Kalangalil aval vasantham 29

காரிலிருந்து இறங்கிய ரவி தன் முன்னால் கம்பீரமாக இருந்த ஜுபிடர் ஸ்கொயரை உணர்வுகளை துடைத்துக் கொண்டு பார்த்தான். மூன்று ஏக்கர் சாம்ராஜ்யம்! மிக முக்கியமான அரசியல் கேந்திரம். இதன் உரிமையாளர்களுக்குத்தான் இந்த கேந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை. இதை பயன்படுத்த தெரிந்தவன், தான் ஒருவன் தான் என்பதில் இதுவரை அளவில்லாத பெருமை இருந்தது அவனுக்கு.

தடையாக இருந்த ஸ்ரீமதியை நிரந்திரமாக விலக்க முடிந்தது. மனைவியை தன் தாளத்துக்கு ஏற்ப ஆடும்படி செய்ய முடிந்தது. மாதேஸ்வரனை கைக்குள் வைத்துக் கொண்டு அவ்வப்போது குட்டியபடியே இருக்க முடிந்தது. ஆனால் இத்தனை நாள் வரை செல்லாக்காசாக இருந்த ஷானை இனியும் அப்படி வைக்க முடியாது என்று தோன்றியது.

கோபம் தலைக்கேறியது.

காலையில் ஷான் கூறியவை நினைவிலிருந்து கொண்டு அவனை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தன.

ஸ்வேதாவின் தந்தையை இந்தளவு அவமானப்படுத்திப் பார்த்திருக்கிறானே, தன்னுடைய விஷயமெல்லாம் தெரிந்தால் என்ன செய்வான் என்ற கேள்வி அவன் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது.

முதல் நொடி ஒருவித தயக்கமிருந்தது. ஆனால் அடுத்த நொடி எதற்கும் துணிந்து விட்டான் அவன். இத்தனை வருடங்களாக முயன்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கையில், அதை ஒரே நாளில் காவு கொடுக்க சைலேஷ் போல அவனென்ன இளிச்சவாயனா?

முடியாது… முடியவே முடியாது!

மனதுக்குள் உறுதியாக கூறிக் கொண்டான்.

சைலேஷ் பேசியை எடுக்கவே இல்லை. அதனால் மாயாவை பிடித்து கன்னாபின்னாவென வாங்கியும் விட்டிருந்தான்.

“இனிமே ஜாக்கிரதையா பார்த்துக்கறேன் ரவி.” என்று அவள் எவ்வளவு சொன்னாலும், ரவியின் கோபம் அடங்கவில்லை. நடந்ததை கொஞ்சமாகத்தான் சைலேஷ் மாயாவிடம் கூறியிருந்தார். அதை அவர் இவனிடம் கூறியபோது, எப்படி ஏமாளித்தனமாக ஷானின் வலையில் வீழ்ந்து இருக்கிறார் என்று கொதிக்கத்தான் முடிந்தது.

ரவிக்கு சைலேஷ் இந்த வகையில் ஏமாந்தது மட்டும் தான் தெரியுமே தவிர, அவரது பேசியை ஹேக் செய்யத்தான் இந்த விஷயம் நடந்தது என்கிற உண்மை தெரியாது. அதோடு சரணின் பேசியும் ஹேக் செய்யப்பட்டு, பாதி திட்டங்கள் வெளியேறிக் கொண்டிருப்பதும் தெரியாது.

சற்று நேரத்துக்கு முன்பு தான் சரண் பேசியில் அழைத்து ஏலத்தில் எடுக்க வேண்டிய வீரர்களின் பட்டியலை கொடுத்தார்.

“உங்களுக்கு கை எப்படி இருக்கு சரண் சர்?”

“இப்ப ஓகே ரவி.” என்றவர், “என்னோட பேபி எப்படி இருக்கா?” என்று காதலாக கேட்க, ரவி தலையிலடித்துக் கொள்ளாத குறை!

“சர்… ப்ரீத்தியை மறந்துடுங்க. அவ மேல கை வைச்சா மொத்தமும் பாழாகிடும்.”

“அதை நான் பார்த்துக்கறேன் ரவி… நீ டென்ஷனாகத!”

“நான் டென்ஷனாக ஒண்ணுமில்ல சரண் சர். இப்படி நீங்க நினைக்கறீங்கன்னு தெரிஞ்சாலே ஷான் சும்மா விட மாட்டான். சைலேஷை நடுரோட்டுல அரைகுறையா அலைய விட்டதுன்னு யாருன்னு நினைக்கறீங்க?” என்று ரவி கேட்க,

“யாரு?” அவரும் சைலேஷ் விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ந்து போயிருந்தார்.

“ஷான் தான்.”

“வாட்…”

“பின்ன? ஸ்வேதா அவனை கே’ன்னு சொன்னதுக்காக அவளோட அங்கிளை இப்படி பண்ணிருக்கான். அடுத்தது ஸ்வேதாவுக்கும் எதாவது வெச்சுருப்பான். அப்படிபட்டவன், ப்ரீத்தி மேல யாரவது கை வெச்சா சும்மா விட்ருவானா? செத்தீங்க…” என்று உண்மையை தான் எடுத்துக் கூறினான் ரவி.

“சும்மா பூச்சாண்டி காட்டாத மேன். ப்ரீத்தி ஒன்னும் அந்தளவுக்கு டெரர் இல்ல. என்னோட ஸ்வீட் ஹார்ட்…”

“மண்ணாங்கட்டி. இன்னொரு தடவை ஸ்வீட் ஹார்ட், மயிறு ஹார்ட்டுன்னு சொன்னா நானே பிச்சுருவேன். ப்ரீத்திய விட்டு தொலைங்க சரண் சர்…” என்று கடுப்படிக்க, அதற்கும் மேல் பேசி வாங்கிக் கட்டிக் கொள்ள அவரென்ன முட்டாளா?

“ஓகே ஓகே…” என்றவர், நேரடியாக ப்ரீத்தியிடம் பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டார். தன் அழகு பெட்டகம் தனக்காக இருக்க, இவனென்ன தானாவதி?

“லிஸ்ட் சொல்லுங்க சரண் சர். மீட்டிங் லிஸ்ட்டும் உங்க லிஸ்ட்டும் கோரிலேட் ஆகுதான்னு பார்க்கிறேன்…” என்று கூற,

சரண் ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் குறிப்பிட்டு அவர்களின் ரேஷியோ எவ்வளவு என்பதையும் குறிப்பிட்டார். கடைசியாக ஒரு வீரரை குறிப்பிட்டு, “அவரை மட்டும் எந்த காரணம் கொண்டும் எடுத்துட வேண்டாம் ரவி. அவனோட பெட்டிங் ரேஷியோ ஒன்னுக்கு ஆயிரம்.” என்று கூறியவர் இன்னொரு பத்து பேரை குறிப்பிட்டு அவர்களையும் அணிக்கு வேண்டாம் என்று கூற, அத்தனையும் காதில் வாங்கிக் குறித்தும் கொண்டான்.

இவர்களை போன்ற புக்கீஸ் விளையாடுவதுதான் விளையாட்டு, திடலில் விளையாடுவதெல்லாம் ஒரு விளையாட்டா?

இவர்கள் பேசிக்கொண்டிருந்த அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான் ஷான், ஒட்டு கேட்பு கருவி மூலம்!

உடன் ஆல்வின், ப்ரீத்தி, மகேஷ்!

“ஓகே சரண் சர். இப்போதைக்கு யார் யார டீம்ல எடுக்கறதுன்னு மட்டும் தான் இப்ப மீட்டிங்ல பேச போறோம். எப்படியும் ஏலத்துக்கு ஷான் வருவான். அதுக்கு நான் அவனை ரெடி பண்ணனும். நான் சொல்றதை எல்லாம் அவன் கேக்கற மாதிரி செய்யனும். இந்த சீசன் ஐபிஎல் முடியட்டும், ஷானை என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்…” என்று ரவி கூற,

“இல்ல ரவி. ஷான் அங்க இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு டேஞ்சர் தான். முடிஞ்சா ஏதாவது பண்ணி ஒரு மூணு மாசம் படுக்க வெச்சுடலாம்…” சரண் சொன்ன யோசனையும் ஒரு மாதிரியாக சரியாகத்தான் வருமென்று தோன்றியது.

ஷான் விஷயத்தில் அவன் ஏமாற தயாராக இல்லை. எந்த நேரமானாலும் வெடிக்கும் அணுகுண்டு அவன் என்பதில் அவன் தெளிவாக இருந்தான்.

“நீங்க சொல்றதும் சரி தான் சரண் சர். யோசிக்கறேன்…”

“அப்புறம் ரவி… இன்னொரு விஷயம்.” என்று ஆரம்பிக்க, “சொல்லுங்க சரண் சர்…” என்று ஊக்கினான் ரவி.

“ஹேக்கர்ஸ் ரெண்டு பேரை நாம என்கேஜ் பண்ணோம் இல்லையா?”

“ஆமா…” என்றவனுக்கு நெற்றி சுருங்கியது. இதை எப்படி மறந்தோம் என்று!

“அவங்க கிட்ட இருந்து எந்த கம்யுனிகேஷனும் இல்ல. பண்ண வொர்க்குக்கு இன்னும் பணமெதுவும் வாங்கவுமில்ல. அட்வான்ஸ் பண்ணதோட சரி. என்னன்னு கொஞ்சம் விசாரி ரவி…” என்றார்.

“சியூர்… என்றவனுக்குள் குழப்பம் கூடு கட்ட துவங்கியது.

அவர்களது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“அவங்க ரெண்டு பேரும் எங்க இருக்காங்க மகேஷ்?” மகேஷை பார்த்து ஷான் கேட்க,

“இப்போதைக்கு சென்னைல நம்ம பாதுகாப்புல தான் இருக்காங்க சர். நீங்க என்ன பண்ண சொல்றீங்களோ அதை பண்ணிடலாம்.” என்று மகேஷ் கூறினான்.

“ரவி எப்படியும் அவங்களுக்கு கால் பண்ணுவான். அடென்ட் பண்ணி பேசட்டும். கேஷுவலா பேசற மாதிரி பார்த்துக்க சொல்லு மகேஷ்.” என்று ஷான் கூற,

“ஓகே சர்.” என்றவன், அவனது பேசியை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.

***

செல்பேசியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு மீட்டிங் ஹாலை நோக்கிப் போனான் ரவி. ஐபிஎல் டீம் மேனேஜ்மென்ட்டை சார்ந்த அனைவரும் குழுமியிருந்தனர்.

ஜுபிடரின் கீழ் சப்சிடரி கம்பெனியாக செயல்பட்டுக் கொண்டிருந்தது சென்னை டீம். அதற்கென்று தனியாக அட்வைசரி கமிட்டி, பிளானிங் கமிட்டி என்று அத்தனையும் உண்டு. ஆனால் இதுநாள் வரை அங்கு முடிவுகள் அனைத்தும் ரவியால் மட்டுமே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மாதேஸ்வரனும் கூட டம்மியாகதான் இருந்தார்.

இவ்வளவுக்கும் ரவி அந்த போர்டில் உறுப்பினரில்லை, மேனேஜ்மென்ட் இல்லை, சம்பளம் கூட அவனுக்கென்று தனியாக இல்லை. வைஷ்ணவி, ஷான், மாதேஸ்வரன் உடன் கிருஷ்ணன் நாயர், சாலமன் ஆகிய ஐந்து பேர் மட்டிமே இயக்குனர்கள். ஷான் இதுவரை கூட்டத்தில் கலந்து கொண்டதில்லை. மாதேஸ்வரன் ரவியை எதிர்த்து பேசியதில்லை. வைஷ்ணவி, அவள் சார்பாக தான் ரவி என்று கூறி விடுவாள். மூவரும் இப்படியிருக்கும் போது நாயரும் சாலமனும் மட்டும் பேசி என்னாகப் போகிறது என்று ரவி சொல்வதற்கு மாதேஸ்வரனை போலவே தலையாட்டிவிட்டு போய் விடுவார்கள்.

இதுவரை இதுதான் நடந்தது.

அதை தாண்டி ஷான் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் இதுவென்பதால், அனைவருக்கும் ஒருவித பதட்டம் இருந்துகொண்டிருந்தது.

இயக்குனர்களோடு, டீம் கோச், பௌலிங் கோச், பேட்டிங் கோச், டீம் மேனேஜர் என்று இன்னும் சிலரும் குழுமியிருந்தனர். ஒவ்வொருவருக்கும் தனி மைக். அவர்கள் முன் தண்ணீர் பாட்டில், நோட்ஸ் எடுக்க சிறு குறிப்பேடு என்று மீட்டிங்கிற்கு தேவையான அனைத்தும் தயாராக இருந்தது. அவரவர்களின் உதவியாளர்கள் எல்லாம் அவர்களுக்கு பின்னால் அமர்ந்திருந்தனர்.

நடுநாயகமாக மாதேஸ்வரன் அமர்ந்திருந்தார்.

உள்ளே நுழைந்த ரவி, அனைவரையும் பார்த்தபடி அமர்ந்தான். டீம் ஆட்கள் அவனை மரியாதையாக பார்க்க, ஷானின் வருகைக்காக மாதேஸ்வரன் காத்திருந்தார்.

“லேட்டாகுமா மாமா?” மாதேஸ்வரனை நோக்கி குனிந்தபடி கிசுகிசுப்பாக கேட்டான் ரவி.

“இல்ல மாப்ள. இங்க தான் இருக்கான். வந்துட்டே இருக்கேன்னு சொன்னானே…” என்று வாசலைப் பார்க்க, சஷாங்கன் கம்பீரமாக உள்ளே நுழைந்தான். உடன் ப்ரீத்தி!

அவனது முகத்திலும் நடையிலும் பதட்டமுமில்லை, தயக்கமுமில்லை!

அது அவனது இடம் என்பதை அழுத்தமாக உணர்த்தியது அவனது முகபாவம்!

இருவரது காதிலும் ஏர்போட்ஸ். ப்ரீத்தியின் கைகளில் லேப்டாப். முந்தைய இரவே டீமின் முழு வரலாறையும், செய்ய வேண்டிய மாற்றங்களையும், கவனிக்க வேண்டிய பகுதிகளையும் பற்றி மாதேஸ்வரனிடம் கலந்துரையாடியிருந்தான். எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், கிரிக்கெட்டை மட்டும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. முடிவுகளை ரவி தான் எடுப்பான் என்றாலும், எதுவொன்றும் அவரது கவனத்துக்கு வராமல் நடந்தில்லை. அதனால் ஒவ்வொன்றையும் விரிவாக விளக்கியிருந்தார். அதனால் டீம் பற்றிய ஒரு புரிதல் வந்திருந்தது.

மாதேஸ்வரன் அழகான ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். பெரும்பாலானவர்கள் தமிழ் தான் என்றாலும், கேப்டன், கோச் போன்றோருக்கு தமிழ் தெரியாது என்பதால் ஆங்கிலம் தான் அங்கு இணைப்பு மொழி!

“அனைவருக்கும் வணக்கம். நாம் இங்கு கூடியிருப்பது, எதற்காக? வரும் ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த வீரர்களை நாம் தேர்ந்தெடுப்பது என்பதை பற்றி விவாதிக்க… அதற்கு முன் எனது மகனை இங்கு அறிமுகம் செய்ய நினைக்கிறேன்.” என்றவர், சஷாங்கனை காட்டி, “இவர்தான் எனது மகன் சஷாங்கன். இவ்வளவு நாள் அணி நிர்வாகத்தினுள் வரவில்லை. ஆனால் இனிமேல் இவர்தான் அனைத்தையும் நிர்வகிப்பார்.” என்று அறிவிக்க, அனைவரது முகத்திலும் வேறுவேறு மாறுதல்கள்!

இது மிகப்பெரிய மாற்றமல்லவா!

இங்கு ஆரம்பிக்கும் மாற்றம் தான் முழு ஜுபிடரிலும் எதிரொலிக்கும் என்பதையும் தாண்டி, ஸ்டாக் மார்கெட் வரை இந்த அறிவிப்பு ஆதிக்கம் செய்யும் என்பதை அறிந்து தான் மாதேஸ்வரன் ஆரம்பித்தார். அவருக்கு தயக்கமொன்றுமில்லை. நிர்வாகம் அவர்கள் ரத்தத்தில் ஊறியது. இதை தான் செய்ய போகிறேன் என்பதை மகனுக்கும் முன்னமே தெரிவித்திருந்தார். அவனும் அதை ஒப்புக்கொண்டிருந்தான்.

அவன் ஒப்புக் கொண்டால், எந்த காரணம் கொண்டும் அதை சரியாக செய்துமுடிக்கத்தான் பார்ப்பான் என்பதை அறிந்து தான் மாதேஸ்வரன் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

ஆனால் ரவி கொதிப்பின் உச்சநிலையை தாண்டிவிட்டான்.

இத்தனை வருடங்களாக இலவு காத்த கிளியாக ஒருவன் காத்துக் கொண்டிருப்பானாம், மகன் வந்தவுடன், தட்டைத் தூக்கி அவனிடம் கொடுப்பதை போல நிர்வாகத்தை தூக்கி அவனிடம் கொடுப்பாராம். என்ன கதை இது என்ற எரிச்சல்.

ஜுபிடர் நிர்வாகத்தை பற்றிய பெரிய கவலை அவனுக்கில்லை. ஆனால் சென்னை அணியின் நிர்வாகத்தையும் ட்ரஸ்ட் நிர்வாகத்தையும் அவனால் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்துவிட முடியாது. அவனது கனவு, லட்சியம், ஆசை, பசி, ஏக்கம் என்பது அனைத்தும் இதன் நிர்வாகம் தான்!

முழுமையாக நிர்வாகம் தனது கைக்கு வந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருத்த நேரத்தில், உடைந்த தாழியை போல ஆகிவிட்டதை நினைக்கும் போதே வெப்பம் அவனை சூழ்ந்தது!

ஒரு வார்த்தை கூட தன்னிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக மாதேஸ்வரன் முடிவெடுப்பவரல்ல. மகன் அவரிடம் மீண்டும் வந்துவிட்டதில் தலை கால் புரியவில்லை அவருக்கு என்று கொதித்தான்.

ஒரு சிறு புன்னகையோடு தந்தை கூறியதை ஏற்றுக் கொண்டவன், “அனைவருக்கும் வணக்கம். உங்களனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இங்கு நிறைய பேருடன் பழக வேண்டி இருக்கிறது. விரைவாக நாம் அனைவரும் ஒன்றாவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. தந்தைக்கு பின் மகன் என்ற ஏணியில் ஏறி வருவது எனக்கும் ஒப்புதல் இல்லாதது. ஆனால் என் தந்தைக்கும் ஓய்வு தேவை என்பதால் இந்த நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொள்ள இருக்கிறேன். எனது தந்தை, எப்போதும் போல இருப்பார். திரு. ரவி, அதாவது எனது சகோதரியின் சார்பாக நிர்வாகம் செய்யும் எனது மைத்துனரும் எனதுடன் இருப்பார். இத்தனை நாட்கள் அவர் வழிநடத்தியதுதான் இந்த நிர்வாகத்தின் வெற்றிக்கு காரணம். கிரிக்கெட்டை இந்தளவு லாபத்துக்குரியதாக மாற்ற முடியும் என்று செய்து காட்டியவர்களுள் இவரும் ஒருவர். இவர்கள் முன்னெடுத்து வைத்ததுதான் இன்று ஆலமரமாகி தழைத்து நிற்கிறது. அதனால் திரு. ரவி அவர்களுக்கு நன்றி கூறிக் கொண்டு, எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கக் கேட்டுக் கொள்கிறேன். மற்றவை அனைத்தும் எப்போதும் போலவே தொடரும்…”

நுனிநாக்கு ஆங்கிலத்தில், தெளிவாக பேசிய சஷாங்கனை ஆச்சரியமாக பார்த்தார் மாதேஸ்வரன். யாரையும் விட்டுக் கொடுக்காமல், அதே சமயம் சொல்ல வந்ததையும் திருந்த சொல்லி, அனைவரையும் அரவணைத்துக் கொண்டு போகும் அந்த பாங்கை நிச்சயம் அவர் எதிர்பார்க்கவில்லை. அவரது மனம் கூறியது, இவன் மிகச்சிறந்த நிர்வாகி என்பதை!

பெருமையாக மகனைப் பார்த்தார், சாலமனையும் நாயரையும் பார்த்தபடி!

‘பார்த்தீர்களா… எனது மகனை!’ என்று கூறியது அந்த பார்வை!

பேச்சற்று போய் அமர்ந்திருந்தான் ரவி. இந்த வார்த்தைகளை அவன் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. இனி எப்படி பிரச்சனையை கிளப்புவது என்று தெரியவில்லை. ஷான், பேசியது அனைத்தும் அலங்காரம் என்பதை அவனதுள்ளம் உணர்ந்தது. ஆனால் ஆதாரம்?

அதுவரை ஏனோதானோவென இருந்தவன், மனதளவில் எச்ச்சரிக்கையாகினான்.

இவன் ஆபத்தானவன்!

உடனடியாக களையப்பட வேண்டியவன்!

சரண் சொல்வதை போல எதாவது செய்து ஆறு மாதங்கள் படுக்கையில் இருந்தால் மட்டுமே, தான் நினைத்தது நடக்கும் என்பது புரிந்தது!

ஷானுக்கு ஆதரவாக ஒரு புன்னகையை பதிலாகக் கொடுத்தான்!

பேச வேண்டிய விவரங்களையும், அணி தேர்வு பற்றிய குறிப்புகளையும் கொண்ட ஃபைலை திறந்து, லேப்டாப்பை ஷானுக்கு முன் வைத்துவிட்டு பின்னாலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள், சிறு புன்னகையோடு!

ஒவ்வொருவரும், அவர்களது எண்ணங்களை கூற, அவை அனைத்தையும் கேட்டுக் கொண்டான் ஷான். முக்கியமானவற்றை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி. ரவி கூறிய அனைத்து விவரனங்களையும் உள்வாங்கிக் கொண்டான். அதை அப்படியே ஆமோதிக்கவும் செய்தான். ரவி மற்றவற்றில் எப்படியோ, இத்தனை ஆண்டுகளாக அணியை வெற்றிகரமாக கொண்டு போக உதவியிருக்கிறான். அதை அவனால் மறுக்க முடியாது.

அதை தவிர, மாக் ஆக்ஷன் எனப்படும் மாதிரி ஏலத்தை நடத்திப் பார்த்தார்கள்.

ஷான் ஆரம்பித்தான், “உலகம் முழுக்க ஐபிஎல் ரெஜிஸ்டரில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட ஆயிரத்து இருநூறு விளையாட்டு வீரர்களிலிருந்து ஐநூற்று தொண்ணூறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள். அதில் இந்திய வீரர்கள் முன்னூற்று எழுபது, வெளிநாட்டு வீர்கள் இருநூற்று இருபது. மார்க்கீ வீரர்கள் பத்து. முந்தைய நமது அணியிலிருந்து நாம் தக்க வைத்துக் கொள்ள போவது நான்கு வீரர்கள். கேப்டன் எம்எஸ் தோனி, ரவிந்தர ஜடேஜா, மொயின் அலி, ருத்ராஜ் கெய்க்வாட். இனி அணியை பலப்படுத்த அன்கேப்ட் விளையாட்டு வீரர்களை நாம் பயன்படுத்த போகிறோமா? அல்லது கேப்ட் வீரர்களா? மார்க்கீ வீரர்களில் நாம் எத்தனை பேரை ஏலத்தில் எடுக்கலாம்? ஒவ்வொரு அணிக்கும் ஒதுக்கப்பட்ட தொகையான தொண்ணூறு கோடியில், தக்க வைக்க ஒதுக்கப்பட்ட தொகையை கழித்தால், மீதம் நாற்பத்தியெட்டு. இந்த தொகையில் எத்தனை வீரர்களை நாம் ஏலத்தில் எடுக்க முடியும்? அதிலும் இந்த முறை நாம் முழு டீமையும் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்போது எடுக்கப்படும் வீரர்கள் தான் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பெரும்பாலும் நமக்காக விளையாடப் போகிறவர்கள். அதனால் உங்கள் அனைவரையும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.” என்று கேட்க,

“நாம் ஏன் அணியின் லைன் அப்பை மாற்ற கூடாது? சீனியர் வீரர்கள், கேப்ட் வீரர்களை காட்டிலும், அன்கேப்ட் வீரர்களில் திறமையான பல வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை பயன்படுத்திக் கொண்டால் நமது பர்ஸ்ஸில் பணம் மிச்சமாகுமே?” ரவி அவனது கருத்தை கூற,

“இதுவும் நல்ல யோசனை தான். இரண்டு மார்க்கீ வீரர்களை தலா பதினைந்து கோடி கொடுத்து எடுப்பதை காட்டிலும் ஐந்து அன்கேப்ட் வீரர்களை எடுத்து அவர்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்தால், இப்போதில்லை என்றாலும் அடுத்தடுத்த போட்டிகளில் நல்ல பலன்களை கொடுப்பார்கள். மார்க்கீ வீரர்களை தேர்வு செய்வது என்பது வெளிப்படையாக விளம்பரத்தை வேண்டுமானால் தேடித்தரும். ஆனால் பலனை தருமா என்று பார்த்தால் சந்தேகம் தான். செலவு செய்து வாங்கிய வீரர் சரியாக விளையாடவில்லை என்றால் நஷ்டம் தான். ஆனால் பார்கெயின் பையில் கூட ஆச்சரியங்கள் காத்திருக்கலாம். உதாரணம் அன்கேப்ட் வீரர்களிலிருந்து கிடைத்த ஹர்திக் பாண்டியா போன்றவர்கள்…” அணியின் பயிற்சியாளர் தனது கருத்தை தெரிவித்தார்.

“ஆமாம். இப்போது ஹர்திக் பாண்டியாவை குஜராத் அவுட் ஆப் தி ஆக்ஷனில் வாங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு அதுவொரு நல்ல பிக். ஏனென்றால் பாண்டியாவுக்கு அது ஹோம்டீம் அதுவுமில்லாமல் அவர் நல்ல பினிஷர். அதனால் அவருக்கு அதரவு அதிகம் இருக்கலாம். எல்லாருமே ஒரு நல்ல ஸ்டார்ட்டர், க்ளாசி மிடில் லைன் மற்றும் ஈசி பினிஷருக்கு தான் போவார்கள்.”

“ஆமாம்… பழையனவற்றை கழித்து விட்டு புதிய ரத்தத்தை செலுத்த வேண்டிய ட்ரான்ஷிஷன் காலநிலையில் நாம் இருக்கிறோம்…” அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்.

“சுரேஷ் ரெயினா தற்போது ஃபார்மில் இல்லை. அது கவலைக்குரியது. அவரை எடுக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்… அதிலும் அடுத்த பத்தாண்டு என்று யோசிக்கும் போது அவரது பார்ம் என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது. இந்த மாதிரி நேரங்களில் அன்கேப்ட் வீரர்களை ஆக்சிலரேட்டட் செட் பார்கெயின் பை யில் மலிவாக எடுத்து விடலாம், அவர்களின் பேஸ் ப்ரைஸில்.” ரவி கூற,

“அது போல ஃபாஃப் டீ ப்லஸ்சியை ஏலத்தில் எடுக்க பெங்களூரு ஆர்வமாக இருப்பதாக கேள்வி. அவரை நாம் எடுக்க வேண்டுமா அல்லது…” என்று பயிற்சியாளர் கேட்க,

“போன முறை அவரை தட்டி தூக்கியது நிச்சயமாக நமக்கு ஜாக்பாட் தான். அதுவும் பார்கெயின் பை யில் ஒன்னரை கோடிக்கு அவரை வாங்கியிருக்கிறோம். அவரை தக்க வைத்திருக்கலாம். ஆனால் நமக்கு கண்டிப்பாக செலவு அதிகமாகும். அதுவுமில்லாமல் அவரது வயதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அது போல தான் அம்பதி ராயுடுவும். ஆனால் இந்த முறை ராயுடுவுக்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று தான் நினைக்கிறேன்.” ரவி சற்று கறாராக கூறினான்.

அவனை பொறுத்தவரை ஒரு லிஸ்ட் வைத்துக் கொண்டான். அவர்களை மட்டும் எடுத்தால் போதுமென்பது போல.

கலந்துரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொன்றையும் குறித்துக் கொண்டான் ஷான்.