இளைப்பாற இதயம் தா!-12
இளைப்பாற இதயம் தா!-12
இளைப்பாற இதயம் தா!-12
அலுவலகத்திற்கு செல்லப்போவதாகக் கூறி காலையிலேயே குளித்துக் கிளம்பி தனது லேப்டாப்போடு அமர்ந்து இருந்தவளை நம்ப முடியாமல் பார்த்தான் ரீகன்.
முந்தைய தினம் அத்தனை அசதியோடு, கண்கள் குழிவிழ நின்றவள்தானா இவள் எனச் சந்தேகம் வர கண்களை கசக்கிவிட்டுப் பார்த்தான்.
கணவனது செயலைப் பார்த்த ஐடா, “என்னாச்சு எழுந்ததுமே கண்ணை கசக்கிட்டு இருக்கீங்க?” நகைத்தாள்.
மனைவியின் பேச்சில் தெரிந்த உற்சாகத்தில் ஐடாவின் உடல்நிலை முந்தைய தினத்தைக் காட்டிலும் சற்று தேறியிருப்பதாகப் புரிந்துகொண்டவன், “எங்க போக இத்தனை சீக்கிரமாவே கிளம்பி உக்காந்திருக்க?”
“ஆபீஸ்கு!”
“ஆபீஸ்கா?”
“ஆமா! கொஞ்சம் அவுட்லைன் வர்க்கோட, மாட்யூல் வர்க் யாருக்கு என்னனு அசைன் பண்ணிட்டேன்னா, இங்க இருந்து கிளம்பிறலாம்னு டிசைட் பண்ணிருக்கேன்” சாதாரணமாகக் கூறினாள் ஐடா.
முந்தைய தினத்தைவிட ஐடாவின் தேறுதலுக்கான காரணம் ரீகனது அண்மை. அவன் அருகில் இருப்பதே அவளுக்கு மிகுந்த தெம்பையும் தைரியத்தையும் தந்தது என்றால், ஆராதனாவின் செயல் அவளை இங்கிருந்து விரைவாக கிளம்பி சென்னைக்குப் போய்விடு என்று எச்சரித்தது.
மனைவியின் பேச்சைக் கேட்டவனுக்கு, “ஏன் என்னாச்சு ஹனி?”
ஐடா, “என்னோட ஹெல்த் கண்டிசனுக்கு இப்ப இங்க கண்டினியூ பண்ண முடியும்னு தோணலை ரீகன்” உண்மையில் காரணம் அதுவல்ல என்றாலும், கணவனிடம் தனது உடல்நிலையை அசௌகர்யமாகக் கூறினாள்.
ஐடாவிற்கு ஒரு கணிப்பு என்னவென்றால், தனது குடும்பத்தாரோடு வசிக்கையில் எந்த ஆண்மகனும் தவறான பாதையில் செல்லத் துணியமாட்டான் என்று.
ரீகன் இதுவரை கறைபடியாதவன் என்றும், முந்தைய தினம் சந்தித்தவளின் பார்வை வேறுபாடு ஐடாவிற்கு குழப்பத்தைத் தந்ததையும் அசைபோட்ட மனம், அதனைப் பாதகமாக எண்ணத் துவங்கியிருந்தது.
ஆராதனா எப்படி இதற்குமுன் பழகியிருந்தாலும் சரி. ஆனால் அவளோடு இனி தன் கணவன் பேசுவது ஐடாவிற்கு பிடிக்கவில்லை. அது எதனால் என்றெல்லாம் ஆராயும் நிலையில் அவளில்லை.
அதற்கான வாய்ப்பை தான் இங்கிருந்தால் தானாகவே வழங்குவதுபோலாகிவிடும் என்றெண்ணியவள், பணியா தனது இல்லற வாழ்க்கையா என்று வரும்போது இல்லற வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தரும் விதமாக இந்த முடிவினை எடுத்துவிட்டாள்.
குறிப்பாக… மூத்தவர்கள் அருகே இருக்கும்போது இளையவர்கள் தவறு செய்யத் தயங்குவர் என்று அவள் வளர்ந்த விதத்தில் தீர்மானித்து, பங்களூரைவிட சென்னையில் ரீகனோடு வசிப்பது தனக்கு எந்தவித மனக்கிலேசத்தையும் உண்டாக்காது என்று முழுமையாக நம்பினாள்.
அதனால் இரவெல்லாம் யோசித்து இந்த முடிவுக்கு வந்திருந்தாள். கணவன் எழுந்ததும் இப்படிக் கூறியதும் மனைவியை நெருங்கி வந்தவன், “எந்த முடிவுனாலும் நீ நிதானமா யோசிச்சிக்கோ ஹனி” அமர்ந்திருந்தவளின் பின்புறமாக வந்து நின்றவன் குனிந்து இதமாக மனைவியை அணைத்து அவளின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு அவனது காலைப் பணிகளைக் கவனிக்க அகன்றுவிட்டான்.
ஐடாவின் மனம் ரீகனது வழமையான செயல்களில் ஏதேனும் மாறுபாடு வந்திருக்கிறதா என்பதை ஆராய்வதிலும், அதில் அவன் பாஸ் மார்க் வாங்கிவிட்டான் என்பதையும் குறித்துகொண்டிருந்தது.
மேலும், எப்போதும் போல கணவன் இருப்பதை எண்ணி அகமகிழ்ந்தாலும் அதனைக் காட்டிக்கொள்ளாது அவனுக்கு காஃபியைக் கலந்து எடுத்து வந்தாள். அடுத்த டெஸ்ட்டிற்கு ரெடியாக.
இது திருமணமாகி சில தினங்களில் துவங்கிய மாற்றங்கள். இது இதுவரையிலும் தொடர்ந்தாலும் ஏனோ மனம் பரிதவிப்போடு காஃபியைக் கலந்தது.
மனைவி காஃபி கோப்பையோடு நிற்பதைப் பார்த்தவன், “நானே கலந்திருப்பேனே ஹனி.” என்றவாறு அருகே வந்து மனைவி நீட்டிய கோப்பையை வாங்கிக்கொண்டவன், “உனக்கு ஒரு சிப்?” என்று மனைவியிடம் நீட்டிக் கேட்டதும், மருத்துவர் முந்தைய தினம், “காஃபி டீ எல்லாம் முடிஞ்சவரை அவாய்ட் பண்ணிருங்க” என்று சொன்னது இருவரின் நினைப்பில் வர, ரீகன் அந்த நினைப்பில் கோப்பையை தனது பக்கம் இழுக்க முனைந்த வேளை ஐடா, ‘ஒரு நாளைக்கு ஒரு சிப் குடிச்சா என்னாகிரும்’ என தன்னைத் தேற்றிக்கொண்டு கோப்பை நோக்கி கைகளைக் கொண்டு சென்றபடிக் குனியவும் சரியாக இருந்தது.
கணவன் கோப்பையை இழுத்த வேளை கோப்பையை பற்றிய ஐடா கணவனை நிமிர்ந்து பார்க்க, ரீகனுக்கு மனைவியின் செயலில் மனம் பதற, “வேணாம் ஹனி. நான் எப்பவும் உனக்கு குடுக்கற நினைப்பில கேட்டேன். டாக்டர் வேணானு சொன்னாங்களே” என்றதும்,
“ஒரு நாளைக்கு ஒரு சிப்ல ஒன்னும் ஆகாது” என்றபடியே குனிந்து அவனது கோப்பையில் இருந்ததை ஒரு மிடறு விழுங்கிவிட்டு அவனிடம் தந்துவிட்டாள்.
இதுபோன்ற சிற்சில அன்புப் பரிமாற்றங்கள் இருவருக்கிடையே ஏற்படும் ஊடல்களையும், ஒதுங்களையும், ஒவ்வாமையையும் மனக்கிலேசங்களையும் சரிசெய்திடும் வல்லமை பெற்றது.
நடந்த தவறு, ஒவ்வாத தன்மை, வெறுப்பு இவற்றின் சுவடுகளைத் தடமின்றி மறைத்திடும் மாயம் அதற்கு மட்டுமே உண்டு.
கணவனது பேச்சிற்கு பதிலளித்தவள் அத்தோடு, “இன்னைக்கு இல்லைனா நாளைக்கு இங்க இருந்து சென்னை கிளம்பற மாதிரி இருக்கும்” கூடுதல் தகவலாக உரைத்தவள், “உங்க ஷெட்யூல் இன்னைக்கு என்ன?” வினவினாள்.
பதில் கூறியவனிடம் கேட்டுக்கொண்டவள், “ஃப்ரீயா இருந்தா இங்க உங்களோட கொலீக்ஸ் யாரையும் பார்க்கப் போறதா இருந்தாலும் போயிட்டு வாங்க” அவன் தன்னோடு பணிபுரிந்த யாரோடும் தற்போது தொடர்பில் இல்லை என்று முந்தைய தினம் கூறியதை அவள் அறிந்திருந்தாலும் அப்படிக் கூறினாள்.
இது எதற்காக என்றால், அடுத்து அவள் கேட்க இருக்கும் கேள்வி அவனுக்கு விகற்பமாகத் தோன்றக்கூடாது. ஆனால் தனக்கு அந்த விசயம் கண்டிப்பாகத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்கிற முன்னெச்சரிக்கை எண்ணம் அவளை அப்படிப் பேசச் செய்திருந்தது.
“நீங்க இங்க மட்டுந்தான் வர்க் பண்ணீங்களா? இல்லை…” என்று இழுத்தாள் ஐடா.
“சென்னையிலயும் பாத்தேன் ஹனி” ரீகன் சொன்னதும், எங்கு எவ்வளவு வருடம் என்பதையும் தனது ஆர்வத்தைக் காட்டாத குரலில் கேட்டு, கணவனின் பதிலில் ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டவள், “அப்டியா… நமக்கு மேரேஜ் ஆகி இவ்ளோ நாள்ல நீங்க யாரையும் மீட் பண்ணப் போன மாதிரி எனக்கு தெரிய வந்ததில்லையே” ஆச்சர்யமாகக் கூறினாள்.
ரீகன், அஸ்வின் மற்றும் அவனோடு இருந்த மற்ற நண்பர்களை ஐடாவோடுடனான இரண்டாவது சந்திப்பில் மாலில் வைத்து சந்தித்துப் பேசியதைப் பற்றி ஐடாவிடம் நினைவு கூர்ந்தான்.
அதற்கும் அவள், “அப்போ நீங்க நான் வர்க் பண்ற கம்பெனியிலயா இதுக்கு முன்ன இருந்தீங்க?” ஆச்சர்யமாக வினவ,
“இல்லை. அஸ்வின், நான் இன்னும் சிலர் வேற கம்பெனியில வர்க் பண்ணோம்” எனும் செய்தியோடு அந்த கம்பெனி பற்றியும், அதனைக் காட்டிலும் ஐடா தற்போது பணிபுரியும் நிறுவனம் அதன்பின் துவங்கியது என்பதையும், முந்தைய கம்பெனியைவிட இதில் அதிகமான வருவாய் தருகிறார்கள் என்பதால் சிலர் அதற்கு மாறியதையும், அப்போது தனக்கு பங்களூரில் பணி வாய்ப்பு கிட்டி அங்கு சென்றதைப் பற்றியும் கூறினான்.
மேலும், அஸ்வின் தனது பால்ய வகுப்பு மாணவன் என்பதனையும் மனைவி கேளாமலேயே உரைத்தான்.
“அன்னைக்கு மாதிரி எங்கேயாவது பாத்தா மட்டும் பேசிக்குவீங்களா?” என்ற மனைவியிடம் ஆமோதித்தவன் கூடுதல் தகவலாக, “அது ஒரு ஏஜ்ல அப்டியெல்லாம் சேந்து சுத்துவோம். ஒரு ஸ்டேஜ்கு மேல அவங்கவங்க வேலைனு ஓடத்தான் நேரமிருக்கும். ஃப்ரண்ட்ஸ் மேரேஜ் மாதிரியான ஈவெண்ட் வந்தா அங்க மீட் பண்ணிப்போம். அவ்ளோதான்” சாதாரணமாக இயம்பினான் ரீகன்.
பேசிக்கொண்டே காலை ஆகாரத்திற்கு வேண்டியதைச் செய்தவள், “நீங்க இப்ப சாப்பிடறீங்களா? எடுத்து வைக்கவா?”
“இல்லை. நீ சாப்பிடறதா இருந்தா சாப்பிட்டு கிளம்பு. நான் குளிச்சிட்டு வந்து சாப்பிட்டுக்கறேன்” என்றதும், கணவன் கூறியதை அசைபோட்டபடியே உண்டாள். உண்டு கொண்டிருந்தபோது ரீகனுக்கு ஒரு அழைப்பு வர எப்போதும் அவனுக்கு வரும் அழைப்பை என்ன அழைப்பு, இது யாரிடமிருந்து வந்திருக்கிறது? யாருடன் கணவன் தற்போது பேசுகிறான் என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள விரும்பாதவள், இன்று மிகவும் கவனத்தோடு கணவனைக் கண்காணித்தாள்.
அவள் உண்டு முடித்தபின்பும் பேசிக்கொண்டிருந்தவனை இரண்டு முறை கடந்து சென்று, திரும்பி வந்தாள். நீண்ட நேரம் அவன் பேசியதைக் கண்டு, இரண்டு முறை அவன் நின்ற இடத்தில் வேலை இருப்பதுபோலவும், எதையேனும் எடுக்கச் செல்வதுபோலவும் சென்று வந்தாள்.
ரீகனுக்கு உண்மையில் அவள் தன்னை சந்தேகித்துத்தான் இப்படி வந்து பார்க்கிறாள் என்பதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தான்.
கணவன் மீது நம்பிக்கை இருந்தாலும், சில பெண்கள் மீது நம்பிக்கை இல்லை ஐடாவிற்கு. ‘ரீகன் சாதாரணமாத்தான் அந்த ஆராதனாகிட்ட என்னை இண்ட்ரோ பண்ணாங்க. அவ… அவளோட பார்வைதான் சரியில்லை’ என்கிற முடிவுக்கு வந்தாலும் இதுவரை கணவனை கண்டுகொள்ளாமல் இருந்ததுபோல இனியும் இருக்கும் எண்ணம் முற்றிலும் மாறியிருந்தது.
முந்தைய தினம் வாங்கிய சில பழங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அவளின் அலுவலகம் நடக்கக்கூடிய தூரத்தில் இருந்ததால் கணவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.
முந்தைய தின அவளின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருந்த சான்றுகளைக்கொண்டு, சென்னையிலேயே இருந்தபடி இந்தப் பணியைத் தான் ஆன்லைனில் தொடருவதாகவும், அதற்கு அனுமதி வழங்கும்படியும் மெயில் அனுப்பிவிட்டு மேலதிகாரிகளின் பதிலுக்காக காத்திருந்தவள் அலுவலகம் சென்று முதலில் சந்தித்தது சிந்துவைத்தான்.
சிந்துவிடம் தனது மெயில் விசயம் அவளுக்கும் அனுப்பப்பட்டிருந்தமையால் ஐடாவைப் பார்த்ததும், கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னாள்.
“இதுக்கெல்லாம் கான்கிராட்ஸ் பண்ணுவியா?” ஐடா.
“எந்த ட்ரீட்மெண்ட்டும் போகாம இப்ப கன்சீவ் ஆகறதே பெரிய அச்சீவ்மெண்ட் மாதிரிதான்” அவளின் வாழ்த்துக்கான காரணத்தைக் கூறினாள் சிந்து.
அத்தோடு தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும், மூன்று மாதங்களில் திருமணம் நடைபெற இருப்பதையும் கூறிய சிந்து ஐடா கேட்ட திருமண வரன் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்தாள்.
பிறகு, “நானும் மேரேஜ்கு முன்ன இப்ப எடுத்திருக்கற வர்க் ஃபினிஷ் பண்ணிட்டு ரிலீவ் ஆகணும். அதனால தீயா வேலை செய்யணும் நானு” என்றதோடு,
“நீ கண்டிப்பா உன்னோட ஃபேமிலியோட என் மேரேஜ்கு வந்திரணும்” என்பதையும் அட்வான்ஸாக கூறியவள், அதன்பின் சில பேச்சுகளுக்குப்பின் அன்றைய தினம் முழுமையும் வேலையில் பிஸியாகி இருந்தார்கள்.
அன்றைய தினம் வேலை முடியாததாலும், மேலிடத்திலிருந்து இன்னும் ஐடாவின் தபாலுக்கு அனுமதி வழங்கப்படாததாலும் அன்றும், மறுநாளும் அலுவலகத்திற்கு செல்லும்படி ஆனது.
ஆராதனா தெரோபலுக்கு அழைத்து ரீகனைச் சந்தித்ததோடு, அவனுக்குத் திருமணமாகிய செய்தியோடு அவள் அன்று பார்த்த அனைத்தையும் சில இடங்களில் கற்பனையைக் கூட்டியும், சில இடங்களில் சொல்லாது சிலவற்றை விட்டும் கூறியிருந்தாள்.
தெரோபலுக்கு அடுத்து வந்த நான்கு தினங்களும் சோகத்திலும், துக்கத்திலும் கழிந்திருந்தது. தனது கைக்கு கிட்டிய மாணிக்கத்தை அப்போது அதன் அருமை தெரியாமல் விட்டதும், தற்போது அதன் கண்ணைப் பறிக்கும் ஒளியிலும், அதன் மதிப்பிலும் தான் இழந்த சொர்க்கத்தை நினைத்து அதிகம் வருந்தினாள்.
இனி அந்த மாணிக்கத்தை தான் அணிந்து அழகு பார்க்க முடியாது என்கிற ஏக்கத்தில் துக்கம் தொண்டையை அடைத்தது.
இதற்கிடையே நான்சி ஐடாவிற்கு அவ்வப்போது அழைத்துப் பேசினாள். “நான் மட்டுமே உனக்கு கால் பண்றேன் ஐடா. நீ ஏன் எனக்கு எப்பவுமே பேச மாட்டிங்கற” என்று துவங்கியவள், “நீ பேசாட்டாலும் நான் பேசுவேன்” எனும் திணுசில் அலுவலகம் சார்ந்த விசயங்களோடு, பொதுவான விசயங்களைப் பற்றியும் ஐடாவிடம் பேசினாள்.
அலுவலகத்தில் அதிக வேலை காரணமாக மாலையில் மிகவும் சோர்வாக இருந்தமையால் சுரத்தில்லாமல் ஐடா பேசுவதைக் கேட்டு, “என்னாச்சு ஐடா? என் பேச்சைக் கேட்டே டல்லாகிட்டியா?”
ஐடா, “அப்டியெல்லாம் இல்லை நான்சி”
“எப்பவும் இப்படி டல்லா பேச மாட்டியே நீ?”
“தெரியலை நான்சி. ரெண்டு நாளாவே இப்படித்தான் இருக்கு” என்று மட்டும் சொல்லிவிட்டு, ஐடா தனது கர்ப்பத்தைப் பற்றி நான்சியிடம் எதுவும் கூறவில்லை.
நான்சி வழமைபோல அவளுக்கு மனதில் கனமாகத் தோன்றிய விசயங்களையெல்லாம் ஐடாவிடம் கொட்டிவிட்டு, லேசானதும் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
நான்சி பழக்கமானது முதலே இது போன்ற பேச்சுகள் வழக்கம் என்பதால் அதிக கவனம் அவளின் பேச்சினில் ஐடாவிற்கு இருக்காது. அதேபோல ஒன்றிரண்டு வார்த்தைகள், சில பேச்சுகள் தவிர மற்றதை கவனிக்காமல் கடந்து போய்விடுவாள். இன்றும் அதுபோல நடந்திருந்தது.
இரண்டாவது நாள் பங்களூர் கிளையில் பணிகளை முடித்துக்கொண்டு, மேற்கொண்டு பணிகளை சென்னைக் கிளையில் இருந்தபடியே கண்காணிப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து ரீகனோடு அன்றிரவே சென்னைக்குத் திரும்பிவிட்டாள் ஐடா.
ஐடாவின் கர்ப்பச் செய்தி அறிந்த பாட்டி அனைவருக்கும் அந்தச் செய்தியை பகிர்ந்துகொண்டார். ஐடாவின் பெற்றோர் அவளைக் காண சென்னைக்கு வந்தார்கள். மகளின் ஓய்ந்திருந்த தோற்றத்தைக் கண்டு, “ஊருக்கு வந்து ரொம்ப நாளாச்சே ஐடா. ஒரு வாரம் தங்கற மாதிரி வந்துட்டு வரலாம்ல” ஸ்டெல்லா வினவ,
“லீவு கிடைச்சா வர ட்ரைப் பண்றேன்மா” ஐடா பேச்சை முடித்துவிட்டாள்.
ரூபி பாட்டிகூட, “நீ போறதா இருந்தா அம்மாகூட போ ஐடா. வரும்போது ரீகன் வந்து கூட்டிட்டு வருவான்” என்றார்.
பாவம்போல முகத்தை வைத்துக்கொண்டு, “லீவுக்கு அப்ளை பண்ணிப் பாக்கறேன் பாட்டி. கிடைச்சா போறேன்” என்றாளே அன்றி அதற்கான முயற்சி மேற்கொள்ள அவள் ஆர்வம் காட்டவில்லை என்பது ரீகன் மட்டுமே அறிவான்.
ரீகனுக்கு ஐடாவின் இந்த மாற்றம் மிகவும் பிடித்திருந்தது. இதுவரை அவனை அதிகம் நெருங்காதவள், தேடாதவள், இடைவெளியோடு நிற்பவள் தற்போது அப்படி இல்லாமல் முற்றிலும் மாறி வருவது அவனைப் பொருத்தவரையில் வரவேற்கத்தக்க ஒன்று.
பழைய விசயங்கள் எல்லாம் கனவோ என்பதுபோல அவனை விட்டு வெகுதூரம் விலகிப் போன உணர்வுதான் ரீகனுக்குள். அந்த வாழ்க்கை அப்போது வெகுவாக ரசிப்பிற்குரியதாகவும், கிடைப்பதற்கரியதாகவும் தோன்றியதெல்லாம் உண்மைதான். ஆனால் அதனைவிட, இதுவரை அவன் காணாத அதிசயங்களைக் கண்ட குதூகலம் ஐடாவின் மாற்றத்தினால் விளைந்திருந்தது.
நீ போகிறாயா என்றெல்லாம் அவளிடம் ரீகன் கேட்காமல், ஐடா சொல்வதை செயலாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினான். தனது பிள்ளையைச் சுமப்பவளை மனதில் சந்தோசமாகச் சுமந்தான்.
தாய் வீட்டிற்குச் செல்ல மனம் முழுவதும் கொள்ளை ஆசை இருக்க, கணவனை பிரிந்து தன்னால் இருக்க முடியாது என்பது பங்களூர் பயணம் அவளுக்கு பொட்டிலடித்தாற்போல நிரூபித்திருந்தமையால் தேவையற்ற பிரச்சனைகளை மண்டையில் ஏற்றாமல் இருக்க வேண்டி அந்த ஆசையை செயலாக்காமல் விட்டிருந்தாள் ஐடா.
ஐடாவிற்குற்குள் சந்தேகம் ஒன்று உள்ளுக்குள் உளன்றது. அது என்னவென்றால், எப்படியும் பிள்ளைப் பேறுக்கு தாய் வீட்டிற்கு சென்றாக வேண்டும். அப்போது எப்படி ரீகனை விட்டு தன்னால் இருக்க முடியும் என்பதே அது.
ஐடாவின் பெற்றோர் மகளின் மாற்றங்களை ரசித்தாலும், அவளின் முடிவில் இடையுறாமல் பிள்ளைப்பேறுக்கு தங்களின் வீட்டிற்குத்தானே வந்தாக வேண்டும். அதுவரை அவள் இங்கேயே இருக்கட்டும் என விட்டுவிட்டு சென்றிருந்தனர்.
ரீகனது தாய் சீலி, “ஐடா… அத்தம்மாவுக்கு அங்க வர முடியலைடா. நீயும் ரீகனும் ஒரு எட்டு திருச்சிக்கு வந்திட்டுப் போங்க” என்று பாச வார்த்தைகூறி பசப்பியிருந்தார்.
ஐடா திருமணமாகி வந்த இத்தனை மாதங்களில் சீலியின் இந்தப் பேச்சுகளை கவனித்திருக்கிறாள்தானே. அத்தனையும் வேசம் என்பது இன்னும் ஐடாவிற்கு புரியாமல் அவரது வார்த்தைகளை மெய்யென்றே நம்பி அங்கு சென்று வருவாள். தற்போதும் அத்தையின் வார்த்தைகளை தன்னால் செயலாக்க தகுந்த நேரம் பார்த்துக் காத்திருந்தாள். ரூபிக்கு மட்டுமே மருமகளின் பசப்பலான வார்த்தைகளை அறியும் ஞானமிருந்தது.
ரீகனுக்கு திருச்சி செல்ல வேண்டியிருந்த தருணத்தில் அவனோடு சென்று சீலியைப் பார்த்து இரண்டு நாள் அவரது சீராட்டலில் இருந்துவிட்டு திரும்பியிருந்தார்கள்.
ஒவ்வொரு நாளும் புதுவிதமாய். இருவருக்கும் அத்தனை இனிமைகளையும், இதத்தையும் வாரியிறைத்தது. நாள்கள் சென்றது. ஐடாவிற்கு ஐந்து மாதங்கள் நிறைவடைந்த தருணத்தில் சிந்துவின் திருமணத் தேதி நெருங்கியிருந்தது.
ஐடாவின் மாற்றங்கள் அவளின் சந்தோசத்தையும், நிம்மதியையும் சொல்லாமல் சொல்லியது. ஐடாவின் தேஜஸான வதனத்தைப் பார்த்து அஸ்வினுக்குள் ஆதங்கம்.
ஐடாவின் மெருகேறிய தோற்றம் அவனை நிம்மதியாக இருக்கவிடாமல் குடைந்தது. ஐடா தனது மனைவி என்றெண்ணி எத்தனை தினங்கள் அவளோடு கனவில் வாழ்ந்திருப்பான். அந்த நொடிகள் அனைத்தும் மனக்கண்ணில் வந்த கேலி செய்தது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல அவளின் கர்ப்பச் செய்தி மேலும் அவனை நையாண்டி செய்து நகைத்தது. அவளைக் காணும் நேரங்களில் வெறுமையைப் பரிசாக்கியது.
அவனது வீட்டில் அவனுக்காகப் பெண் தேடுகிறார்கள். ஆனால் அவனுக்கு ஏற்ற பெண் அமையவில்லை என்று தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
கிட்டாதாயின் வெட்டென மற என்பதை செயலாக்காமல் ஐடாவை மறக்க முடியாமல் அவளின் வசந்த வாழ்வைக் கண்டு மனதிற்குள் நொந்து போனான்.
சிந்து அவளோடு வெவ்வேறு அலுவலகங்களில் பணிபுரிந்தவர்கள், விடுதியில் உடன் தங்கியிருந்தவர்கள், அவளின் தற்போதைய அலுவலக வெவ்வேறு கிளைகளில் பணியாற்றும் அனைவருக்கும் திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
சிந்து ஐடாவின் வீட்டிற்கு நேரில் வந்து அவளின் திருமணத்திற்கு அழைத்தமையால் ரீகனும் ஐடாவும் திருமணத்திற்கு சென்றுவரத் தீர்மானித்திருந்தனர்.
அந்த தீர்மானமே இருவருக்கிடையே பிரிவெனும் தீர்மானத்தை உண்டு செய்திடும் என்பதை இருவருமே முன்பே அறிய நேர்ந்திருந்தால்…
***