உடையாத(தே) வெண்ணிலவே – final

உடையாத(தே) வெண்ணிலவே – final

பதில்கள்!

சில பதில்கள் பல கேள்விகளுக்கு தீர்வாகவும், பல கேள்விகளை உள்ளுக்குள்ளேயும் முடுக்கி விடும்.

அப்படித்தான் வெங்கட்ராமின் பதில், மான்யாவின் மனதிற்குள் பல கேள்விகளைத் துளிர்க்க வைத்தது.

வேகமாய் எழுந்தவள் ஒரு முடிவுடன் ஷ்யாம் எதிரே வந்து நின்றாள்.

தன்மீது கேள்வி அம்பை தொடுத்தவளையே குழப்பத்தோடு பார்த்தான்.

இருவருக்கும்  இடையில் இப்போது சில சென்டிமீட்டர் இடைவெளி. அதையும் இணைக்கும் கோடாய் மான்யாவின் குரல் ஒலித்தது.

“ஆரனாஷி யாரோட பொண்ணு?” அவளின் கேள்விக்கு மௌனத்தையே பதிலாக தந்தவனைக் கண்டு அவளுக்கு நிதானம் தப்பியது.

வேகமாக அருகே வந்து அவன் சட்டையை பற்றியவள், “என் பிரிவு உன் உயிரையே வதைக்குறது உண்மைன்னா பதில் சொல்லு  ஷ்யாம்!”

அவன் கண்களில் கண்ணீர் கோடாய் வழியத் துவங்க அவனை மேலும் நெருங்கி வந்து முகத்தை கைகளில் தாங்கி பிடித்தவள், “ஆஷி நம்ம பொண்ணு ஷ்யாம்… அதுலே எந்தவித மாற்றமும் இல்லை. அவள் யாருக்கு பிறந்து இருந்தாலும் என்னாலே ஆஷியை வெறுக்க முடியாது. ப்ளீஸ்டா… உண்மையை சொல்லு!” அவளின் யாசிப்பான கேள்வியில் ஷ்யாம்சித்தார்த் மழையில் உடையும் மலராய் சிதறி, உடைந்து கொண்டிருந்தான்.

“இன்டெர்ன், நான் உண்மையை சொன்னா ஆஷியை எந்த காரணத்துக்காகவும் வெறுக்க மாட்டேல்ல?”

வளைக்க முடியாத உலோக விதிகளாலான அவன் மனம் முதன்முறையாய் மான்யாவிற்காக வளைந்து கொடுத்தது.

“மாட்டேன் ஷ்யாம். ஆஷி நம்ம பொண்ணு அதுலே மாற்றமில்லை” என்றாள் உறுதியாக.

அவளின் வார்த்தைகள் நம்பிக்கைத் தர, இதுவரை உள்ளுக்குள் புதைத்து வைத்த அந்த உண்மையை உடைக்கத் தயாரானான்.

“ஆஷி எனக்கு பிறந்த பொண்ணு இல்லை மான்யா. அவள் என்…” இறுதி வார்த்தையை முடிக்கும் முன்பே அவன் உதடுகள் நடுங்கியது. கண்களிலிருந்து கோடாய் நீர் இறங்க வார்த்தைகள் தந்தியடித்தது.

அவன் முகத்தை வாஞ்சையாய் பிடித்தவள் “அவள் உங்க?” என்று எடுத்து கொடுத்தாள்.

“அவள் என் அம்மாவுக்கு பிறந்த பொண்ணு மான்யா!” இரும்புக் குமிழியின் குரல் உடைந்தது.

“வாட்?” அதிர்வில் மான்யாவின் இதயம் எம்பி துடிக்க, “எஸ் அவள், என் அம்மாவுக்கு பிறந்தவள். என்னோட தங்கச்சி.” பிசிறில்லாத வார்த்தைகளை சிதறிக்கொண்டே சொன்னான்.

“ஆனால் வெங்கட்ராம், அவரோட பொண்ணு இல்லைனு சொன்னாரே?” அவளின் கேள்வியில், இரும்பு இதயம் உருக்குலைந்து நொறுங்கியது.

“என் அம்மாவை இரண்டு கொடூரனுங்க சேர்ந்து சிதைச்சுட்டானுங்க… இன்டெர்ன்” அவன் முகத்தில் அறைந்து கொண்டு அழ, மான்யாவின் முகத்தில் மீட்டப்பட்ட வீணைத் தந்தியின் அதிர்வுகள்.

முன்பொருநாள், ‘உன் வீட்டு பெண்களை யாராவது இப்படி செய்திருந்தால் அந்த ரேப்பிஸ்டை பிழைக்க வைத்திருப்பாயா?’ என்ற தன் கேள்வியில் அவன் முகம் இருண்டு போனது நினைவில் வந்து வெட்டியது.

அதுவரை திடமாய் இருந்தவள், அவனது வார்த்தையில் முழுவதுமாய் உடைந்துப் போனாள்.

“ஐயோ!” கதறலாய் தலையில் அறைந்து கொண்டு அழுதபடி, தன் கைப்பையில் மறைந்திருந்த செய்தித்தாளை எடுத்து அவன் எதிரே ஆங்காரத்துடன் வீசினாள்.
குழப்பத்துடன் அதை எடுத்துப் பார்த்தவனின் முகமெங்கும் மின்னல் கோடுகள்.

எது அவளுக்கு தெரியக் கூடாதென்று இத்தனை நாட்களாய் மறைத்து வைத்திருந்தானோ, அது அவளுக்கு ஏற்கெனவே தெரிந்துவிட்டது என்று உணர்ந்த நொடி அதிர்ச்சியில் உறைந்துப் போனான்.

“மான்யா!” அவன் குரலில் ஒருவித தவிப்பு ஊறியிருந்தது.

“ஏன்டா என்கிட்டே இந்த உண்மையை சொல்லாம மறைச்சே?”  அவனது சட்டையை இறுகப்பற்றி அவள் கேட்க,

“நான்தான் முன்னாடியே சொன்னேனே இன்டெர்ன். எனக்கு ஹீரோவாக ஆசை இல்லை. ஆனால், என் அம்மாவை யாரும் வில்லியா மட்டும் பார்த்துடக்கூடாதுனு” அவனின் பதில் மான்யாவை உடைய வைக்க அவனை ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள்.

அங்கே அவள் வீசியெறிந்த செய்தித்தாளில் ‘இரண்டு அப்பாவி உயிர்களை கொன்ற மருத்துவர்.’ என்ற வாசகத்திற்கு பக்கத்தில் மீனாட்சியம்மாளின் உருவம்.

💐💐💐💐💐💐💐💐

பல வருடங்களுக்கு முன்னால்.

அந்த நகரத்தின் முக்கிய சர்ஜன் பட்டியலில் முதன்மை மருத்துவராக மீனாட்சியம்மாள்.

அவர் முகத்தில் எப்போதும் நோயாளிகளைப் பார்க்கும்போது ஒரு கனிவும் நேர்த்தியும் இருக்கும்.

ஆனால் அன்று ஏனோ அவர் முகத்தில் அது எல்லாம் வடிந்துபோய் ஒருவித மன அழுத்தம் சூழ்ந்து கொண்டிருந்தது.

காலையில் கணவர் வெங்கட்ராமனிடம் போட்ட அதீத சண்டையின் தீவிரம், அவர் முகத்தை சுருங்க செய்திருந்தது.

தன்னைவிட மீனாட்சி பெரிய சர்ஜனாக மதிக்கப்படுகிறாள் என்ற பொறாமையுணர்வு வெங்கட்ராமன் மனதில் வேரோடிப் போனதால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை நிகழும்.

ஆனால் எப்போது மதுரா மருத்துவமனையை, மீனாட்சியம்மாள் கட்டத் தொடங்கினாரோ, அப்போது லேசாய் ஆரம்பித்த உட்பூசல் இன்று  பூதாகாரமாய் மாறிவிட்டது.

அந்த மருத்துவமனையை தன்பெயரில் பதிவுசெய்ய மீனாட்சியம்மாள் முயல, வெங்கட்ராமனோ அதற்கு தடையாய் நின்றார்.

இன்று காலையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, தன் மகனின் முன்பே தன்னை அறைந்திருந்தது அவரை வேதனையின் விளிம்பிற்கு தள்ளியது.

மனதின் வருத்தம் கண்களை நனைத்த நொடி, “மேம் ஒரு அபார்ட் கேஸ், அப்புறம் எக்ஸஸ் ப்ளீடிங்னு இரண்டு பேரு வந்து ஹாஸ்பிட்டலிலே அட்மிட் ஆகியிருக்காங்க.” என்ற நர்ஸின் குரல் கேட்டு வேகமாய் கலைந்தார்.

அவர் எதிரே இரண்டு ஃபைல்களை வைத்து விட்டு கலங்கியிருந்த கண்களைப் பார்த்த நர்ஸ், “மேம் ஆர் யூ ஓகே! நான் வேணா இந்த இரண்டு பேஷன்ட்ஸையும் வேற டாக்டரை பார்க்க சொல்லட்டுமா?” என்ற கேள்வியில் வேகமாய் நிமிர்ந்தார் மீனாட்சியம்மாள்.

‘எத்தனையோ பெரியபெரிய சர்ஜரிகளைப் பார்த்துவிட்ட தன்னால் இந்த சிறிய சிகிச்சையை நேர்த்தியாக செய்துவிட முடியாதா?’ என்ற கேள்வியோடு வேகமாக எழுந்தார்.

“நான் அந்த பேஷன்ட்ஸை ட்ரீட் பண்றேன் சிஸ்டர். ஒரு ஃபைவ் மினிட்ஸ்லே வந்துடுறேன்” வேகமாய் கோட்டை மாட்டியவரின் அதீத நம்பிக்கைதான், பின்னால் நடந்த அந்த பெரும் தவறிற்கு வித்தாகி போனதோ!

அவசரமாய் தயாராகியவர் வெளியே செல்ல எத்தனித்த நேரம் அவரது தொலைபேசியில் சிணுங்கல்.

எடுத்து காதில் வைக்க வெங்கட்ராம்தான் பேசினார். பின்னாலோ  ஷ்யாமின் ‘வேண்டாம்பா… ப்ளீஸ்பா’ மழலலைக்கும் பதின்பருவத்திற்கும் இடைப்பட்ட குரல்.

“நீ சும்மா இருடா!” மகனை அடக்கிய வெங்கட்ராமின் குரல் மீனாட்சியம்மாளை நோக்கி அம்பாய் பாய்ந்தது.

“நான் நல்லா யோசிச்சுட்டேன் மீனா! இதுக்கு மேலே நாம சேர்ந்து இருந்தா சரிப்பட்டு வராது. டிவோர்ஸ் வாங்கிக்கலாம்.” வெங்கட்ராமனின் குரலில் அன்னையும் மகனும் ஒருசேர ஸ்தம்பித்தனர்.

அதுவரை தந்தையின் மீது கோபத்தையும் ஆற்றாமையும் சுமந்திருந்த ஷ்யாமின் முகம் முதன்முறையாய் வெறுப்பை சுமந்தது.

சிறுவயதிலிருந்தே அன்னை தந்தையின் சண்டைகளை தினசரி பார்த்துப் பழகியவன் அவன். ஆனால் அவரது இறுதி முடிவில் அதுவரை கெஞ்சிக் கொண்டிருந்தவனோ இப்போது வேகமாய் அவரை விட்டு ஒதுங்கிப் போனான்.

மீனாட்சியம்மாளோ மொத்தமாய் நொறுங்கிப் போய் நின்ற சமயம் “மேம், அந்த எக்சஸ் ப்ளீடிங் பேஷன்டோட கேஸ் ரொம்ப கிரிட்டிகலா இருக்கு” எனவும் வேகமாய் சுயம் அடைந்தார்.

அவசரமாய் ஸ்டெத் மாட்டிக் கொண்டவர் அந்த இரண்டு கோப்பில் இருந்த பெயரை மறுமுறை பார்த்து இருக்கலாமோ!

வேகமாய் “வேர் இஸ் சீதா… தட் நியூ பேஷன்ட்?” என்று கேட்டபடி வந்தவரிடம் நர்ஸ் ஒரு பெண்மணியை சுட்டிக் காட்டினாள்.

வேகமாய் அருகில் வந்தவர் ஏற்கெனவே பரிசோதனை செய்த நர்ஸின் அறிக்கைபடி வேகவேகமாக கருக்கலைப்பு மாத்திரையை எழுதி கொடுத்துவிட்டு நிமிர்ந்தார்.

“சீமா எங்கே?” என்று கேட்கவும் அவர் கை இன்னொரு பெண்மணியை சுட்டிக் காட்டியது. அவருக்கு அவசரமாக அதிக உதிரப்போக்கினை நிறுத்த மாத்திரை கொடுத்துவிட்டு வேகமாய் தன் அறையில் வந்து விழுந்தவருக்கோ அடுத்து கிடைத்த செய்தி மனதை அதிர செய்வதாய்.

இரண்டு நோயாளிகளும் இறந்து விட்டார்கள் என்ற செய்தி விழ, மனதுக்குள் இடிந்துப் போய் நர்ஸ், டேபிளின் மீது வைத்த கோப்பை மீண்டும் திறந்து பார்த்தார்.

கருக்கலைப்பு செய்ய வேண்டியவர்களுக்கு உதிரப்போக்கு நிற்க கொடுக்கும் மாத்திரையும், அதீத உதிரப்போக்கால் அனுமதிக்கப்பட்டவருக்கு கருகலைப்பு மாத்திரையும் கொடுத்த தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்துப் போனார்.

“தப்பு பண்ணிட்டேன். பெரிய தப்பு பண்ணிட்டேன். ஐயோ இரண்டு பேஷன்டுக்கும் மாத்தி ட்ரீட்மென்ட் கொடுத்து கொன்னுட்டேனே!” பெருங்குரலெடுத்து தலையில் அடித்துக் கொண்டவரை அந்த மருத்துவமனையே திரும்பிப் பார்த்தது.

அது மட்டுமா? செய்தித்தாளில் வந்த தன் முகத்தை ஊரே திரும்பிப் பார்க்க அவமானத்தில் தலைகுனிந்தவர் தன் வீட்டிற்குள்ளேயே அடைந்தார்.

இரு உயிர்களைக் கொன்றதன் குற்றவுணர்வு அவர் இதயத்தை கொன்றுபோட உயிரற்ற ஓவியமாய் சிதைந்தார்.

தன் தவறை உணர்ந்த வெங்கட்ராம், மீனாட்சியம்மாளிடம் மன்னிப்பு கேட்பதற்காக நெருங்கும் ஒவ்வொரு முறையும் அவரிடம் ரௌத்திரம் வெளிப்பட்டது.

“கட்டி முடிக்கப் போற ஹாஸ்பிடெல் உன் பேருலே தானே இருக்கணும். இந்தா வெச்சுக்கோ!” பத்திரப்பதிவு தாள்களை அவர் முன்பு வீசியெறிந்த மீனாட்சி, அவசர அவசரமாய் டிவோர்ஸ் பேப்பர்ஸில் கையெழுத்திட்டு முடித்திருந்தார்.

கதவுக்கு அருகில் நின்று, தனது பெற்றவர்களின் முகத்தை மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாமை அருகில் அழைத்தார் மீனாட்சியம்மாள்.

“ஷ்யாம், நீ பெரிய டாக்டராகணும். நாம புதுசா கட்டி முடிக்கப் போற ஹாஸ்பிட்டலை விட்டு, நீ ஒரு போதும் போகக்கூடாது. அங்கேயே இருந்து தப்பு நடக்காம பார்த்துக்கணும். இதோ அம்மாவுக்கு கை நடுங்குதுலே அந்த மாதிரி, உனக்கு ஒருபோதும் நடுங்கக்கூடாது.உன் எமோஷன்ஸை பேஷன்ட்ஸ் மேலே காமிக்கக்கூடாது. குறிப்பா நீ ஒரு ரோபோவா இருக்கணும். அம்மா பண்ண தப்பை நீ பண்ண மாட்டேனு எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு!” வார்த்தைகள் உடைய கேட்டவரின் கைகளில் தன் கரத்தை அழுத்திப் பிடித்தான்.

அதன் பின்பு தனியறையில் போய் அடைந்து கொண்ட மீனாட்சியம்மாளை, குற்றவுணர்வும் கணவரை பிரிந்த வேதனையும் மொத்தமாய் அழுத்த மனநலம் கொஞ்சம் கொஞ்சமாய் பிழன்று கொண்டிருந்தது. மீனாட்சியம்மாளிற்கு எதிராக போடப்பட்ட பொதுநலவழக்கும் அவர் மனநிலையை கருதி தள்ளுபடி செய்யப்பட்டது.

வெள்ளை உடையை பார்த்தாலே நடுங்க ஆரம்பித்தார். முகத்தில் பரிதவிப்போடு வெறுமையான விழிகளோடு வானத்தைப் பார்த்து வெறிக்க துவங்கியது அவர் முகம்.

இங்கோ புன்னகை ததும்பும் ஷ்யாம் சித்தார்த்தின் முகம் முற்றிலுமாய் உடைந்துப் போனது. தன் சிறுவயதில்,  தந்தைக்கும் தாயிற்கும் இடையே நிகழ்ந்த சண்டைகளை கண்டு கொஞ்சம் கொஞ்சமாய் இறுகத் துவங்கிய முகம் மீனாட்சியம்மாளிற்கு கொடுத்த சத்தியத்திற்கு பின்பு முற்றிலுமாய் இறுகிவிட்டது.

தன் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை எண்ணி முற்றிலும் அவரை வெறுத்தவனால் ஏனோ அவருக்கு பிறந்த பெண்ணான மீராவை வெறுக்க முடியவில்லை.

ஒற்றைக் குழந்தையாய் தனிமையில் தவித்துக் கிடந்தவனுக்கு மீராவின் வருகை வரமே!

இளமை ததும்பும் முகத்தோடு அவன் கல்லூரி வானத்தில் உலவிக் கொண்டிருந்த காலத்தில்தான் மேக்னாவை கண்டான்.

அவளை மெல்ல விரும்பத் துவங்கியவனுக்கு எப்போது அவளுக்கும் தன்னை பிடிக்கும் என்பது தெரிய வந்ததோ அப்போதோ காதல் கடலில் இரு உள்ளங்களும் விழுந்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் மகிழ்ச்சி அவன் முகத்தில் எட்டிப் பார்க்கத் துவங்கிய பொழுதில்தான், அவன் உயிரையே உடைக்கும் அந்த சம்பவம் நிகழ்ந்தேறியது.

💐💐💐💐💐💐

மீனாட்சியம்மாள் மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டாலும் ஷ்யாமிடம் மட்டும் குழந்தையாக மாறிவிடுவார்.

‘எது நடந்தாலும் தன் மகன் இருக்கின்றான் அவன் வந்து காப்பாற்றிவிடுவான்.’ அசரீரியாக சிதைந்து போன அவர் மனநிலையிலும் சிதையாமல் ஒலிக்கும். மகனின் மேல் வைத்த நம்பிக்கை, பாசம் அப்படி!

ஆனால் அவனுடைய இருபத்துநான்காவது பிறந்தநாள் அன்று, தன் அன்னையிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு தன் காதலியை ஆசையாகப் பார்க்க சென்றவனுக்கு தெரியாது தன் அன்னையை முழுவதாய் சிதைக்கும் சம்பவம் நிகழ்ந்தேற போகிறதென்று.

எப்போதும் போல் மீனாட்சியம்மாளை அன்றும் வாக்கிங்கிற்காக பணிப்பெண் வெளியில் கூட்டிச் சென்றபோது இருவர் அந்த பெண்ணைத் தாக்கி மீனாட்சியம்மாளை தனியே கொண்டு போய் சிதைத்துவிட்டனர்.

தனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று புரியாவிட்டாலும் ஏதோ நடக்கிறது என்று அவர் பெண்மை உணர்த்த அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன் மகன் தன்னை காப்பாற்ற எப்படியாவது வந்துவிடுவான் என்று சிறுகுழந்தை போல நம்பிய மீனாட்சியம்மாளின் நம்பிக்கையை காலம் உடைத்துப் போட்டது.

அதன் பின்பு மீனாட்சியம்மாளின் மனநிலை இன்னும் மோசமாக உடைந்து போக எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் தன்னைத்தானே மௌனியாக்கி கொண்டார்.

அதுவரை கண்ணீரை கட்டுப்படுத்தி பேசிக்  கொண்டிருந்த ஷ்யாம் அந்த இடத்தில் உடைந்துப் போனான்.

“என் அம்மாவை சிதைச்ச அந்த நாய்ங்களை கொலைவெறியோட தேடிப் போனேன் இன்டெர்ன். ஆனால் அவனுங்க லாரியடிச்சு ஈஸியா செத்துப் போயிட்டாங்க. ஆனால், என் அம்மா மட்டும் காலம் முழுக்க அவங்க கொடுத்த ரணத்தை சுமந்துட்டு நிற்கணும்.” என்றான் கண்ணீர் உடைய.

“அதுக்கு அப்புறம் அம்மா உடல்நிலையிலே கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் ஏற்படவும் சந்தேகத்துலே டெஸ்ட் எடுத்துப் பார்த்தேன். ஷீ இஸ் ப்ரெக்னென்ட்.”  அவன் குரலில் துயரத்தின் பேரலைகள்.

“ஆனால் அதைக்கூட அவங்களாலே உணர முடியலை இன்டெர்ன். நான்தான் அந்த நேரத்துல அவங்களைப் பார்த்துக்கிட்டேன். இங்கே இருந்தா எல்லாருக்கும் தெரிஞ்சுடும்னு ஸ்டேட்ஸ் கூட்டிட்டு போயிட்டேன்.” என்றவனின் கைகளில் லேசாய் நடுக்கம் பரவியது.

“அம்மாவுக்கு லேபர் பெயின் வந்தப்போ, நான்தான் சர்ஜரி பண்ணேன். ஸ்கேல்பல் பிடிச்ச என் கை முதன்முறையா அப்போதான் நடுங்குச்சு.” பரிதவிப்புடன் கூறினான்.

“ஆஷியை இந்த பூமிக்கு கொண்டு வர்ற வரைக்கும் என் உடம்பிலே உயிரில்லை இன்டெர்ன். அவள் வந்த அப்புறம்தான் என் வாழ்க்கையிலே கொஞ்சம் கொஞ்சமா சந்தோஷம் வந்துச்சு. நான் மேக்னாகிட்டே ஆஷிக்கு அம்மாவா இருக்க முடியுமானு கேட்டேன். அவள் நோ சொல்லிட்டா. அவள் பக்கத்திலிருந்து பார்க்கும்போது, அது சரியான முடிவு தானே! அதனாலே அவளை விட்டு விலகி வந்துட்டேன்” ஆயாசமாய் பேசி முடித்தவன், மான்யாவின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டான்.

“உனக்கு மட்டுமில்லைடி… எனக்கும் நீதான் பல வருஷம் கழிச்சு என் வாழ்க்கையிலே வந்த முதல் மழைத்துளி” நெற்றியில் அன்பை பதித்த அவன் குரல் ஆழ்ந்து ஒலித்தது.

“உன்னை இரிடேட் பண்ண எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது இன்டெர்ன். அதுவும் ‘உன்னாலே முடியாதுனு’ நான் சொல்ற ஒவ்வொரு முறையும் ‘முடியும்னு’   நீ மூக்கு விடைக்க நிற்கிறதை பார்க்க அவ்வளவு பிடிக்கும்.” அவள் மூக்கை செல்லமாக ஆட்டியபடி இலகுவாய் கூறினான்.

“ஏனோ தெரியலை, உன் கால் கொலுசு கேட்டாலே என் கண்ணு தானா உன் திசையை தேடும்.” அவளின் கொலுசை ரசனையாய் பார்த்தபடி புன்முறுவல் பூத்தான்.

“ஒருவேளை இதுதான் காதல் வந்ததுக்கான முதல் அறிகுறியா இருக்குமா? நான், உன்னை அப்பவே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேனா இன்டெர்ன்?” குழந்தையாய் கேட்டவனைப் பார்த்து மான்யாவிற்குள் காதல் பெருக்கெடுத்தது.

“ஆனால் நீ அந்த நர்ஸுங்ககிட்டே முதன்முறையா பேசிட்டு இருந்ததை கேட்டு லேசா பின்வாங்கினேன். உன்கிட்டே ஒரு எச்சரிக்கையோட இருக்கணும்னு ஒரு பாதுகாப்பு உணர்வு வந்தது.” அவனது குற்றப்பாட்டில் இவள் புருவம் சுருக்கி முறைத்தாள்.

“அது அப்போ இன்டெர்ன்… இப்போ ஷ்யாம் மேட்லி இன் லவ் வித் மான்யா!” சத்தியம் செய்து, அவளின் கையில் முத்திரையும் பதித்தான்.

“ஆஹான், அப்புறம் சொல்லுங்க.”

“அடுத்தமுறை நீ நர்ஸ்ங்க பேச்சை கேட்டப்போ, செமயா கோவம் வந்துடுச்சு இன்டெர்ன். மீனுமா, ஆஷி ரெண்டுபேரும் உன்கிட்டே ரொம்ப பாசமா இருக்கவும் எனக்குள்ளே பூனைக்குட்டி மாதிரி பொறாமை குட்டியா எட்டி பார்த்துச்சு”

“குட்டியாவா?” மான்யா புருவம் வளைக்க, அதில் சாய்ந்தவன்,

“ஒத்துக்கிறேன் ரொம்ப பெருசாவே பொறாமை எட்டிப் பார்த்துச்சு. அதனாலே உன்னை எல்லார் முன்னாடியும் வெச்சு ஹாஸ்பிட்டெலிலே அப்படி திட்டிட்டேன். சாரி இன்டெர்ன்!” என்றவனின் கைகள் அவளின் முகத்தை தாங்கிக் கொண்டது.

“மேலே சொல்லு டூப் மாஸ்டர். உன் சாரியை அக்செப்ட் பண்ணலாமா வேணாமானு யோசிக்கிறேன்.” புன்னைகையுடன் கூறி அவனது கையை கீழிறக்கினாள்.

“அது இன்டெர்ன், நீ என்னை காதலிக்கிறா மாதிரி நடிக்கிறேன்னு நினைச்சேனா…” வார்த்தையை இழுத்தவனின் கைகள் காதலியின் கைகளினால் வன்மையாக முறுக்கப்பட்டது.

“நினைக்க மட்டும்தான் செஞ்சேன், நீ நடிக்கிறேனு என்னாலே உறுதியா நம்ப முடியலை. பட்” ஒருவித தயக்கத்துடன் நிறுத்தினான்.

“பட்?” அவளிடம் கூர்மை.

“ஆனால் நீ நடிக்கிற கேம்ல நானும் ப்ளே பண்ணணும்னு நினைச்சேன். சோ… நீ அன்பா பேசும் போதெல்லாம் நான் என் ரோபோ முகத்தை காட்டாம பாசமா இருக்கிறா மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டேன்.” என்றவனை கொல்லும் பார்வையோடு பார்த்தாள்.

“ஆனால் என்னாலே முழுசா அந்த கேம்மை ஆட முடியலை இன்டெர்ன். உன்னை எல்லார் முன்னாடியும் திட்டுனதும் கண்ணுலே கண்ணீரை தேக்கி வைச்சுட்டு என்னை பார்த்தியே அது என்னை சாய்ச்சுடுச்சு. வேகமா உன்னை தேடி வரவும் அங்கே உனக்கு விஷ்வக் ஸ்வீட்சர் போடச் சொல்லி கொடுத்துட்டு இருந்ததை பார்த்ததும்…” முடிக்காமல் நிறுத்த, மான்யா குறும்பாய் அவன் முகத்தைப் பார்த்தாள்.

“உன்னோட பொல்லாத பொறாமைக்குட்டி மறுபடியும் தலை காட்டிடுச்சாக்கும்” என்றவளின் உதட்டை வருடி “ஆமாம்டி” என்றான் ரசனையாக.

“அப்புறம் வந்த நாட்களிலே கொஞ்சம் கொஞ்சமா உன்கிட்டே சாய ஆரம்பிச்சேன். உன்னைப் பார்க்கும் போது என்னை அறியாம என் இதயத்துலே ஏதோ குளுகுளுனு பரவுச்சு. அது என்ன உணர்வுனு நான் யோசிக்கலை. ஆனால் என் அப்பா எப்போ உன்னை காதலிக்கிறேனானு கேட்டாரோ அப்போதான்… இது காதலா இருக்குமோனு டவுட்டு முதன்முறையா வந்துச்சு. அப்புறம் நர்ஸுங்க உன்கிட்டே என்னை பத்தி பேசிட்டு இருந்ததை கேட்ட அப்போதான் எனக்கே என் மாற்றங்களை புரிஞ்சுக்க முடிஞ்சது. இது காதல்தான்னு நான் உறுதியா நினைச்சப்போ தான் மேடம் ஈ.சி.ஜி ரிசல்டை எடுத்துட்டு வந்தீங்க.” அவன் கண்கள் அந்தநாளின் நினைவில் மலர்ந்தது.

“தயங்காம அதுலே ஆமாம்னு டிக் பண்ணாலும் எனக்குள்ளே ஒரு சின்ன நெருடல்.  என்னதான் இருந்தாலும் ஆரம்பத்துலே உன் அன்பை விளையாட்டா நினைச்சுட்டேனேன்ற குற்றவுணர்வு லைட்டா மனசை குத்துச்சு. அதை என் அன்பை கொண்டு சரி பண்ணிடலாம்னு நினைச்சேன். பட்” அடுத்து பேச முடியாதபடி அவன் வார்த்தைகளை சோகம் துரத்திப் பிடித்தது. புன்னகையில் மலர்ந்திருந்த அவன் முகத்தில் இருள் கவ்வியது.

“ஆனால் அன்னைக்கு உன் அம்மா ஃபோட்டாவை காட்டி அழுதப்போ ரெண்டா உடைஞ்சுட்டேன் இன்டெர்ன். உன்கிட்டே உண்மையை மறைச்சு பொய் சொல்லி நடிக்கவும் மனசு வரலை. என் அம்மாவை இவ்வளவு பாசமா பார்த்துக்கிற உன்னாலே இந்த உண்மையை கண்டிப்பா தாங்கிக்க முடியாதுனுதான் உன்னை விட்டு விலக முடிவு பண்ணேன். ஆனால் முடியலைடி!” என்றவனின் பார்வை சோகமாய் அந்த செய்தித்தாளின் மீது  படிந்தது.

மீனாட்சியம்மாள் புகைப்படம் அருகே மான்யாவின் அம்மா சீதாதேவியின் முகம். அவர் அருகே விஷ்வக்கின் அன்னை சீமாதேவியின் முகம்.

“இன்டெர்ன் எனக்கு, நீதான் அந்த பேஷன்டோட பொண்ணுனு தெரியாது. விஷ்வக்கை மட்டும்தான் தெரியும். பட், விஷ்வக் கூட நான் பழக ஆரம்பிச்சப்போ அந்த உண்மை சத்தியமாத் தெரியாது.

ஆனால், என் அப்பா என்னை அழைச்சு அந்த நியூஸ்பேப்பரை காட்டி, இறந்த சீமாதேவியோட பையன்தான் விஷ்வக் அவன் மெடிசன் படிக்கிறதுக்கு ஸ்பான்சர் பண்ணியிருக்கேனு சொன்னாரோ அவனை இன்னும் அதிகமா பார்த்துக்கணும்ன்ற பொறுப்பு கூடுச்சு.

இறந்த சீதாதேவி மகளுக்கும் படிக்க ஸ்பான்சர் பண்றேன்னு சொன்னாரே தவிர, அது நீதான்னு எனக்கு தெரியாதுடி!” அவன் கதறியழ மான்யா அவனை தாங்கிப் பிடித்தாள்.

“அப்பா அந்த உண்மையை சொன்னதும் விஷ்வக்கை இன்னும் நல்லா பார்த்துக்க ஆரம்பிச்சேன். அவனை என் உயிர் நண்பனாதான் பார்த்தேன் இன்டெர்ன். குற்றவுணர்வுலே இருந்து வெளியே வரதுக்காக நான், அவன் கூட பழகலை. இது தெரியாம அந்த இடியட் என்னை விட்டுட்டு போயிட்டான்.” அவன் இறுதி வார்த்தைகள் உடைந்து வந்தது.

“அதே மாதிரி நீயும் என்னை விட்டுட்டு போயிடுவியோனு ரொம்ப பயந்தேன். எங்க அம்மாவை வெறுத்துடுவியோனு பயந்தேன். என் அம்மாவோட பொண்ணு ஆஷினு தெரிஞ்சா நெருடலோட பார்த்துடுவியோனு பயந்தேன். உனக்கு நான் தகுதியானவன் இல்லையோன்ற நிறைய பயம் எனக்குள்ளே. ஆனால் எல்லாத்தையும் மீறி என் காதலை சொன்னேன். ஆனால் நீயும் உண்மை தெரிஞ்சப்புறம் என்னை விட்டுட்டு அப்படியே போயிட்டேல்ல. உங்க யாருக்கும் நான் முக்கியமானவனா இல்லாம போயிட்டேன்ல்ல?” கதறிக் கொண்டு அழுதவனை தாங்கி பிடித்தாள் மான்யா.

அவள் கண்களிலிருந்து கோடாய் வழிந்தது.

“ஷ்யாம் நீ பலமுறை கேட்டியே எப்படி என் அம்மா உன்கிட்டே மட்டும் பாசமா நடந்துக்கிறாங்கனு? இதுக்கு முன்னாடி வரை எனக்கு பதில் தெரியலை. ஆனால் அந்த நியூஸ்பேப்பரை பார்க்கவும் தான் எனக்கு புரிஞ்சது.
முதல்முறை மீனாட்சியம்மாள் இடியை கண்டு பயந்தப்போ நான் கடவுள் ஃபோட்டோ காட்டிட்டு வந்தேன். அப்போ என் அம்மா அப்பா ஃபோட்டாவும் வந்தது. அதை பார்த்த அப்புறம்தான் மீனாட்சியம்மாள் என்கிட்டே அட்டாச் ஆனாங்க” என்றவளின் முகத்தில் வருத்தம் அலையாய் அடித்தது.

“பட், நானும் மனுஷிதான் ஷ்யாம். கடவுள் இல்லை. இந்த உண்மை தெரிஞ்ச  அப்புறம் மீனுமாவை என்னாலே முன்னாடி மாதிரி பார்க்க முடியலை. என் அம்மாவை கொன்னவங்க இவங்கன்ற கோவம் வந்தது. ஆனால் அந்தக் கோவமே ஒரு கட்டத்துலே வன்மமா மாறிடுமோனு பயமா இருந்தது. என்னாலே அந்த நெருடலோட வாழ முடியாது, ஆனால் நீயும் நல்லா இருக்கணும்னு தான் உன்னை முதுகுலே குத்திட்டு வெளிநாட்டுக்கு போயிட்டேன்” கண்ணீரில் தளும்பியது அவள் குரல்.

“ஆனால் இந்த மூனு வருஷமும் எப்படி செத்தேன் தெரியுமா? என்னாலே உன்னை முழுசா வெறுக்க முடியலை ஷ்யாம், அதே சமயம் ஏத்துக்கவும் முடியலை. இடையிலே மீனாட்சியம்மாள் விஷயம் மட்டும் முள்ளாய் உறுத்திட்டு இருந்துச்சு. ஆனால் இப்போ” என்று நிறுத்தியவளோ பெருங்குரலெடுத்து கதறினாள்.

“மீனாட்சியம்மாவுக்கு கடவுள் இப்படி ஒரு தண்டனை கொடுத்ததை என்னாலே  ஏத்துக்கவே முடியலை ஷ்யாம். முன்ஜென்மத்துலே பெரிய பாவம் இல்லை பெரிய கொலையே பண்ணியிருந்தாலும் ரேப்ன்றது கொடுமையான தண்டனனு நினைக்கிறவள் நான். ஆனால் மீனாட்சியம்மாள் ஒரே ஒரு தடவை டாக்டர் கோட் போட்டு உணர்ச்சிவசப்பட்டு பண்ண ஒரு தப்புக்கு இந்த வலி ரொம்ப அதிகம், பெரிய கொடுமை. பாவம் அவங்க” கண்ணீரோடு உரைத்தவள் தன் முகத்தில் படபடவென அடித்துக் கொண்டாள்.

“நான்தான் தப்பு பண்ணிட்டேன் ஷ்யாம். எங்கம்மாவை கொன்ன டாக்டரை சின்ன வயசுலே இருந்து சபிச்சதாலே தான் மீனாட்சியம்மாவுக்கு இப்படி ஆகிடுச்சு” குற்றவுணர்வோடு உடைந்து அழுதவளை இறுகி அணைத்துக் கொண்டான்.

“ப்ளீஸ் மான்யா, அழாதேடா!” அவன் அவளை தேற்ற முயன்று கொண்டிருக்கும் போதே அவர்களை நோக்கி ஒரு நிழலுருவம் நெருங்கி வந்து கொண்டிருந்தது.

இருவரும் நிமிர்ந்துப் பார்க்க கண்ணீருடன் எதிரே மீனாட்சியம்மாள்.

இத்தனை வருடங்களாக நீர்முத்துக்கள் வழியாத பாலை கண்களில் இன்று முதன்முறையாய் மழை பொழிந்தது.

இத்தனை காலம் உணர்ச்சியை கொன்றிருந்த முகத்தில் முதன்முறையாய்  ஒரு அசைவு.

இத்தனை காலம் பிரிக்காமல் கிடந்த உதடுகள் முதன்முறையாய் பிரிந்து “என்னை மன்னிப்பியாடா மான்யா?” என்றார் குரல் நடுங்க.

பல நாட்கள் கழித்து தன் அன்னை பேசிய அதிர்ச்சியில் ஷ்யாம் உறைந்துப் போய் அப்படியே நின்றுவிட, “அம்மா” என்ற கதறலோடு மான்யா ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.

“ஐ யம் ரியலி சாரிமா. இனி உங்களை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன். என் அம்மாவோட அணைப்பு உங்ககிட்டே மட்டும்தான் நான் பலமுறை தேடியிருக்கேன். இனியும் தேடுவேன்” என்றபடி அவர் மார்பில் கோழிக்குஞ்சாய் ஒடுங்கிப் போனவளை ஆரத் தழுவியவரின் விழிகள் ஷ்யாமை ஒருமுறை திரும்பிப் பார்த்தது.

அவன் தயக்கத்தோடு தள்ளி நிற்க இரு கை நீட்டி அவனை வாஞ்சையாய் அழைத்த அடுத்தநொடி அவரின் இறுகிய அணைப்பில் ஓடிச்சென்று தன்னை புதைத்துக் கொண்டான் ஷ்யாம் சித்தார்த்.

இருவரையும் இறுக அணைத்துக் கொண்ட மீனாட்சியம்மாளின் கண்களிலிருந்து கண்ணீர் சுகமாய் இமை மீறியது.

தயக்க மேகங்கள் விலகி  காதல் வெண்ணிலவு அங்கே ஒளிர்ந்ததோ!

Leave a Reply

error: Content is protected !!