இளைப்பாற இதயம் தா!-15அ

இளைப்பாற இதயம் தா!-15அ

இளைப்பாற இதயம் தா!-15A

கணவனுக்கு முன்பாக தனது அறைக்குள் திரும்பிய ஐடா நேராக வாஷ் ரூமிற்குள் நுழைந்துவிட்டாள்.  அறைக்குள் நுழைந்தவனது கண்களுக்கு அகப்பட்டது… ஆன் செய்த நிலையிலிருந்த சிஸ்டம் மட்டுமே.  அவளின் படுக்கை கலையாமல் இருப்பதையும் ரீகன் காண நேரிட்டது.

‘ராப்பகலா கண்ணு முழிச்சி பெரும்பாலும் இவ வேலை பாத்து இதுவரை நான் பாக்கலை.  இன்னைக்கு என்ன?’ இப்படிச் சிந்தனை ஓட சற்றுமுன் அழுது வடிந்து காணப்பட்ட அவளின் வதனம் மனதில் வந்து வேலைன்னா இப்டியெல்லாம் பயப்படறவ கிடையாது.  வேற என்ன நம்ம பாஸ்ட் இவளைப் பாதிச்சுது’ சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான்.

ஐடா வரும்வரை ஒவ்வொன்றையும் நோட்டம் விட்டபடி நின்றிருந்தான் ரீகன்.  அவளின் வார்த்தைகளின் மூலம் விசயம் என்னவாக இருக்கும் என்பதை ‘நேத்து ஃபங்சன் போனதுல மீட் பண்ணவங்கனால இவளுக்கு ஏதும் பிரச்சனையா?’ என எண்ணியபடி கலைந்திருந்த தனது கேசத்தை இரு கைகொண்டு சரிசெய்தவனுக்குள், ‘கல்யாணமாகி ஒரு வருசத்துக்குள்ள இத்தனை போராட்டமா!’ சலிப்புதான் மனதிற்குள்.

ஆனாலும் இதுவரை இப்படியொரு சூழலை ரீகன் எதிர்கொண்டிராததால் அடி மனதில் பதற்றம் இருந்ததென்னவோ உண்மை.

சிஸ்டத்தின் ஸ்கீரினில் அவன் சந்தேகம் கொள்ளும்படியான எந்த விசயமும் தென்படவில்லை.  அதனால் அவனால் எதையும் யூகிக்க முடியவில்லை.  எந்த விசயமானாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்பதுபோலத்தான் தன்னைத் தேற்றி நின்றிருந்தான் ரீகன். 

அந்த நேரத்தில், சற்றுமுன் தன்னைத் தொட அனுமதிக்காமல் விலகிச்சென்றவளின் செயலும் நினைவிற்கு வர, இதற்குமுன் அவ்வாறு தன்னிடம் நடந்துகொண்டிருக்கிறாளா எனச் சிந்தித்துப் பார்த்தான்.

ரீகனுக்குள் அப்படி ஒரு சந்தர்ப்பமே நினைவில் வராமல் போனதும், விசயம் பெரிதுதான் போலும் என்பது புரிய வந்தாலும், என்னவென்று அவனால் அனுமானிக்கக்கூட முடியாமல் ‘காலையிலேயேவா!’ எனத் தோன்றிட நின்றிருந்தான்.

அந்த நேரத்தில் வெளி வந்தவளின் முகத்தில் தான் சற்றுமுன் கண்ட எந்த அடையாளமும் இல்லாமல் வந்தாள்.  முகம் கழுவியதால் பனியில் மலர்ந்திருக்கும் மலரைப்போல இருந்தாள்.  அதில் எதையும் வெளிக்காட்டாத வதனத்தோடு வந்தவளை உள்ளுக்குள் நம்பிக்கையில்லாமல் ‘வரும்போது பாத்ததெல்லாம் கனவா? இல்லை… என்ன பிரச்சனைனு வாயத் துறந்து நாம மாட்டிக்கூடாது’ பேசத் தூண்டிய ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி நின்றிருந்தான்.

ரீகனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடியே வந்தவள் வார்ட்ரோப் ஷெல்பைத் திறந்து அதிலிருந்து காட்டன் ஷாஃப்ட் டவலை எடுத்து இதமாக முகத்திலிருந்த நீரை ஒற்றி எடுத்தாள்.

          “என்ன விசயமா இங்க வந்தீங்க ரீகன்?” என்று மூன்றாவது நபரைக் கேட்பதுபோல கையில் இருந்த டவலைக்கொண்டு கைகளில் இருந்த நீரையெல்லாம் ஒற்றி எடுத்துவிட்டு அதற்கான இடத்தில் டவலைப் போட்டபடியே கணவனிடம் கேட்டாள்.

          குழப்பம் மேலும் நீடிக்க, “என்ன ஹனி!  ஏன் பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு?”

          “உங்க பாஸ்ட் பத்தி எங்கிட்ட… எல்லாம் சொல்ல முடியுமா ரீகன்?” எல்லாம் என்பதில் அழுத்தம் கொடுத்தபடியே அங்கு கிடந்த கம்ப்யூட்டர் ரோலிங் சேரில் அமர்ந்தபடியே, ஷோபாவில் கை காட்டி கணவனை அமரும்படி செய்கையில் கூறினாள்.

          “அது இப்ப எதுக்கு ஹனி?” தொண்டை ரீகனை அறியாமலேயே உலர்ந்தாற் போன்றிருந்து. அது எதனால் என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் ஷோபாவில் சென்று அமர்ந்திருந்தான்.  அவன் அமர்ந்திருந்த தோரணையிலேயே அவன் டென்சனாகி இருப்பது ஐடாவிற்குத் தெரிந்தது.

          “சொல்லுங்களேன்!” ஊக்கம் தருவதுபோல வந்தது வார்த்தைகள்.

          “சொல்ற அளவுக்கு ஒன்னும் பெரிசா நான் சாதிக்கலையே ஹனி” என்றான் ரீகன்.

          “சாதிச்சதைனு நான் கேக்கலையே…  உங்களைப்பத்தி தெரிஞ்சிக்க வேண்டித்தான்!” உங்களைப்பத்தி என்பதை ஐடா அழுத்திக் கேட்டாள்.

          “காலையில எழுந்ததும் வேற வேலை இல்லையா ஹனி!” தோளை உயர்த்தி ஆச்சர்யம்போலக் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவன், “ஆஃபீஸ் போற ஐடியா இல்லையா?” சாதாரணமாகவே முறுவலோடு கேட்டான்.

          “நீங்க இப்ப சொல்ல ஆரம்பிச்சா… நான் லீவ் போடக்கூடத் தயாரா இருக்கேன்!” கைகளைப் பிரித்து சேர்த்து கோர்த்து என்று அதைப் பார்த்தபடியே ரீகனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடியே பேசினாள் ஐடா.

          “இவ்ளோ நாள் தோணாம, திடீர்னு என்ன…?” ரீகனுக்குள் ஏதோ சரியில்லை என்று தோன்றவில்லை.  முந்தைய தினத்தில் இவள் சந்தேகம் கொள்ளும்படி தான் என்ன செய்தோம் என்பதிலேயே மனம் உழன்றது.

          “தெரிஞ்சிக்கிட்டே ஆக வேண்டிய கட்டாயம் வந்திருக்கே!” பொடி வைத்துப் பேசினாள் ஐடா.  ரீகனைப் பற்றி இன்னும் அறிந்துகொண்டபின் இந்த டாபிக்கைத் துவங்கி, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று ஒரு முடிவுக்கு வர உத்தேசித்திருந்தவள் நிதானித்தாள்.

          “எதுனாலும் நீ கேளு.  நான் ஆன்சர் பண்றேன் ஹனி” ஐடாவிடமே பொறுப்பைக் கொடுத்தான். அத்தோடு, “இது இப்பவே பேசித்தான் ஆகணுமா?” என்றும் கேட்டான்.

          கண்டிப்பாக என்பதை ஆங்கிலத்தில் கூறியவள், “இப்ப முடியலைன்னா எப்பன்னு நீங்க டிசைட் பண்ணுங்க” என்றவள், “அண்ட் ஒன் மோர் திங்க்” என நிறுத்தியவள் இந்த வார்த்தைகளைப் பேசுமுன் சற்றுத் தடுமாற்றம் எழ தாமதித்தாள். 

தொண்டையைச் செறுமிச் சரி செய்து கொண்டவள், “இனி நான் இந்த ரூம்லதான் ஸ்டே பண்ணிக்கப் போறேன்.  இங்க வரதா இருந்தா எனக்கு பிங்க் பண்ணிட்டு வாங்க.” என்றவள் அங்கிருந்து எழுந்து குளியலுக்காக தயாரானதைக் கண்டவன், ஐடாவின் இந்தக் கடுமை எதனால் என்று புரியாமல் அதேநேரம் தான் ஒரு ஆண் என்பதோடு அவளின் கணவன் எனும் ஆணாதிக்க மனப்பான்மையும் எழ, எப்படி இவள் தன்னை இப்படி நடத்தலாம் என்கிற தார்மீக கோபமும் உள்ளுக்குள் எழ இதுவரை இணக்கமில்லாத குரலில் பேசியளிடம் தானும் அவளின் செயலைக் கண்டிக்கும் விதமாக, “நேத்தே நான் உங்கிட்ட சொல்லிட்டேன்.  இப்பவும் சொல்றேன்.  நீ மனசுக்குள்ள நினைக்கறதெல்லாம் என்னால கெஸ் பண்ணி அதுக்குத் தகுந்த மாதிரி நான் ரோல் பண்ண நிச்சயமா என்னால முடியாது.  உனக்கு என்ன வேணுமோ அதை நேரடியாக் கேளு.  நான் எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.  அதைவிட்டுட்டு இது எல்லாம் என்ன?”

ரீகனுக்குள் கோபம் உண்டாகிவிட்டதை அவனது வார்த்தைகளில் இருந்த தொனியே காட்டிக்கொடுக்க, சற்றும் இளகாமல்… “நான் எது கேட்டாலும் சொல்லுவீங்கன்னா… நான் கேட்டதுக்கு இன்னேரம் பதில் சொல்லியிருக்கலாமே!” கையில் மாற்று ஆடைகளை எடுத்தபடி பதில் கூறினாள் ஐடா.

          “உனக்கு இப்போ என்ன தெரியணும்?” அதே தொனியில் மனைவியிடம் கேட்டான் ரீகன்.  ஹனி ரீகனது பேச்சில் காணாமல் போயிருந்ததை இருவருமே உணர்ந்திருந்தனர்.  அதை நினைத்ததும் ஐடாவிற்கு மேலும் புன்முறுவல் கூடியது.

          கணவனது கோப முகத்தைக் கண்டு பின்வாங்காமல், “உங்க பாஸ்ட்…   அதாவது என்னை மேரேஜ் பண்ணிக்கும் முன்ன… நீங்க எப்டி இருந்தீங்க? எப்டி வாழ்ந்தீங்கனு கேட்டேன்!”

          “அதை இப்ப தெரிஞ்சிட்டு என்ன செய்யப் போற?” ரீகன் கடுமையைத் தளர்த்தவே இல்லை.  இது ஆண்கள் எடுக்கும் முதல் முயற்சி.  இதிலேயே சில பெண்கள் தனது முடிவுகளில் பின்னடைந்துவிடுவர்.  ஆனால் ரீகனின் இந்த முயற்சி பலிதம் ஆகவில்லை ஐடாவிடம்.

          “நீங்க சொல்லுங்க ஃபர்ஸ்ட்!” என்றாள்.

          “சொல்லலைன்னா…!” ஆணாதிக்க பேச்சு ஆரம்பமாகிவிட்டதை ரீகனும் உணர்ந்தே பேசினான்.

          “நான் எடுக்கற எல்லா முடிவுக்கும் நீங்க கட்டுப்படற மாதிரியான சூழல் வரும்.” நிறுத்தியவள், கணவனை நேருக்கு நேராக நின்று பார்த்தபடியே, “அத்தோட எஃபெக்ட் டிவோர்ஸ்ஸாகூட இருக்கலாம்!” என்று சாதாரணமாக குண்டைத் தூக்கி வீசியெறிந்தாள் ஐடா.

          நீண்டதொரு அமைதி அறை முழுமையும்.  ஐடா பேசியதை அவன் ஜீரணிக்க கால அவகாசம் தேவைப்பட்டதோ.

இதைப்பற்றியெல்லாம் கற்பனையில்கூட நினைத்துப் பார்த்திராவனுக்கு, அவளின் வார்த்தையில் வந்த டிவோர்ஸ் என்பதைக் கேட்டதும் நாடி நரம்பெல்லாம் கொதித்துவிட,

“உனக்கு உண்மையிலேயே என்னாச்சு ஐடா!  நேத்து வரை நல்லாத்தானே இருந்த?  பொசசிவ்னாலும்… இந்த அளவுக்கா போவாங்க? ஒரு ஐட்டி ஃபீல்ட்ல இத்தனை வருசம் இருக்கறவளுக்கு சொசைட்டில எப்படி நடந்துக்கறதுன்னுகூடத் தெரியாம… எல்லாத்துக்கும் சந்தேகப்பட்டா…” என்றபடி அன்னார்ந்து முகத்தை வைத்தபடி தலை முடியை மேலிந்து கீழாகக் கொண்டு சென்று பிடரியை பிடித்தபடி சற்று நேரம் நின்றவன், பிறகு நிதானித்து ஐடாவின் அருகே வந்தவன், “சந்தேகத்தோட உச்சமா… டிவோர்ஸ் அது இதுன்னு பேசறது நல்லாவா இருக்கு?” என்று கேட்டான்.

ஐடா அமைதியாக ரீகனையே பார்த்தபடி நிற்பதைப் பார்த்தவன், “நம்பிக்கைதான் வாழ்க்கை.  அது இல்லைனா… வாழ்க்கை நரகம்தான்!  இதுக்குமேல நான் எதுவும் சொல்றதுக்கு இல்லை” என்றிட,

          “இதையெல்லாம் நான் உங்ககிட்ட கேக்கலை ரீகன்!  நான் கேட்டது… உங்க பாஸ்ட் பத்தி!  அதைவிட்டுட்டு தேவையில்லாத விசயத்தைப் பத்திப் பேசி நேரத்தை வீணாக்கிட்டு இருக்கீங்க…!” சற்றும் குறையாத கம்பிரத்தோடு ஐடா பேச, எதிரில் நின்றவனுக்கு… அவனை அறியாமலேயே உள்ளுக்குள் அபஸ்வரம் பரவிய உணர்வு. 

          அவளின் நேர்மைத்தன்மை ஐடாவைத் துணிச்சலோடு நிமிர்ந்து பேசச் செய்தது அந்த இடத்தில் எதிரே இருப்பவர்களுக்கு திமிராகத் தெரிந்தால் அவளென்ன செய்வாள்?

          ரீகனுக்கு அப்படித்தான் தோன்றியது!

          பெண்களை எளிதில் தனது இனிமையான பேச்சிலும், தொடுதலிலும் வசப்படுத்தி தனது எண்ணத்திற்கேற்ப ஆட்டுவித்துப் பழகியவனுக்கு டஃப் கொடுத்தாள் ஐடா. 

அவளை நெருங்கித் தொடச் சென்றதும் அவனை விட்டு விலகியவள், “உங்களை என்னைத் தொட இனி அனுமதிக்கமாட்டேன்” என்று ஆங்கிலத்தில் கூறியவள், “தள்ளி நின்று பேசுங்கள்” என்பதையும் எந்தத் தயவு தாட்சண்யமும் இன்றிக் கூறியதை ரீகனால் கடந்துவரவே முடியாமல் திணறி நின்றிருந்தான்.

 “என்ன… யாருகிட்டப் பேசறோம்னு புரிஞ்சுதான் பேசறயா?” என்று கேட்டவனிடம், “எஸ் அப்கோர்ஸ்!” என்று பதிலளித்தவளின் இன்னொரு முகத்தை நேரில் கண்டவனுக்கு உள்ளுக்குள் கொதித்தது.

‘எதுக்கு இவ்ளோ விரைப்பா பேசுறா… என்னைப் பத்தி என்ன தெரியும் இவளுக்கு?  நேத்து ஒரு நாளையில இவ இப்படி மாறின மாதிரித் தெரியலையே’ என்பதுபோல நினைத்துக்கொண்டவன், விட்டேற்றியாக அவள் கேட்டதைக் கூறும் விதமாக… தான் கல்லூரிப் படிப்பை முடித்ததும் பணிக்குச் சென்றது, பிறகு தந்தையின் மறைவிற்குப்பின் தாய் மற்றும் தந்தையின் தொழிலைத் தான் கவனிப்பது என்பதையெல்லாம் கூறினான்.

தான் கூறியதும் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும் எனும் நோக்கில் கூறினான் ரீகன்.  அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை இவள் இனிதான் தொடரப் போகிறாள் என்று.

அவன் முடிக்கும்வரை பொறுமை காத்தவள், “இதுதான் ஏற்கனவே தெரியுமே…!” என்றவள், “எந்த வருசம் எங்க வர்க் பண்ணீங்க?” என்று கேட்டாள்.

          ரீகன் எரிச்சலோடு சொல்லி முடித்ததும்… அடுத்து ஐடா கேட்ட கேள்வியில் மாறிய ரீகனது ரியாக்சனை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

***

Leave a Reply

error: Content is protected !!