஒருவாறு கரிசல்குலத்தையும், தன் காதல் மன்னன் கொலையுண்ட காலத்தையும் கண்டுவிட்டாள்.

மகாராணியார், பொங்கி எழும் பாசவெறியோடு குதிரையிலிருந்து குதித்து ஓடினால். அந்தோ பரிதாபம், அவள் கண்ட காட்ச்சிகள் ஒன்றா, இரண்டா…

தங்கக் கணவன் தலை இழந்து மண்ணில் சாய்ந்து கிடக்கின்ற கோலம் கண்டாள்.

மங்கையொருத்தி அவன் மடியில் வீழ்ந்து, மாண்டு கிடக்கும் நிலையைக் கண்டாள்.

அம்புக் கழுவில் அரசடியான் உடல் தொங்கி கிடக்கின்ற கோலம் கண்டாள்.

அணிச்சன் என்ற அம்மாயி தன்னை ஐந்தாறு துண்டங்களாக கண்டாள்.

குத்தும் வெட்டும் பட்டு குடல் சரிந்து மூவர் செத்துக் கிடப்பதைத் தானும் கண்டாள்.

எங்கும் உதிரங்கள் சிந்திக் கிதந்திட தாங்கும் கழுகோடு பேயும் கண்டாள்.

கங்குல் பரவி இருந்திருக்க காலன் கம்ப ஈரமாய் இன்னும் நிற்கக் கண்டாள்.

இவ்வாறு அந்த இடுகாட்டின் தோற்றத்தைக் கண்ட அரசியாரின் எண்ணங்கள் கலங்கி, புலம்பி, நொந்து, தெளிந்து ஒருகணம் ஒருமைப்பட ஓடோடிசென்று தன் கணவனின் கழுத்திலா சடலத்தின் மீது வீழ்ந்தாள். எழுந்தாள், எண்ணினாள், அலறினாள்,

“அரசே, என் அம்புத் தெய்வமே, ஆறாம் வளர்த்த நாயகனே, உங்களை நான் இப்படியா பார்ப்பது? இதை தான் விதி என்று அறிஞர்கள் சொல்வார்களோ, என் ராசாவே,

அரசு எங்கே, ஆணை எங்கே

அரியணையும் கோலும் எங்கே

மரத்தடியில் வஞ்சகனால்

மாண்டது தான் தலை விதியோ     

அரசப்பன் உடல் மீது தலையின்றி கிடக்கும் அந்த யுவதியையும் அருகாமையிலே ரத்தம் தோய்ந்த நிலையில் கிடக்கும் அவளின் தலையையும் கண்ணுற்ற ராசாத்தி, “தங்கையே! நீ கொடுத்து வைத்தவள், பூவுடனும் போட்டுடனும் புருஷனுடனும் செல்லும் பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது. நான் மகா பாவி…” என்று கூறினாள்.

தங்க நிறத் தங்கையே நீ

தாலி கட்டி வந்ததென்ன – இப்போ

தலை இழந்து கிடப்பெதென்ன – இது

தான் விதியின் சாகாலமோ

வஞ்சகனும் தொடர்ந்ததென்ன – அவன்

வாழ்வை கிளி முடித்ததென்ன என்

நெஞ்சக் கனல் மூண்டதென்ன இது

நீதி தேவன் சாகசமோ

அரசடியான் பிரிந்ததென்ன, அவன்

அஞ்சுகம் கைக் கொண்டதென்ன பிழை

அரும் கழுவில் பாய்ந்ததென்ன இது

அத்தனையும் தான் விதியோ

“ஏ! விதியே! விதியை வகுத்திட்ட வேதநாயகனே! விதியை நடத்தும் எம கால தூதனே! உங்களையும் தருமன், தருமன் என்று பேசுகிறார்களே, உண்மைதானா? நியாயமா இதோ நான் இருக்க மறுதாரம் மணந்த அரசனுக்கு தண்டனை,

இதோ மணமானவன் என அறிந்தும் காதலித்து மணந்து கொண்ட கன்னிக்குத் தண்டனை. இதோ அக்கன்னியின் மேல் கொண்ட காம ஆசையால் அவளைக் கொன்று பழி கொண்ட சதிகார மந்திரவாதிக்குத் தண்டனை.

இதோ பணத்தாசையில் பாவத்துக்குத் துணை நின்ற முரடர்கள் மூவருக்குத் தண்டனை. இதோ காவலனைக் காக்கும் கடமையில் இருந்து தவறிய அரசடியானுக்குத் தண்டனை.

ஐய்யய்யோ! எத்தனை சாவுகள்! எத்தனை தண்டனைகள்! ஏ தெய்வமே! அத்தனை பேருக்கும் நீ கொடுத்த தண்டனை இதுவானால் நான் என்ன குற்றம் செய்தேன்.? நான் கடந்தக் காலத்தில் இந்தக் கன்னியின் வாழ்வைக் குலைத்தேனோ? அதனால் எனக்கு இக்கொடிய தண்டனையோ? இதோ, இதைக் கேட்க உன்னிடமே வருகிறேன்.

இவ்வாறு புலம்பி நெடுநேரம் அழுது கொண்டிருந்த அரசி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய இறுதி கடமைகளில் மனம் கொண்டாள். ஆனால் சடங்குகளுக்குத் தேவையான பூ, சந்தானம், விபூதி, நெருப்பு இவைகளுக்கு இந்த நள்ளிரவில் எங்கே போவாள்? யோசிக்கிறாள், ஏன் அவள் கண்ணில் நீர் இல்லையா? பாள் இல்லையா? நெஞ்சில் நெருப்பு தான் இல்லையா? கிரியைகளைத் தொடங்கினாள். ஒரு முடிவுக்கும் வந்துவிட்டாள்.

கணவன் உடல் மேல் விழுந்தாள்

கண்ணீரால் குளிப்பாட்டினாள்

தலை எடுத்து ஒட்டி வைத்தாள்

பூமியிலே மண் எடுத்து

பூசிவிட்டாள் நெற்றியிலே

தனங்களிலே பால் வடித்து

சந்தனமாய் பூசிவிட்டாள்

மணிமாலை அத்து சேர்த்து

மலர்மாலையாக போட்டாள்

குழந்தைகளின் வாயமுதத்தை தான் எடுத்து

வாய்க்கரிசியாகப் போட்டாள்

வட்டமிட்டாள் குழந்தையுடன்

வாழ்வை இனி முடிப்பேன் என்றாள்.

இவ்வாறு ஈமச்சடங்குகளை முடித்துக் கொண்டிருந்த நிலையில், தன் இரு குழந்தைகளையும் கையில் தாங்கியபடி, அங்கே மௌனமாய் ஜெபம் செய்து கொண்டும் பார்த்துக் கொண்டும் இருந்த ராக்கமையிடம் ஓடி வந்தாள். இரு குழந்தைகளையும் அவள் முன் வைத்துவிட்டு வேறு எதும் பேசாமல் மீண்டும் கணவன் சடலத்தை நோக்கி ஒருவித வெறியுடன் ஓடினாள்.

கண்மலரைக் காலில் ஒற்றி

கணவனுக்கு பூஜை செய்தாள்

அத்தெடுத்தாள் தாலி தன்னை

அடிகளிலே போட்டு அழுதாள்

நெஞ்சக் கனலால் எரித்தாள்

நீராக்கி முடித்து விட்டாள்

கங்கை என பெருகி வரும்

கண்ணீரால் கரைத்து விட்டாள்.

வானவரை நிமிர்ந்து பார்த்தாள்

வாழ்வை இனி முடிப்பேன் என்றாள்

கடம்பமரம் தன்னில் முட்டி

குடமுடைத்து உயிரும் விட்டாள்

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாதோர் வருவாரோ? ஆனால் நாம் அங்கு போகத் தடையேதும் இல்லையே!

ஆம்! வீரத் தளபதியின் மகளாய் பிறந்து, வீரனுக்கு மனைவியாகி, வீர மாதாவாக அரசு புரிந்த அம்மன்கோ வீர மரணத்தை விரும்பியதில் வியப்பு இல்லையே! தன் தலையை குடமாக உடைத்து மடிந்துவிட்ட அந்த வீரமன்கையே இன்று நாம் வணங்கும் ராசாத்தி அம்மன்.

இவ்வாறு அந்தக் கொடூரமான இரவும் கழிந்தது. காலைக் கதிரவன் உதித்து காயத் தொடங்கிவிட்டான். மறுநாள்,

எல்லாம் அறிந்த தெய்வமும் ஏதும் அறியாத குழந்தையும் ஒன்றே. ராக்கம்மையார் அந்த மரத்தின் கீழ் ஒரு பகுதியில் மௌனமாக ஜெபித்துக் கொண்டிருந்தாள். அருகிலேயே குழந்தைகள் கிளியுடன் விளையாடிக் கொண்டிருந்தன.

கரிசல்குளம் குளக்கரை ஒரு கொலைக்களமாக மாறி அங்கே பலர் மாண்டு கிடப்பதை அங்குள்ள மக்கள் அறிந்தார்கள்.

அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து பரிதாபம் அடைந்தார்கள். பலர் கண்ணீர் வடித்தனர். அந்த இடத்தில் பெண்ணொருத்தி பயப்படாமல் ஜெபித்துக்கொண்டும், இரண்டு குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டும், ஒரு கிளி பக்கத்தில் இருக்க, யாருடனும் எதுவும் பேசாமல் மௌனமாக இருப்பதையும், பார்த்து வியந்தனர். கொலைகளத்தில்  நமக்கேன் வம்பு என்று மௌனமாகவும், அதிர்ச்சியிடனும் வீடு திரும்பினர்.

அப்போது ஒரு மூவர் குழு அங்கு வந்தது. அவர்கள் அங்கு நடந்த விசயங்களை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு, ராக்கம்மையாரின் அருகில் சென்றனர்.

அவரை நெருங்கியதும் ராக்கம்மையார் கண்விழித்து, “மக்களே வாருங்கள். உங்களைக் காணவே இங்கு நான் தவம் செய்கிறேன். உங்களின் பூர்வீகம் துளு நாடு என்பதை நான் அறிவேன். இங்கே இறந்து கிடப்பதில் நாழ்வர் துளு நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அந்நாட்டு அரசனும் அரசியாரும் அரசடியானும் ஆவார்கள். இன்று விமோசனம் பெற்று தெய்வம் ஆனார்கள். இவர்கள் உங்களுக்கு குலதெய்வமாகும் தகுதி படைத்தவர்கள். ஆகவே இவர்களை குலதெய்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சிவராத்திரியிலும் வணங்கி வாருங்கள். இதனால் உங்கள் வாரிசுகள் நன்மை அடைவார்கள். முதலில் இந்த நால்வரையும் அடக்கம் செய்து வாருங்கள்.” எனக் கூறினாள்.

அங்கிருந்த பேசும் கிளியும் அதை ஆமோதித்தது. அம்மையாரின் சொல்லை ஏற்றுக் கொண்ட மூவரும் முறைப்படி நால்வரையும் அந்த இடத்திலேயே அடக்கம் செய்து சடங்குகள் முடித்தனர்.

மீண்டும் ராக்கம்மையிடம் வந்து, “தாயே, நீங்கள் யார்? இக்குழந்தைகள் யார்? இவ்வளவு அழகாக பேசும் கிளியை யார் வளர்த்தது? இக்கொலைகள் மர்மம் என்ன? நாங்கள் ஏன் இவர்களை குலதெய்வமாக வணங்க வேண்டும்? தயவு செய்து இதற்கான பதிலைக் கூற வேண்டும்.” எனப் பணிந்து வணங்கினார்கள்.

அதை ஏற்றுக் கொண்ட அம்மையார் முதலில் தானும், கிளியும் யார் யார் எனக் கூறினார். அதைக் கேட்ட மூவரும் மனம் மகிழ்ந்து தடால் என்று கீழே விழுந்து வணங்கி எழுந்தனர். பிறகு இக்கதையில் உள்ளவாறு விவரங்களை எல்லாம் ஆதியோடு அந்தமாக கூறிமுடித்தார். மேலும் ஒரு மனிதனைப் பெற்றவனும் குடியின் மகன் என்பார்கள். அரசனும் என் குடிமகன் என்பான். அது தவிர தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்பதாலும் குலதெய்வமாக வணங்கும்படி கூறினேன். நீங்கள் அவ்வாறு வணங்கும்போது நானும் கிளியாக உள்ள கருப்பனும் அவ்விடத்தில் இருப்போம். எனக் கூறி முடித்தார்.

அப்படியே செய்து வருவோம் என மூவரும் பவ்யமாய் கூற, அவர்களை ஆசீர்வதித்துவிட்டு இருக்கையிலிருந்து எழுந்து இரண்டு குழந்தைகளுடனும், கிளியாகிய கருப்பனுடனும் குதிரை ஏறிசென்றார் ராக்கம்மையார். 

*** 

இதை முழுமையாக படித்து முடித்த உங்களின் இல்லங்களில், நிறைந்த செல்வமும், நீங்காத நிம்மதியும், பால் மணம் மாறாத மழலைச் செல்வங்களும் நிறைந்து இருக்க ராசாத்தி அருள் பாவிப்பாளாக… 

 

Leave a Reply

error: Content is protected !!