இளைப்பாற இதயம் தா!-19ஆ
இளைப்பாற இதயம் தா!-19ஆ
இளைப்பாற இதயம் தா!-19ஆ
தாயின் இந்தக் திடீர் கேள்வியில் அமைதியானவள், சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்த நிலையில் தாயிடம் ரீகனைப் பற்றிச் சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று யோசித்தபடியே இருந்தாள்.
மகளின் யோசனை எதைப் பற்றியது என்பது புரியாதபோதும், ஏதோ குழப்பத்தில் மகள் இருக்கிறாள் என்பது புரிய, “ஒன்னும் அவசரமில்லை. நேரமெடுத்துக்கோ! எதுனாலும் அம்மா இருக்கேன்!” மகளின் தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்துவிட்டு அவரின் பணிகளைக் கவனிக்கச் சென்றுவிட்டார் ஸ்டெல்லா.
தாயிடம் சொன்னால் தாய் என்ன பதில் சொல்வார் என்று நிச்சயமாக ஐடாவிற்குத் தெரியவில்லை. ஆனால் தந்தையிடம் இந்த விசயம் போனால் இத்தோடு இங்கேயே இருந்துவிடு என்று கூறுவார் என்பது அவளுக்குத் திண்ணமே.
திருமணத்திற்கு முன்பே ஸ்டெல்லா, “போற இடம் ஐடாவுக்கு நல்லா அமையணும் இல்லையா. போன பின்ன எதாவது அங்க ஒத்து வரலைன்னா அவளுக்குக் கஷ்டமில்லையா. அதனால நாலு இடத்தில நல்லா விசாரிங்க இப்போவே” என்று கணவனிடம் கூறியபோது,
“நம்ம வீட்டுப் பொண்ணு நல்லா இருக்கணும்னு நீ சொல்றது எல்லாம் சரிதான் ஸ்டெல்லா. அதுக்காக அவ அங்க போன பின்ன எதாவது கஷ்டம்னா… சகிச்சிக்கிட்டு அங்கயே இருக்கணும்னு அவளுக்கு என்ன தலையெழுத்து! அப்படியெல்லாம் அங்க அவ கஷ்டப்படணும்னு எந்த அவசியமும் இல்லை. அவளுக்கு நாம எதுக்கு இருக்கோம். நாம பாத்துக்கலாம்!” என்று தந்தை ஆல்வின் கூறியதையும் கேட்டவளாயிற்றே ஐடா.
அதனால் தாயிடம் கூறினால் நிச்சயம் அது தந்தையின் காதுவரை கட்டாயம் செல்லும். அப்படிச் சென்றால் தந்தை நிச்சயம் தனது விவாகரத்திற்கு ஒத்துழைப்பார் என்பது நிச்சயம் என்பது பெண்ணுக்குப் புரிந்தே இருந்தது.
அந்த ஒரு நம்பிக்கையில்தான் இந்தப் பயணத்தை ஆரம்பத்தில் துவங்கியிருந்தாள் ஐடா.
ஆனால் நடந்து போன சிறு விபத்திற்குப்பின் அவளின் மனம் பலவற்றையும் கவனத்தில் கொணர்ந்து ஆராய்ந்தது. யோசித்தது. நிதானித்தது.
அதில் அவளறிந்து கொண்டது ரீகனின் பழைய வாழ்க்கை முறையை அவளால் இன்னும் ஜீரணிக்க முடியாதபோதும், ரீகனை விட்டு பிரிந்து வாழ தான் தயாராக இருந்தாலும், கடந்து போயிருந்த பதினோரு மாதங்களில் அவள் வாழ்ந்திருந்த முறைமைக்கும், விவாகரத்து கோரிய பின் அவளிருக்க வேண்டிய தாய் வீட்டு சூழலையும் ஒத்திசைந்து பார்த்தவளுக்கு அவளால் அவள் பிறந்த வீட்டில் மனமொன்றி சந்தோசமாக வாழ முடியாது என்பதுதான் அது.
பணிக்கென்று சென்னை சென்று தங்கிக்கொண்டாலும் ரீகனிடம் இருந்த சில நல்லவற்றை அப்படியே விட்டுச் சென்றிட ஐடாவின் மனம் தயங்கியது.
அவனுடைய திருமணத்திற்கு முந்தைய வாழ்வுதான் களங்கப்பட்டதே அன்றி தன்னைத் திருமணம் செய்தபின் தனக்கு உண்மையாகத்தான் இருந்திருக்கிறான் என்பதை ஐடாவால் உள்ளார்ந்து உணர முடிந்தது.
தனக்கான அவனது தேடல் புரிந்தது. அது பொய்யல்ல என்பதும் தெளிவாக விளங்கியது. ஆனால் அந்தக் களங்கத்தோடு இருந்தவனை அது தெரியாத நிலையில் வாழ்ந்தபோது இல்லாத அருவெறுப்பு அதனைத் தெரிந்து கொண்டபின் வந்திருந்தது. மேலும் ரீகனை மன்னித்து ஏற்கும் மனோபாவம் இல்லாமல் இருந்தது என்பதையும் உணர்ந்தே இருந்தாள்.
பிறந்த வீட்டில் இளவரசியாக வளர்க்கப்பட்டாளோ அல்லது எப்படி வளர்ந்தாள் என்று புரியாதவளுக்கு, புகுந்த வீட்டில் மகாராணியாக வாழ்ந்ததை மறுக்க முடியவில்லை.
அங்கு அனைத்திலும் சுதந்திரம். எதிலும் கட்டுப்பாடுகள் இல்லை. அது அனைத்தும் அன்பினால் கட்டுப்படுத்தப்பட்டு இருந்ததே அன்றி ஆணவத்தாலோ, அடக்கு முறையினாலோ, தான் ஆண் எனும் ஆதிக்கத்தினாலோ அல்ல என்பது தாயின் வீட்டில் தங்கிய சில நாளில் அவளுக்குப் புரிய நேர்ந்தது.
நான் உன் கண்வன் என்பதைக்கொண்டு ரீகன் இதுவரை அவளை எங்கும் கட்டாயப்படுத்தியதோ, அடக்குமுறை செய்ததோ, கட்டளை இட்டதோ, எதையும் அவளிடம் திணிப்பதோ செய்தது கிடையாது.
தான் அவனிடம் விவாகரத்து கோரியபோதும் அதில் தனக்கு உடன்பாடில்லை என்பதை தன்மையாகக் கூறிவிட்டுச் சென்றானே அன்றி, தன்னை நெருக்கடிக்கு ஆளாக்கவில்லை. அப்படி ரீகனால் செய்ய முடியாது என்று சொல்ல முடியாது. அவன் நினைத்தால் தன்னை தேவகோட்டைக்கு அனுப்பாமல் அங்கேயே வீட்டிற்குள் வைத்திருக்க முடியும். ஆனாலும் அவளின் முடிவிற்கு விட்டான். அவளே எதையும் யோசித்து முடிவெடுக்கட்டும் என்று தனக்கு அதற்காக கால அவகாசம் அளித்திருக்கிறான்.
அதற்காக ரீகனை கொண்டாடவும் அவளால் முடியவில்லை. ஏனென்றால் அவன் செய்து வைத்திருந்த காரியம் அத்தனை தூரம் அவளைத் தாளாத துன்பத்திற்கு உள்ளாக்கியிருந்தது. தான் கேட்ட தருணங்களில் எல்லாம் ரீகன் மறுத்ததை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
கணவனோடு உடனே ஒத்திசைந்து வாழ தன்னால் முடியாது என்றாலும், அவளால் தாய் வீட்டைப் போன்றதொரு நை நை என்று எப்போதும் அடக்குமுறையான சூழலிலும் வாழ முடியாது என்பது திண்ணம்.
இப்படி நினைத்துக்கொண்டே மதிய உணவிற்குப்பின் அவளின் அறைக்குள் படுத்திருந்தவள் உறங்கிப் போயிருந்தாள் ஐடா.
மூன்று மணியளவில் அவளின் தாயைக் காண சார்லஸின் மனைவி பிரவீணா வீட்டிற்கு வந்திருந்தாள்.
பாதி உறக்கத்தில் ஐடா இருக்க, தாயோடு பேசிக்கொண்டிருந்தவளை வரவேற்க நினைத்தாலும் அவளால் எழ முடியவில்லை.
ஸ்டெல்லாவின் உடல்நிலையைப் பற்றி விவாதித்து பிறகு பிரவீணாவின் குடும்ப நிலை பற்றி பேச்சு மாறியிருந்தது.
ஸ்டெல்லா பிரவீணாவின் பிரச்சனையைப் பற்றி அறிந்திருந்தாலும் அதனைப் பற்றி தெரியாதபோல பொது விசயங்களை விசாரிக்க, பிரவீணா தனது மனக் கவலைகளை ஸ்டெல்லாவிடம் கூறினாள்.
“கல்யாணத்துக்கு முன்ன இவரைப் பத்தி விசாரிச்சப்போ ஆஹா ஓஹோன்னு சொன்னாங்களாம். ஆனா இப்பப் பாருங்க… போன இடத்தில ஒரு பொண்ணோட அறிமுகம் கிடைச்சதும்… இப்ப நான் பிடிக்காத பொண்டாட்டி ஆகிட்டேன்” பிரவீணா சோகமாக உரைக்க,
“உங்க வீட்டுல என்ன சொல்றாங்கம்மா?” அக்கறையாகக் கேட்டார் ஸ்டெல்லா.
“எங்க வீட்டுல எனக்கப்புறம் இன்னும் ரெண்டு தங்கை இருக்கறதால, இப்ப நீ வீட்டுக்கு வந்திட்டா அவங்களோட வாழ்க்கை வீணாப் போயிரும். அதனால அனுசரிச்சு இருன்னு சொல்றாங்கம்மா” வருத்தத்தோடு தனது நிர்க்கதியான நிலையைக் கூறினாள் பிரவீணா.
“இது என்ன அநியாயமா இருக்கு! கல்யாணத்துக்கு முன்ன அப்டி இருந்தான். இப்ப திருந்தி இருக்கான்னா… சரினு அனுசரிச்சு திருந்திட்டானேனு வாழலாம். ஆனா… கல்யாணம் பண்ணி இத்தனை வருசம் வாழ்ந்திட்டு, இப்ப வேற ஒருத்தியோட வாழப் போறேன்னு போனவனை நம்பி உன்னோட வாழ்க்கைய சீரழிக்க முடியுமா?”
“அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயந்தான் பெரிசாத் தெரியுது. எனக்குத்தான் இப்ப பித்துப் புடிச்சு வருது. என்ன செய்யப் போறேன்னு ஒன்னுமே விளங்க மாட்டிங்கிது” சோகமாக உரைத்தாள் பிரவீணா.
“சரி உனக்குத்தான் ட்ரீட்மெண்ட் போனியே. அதுல என்ன சொன்னாங்க!”
“எனக்கு நல்லா இருக்குன்னுதான் சொன்னாங்கம்மா. அவருக்குத்தான் ஏதோ பிரச்சனைனு சொல்லி ரெகுலரா மெடிசன் எடுக்கச் சொன்னாங்க. ஆனா அவரும் அதை ஃபாலோ பண்ணலை. இப்போ அதையெல்லாம் மறைச்சு… எனக்கு அவங்க வீட்டுக்கு ஒரு வாரிசைப் பெத்துத் தர முடியலைன்னு மனசொடிஞ்சு அவர் அந்தப் பொண்ணோட வாழறதா ஊருக்குள்ள கதை சொல்றார்!” பிரவீணா தன் நிலையைக் கூறினாள்.
இப்படி இருவரது பேச்சும் ஐடாவின் காதில் விழுந்தவண்ணமிருக்க, ஒரு வழியாக தூக்கம் களைந்து மெல்ல எழுந்து வந்தாள் ஐடா.
ஐடாவைப் பார்த்ததும் ஆச்சர்யமடைந்த பிரவீணா , “ஏய் எப்ப வந்த? நீ வந்திருக்கறதை சொல்லவே இல்லை” என்று துவங்கி,
“உங்க வீட்ல திருச்சியில, சென்னையில எல்லாரும் நல்லா இருக்காங்க தான…” என ஆரம்பித்து அவளோடு சற்று நேரம் உரையாடிவிட்டு பிரவீணா கிளம்பிவிட்டாள்.
இப்படி பல திசைகளிலிருந்து வந்த பேச்சுகள், செய்திகள் அனைத்தும் ஐடா எடுத்த முடிவை நோக்கி அடியெடுத்து வைப்பதில் தாமதிக்கச் செய்திட, விவாகரத்து எண்ணத்தைத் தள்ளிப் போட்டவள், ஸ்டெல்லா அதன்பின் இரண்டு முறை அவள் இங்கு வந்ததன் நோக்கத்தைக் கேட்க, முடிவாக தாயிடம் விசயத்தைக் கூறிவிட்டாள்.
மகள் கூறியதைக் கேட்டு ஸ்டெல்லாவிற்கு உடல் உபாதையோடு முகமே களையிழந்து போனது.
“அந்தப் பையனைப் பாத்தா அப்டித் தெரியலையே ஐடா” ஸ்டெல்லா அப்பாவித்தனமாக கேள்வியைக் கேட்டதற்கு,
“நான் நேருல பாத்தே நம்பாம… பதினோரு மாசம் வாழ்ந்திருக்கேன்னா பாத்துக்கோங்களேன்” என்ற மகள் கண்ட சம்பவங்களை கேட்டறிந்தவருக்கு உண்டான வேதனை அவரை நிலைகுலைய வைத்தது.
தான் கடந்து போன நாள்களில் தம்பதியரியே கண்ட அன்னியோன்யமான பேச்சுகள், நடத்தைகள், செயல்பாடுகள் அனைத்தும் மகளின் வாழ்வில் கானல் நீராக மாறிப் போனதை எண்ணி அந்தத் தாயின் உள்ளம் குமுறியது.
இடையிடையே ரீகன் அழைத்தபோது மகள் அழைப்பை ஏற்காமல் ஏனிருக்கிறாள் என்று தான் யோசித்ததற்கு பதில் இத்தனை பெரிய இடியாக இருக்கும் என்று ஸ்டெல்லா நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை.
அப்போதெல்லாம் தனக்கு அழைத்து நலன் விசாரித்துவிட்டு, “ஆண்ட்டி… ஐடா போன் சைலண்ட்ல இருக்குபோல! உங்க போனை கொஞ்சம் அவக்கிட்ட குடுக்கறீங்களா?” என்று கேட்ட ரீகனை அவரால் கொண்டாவும் முடியவில்லை, அதேநேரம் நிந்திக்கவும் முடியவில்லை.
மகளைத் தேற்றும் வழி தெரியாமல், அடுத்து என்ன முடிவெடுத்தாலும் தான் உறுதுணையாக இருப்பதாக மகளுக்கு தன் அணைப்பால் ஆறுதல் கூறினார் ஸ்டெல்லா.
ஆனால் கணவனிடம் இதைப்பற்றி சொல்ல விரும்பாமல், “நீ நல்லா யோசிச்சு எந்த முடிவெடுக்கறதா இருந்தாலும் எடு! டைம் எடுத்துக்கோ! அம்மா இருக்கேன்!” என்றவர், “இதை அப்பாகிட்ட இப்ப எதுவும் சொல்லிக்க வேணாம்!” என்பதையும் மறவாமல் கூறியிருந்தார் ஸ்டெல்லா.
எதையும் மறைக்கவில்லை ஐடா. அனைத்தையும் தாயிக்கு தெளிவுபடுத்தியிருந்தாள். அஸ்வின் கூறியதைக்கூட தாயிடம் கூறியிருந்தாள்.
“நமக்கு உதவறதுக்குனு கர்த்தர் அனுப்பின பையனோட பேச்சை நாம மதிக்காம பண்ணுணதுக்கு அவர் என்ன செய்வார்” தவறு அனைத்தும் தங்களிடம்தான் என்று ஸ்டெல்லா அனைத்திற்கும் அவரே பொறுப்பெடுத்துக்கொண்டு மனதிற்குள் உளன்று கொண்டிருந்தார்.
வேலையில் ஏற்கனவே தாமதம் என்று ஸ்டெல்லாவின் நிலை இருந்ததுபோக, மேலும் கவனம் குறைந்து உப்பில்லாத குழம்பு, இரண்டு முறை உப்பு போட்ட கூட்டு பொரியல், சர்க்கரையில்லாத டீ, தீய்ந்த தோசை இப்படி நிறைய விசயங்களில் பிரதிபலித்தது.
ஐடாவிற்கு தாயின் இந்த நிலையைக் கண்டு சற்று பயம் வந்திருக்க, “உங்கட்ட நான் இப்போ சொன்னது தப்புன்னு தோணுதும்மா. நீங்க எதையும் நினைச்சு கவலைப்படாதீங்கம்மா. எல்லாம் பாத்துக்கலாம்!” என்று ஆறுதல் தாயிக்கு கூற,
“அருமை பெருமையா வளர்த்து இப்படி ஒரு வாழ்க்கைக்குள்ள உன்னைக் கொண்டு போயித் தள்ளிட்டேனே!” என்று வருந்தினார் ஸ்டெல்லா.
தாய் அதனை நினைத்து அதிகம் வருந்துகிறாரே என்று அவரைச் சமாதானம் செய்யும் விதமாக, “பிரவீணா அக்காகிட்ட நீங்க சொன்னீங்கதான. கல்யாணத்துக்கு முன்ன தப்பு பண்ணிட்டு இப்ப ஒழுங்கா இருந்தாகூட அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்னு. அப்டி இருந்துக்கறேன்மா. இதை நினைச்சு நீங்க ரொம்ப வருத்தப்படாதீங்க!” என்றவள்,
“அந்த விசயத்தை ஒடனே மறந்து என்னால அவரை ஏத்துக்க முடியாது. கொஞ்ச நாள் ஹாஸ்டல்ல இருக்கலாம்னு இருக்கேன். ஆஃடர் டெலிவரி இங்க கொஞ்ச நாள் இருந்துட்டு அங்க போயிக்கறேன்” என்று தனது முடிவை தாயிடம் தயக்கமாக… ஆனால் தீர்மானமாக உரைத்திருந்தாள் ஐடா.
“நான் வருத்தப்படறேன்னு எல்லாம் நீ சகிச்சிக்கிட்டு அங்க போயி இருக்க வேணாம் ஐடா. பாத்துக்கலாம். எதுனாலும் அம்மா இருக்கேன்!” என்று அந்த நேரத்திலும் மகளுக்கு ஆறுதல் கூறினார் ஸ்டெல்லா.
அத்தோடு, “நல்லவங்க மாதிரி எப்படி முகம் குடுத்து அவங்க வீட்டு ஆளுங்களால நம்மகூடப் பேச முடியுது! கொஞ்சம் கூட உறுத்தாதா அவங்களுக்கு…! என்ன மனுசங்க அவங்க! இப்படி எம்புள்ளையோட வாழ்க்கையில விளையாடிருக்காங்க! எதுவுமே நடக்காத மாதிரி வந்து பேசறாங்க!” என்று புலம்பலையும் துவங்கியிருந்தார்.
அந்த பிரதிபலிப்பு ஸ்டெல்லாவின் வீட்டுப் பராமரிப்பு மற்றும் உணவு சமைத்தல் அனைத்திலும் வெளிப்பட அது ஐடாவின் தந்தை ஆல்வினை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கி, அவரை ருத்திரதாண்டவம் ஆடச் செய்திருந்தது.
மகளின் விசயத்தைத் தனக்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருந்த ஸ்டெல்லாவிற்கு கணவரின் திட்டலோடு, மகளின் திருமண விசயம் மிகுந்த மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தை உண்டாக்கியிருந்தது.
ஏற்கனவே மெனோபஸ் மற்றும் உடல்நலக் குறைபாடு அத்தோடு மகளின் சீர்குலைந்த வாழ்வு அனைத்தும் சேர்ந்து ஸ்டெல்லாவை பக்கவாதத்தில் கொண்டு நிறுத்தியிருந்தது.
விசயமறிந்த ஆல்வின் மனைவியின் நிலையை எண்ணிப் பதறவில்லை. ‘முடியாதவளைக் கட்டிக் கொடுத்து அவங்க வீட்டுல ஏமாத்திட்டானுங்க!’ என்று ஸ்டெல்லாவின் தாய் வீட்டார் மீது பழி போட்டவருக்கு, அவரும் ஒரு விதத்தில் ஸ்டெல்லாவின் இந்த நிலைக்குக் காரணம் என்பதை யார் வந்து சொல்வது?
தாயின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணம் என்பதை உள்ளுக்குள் வைத்துப் புழுங்கினாலும், தாமதிக்காது ஸ்டெல்லாவிற்கு வேண்டிய அனைத்து மருத்துவ சிகிச்சையையும் வழங்கும் முடிவோடு கோயம்பத்தூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் தாமதிக்காமல் தாயைக் கொண்டுசேர்த்திருந்தாள் ஐடா.
அதற்கும் ஆல்வின், “இனி அவ அவ்ளோதான்! அது தெரிஞ்சும் எதுக்கு காசை கரியாக்கிற இப்படி!” என்று மகளைக் கடிந்துகொள்ள,
“ப்பா… உங்களுக்கு அப்டித் தோணுச்சின்னா நீங்க விடுங்க! என்னால அம்மாவை அப்படி விட முடியாதுப்பா! நான் பழையபடி அம்மாவைப் பாக்கணும். அதுக்கு எவ்ளோ செலவானாலும் நான் பாத்துக்கறேன்” என்று பொறுப்பை தனதாக்கிக் கொண்டாள்.
“எல்லாம் கை நிறைய சம்பாதிக்கற திமிரு!” என்று மகளை கூறிவிட்டு, “உள்ளூருக்குள்ள வச்சிப் பாத்தா… நானும் அப்பப்போ வந்து பாக்க முடியும். இப்டி கோயம்பத்தூர் போனா… ஒருத்தியா எப்டி சமாளிப்ப?” என்று மூன்றாம் மனிதரைப்போலக் கேட்ட தந்தையிடம் பேசாமல் கடந்து போயிருந்தாள் ஐடா.
ஐடாவிற்கு தற்போது பணியைத் தொடர முடியாத நிலை. தாயைக் கவனித்து அவரை மீட்டாகவேண்டிய நிலை. புகுந்த வீட்டாருக்கு இந்த விசயத்தைத் தெரியப்படுத்தாமல் கோவை மருத்துவமனையில் தாயோடு சென்று தங்கியிருந்தாள் ஐடா.
ஐடா நீண்ட நெடிய விடுப்பு எடுத்திருந்ததை அறிந்த அஸ்வின் அவளின் எண்ணுக்கு அழைத்து, “எதாவது பிரச்சினையா?” என்று கேட்டான்.
“இல்லையே” என்றவளிடம், “இல்ல… ரொம்ப நாளா மெடிக்கல் லீவ்ல இருக்கியேன்னு கேட்டேன். நல்லா இருந்தா ஓக்கே. பட் எனி டைம் என்ன ஹெல்ப்னாலும் ஹெசிடேட் பண்ணாம பிங்க் பண்ணு” என்று வைத்திருந்தான் அஸ்வின்.
நன்றி கூறி வைத்திருந்தாலும், அஸ்வின் தனது திருமணத்திற்குப்பின் இதுவரை இப்படிப் பேசியிராததால், ‘விசயம் எதுவும் தெரிஞ்சிருக்குமோ!’ என்று ஐடாவிற்கு சிறியதாக நெருடல்.
‘ரீகன் இதையெல்லாம் சொல்லியிருக்க வாய்ப்பில்ல. ஆஃப்டர் மேரேஜ் கால் பண்ணவே செய்யாதவன் இப்ப திடீர்னு ஏன் பண்றான்?’ என்று குழப்பமாக இருந்தது ஐடாவிற்கு.
அதற்குமேல் அவளின் தந்தையின் ஒட்டாத போக்கு. தந்தையின் ஒவ்வொரு செயலையும் பார்த்து, ஐடாவிற்கு அத்தனை வேதனை. ‘இத்தனை வருசம் அவங்ககூட வாழ்ந்தவங்க… இப்ப முடியாமப் படுத்த படுக்கையா பேச முடியாமக் கிடக்காங்க… கொஞ்சம்கூட மனசு இறங்கலையே இவருக்கு’ என்று மனதோடு வைத்துப் புழுங்கினாள்.
தகுந்த நேரத்தில் சிகிச்சையைத் துவங்கியிருந்தமையால் ஸ்டெல்லாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அத்தோடு அவருக்கு பிஸியோதெரபி மற்றும் உடற்பயிற்சி இரண்டையும் கட்டாயமாக்கி அதனைச் செய்திட மருத்துவமனையிலேயே ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் ரூபி பாட்டி ஐடாவிற்கு அழைத்துப் பேச வேறு வழியின்றி தற்போது கோவையில் இருப்பதையும், தாயிக்கு தற்போது நேர்ந்த நிலையையும் அவரிடம் ஐடா கூறிவிட்டாள்.
கூறியவள், “எல்லாம் என்னோட வாழ்க்கைய நினைச்சுத்தான் எங்கம்மா இப்டி ஆகிட்டாங்க!” என்று கதறியவளைத் தேற்றும் வழி தெரியாமல் கலங்கிப் போன ரூபி பாட்டி என்ன முடிவெடுத்தார்?
***