இளைப்பாற இதயம் தா!-4ஆ

இளைப்பாற இதயம் தா!-4ஆ

இளைப்பாற இதயம் தா!-4B

தாயிடம் கூறிவிட்டு பாட்டியின் அழைப்பை ஏற்று உணவகத்திற்கு சென்றவளை நேரில் வந்து வரவேற்க வந்திருந்தான் ரீகன்.  பர்பிள் பிளாரல் பிரிண்டட் காட்டன் சில்க் ஹேண்டட் எம்பிராய்டரி அனார்கலி சூட்டில் தேவதைபோல நின்றவளை இமைசிமிட்ட மறந்துபோய் பார்த்தபடியே நின்றிருந்தான்.

நல்ல நிறமான பெண்ணாதலால் பர்பிள் நிற உடையில் அவளின் நிறம் கூடுதலாக்கிக் காட்டியது.  அளவான தேகம். சிம்பிளாக வந்திருந்தாலும் ரீகனது சிந்தனையை அவளின் நினைவுகளால் அவளறியாமலேயே நிரப்பியிருந்தாள்.

முதல் சந்திப்பிலேயே பரிச்சயமாகத் தோன்றியவனை அதற்குள் எப்படி ஐடாவால் மறக்க முடியும்.  அவன்தான் என்று யூகித்து அருகே வந்தும் எதுவும் பேசாமல் அப்படியே நின்றவனை என்ன சொல்லி நடப்பிற்குக் கொண்டு வருவது என ஒரு கணம் திகைத்துப் போயிருந்தாள்.

கடந்த முறைபோலவே இந்த முறையும் ஃபுல் ஸ்லீவில் இருந்தான். அவனது ஃபுல் ஸ்லீவைப் பார்த்தவளுக்கு, ‘எப்பவுமே ஃபுல் கம்ஸ்தான் யூஸ் பண்ணுவாங்கபோல’ என்று தோன்றியது. 

பார்ட்டி வியர் என்று தனியாக மெனக்கெடாமல் அலுவலகத்திலிருந்ததோடு அப்படியே கிளம்பி வந்திருக்கிறான் என்பதும் புரிந்தது.

பிறகு, ‘ரெண்டாவது முறையா மீட் பண்றதை வச்சி, அவரு எப்போவுமே இந்த மாதிரி ட்ரெஸ் பண்ணிவாங்கனு நீயா எப்படி முடிவுக்கு வந்த?’ என்று அவளுக்குள்ளாகவே எழுந்த கேள்வியை ஒதுக்கிவிட்டு, அவன் இருகரம் நீட்டி செல்லும் வழியை காட்டி  அவளுக்காக ஒதுங்கி நிற்பதைக் கண்டு சிரித்துவிட்டாள் ஐடா.

ஐடா நல்ல வளர்த்தி.  அவளைக்காட்டிலும் இன்னும் வளர்ந்திருந்தவன் தலையை சற்று குனிந்து அவளை வரவேற்ற பாணி அவளை சந்தோசமடையச் செய்திருந்தது. பணிவோடு இருப்பதுபோல அவன் பாசாங்காக வரவேற்ற பாங்கு அவளைச் சிரிக்கச் செய்திருந்தது.

‘உண்மையிலேயே இதை எப்படி எடுத்துக்கணும்’ என்று ஐடாவிற்குத் தெரியாத நிலையில் குழப்பமும் வந்து போயிருந்தது.

ஐடாவின் சிரிப்பு எதனால் என்பது ரீகனுக்கும் புரிந்திட, அவளோடு இணைந்து சன்னச் சிரிப்பை உதிர்த்தபடியே, “எப்டி இருக்க ஐடா?” என்று ரீகன் கேட்டதும்,

“ம்… ஃபைன்” என்றபடியே அவனோடு அவன் கேட்டதற்கு பதில் கூறியபடியே அவர்கள் புக் செய்திருக்கும் டேபிளுக்கு அழைத்துச் சென்றான்.  அப்போதும் அதிகமாக அவளிடம் உரிமை எடுத்துக்கொள்ளவில்லை. சாதாரணமாக ஐடாவோடு பேசியபடியே பாட்டியிடம் அழைத்துச் சென்றான்.

ரீகனைப் பொறுத்தவரையில் ஐடா அவனது வாழ்வில் வந்த அதிசயம்.  மணமகன் அவன்தான் என்று அவள் நாணிக் கோணாமல் சாதாரணமாக தன்னை ஏறிட்டது அவனுக்கு ஆச்சர்யம்.

அதைவிட ஆச்சர்யமோ, தன்னைக் கண்டதும் ஆவலான பார்வையோ, நாணமோ இன்றி தன்னை சாதாரணமாக ஏறிட்டவளை எண்ணியபோது ஏனோ ஏமாற்றமாக உணர்ந்தாற்போலிருந்தது ரீகனுக்கு.

தன்னை மணந்துகொள்ளப் போகும் நிலையில்கூட அவளாகவே உரிமையோடு வந்து தன்னை நெருங்காமல் ஒதுங்கி இருந்த ஐடாவை எண்ணித்தான் ஆச்சர்யம்.

‘தான் அவ்ளோதானா?’  அவனது தற்பெருமைகள் எங்கோ சுக்கு நூறாகிக்கொண்டிருந்த தருணமது

தனியார் அலுவலகத்தில் பணி புரிந்த காலங்களில் நெருங்கிப் பழகும் பெண்களைத் தவிர்த்து சக பணியாளர்களுமே அவனை ஏற்றிவிட்டே பேசியிருந்தமையால் அவனுக்குள் எப்போதுமே சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ராஜாவின் உணர்வு.

அதனாலேயே வலக் கையில் பெரியளவில் கீரிடத்தை டாட்டூவாக போட்டிருப்பான். ரூபிதான் அதனைப் பார்க்கும்போதெல்லாம் திட்டுவார். ‘இது என்ன ரீகன்?  ஏன் இப்படியெல்லாம் கையில பச்சை குத்திட்டு அசிங்கமா பண்ற?’ என்று.

அவனும், “இது பச்சை குத்தினதில்ல பாட்டீ. டாட்டூதான்.  வேணான்னா அழிச்சிறலாம்’ என்று கூறினாலும், அழிக்க அவனுக்கு இதுவரை மனம் வ்ந்ததில்லை.

பாட்டி அதனைக் காணாத வகையில் அவரோடு செல்லும்போது புல் ஸ்லீவில் தெரிவதற்கு இதுவும் ஒரு காரணம்.  இன்னும் ஒரு காரணம் அவனிடம் பல பெண்கள் கூறியது, ‘ஃபுல் ஸ்லீவ்ல உன்னை அடிச்சிக்க சினி இண்டஸ்ட்ரிலகூட இன்னிக்கு யாருமே இல்ல’ என்பதுதான் அது.

இப்படி அவனது சுற்றம் அனைத்தும் அவனை ஏற்றி ஏற்றி விட்டு, மிதக்க வைத்திருக்க அவனது கனவுலக ராஜா கெட்டப்பில் இருந்து கீழிறங்கி வந்த உணர்வு ஐடாவோடு இருக்கும்போது.

‘ஏறெடுத்து பாத்தாலும், கண்ணுல ஆர்வத்தைக் காணோம்.  சாதாரணமா ஒரு மூனாவது மனுசனைப் பாக்கற பார்வை பாக்கறா?’ இப்படியான எண்ணம் அவனுக்குள்.

உண்மையில் அப்படிப்பட்ட பெண்களோடு அவன் பழகியதில்லை என்பதுதான் இத்தனை ஆச்சர்யங்களுக்குமான காரணம் என்பது புரியாமலில்லை. ஆனாலும் ஐடா அதிசயமாகத் தோன்றினாள்.

மணமகனான ரீகன் தன்னிடம் இத்தனை நாகரிமாக பொதுவெளியில் நடந்துகொள்ளும்போது மிகவும் கட்டுக்கோப்போடு வளர்க்கப்பட்டிருந்த ஐடா ரீகன் கேட்டதற்கு பதில் என்றளவில் மட்டுமே பாட்டியோடு சென்றமர்ந்திருந்தாள்.

அவளை இருகை நீட்டி வரவேற்ற ரூபியின் கரங்களுக்குள் சென்று அவரை அணைத்துக் கொண்டாள் ஐடா.  அதைப் பார்த்தவனுக்கு பெருமூச்சுதான்.

அவனது தோழிகள் எல்லாம் ஐடா போன்றிருந்தது இல்லை.  பார்க்கும் பொழுதுகளில் இதமாக ஒரு ஹக். அதன்பின்பும் அவனோடு ஒட்டி, உரசி நின்றபடித்தான் பேசுவார்கள். யாரோ எவரோ என்பதுபோல இத்தனை தூரத்தில் ஒதுங்கி நின்றதில்லை.

ரூபியோ, “அவனைப் பாரேன்.  பொறாமையில வெந்து நிக்கறான்” ஐடாவிடம் கூற,

சிரித்தபடியே அவனை நோக்கியவளின் சிந்திய சிரிப்பில் மனம் வெந்து தணிந்தாலும் வெளியில் கூலாக இருப்பதுபோல காட்டிக்கொள்ளச் சிரமப்பட்டான்.

ஐடாவை நெற்றி முகர்ந்து விடுவித்தவர், “வீட்டுல அம்மா, அப்பா எல்லாம் நல்லாருக்காங்கதானேடா…” என்றார். பொதுவான விசாரிப்புகள் முடியும் முன்பே வந்து நின்ற சர்வரைக் கண்டு மூவருமாக ஒருவரையொருவர் என்ன சொல்லலாம் என்பதுபோல பார்த்துக்கொண்டனர்.

ரூபியோ, “நீங்க ரெண்டு பேரும் உங்களுக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ணுங்க” என இருவரிடமும் பொறுப்பைத் தர,

இருவருமே ஒரே நேரத்தில், “உங்களுக்கு ஆர்டர் பண்றதையே நாங்களும் சாப்பிடறோம் பாட்டி. அதனால நீங்களே சொல்லுங்க” என்று கூறியதைக் கேட்ட ரூபி, “போங்க பசங்களா… உங்களுக்காகத்தான் இந்த மீட். நீங்க என்ஜாய் பண்ற இடத்தில நான் குறுக்கவே வந்திருக்கக்கூடாது. 

ஆனா ஐடா…” என்று ஐடாவைப் பார்த்த பாட்டி, “நீ ரொம்பத் தயங்கினியேன்னுதான் நானும் இவங்கூட வந்தேன்.” என்றவர், பேரனிடம் திரும்பி, “ரீகன்… என்னைப்பத்தி இப்போ யோசிக்காதிங்க… உங்களுக்கு வேணுங்கறதை ஆர்டர் பண்ணிக்கங்க” என்று வற்புறுத்தினார்.

இரண்டு பேருக்கும் இலகுவாகப் பேசிக்கொள்ள தயக்கம் இருந்தது.  கடந்த முறையே அவளின் வேலை பற்றிக் கேட்டிருந்ததால், இந்த முறையும் அதைப்பற்றியே என்ன பேசுவது என்று ரீகனுக்குமே குழப்பம்.

ரீகனுக்கு இதற்குமுன் அலுவலகம் சார்ந்த, மற்றும் உல்லாச கூட்டங்களில் மற்றவர்களிடம் எல்லாம் பேசியது நினைவில் வந்து போக, ‘அப்பெல்லாம் அவ்ளோ பேசுவேன்.  இப்ப இவகிட்ட மட்டும் பேசவே டாபிக் கிடைக்க மாட்டிங்குதே’ என வருந்தினான்.

ஐடாவிற்கோ, ‘அவங்க எதாவது கேட்டா பதில் சொல்லணுமே… எப்ப டின்னர் முடிஞ்சு ஹாஸ்டல் போகலாம்’ என்றே சிந்தனை வலுத்தது.  அது வெறுப்பினால் வந்த எண்ணமல்ல… தயக்கத்தினால் உண்டானது.

ரூபிக்கோ, ‘நாம வந்ததால ரெண்டும் பேசிக்க யோசிக்குதுங்கபோல.  நாம வந்தே இருக்கக்கூடாது’ என்று எதாவது சாக்கு வைத்து அங்கிருந்து தான் மட்டும் விலகிச் செல்ல சுற்றுப்புறத்தை கவனித்துக்கொண்டிருந்தார்.

உணவகம் அமைந்திருந்த அதே மாலிற்குள் காலிற்கான வெந்நீர் மசாஜ் நிலையம் ஒன்றிருப்பதை வரும்போது கவனித்தது நினைவில் வர, தனக்கு பசியில்லை அதனால் எதுவும் வேண்டாம் என்றுவிட்டு, “பிஃப்டீன் மினிட்ஸ்ல வந்திருவேன்.  நீங்க சாப்பிடுங்க.”  என்றவர் தான் செல்லுமிடத்தைப் பற்றிக் கூறிவிட்டு அகன்றிருந்தார்.

“நானும் வரவா பாட்டீ” அவரோடு எழுந்த ஐடாவைப் பார்த்த ரீகனுக்கு, ‘இவ என்னைக் கல்யாணம் பண்ணாலும் எங்கூட டைம் ஸ்பெண்ட் பண்ண யோசிப்பா போலயே’ என்று தோன்றியது.

ரூபியோ, “ஓஹ்  நோ…” என்று அலறியவர், “நீங்க ரெண்டு பேரும் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு இருங்க ஐடா.  ஜஸ்ட் அங்க என்னதான் பண்றானு பாத்திட்டு வந்திறேன்” என்று கிளம்பினார்.

அதற்கு முன்பு சற்று தைரியமாக இருந்த ஐடாவிற்கு அதன்பின் பேச்சு வந்தாலும் சத்தம் வராமல் காத்துதான் வந்தது.  ரீகன் அவளுக்கு வேண்டியதை ஆர்டர் செய்யக் கேட்க, “உங்களுக்குப் பிடிச்சதையே சொல்லுங்க” என்றாள் ஐடா.

“எனக்குப் பிடிச்சது உனக்குப் பிடிக்கணுமில்ல” ரீகன்.

“அதெல்லாம் பிடிக்கும்.” என்றாள்.

“ஃபீல் ப்ரீ ஐடா” அவளின் புறம் ஃபுட் லிஸ்ட் கேட்லாக்கை நகர்த்தி வைத்தான். ஐடாவிற்கு வெளியில் அதிகம் சென்று சாப்பிட்டு பழக்கம் இல்லை. வெளியூர் பயணங்களில்கூட கையில் எதையேனும் செய்து கொடுத்தனுப்பி விடுவார் ஸ்டெல்லா.

தவிர்க்க முடியாத நிலையில் ஹோட்டலுக்குச் சென்றாலும் தந்தை ஆர்டர் செய்து தருவதை உண்டுவிட்டு வருவாளே அன்றி இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டு வாங்கி உண்டதில்லை.

“நீங்க சொல்லுங்க” என்று அவனிடமே அந்த கேட்லாக்கை நகர்த்த,

“நான் எதாவது ஆர்டர் பண்ணி உனக்கு புடிக்கலைன்னா ஓபனா இது வேணான்னு சொல்லுவியா?” என்று கேட்டான் அவளைப் புரிந்தவனாக.

தலையை அசைத்து ஆமோதித்தவளின் கன்னங்களில் சிவப்பேறியிருந்தது. தனக்காக இத்தனை யோசிக்கிறானே என்று எண்ணியதால் உண்டான சிலிர்ப்பு அது.

அவளின் அசௌகர்ய உணர்வை ரீகனிடம் காட்டிக்கொள்ளாமல் இருக்க பார்வையை வேறு புறத்தில் செலுத்தினாள் ஐடா.  ஆனாலும் அவளின் கன்னச் சிவப்பு ரீகனது கண்களுக்குத் தப்பவில்லை.  ‘கன்னத்துல ஒன்னு குடுக்கத் தோணுது…’ என மனதிற்குள் தோன்றியதை ஐடாவிடம் சொல்லும் தைரியம் வரப்பெறாதவனாக, தனக்கு ஆர்டர் செய்த உணவையே ஐடாவிற்கும் கூறினான்.

எதிரெதிரே அமர்ந்திருந்தவர்கள் மிகவும் சங்கோஜத்தோடு இருப்பதாகத் தோன்றியது.  ஐடாவின் நிலை மேலும் மோசம்.   ரீகன் தன்னையே சந்தேகித்தான். ‘என்னாச்சுடா… நல்லாத்தானே இருந்த?  திடீர்னு நீ இப்டி நடந்துகிட்டா எனக்கே பயமாருக்குடா’ என்று மனது திட்ட தன்னைச் சமாளித்தபடியே, “உனக்கு ஹாஸ்டல்ல சாப்பாடெல்லாம் எப்டி?” என்றான்.

ஐடா தனது விடுதியைப் பற்றிக் கூற அதைத் தொடர்ந்தே பேச்சை வளர்க்க முனைந்தான் ரீகன். பாட்டி சென்று பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாகியிருந்தது.  ஐடா பாட்டி வரும் வழியை அவ்வப்போது திரும்பிப் பார்க்க, “அவங்க இப்ப வரமாட்டாங்க” என்றான் ரீகன்.

“எப்டி சொல்றீங்க?”

“நாம ரெண்டு பேரும் பேசணும்னுதான் விட்டுட்டுப் போயிருக்காங்க…”

அமைதியாக ரீகன் பேசுவதை கேட்டுக்கொண்டவள், அதன்பின் அவன் கல்வி மற்றும் கல்லூரி சார்ந்த விசயங்களைக் கேட்டாள்.  இப்படி பேச்சுக்கள் தொடர்ந்ததோடு, ஆர்டர்களும் தொடர்ந்தது.  இருவருக்கிடையே பேசும் ஆர்வமும் தொடர்ந்தது.

முந்தைய சந்திப்பைவிட இந்தச் சந்திப்பு இன்னும் அழகாக இருந்தாற்போலிருந்தது ரீகனுக்கு.  திருச்சபை வகுப்புகளில் கலந்துகொண்டிருந்தவனுக்குள் முன்பைவிட நிறைய மாற்றங்கள்.  அத்தோடு ஐடாவுடன் செலவிட்ட நேரம் அவளோடு நெருங்கிய உணர்வைத் தந்திட தன்னை மறந்து ஐடாவுடன் பேசிக்கொண்டிருந்த வேளை ரூபி திரும்பியிருந்தார்.

வந்தவர், “அந்த போனை ஐடாகிட்டக் குடுத்தியா?” என்றார்.

நினைவு வந்தவனாக அதை எடுத்து ஐடாவிடம் நீட்ட, அப்போதும் ஐடா மறுக்க, ரீகனுக்கு முகமே மாறிப்போனது. அவனது முகம் மாறியதைக் கண்ட ஐடா பதறி, “பேசறதா இருந்தா இந்த போன்லயே பேசலாமே.  அதுக்காக அந்த புது போனைத்தான் வாங்கிக்கணும்னு இல்லையே” என்று கூறியதையே தனக்கான வாய்ப்பாக எண்ணியவன் அவளிடம் பேசும் துணிச்சல் பெற்றிருந்தான்.

கிளம்பும்போது எதேச்சையாக எதிர்கொண்ட நால்வர் கொண்ட குழுவைக் கண்டதும் ரூபியிடம், “பாட்டி நீங்க ரெண்டு பேரும் போயிக்கிட்டு இருங்க.  ரெண்டொரு வார்த்தை ஃப்ரண்ட்ஸ்கூட பேசிட்டு வந்திறேன்” என்று தேங்க…

அந்த நால்வர் குழுவில் ஒருத்தனாக நின்றிருந்த அஸ்வின் எந்த மனக்கிலேசத்தையும் வெளியில் காட்டாமல் ரீகனுடன் கைகுலுக்குவதை அடுத்து பேசிக்கொண்டிருப்பதை ஆச்சர்யமாக பார்த்தபடியே பாட்டியோடு வெளியேறினாள் ஐடா.

அஸ்வினை ஐடா ஆச்சர்யமாகப் பார்ப்பதை ரீகன் பார்த்ததை அவள் அறியவில்லை.  ஆனால் அதை அஸ்வின் கண்டுகொண்டாலும் காட்டிக்கொள்ளாது பேசிக்கொண்டிருந்தான்.

அஸ்வின் அலுவலகத்தின் பெயரைக்கூறி, “நீ இன்னும் அங்கதான இருக்க?” என்று ரீகன் வினவ ஆமோதித்தவனிடம், “உங்க ஆஃபீஸ்லதான ஐடா வர்க் பண்றா?” என்று கேட்ட பிறகு ஆமென்று ஆமோதித்தான் அஸ்வின்.

அதற்குமேல் அமைதியாக இராமல், “நீ என்னைப் பார்த்து பேசிட்டிருக்கறதைத்தான் ஆச்சர்யமா பாத்திட்டே போறாங்க” என்றான் அஸ்வின்.

இத்தனை இலகுவான உறவு இருவருக்கிடையே இருக்கும்போது தன்னிடம் ரீகனைப்பற்றி எதற்கு அப்படிச் சொல்லவேண்டும் என்கிற சிந்தனையோடு ரூபியுடன் வெளியில் காத்திருந்தாள் ஐடா.

அதிகநேரம் காக்க வைக்காமல் வெளியில் வந்தவன், ஐடாவையும் தங்களோடு அழைத்துக்கொண்டு விடுதி வாசலில் இறக்கிவிட்டபின் வீட்டிற்கு கிளம்பினான்.

பெற்றோர் தேர்ந்தெடுத்த ரீகனை மற்றவர் சொல்வதைக்கேட்டு சந்தேகிப்பதோ, மறுப்பதோ தவறென எண்ணியவள் தாயின் வழிகாட்டுதலோடு, திருச்சபையின் வகுப்புகளும் ஐடாவினை மெருகேற்றியிருக்க, ரீகனோடுடனான தனது வாழ்வினை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தினை ஏற்படுத்திக்கொள்ள விழைந்தாள்.

திருமணத்திற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு தேவகோட்டைக்கு கிளம்பியபோது எதிர்கொண்ட அஸ்வின் கூறிய வார்த்தைகள் ஐடாவின் எண்ணத்தை மாற்றியதா?

***

Leave a Reply

error: Content is protected !!