உடையாத(தே) வெண்ணிலவே 14

உடையாத(தே) வெண்ணிலவே 14

அன்பு.

அது ஒரு காட்டுமலர்!

அதை விதைக்க தேவையில்லை. தண்ணீர் ஊற்ற அவசியமில்லை.  இருந்தாலும் அது முகிழ்ப்பதை யாராலும் தடுக்க முடியாது.

அப்படி தான் மான்யாவிற்கும் ஆரனாஷிக்குமிடையே மலர்ந்து மணம் வீசியது அன்பென்னும் காட்டு மலர்.

இருவருக்குமிடையே இருந்த இடைவெளியை ‘தாய்’ என்னும் ஒற்றைப் புள்ளி இணைத்துவிட இப்போது மிக நெருக்கமாக இருவரும்.

அந்த திடீர் நெருக்கம் ஷ்யாமின் கண்ணை வெகுவாக உறுத்தியது.

ஆரனாஷியை தோளில் சாய்த்துக் கொண்டு உள்ளே வந்த மான்யாவை வித்தியாசமாக பார்த்தவனின் கால்கள் வேகமாக அவளை நெருங்கியது.

மான்யாவின் விழிகளையே அழுத்தமாக பார்த்தான்.

அந்த பார்வை! அதன் தீர்க்கம், அதன் ஊடுருவல், அதன் குற்றச்சாட்டு, மான்யாவின் இதயத்தை குழப்பிய குளமாக்கியது.

‘எதற்காக இப்படி பார்க்கின்றான் இவன்?’ கேள்வியோடு நோக்கியவளின் தோள்களிலிருந்து ஆரனாஷியை வேகமாக பிரித்தெடுத்தான்.

“ஆஷிமா நீ உள்ளே போய் ஸ்கூலுக்கு ரெடியாகு. அப்பா இதோ வந்துடுறேன்” ஆரனாஷியை உள்ளே அனுப்பியவனின் பார்வை மீண்டும் மான்யாவின் மீது படிந்தது.

“சொல்லு மான்யா? எதுக்கு ட்ரை பண்றே” ஆதியும் விளக்காமல் அந்தமும் சொல்லாமல் அவன் கேட்ட கேள்வி மான்யாவை குழப்பியது.

“நான் எதுக்கு ட்ரை பண்றேன்?” எதிர்க்கேள்வி கேட்டாள் அவள்.

“ஐ யம் வார்னிங் யூ அகெய்ன். எங்கம்மா கிட்டே ஆடுன அதே கேம்மை என்  பொண்ணு கிட்டேயும் விளையாடதே. கடைசியிலே எல்லாம் பொய்னு தெரிஞ்சா அந்த சின்ன இதயம் தாங்காது” இதழ்களில் கசப்பை தேக்கி சொன்னவனையே கோபமாக பார்த்தாள்.

‘நான் காட்டும் அன்பு இவனுக்கு விளையாட்டாக தெரிகிறதா? இந்த ரோபாவிற்கு அன்பின் பாஷை அத்தனை சீக்கிரத்தில் புரிந்துவிடுமா என்ன! உள்ளுக்குள் தோன்றிய கேள்வியோடு அங்கிருந்து செல்ல முயன்றாள்.

ஆனால் அவளை அடுத்து முன்னேற முடியாதபடி அவளின் கையை இறுகப் பற்றி திருப்பினான். அவனது வேகத்தில் அவள் சுழன்றடித்து திரும்பியவள் ஷ்யாமின் மீது மோதாமல் சமாளித்துக் கொண்டு நின்றாள்.

இருவருக்கிடையேயும் இப்போது சென்டிமீட்டர் இடைவெளியே. அந்த இடைவெளியையும் இணைக்கும் பாலமாய் ஒலித்தது ஷ்யாமின் குரல்.

“மான்யா இதுக்கு மேலே இந்த விளையாட்டை தொடராதே. இது தான் உனக்கான கடைசி எச்சரிக்கை” என்றவனை சலிப்பாக பார்த்தாள்.

‘இவனுக்கு புரியும்படி பேச தெரியாதா? இல்லை இவன் பேசுவதை என்னால் தான் புரிந்து கொள்ள முடியவில்லையா?’

கேள்விகளின் வலையில் அவள் வார்த்தை மீன்கள் சிக்கிக் கொண்டது.

அவளது மௌனத்தைப் பார்த்தவனுடைய  கைகளின் பிடியின் அழுத்தம் நொடிக்கு நொடி கூட, வலியோடு நிமிர்ந்த மான்யா, “கையை எடுங்க” என்றாள் ஆத்திரமாக.

“என் பொண்ணை விட்டுடுறேனு சொல்லு, நான் உன் கையை விடுறேன்” சட்டமாக உரைத்தவனை வெட்டும் பார்வைப் பார்த்தவள் சட்டென அவன் கையை அழுத்தமாக கிள்ளிவிட்டாள்.

வேகமாக பிடியைத் தளர்த்தியவன் “யூ இடியட்” என்றான் கைகளை உதறிக் கொண்டே

“ஷ்யாம், உங்களை மாதிரி சைக்கோங்களுக்கு அன்புனா என்னனு தெரியாதுன்றதை என்னாலே தெளிவா புரிஞ்சுக்க முடியாது. ஆனால் அதுக்காக மீனாட்சியம்மா, ஆரனாஷி மேலே நான் காட்டுற பாசத்தை விளையாட்டுனு சொன்னா சும்மா இருக்க மாட்டேன்” விரலை நீட்டி எச்சரித்துவிட்டு சென்றவளை ஒரு பார்வை பார்த்தான்.

அவன் பார்வையில் இருந்தது வன்மமா? கோபமா? புன்னகையா?

ஜல்லடை வைத்தாலும் பிரித்து அறிய முடியாத பார்வை அது.

💐💐💐💐💐💐💐💐💐💐

மதுரா மருத்துவமனை!

புற நோயாளி பிரிவில் திணறிக் கொண்டிருந்தாள் மீரா.

இருபதிலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் அந்த ஆணுக்கு. ஆனால் சிறுபிள்ளை போல எந்த பரிசோதனைக்கும் ஒத்துக் கொள்ளாமல் அழிச்சாட்டியம் செய்பவனையே  இயலாமையோடு பார்த்தாள்.

“சார் ப்ளீஸ், கொஞ்ச நேரம் கோ-ஆப்பரேட் பண்ணுங்க. பிளட் டெஸ்ட் தான். ரெண்டு நிமிஷம் தான் வலியிருக்கும் அப்புறம் போயிடும்” சமாதானப்படுத்தபடியே சிரன்ஞோடு நெருங்கினாள்.

அவனோ  ஊசி போடவிடாமல் கைகளை அழுத்தமாக பற்றியபடியே அவளை ஒரு மாதிரி பார்வைப் பார்த்தான். கூடவே வார்த்தைகளும் ஒரு மாதிரி வந்து விழுந்தது.

“ஊசி போடுற இடத்துலே நீ முத்தம் கொடு. அப்போ வேணா கோ-அப்பரேட் பண்றேன்” என்றவனின் கேலி வார்த்தைகள் அங்கே வந்த விஷ்வக்கின் காதுகளில் தெளிவாக விழுந்துவிட அவனது கைகளில் முறுக்கேறியது.

வேகமாக வந்தவன் அவனின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை வைத்துவிட்டு மறு அறை வைக்க முயல, வேகமாக இடையில் புகுந்து தடுத்தாள் மீரா.

“விஷ்வக் என்ன பண்றீங்க? அவர் பேஷன்ட், எப்படி அடிக்கலாம்?” மீரா காரமாய் விஷ்வக்கை கேட்டுக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அந்த பேஷன்டின் குரல் இடையில் புகுந்து ஒலித்தது.

“ஐ அப்போ இந்த நர்ஸ் குட்டிக்கும் நான் சொன்னதுலே சம்மதம் தான் போல. வா குட்டி இப்போ வந்து உம்மா கொடு. அப்புறமா மீதியை வெளியே போய் பார்த்துக்கலாம் ” அவன் எல்லையில்லாமல் பேசிக் கொண்டே போக இம்முறை  விஷ்வக்கின் கரங்கள் இடியாய் இறங்கியது அவன் கன்னத்தில்.

“மவனே அடுத்த தடவை ஏதாவது வார்த்தை வந்தது கொன்னுடுவேன் உன்னை.உங்களுக்கு சேவை செய்யுற நர்ஸை நான் கடவுளா பார்க்க சொல்லல. அட்லீஸ்ட் சக மனுஷியாவது பார்த்து தொலைங்களேன்டா” விஷ்வக் அடிகுரலில் சீறிவிட்டு திரும்ப, எதிரே ஷ்யாம்.

அவன் கண்களில் கோபத்தின் அனல். ஆனால் ஷ்யாமின் பின்னே நின்றிருந்த  மான்யாவின் விழிகளில் ஆதரவு.

விஷ்வக் என்ன நடந்ததென்று விளக்க எத்தனிக்க ஷ்யாமோ கை நீட்டித் தடுத்துவிட்டு, “அவர் கிட்டே சாரி கேளுங்க ரெண்டு பேரும்” என்றான் உணர்ச்சி துடைத்த முகத்தில்.

“வாட்!” மான்யாவும் விஷ்வக்கும் ஒரே நேரத்தில் அதிர்ந்தனர். ஆனால் மீராவிடம் சுத்தமாக அதிர்வில்லை.

வேகமாக சென்று அந்த பேஷன்டிடம் மன்னிப்பு கேட்க முனைந்தாள். ஆனால் விஷ்வக் விட்டால் தானே கேட்க முடியும்.

அவளின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டவன் ஷ்யாமின் முகத்தை தீர்க்கமாக பார்த்தான்.

“அந்த பேஷன்ட் மீரா கிட்டே தப்பா பேசுனான். அதனாலே தான் அடிச்சேன். எனக்கிது தப்பா தோணலை அதனாலே  மன்னிப்பும் கேட்க மாட்டோம்” இவன் மறுத்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஷ்யாம் இடையிட்டான்.

“தப்பு விஷ்வக். ஒரு டாக்டரா இருந்துக்கிட்டு பேஷன்டை காயப்படுத்துற உரிமை நமக்கில்லை. அவர் கிட்டே மன்னிப்பு கேளு” என்றவனின் வார்த்தைகளில் அப்படியொரு அழுத்தம்.

அந்த அழுத்தத்தை மீற முடியாமல் விஷ்வக் கெஞ்சலாக ஷ்யாமை பார்த்தான்.

அத்தனை எளிதில் அசைந்துவிடுவானா அவன்?  கொஞ்சமும் மாற்றமில்லாமல் “மன்னிப்பு கேளுங்க” என்றான் அழுத்தமாக.

மீரா வேகமாக விஷ்வக்கின் பிடியிலிருந்து தன்னைப் பிரித்தெடுத்துக் கொண்டு, பேஷன்டிடம்  மன்னிப்பு கேட்டுவிட்டு விஷ்வக்கைப் பார்த்தாள். இது உன்னுடைய முறை என்பதைப் போல.

“ப்ளீஸ் விஷ்வக் நீங்களும் அவர் கிட்டே மன்னிப்பு கேட்டுடுங்க” மீராவின் கெஞ்சலுக்கு நீண்ட பெருமூச்சுவிட்டவன் சாரி என்ற வார்த்தையை வேண்டா வெறுப்பாக சொல்லிவிட்டு  வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான்.

ஆனால் செல்லும் முன்பு ஷ்யாமை ஒரு பார்வை பார்த்தான். அந்த பார்வை ஷ்யாமை ஏதோ செய்தது.

‘என்னை இப்படி செய்ய வைத்துவிட்டாயே’ என்ற ஆற்றாமை ஊறியிருந்த  விஷ்வக்கின் பார்வையைக் கண்டு ஸ்தம்பித்த ஷ்யாம் பின்பு வேகமாக பேஷன்டின் முன்பு வந்து நின்றான்.

“மீரா நீங்க தள்ளுங்க. நான் இவரைப் பார்த்துக்கிறேன்” என்றவன் அந்த பேஷன்டிற்கு எல்லா பரிசோதனைகளையும் முடித்துவிட்டு தன்னறைக்குள் வந்து சோர்வாக விழுந்தான்.

தையல் போட்ட தோளில் வலி எடுக்க துவங்க  அவன் கைகள் டேப்லெட்டை தேட சென்ற சமயம் கதவு கீறிச்சிட்டது.
சப்தம் கேட்டு நிமிர்ந்தவனின் கண்களில் மான்யாவின் உருவம் விழுந்தது. அவள் கண்களிலிருந்த கோபத்தைக் கண்ட ஷ்யாமிடம் பெருமூச்சு.

“அத்தனை பேரு முன்னாடி ஏன் விஷ்வக்கை அசிங்கப்படுத்துனீங்க. தப்பு அந்த பேஷன்ட் மேலே இருக்கும் போது எதுக்காக விஷ்வக் மன்னிப்பு கேட்கணும். எனக்கு உங்க லாஜிக்கே புரியலை” என்றாள் கைகளை விரித்து.

விரித்த அவளது கைகளில் இரண்டு ஃபைல்களை வைத்தவன் “நாளைக்கு பண்ண போற சர்ஜரிக்கு இந்த ஸ்டெடி மெட்டீரியல்ஸ் தேவைப்படும். கோ த்ரூ பண்ணு” தகவலாக சொல்லிவிட்டு, மேஜையில் வைத்திருந்த ஃபைல்களைப் பார்க்கத் துவங்கினான் ‘இனி உன்னிடம் பேச எதுவுமில்லை’ என்ற பாவனை காட்டி.

அதைக் கண்டு மான்யாவிற்குள் கண்மண் தெரியாமல் ஆத்திரம் கூடியது.

“இங்கே ஒருத்தி கேள்வி கேட்டது உங்க காதுலே விழுந்துச்சா ஷ்யாம் சார். பதில் சொல்லாமல் இருந்தா என்ன அர்த்தம்” என்றாள் கேள்வியாக.

“உன் கிட்டே பேசி என் டைம்மை வேஸ்ட் பண்ண நான் நினைக்கலனு அர்த்தம். யாருக்கும் வக்காலத்து வாங்காம போய் உனக்கு கொடுத்த வேலையைப் பாரு” கதவை சுட்டிக் காட்டி சொன்னவனையே எரிக்கும் பார்வைப் பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றவள் பின்பு வேகமாக திரும்பி தன் கோட்டிலிருந்து பெயின் கில்லரை எடுத்து மேஜையில் வைத்தாள்.

“அந்த பேஷன்டுக்கு சிரென்ஜ் போடும் போது உங்க தோளிலே வலி எடுக்கிறதை நோட்டிஸ் பண்ணேன். இப்போ இந்த டேப்லெட் போட்டுக்கோங்க. பட் மெடிசின் எடுத்த அப்புறம் அதிகம் வலியிருந்தா சொல்லுங்க ஃபர்தரா டெஸ்ட் எடுக்கலாம்” என்றவளைப் பார்த்து அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

‘தன் முகத்தில் ஏற்பட்ட மெல்லிய சுணக்கத்தை கூட கவனித்துவிட்டாளா இவள்!’ உள்ளுக்குள் தோன்றிய வியப்பை மறைத்து கொண்டு,

“சரிங்க டாக்டர். வேற ஏதாவது இந்த பேஷன்டுக்கு சொல்ல வேண்டியது இருக்கா?” போலி பணிவு காட்டி பேசியவனைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றுவிட்டாள்.

அவள் சென்ற திசையை வெறித்தவனின் கண்கள் அந்த மாத்திரையின் மீது படிய உதடுகளில் மெல்லிய முறுவல் கூடவே சிறு முணுமுணுப்பு.

‘ஆர்வக்கோளாறு இன்டெர்ன் தான். ஆனால் கொஞ்சம் புத்திசாலியாவும் இருக்கா!’

 
💐💐💐💐💐💐💐💐

கேன்டீன்!

வாடிய முகத்துடன் அமர்ந்திருந்த விஷ்வக்கின் முன்பு கூல்ட்ரிங்க்ஸை நீட்டியது ஒரு கரம். நிமிர்ந்துப் பார்த்தவனின் முகம் எதிரிலிருந்த மீராவைக் கண்டு சுருங்கியது.

“சாரி” என்றாள் மெல்லிய குரலில்.

அந்த வார்த்தையைக் கேட்டவனின் உதடுகளில் கசந்த முறுவல்.

“சாரின்ற விலைமதிப்பில்லாத வார்த்தையை எதுக்கு அந்த பொறுக்கி கிட்டே சொன்ன மீரா. என்னையும் ஏன் சொல்ல வைச்ச?” என்றான் வருத்தமாக.

“என்ன இருந்தாலும் நாம ஒரு பேஷன்டை காயப்படுத்தி இருக்கக்கூடாது விஷ்வக். இந்த வெள்ளை ட்ரஸை மாட்டுன அப்புறம் நாம விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவங்க” விளக்கம் சொன்னவளைக் கண்டு அவனிடம் சலிப்பு.

“ப்ளீஸ் இதே டயலாக்கை சொல்லி நீயும் ஷ்யாமும் வெறுப்பு ஏத்தாதீங்க. மெடிக்கல் ஃபீல்ட்லே இருந்தா நமக்கு எந்த உணர்ச்சியும் இருக்கக்கூடாதா? வாட் நான்சன்ஸ்” ஆற்றாமையோடு கேட்டவனின் தோள்களில் ஆதரவாய் விழுந்தது ஒரு கரம்.

நிமிர்ந்துப் பார்க்க மான்யா.

“வெல் செட் விஷ்வக். நானும் இதே தான் கேட்கிறேன். நாம டாக்டர்ஸ் தானே தவிர ரோபோட்ஸ் இல்லையே, எந்த உணர்வும் இல்லாம இருக்கிறதுக்கு. இந்த ஷ்யாம் ரொம்ப தான் ஓவரா பண்றாரு” சொல்லிக் கொண்டே சிப்ஸை வாயில் எடுத்துப் போட்ட போது அவளின் மீது ஒரு நிழலுருவம் விழுந்தது.

வேகமாக திரும்பிப் பார்த்தாள். அங்கே கையைக் கட்டியபடி முறைத்து நின்ற ஷ்யாமைக் கண்டதும் அவளின் கண்கள் கோலி குண்டானது.

“மான்யா, அதான் நீங்க இன்னும் ரெண்டு வாரத்துலே அன்பு பாசம் ப்ளா ப்ளா தான் ஜெயிக்க போதுனு சவால் விட்டிருக்கீங்களே.  பார்க்கலாம் இந்த ரோபோ ஜெயிக்கிறனா இல்லை உங்க அன்பு ஜெயிக்குதானு” ஏளனமாக சொல்லிவிட்டு விஷ்வக்கிடம் தயக்கமாக திரும்பினான்.

“விஷ்வக் கொஞ்சம் உன் கிட்டே பேசணும்டா. என் ரூமுக்கு போலமா?” ஷ்யாம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே விஷ்வக் எழுந்து நின்றான்.

“சாரி சீனியர். எனக்கு இப்போ உங்க கிட்டே பேச விருப்பமில்லை” சட்டென்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட மான்யாவோ ஷ்யாமை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு வேகமாக விஷ்வக்கிற்கு பின்னே ஓடினாள்.

விஷ்வக்கையே பார்த்த ஷ்யாமின் விழிகளில் மெல்லிய கலக்கம் ஊடாடியது.

அவன் முகத்திலிருந்த கவலை வரிகளைப் படித்த மீராவின் விரல்களோ ஆதரவாய் ஷ்யாமின் தோள்களைத் தொட்டது.

“தன்னோட சீனியர் கிட்டே பேசாம விஷ்வக் ஒரு நாளாவது இருந்து இருக்காரா? கவலைப்படாதீங்க ஷ்யாம். கண்டிப்பா விஷ்வக் பேசுவாங்க”  ஆதரவாய் சொல்ல ஷ்யாமின் விழிகள் அன்பாய் மீராவின் மீது விழுந்தது.

 

Leave a Reply

error: Content is protected !!