உடையாத(தே) வெண்ணிலவே 27
உடையாத(தே) வெண்ணிலவே 27
நடந்துப் போனதை நினைத்து பெருமூச்சு விடுவதில் லாபமில்லை என்றாலும் இந்த பெருமூச்சே வாழ்க்கையாகிப் போனது மான்யாவிற்கு.
எவ்வளவு காதலித்தோம் எவ்வளவு கனவு கண்டோம். ஆனால், இடையில் அந்த ஒன்று மட்டும் நிகழாமல் இருந்திருந்தால்.
நினைக்கும் போதே அவள் கன்னத்தை கவ்வியது கண்ணீர்த்துளி.
தளர்வாக எழுந்தவள் ஆஷி அனுமதிக்கப்பட்ட அறையை நோக்கி வந்தாள். ஆழ்ந்த தூக்கத்தில் அகப்பட்டு இருந்தது அந்த குட்டி கண்கள்.
அவளின் தலையை வாஞ்சையாக வருடிவிட்டவள் தன் கையிலிருந்த ரிப்போர்ட்டை இன்னொரு முறை உற்றுப் பார்த்தாள்.
ஆர்ட்டிரி சுவர்கள் மிக கடினமானதால் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டிருக்கிறாள் என்று தெரிய வந்ததும் அதுவரை விடாமல் இழுத்துப் பிடித்த மூச்சு அப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக வெளிப்பட்டது.
“ஆஷிமா ஒரு குட்டி ஆன்ஜியோ பண்ணிட்டா உனக்கு சரியாகிடும்டா” என்றாள் அவள் முகத்தை வருடியவாறு.
ஆரனாஷியைப் பார்ப்பதற்காக வந்த ஷ்யாம், கண்ணாடி திரை வழியே தெரிந்த காட்சியைக் கண்டு புருவம் சுருக்கினான்.
‘உன் பெண் உன் கவலை’, நேற்று வஞ்சமாக உரைத்த கண்களா இப்போது ஆரனாஷிகாக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது.
அவள் சொற்களிலும் செயலிலும் முரண் முற்கள்.
யோசனையின் பிடியில் நின்ற நேரம் மான்யா கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
அவன் முகத்தைக் கண்டதும் பாலையாய் வறண்டது அவள் விழிகள். வேகமாய் கடந்து செல்ல முயன்றவளின் கைகளை இறுக்கிப் பிடித்தான்.
தன் மீது படிந்திருந்த அவன் கரத்தை ஒரு முறைப் பார்த்தவள் மறுமுறை அவன் முகத்தை கோபமாக பார்த்தாள்.
“கையை எடுங்க ஷ்யாம்” அவள் குரல் அத்தனை கூர்மையாய்.
“இன்டெர்ன்…” அவசரமாக ஆரம்பித்தவனை அவள் வேகமாக நிறுத்தினாள்.
“நான் இப்போ உங்களோட இன்டெர்ன் கிடையாது. கார்டியாதெராசிக் சர்ஜன்” என்றாள் எங்கோ பார்த்து.
அவள் வார்த்தைகள் அவனை கூராய் கிழிக்க சட்டென்று அவன் கைப்பிடி தளர்ந்தது.
“நான் இங்கே ஆஷிக்கு பர்செனல் டாக்டர் மட்டும் தான் அது நியாபகத்துலே இருக்கட்டும். அதை மறந்துட்டு நீங்க பழைய விஷயத்தைப் பத்தி ஏதாவது பேச்சு எடுத்தீங்க, கிளம்பி போயிட்டே இருப்பேன்” அவள் குரலில் அத்தனை தீர்க்கம்.
அவளின் வார்த்தைகள் அவன் இதழில் அழுத்தமான மௌன கோடு வரைய ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
அன்பு விளையாடும் மான்யாவின் முகமா இது!
கேள்வி குதிரைகள் குதிதாளமெடுக்க அவன் கால்கள் வேரோடியது.
💐💐💐💐💐💐💐💐💐
கிட்டத்தட்ட ஐந்து மணிநேரமாக மயக்கத்திலிருந்த ஆஷியின் விழிகள் மெதுவாக தன் இமை சிப்பியை திறந்தது.
எதிரிலிருந்த மான்யாவைக் கண்டதும் அவள் கண்களிலிருந்து கீழே உருண்டு விழுந்தது நீர் முத்துக்கள்.
“மானுமா” கேவலோடு அழைத்த ஆரனாஷியை அள்ளி அணைத்து கொள்ள வேண்டும் போல தான் தோன்றியது.
ஆனால் இடையில் ஏதோ ஒரு விலகல். ஏதோ ஒரு நெருடல்.
உணர்ச்சியை வெளிக்காட்டாமல் மௌனமாய் ஆஷியின் பல்ஸை செக் செய்தாள்.
“மானுமா, இந்த முறையும் என்னை விட்டுட்டு போயிடுவீங்களா?” பரிதவிப்போடு கேட்டவளின் முகத்தை கண்டு அவளுக்குள் ஏதோ உடைந்துப் போனது.
முகத்தில் எதையும் காட்டாமல் ஆஷியின் தலையின் மீது நடுக்கத்துடன் கை வைத்தாள். அந்த ஸ்பரிசம் “நீ நல்லா இருக்க வேண்டும்” என்ற பிரார்த்தனையை சுமந்திருந்தது.
“ஆஷிமா, நான் அப்பா கிட்டே நீ முழிச்சுட்டேனு சொல்லிட்டு வந்துடுறேன்” டியூட்டி நர்ஸிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வெளியே வந்தவளின் பார்வையில் அகப்பட்டது மீராவின் முகம்.
எப்போதும் அன்பை சுமந்திருக்கும் விழிகளில் ஒருவித நிராதரவு தெரிந்தது.
உயிர்ப்பில்லாத ஓவியமாய் ஒளியிழந்துப் போய் இருந்தாள். அவன் உயிரான விஷ்வக் விட்டு சென்றதன் பிரதிபலிப்பு அவள் ஒவ்வொரு செல்களிலும் வெளிப்படையாக தெரிந்தது.
“மீரா” என்றழைக்க அவளோ ஒரு மெல்லிய விலகல் சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
மெல்லிய வருத்தத்துடன் திரும்பிய மான்யா, மதுரா மருத்துவமனையை இப்போது தான் நிதானமாக ஒரு முறை அளவிட்டாள். முன்பு இருந்ததை விட இப்போது பல மடங்கு வளர்ந்திருந்தது.
ஆனால் அப்போதிருந்த சந்தோஷம் இப்போது அந்த மருத்துவமனை கற்களில் இல்லை.
எவ்வளவு தான் அதிகமாக வேலை இருந்தாலும் முன்பு எல்லோர் முகத்திலும் ஒரு புன்னகை இருக்கும். வேலை முடித்ததும் ஒரு குட்டி அரட்டை இருக்கும்.
ஆனால் இப்பதோ அங்கே எல்லோரும் இயந்திரமாய் இருந்தனர்.
ஏன் நர்ஸ் ப்ரீத்தி, மோகனா, பிரியங்காவிடத்திலும் முன்பிருந்த துருதுருப்பு இல்லை. கேலி சீண்டல்கள் இல்லை.
மெதுவாக வந்து மோகனாவின் தொட்டு,
“மோகனா என்ன ஆச்சு ஏன் யாரும் என் கூடேயும் பேச மாட்டிக்குறீங்க.வேலை மட்டுமே செய்யுற ரோபோ மாதிரி இருக்கீங்க எல்லாரும்” என்றாள் சிறு நெருடலோடு.
“ஷ்யாம் சாரோட ஆர்டர். வேலை நேரத்துலே யாரும் யாரு கிட்டேயும் புரளி பேசக்கூடாதுனு” என்றபடி நகர முயன்றவளின் கையை இழுத்துப் பிடித்தாள்.
“ஓகே. ஆனால் ஏன் மோகனா என் கிட்டே கூட பேசாம முகத்தை திருப்பிக்கிற?” என்றாள் மெதுவாக.
“எப்படி பேச முடியும். எங்க ஷ்யாம் சாரை இப்படி உடைச்சுப் போட்டுட்டிங்கள்ல. நீங்க போன அப்புறம் அவர் அவராவே இல்லை தெரியுமா? ஆக்ஸிடென்ட் ஆன அப்போ எவ்வளவு வாஞ்சையா ஐ லவ் யூனு சொன்னார். ஆனால் ஏன் மான்யா அவரை இப்படி விட்டுட்டு போயிட்டிங்க? ” என்றாள் ஆற்றாமை மேலிட.
அந்த கேள்வி மான்யாவின் வார்த்தைகளை மௌன பள்ளத்தில் தள்ளியது.
“நீங்களும் விஷ்வக்கும் போன அப்புறம் நம்ம ஹாஸ்பிடெல் மொத்த சந்தோஷத்தையும் இழந்துடுச்சு மான்யா” ஒருவித வருத்தத்துடன் சொன்னவள் வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.
மோகனா சென்ற திசையை வெறித்து நின்றவளின் கால்கள் தயக்கமாய் ஷ்யாம் அறையின் முன்பு வந்து நின்றது.
சிந்தனை சுழலில் சிக்கிக் கொண்டிருந்தவனின் செவிகளில் சிணுங்கியது அந்த கொலுசு சப்தம்.
வேகமாய் திரும்பிப் பார்க்க மான்யாவின் கால்களில் தான் அன்று காதலாய் அணிவித்த கொலுசு.
கண்களில் சந்தோஷ மின்னலடிக்க, அதுவரை வாடியிருந்த அவன் இதழ்களில் துளிர்விட்டது புன்னகை.
“கம் ஆன் மான்யா” என்றான் சப்தமாக.
கதவை தட்ட எத்தனித்த மான்யாவின் கரங்கள் அவன் குரல் கேட்டு ஸ்தம்பித்தது. வேகமாய் குனிந்து தன் கால்களைப் பார்த்தவளின் பற்களோ வேகமாய் உதட்டைக் கடித்து கொண்டது.
கொலுசை கழற்றி வைக்க மறந்த தன் முட்டாள்தனத்தை எண்ணி தன்னையே கடிந்து கொண்டவள் முகத்தை சரி செய்து கொண்டு அவன் அறைக்குள் நுழைந்தாள்.
ஷ்யாமின் கண்கள் அவளின் மீது புன்னகையாய் படிந்தது.
“ரொம்ப சிரிக்காதீங்க. இது நீங்க வாங்கி கொடுத்த கொலுசு இல்லை. அதே மாடலிலே நான் வாங்கின வேற ஒரு கொலுசு” என்றாள் அவசரமாக.
அவன் முகம் நம்பிட்டேன் என்ற பாவனையை சுமந்திருந்தது.
அதைக் கண்டு வேகமாய் முகத்தை திருப்பி கொண்டவள் “ஆஷி முழிச்சுட்டா” என்றாள் இயந்திர குரலில்.
அந்த செய்தியில் முகமலர்ந்து எழுந்தவன் ஆரனாஷியை நோக்கி வேகமாக செல்ல இவளோ தன் அறைக்கு வந்து காலிலிருந்த கொலுசை அவிழ்க்க முற்பட்டாள்.
ஆனால் முழுவதாய் அவிழ்த்து முடிக்கும் முன்பே ஏதோ ஒன்று அவளை தடுத்தது.
‘அவனை முழுவதாய் ஏற்கவும் முடியவில்லை. மொத்தமாய் வெறுக்கவும் முடியவில்லை’ அந்தரத்தில் அநாதரவாய் ஆடும் பெண்டுலமாய் தவித்தது அவள் மனம்.
“இதுக்காக தானேடா உன் கண் முன்னாடி வராம இருந்தேன். ஐயோ இப்போ என்னாலே உன்னை முழுமனசோட உடைக்கவும் முடியலை. நான் உடையாம இருக்கிறதை என்னாலே தடுக்கவும் முடியலை” கேவலோடு தலையில் அடித்துக் கொண்டவளின் கண்கள் கண்ணீரில் கரைந்தது.
அறைக்கு வந்த ஷ்யாம் ஆரனாஷியின் தலையை கோதியவாறே “பயமுறுத்திட்டியேடா அப்பாவை” என்றான் வாஞ்சையாக.
அவனையே பரிதவித்த விழிகளோடு பார்த்தவள், “அப்பா மானுமா நம்மளை விட்டு போயிடுவாங்களா?” என்றாள் கலக்கமாக.
அந்த கேள்விக்கு ஷ்யாமின் இதழில் மௌன மின்னல் வெட்டியது.
முன்பு போல ஆஷிக்கு நம்பிக்கை கொடுத்து அவளை உடைக்க விருப்பமில்லாமல், “உனக்கு சரியாகுற வரை மானுமா இங்கே இருப்பாங்க. அதுக்கு அப்புறம் மறுபடியும் போயிடுவாங்க” என்றதும் அவள் கண்களில் விழிநீர் மறுபடியும் மீற ஒரு முடிவோடு அவனைப் பார்த்தாள்.
“அப்போ எனக்கு சரியாகலைனா மானுமா போக மாட்டாங்களே?” ஆஷி ஒரு தினுசாக கேள்வி கேட்ட நேரம் மான்யா அறை கதவைத் திறந்து வந்தாள்.
“ஷ்யாம் ஆஷிக்கு ஆன்ஜியோ பண்ண அப்புறம் ஷீ வில் பீ ஆல்ரைட். நான் ஒரு டூ டேஸ்லே கிளம்பிடுவேன்” என்றதும் பட்டென ஆஷி நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.
அதைக் கண்டு ஷ்யாம் பதறிப் போக, மான்யாவோ வேகமாக வந்து, “என்னாச்சுடா எங்கே வலிக்குது?” என்றாள் தவித்தபடி.
“இதோ இங்கே தான் வலிக்குது மானுமா. மூச்சே விட முடியலை” என்றவளின் அருகே ஷ்யாம் கலங்கியபடி ஓடி வர மான்யாவிற்கு தெரியாமல் ஆஷி கண்ணடித்தாள்.
சற்று முன்பு ஆஷி தினுசாய் கேட்ட கேள்வியின் அர்த்தம் இப்போது தான் தெளிவாக புரிந்தது.
‘நல்லா கொடுக்கிற ஆஷிமா ஆக்டிங்கு, சிவாஜிக்கே டஃப் கொடுக்கிற மாதிரி’ என்ற முணுமுணுப்போடு ஒதுங்கி நின்றான்.
இதை அறியாத மான்யாவோ ஆஷியின் அருகே வேகமாக வந்து, “ஒன்னுமில்லைடா ஆன்ஜியோ பண்ண சரியாகிடும். அதுவரை அதிகமா அழக்கூடாது சரியா?” என்று சொல்லவும் ஆஷி பெருங்குரலெடுத்து அழுதாள்.
அதைக் கண்ட ஷ்யாம், “மான்யா என் பொண்ணு அழுது அவளுக்கு திரும்ப ஏதாவது ஆச்சு உன்னை உண்டு இல்லைனு ஆக்கிடுவேன். ஒழுங்கா அவளுக்கு முழுசா சரியாகுற வரை வீட்டுக்கு வந்து தங்கியிருந்து பார்த்துக்கோ” அவன் கை நீட்டி மிரட்ட மான்யா முறுக்கிக் கொண்டு நிமிர்ந்தாள்.
“என்ன விளையாடுறீங்களா? என்னாலேலாம் அந்த வீட்டுக்கு வர முடியாது” அவள் மறுத்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆஷி நெஞ்சில் தன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு மூச்சுவிடுதவதற்கு சிரமப்பட்டவள் போல் “மானுமா போயிடாதீங்க” என்றாள் கண்ணீர் மல்க.
அந்த குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் மான்யாவால் மறுத்து பேச முடியவில்லை.
தன்னால் அவளுக்கு ஏதாவது நிகழ்ந்துவிட்டால்? நினைத்த மாத்திரத்தில் உள்ளம் நடுங்கியது.
ஒரு முடிவோடு நிமிர்ந்தவள் “வரேன் வந்து தொலைக்கிறேன்” என்றாள் ஒரு பெருமூச்சோடு.
💐💐💐💐💐💐💐
ஷ்யாம் வீடு!
முன்பு இருந்ததைப் போல கொஞ்சமும் மாற்றமில்லாமல் இருந்தது. வெளிப்புறத்திலிருந்த பூங்கா அப்போது எப்படி பராமரிக்கப்பட்டிருந்ததோ அதில் சிறு மாற்றம் கூட இல்லாமல் இப்போதும் அதே போல மின்னியது.
கண்களால் அளவெடுத்தபடியே உள்ளே நுழைந்தவளின் பார்வை எதிரில் கண்ட மீனாட்சியம்மாளைப் பார்த்து ரசாயனம் மாற்றம் கொண்டது.
மீனாட்சியம்மாள் மொத்தமாய் உருமாறிப் போயிருந்தார். துருத்திக் கொண்டிருந்த எலும்புகள் அவர் சரியாக உணவருந்தவில்லை என்பதை சொல்லாமல் சொல்லியது. நேர்த்தியாய் அணியப்படும் உடையில் இப்போது பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது.
அவரைக் கண்டு மானாய் துள்ளிக் கொண்டு எப்போதும் ஓடுபவள் இன்று ஒரு வித தயக்கத்துடன் நின்றாள்.
“மான்யா நீ போன அப்புறம் அம்மா யாரையும் கிட்டே நெருங்க விடலை. சரியா சாப்பிடலை. எந்தளவுக்கு வேகமா குணமாகி வந்தாங்களோ அதை விட வேகமாக சிதைஞ்சும் போயிட்டாங்க” வருத்தம் தொனித்தது அவன் குரலில்.
அவன் வார்த்தைகள் அவள் முகத்தில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. மாறாய் மௌனமாய் வெறிக்க வைத்தது.
“யாரோட அம்மாவைப் பத்தியும் எனக்கு கவலையுமில்லை. நான் ஆஷியை குணப்படுத்த தான் இங்கே வந்தேனே தவிர உன் சொந்த கதை சோக கதையை கேட்கிறதுக்கு இல்லை புரியுதா?” முகத்தில் அறைந்தாற் போல் பதில் வந்தது அவளிடம்.
வேதனை மேகங்கள் அவன் முக வானத்தை சூழ கண்ணீர் துளிகளின் ஆதித்துவக்கம் விழிகளில்.
அதைப் பார்த்து தனக்குள் தானே உடைந்துப் போனவள் அங்கிருக்க பிடிக்காமல் வேகமாக தன் அறையை நோக்கி உள்ளே போனாள்.
அவள் எப்படி விட்டுவிட்டு போனாளோ அதே போல தான் அவளது அறை இருந்தது.
ஆனால் அவளது மேஜையில் மட்டும் கனம் கூடிப் போய் இருக்க அருகே வந்து பார்த்தாள்.
அங்கே மூன்று பரிசுகள் மின்னிக் கொண்டிருந்தது. அவள் இல்லாத இந்த மூன்று வருடங்களிலும் அவளுக்காக அவன் ஆசையாய் மேஜையில் வாங்கி வைத்த பரிசுகள் அவை.
கண்களில் நீர் துளிர்க்க அதை எடுத்தவளுக்கோ பிரிக்க மனம் வரவில்லை. வேகமாய் அதே இடத்தில் வைத்துவிட்டு திரும்பிய நேரம் பொருட்கள் உடையும் சப்தம் காதை பிளப்பதாய்.
வேகமாய் வெளியே வந்து பார்க்க ஷ்யாம் மீனாட்சியம்மாளிடம் நெருங்க முனையும் ஒவ்வொரு தடவையும் ஒரு பொருள் அங்கே உடைப்பட்டது.
“அம்மா ப்ளீஸ் இந்த டேப்லேட் மட்டும் போட்டுக்கோங்க” அவன் கெஞ்சலாய் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஆனால் அவரின் பார்வையோ மான்யாவின் மீதே படிந்திருந்தது. அதைக் கண்டு கொண்ட ஷ்யாம், “ப்ளீஸ் மான்யா, அம்மாவுக்கு டேப்லேட் நீ கொடேன். கண்டிப்பா வாங்குவாங்க” கெஞ்சலாய் அவளின் முன்பு நீட்டினான்.
அவள் பார்வை கோபமாய் அந்த மாத்திரையின் மீது விழ வேகமாக தன் அறைக்கு செல்ல எத்தனித்தாள். அதைக் கண்ட மீனாட்சியம்மாள் வேகமாக கீழே கிடந்த கண்ணாடி துண்டை எடுத்து அறுத்து கொள்ள போனார்.
அதைக் கண்டு துடித்தவன் “மான்யா ப்ளீஸ், அம்மா கிழிச்சுப்பாங்களோனு பயமா இருக்கு” அவன் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே அவர் அந்த கண்ணாடி துண்டு கொண்டு கையில் கோடு போட ரத்தம் பீய்ச்சியடித்தது.
அதைக் கண்டு ஷ்யாம் ஸ்தம்பித்து நின்றுவிட, மான்யா அப்போதும் அவரை நெருங்காமல் வேகமாக அறைக்குள் புகுந்து கதவை சாய்த்துக் கொண்டாள்.
அவளின் செயல் ஷ்யாமை திகைக்க வைத்தது.
‘அன்பின் கருவில் பிறந்து மலர்ந்தவள், எதனால் இப்படி வெறுப்பை கக்கும் எரிமலையாய் மாறிப் போனாள்?’
கேள்வியுடனே மீனாட்சியம்மாளிற்கு முதலுதவி செய்தவன் ஆஷியை படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தான்.
பலகணி வழியே நின்று வானில் இருந்த நிலவை வெறித்துக் கொண்டிருந்தான்.
மான்யாவின் இந்த தலைகீழ் மாற்றம் அவனை வருத்தி கொண்டிருந்தது.
ஒருவித சோகத்துடன் திரும்பியவனின் விழிகளில், தோட்டத்து பெஞ்சில் நத்தையாய் சுருண்டு படுத்திருந்த மான்யாவை கண்டு வேகமாய் ஓடி வந்தான்.
குளிரில் நடுங்கி கொண்டிருந்த அவளது மேனியில் போர்வையை மூடிவிட்டு உறங்கும் அவளை கலைக்காதவாறு மென்மையாக அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான்.
ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லாத மான்யா, அவன் மடியில் தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்தாலும் அவள் விலக முற்படவில்லை. அவளுக்கு அவன் அருகாமை அவசியமாய் இருக்க தூக்கத்தில் புரள்வது போல் அவன் மடியில் இன்னும் வசதியாக சாய்ந்து கொண்டாள்.
நிலவொளியில் மின்னிய கலங்கமில்லாத அவள் முகத்தைக் கண்ட ஷ்யாமின் விழிகள் தன்னால் கலங்க அவள் நாசியின் மீது விழுந்து உடைந்தது அவன் விழிநீர்.
அவன் கண்ணீர் அவளையும் உடைய வைக்க அவன் மடியை தன் கண்ணீரால் நனைத்தாள்.
அவள் அசைவு உணர்ந்த அடுத்த கணமே “மான்யா?” என்றான் அதிர்வாக. வேகமாக எழுந்து அமர்ந்தவள் வருத்தமாக அவன் முகத்தைப் பார்த்தாள்.
“உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல ஷ்யாம்?” என்றாள் குரல் உடைய.
“இல்லை மான்யா. ஆனால் எவ்வளவு பாசமா இருந்த உன்னை இப்படி வைலண்டா பிஹேவ் பண்ண வெச்சுட்டேனேனு தான் கஷ்டமா இருக்கு. அம்மா கையிலே ரத்தம் வரதைப் பார்த்து கூட நீ திரும்பி பார்க்கலை. அந்தளவுக்கு உன்னை கல்லாக்கிட்டேன். சாரி இன்டெர்ன்” என்றான் கதறலாக.
“என்னாலே என்னை கன்ட்ரோல் பண்ணிக்க முடியலை ஷ்யாம். இங்கே இருந்தா வார்த்தையாலேயே எல்லாரையும் காயப்படுத்திடுவேன். எனக்குள்ளே புதைஞ்சு கிடக்கிற கோபமெல்லாம் வன்மமா மாறிடுமோனு பயமா இருக்கு. ப்ளீஸ் நான் போயிடுறேனே. என்னை விட்டுடா” என்றாள் கெஞ்சலாக.
“போ மான்யா, உன்னை தடுக்க மாட்டேன். ஆனால் போறதுக்கு முன்னாடி உன்னை முழுசா வெறுக்க வெச்சுட்டு போ. இவ்வளவு காதலையும் என்னாலே தனியா சுமக்க முடியலை. உயிர் வலியா இருக்கு இன்டெர்ன்” தோளோடு அணைத்துக் கொண்டு சொன்னான்.
“என்னை வெறுத்துடு ஷ்யாம். அதான் உனக்கு நல்லது. நாம எவ்வளவுக்கு எவ்வளவு தள்ளி இருக்கிறோமோ அது தான் எல்லாருக்கும் நல்லது” அவள் வார்த்தையில் கண்ணாடி கீறல்.
“உன்னை வெறுக்க முடியலைடி. நீ விட்டுட்டு போன வெற்றிடத்தை செத்தா மட்டும் தான் என்னாலே நிரப்ப முடியும் போல” அவன் இறுதி வார்த்தைகளில் நொறுங்கிப் போனவள் அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.
அதன் பின்பு அங்கே மௌனங்கள் மட்டுமே பேசிக் கொள்ள இருவரின் விழிகளும் வானில் நீந்தி கொண்டிருந்த உடையாத வெண்ணிலவை வெறுமையாய் வெறித்துக் கொண்டிருந்தது.
💐💐💐💐💐💐💐💐💐
முன்தினம் கிடைத்த காதலனின் அணைப்பும் நிலவின் குளுமையும் மான்யாவை அன்று மிக புத்துணர்வாக உணர வைத்தது.
பல வருடங்கள் கழித்து உதட்டில் பூத்த முறுவலுடன் எழுந்து கொண்டவள் வேகமாக தயாராகி கொண்டிருந்தாள்.
அதைக் கண்ட ஆரனாஷி “மானுமா மறுபடியும் எங்களை தனியா விட்டுட்டு போக ப்ளான் போறீங்களா?” பயத்துடன் கேள்வி கேட்டாள்.
“இல்லைடா. ஒரு இம்பார்டென்ட் செமினார் இருக்கு, அட்டென்ட் பண்ண போயிட்டு இருக்கேன். அதுக்காக தான் மானுமா இந்தியா வந்ததே, வேகமா அந்த இன்டெர்வியூ முடிச்சுட்டு ஓடி வந்துடுறேன்” சமாதானமாக சொல்லிவிட்டு அந்த கான்ஃபரென்ஸ் ஹாலிற்கு வந்து சேர்ந்தவளின் முகத்தில் பெரும் மாற்றம்.
அன்று ஷ்யாமின் முன்னாள் காதலி என்று விஷ்வக் குறிப்பிட்ட அதே பெண் இன்று புன்னகை மிளிர அந்த அறையில்.
தன்னுடைய செமினார் பகுதியை முடித்துவிட்டு அமர்ந்த மான்யா, அந்த பெண்ணையே வெறித்துப் பார்த்தாள்.
அந்த பெண்ணிற்கும் இவளுடைய பார்வை உறுத்தியிருக்கும் போல மான்யாவையே குழப்பமாக பார்த்தாள்.
மீட்டிங் முடிந்து எல்லோரும் சென்ற பிறகும் கூட அவர்களிருவரின் பார்வையில் மாற்றமே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. முதலில் அந்த பெண் தான் மௌனதிரையை உடைத்தாள்.
“ஏன் இப்படி பார்க்குறீங்க என்னை? எனி திங் ராங்” குழப்பமாய் கேட்க
“நத்திங், ஷ்யாம் சித்தார்த் எக்ஸ்” என்றாள் ஒரு மாதிரி குரலில்.
மான்யாவின் பதில் அவளை திணற செய்ய, “நீ யார்?” என்றாள் அவசரமாக.
“நீங்க அவரோட பாஸ்ட். நான் இப்போ அவரோட ப்ரசென்ட் அன்ட் ப்யூட்சர்” என்றாள் கர்வமாக.
அந்த பதிலில் அவள் முகம் வேதனையை காட்டினாலும் வேகமாய் தன்னை மீட்டிக் கொண்டு, “ஐ யம் மேக்னா” என்று கை நீட்ட, “மான்யா” என்று அறிமுகப்படுத்தி கொண்டாள்.
“க்ளாட் டூ ஹியர் திஸ் நியூஸ் மான்யா. ஷ்யாம் எப்படி இருக்கார்?” என்றவளது கேள்வியை கேட்டதும் மான்யா வேகமாக நிமிர்ந்தாள்.
“அப்போ கூட ஆரனாஷியைப் பத்தி கேட்க மாட்டிங்களா? உங்களுக்கும் ஷ்யாமிற்கும் இருக்கிற பிரச்சனையிலே ஏன் உங்க குழந்தையை விட்டுட்டு போனீங்க?” பல வருடங்களாக உள்ளுக்குள் தேக்கி வைத்த கேள்வியை இன்று உடைத்து கேட்டாள்.
“வாட்! ஆரனாஷி என் பொண்ணா?” என்றாள் மேக்னா அதிர்வாக.
“அப்போ இல்லையா?” இவளிடம் கோபம் கனன்றது.
“நான் ஷ்யாமோ எக்ஸ் பட் ஆஷியோட அம்மா இல்லை” மேக்னாவிடம் விளக்கிவிடும் வேகம்.
“அப்படினா ஆஷி…?” கேள்வி வளைவுகள் மான்யாவின் உதட்டில்.
“ஐ டோன்ட் நோ. காலேஜ் என்ட்லே வந்த அவனோட பர்த்டே கடைசியா கொண்டாடுன அப்போ எங்களுக்கு ஆரம்பிச்சது விரிசல். அதுக்கு அப்புறம் பத்து மாசம் கழிச்சு வந்து என் கிட்டே ஒரு குழந்தையை காட்டி அம்மாவா இருக்க முடியுமானு கேட்டான்” அவள் முக்கியமான இடத்தில் நிறுத்திவிட்டு மான்யாவைப் பார்க்க “நீங்க என்ன சொன்னீங்க?” என்றாள் கேள்வியாக.
“எனக்கு அவனுக்கு காதலியா மட்டும் தான் இருக்க முடியும் மான்யா. அவனோட குழந்தைக்கு அம்மாவா இருக்கிற அளவுக்கு எல்லாம் விஸ்தாரமான மனசு எனக்கில்லை” என்றாள் ஒரு மாதிரி குரலில்.
மான்யாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அப்படியானால் இவள் ஆஷியின் அன்னை இல்லை என்றால் வேறு யார்?
“அப்போ ஆஷியோட அம்மா?” ஒருவித தயக்கத்துடன் நிறுத்தினாள்.
“நான் யாருனு தெரிஞ்சுக்க ரொம்ப முயற்சி பண்ணேன். யாருக்கும் தெரியலை. தெரிஞ்சுக்கவும் ஷ்யாம் விடலை. எல்லா பக்கமும் அவன் தடையா நின்னான்.” என்று சொல்லிவிட்டு சென்றவளையே திடுக்கிடலுடன் பார்த்தாள் மான்யா.
யாருக்கு தான் இந்த கேள்விக்கு பதில் தெரியும் என்று யோசித்தவளுக்குள் ஒரு முகம் மின்னலடிக்க வேகமாய் அவரிடம் சென்று நின்றாள்.
எதிரே வெங்கட்ராம்.
முதலில் மான்யாவை கண்டு திடுக்கிட்டவர் பின்பு மெல்லிய குரலில், “எப்படி இருக்க?” என்றார் ஒருவித வாஞ்சையுடன்.
“நல்லா இருக்கேன்” சம்பிரதாயமாக உரைத்தவள், “ஆரனாஷி யாரோட பொண்ணுனு எனக்கு தெரியணும்” எடுத்தவுடனே விஷயத்தின் மையப்புள்ளிக்கு வந்து நின்றாள்.
இந்த கேள்வி முன்பு அவர் அசாத்திய மௌனம் காக்க, “ப்ளீஸ் சொல்லுங்களேன். நீங்க சொல்ற பதிலிலே தான் என்னோட முடிவு இருக்கு” என்றவளின் வார்த்தைகளில் கொஞ்சமாய் அசைந்து கொடுத்தார்.
“ஆஷி எங்க குடும்பத்தோட பொண்ணு தான் மான்யா. ஆனால் ஷ்யாமோட பொண்ணு கிடையாது” என்றவரின் குரலில் ஒருவித முறிவு இருந்தது.
மான்யாவை சுழற்றி அடித்தது இந்த பதில். ஆனாலும் முழுமையான பதில் கிடைக்கவில்லையே.
தயக்கத்துடன் வெங்கட்ராமை பார்த்தவள், “அப்போ ஆஷி உங்களுக்கு பிறந்த பொண்ணா?” என்று கேட்க அவர் முகத்தில் ஏகப்பட்ட மாறுதல்கள்.
தன் கண்ணாடியை அவசரமாக செய்து கொண்டவர் மௌனம் பூசிய உதடுடன் மறுப்பாய் தலையசைக்க மான்யாவோ அந்த பதிலில் ஒடிந்துப் போனாள்.
அவருடைய குடும்ப பெண். ஆனால் ஷ்யாமிற்கு பிறந்தவள் இல்லை. வெங்கட்ராமனிற்கும் மகள் இல்லை. அப்படியானால் ஆஷி யார் மகள்?
அவள் இதய நிலத்தில் குதிதாளமெடுத்து ஓட ஆரம்பித்தது கேள்வி குதிரைகள்.