உடையாத வெண்ணிலவே 3
உடையாத வெண்ணிலவே 3
காலம் என்பது ஒரு மாயநதி.
நதி எப்போதும் முன்னோக்கி தான் ஓடும். ஆனால் இந்த காலநதி மட்டும் மனதை ஒரே நேரத்தில் முன்னோக்கியும் பின்னோக்கியும் ஓட வைக்கும்.
அப்படி பின்னோக்கி ஓடிய காலநதியில் இழுத்து செல்லப்பட்ட மான்யாவின் நினைவு சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு கரை ஒதுங்கியது.
மதுரா மருத்துவமனை. சென்னையின் மையப்பகுதியில் அமைந்த முக்கிய மருத்துவமனைகளில் ஒன்று.
பிரம்மாண்டம் என்னும் சொல்லுக்கு இலக்கணம் எழுதிய வானுயர்ந்த கட்டிடம். முகப்பில் ஒரு குட்டி பூந்தோட்டம்.
அந்த மலர்களின் இடையே பூவரசியை போல் நின்றிருந்தாள் மான்யா.
அவள் முகம் முழுக்க அத்தனை விகசிப்பு. கண்ணிமைகளின் அதிர்விலே சிற்றோடையின் சங்கீதம்.
எள்ளுப்பூ போன்ற நாசியின் அருகே கையிலிருந்த மலரை முகர எத்தனித்தவளின் காதுகளில் ரீங்காரமிட்டது ஆம்புலன்ஸ் ஒலி.
வேகமாக திரும்பிப் பார்த்தாள்.
ஆம்புலன்ஸின் கதவுகள் திறந்து கொள்ள, அதிலிருந்து அவசர அவசரமாக ஆக்ஸிடென்ட் ஆன ஒருவரை உள்ளே அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
“என்ன ஆச்சு?” அங்கிருந்த ஒருவரைக் கேட்க, “ஹிட் அன்ட் ரன் கேஸ் மா. கண்ணு மண்ணு தெரியாம இடிச்சுட்டு போயிட்டானுங்க” என்றார் வருத்தமாக.
அவர் சொன்னதை கேட்டதும் மான்யாவின் விழிகளில் அதுவரை இருந்த புன்னகை தணல்பட்ட பனியாய் சுருண்டுப் போனது.
‘அவசரத்திற்கு பிறந்தவன்கள்’ கோபத்தில் முணுமுணுத்தது அவள் உதடுகள்.
யாரோ ஒருவரின் அவசரத்திற்கும் கவனக்குறைவிற்கும் இங்கே இன்னொரு உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
உயிர்தான் எத்தனை மலிவுவிலை சரக்காகிப் போய்விட்டது, இந்த உலகத்தில்! ஆயாசத்துடன் நினைத்தவள்
தனது கைக்கடிகாரத்தைத் திருப்பி பார்க்க மணி ஒன்பதே.
ஆனால் அவள் மருத்துவமனையில் ஒன்பது மணிக்குள் இருக்க வேண்டும்.
காலை எட்டரை மணிக்கே அங்கு வந்திருந்தாலும் அந்த முகப்பு பூங்காவில் மனம் லயித்தவள் கடிகாரத்தைப் பார்க்க மறந்துப் போயிருந்தாள். பூங்காவில் அதிகநேரம் செலவிட்டதன் எதிரொலி இப்போது நடையில் தெரிந்தது.
அவசர அவசரமாக நடந்து சென்றவளின் எதிரே அதிவேகத்தில் வந்துக் கொண்டிருந்தது ஆடி கார். அவள் சுதாரித்து கொஞ்சம் நகராமல் போயிருந்தால் அடுத்த நொடியே எமலோகத்துக்கு இலவசசீட்டில் பயணித்து இருப்பாள்.
வேகமாக திரும்பி அந்த ஆடி காரைப் பார்த்தாள். பணக்காரர்களுக்கே உரிய திமிரும் அலட்சியமும் வஞ்சனையில்லாமல் சிதறிக் கிடந்ததைப் போல தோன்றியது.
வந்த கோபத்தில் “அவசரத்திற்கு பிறந்தவனே, ரோடு என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? ஒழுங்கா ரோட்டைப் பார்த்து ஓட்டுடா!” இவள் கத்திய அந்த வார்த்தை, கார் ஓட்டியவனின் காதுகளில் விழுந்திருக்கும் போல.
இல்லையென்றால் அதிவேகத்தில் சீறிப் பறந்த கார் சட்டென்று நிற்குமா?
இல்லை, சென்ற வேகத்திலே திரும்பியும் ரிவர்ஸ் எடுத்து இவள் மீது மோதத்தான் வருமா?
இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத மான்யா சட்டென்று பின்னோக்கி நகர, கால்களில் இடறியது ஒரு சிறு கல்.
கைகளிலிருந்த ஃபைல்லோடு கீழே விழுந்தவள் “யூ பிட்ச்!” பல்லை கடித்தபடி காரைப் பார்த்து கத்தினாள்.
ஆனால் அந்தக் கார் இவளது வார்த்தைகளைக் கேட்க முடியாதபடி எப்போதோ மருத்துவமனையை விட்டு வெளியேறி இருந்தது.
“ஆடிக்கார் வெச்சு இருந்தா ரோட்லே ஆடிக்கிட்டே போலாம்னு நினைச்சுட்டான் போல, கிறுக்குப் பையன்!” என கோபமாய் முணுமுணுத்துக் கொண்டே எழ முயற்சித்தவளை நோக்கி ஆதரவாய் நீண்டது ஒரு கரம்.
நிமிர்ந்துப் பார்த்தாள். எதிரில் ட்ரிம் செய்யப்பட்ட முகத்துடனும் அளவான சிரிப்புடனும் ஒருவன்.
வயது இருபத்தைந்திலிருந்து முப்பதுக்குள் தான் இருக்குமென சுருக்கம் விழாத அவன் கண்கள் சொன்னது.
“கல் தவறி கீழே விழுந்துட்டிங்களா? பார்த்து வந்து இருக்கக்கூடாது” கேள்வியோடு மான்யாவிற்கு கரம் கொடுத்தான்.
எழுந்து நின்றவளோ தன் கை கால்களை உதறிக் கொண்டே, “நான் பார்த்து தான் வந்தேன். ஆனால் ஒரு குருட்டு கார்காரன் தான் பார்க்காம வந்து இப்படி பண்ணிட்டான்” என்றாள் புகார் குரலோடு.
அவள் பதிலை சிறுபுன்னகையால் அங்கீகரித்தவன், கீழே சிதறி கிடந்த பேப்பரை எடுப்பதற்காக குனிந்த போது ‘மான்யா சுந்தர். ஜெனரல் சர்ஜன்(இன்டெர்ன்)’ என்ற பெயர் கண்ணில் பட்டது.
அதைக் கண்டு அவன் விழிகள் சுருங்கி விரிய, “சோ யூ ஆர் தட் நியூ இன்டெர்ன்?” என்றான் நெற்றியில் விழுந்த புருவ முடிச்சோடு.
அவனது கேள்விக்கு ‘ஆம்’ என்ற தலையாட்டலைக் கொடுத்தாள்.
“நீங்க இங்கே ஒன்பது மணிக்கு இருந்து இருக்கணும். பட், பதினைஞ்சு நிமிஷம் லேட்” என்றான் குற்றம் சுமத்தும் பாவனையில்.
அப்போது தான் எதிரில் இருந்தவனின் சட்டையை உற்று கவனித்தாள். அதில் ‘விஷ்வக் ராம். ஜெனரல் சர்ஜன், கேஸ்ட்ரோ இன்டென்ஸ்டினல் சர்ஜன்’ என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த பெயரைக் கண்டதும் அவசர அவசரமாக தன்னை சரி செய்து கொண்டவளின் முகத்திலோ மெல்லிய பதற்றத்தின் அரும்பல்.
“நான் எட்டரைக்கே ஹாஸ்பிட்டலுக்கு வந்துட்டேன். பட்…” என இவள் இழுக்க
அவன், “பட்?” என்றான் கூர்மையாக.
பூங்காவைக் கண்டாலே தனக்கு சுற்றுப்புறமும் நேரங்காலமும் மறந்து போய்விடும் என்ற காரணத்தை எப்படி சொல்ல முடியும் அவளால்.
ஆகவே அந்த கேள்வியின் முன் மௌனத்தைப் பிடித்து நின்றாள்.
“நம்ம மெடிக்கல் ஃபீல்டுல டைம் இஸ் மோஸ்ட் இம்பார்டெண்ட் திங், அதை முதலிலே புரிஞ்சுக்கோங்க. நீங்க தவறவிட்ட பதினைஞ்சு நிமிஷத்தாலே உங்களுக்கு சீனியரா அசைன் பண்ணியிருந்த டாக்டரை மீட் பண்ண மிஸ் பண்ணிட்டிங்க!” என்று வறுத்தெடுக்க துவங்கிவிட்டான்.
‘ஆஹா! பதினைஞ்சு நிமிஷம் லேட்டா வந்ததுக்கு, இப்படி ஹாஸ்பிட்டெல் முன்னாடியே வெச்சு கிழிக்கிறாரே? வாசலுக்குள்ள காலை வெக்கிறதுக்கு முன்னாடியே இப்படினா, உள்ளே நுழைஞ்சா இனி என்னென்னலாம் நடக்கக் காத்துக்கிட்டு இருக்கோ!’ என அவள் ஆயாசமாய் நினைத்து வருத்தமாய் பெருமூச்சுவிட, அவளைப் பார்த்து அவன் முகம் சற்று இளகியது.
“டோன்ட் ரிப்பீட் திஸ் அகெய்ன். கம் வித் மீ!” என்று அழுத்த குரலில் கூறி உள்ளே அழைத்து சென்றவன், அதன் பிறகு அவளிடம் இலகுவாகவே நடந்து கொண்டான்.
“சிட் மிஸ். மான்யா சுந்தர். ஐ’யாம் விஷ்வக். இந்த ஹாஸ்பிட்டெல்ல ஒன் ஆப் தி சீனியர் சர்ஜன்” என்று சொல்லியபடியே, மேஜையின் மீது விதவிதமான சர்ஜரி உபகரணங்களை பரப்பி வைத்துவிட்டு ஒவ்வொன்றின் பெயரையும் கேட்க அவள் எல்லாவற்றிற்கும் சரியான பதிலைக் கொடுத்தாள்.
அதில் திருப்தியடைந்தவன், “குட், யூ ஆர் பெர்ஃபெக்ட்லி ஃபிட் ஃபார் சர்ஜரி அசிஸ்டென்ட் நவ்” என்றவன், அவளை சர்ஜரி நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான்.
வாந்தியின் போதும் வயிற்றுப் போக்கின் போதும் ரத்தம் அதிகமாக வெளியேறுவதைத் தடுப்பதற்காக செய்யப்படும் இரைப்பை குடல் இரத்தப்போக்கு (கேஸ்ட்ரோ இன்டெஸ்டினல் ப்ளீடிங்) சர்ஜரி அது.
விஷ்வக் முதலில் நோயாளிக்கு செய்யப்பட்ட அப்பர் என்டோஸ்கோப்பி ரிசெல்ட்டை மான்யாவிடம் காண்பித்து, எந்த இடத்தில் சர்ஜரி செய்யப் போகிறோம் என்பதை குறிப்பிட்டு சொல்லிவிட்டு, மெல்ல சர்ஜரியில் ஈடுபட அவன் செய்வதையே உற்றுக் கவனித்துக் கொண்டு மனதில் குறித்துக் கொண்டாள்.
அவன் முழுமையாக சர்ஜரி முடித்துவிட்டு தையல் போடத்துவங்கினான். அவன் கையில் சர்ஜிக்கல் சிஸரை கொடுத்தவன், “கட்” என்று சொல்ல இவள் அவன் சொன்னபடியே கச்சிதமாக செய்து முடித்தாள்.
சர்ஜரி வெற்றிகரமாக முடிந்த நிம்மதி அவன் முகத்தில் வெகுவாக விரவிக் கிடந்தது.
“நர்ஸ், இவங்க பிபி அன்ட் ஹார்ட் பீட்டை தொடர்ந்து மானிட்டர் பண்ணுங்க. எனி எமெர்ஜென்சி கால் மீ!” என்றவன் மான்யாவைத் திரும்பி கண்ணசைத்தான். அவளும் புரிந்துக் கொண்டு அவனுடன் நடந்தாள்.
“நீங்க இந்த சர்ஜெரியிலே என்னென்னலாம் நோட் பண்ணீங்க?” ரத்த உறை பொதிந்த க்ளவுஸ்ஸை கழற்றியபடியே கேட்டான்.
“சார்!” என்ற முன்னுரையோடு ஆரம்பித்தவளை கைநீட்டி தடுத்தவன், “நோ சார். கால் மீ விஷ்வக்” என்றான்.
அவள் சிறு புன்னையுடன், “விஷ்வக், முதலிலே அப்பர் என்டோஸ்கோப்பி பண்ணி இரத்தம் வர இடத்தை கண்டுபிடிக்கணும். க்ளிப் யூஸ் பண்ணி ப்ளட் வெஸ்ஸெலை ஃபர்ஸ்ட் தடுக்கணும். அப்புறம்…” என அவள் வரிசையாக செய்ய வேண்டியதை மருத்துவ குறியீட்டில் சொல்ல, காலையில் அவள் மீதிருந்த கசப்பு விலகி கொஞ்சம் கொஞ்சமாக நன்மதிப்பு கூடியது அவனுக்கு.
“குட் மான்யா, யூ ஆர் குட் அப்செர்வர்!” என்றவனின் பாராட்டில் மலர்ந்தாள்.
அதன் பிறகு விஷ்வக் அன்று செய்த எல்லா சர்ஜரியிலும் மான்யா அவனது வலதுகையாக மாறினாள்.
தேனீ போல சுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டிருந்தவளின் பலம் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக கரைய இரவு ஏழு மணிக்கு பலம் மொத்தமாக வடிந்துவிட்டது.
சோர்வுடன் இருக்கையில் பொத்தென விழுந்தவளை நோக்கி தண்ணீரை நகர்த்தியவன் “முதல் நாளுக்கே இவ்வளவு டயர்ட் ஆனா எப்படி? இனி போகப் போகதான் நமக்கு வேலையே இருக்கு” என்றான் புன்னகையுடன்.
“இவ்வளவு பெரிய ஹால்பிட்டெல்ல நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் இனி வேலையா? ஒரு நியூ இன்டெர்னை பயமுறுத்தாத ட்ரை பண்ணாதீங்க விஷ்வக்?” அவள் உதட்டில் புன்னகை கசிவு.
“ஐ’யாம் சீரியஸ் மான்யா! ஒரு சர்ஜன் மெட்டர்னிட்டி லீவ்வுக்கு இன்னும் இரண்டு நாளிலே போயிடுவாங்க. நம்ம மோஸ்ட் சீனியர் சர்ஜென் இரண்டு வாரம் கழிச்சுதான் வருவாங்க. ஹாஸ்பிட்டெல் டீனும் இப்போ இங்கே இல்லை. சோ, அதுவரை ஃபர்ஸ்ட் ஷிஃப்ட் சர்ஜரி பொறுப்பு நம்மளோடது தான்” என சொல்ல மான்யாவின் முகத்தில் சோர்வுக்கு பதில் ஆர்வமே மின்னியது.
“வாவ் சூப்பர்! அப்போ நான் என்னோட கேரீயரோட ஸ்டார்டிங்லயே நிறைய புதுப்புது விஷயங்களை எக்ஸ்ப்ளோர் பண்ணலாம்” அவளிடம் ஆர்வம் எட்டிப் பார்த்தது.
“நீ பயப்படுவேனு எதிர்பார்த்தேன், ஆனால் சின்னகுழந்தை மாதிரி எக்ஸைட்மேன்ட் ஆகுற? ஐ’யாம் சப்ரைஸ்டு!” என்றவன், “ஷேல் ஐ ட்ராப்?” என்றபடி எழுந்து நின்றான்.
“யா ஷ்யுர்!” என்று எழுந்துக் கொண்டவளின் மனதில் தயக்கத்தின் விரிசலே இல்லை.
காலையில் தான், முதன்முறையாக விஸ்வக்கை சந்தித்து இருந்தாலும் ஏதோ நீண்டநாள் பழகியதைப் போன்ற உணர்வு அவளுக்குள்.
அவனுடன் இணைந்து பணியாற்றும் போது அவளுக்குள் இருக்கும் பயம், பதற்றம் எல்லாம் விலகி ஒரு பாதுகாப்பு அரணுக்குள் இருப்பதைப் போல் தோன்றியது. அப்படி தோன்றியதும் பொய் இல்லை என்பதை கடந்து சென்ற அந்த பதிமூன்று நாட்களில் தெளிவாக புரிந்துக் கொண்டாள்.
அவளுக்கு விஷ்வக் நல்ல நண்பனாகவும் ஆசானாகவும் மாறியிருந்தான். சர்ஜரியின் எல்லா நுணுக்கங்களையும் இத்தியாதிகளையும் கொஞ்சமும் சலிப்பு இல்லாமல் விளக்கியவனை எண்ணி அவள் பலமுறை வியந்ததுண்டு.
அதே போலதான் இப்போது நடந்துக் கொண்டிருக்கும் கோலான் கேன்சர் சர்ஜரியை விளக்கியபடியே செய்து கொண்டிருந்தவனை கண்டு வியந்து நின்றாள்.
அந்த நேரம் பார்த்து அவசர அவசரமாக கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே ஒரு நர்ஸ் நுழைந்தார். அவரைக் கண்டிப்பான பார்வையைப் பார்த்தவன் “சர்ஜரி நடக்கும் போது உள்ளே வரக்கூடாதுனு தெரியாதா நர்ஸ்?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டே.
“சார் கொஞ்சம் அர்ஜென்ட். அதான், வர வேண்டியதா போச்சு. இரைப்பை குடல் இரத்தப் போக்கோட அட்மிட் ஆகியிருந்தவருக்கு நாளைக்கு சர்ஜரி பண்ண டேட் ஃபிக்ஸ் பண்ணி இருந்தோம். ஆனால் இப்போ ப்ளட் ப்ரெஷர் அம்பதுக்கும் கீழே வந்துடுச்சு. ஹார்ட் பீட் ரொம்ப ரேண்டமா, உயிருக்கு ஆபத்தான நிலையிலே இருக்கார்” பதட்டத்துடன் சொல்ல விஷ்வக்கிடம் ஒருநொடி ஸ்தம்பிப்பு.
இப்போது சர்ஜனாக விஷ்வக் மட்டுமே அங்கிருந்தான். இந்த சர்ஜரியை முடித்துவிட்டு வருவதற்குள் அந்த பேஷன்ட் இறந்துவிடும் அபாயம் இருக்கிறது. என்ன செய்வது என்று திகைத்து நின்றவனின் பார்வை மான்யாவின் மீது படிந்தது.
“யூ டூ தட் சர்ஜரி?” என்றான் தீர்க்கமாக.
“வாட்!” என்றவளின் குரலிலே அத்தனை அதிர்வு.
“உன்னோட மெடிக்கல் கேரீயர்லே நீ பார்த்த முதல் சர்ஜெரியை கண்டிப்பா மறந்து இருக்கமாட்டே. யூ கேன் டூ இட்!” என்றான் செய்து கொண்டிருந்த சர்ஜரியை தொடர்ந்து கொண்டே.
அவளிடத்தில் அசைவு இல்லை!
தன்னால் முடியுமா என்ற கேள்வி அவளை கயிற்றால் கட்டிப் போட்ட நேரம் “நீ இங்கே தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் அங்கே ஒரு உயிரைக் காப்பாத்துறதுக்கான வாய்ப்பு குறையும்” என்றவனின் வார்த்தை அவளது தயக்க கயிற்றை அவிழ்த்தது.
வேகமாக நர்ஸை நோக்கித் திரும்பியவள், “என்டோஸ்கோபி ரிசல்ட்ஸ் எடுத்துட்டு வாங்க” என்றபடி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் சென்ற திசையையே ஒருமுறை தீர்க்கமாக பார்த்த விஸ்வக் மீண்டும் சர்ஜரியில் ஆழ்ந்துவிட்டான்.
உள்ளே வந்த மான்யாவுக்கு கைகளில் லேசாக நடுக்கம் பரவுவதைப் போல இருந்தது.
“யூ கேன் டூ இட் மான்யா!” என கைகளை இறுக்கமாக மூடிக் கொண்டு அந்த நோயாளியின் முன்பு வந்தாள்.
பிபி படுவேகமாக குறைந்துக் கொண்டு வந்திருந்தைப் பார்த்த மான்யா நர்ஸிடமிருந்து, “அப்பர் என்டோஸோகோப்பி ரிசல்ட்டை கொடுங்க” என்று கேட்டு வாங்கி எங்கே இரத்தக்கசிவு என்பதைப் பார்த்துவிட்டு சர்ஜிக்கல் கத்தியை கையில் எடுத்தாள்.
கூடவே இருந்த இன்னொரு நர்ஸ், “மேம் ஹார்ட் பீட் ஃபாஸ்டா இறங்குது” எனச் சொல்ல, வேகவேகமாக சர்ஜரி செய்யத் துவங்கிய நேரம் எதிர்பாராதவிதமாக அதற்கு பக்கத்திலிருந்த இன்னொரு இடத்திலிருந்து ரத்தம் பீய்ச்சியது.
அருவி போல கொட்டிய ரத்தம் முழுக்க மான்யாவின் முகத்தில் சிதற அவளிடம் ஸ்தம்பிப்பு. இப்படி ஒரு இரத்த ஊற்றைப் பார்த்திராதவள் செயலற்று நின்றுவிட, அருகிலிருந்த நர்ஸோ “மிஸ் மான்யா, மிஸ் மான்யா!” என்று கத்தினாள்.
ஆனால் அவளிடம் அசைவே இல்லை.
நின்ற சிலையாக மாறிய மான்யாவை பார்த்த நர்ஸிற்கு விஷ்வக்கிடம் சொல்வதே சரியெனப்பட நொடியும் தாமதிக்காமல் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
அதே நேரத்தில் அந்த பக்கமாக உள்ளே வந்துக் கொண்டிருந்த சீனியர் சர்ஜனைப் பார்த்தும் நம்பிக்கை வெளிச்சம்.
“டாக்டர் உள்ளே நடக்கிற சர்ஜரியிலே ஒரு ப்ராப்ளம். எக்ஸெஸ் ப்ளீட் ஆக ஆரம்பிச்சுடுச்சு. உங்க ஹெல்ப் வேண்டும்” என்றாள் வேகமாக.
“விஷ்வக் இருந்துமா ப்ராப்ளம்?” ஆச்சர்யமாய் உள்ளே நுழைந்தவனை நோக்கி,
“இந்த சர்ஜரி விஷ்வக் பண்ணல. நியூவா ஜாயின் பண்ண இன்டெர்ன் பண்றாங்க” என்று நர்ஸ் சொல்ல அவன் முகத்தில் அப்படியொரு மாற்றம்.
கோபமாக பல்லைக் கடித்தவன், “வாட் நான்சென்ஸ். ஒரு இன்டெர்னை எப்படி எந்த சீனியர் சர்ஜெனும் இல்லாம ஆப்பரேட் பண்ண அலோவ் பண்ணுவீங்க?” என்று கேட்டபடி வந்தவன் அங்கே முகத்தில் வழிந்த உதிரத்தோடு நின்று கொண்டிருந்த மான்யாவை கோபமாய் ஒரு பார்வைப் பார்த்தான்.
“இவரோட பாஸ்ட் மெடிக்கல் ஹிஸ்டெரி எனக்கு இப்பவே வேணும்” என்று நர்ஸிடம் சொன்னவன்,
மான்யாவைப் பார்த்து, “எங்கே ப்ளீட் ஆகுது? எதை வெச்சு இப்போ கன்ட்ரோல் பண்ணீங்க?” என்றான் கேள்வியாக.
“எனக்கு தெரியல. என்னாலே சரியா பார்க்க முடியல” என்றவளது பதிலைக் கேட்டு அவன் முகம் இறுகியது.
“ஆர் யூ மேட்?” என்றான் எரிச்சல் கலந்த குரலில்.
இரத்தக்கசிவை நிறுத்த முடியாமல் திணறி கொண்டிருந்தவளைப் பார்த்தபடியே வேகமாக கையுறையை அணிந்தவனின் முன்பு நர்ஸ் வேகமாக வந்து அந்த பேஷன்ட்டின் ஃபைலை நீட்டினாள்.
அதைப் படித்தவனது முகமோ ரௌத்திரம் ஆனது.
“வாட் எ ப்ளெண்டர் மிஸ்டேக்? ஆல்ரெடி அப்பென்டிக்ஸ் ஆப்பரேட் பண்ண இடத்திலே கத்தி வெச்சுருக்க. அதான், இவருக்கு ப்ளீடிங் அதிகமாகிடுச்சு. சர்ஜரி பண்ண வரதுக்கு முன்னாடி பேஷன்ட்டோட பாஸ்ட் மெடிக்கல் ஹிஸ்டரி படிக்கணும்ன்ற பேசிக் நாலேஜ் கூட இல்லையா? கெட் லாஸ்ட் ஃப்ரம் ஹியர். ஐ வில் ஹேண்டில் திஸ் சர்ஜரி” என்றவனின் வார்த்தைகளைக் கேட்டு அடிபட்டுப் போனாள் இவள்.
அதைவிட தன்னால் ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதை எண்ணி அவளுக்குள் ஆறா துயரம். சர்ஜரி அறையை விட்டு வெளியே வந்தவளின் கைகளோ தன்னை மீறி நடுங்கியது.
முகத்தில் திட்டாக காய்ந்த ரத்தத்தை கூட சுத்தம் செய்யாமல் ஸ்தம்பித்துப் போய் அமர்ந்துவிட்டாள்.
கேன்சர் சர்ஜரியை முடித்துவிட்டு வெளியே வந்த விஷ்வக்கின் கண் விட்டத்திற்குள் விழுந்தது கலங்கிப் போயிருந்த மான்யாவின் முகம்.
வேகமாய் அவளருகே வந்தவன், “என்னாச்சு மான்யா?” என உலுக்கிக் கேட்க அவளிடம் பதிலே இல்லை, உறைந்துப் போய் இருந்தாள்.
“சர்ஜரி என்னாச்சு, ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க?” என்று கேட்டபடி கண்ணாடி ஜன்னல் வழியே உள் அறையை எட்டிப் பார்க்க அங்கிருந்தவனை கண்டு நிம்மதியாக பெருமூச்சுவிட்டான்.
“நம்ம சீனியர் வந்தாச்சு. இனி அவர் எல்லாமே பார்த்துப்பார். போ, போய் முதலிலே இரத்தம் படிஞ்ச முகத்தைக் கழுவு மான்யா!” அவளது தோளை உலுக்கினான்.
அதில் ப்ரக்ஜை கலைந்தவள் கண்ணீருடன் திரும்பி விஷ்வக்கைப் பார்த்தாள்.
“விஷ்வக், நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். என்னாலே ஒரு உயிர் போகப் போகுது. அவ்வளவு ரத்தம் கீழே வீணா சிந்திடுச்சு. என்னாலேயே என்னை மன்னிக்க முடியாது” கதறியபடி அவன் கைகளை பற்றியவளை எவ்வளவோ சமாதானம் செய்து தேற்றப் பார்த்தான். ஆனால் முடியவில்லை.
அந்த சர்ஜரி அறையிலிருந்து கை உறையை கழற்றியபடியே வெளியே வந்தான் அவன். நடையில் அப்படி ஒரு கம்பீரம். முகத்தில் அத்தனை அழுத்தம். எதிரிலிருந்தவனைக் கண்டதும் தன்னிச்சையாக எழும்பி நின்றது மான்யாவின் கால்கள்.
“சீனியர், சர்ஜரி சக்ஸஸா?” என கேட்ட விஷ்வக்கை சட்டை செய்யாமல் அவனின் பார்வையோ மான்யாவின் மீதே பதிந்திருந்தது.
“நீங்க இந்த ஹாஸ்பிட்டல்ல ஒரு இன்டெர்னா தான் ஜாயின் பண்ணியிருக்கீங்கன்றது ஞாபகம் இருக்கா? யார் உங்களுக்கு சர்ஜரி பண்ண அதிகாரம் கொடுத்தது?” என அவன் கேட்க மான்யாவிடம் பெரும் மௌனம்.
“சீனியர் நான்தான்…” என விஷ்வக் பேச வர அவனைக் கை நீட்டி தடுத்தவன்
“யார் சொல்லியிருந்தாலும் வந்த இரண்டே வாரத்துலே எப்படி ஒரு மேஜர் சர்ஜரி செய்ய நீங்க துணியலாம்? ஹாஸ்பிட்டெல் ரூல்ஸ் படிச்சு பார்த்துட்டு தானே நீங்க சைன் பண்ணிங்க. அப்புறம் எப்படி இப்படி பண்ணலாம்?” எனக் கேட்க மான்யாவிடம் பதிலில்லை. மௌனக்குடையைப் பிடித்து நின்றிருந்தாள்.
“ஹே இன்டெர்ன்! உன் இடம் எதுனு உனக்கு முதலிலே தெரியனும். இப்படி ஒரு பேஷன்ட்டோட உயிரோட விளையாடுறே ஒரு இன்டெர்ன் இனி இந்த ஹாஸ்பிட்டெல்க்கு வேண்டாம். யூ மே கோ நவ்!” என்றான் தீர்க்கமாக.
அந்த வார்த்தைகளைக் கேட்ட விஷ்வக், “ஷ்யாம் சித்தார்த்!” என்றான் அதிர்வாக.
இத்தனை வருடங்களாக ஷ்யாம் சித்தார்த்தை அருகிலிருந்துப் பார்த்தவன் விஷ்வக்.
அவன் அத்தனை எளிதில் வார்த்தைகளை விடமாட்டான். அப்படி சொல்லிவிட்டால் அந்த வார்த்தைகளை கடவுளே வந்து சொன்னாலும் மாற்றமாட்டான்.
அடுத்து என்ன செய்வது என்று விஷ்வக்கிற்கு புரியவில்லை. தான் எடுத்த கணநேர முடிவால் மான்யாவின் வாழ்க்கை முடிந்துவிடுமோ அவனை அச்ச மேகம் சூழ்ந்தது.
மான்யாவோ தன் மருத்துவ பயணம் துவங்காமலேயே முடிந்துவிடுமோ என்ற பதற்றத்தோடு ஷ்யாம் சித்தார்த்தைப் பார்த்தாள்.
ஆனால் ஷ்யாம் சித்த அசையவில்லை. அவன் உள்ளத்தில் துளி கூட பரிதாபம் எழவில்லை.
“ஹலோ மிஸ். இனிமேல் நீ இங்கே இன்டெர்னா வொர்க் பண்ண முடியாது, கிளம்பலாம். இன்னும் இரண்டு நாளிலே ப்ளாக் மார்க் போட்ட உன் சர்டிஃபிகேட் வாங்க மட்டும் இந்த ஹாஸ்பிட்டலுக்குள்ளே நுழைஞ்சா போதும். யூ மே கோ நவ்!” என்று வாசல்புறம் நோக்கி கை நீட்ட, எதுவும் பேசாமல் மௌனமாய் அவன் காட்டிய திசையை வெறித்தாள் மான்யா.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆசை ஆசையாக மருத்துவ உலகில் கால் வைத்தவளின் பாதம் இப்போது வருத்தத்துடன் வெளியே பதிந்தது.
தன்னுடைய மருத்துவ பயணத்தின் தொடக்கமும் இறுதியும் இந்த இடம் தானா என நினைத்தவளின் கண்களில் உருண்டு திரண்டது கண்ணீர்.
மீண்டும் மான்யாவை வரவேற்குமா அந்த மதுரா மருத்துவமனை?