உடையாத(தே) வெண்ணிலவே 19
உடையாத(தே) வெண்ணிலவே 19
விடியல்!
எல்லா இடத்தையும் வெளிச்சத்தில் நனைத்தாலும் சில மனதிலிருக்கும் இருட்டை மட்டும் அதனால் குடிக்க முடியாது.
அதே போல தான் இதுநாள் வரை மான்யாவின் வாழ்வில் வெளிச்சத்தை பரப்பாத அந்த விடியல் முதல் முறை அவள் வாசல் வந்து விழுந்தது.
ஆதவனின் கிரணத் தூறல்களில் மஞ்சளாய் நனைந்திருந்தது மான்யாவின் முகம்.
உதட்டில் பூத்த முறுவலுடன் காலில் இருந்த கொலுசைப் பார்த்தாள். அது குலுங்கும் ஒவ்வொரு பொழுதும் ஷ்யாமின் நினைவு மனதில் சிணுங்கியது.
‘ஷ்யாம் சரியான சைக்கோவா தான் இருக்கான். ஆனால் இந்த சைக்கோவையும் வர வர பிடிக்குதே ஏன்!’ உள்ளுக்குள் எழுந்த கேள்வியோடு கிளம்பி வெளியே வந்தாள்.
அங்கே ஆரனாஷி பூத்த புதுமலராய் நின்று கொண்டிருந்தாள். ஆனால் அந்த மலரின் இதழ்களோ நீலம் பாரித்தது போல இருந்தது.
அதைக் கண்டு மான்யாவின் முகத்தில் மாறுதல்.
ஆஷி முகத்தில் விழுந்த வலி கோடுகளோடு, இறுக்கமாய் இதயத்தைப் பிடித்துக் கொள்ள மொத்தமாய் கலங்கிப் போனாள்.
வேகமாக ஓடி வந்தவள், “ஆஷிமா ஹார்ட் கிட்டே வலிக்குதா?” எனக் கேட்க அவளிடம் வலியுடன் கூடிய ஆமோதிப்பு.
“எவ்வளவு நாளா இப்படி இருக்கு ஆஷி”
“ரொம்ப வருஷமா” இந்த பதில் அவளை அதிர வைத்தது.
“வாட்! ஆஷிமா அப்பா கிட்டே இப்படி வலிக்கிதுனு சொன்னியா இல்லையா?” அவசரமாக கேட்ட மான்யாவை நோக்கி இல்லையென்று மறுத்து தலையசைத்தாள்.
“அப்பா பயப்படுவாங்க மானு மா. ஏற்கெனவே பாட்டியை நினைச்சு அப்பா கஷ்டத்துலே இருக்கும் போது நானும் கஷ்டப்படுத்தக்கூடாதுல” பெரிய மனுஷியாய் பேசியவளைக் கண்டு மான்யாவின் விழிகளில் நெகிழ்வும் கலக்கமும்.
“ஆஷி, இன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சதும் ட்ரைவரை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வர சொல்லு” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஷ்யாம் அங்கு வந்து சேர்ந்தான்.
அதுவரை வலியின் வீரியத்தில் சுருங்கியிருந்த ஆஷியின் முகம் ஷ்யாமைக் கண்டதும் சட்டென முகபாவனைகளை மாற்றிக் கொண்டது.
“அப்பா, ஆஷி குட் கேர்ளா ஸ்கூலுக்கு ரெடியாகிட்டேன்” வரவழைத்த புன்னகையுடன் சொன்னவள், மான்யாவிடம் திரும்பி எதுவும் சொல்லிவிடாதே என்ற பாவனையை காட்டினாள்.
மான்யாவின் இதழ்களில் அழுத்தமான மௌனகோடு. அவள் இதயம் எதை எண்ணியோ கலங்கிப் போய் இருந்தது.
என்ன தான் புன்னகையை பூசியிருந்தாலும், ஆஷியின் முகத்தில் எழுதியிருந்த வலியின் வரிகளை ஷ்யாம் தெளிவாக படித்துவிட்டான்.
“ஆஷி, என்னாச்சுடா ஏன் அகெய்ன் டல்லா இருக்க? எப்பவும் போல பாட்டியை நினைச்சு ஃபீல் பண்றியா?” அவள் வலியை மறைப்பதற்காக வழக்கமாக சொல்லும் பொய்யை ஷ்யாம் கேட்கவும் வேகமாக ஆமோதித்து தலையாட்டினாள்.
“பாட்டி சீக்கிரமா சரியாகிடுவாங்கடா. நீ எதை நினைச்சும் ஃபீல் பண்ணாதே” குழந்தையை இறுக்கி அணைத்து சொன்னவனின் பார்வை ஸ்தம்பித்து நின்ற மான்யாவின் மீது விழுந்தது.
“ஓய் இன்டெர்ன் இப்போ எதுக்கு ஃப்ரீஸ் ஆகி நிற்கிற? கமான் ஹாஸ்பிட்டலுக்கு டைம் ஆச்சு” துரிதப்படுத்தியவனைக் கண்டு தன்னிலை மீண்டவள் வேகமாக காரின் முன்னிருக்கையில் ஏறி ஆஷியை மடியில் வைத்துக் கொண்டாள்.
ஆஷியின் மீது கொடியாய் படர்ந்த இவள் கரங்கள், ஒவ்வொரு முறை அந்த குட்டி இதயம் துடிக்கும் ஓசையை உணரும் போதும் விழிகளில் சுருக்கம்.
எதை எண்ணியோ இறுகியிருந்த மான்யாவின் தோள்களை வேகமாக அசைத்தவன், “மான்யா நான் பேசுறது கேட்குதா? ஆஷி ஸ்கூல் வந்துடுச்சு. அவளை இறக்கி விடு” என்றான் அவள் காதருகில் சப்தமாக.
தன் காதுகளை வேகமாக தேய்த்துக் கொண்ட மான்யா, “எனக்கென்ன காதா போச்சு? ஏன் இப்படி கத்துறீங்க” எரிச்சல் மண்டிய குரலில் ஷ்யாமை ஏறிட்டபடியே ஆஷியை இறக்கிவிட்டாள்.
“பேசுற எதுக்கும் ரியாக்ட் பண்ணலைனா காது டமாரம்னு தானே நினைப்பாங்க” நக்கலாக கேட்டவனைப் பார்த்து இதழை சுழித்தாள்.
“டாடி நான் போயிட்டு வரேன். மானுமா நீங்க காரிலே போகும் போது உங்க ஃபைட்டை கன்டினியூ பண்ணுங்க” குறும்போடு சொல்லிவிட்டு சென்றவளை ஷ்யாம் புன்னகைத்து வழியனுப்பிவிட்டு மான்யாவை பார்த்தான்.
இப்போதும் அவள் முகம் ஏதோ ஒரு யோசனையை சுமந்தபடியே இருந்தது.
‘என்ன தான் ஆயிற்று இவளுக்கு?’ கேள்வியுடன் கார் கதவை மூட முனைந்த போது அவன் கண்களில் மினுங்கியது கால்களில் அணிந்திருந்த கொலுசு.
அதைக் கண்டு ஷ்யாமின் இதழ்களில் ஒரு மர்மப்புன்னகை.
“என் கிஃப்ட் பிடிச்சுருந்துதா மான்யா?” அவன் கேள்வியில் கலைந்தவள் வேகமாக ஆமென்று தலையாட்டினாள்.
அவள் பதில் கேட்டு ரேஷன் கடை சர்க்கரை போல எடைக்குறைவாக சிரித்தான்.
அந்த புன்னகையின் பொருள் புரியாமல் மான்யா திணறிய நேரம், கார் மதுரா மருத்துவமனையின் முன்பு வந்து நின்றது.
உள்ளே நுழைந்த அடுத்த நொடி ஷ்யாமின் முகம் உணர்ச்சி வடிகட்டிய முகமாய்.
இதற்கு முன்பு பார்த்த ஷ்யாம் நிச்சயமாக இவன் இல்லை.
அவன் முகத்தையே அளவிட்டுக் கொண்டிருந்தவளையே, “மான்யா எமெர்ஜென்சி வார்டை கேர்ஃபுல்லா பார்த்துக்கோ. ஏதாவது கோளாறு நடந்தது உன்னை கோழி மாதிரி உரிச்சுடுவேன் ” மிரட்டியபடியே தன்னறைக்குள் நுழைந்தவனைப் பார்த்து “இந்த டயலாக்குக்கு ஒன்னும் குறைச்சலில்லை” பொருமியபடி தன் வேலையைப் பார்க்க துவங்கினாள்.
சரியாக மதியம் இரண்டு மணிக்கு ஆரனாஷி மருத்துவமனைக்குள் நுழைந்தாள். குழந்தையின் முகத்தில் நோய்மையின் கோடுகள் தீவிரமாய் படர்ந்திருந்தது.
வேகமாக ஈ.ஈ.ஜி மற்றும் இதயம் சார்ந்த டெஸ்ட்களை ஆய்வகத்தில் கொடுத்துவிட்டு வந்த மான்யாவையே கலக்கமாக பார்த்தாள் ஆரனாஷி.
“நான் செத்துடுவனா மானுமா?”
அந்த கேள்வியில் உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள் மான்யா.
வேகமாக ஆஷியை கட்டி கொண்டவள், “இல்லைடா உனக்கு எந்த நோயும் இல்லைனு கன்ஃபார்ம் பண்ணிக்கிறோம். அவ்வளவு தான்” என்றாள் வேகமாக.
ஆரனாஷி வந்த செய்தி அறிந்து ஷ்யாம் அங்கு வந்து சேர்ந்தவன் மான்யாவின் கலங்கிய முகத்தைக் கண்டு “என்ன ஆச்சு இன்டெர்ன். எனி திங் ராங்?” கேள்வியாக நோக்க, மான்யா பதில் சொல்ல வரும் போதே அங்கே நர்ஸ் ப்ரீத்தி வேகமாக ஓடி வந்தாள்.
“ஷ்யாம் சார், ஸ்வேதாவோட வைட்டல்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் ரொம்ப மோசமா இருக்கு” என்றதும் ஷ்யாம் துரிதமானான்.
நர்ஸ் ப்ரீத்தியிடம் ஆஷியை ட்ரைவரிடம் கொண்டு விட பணித்தவன் மான்யாவை அழைத்துக் கொண்டு ஸ்வேதா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தான்.
ஸ்வேதாவின் கண்கள் மற்றும் பல்ஸை சரிபார்த்தவனின் முகத்தில் ஏகப்பட்ட சிந்தனை சுருக்கங்கள்.
“மான்யா டேக் ஹெர் டூ ஹைபிரிட் ரூம்(தனியறை)” வேகமாக கட்டளையிட்டுவிட்டு ஸ்வேதாவிற்கு செய்ய வேண்டிய பரிசோதனைகளை பட்டியலிட்டான்.
அவன் சொன்ன எல்லா டெஸ்டும் மூளை சம்மந்தப்பட்டதாக இருக்க மான்யாவிடம் புருவ நெறிசல்.
“ஷ்யாம் சார், லிவர் அன்ட் லங் கேன்சருக்கு ஏன் ப்ரைன் ரிலேடட் டெஸ்ட் எடுக்கணும்” கேள்வி கேட்டு நின்றவளை வெட்டும் பார்வை பார்த்தான்.
“மான்யா உனக்கு க்ளாஸ் எடுக்கிற அளவுக்கு எனக்கு இப்போ டைம் இல்லை. நான் சொன்னதை முதலிலே செய் போ” அடுத்து பேச முடியாதபடி வாயை அடைத்துவிட்டு சென்றுவிட மான்யாவின் பார்வை கலக்கமாக ஸ்வேதாவின் பக்கம் திரும்பியது.
அவன் கொடுத்துவிட்டு போன எல்லா பரிசோதனைகளையும் ஆய்வகத்தில் கொடுத்துவிட்டு நிமிரும் போது மஞ்சள் வெளிச்சம் வானில் பரவ துவங்கியது.ஆனால் இங்கோ ஒளியிழந்த ஓவியமாய் ஸ்வேதா.
காலையிலிருந்து நிழல் போல ஸ்வேதாவின் மீது பாதுகாப்பாய் படர்ந்திருந்த மான்யாவை அழைக்க வந்த ஷ்யாம் அவள் முகத்தைக் கண்டு இமை சுருக்கினான்.
தற்செயலாக திரும்பிய மான்யா அவனின் பார்வை கண்டு புருவம் உயர்த்த, வேகமாய் தன் சிரத்தை அசைத்து கலைந்தவன் “நம்ம ஷிஃப்ட் முடிஞ்சாச்சு. வீட்டிற்கு இன்னும் கிளம்பலையா?” என்றான்.
“ஷ்யாம் ப்ளீஸ் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் இங்கே ஸ்வேதா பக்கத்திலே இருக்கிறேனே” கெஞ்சலாக கேட்டவளை கடினமாக பார்த்தான்.
“மான்யா ஐ யம் டெல்லிங் யூ அகெய்ன், எமோஷனலா பேஷன்டோட அட்டாச்ட் ஆகாதே” என்றான் ஒரு மாதிரி குரலில்.
“சாரி ஷ்யாம், நான் உங்களை மாதிரி ரோபோ இல்லை. ஐ ஹேவ் ஃபீலிங்க்ஸ். அதை எங்கே எப்படி யார் கிட்டே காமிக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும். நீங்க இல்லை” என்றவளைப் பார்த்து பெருமூச்சுவிட்டான்.
“ஓகே தென், உன் இஷ்டம் மான்யா” எடையற்ற குரலில் சொன்னவனின் பார்வை அவளின் மீது படர்ந்தது.
அந்த பார்வையில் அவள், தடுமாறி நின்ற நேரம் வேகமாக அருகில் வந்தவன் மான்யாவின் கையை ஒரே ஒரு முறை அழுத்திப் பிடித்தான்.
அந்த ஸ்பரிசம் எதையோ ஆற்றுப்படுத்தியது. எதற்காகவோ தயாராக சொன்னது. மான்யா புரியாமல் நிமிர்ந்த நேரம் ஷ்யாம் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான்.
நொடிப் பொழுதில் நடந்தது என்ன?
ஷ்யாம் என்பவன் எப்போதும் புரியாத புதிர் தானா!
திகைப்பிலிருந்து மீளவில்லை அவள்.
💐💐💐💐💐💐💐
அந்தியின் அழகு அத்தனை ரம்மியமானது.
சூரியனின் கிரணங்கள் மங்கி மறைய தெருவிளக்குகளின் பிரகாசத்தில் மின்னிக் கொண்டிருந்தது அந்த சாலை.
தன் ஷிப்ஃட்டை முடித்துவிட்டு வெளியே வந்த விஷ்வக் ஆசுவாசமாக சாலையில் நடந்து கொண்டிருக்க எதிரே கண்ட காட்சியில் அவன் கை முஷ்டி இறுகியது.
அன்று மருத்துவமனையில் மீராவை வம்பிழுத்த அதே ஆள் இப்போது மீண்டும் மீராவின் அருகே தொல்லை தருவதை தூரத்தில் நடந்து வந்த அவன் கண்டு கொண்டான்.
வேகமாக வந்த அவன் கால்கள் மீராவின் அருகே வந்ததும் மெல்ல தயங்கி நின்றது.
அன்று போல இன்றும் அவனை தட்டிக் கேட்கப்போய் மீரா, தன்னை மீண்டும் அவள் அவமானப்படுத்திவிட்டால்?
நினைத்த மாத்திரத்தில் கால்கள் நிலத்தடியில் வேர்விட, மீராவின் அருகே வந்து அரணாக நின்றவனின் உதடுகளிலிருந்து ஒரு வார்த்தை கூட உதிரவில்லை.
ஆனால் இதற்கு நேர்மாறாக எதிரிலிருந்தவன் பேசிக் கொண்டிருந்தான்.
“ஹேய் நர்ஸ் பாப்பா, எப்படி இருக்க? ஃப்ரீயா இருந்தா வரீயா?” அவனின் அந்த அத்துமீறிய பேச்சில் விஷ்வக்கிடமிருந்த மொத்த அமைதியும் வடிந்துவிட்டது.
அவன் கைமுஷ்டியில் ஏக இறுக்கம்.
ஆனால் அந்த கோபத்திலும் நிதானமாக திரும்பி மீராவைப் பார்த்தான்.
“மீரா, இந்த பொறுக்கியை அடிச்சா அன்னைக்கு மாதிரி வக்காலத்து வாங்கிட்டு நிற்க மாட்ட தானே?” கேள்வியாக கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“நான் வெள்ளை கோட் போட்டு இருக்கும் போது மட்டும் தான் விருப்பு வெறுப்பு இல்லாம இருப்பேன். அது போடாத அப்போ எந்த ராஸ்கலை எப்படி கவனிக்கனும்னு எனக்கு தெரியும்” அடக்கப்பட்ட கோபத்தோடு சொன்னவள் நிதானமாக விஷ்வக்கிடம் தன் கைப்பையை கொடுத்துவிட்டு வேகமாக திரும்பினாள்.
மீராவின் செயல் புரியாமல் திகைத்து நின்ற விஷ்வக், ‘பளார்’ என்ற சப்தத்தில் அதிர்ந்து நிமிர்ந்தான்.
மீராவின் ஐவிரல்களும் எதிரிலிருந்தவனின் மீது அச்சாய் பதிந்திருந்தது.
அறை வாங்கியவன் கோபத்தில் மீண்டும் அடிக்க கையை ஒங்க, அதை இழுத்துப் பிடித்து முகத்திலேயே ஒரு குத்துவிட்டாள்.
விஷ்வக்கின் கண்கள், புயலாய் மாறிய மீராவைக் கண்டு மிரண்டது. அதுவும் அந்த ஆளை துவைத்து எடுத்துவிட்டு திரும்பியவள் “விஷ்வக்” என்றழைத்ததும் அவன் கால்கள் அச்சத்தில் தன்னிச்சையாக பின்னால் இரண்டடி வைத்தது.
அதைக் கண்டு “விஷ்வக் பயப்படாதீங்க. ஹேண்ட் பேக் தான் வாங்க திரும்பினேன்” நமட்டு சிரிப்பு சிரித்தாள் அவள்.
“நான் ஒன்னும் பயப்படலையே. சும்மா தான் பின்னாடி போனேன்” சமாளித்தபடியே அவள் கைப்பையை நீட்டினான்.
அதை வாங்கியவள் மெல்லிய முறுவலுடன் மருத்துவமனையை நோக்கி நடக்க அவனும் அவளுக்கு இணையாக நடந்தான்.
அவள் புருவம் கேள்வியாய் வளைந்தது.
“உங்க ஷிப்ட் தான் முடிஞ்சுடுச்சுல, அப்புறம் ஏன் மறுபடியும் ஹாஸ்பிடெலுக்கு வரீங்க. ஒருவேளை எனக்கு பாதுகாப்போ?” என்றாள் விழி சுருக்கி.
“நோ நோ உங்களுக்கு தான் கராத்தேலாம் தெரிஞ்சு இருக்கே மேடம். உங்களை நீங்களே காப்பாத்திப்பீங்கனு தெரியும். ஹாஸ்பிடெலிலே இம்பார்டென்ட் பொருள் விட்டுட்டு வந்துட்டேன். அதை எடுக்க தான் உங்களோட வந்துட்டு இருக்கேன்” சமாளிக்க முயன்றவனை “நம்பிட்டேன்” என்றாள் கேலி தொணித்த பார்வையில்.
அதன் பின்னர் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மௌன நடை மட்டுமே.
அந்த மௌன குளத்தை மீரா வார்த்தை கல்லைக் கொண்டு கலைத்தாள்.
“என் மேலே இருந்த கோபம் போயாச்சா டாக்டர்? இல்லை இன்னும் சொச்சம் மிச்சம் ஏதாவது இருக்கா?” குறும்பாய் கண் சிமிட்டி கேட்டபடி மருத்துவமனை நுழைவு வாயிலை தாண்டினாள்.
“உங்க மேலே கோபப்பட நான் யார்?” அவனிடம் ஒட்டாத பேச்சு.
மீரா அன்று தன் கையை உதறிவிட்டு அந்த பொறுக்கியிடம் மன்னிப்பு கேட்டதன் வலி இன்றும் ஆறாத ரணமாய் அவனுள்.
அப்போது ஏற்பட்ட கோபத்தீ இப்போது அணைந்திருந்தாலும் அதன் கங்குகள் விடாமல் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது.
மீராவுக்கு அவன் கோபம் தெளிவாக புரிந்தது. ஆனால் அதை எப்படி அணைப்பதென்று தெரியவில்லை.
“ஷ்யாமோட அம்மாவுக்கு கேர் டேக்கர் கிடைச்சாச்சா? எப்போ நீங்க மறுபடியும் ஜெனரல் ஷிஃப்ட் வருவீங்க மீரா? ஷிஃப்ட் மாறி மாறி பார்த்தா ஹெல்த் ஸ்பாயில் ஆகிடாதா?” அவள் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்த்தபடி கேட்டான்.
கோபமாக இருக்கிறானாம், ஆனால் அக்கறையாக கேள்வி மட்டும் கேட்பானாம்.
அவளுக்குள் புன்னகை துளிர்த்தது.
மீராவின் மன கண்ணாடியில் சுவரின் பின்னால் ஒளிந்து நின்று தன்னை எப்போதும் ரசிக்கும் விஷ்வக்கின் விழிகள் விழ தன்னால் மிளிர்ந்தது அவள் முகம்.
குறும்பு புன்னகையுடன் நிமிர்ந்தாள்.
“ஏன் சைட் அடிக்கிறதுக்கு டைம்மிங் செட் ஆகலையா டாக்டர்?” அவளின் இடக்கான கேள்வியில் வசமாக மடங்கினான் விஷ்வக்.
அப்படியானால் நான் மறைந்திருந்து பார்ப்பதை இவள் பார்த்துவிட்டாளா!
“அது… அது யார் சைட்? என்ன சைட்?” அவன் திணறலான கேள்வியில் இதழ் சுருக்கி சிரித்தவள் அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்.
பார்வையா அது!
ஆளை சாய்க்கும் அம்பு அது!
அந்த தாக்குதலில் முழுவதுமாய் வீழ்ந்துவிட்டான் விஷ்வக்.
“ஹே மீரா அது வந்து” அடுத்து வார்த்தை வராமல் சொற்களுக்கு தவித்தவனை பார்த்தபடியே மருத்துவமனைக்குள் காலடி வைத்துவிட்டு அவனை இப்போது ஒரு பார்வை பார்த்தாள்.
ஆனால் இந்த பார்வையில் முன்பிருந்த காதலில்லை. உணர்ச்சி துடைக்கப்பட்டு இருந்தது.
“விஷ்வக், இந்த கோட்டை தாண்டுன அப்புறம் நீங்க டாக்டர் நான் நர்ஸ். பர்சனல் விஷயங்கள் இந்த ஹாஸ்பிட்டலுக்கு வெளியே பேசிக்கலாம். பாய்” என்றவள் வேகமாக உள்ளே சென்று மறைந்துவிட உதட்டில் பூத்த புன்னகையோடு திரும்பி நடந்தான் விஷ்வக்.
மலர்ந்த முகத்துடன் உள்ளே நுழைந்த மீரா ஷிஃப்ட் முடிந்தும் வீட்டிற்கு செல்லாமல் இருந்த மான்யாவை கேள்வியாக பார்த்தாள்.
“மான்யா டைம் ஆச்சே? ஏன் இன்னும் கிளம்பலை” என்ற கேள்விக்கு ஸ்வேதாவின் உடல்நிலை சீராக இல்லாததால் தான் இங்கே இருப்பதை உரைத்தாள்.
அதைக் கேட்டு மீராவின் உதடுகள் பாவமாய் உச்சு கொட்டிய பொழுது அங்கே யாரோ ஒருவர் பில்லிங் போடும் இடத்தில் அமர்க்களம் செய்து கொண்டிருந்தார்.
“இது ஹாஸ்பிட்டலா இல்லை பணம் பிடிங்கற இடமா? எதுவுமே இல்லாத நோய்க்கு ஏன் இத்தனை டெஸ்ட் எடுக்க சொன்னீங்க. என்னாலே பே பண்ண முடியாது” அவரிடம் ஆற்றாமையின் வெளிப்பாடு.
அவரது குற்றச்சாட்டு மான்யாவுக்கும் சரியென்றேபட்டது.
காலையில் ஷ்யாம் அத்தனை டெஸ்ட் எடுக்க சொல்லும் போதே மனதிற்குள் ஏதோ நெருடல்.
நுரையீரல் கேன்சருக்கு ஏன் மூளை சம்மந்தப்பட்ட பரிசோதனைகளை செய்ய சொல்ல வேண்டும்?
ஏற்கெனவே கேன்சர் சிகிச்சைக்காக இலட்சக்கணக்கான பணத்தை செலவழித்திருக்க வேண்டும். இதில் இந்த பரிசோதனைகளையும் எடுக்க சொன்னால் ஸ்வேதாவின் குடும்பத்தால் எப்படி செலவை சமாளிக்க முடியும்.
ஏற்கெனவே, ஷ்யாமை பணக்காரனை காப்பாற்றி ஏழை உயிரை கொன்றவன் இவன் என்ற முடிவிலிருந்து மாறாமல் இருந்தவளுக்கு அவன் செய்ய சொன்ன பரிசோதனைகள் மிக தவறாகவே பட்டது.
உள்ளுக்குள் இருந்த நெருடலை நர்ஸ் மீராவிடம் பகிரும் போது அவள் அழுத்தமாக தலையாட்டி மறுத்தாள்.
“மான்யா நீங்க ஷ்யாமை தப்பா புரிஞ்சு இருக்கீங்க. அன்னைக்கு ஏழையா வந்த அந்த ஸ்மால் பவுல் ரிசெக்ஷன் பேஷன்டை விட அப்பென்டிக்ஸ் பேஷன்டா வந்த பணக்காரர் தான் ரொம்ப கிரிட்டகலா இருந்தாங்க. சோ அந்த பேஷன்டுக்கு ஷ்யாம் முன்னுரிமை கொடுத்தார்” என்றாள் மிக அழுத்தமாக.
ஆனால் மான்யாவின் மனது அப்போதும் சமாதானம் ஆகவில்லை. “நீங்க என்ன தான் சொன்னாலும் அவர் எடுத்த முடிவாலே தானே அந்த பேஷன்டோட உயிர் போயிடுச்சு” என்றாள் ஆற்றமாட்டாமல்.
“மான்யா ஷ்யாம் டாக்டர் தானே தவிர கடவுள் கிடையாது. ஒரு டாக்டரா அவர் எடுத்த முடிவு நூறு சதவீதம் நியாயமானது” என்றபடி அன்று அந்த பேஷன்டிற்கு எடுத்த ஸ்கேன் ரிசல்டை தேடி எடுத்து மான்யாவின் முன்னால் வைத்தாள்.
அந்த ரிசல்டை முழுவதுமாக படித்து முடித்த போது மான்யாவின் மனதிற்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.
ஒரு சர்ஜனாக ஷ்யாம் முடிவெடுத்ததில், முடிவெடுப்பதில் சிறு பிழை கூட செய்யவில்லை.
கடவுள் செய்த பிழைக்கு அன்று ஷ்யாமை வார்த்தைகளால் தண்டித்துவிட்டோமே!
தவித்தபடி நிமிர மீரா மேலும் தொடர்ந்தாள்.
“யூ நோ ஒன் திங் மான்யா. ஸ்வேதாவோட ஃபுல் ட்ரீட்மென்ட்கான செலவை ஷ்யாம் தான் செய்யுறாரு. இரண்டு மாசத்துக்கு முன்னாடி கிரிட்டிகலா வந்த ஸ்வேதாவோட உயிரை இது வரை காப்பாத்திட்டு வரது ஷ்யாம் தான்”
மீராவின் இறுதி வார்த்தையில் திகைத்து நிமிர்ந்தாள் மான்யா.
இத்தனை நாட்களாக ரோபோ என்று நினைத்தவனுக்குள் இத்தனை ஈரமா!
!இத்தனை உணர்வு குவியலா?
உள்ளுக்குள் குற்றவுணர்வு குளம் போல நிரம்பிய நேரம் மான்யாவின் முன்னே, ஸ்வேதா மற்றும் ஆரனாஷியின் பரிசோதனை முடிவுகளை மருத்துவ ஊழியர் வைத்து விட்டுப் போனார்.
வேகமாக ஆரனாஷியின் ரிப்போர்டை திறந்து பார்த்தாள். அதில் ஆஷியின் இதய துடிப்பில் சிறிதும் சீர்மை இல்லை.
இதயநோயின் இறுதி நிலையில் அவள்.
மான்யா எதை நினைத்து கொஞ்ச நாட்களாக பயந்தாலோ அதையே பரிசோதனை முடிவு சொல்ல கலங்கிப் போய் நின்ற நொடி எதிரே கண்ட காட்சியில் துண்டாகிப் போனாள்.
ஸ்ட்ரெக்ட்சரில் மூர்ச்சையின்றி கிடந்த ஆரனாஷியை கண்ணில் வழிந்த நீரோடு மருத்துவமனைக்குள் கொண்டு வந்திருந்தான் ஷ்யாம் சித்தார்த்.