இளைப்பாற இதயம் தா!-1

iitsingle copy-4b435f04

இளைப்பாற இதயம் தா!-1

இளைப்பாற இதயம் தா!-1

வாரயிறுதியில் தேவகோட்டை வந்துவிட்டு பணிக்காக சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் மகள் கிரேஸ் ஐடாவிடம் அவளின் தாய் ஸ்டெல்லா, “நெக்ஸ்ட் வீக் சண்டே மார்னிங் சாந்தோம் சர்ச்சில மாப்பிள்ளை பையன் உன்னைப் பாக்க வரும்போது அம்மா எடுத்து கொடுத்திருக்கும் ட்ரெஸ் உடுத்திட்டு கொஞ்சம் மேக்கப் எல்லாம் போட்டுட்டுப் போ ஐடா.  ஏனோதானோன்னு போகக்கூடாது! என்ன அம்மா சொல்றது விளங்குதா?” மகளிடம் கேட்டபடியே மகளுக்கு வேண்டியதை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

“ம்… அப்புறம் அவங்க பாட்டி கேக்கறதுக்கு ஒழுங்கா வாயைத் திறந்து பதில் பேசணும்.  உம்முனு இருக்காம சாந்தமா பதில் பேசணும்” இப்படி ஸ்டெல்லா மகளிடம் அறிவுரைகளைக் கூறியபடி இருந்தார்.

“லெவன்” என்றவாறு சிரித்தபடியே ஐடாவும் தனது பொருள்களை எல்லாம் சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன கேக்கறேன்.  நீ என்ன சொல்ற?” ஸ்டெல்லா வினவ,

“ம்மா… இத்தோட லெவன் டைம்ஸ் சொன்னதையே சொல்லிட்டிருக்கீங்க… இன்னும் நான் கிளம்பறதுக்குள்ள எத்தனை முறைதான் சொல்லுவீங்கனு பாக்கறேன்” என்றாள் பொய் சலிப்போடு ஐடா.

“பையனோட பாட்டி நம்பர் சேவ் பண்ணிட்டதான?” ஸ்டெல்லா.

“ம்மா… முடியலை” என்றாள் ஐடா.

“என்ன முடியலை?” ஸ்டெல்லா.

“பாட்டி நம்பர் சேவ் பண்ணி ரெண்டு நாளாகுது”

 ‘பாட்டி நம்பருக்கே இந்த அக்கப்போருன்னா, பேரன் நம்பருன்னா அவ்ளோதான்னு தோண வச்சிருவாங்கபோலயே’ என்று தோன்றும்படியாக வளராத நிலையில் ஐடா இருப்பதைக் காணும் நமக்கே இப்படியும் ஒருத்தியா என்று ஐடாவின் மீது பரிதாபம் தோன்றத்தான் செய்யும்.

அதேநேரம் மகளின் முகத்தைப் பார்த்துவிட்டு அங்கு அவளின் உதவிக்கு வந்த ஐடாவின் தந்தை ஆல்வின், “அதெல்லாம் சேவ் பண்ணியிருப்பா.  நீ சொன்னதையே சொல்லாம அவளைக் கிளம்ப விடு.  பஸ்ஸூக்கு நேரமாகுது பாரு” மனைவியிடம் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைக் காட்டிக் கூறினார்.

“இவ அடுத்த வாரம் சாந்தோம் சர்ச் பக்கத்தில போயி நின்னுட்டு எனக்குக் கால் பண்ணி மட்டும் கேக்கட்டும்.  அப்புறம் இருக்கு உங்களுக்கு…” கணவனிடம் பாய்ந்தவர்,

மகளை நோக்கி, “கவனமாப் போகணும்.  ட்ராவல்ல எதாவது எமெர்ஜென்சின்னா… டிரைவர்கிட்ட சொல்லாம பஸ்ஸை விட்டு இறங்கிப் போயிறக்கூடாது.  கையில ஹேண்ட் பேக் இல்லாம கீழ இறங்கக் கூடாது.  பஸ் எவ்ளோ நேரம் நிக்கும்னு டிரைவர்கிட்ட கேட்டுட்டுத்தான் கீழ இறங்கணும்” இப்படி வழமையாக சொல்லக்கூடியவற்றை ஸ்டெல்லா பேச…

என்ன சொன்னாலும் தனது தாய் இப்படி சொல்லுவதை நிறுத்தப் போவதில்லை என்று புரிந்தவளாக தலையை ஒரு புன்சிரிப்போடு அசைத்தபடியே விரைவாக கிளம்புவதில் குறியாக இருந்தாள் ஐடா.

இது எப்போதும் நடக்கும் கூத்துதான் என்பதால் ஐடாவிற்கு பழகிவிட்டிருந்தது.

மூன்று வருடங்களாக கிரேஸ் ஐடாவிற்கு ஏற்ற மாப்பிள்ளை தேடும் படலம் நடந்து கொண்டே இருந்தது. நாட்டு வளர்த்தியைவிட கூடுதல் வளர்த்தி.  ஐந்தடி ஆறு அங்குலம்.

அனைத்தும் ஒத்து வந்தாலும் பெரும்பாலும் உயரத்தின் காரணமாகவே மாப்பிள்ளையை நிராகரிக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலை.

வளர்த்தி கூடுதலாக வந்தால், குடும்பப் பின்னணி பிடிக்காது போயிருந்தது.  இப்படியே ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் பதிந்து இறுதியாக திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட ராபர்ட் ரீகன் எனும் மாப்பிள்ளையின் வளர்த்தி, சொந்தத் தொழில் மற்றும் குடும்பம் என அனைத்தும் பிடித்துப்போக ஒரு வழியாக பெரியவர்கள் கூடிப்பேசி ஐடாவிற்கும் ரீகனுக்கும் திருமணம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை அடுத்தபடி முன்னெடுத்துச் செய்யலாம் என்கிற முடிவிற்கு வந்திருந்தனர்.

ஐடா, “ம்மா நீங்களும் அப்பாவும் பாத்து என்ன சொன்னாலும் எனக்கு ஓகேதான்.  நான் பாத்து எந்த மறுப்போ, சேஞ்சஸ் சொல்லப் போறதில்லை.  பின்ன எதுக்கு இந்த ஃபார்மலா பொண்ணு மாப்பிள்ளை பாக்கறதெல்லாம்?” என்று தாயிடம் கேட்டு ரீகனை நேரில் சென்று பார்ப்பதைத் தவிர்க்க எண்ணிய மகளிடம்,

“அப்டியெல்லாம் உன்னோட போக்குல விடமுடியாது ஐடா.  மாப்பிள்ளையோட அம்மா, அக்கா மட்டுந்தான் பாத்து முடிவு சொல்லியிருக்காங்க. மாப்பிள்ளையும், அவரோட பாட்டீயும் உன்னை போட்டோவுல பாத்தாலும் நேருல பாக்கணும்னு சொன்னதா பையனோட அம்மா சொன்னாங்க.  அதனாலதான் உங்கிட்ட இவ்ளோ தூரம் மெனக்கெட்டுச் சொல்லிட்டு இருக்கேன்” கண்டிப்பாக பேசிய ஸ்டெல்லா இனி இது சம்பந்தமாக மகள் மறுத்துப் பேசுவதை விரும்பவில்லை என்பதை தனது தொனியில் மகளுக்கு உணர்த்தியிருந்தார்.

ஐடாவும் அதன்பின் மறுக்கவில்லை.  ஆனால் ஸ்டெல்லா அதோடு விடாமல் அன்று உடுத்திச் செல்ல வேண்டிய ஆடை அணிகலன் முதல் அனைத்தையும் மகளிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தார்.

ஐடாவிற்கு மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்கிற எந்த வித எதிர்பார்ப்பும் இதுவரை இல்லை. ஆனாலும் மகள் அப்படி இருப்பதால் ஏனோ தானோவென்று மாப்பிள்ளை பார்த்துவிட முடியுமா?

ஒற்றை மகளின் எதிர்காலமல்லவா?  அதனால் ஸ்டெல்லா மற்றும் ஆல்வின் இருவரும் மிகவும் பொறுமையாகவும் அதேநேரம் தங்களின் மகள் வளர்ந்த விதத்திற்கு ஏற்ற வகையில் இருக்கக்கூடிய குடும்பமாகவும் தேடியதால்தான் இந்தத் தாமதம்.

கிரேஸ் ஐடா! பங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னையில் உள்ள ஐட்டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறாள். 

சந்தன நிறம்.  எந்த வித ஒப்பனையுமின்றி அழகாக இருப்பவள். கிரேஸ் அவளின் பெற்றோருக்கு ஒரே பெண்.  சிறுவயது முதலே மிகுந்த கட்டுக்கோப்போடு வளர்க்கப்பட்டவள். கல்வி அதனை விட்டால் வீடு என்று வளர்ந்தவள்.

முது அறிவியில் எம்சிஏ பட்டம் பெற்று கேம்பஸில் தேர்வான பிறகே தனித்தியங்க பழகிக் கொண்டாள்.  அதுவரை அவள் சார்ந்த அனைத்தையும் அவளின் பெற்றோரே கவனித்துக் கொண்டிருந்தனர்.

பணிக்குச் சென்ற ஒரு வாரத்திற்குப்பின் பணியிடத்தில் உள்ள நடப்புகளை இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியாமல், “ம்மா… எனக்கு இந்த இடம் புடிக்கலை” எனத் தாயிடம் புலம்ப, விசயம் என்னவென்று விசாரித்த தாய் ஸ்டெல்லாவிடம் தனது மனக்குமுறல்கள் அனைத்தையும் மறைக்காமல் கொட்டியிருந்தாள் கிரேஸ் ஐடா.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ஸ்டெல்லா, மகளின் பிடித்தமின்மைக்கான காரணத்தை பொறுமையாக கேட்டறிந்து கொண்டார். 

இதுவரை மகளை படிப்பு சார்ந்த புத்தகங்களைத் தவிர பைபிள் படிக்க மட்டுமே அனுமதித்து வளர்த்திருந்தனர். சமூக வலைத்தளங்களில் உலா வருவதோ, வீட்டில் முழு நேரமும் டிவி என்றோ வளராதவள்.  அதனால் உலக நிகழ்வுகள் பல அறியாமலேயே வளர்ந்திருந்தாள்.

வீட்டில்கூட படங்கள் பார்க்க அனுமதியில்லை.  வீட்டில் டிவி இருந்தாலும் அதில் செய்திகள் தவிர ஆன்மிக சம்பந்தமான சில சேனல்களை மட்டும் பெற்றோரின் அனுமதியோடு பார்த்திருக்கிறாள் அவ்வளவே.

படிக்கும் இடத்திலும் படிப்பைத் தவிர வேறு பேசும் பிள்ளைகளோடு சேர மாட்டாள்.  சிறுவயது முதலே பள்ளியில் படிக்கும்போது மாணவிகள் பேசுவதை வந்த தாயிடம் பகிர்ந்து கொள்வாள்.

அப்போதெல்லாம் தவறாகப்படும் மாணவிகளின் செயல்களைப் பற்றி மகளின் பேச்சு வழியே அறிந்து கொள்ளும் ஸ்டெல்லா, “இது சாத்தானோட வேலை.  அதனாலதான் அந்தப் பொண்ணு அப்டி நடக்குது.  இனி அவளோட நீ பேசக் கூடாது” என்று கூறி வளர்த்ததை மறுக்காமல் அப்படியே ஏற்று தாய் கூறியவர்களைத் தவிர்த்து ஒதுங்கியே சிறுமியாக இருந்தது முதல் கேட்டு வளர்ந்திருந்தாள் ஐடா.

படிப்பு தவிர பொது விசயங்கள்கூட பள்ளியில் பிறரோடு பகிர்ந்து கொள்ள விழைந்ததில்லை கிரேஸ் ஐடா.  மாணவிகள் படங்களில் வரும் காட்சிகளைப் பற்றியெல்லாம் விவாதித்தால் அவர்கள் இருக்கும் இடத்தைவிட்டு எழுந்து சென்று விடுவாள்.

சில தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும்போது இடும் திரைப்படங்களில் வரும் காட்சிகளை ரசிப்பதைவிட, அதில் வரும் சோகக் காட்சிகளைக் கண்டு அழுவதும், காமெடிக் காட்சிகளைக் கண்டு சிரிக்கத் தோன்றாது, அதனை சீரியசாக எடுத்துக் கொள்வதுமாக வளர்ந்திருந்தாள் ஐடா.

வின்னர் படத்தில் கதவை காலால் முட்டுக் கொடுத்தபடி உறங்கும் வடிவேலு. அதன்பின் வரும் காட்சியைக் கண்டு பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் சிரிக்க, இவள் மட்டும் வடிவேலுவின் நிலையை எண்ணிப் பதறி ஓவென்று அழுதவள் என்றால் அவளைப் பற்றி நம்மால் இலகுவாகக்  கணிக்க இயலும்.

பள்ளி மற்றும் அவளின் கல்லூரிப் படிப்பு அனைத்துமே மதத்தின் கருத்துகளை சிரத்தையோடு நடைமுறைப்படுத்தப்படும் இடங்கள்தான். அதனால் ஐடாவின் பாதை எங்கிலும் இடர்பாடுகள் ஏதுமின்றி நேர்த்தியாகவே போயிருந்தது.

அப்படி வளர்ந்தவளுக்கு அவளின் அலுவலக வளாகத்தினுள், “ஏய்! அவனைப் பாத்ததில இருந்து எனக்கு தூக்கமே வரமாட்டீங்குதுடீ! என்னைக் கொல்றான்டீ அவன்!” என்பது போன்ற பேச்சுக்களை மற்ற தோழிகளோடு ப்ரீ டைமில் பேசும்போது அவர்களை ஐடாவிற்கு பிடிக்காமல் போனது.

‘அவன் என் ஆளு’ என்பது போன்ற பேச்சுகள் அருவெருப்பைத் தந்தது அவளுக்கு.

‘இவன் என்னோட கிரெஷ்’ என்று பேசியவர்களை வெறுத்தாள்.

அப்படி பேசி மகிழ்ந்து இருப்பவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கப் பார்த்தாள்.  ஆனால் அவர்கள் வேற்று கிரகவாசிபோல கிரேஸ் ஐடாவின் செயல்களைப் பார்த்து அவர்களுக்குள் கிண்டல் பேசினர். 

“இந்தக் காலத்தில இப்டி ஒரு பழமாடீ!” என்று தங்களுக்குள் பேசிச் சிரித்தனர்.  அதனைத் தாங்க முடியாமல்தான் தாயிடம் அதனைப் பகிர்ந்துகொண்டிருந்தாள்.

 “உன் வேலையில எந்த குறையுமில்லாம செய்யறதான…!  உங்க ஆபீசர்ஸ் எந்தக் குறையும் சொல்லாத வகையில நடந்துக்கப் பாரு. உங்கிட்ட யாரும் வந்து பிரச்சனை செய்யாத வரை உன்னோட வேலையில மட்டும் கவனம் வைய்யி. 

ஆபிஸ் ஓரியண்டட் டாக் மட்டும் உன்னோட கொலீக்கிட்ட வச்சிக்க… இதுக்காகவெல்லாம் வேலை புடிக்கலைன்னா எங்கயும் போயி வாழ முடியாது.  எல்லா இடத்திலயும் இப்படிப்பட்ட மனுசங்க இருக்கத்தான் செய்வாங்க. 

அதனால வேலைய விட்டா புதிதா கிடைக்கற வேலையில இப்படியான சூழல் வராம இருக்கும்ணு நம்ப முடியாத உலகமிது.  பெரும்பாலும் இதுபோன்ற மக்கள் மத்தியிலதான் நாம வாழப் பழகிக்கணும்” என்று அறிவுரை கூறியிருந்தார் ஸ்டெல்லா.

அவளின் பெற்றோர் இருவருமே அரசுப் பணியில் இருப்பவர்கள். சிறிது சிறிதாக நடப்பு நிகழ்வுகளை மகளிடம் கூறி அவளை அந்த இடத்தில் பணி புரிய ஏதுவான சூழலை அமர்த்திக்கொள்ளப் பணித்திருந்தனர்.

முதல் ஆறு மாதங்கள் மிகவும் சிரமப்பட்டாள்.  அதன்பின் ஓரளவு அவளாகவே அந்த இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பது போன்றவற்றை கற்றுக்கொண்டு தேர்ந்திருந்தாள்.

மூன்று ஆண்டுகளில் நன்றாகவே உலகத்தை எதிர்கொள்ள பழகியிருந்தாள்.  அவளின் பணியீடுபாடு மற்றும் நேர்த்திக்காக அவர்களின் தலைமையிடத்திற்கு அவ்வப்போது சென்று தற்போதைய அலுவலக செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் வகையில் பொறுப்புகள் கிரேஸ் ஐடாவிற்கு வழங்கப்படும் அளவிற்கு முன்னேறியிருந்தாள்.

இருபத்து ஆறு வயதில் மிகுந்த பொறுப்போடும், ஈடுபாட்டோடும், சுறுசுறுப்போடும் இயங்கும் ஐடாவை அவர்களின் அனைத்து கிளைகளிலும் சிலாகிப்பது என்கிற அளவில் அவளின் வளர்ச்சி இருந்ததென்னவோ மறுக்க முடியாத உண்மை.

அப்படிப்பட்டவளுக்கு மணமகனைத் தேடும் பொறுப்பை பெற்றவர்களே ஏற்று, மிகுந்த தேடலுக்குப்பின் தங்களின் தேர்வாக ரீகனை முழுமனதோடு ஏற்றிருந்தனர்.

மணமகனின் போட்டோவைக்கூட பார்க்க பிரியப்படாமல், “இவ்ளோதூரம் என்னை நல்லா வளர்த்தவங்களுக்கு எனக்கு எது நல்லது கெட்டதுனு தெரியாதா?  இதுக்குமேல நான் போட்டோ பாத்து என்ன செய்யப் போறேன்.” என்று கூறி பெற்றவர்களின் தேர்வே சிறந்தது என்றிருந்தவளை எண்ணி பெற்றோருக்குப் பெருமைதான்.

ராபர்ட் ரீகனை புகைப்படத்தில் பார்த்ததும் ஸ்டெல்லா தம்பதியருக்கு திருப்தி வந்திருந்தாலும், அத்தோடு இருக்காமல் இருவரும் நேரில் சென்று மாப்பிள்ளையின் வீடு மற்றும் அவனது குடும்பத் தொழில் நடக்கும் இடம் அத்தனையையும் பார்த்து விசாரித்து திருப்தியான பிறகுதான் மகளோடு மாப்பிள்ளை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

ராபர்ட் ரீகன் திருச்சியில் அவனது தாய் வழி வந்த தொழிலையும், சென்னையில் அவனது தந்தை உருவாக்கிவிட்டுச் சென்ற தொழிலையும் கவனித்துக் கொண்டிருப்பது தெரிய வந்ததும், மகள் சென்னையில் பணியில் இருப்பதால் அங்கேயே இருவரும் நேரில் சந்திக்கட்டும் என்று முடிவு செய்திருந்தனர் பெரியவர்கள்.

ராபர்ட் ரீகனின் அண்ணனது குடும்பம் சென்னையில்தான் வசித்தது. ரீகன் பெரும்பாலும் அவனுடைய பாட்டியோடு சென்னையில்தான். அருகருகே நீலாங்கரை பகுதியில் ஒரே காம்பவுண்டிற்குள் வீடு.

கணவரின் மறைவிற்குப்பின் சீலி திருச்சிக்கு சென்றிருந்தார்.  சீலியின் பிறந்த வீட்டுத் தொழில் அதுவரை கணவரின் மேற்பார்வையில் இருந்ததால் கண்டுகொள்ளாமல் இருந்தவர், அதன்பின் அப்படி விட்டுவிட முடியாமல் ரீகன் திருச்சியில் இல்லாத நாள்களில் அவரே பார்த்துக்கொள்ள எண்ணி அங்கு வந்திருந்தார். 

மகன் வரும் நாள்களில் அவன் பார்த்துக் கொண்டாலும் அவ்வப்போது அவரும் சென்று பார்த்து வருவதை வாடிக்கையாக்கியிருந்தார். 

முக்கியமான காரணம் என்னவெனில் மகன்களுக்கு அவனது தந்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்த தொழிலையும், மகள்களுக்கு தன் தந்தை வழி சீதனமாக வந்த தொழிலையும் பிரித்துக் கொடுத்துவிடும் எண்ணத்தில் சீலி இருந்தார்.  ஆனால் அதைப்பற்றி யாரிடமும் இதுவரை பகிர்ந்துகொள்ளாதபோதும், அவரின் மாமியார் மருமகளின் செயலைக் கணித்தே இருந்தை சீலி அறியாமல்போனதுதான் விந்தை.

ரூபி பேரன் ரீகன்அங்குமிங்கும் அலைந்து ஓய்ந்து வரும் வேளைகளில், “உங்க அம்மா அவளோட தொழிலை உங்க அக்காக்களுக்குத்தான் கொடுப்பாளா இருக்கும்.  அதுக்கு எதுக்கு நீ அலைஞ்சு இப்டி ஓஞ்சு தெரியறே.  அவங்களே பாத்துக்கட்டும்.  நீ இங்க சென்னையில மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணு” என்று கூறினாலும் ரீகன் சிரிப்போடு கடந்து விடுவான்.

ராபர்ட் ரீகன்!

இருபத்தொன்பது வயது ஆண்மகன்.  கிரேஸ் ஐடாவைவிட நிறம் சற்று கம்மி.  ஆனால் திடகாத்திரமானவன்.  ஆளை… குறிப்பாக பெண்களை மயக்கும் உருவ அமைப்பினன்!

ஆறு அடி இரண்டங்குல உயரம்.  பரந்த தோள்கள். அலையலையான அடர்ந்த கருங்கேசம். கூர்மையான கண்கள்.  இதழில் இளநகை எப்போதும் அவன் வசமிருக்கும். மொத்தத்தில் வசீகரன்.

கிரேஸைப் போல கட்டுக்கோப்பாக வளர்ந்தவனல்ல!  ராபர்ட் ரீகன் அவர்களின் வீட்டில் நான்கு பிள்ளைகள்.  இவனுக்கு மூத்தவர்களில் ஒரு அக்கா மற்றும் அண்ணன்.  இவன் மூன்றாவது.  இவனுக்கு அடுத்து ஒரு தங்கை.

மூத்தவனுக்கு கப்பலில் பணி.  பெண்கள் இருவரையும் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.  இவன் தற்போது அவனது தாய் வழிச் சீதனமாக வந்த திருச்சியில் இருக்கும் தொழிலையும், தந்தையின் தொழிலையும் சென்னையிலும் ஒருத்தனாகவே பார்த்துக்கொண்டிருக்கிறான்.

திருமணம் பேசுவதற்கு முன்புவரை நிரந்தரமாக எந்தப் பணியிலும் இருக்காமல் ஒவ்வொரு ஊரிலும் அதிகபட்சம் ஆறு மாதம் குறைந்த பட்சம் மூன்று மாதம் என்று பிற நிறுவனங்களில் பணியிலிருந்தவன்.

தந்தையின் மறைவிற்குப்பின் தாய் சீலி மார்க்கரெட்டின் மன்றாடலினாலும், பாட்டி ரூபியின் வேண்டுகோளினாலும் கடந்த இரு வருடமாக அவர்களது தொழில்களைக் கவனிக்க ஒத்துக்கொண்டு அவன் பார்த்து வந்த பணியிலிருந்து வெளி வந்திருந்தான்.

கையில் அதிகம் பணம் புரண்டதால் தந்தை இருக்கும்வரை மிகுந்த செலவாளியாகவும் உல்லாசமானவனாகவும் இருந்தவன்.  தந்தையிருக்கும் காலம்வரை பணியில் கிடைத்த அரை லகரத்திற்கம் மேலான வருமானத்தோடு தந்தையிடமும் இலகரங்களில் வாங்கிச் செலவு செய்தவன்.

கட்டுக்கோப்பு என்பதே இல்லாமல் பொலிகாளையைப்போல வளர்ந்திருந்தான்.  ராபர்ட்டின் தாய் சீலிக்கு பெண் பிள்ளைகளின் மீது மட்டுமே கவனம் முழுமையும் இருந்தது.

‘ஆம்பிளைப் புள்ளை எப்டி வளந்தாலும் ஒன்னுமில்லை.  பொம்பிளைப் புள்ளை வழி மாறிட்டா, அந்தப் புள்ளையோட குடும்பத்தோட மானமே போயிரும்’ என்பதான எண்ணமே அவர் மகன்களின்மேல் கவனம் செலுத்தாமைக்கான முழுக் காரணமாகியிருந்தது.

ஆனால் அதேநேரம் சீலி மார்க்கரெட்டின் மாமியாரும், ரீகனின் பாட்டியுமான ரூபி தெரசாள் பேரன்களை அரவணைத்துக் கொண்டார்.  மூத்தவனை மிகுந்த கட்டுப்பாடுகளோடு வளர்த்தவர், இளையவனுக்கு அதிகம் செல்லம் கொடுத்திருந்தார்.

இளையவனுக்கு செல்லம் கொடுத்து வளர்த்திருந்தாலும் ரீகனைப் பற்றி நன்கறிவார்.  அவன் தடம் மாறிப் போகும் நிலைகளில் அவனை அன்பாகவே திருத்த முயன்று அதில் வெற்றியும் கண்டிருந்தார்.

மகனது திடீர் மறைவிற்குப்பின் தங்களது தொழில்களை எடுத்துப் பார்க்க ரீகன் ஒத்துக்கொண்டதற்கும் ரூபியின் வேண்டுகோள் மற்றும் அவரது நியாயமான எதிர்பார்ப்புமே காரணமாக இருந்தது.

முதல் ஆறு மாதங்கள் ஒன்றும் புரியாமல் நிறைய நஷ்டங்களை எதிர்கொண்டவன், தற்போதுதான் தொழில் புரிய வர, இழந்தவற்றை ஈடு செய்யும் முறையைக் கற்று ஈடுபாட்டோடு தொழிலைக் கவனித்துக் கொள்ளத் துவங்கியிருந்தான்.

நிதானம் கைகூடியிருந்தது.  முன்புபோல ஊதாரியாக, ஒழுக்க பழங்கங்களில் நிதானமின்றி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றிருந்தவன் மாறத் துவங்கிய பின்பே அவனது பாட்டி பேரனது திருமணத்திற்கு பெண் தேடத் துவங்கியிருந்தார்.

அதற்குமுன் சீலி பெண் என்று கொண்டு வந்ததையெல்லாம் ரூபி நிராகரித்திருந்தார். “அவனுக்கு இன்னும் பொறுப்பு வரலை.  அதுக்குள்ள ஒரு பொண்ணை கொண்டு வந்து நிறுத்தினா எப்டி அவன் மாறுவான்.  அந்தப் பொண்ணோட வாழ்க்கையும் சேந்து அந்தரத்துல நிக்கவா?  இன்னும் நாள் போகட்டும்” என்றே தள்ளிப் போட்டிருந்தவர் சமீபமாக, “இப்ப பொண்ணு பாக்க ஆரம்பி” என்று மருமகளுக்கு அனுமதி அளித்திருந்தார்.

கடந்த ஆறு மாதமாகத் தேடிய தேடலின் விளைவாக ரீகனின் பாட்டி ரூபி மற்றும் அவனது தாய் சீலி இருவரின் எதிர்பார்ப்புகளை சரி செய்வதுபோல் கிரேஸ் ஐடா இருக்க, அவர்களின் குடும்பமும் பிடித்துப்போக திருமணம் பேசுமுன் அவளை நேரில் பார்க்க முடிவெடுத்திருந்தனர்.

மூத்த மருமகளுக்கு இணையாக இளைய மருமகளும் சீரோடு வர வேண்டும் என்று யோசித்த சீலி, மூத்த மகனைப்போல இளைய மகன் கண்ணியவானாக வளரவில்லை என்பதை இலகுவாக மறந்து போயிருந்தார்.

பாட்டி ரூபிக்கு பேரனைப் பற்றி அனைத்தும் தெரிந்திருந்தாலும், அவன் மீள விரும்பாத வகையில் அவளோடு இழுத்து வைத்துக்கொள்ளும் வகையினாலான ஒரு பெண் அமைய வேண்டும் என்று நிறைய மணமகளை நிராகரித்திருந்தார்.

தற்போதும் ஐடாவை நேரில் பார்த்து முடிவு செய்யும் எண்ணத்தில்தான் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாட்டியின் முடிவுதான் அனைத்தும் என்பதை சீலியும் ஸ்டெல்லாவிடம் கூறியிருந்ததால்தான் ஸ்டெல்லாவிற்கு பதற்றம்.

அனைத்தும் கூடி வந்திருக்கும் நிலையில் பாட்டிக்கு எதாவது பிடிக்காமல் போய்விடக்கூடாதே என்கிற பதைபதைப்பு அந்தத் தாயிக்கு நிறையவே இருந்தது.

அதனால் மகள் கிளம்பும்வரை பேசிய விசயங்களை, அவள் சென்னை சென்றபின்பும் நேரங்கிடைத்த போதெல்லாம் மகளிடம் கூறி காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப்போல மகள் நொந்துபோகும்படி செய்திருந்தார் ஸ்டெல்லா.

அதிகாலையில் அலாரம் இல்லாமலே தாயின் அழைப்பில் எழுந்தவள் ப்ளூ சிகங்காரி காட்டன் அனார்கலி வகை குர்தா மற்றும் ஸ்லிப்பில் அடர்ந்த கூந்தலை ஒரே க்ளிப்பில் அடக்கி சைடில் கோல்ட் டோன்ட் வயிட் எம்பெளிஷ்டு கோம்ப் க்ளிப்பை மாட்டி எளிமையான தோற்றத்தில் எந்த வித ஒப்பனையுமின்றி கிளம்பி வந்தவளைக் கண்ட பாட்டி ரூபியும், பேரன் ரீகனும் எடுத்த முடிவைப் பற்றி அறிய… அத்தியாயம் 2 

***

Leave a Reply

error: Content is protected !!