உனக்காக ஏதும் செய்வேன் – 16

உனக்காக ஏதும் செய்வேன் – 16
அத்தியாயம் – 16
அன்று காலையிலிருந்து தன்னை பார்த்து விலகி செல்லும் மனைவியைக் கண்டு சூர்யாவிற்கு சிரிப்பாக இருந்தது.
என்னதான் தன்னிடம் சரிக்கு சரியாக வாயாடிக்கொண்டு, சண்டையிட்டு கொண்டிருந்தாலும், தன் ஒரு உணர்வுபூர்வமான தீண்டலுக்கே உருகி விடுவாள் என்பதை அவன் அறிவான்.
அதுபோல அவள் தன்னை மறந்து நிற்கும் சமயங்களிலும், கன்னங்கள் சிவந்து வெட்கப்பட்டு நிற்கும் சமயமும், அவள் முகத்தை அத்தனை ரசனையாக பார்த்து வைப்பான்.
ஆனால் சமாதானம் செய்வதற்காக சொல்லியதை பிடித்துக்கொண்டு விலகி செல்கிறாளே!
‘சும்மா சொன்னதுக்கே இவ்ளோ வெட்கப்படுறா, இவள வெச்சி எப்படி குடும்பம் நடத்தி புள்ளைய பெக்க? ரொம்ப கஷ்டம் தாண்டா உன் நிலமை.’ என பெருமூச்சு விட்டவன்,
‘வெக்கப்பட்டு நம்மள ஒரு வழி பண்ணாம விடமாட்டா போல’ என நினைத்துக்கொண்டான்.
நேற்று அவள் செய்கையை ரசித்தவனுக்கு இன்று, தானே அவள் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டோமோ எனவும் தோன்றியது.
அவர்கள் எடுத்த முடிவும், மேலும் அவர்களின் தற்போதைய பொருளாதார சூழலும், அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிப்பது மற்றும் குழந்தை பற்றி யோசிப்பதை தள்ளி போடுவதற்கு முக்கிய காரணங்கள்.
‘முன்பு எடுத்த முடிவென்ன, நேற்று பேசியபின் நடந்து கொண்டிருப்பதென்ன?’ என நினைத்தவன் அவளிடம் பேச வர, அவனைக் கண்டு வேகமாக அந்த பக்கம் நகர்ந்தவளை கை பிடித்து நிறுத்தியவன் முறைத்து பார்த்தான்.
“எதுக்குடி இப்படி இருக்க?”
“…”
“நார்மல்லா இரு.”
“…”
“இங்க பாரு நான் நேத்து சும்மா சொன்னேன்.” என்றவன்,
உடனே, “அதுக்குன்னு எப்போவும் சும்மா சொல்லமாட்டேன்.” எனக்கூற, மீண்டும் நேற்றுபோல அவனை பார்த்தாள்.
“ஐ மீன்… நமக்குனு குழந்தைங்க… நம்மள மாதிரி… அவங்கள அன்பா பாத்துக்கணும். அது எல்லாம் கண்டிப்பா உண்டு.” என கண்களில் அன்பு பொங்க கூறியவனை, கண்சிமிட்டாமல் பார்த்தாள்.
சட்டென ‘என்ன பேசவந்துட்டு என்ன பேசிட்டிருக்கோம்?’ என நினைத்தவன்,
“நான் என்ன சொல்ல வந்தேன்னா… நமக்குன்னு பேபிஸ் கண்டிப்பா வரும். அப்போ பாத்துக்கலாம். கொஞ்ச நாள் அப்பறோம். முதல்ல நீ இப்படி பாக்கிறத நிறுத்து.” என்றவன்,
“உன் அண்ணன் முதல்ல உன்னை அத்தையாக்கட்டும்” என முனகினான்.
“சாதாரணமா இரு. அதை விட்டுட்டு என்னை கண்டா ஓடுற?” என கடிந்தவன்,
“உன்னை எப்படி பழையபடி மாத்தணும்னு எனக்கு தெரியும். நீ சாதாரணமா இரு… அப்போ தான் உனக்கு போறவழியில இருக்க கடையில பானிபூரி வாங்கி தருவேன். இப்படியே இருந்த உனக்கு வாங்கித் தர மாட்டேன்.” எனக் கூறிவிட்டு நகர்ந்தான்.
‘பேச்சை மாத்த என்ன கூறிவிட்டு போகிறான். என்னை சோத்துமூட்டை என நினைப்பதை மட்டும் விடமாட்டாரே’ என நினைத்தாலும், அவன் முதலில் பேசியதை கேட்டதில் சற்று தெளிவு பிறக்க, கொஞ்சம் இயல்பானாள்.
“எனக்கு எவ்ளோக்கு பானிபூரி வாங்கி தருவீங்க?” என கேட்டுக்கொண்டு அவன் பின் ஓட, அவளை திரும்பி புன்னகையாக பார்த்தான்.
******
‘தனக்கு நாளை பிறந்தநாள் என அவருக்கு நியாபகம் இருக்குமா?’
‘அவருக்கு பொண்டாட்டியே இப்போதான் ஞாபகத்துல இருக்க மாதிரி நடந்துக்கறாரு. இதுல எங்க இருந்து இதுலாம் நியாபகம் இருக்க போகுது!’
‘நமக்கே ப்ரீத்தி சொல்லும்போது தான நியாபகம் வந்துச்சு.’
‘பேசாம நாமளே சொல்லிடலாமா?’
‘ச்சு… நாமளே சொல்லி அத அவர் தெரிஞ்சிகிட்டா நல்லாவா இருக்கும்?’
‘எப்படியும் நாளைக்கு கோவிலுக்கு போவோம் அவரே அப்போ தெரிஞ்சிப்பாரு.’
என பலவாறு யோசித்தவள், மனமே இல்லாமல் அவன் ‘கோவில்ல வந்து தெரிஞ்சிக்கிட்டும்’ என முடிவெடுத்தாள்.
எடுத்தது மட்டுமே, அவனை பார்க்கும்போது சொல்லிவிடலாமா என ஆசையாக இருந்தது.
திருமணம் முடிந்த பின் வரும் முதல் பிறந்தநாள். தனக்கு என கணவன் எதும் பரிசு கொடுக்க வேண்டும். அன்று தன்னுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்றெல்லாம் மனம் ஆசை கொண்டது.
ஆனால் ‘அவருக்கு நாளை தன் பிறந்தநாள் என தெரியுமா?’ என்ற அளவில் தான் நிதர்சனம் இருந்தது.
இந்த யோசனைகளுக்கு காரணமானவனோ, மனதுக்குள் ‘நம்ம நெனச்ச மாதிரி அவளுக்கு அந்த சர்ப்ரைஸ் கொடுக்கறது… அந்த பிளான் சைல்டிஷ்ஷா இருக்கோ?’
இதே கேள்விதான் அவன் அதனை யோசித்ததிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கிறான்.
ஆனாலும் அதனை விட மனம் வரவில்லை. அன்று கோவிலுக்கு எப்படியும் செல்வாள் என தெரியும். அவளுடன் சென்று வரவேண்டும் என நினைத்திருந்தான்.
அதன்பின் அவளை வெளியே கூட்டி செல்லவும் நினைத்தான். கல்யாணத்திற்கு பிறகு அவர்கள் வெளியே சென்றதே இல்லை. அன்று நண்பன் திருமணத்திற்கு சென்றது மட்டுமே ஒட்டுகாக வெளியே சென்றது.
அவளிடம் சில விஷயங்களை மனம் விட்டு பேசவேண்டும் எனவும் முடிவெடுத்திருந்தான்.
இதெல்லாம் அவனுக்கு சிறுபிள்ளை தனமாக தோன்றவில்லை.
அந்த செயின்னை பற்றி கூட அவன் எதுவும் நினைக்கவில்லை.
ஆனால் பன்னிரண்டு மணிக்கு அவளை எழுப்பி பரிசாக *******, கொடுத்தால் என்ன நினைப்பாள் என்பதிலேயே மனம் உலன்றது.
அவள் அதைக் கண்டு நிச்சயமாக மகிழ்ச்சியடைவாள் என்பது அவனுக்கு தெரியும். ஆனாலும் ‘வேறெதும் காஸ்ட்லியான கிப்ட் எதிர்பார்ப்பளோ?’ எனவும் தோன்றியது.
அதற்குமேல் அவனுக்கு உண்மையில் யோசிக்கத் தெரியவில்லை. அவனை பொறுத்தவரை இதை அவன் செய்வதே ஆச்சர்யம். இப்படியெல்லாம் அவன் பெரிதாக யாருக்காகவும் பார்த்து பார்த்து யோசித்ததில்லை. அப்படியிருக்க நடப்பது நடக்கட்டும் என நினைத்தவன் குளிக்க சென்றுவிட்டான்.
அவனிடம் யார் கூற, தன் மனைவி, தான் கொடுக்க போகும் கியூட் சர்ப்ரைஸை பார்த்துவிட்டு பதிலுக்கு அவனுக்கு இன்ப அதிர்ச்சி தர போகிறாளென!
ஆனால் இதையெல்லாம் அவன் முகத்திலும் நடவடிக்கையிலும் கொஞ்சமும் காட்டிக் கொள்ளவில்லை. அதனால் தான் அவள் அகத்தியனுக்கு தெரியவில்லை என நினைத்தாள்.
******
ப்ரீத்திக்கு அத்தனை ஆத்திரம் வந்தது.
‘ச்சே… என்ன பார்வை இது? பொறுக்கி’ என மனதுக்குள் அங்கு நின்றுகொண்டு அநாகரீகமாக பார்த்துக் கொண்டிருந்தவனை நல்ல பல வார்த்தைகளை கூறி அர்ச்சித்தாள்.
மதிய உணவு இடைவெளியில், சாப்பிட்ட பின் வகுப்பிற்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் அவளும், வகுப்பு தோழிகளும்.
அப்பொழுதுதான் ஒருவன் பார்வை தன்மீது தப்பாக படிவதை கவனிக்க, அவளுக்கு அத்தனை கோபம் வந்தது.
‘அவன் கண்களை நோண்டிவிட்டால் என்ன?’ என்றுதான் தோன்றியது.
அவனை பற்றி பலரும் அறிவர். ரவி இந்த கல்லூரியில் கேடுகெட்டவர்களுக்கு என ஒரு ஹெட்டை தேர்ந்துதெடுத்தால் அது அவனாகத்தான் இருக்கும். அந்த அளவு அவன் பெயர்பெற்றவன். பலருக்கு அவனை பிடிக்காது.
வேறு டிப்பார்ட்மென்ட் முதுகலை மாணவன். ஆனால் படிக்க காலேஜ் வருகிறான் என யாரும் நம்ப மாட்டார்கள். எப்படியோ திருட்டுத்தனம் செய்து அந்த டிகிரியை முடிக்க வந்துள்ளான். இன்னும் சில காரணமும் உண்டு.
‘அவனும் அவன் பார்வையும் த்தூ’ என நினைத்துக்கொண்டு, தன் தோழிகளிடம் கூறியவள் சட்டென உள்ளே செல்ல, அவர்களும் அவளை தொடர்ந்து சென்றுவிட்டனர்.
அவன் அடுத்து யாரும் கண்ணில் படுவார்களா என தேடியவாரு நகர, அவனின் அப்போதைய கேர்ள் பிரண்ட் வரவும், அவளை இழுத்துக்கொண்டு அந்த பக்கமிருந்த ஆள்நடமாட்டம் இல்லாத உபயயோகப்படுத்தப்படாத ஒரு அறைக்குள் சென்றுவிட்டான்.
இதுவெல்லாம் சில நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த நேரம் ஆசிரியர்களும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதால், இந்த விஷயம் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
ஆனால் மாணவர்களுக்கு தெரிகிறதே!
பெரும்பாலோனார் நாம் தான் சொன்னோம் என தெரிந்தால் பிரச்சனை வரும் என பயந்தார்கள்.
அவனும் பெரிய இடத்து பையன். ஆதலாலே எதற்கு வம்பு என யோசித்தனர்.
ஆனால் இதையறிந்த ப்ரீத்தி அதை சூர்யாவிடம் கூறிவிட நேற்றே முடிவு செய்திருந்தாள்.
என்னதான் அவன் மீது பாசமிருந்த போதும், அவனுக்காக பிறரிடம் பேசிய போதும், எல்லாத்தையும் சரி செய்ய நினைத்த போதும் முன்பு போல அவனிடம் சட்டென பேசமுடியவில்லை.
அவனின் சில முரண்பட்ட செயல்கலே அதற்கு காரணம். பாசத்தை வைத்துக்கொண்டு எதற்கு விலகி செல்ல வேண்டும்? தள்ளி நிற்க வேண்டும்? இப்போதல்ல இதற்கு முன்புமே! அதற்கு அவள் அம்மா காரணமாக இருக்கலாம் என யூகித்தாலும் என்ன நடந்தது என அவளுக்கு தெளிவாக தெரியவில்லை.
என்ன காரணம் சொன்னாலும் அவளாலும் அவனின் சில செயல்களை ஏற்க முடியவில்லை. அதனாலே பேசமுடியாமல் தடுமாறினாள்.
ஆனால் இந்த விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும் என புரிய, சீக்கிரம் சொல்லவேண்டும் என நினைத்துக் கொண்டு வகுப்பில் உட்கார்ந்திருந்தாள்.
இதனால் ஒரு பெரிய பிரச்சனை வரும் என அறியாமல் போனாள்!
இன்று அவன் பார்த்த பார்வை அவளுக்கு அருவெறுப்பை கொடுக்க அவளுக்கு இன்னுமே கடுப்பாகத்தான் இருந்தாள்.
சட்டென ஆதியின் கண்ணியமான பார்வை நியாபகம் வர, உடனே இதழோரம் ஒரு அழகிய சிரிப்புடன் அவன் நினைவுக்குத் தாவினாள்.
பலமுறை அழைத்துவிட்டான் போனை எடுத்த பாடில்லை. மெசேஜ்க்கு ரிப்ளையும் செய்யவில்லை.
அன்று சண்டை போட்ட பின், யோசித்து பார்க்கும்போது தான் உரிமையாக அவனிடம் கோபம் கொண்டுள்ளோம் என புரிந்தது.
இனி இதுபோல நடக்க விடக்கூடாது என முடிவு செய்திருந்தாள்.
கோபமிருந்தாலும் மனம் அவனை ரசிக்கிறதே!
தன் தோழி அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவள் அவர்களுடன் வாயடிக்க ஆரம்பித்தாள்.
தொடரும்…