உடையாத வெண்ணிலவே 11

உடையாத வெண்ணிலவே 11

நாம் ஒன்றை தேட சென்றால் காலம் வேறொன்றை நம் கைகளில் திணிக்கும்.

அப்படி தான், தன் கைகளில் வந்து விழுந்த அந்த புகைப்படத்தையே அதிர்ந்துப் போய் பார்த்தாள் மான்யா.

அவள் அந்த புகைப்படத்தை தேடி வரவில்லை, ஷ்யாம் காலையில் குறிப்பிட்டு சொன்ன அந்த ஸ்டடி மெட்டிரியலை எடுக்க தான் அவன் அறைக்குள் நுழைந்திருந்தாள்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவள் கைகளில் சிக்கிக் கொண்டது இந்த புகைப்படம்.

அதில் மீனாட்சியம்மாளும், வெங்கட்ராமனும் அருகருகே அணைத்தபடி நின்றுக் கொண்டிருக்க அவர்களின் நடுவே ஒரு சிறு பையன் நின்று கொண்டிருந்தான்.

அந்த சிறுவனையே உற்றுப் பார்த்தவள் அது நிச்சயம் ஷ்யாமாக தான் என யூகிக்கும் போதே அறை கதவு கீறிச்சுடும் சப்தம் கேட்டது.

சட்டென்று அந்த புகைப்படம் எங்கிருந்து விழுந்ததோ அதே இடத்தில் வைத்துவிட்டு புத்தகங்களோடு அவசர அவசரமாக எழ
ஷ்யாம் உள்ளே நுழைந்தான்.

அவனைப் பார்த்து தன் அதிர்ந்த பாவனையை மாற்றிக் கொண்டவள், “நான் ஸ்டெடி மெட்டீரியல்ஸ் எடுக்க வந்தேன்” என்று சொன்னபடி வெளியே செல்ல முயற்சித்தாள்.

“எடுத்தா மட்டும் போதாது மிஸ்.மான்யா படிக்கனும். இந்த ஹாஸ்பிட்டலுக்கு நீ ஒரு டாக்டரா ஆகனும்னு வந்திருக்கிறதை மறந்துட்டு வேற ஏதாவது செய்ய ட்ரை பண்ணா, என்னை வேற மாதிரி பார்ப்ப. திஸ் இஸ் யுவர் ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங்” என்றான் இறுகிய குரலில்.

ஏற்கெனவே அதிர்விலிருந்த மான்யாவின் மனம் ஷ்யாமின் வார்த்தைகளை முழுவதுமாக உட்கிரகிக்கவில்லை.

அப்படி அவள் சரியாக கவனித்திருந்தால் ஷ்யாமிடம், ‘நான் ஏன் மறக்கப் போகிறேன்?’ என்று எதிர் கேள்வி கேட்டிருந்திருப்பாள்.

ஆனால் அவள் மனம் முழுக்க அந்த புகைப்படமே வியாபித்திருக்க வேகமாக சரியென்று தலையாட்டிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்த பிறகு தான் அவளால் நிம்மதியாகவே மூச்சுவிட முடிந்தது.

சற்று முன்பு பார்த்த அந்த புகைப்படம், இதற்கு முன்பு நடந்த சம்பவங்களை எல்லாம் வேகமாக இணைத்துப் பார்க்க தூண்டியது.

முதன் முறை வெங்கட்ராமனை மீனாட்சியம்மாள் கத்தியால் காயப்படுத்திவிட்டதும் அதன் பின்பு வெங்கட்ராமனை, சந்தித்த போதெல்லாம் ஷ்யாம் தொழில் ரீதியாக மட்டுமே பேசியது நினைவில் ஊஞ்சலாடியது.

இவர்கள் மூவரும் ஒரே குடும்பமாக இருந்தும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படையாய் காண்பிப்பதில்லையே ஏன்? எதனால்?

இவர்களது குடும்பத்தில் ஏதோ ஒரு காரணத்தினால் விரிசல் விழுந்திருக்கிறது. அதே காரணத்தால் தான் மீனாட்சியம்மாளின் மனமும் விரிசல்பட்டுவிட்டதோ?

கேள்விகள் சிலந்தி போல அவள் இதயத்தை பின்ன மீனாட்சியம்மாள் இருக்கும் ஐ.சி.யூ அறைக்குள் நுழைந்தாள்.

எப்போதும் போல எதையோ வெறித்தபடி தான் இருந்தது அவரது முகம். அதைக் கண்டவள் அவரது தலையை மெதுவாக வருடிவிட்டபடி பிபி மற்றும் பல்ஸை பார்த்துவிட்டு  திரும்பிய நேரம் பெரும் சப்தம் காதை துளைத்தது.

வேகமாக கண்ணாடி ஜன்னல் வழியே பார்க்க, மின்னல் வானத்தை இரண்டாக கிழித்துக் கொண்டிருந்தது.  இடையில்  இடியின் போர் முழக்க சப்தம் வேறு.

இதுவரை எதற்கும் எதிர்வினையாற்றாமல் இருந்த மீனாட்சியம்மாள் அந்த சப்தத்தில் தன்னை மீறி நடுங்கத் தொடங்கிவிட்டார்.

மான்யாவிற்கும் அந்த சப்தம் பயத்தை தந்தது. ஆனால் அதை கட்டுப்படுத்திக் கொண்டு மீனாட்சியம்மாளின் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்டாள். பதிலுக்கு இவளது கைகளைப் பற்றியவரின் விரல்களில் நடுக்கம்.

எதை எண்ணியோ அஞ்சி நடுங்கும் மானின் மருகல் அவரது கண்களில்.

அதைக் கண்டவள், “பயப்படாதீங்கமா எதுவும் இல்லை” என்று சமாதானப்படுத்தபடியே சாளரத்தை மூடுவதற்காக எழுந்து கொள்ள முயன்றாள். ஆனால் மீனாட்சியம்மாள் விடவில்லை.

“அம்மா பயப்படாதீங்க. நான் அந்த ஜன்னலை மூடிட்டு வந்துடுறேன். இடி சப்தம் அதிகமா கேட்காது” என்று சொல்லியபடி தனது கையை பிரிக்க முயல அவரின் பிடியோ உடும்பாக இருந்தது.

மான்யாவிற்கு கை வலித்தாலும் அவரது பயத்தைப் போக்க வேண்டுமென நினைத்தவள் வேகமாக தன் கைப்பைக்குள்ளிருந்து அலைப்பேசியை எடுத்தாள்.

“சாமி கிட்டே வேண்டுனா அவர் இடி பயத்தைப் போக்கிடுவார்மா” என்றபடி தனது கேலரிக்குள் நுழைந்து “காட்” என்று சேமிக்கப்பட்ட ஃபோல்டரை திறந்தாள்.

அதில் வரிசையாக பல தெய்வங்களின் புகைப்படங்கள். ஒவ்வொன்றையும் அவருக்கு காட்டியவளின் விரல்கள் அடுத்து வந்த புகைப்படத்தில் அப்படியே செயலிழந்து நின்றது.

அவளது தந்தையும் அன்னையும் இணைந்து நின்ற படம் அது.

அவளுக்கும் இடியென்றாலே சிறுவயதிலிருந்து பயம். அப்போதெல்லாம் அன்னையின் முந்தானையில் தான் ஒளிந்துக் கொள்வாள். இப்போதும் அதே முந்தானையில் ஒளிந்துக் கொள்ள மனம் ஏங்கியது. ஆனால் தாயில்லையே!

கலங்கிய கண்களுடன் அந்த புகைப்படத்தைப் பார்த்தவள், “எனக்கும் இடினா பயம். அப்போ எல்லாம் என் அம்மா முகத்தைத் தான் பார்த்துப்பேன், பெரிய பலம் கிடைக்கும். இப்போ அதே பலம் உங்க பக்கத்துலே இருக்கும் போது கிடைக்குதுமா. ஏனே காரணம் புரியலை” 
தேம்பியபடி அவரது தோளில் சாய்ந்தாள்.

இதுவரை எதற்கும் எழும்பாத அவர் கைகள் தன்னிச்சையாக மான்யாவின் தோளை ஆதரவாய் வருடியது.

பெண்களுக்கே உரித்தான தாய்மை குணம் எந்த நிலையிலும் வெளிப்பட்டுவிடும் என்பது உண்மை தான் போல!

மீனாட்சியின் அந்த அணைப்பில் மான்யா சட்டென்று நிமிர்ந்துப் பார்க்க அதே நேரம் அறை கதவு திறக்கப்பட்டது.

“அம்மா இடி சப்தம் கேட்டு பயப்படாதீங்க” பதற்ற குரலோடு ஷ்யாம் உள்ளே வர

“ஷ்யாம், செர்ட்ரலின் டேப்லெட் கொண்டு வந்த தானே?” என்று கேட்டபடி வெங்கட்ராமனும் அவசரமாக வந்தார்.

உள்ளே நுழைவதற்கு முன்பு வரை அவர்கள் இருவருக்கிடையே இருந்த அந்த அவசரமும் வேகமும் அங்கே கண்ட காட்சியைப் பார்த்தும் சட்டென மறைந்துப் போனது.

மான்யாவின் அணைப்பில் சிறுகுழந்தைப் போல ஒடுங்கிக் கிடந்த மீனாட்சியம்மாளைப் பார்த்து இருவரின் கண்களிலும் வியப்பு.

எதைக் கண்டும் அசராத ஷ்யாம் மழைக்காலம் வந்தால் மட்டும் மிரண்டுவிடுவான். இடி மின்னலைப் பார்த்து பயப்படும் மீனாட்சியம்மாளை சமாளிப்பது அவனுக்கு எப்போதும் பெரும்பாடாய் இருக்கும். அதற்காகவே மீனாட்சியம்மாள் அறைக்கு மட்டும் மழைக்காலத்தை எதிர் கொள்வதற்காக தனியாக சவுண்ட் ஃப்ரூப் சிஸ்டத்தை தயார் செய்து வைத்திருக்கின்றான்.

அப்படியிருந்தும் சில நேரங்களில் எதிர்பாராமல் பெய்யும் கோடை மழையில் விழும் இடிகளில் மீனாட்சியம்மாளை சமாளிப்பது அவனுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

ஆனால் மான்யா மட்டும் எப்படி இவ்வளவு எளிதாக அவரை சமாளித்தாள்? என்ற கேள்வி அவன் நெற்றியில் பல சிந்தனை கோடுகளை முடுக்கிவிட்டிருந்தது.

மீனாட்சியம்மாளின் அமைதியான நிலையைக் கண்டு பெருமூச்சுவிட்ட வெங்கட்ராம், “ஷ்யாம், மழைக்காலம் ஸ்டார்ட் ஆகிடுச்சு. இதுக்கு மேலே ஹாஸ்பிட்டெலிலே இருந்தா பார்த்துக்கிறது கஷ்டம். வீட்டுக்கு கூட்டிட்டுப் போறது தான் சரியா இருக்கும்” என்றார் ஆலோசனையாக.

“யெஸ் டிஸ்சார்ஜ் பண்ணிட்டு வீட்டுக்கு கூட்டிட்டுப் போறது தான் பெட்டர். ஐ அக்ரீ டாக்டர்” என்று சொல்ல அவர் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டார்.

அவர்கள் இருவருடைய சம்பாஷனையையே மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்த மான்யாவை விழி சுருக்கிப் பார்த்தான்.

“இந்த சிட்டுவேஷன்ல செர்ட்ரலின் டேப்லெட் இல்லாம என் அம்மாவை ஹேண்டில் பண்றது கஷ்டம். எப்படி அவங்களை நீ ஒருத்தியா தனியா இருந்து சமாளிச்ச?” என்றான் கேள்வியாக.

“எல்லா நோய்க்கும் டேப்லெட் ஒன்னு தான் தீர்வு இல்லை ஷ்யாம். ஆயிரம் மாத்திரையாலே சரி பண்ண முடியாததைக் கூட ஒரு அன்பான வார்த்தையாலே பண்ண முடியும்” என்று சொல்ல அவன் இதழ்களில் ஒரு வளைவு.

“மான்யா இந்த டயலாக் விடுற வேலைலாம் என் கிட்டே வேண்டாம். என்ன பண்ணி என் அம்மாவை சரி பண்ண?” என்று அழுத்தமாக கேட்டவன் சிறு இடைவெளிவிட்டு,

“ப்ளீஸ் டாக்டர்னா ஈவு இரக்கத்தோட இருக்கனும் அப்படி இப்படினு சொல்லி என்னை டார்ச்சர் பண்ணாம ரீசனபிலான காரணத்தை சொல்லு” என்று அவன் கேட்ட தொனியிலோ கேலி.அது மான்யாவை கீறியது.

நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். கண்களில் அப்படி ஒரு கொதிப்பு.

“மிஸ்டர். ஷ்யாம், நீங்க நம்பலைனாலும் அது தான் நிஜம். அவங்களுக்கு தேவைப்படுறது டேப்லெட் இல்லை, அன்பான வார்த்தைகள். பேஷன்ட்டை மரக்கட்டையா பார்க்கிற உங்களாலே இதை புரிஞ்சுக்க முடியாது, பட் ஈவு இரக்கத்தோட பார்க்கிற என்னாலே புரிஞ்சுக்க முடியும்” என்று கோபத்தோடு உரைத்தவள் வேகமாக அங்கிருந்து செல்ல முயன்றாள்.

ஆனால் முடியவில்லை. மீனாட்சியம்மாள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருந்தார்.

“அம்மா, நான் வீட்டுக்கு போய் ஃப்ரெஷா ரெடியாகிட்டு நாளைக்கு வந்துடுறேன்” என்று சொல்லியபடி கைகளை பிரிக்க முயன்றாள்.

அவன் உள்ளத்தில் திடீரென அவள்  இதற்கு முன்பு நர்ஸ்களிடம் பேசிய அந்த வார்த்தைகள் முட்டி மோத ஷ்யாமின்  பார்வை சந்தேகமாய் மான்யாவையே துளைத்தது.

‘ஒரு வேளை தன் அம்மாவை வைத்து காய் நகர்த்த முயல்கிறாளோ?’ என்ற கேள்வி தோன்றிய அடுத்த நொடியே அவனின் முகம் ரௌத்திரம் ஆனது.

“என்ன பண்ணி என் அம்மாவை மயக்குன மான்யா? உன் விளையாட்டுக்கு என் அம்மா தான் கிடைச்சாங்களா?” என்று கோபத்தில் கத்த மான்யாவின் பார்வை கூர்வாளாய் அவனை வெட்டியது.

“மைன்ட் யுவர் வொர்ட்ஸ் ஷ்யாம். அன்புக்கும் மயக்குறதுக்கும் வித்தியாசமிருக்கு, பட் அது உங்களை மாதிரி ரோபோவுக்கு எல்லாம் தெரியாது” கைநீட்டி எச்சரித்த நேரம் மான்யாவின் அலைப்பேசியில் அலறல்.

எடுத்து காதில் வைக்க எதிர் முனையிலிருந்து அவளுடைய ஹவுஸ் ஓனர் பேசினார்.

“மான்யா, இங்கே வீசுன பலமான காத்துலே மரம் வீட்டு மேலே சாய்ஞ்சுடுச்சு. கூரை ஓட்டை எல்லாம் மாத்தற வரை வேற எங்கேயாவது தங்க முடியுமானு பாருமா” என்று சொல்ல மான்யாவின் முகம் வருத்தத்தைக் காட்டியது.

இந்த மழையில் எங்கே சென்று தங்க முடியும் என்றவள் யோசனையுடன் எண்ணிக் கொண்டிருக்க ஷ்யாமின் காதுகளிலும் அந்த ஹவுஸ் ஓனர் பேசியது கேட்டது.

மான்யாவை விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த தன் தாயைப் பார்த்தவனின் கண்களில் லேசாக கலக்கம்.

இத்தனை வருடமாக அவரைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் லயாவின் மீது வராத அன்பு, கொஞ்ச நாட்களிலேயே பழகிய மான்யாவிடம் எப்படி வந்தது? இது வரை அவன் தாய் எதற்காகவும் அசைந்துப் பார்த்ததில்லை.

ஆனால் இப்போது அசைகிறார். மான்யாவின் பக்கமாக அவரது கிளைகள் அசைய அசைய இவன் ஆணிவேர் ஆட்டம் காண துவங்கியது.

“அம்மா, மான்யாவை விட்டுடுங்க மா. அவங்க போகனும்ல” என இறுதியிலும் இறுதியுமாய்க் கெஞ்சிப் பார்த்தான். ஆனால் அவரது கைகளில் பிடித்த அழுத்தம் குறையவில்லை.

கடைசியில் தன்னை சாமார்த்தியமாக அவள் வீழ்த்தத் துவங்கிவிட்டாளே என்று இயலாமையோடு நினைத்தவனின் முகம் எதையோ கணக்குப் போட்டது. முடிவில்  இறுகிய முகத்தோடு அவளைப் பார்த்தான்.

“மான்யா, என் வீட்டுலேயே பேயிங் கெஸ்டா ஸ்டே பண்ணிக்கோ. உன் ஷிப்ட் முடிஞ்சதும் அம்மாவை வீட்டுக்கு வந்து பார்த்துக்க அப்போ தான் வசதியா இருக்கும்” என்று சொல்ல அவளோ அவனை கூர்மையாக பார்த்தாள்.

“நான் முடியாதுனு சொன்னா? என்ன பண்ணுவீங்க ஷ்யாம் சித்தார்த்?”

“அன்பாலே, ஈவு, இரக்கத்தாலே ஒரு பேஷன்ட்டை க்யூர் பண்ண முடியாதுனு நீயே ஒத்துக்கிட்டு தோத்துட்டதா நினைச்சுப்பேன்” மீண்டும் அவளை கீற முயன்றது அவன் வார்த்தைகள்.

“நான் அவ்வளவு சீக்கிரமா என் தோல்வியை ஒத்துக்க மாட்டேன் ஷ்யாம். பார்த்துரலாம் நீங்களா? நானா?” என்று சவால்விட்டபடி மீனாட்சியம்மாளின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

அவர்கள் இருவரது கைப்பிணைப்பை கசப்பாய் பார்த்தவன், “ஒரு விஷயம் மட்டும் நல்லா நியாபகத்துலே வெச்சுக்கோ மான்யா, என் அம்மாவை யூஸ் பண்ணி என்னைத் தோற்கடிக்கனும்னு நினைச்சா நான் அரக்கனா மாறிடுவேன்” என்ற குரலில் பெருஞ்சிங்கத்தின் கர்ஜனை.

அவன் வார்த்தையின் உட்பொருள் புரியாமல் மான்யாவோ, “ஏற்கெனவே நீங்க அரக்கனா தான் இருக்கீங்க, இதுக்கு மேலே தான் மாறனுமா?”  நக்கலாக கேட்டபடி மீனாட்சியம்மாளை வீல்சேரில் தள்ளிக் கொண்டு மருத்துவமனை முகப்பிற்கு வந்தாள்.

“அம்மா, நான் வீட்டுக்குப் போய் என் திங்க்ஸ்லாம் எடுத்துட்டு வந்துடுறேன்” என்று சொன்னபடி கைகளை விடுவிக்க முயற்சிக்க, அப்போதும் அவர் விடவில்லை.

அதைக் கண்டு கோபமும் பொறாமையும் ஒரு சேர ஷ்யாமின் கண்களில் படர்ந்தது.

ஆற்றாமையோடு கைகளில் குத்தி கொண்டவன் அவசரமாக யாருக்கோ கால் செய்தான்.

இரண்டே நொடிகளில் சீறிப் பாய்ந்து மான்யாவின் அருகே தவழ்ந்து நின்றது அந்த கார்.

“உன் வீட்டு அட்ரெஸ் ட்ரைவர் கிட்டே சொல்லு. எல்லா பொருளையும் எடுத்துட்டு வந்துடலாம்” என்று சொல்லியபடியே மீனாட்சியம்மாளை கைகளில் ஏந்தியபடி பின்சீட்டில் ஏற்றினான்.

அதன் பின்பு அரை மணி நேரத்தில் அவள் சொன்ன விலாசத்திற்கு வந்து நின்றது அந்த கார்.

எதிரே இரண்டே தளங்களைக் கொண்டு ஒரு குட்டி வீடு. அதில் மேல் தளத்திலிருந்த வீட்டின் கூரையில் ஒரு மரம் சாய்ந்து கிடந்திருந்தது. அந்த வீட்டையே ஷ்யாம் பார்வையால் அளந்து கொண்டிருந்த நேரம் மான்யா தன் பொருட்கள் அடங்கிய ட்ராலியை தள்ளிக் கொண்டு வெளியே வந்தாள்.

மீண்டும் கார் தன் பயணத்தை துவங்க, அதே அரை மணி நேரத்தில் இப்போது கார் வேறொரு இடத்திற்கு வந்து ப்ரேக் போட்டு நின்றது. காரிலிருந்து இறங்கி நிமிர்ந்துப் பார்த்தாள் மான்யா.

எதிரே அரண்மனை போல ஒரு வீடு. அவள் மனதுக்கு நெருங்கிய பூக்களின் வாசனை அந்த இடமெங்கும் வியாபித்து கிடக்க ஆழ மூச்செடுத்து சுவாசித்தாள்.

அவள் நரம்பு செல்களில் புத்துணர்ச்சியின் ஓட்டம்.

பார்வையாலே அளந்தபடி அந்த வீட்டை நோக்கி நடந்தவளின் கால்கள் அந்த கதவின் முன்பு தேங்கி நின்றது.

ஷ்யாம் வேகமாக வந்து காலிங்பெல்லை அழுத்த “அப்பா” என்ற சந்தோஷ கூக்குரலோடு திறந்த ஆரனாஷியின் முகம் எதிரிலிருந்த மான்யாவைப் பார்த்து சுருங்கிப் போனது.

அதைக் கண்ட மான்யா கலக்கமாக, ஷ்யாம் முன்னே வந்து “இவங்க இனி நம்ம கூட தான் இருக்க போறாங்க ஆஷிமா. பாட்டியை பார்த்துகிறதுக்காக வந்திருக்காங்க. உங்களுக்கு இவங்க இங்கே தங்கிறது ஓகே தானே” என கேட்டபடி ஆரனாஷியை தூக்கினான்.

ஆஷியின் விழிகள் மான்யாவை தொட்டு இறுதியாக ஷ்யாமிடம் வந்து நிலைத்தது.

“உங்களுக்கு ஒகே வா பா?” என ஆரனாஷி எதிர் கேள்வி கேட்க ஷ்யாம் வேகமாக ஆமென்று தலையசைத்தான்.

“அப்போ எனக்கும் ஓகே தான்பா” என்று அவனது கழுத்தை கட்டி கொண்டவள் மான்யாவை முறைத்துப் பார்த்தபடி,

“இங்கே என் அப்பா கழுத்தையோ இல்லை என் பாட்டியையோ அழ வைக்கக்கூடாது. அப்படி அழ வைச்சா ஆஷிமா பேட் கேர்ள் ஆகிடுவா” என்று விரலை காட்டி எச்சரிக்க மான்யாவிற்கோ தலையிலடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

‘ஐயோ ஹாஸ்பிடெலிலே சமாளிக்கிறது பத்தாதுனு, இங்க இவனையும் இவன் மினி வெர்ஷனையும் சேர்த்து இனி சமாளிக்கனுமா?’ அயர்ந்துப் போனாள் அவள்.

இவள் முகத்திலிருந்த அதே அயர்ச்சியும் கலக்கமும் கதவின் அருகிலிருந்த லயாவின் முகத்திலும் பிரதிபலித்தது.

அதைக் கண்டு கொண்ட ஷ்யாம், “லயா, எப்பவும் போல நீ தான் அம்மாவை மார்னிங் பார்த்துக்க போற. ஈவினிங் நான் வந்ததும் எப்படி அம்மாவைப் பார்த்துப்பனோ அதே மாதிரி தான் இவங்களும் பார்த்துக்க போறாங்க” என்று சொல்ல அவளது முகத்தில் லேசாக தெளிவின் பிறப்பு.

மலர்ந்த முகத்துடன் மனதார மான்யாவை வரவேற்றாள். சின்ன முறுவலுடன் வீட்டிற்குள்ளே நுழைய முயன்றவளது கால்கள் பிசக தடுமாறி விழப் போனாள்.

ஷ்யாமின் கைகள் தன்னிச்சையாக அவளை கீழே விழாமல் பிடித்துவிட அதன் பின்பு இதுவும் இவளது மயக்கும் யுக்திகளில் ஒன்றாக இருக்குமோ என்ற சந்தேகம் பிறந்த நொடி சட்டென்று அவளை கீழே விட்டான்.

பொத்தொன்று கீழே விழுந்த மான்யாவின் பார்வையில் அடிப்பட்ட மானின் மருகல்.

“ஒழுங்கா கண்ணைத் திறந்து கீழே பார்த்து நட, இல்லைனா உன்னை தாங்கிறதுக்கு ஒரு பாடிகார்ட்  வெச்சுக்கோ. நான் உன்னை தாங்கிறதுக்கான ஆள் இல்லை புரிஞ்சுதா” என்று வார்த்தைகளால் அவளை கிழிக்கத் துவங்க மான்யாவின் முகத்தில் அப்பட்டமான கலவரம்.

‘உள்ளே நுழையறதுக்கு முன்னாடியே இப்படினா, நுழைஞ்ச அப்புறம் என்னென்னலாம் நடக்க காத்திருக்கோ!’ என மதுரா மருத்துவமனைக்குள் நுழைவதற்கு முன்பு எப்படி ஆயாசத்துடன் நினைத்தாலோ அதே போல மீண்டும் நினைக்க வைத்தது காலம்.

Leave a Reply

error: Content is protected !!