உனக்காக ஏதும் செய்வேன் – 19.2

உனக்காக ஏதும் செய்வேன் – 19.2
அத்தியாயம் – 19.2
வேதாச்சலம் – மங்கம்மாள் அவர்களின் புதல்வர்கள் முறையே விஸ்வநாதன் மற்றும் வாசுதேவன்.
விவசாயமே அவர்களின் பிரதான தொழிலாக இருந்தது. ஆத்மார்த்தமாக அதனை செய்து வந்தனர்.
மிகவும் பெரிய செல்வந்தர்கள் என கூற முடியாவிடினும், அளவுக்கு கொஞ்சம் அதிகமான பொருளாதார பலத்துடன் ஊரில் மதிப்பும், மரியாதையுமாக வலம் வருபவர்கள்.
விஸ்வநாதனிற்கு விவசாயம் பிடித்து போக நன்றாக தன்னை அதனுள் ஈடுத்திக் கொண்டார். தந்தையை விட சில நேக்கான விஷயம் செய்து சம்பாதித்தார்.
ஆனால் வாசுதேவனிற்கு விவசாயத்தை விட வெளியூர் சென்று படித்த படிப்பிற்கு வேலை செய்வதே எண்ணமாக இருக்க, அண்ணன் மூலம் பெற்றோரிடம் பேசி சும்மதம் வாங்கி வெளியூர் சென்றுவிட்டார்.
அவருக்கும் விவசாயம் பிடிக்கும் தான். ஆனால் அதைவிட அவர் நினைத்த அலுவலக வேலையும் நகர வாழ்க்கையும் அதிகம் பிடித்தது.
விஸ்வநாதன் மிகவும் பொறுப்பான, பொறுமையான மனிதர். யாரையும் எளிதாக கடிந்து கூட பேசமாட்டார்.
இவரும் அண்ணன் மீது அதிக மதிப்பும் பாசமும் கொண்டவர். கோபம் என வந்தால் வார்த்தையை விடுவது, பின் வருந்துவது இவர் குணம்!
பெற்றோரோ தன் இளைய மகன் செயலில் அதிருப்தி தான் கொண்டனர். ஆனாலும் பெரியவன் துணை இருப்பதால், அப்போதைக்கு எதுவும் கூறவில்லை.
நாட்கள் அதன் போக்கில் செல்ல அவர்கள் கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை காதலித்தார் விஸ்வநாதன்.
இந்த விஷயம் வீட்டிற்கு தெரியவர, அவரின் அன்னையும் தந்தையும் அதனை முழுதாக எதிர்த்தனர்.
அவர்களுக்கு ஏனோ… ஏழைப்பெண்ணை மகனுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பம் இல்லை.
அவர் மனம் மாற்ற எவ்வளவு முயன்றும் முடியாமல் போக, “அவள கல்யாணம் செஞ்சினா சொத்துல நையா பைசா தரமாட்டேன்” என மிரட்ட,
“சொத்துக்காகலாம் என் வாழ்க்கைய விட்டு கொடுக்க முடியாதுப்பா. எனக்கு அவதான் முக்கியம். ஆனா என்னைக்கும் உங்க ஆசிர்வாதம் எங்க கூட இருக்கும்னு நம்புறேன்” எனக்கூறி வீட்டை விட்டு வெளியேறி தன் அன்பு காதலியை மணம் முடித்து வேறு ஊர் சென்றுவிட்டார்.
இதனை எதிர்பார்க்காதவர்கள் மனம் கலங்கினாலும் உடனே வெளியூரில் இருந்த மகனை அழைத்தனர்.
விஷயம் அறிந்தவர் அண்ணன் மீது வருத்தம் கொண்ட போதும், அவர்கள் பெற்றோரை தேற்ற அவர்கள் வற்புறுத்தலில் அங்கேயே தங்கி விவசாயம் பார்த்தார்.
வருடங்கள் நகர்ந்தது. அந்த அளவிற்கு அவருக்கு அந்த விஷயம் ஒத்து வரவில்லை.
நட்டம் ஏற்பட, ஊரில் உள்ளவர்கள் பேச்சு, மகன் விட்டு சென்றது என சோகத்தில் இருந்தவர்கள் இளைய மகனிற்கு கற்பகம் என்ற பெண்ணை மனம் முடித்து அவர் இஷ்டப்படி வெளியூர் சென்று வேலை பார்க்க கூறினர்.
பெரும்பாலான சொத்துக்கள் அவருடைய உழைப்பு என்பதால் பெரிய மகன் மீது உள்ள கோபத்தில் வாசு மறுத்தும் அனைத்து சொத்தையும் அவர் பெயருக்கே எழுதிவைத்தனர். இதில் கற்பகத்திற்கு ஏக மகிழ்ச்சியே.
காலம் செல்ல… அவர்களுக்கு கீர்த்தி, ப்ரீத்தி என்ற மகள்கள் பிறந்தனர்.
வெளியே சென்ற விஸ்வநாதன் மற்றும் தேவகி முதலில் மிக கஷ்டபட்டனர். ஆனாலும் உறுதி கொண்டு உழைக்க, அவர்கள் வாழ்வு இனிமையாகவே நகர்ந்தது. அவர்களின் ஒரே மகன் தான் சூர்யா பிரகாஷ்.
சிறுவயது முதலே அன்பான பெற்றோர், எளிமையான வாழ்க்கை என அழகாகவே சூர்யாவின் நாட்கள் சென்றது.
அவன் பெற்றோரிடம் இருந்த அந்த காதல் பிணைப்பு புரியாவிட்டாலும் அதைக் கண்டே வளர்ந்ததாலோ என்னவோ அது அவன் மனதில் ஆழ பதிந்து போனது!
விசு, வாசு பெற்றோரோ… மகன் மேல் கோபம் கொண்ட போதும் அவன் சென்ற வருத்தம், அவர்கள் விரும்பிய விவசாயம் முன்பு செய்ய இயலாமல் இருப்பது, தனிமை என வருடங்கள் வேதனையாக நகர ஒருத்தர்க்குப் பின் ஒருத்தராக ஒரே நாளில் மரணிக்க, கிராமத்தில் பலரும் வருத்தம் கொண்டனர்.
அன்று மனைவி மகனுடன் வந்த அண்ணனை வாசுதேவன் கவனிக்கும் நிலையில் இல்லை. அதேசமயம் அவருக்குமே வருத்தம் இருந்ததே.
அனைவரும் அவரை பழி சொல்ல அவர் மனமும் குற்றவுணர்வு கொண்டது. தான் மீண்டும் வந்து ‘அவர்களிடம் பேசி பார்த்திருக்க வேண்டுமோ? மன்னிப்பு வேண்டியிருக்க வேண்டுமோ?’ என காலம் கடந்து யோசித்தார்.
பெரியவன் இருக்கும்போதே இளையவனை கொல்லி வைக்க பலர் சொல்ல, சற்று தெளிந்த வாசு அண்ணனுக்காக மறுத்து பேசி வாதம் செய்தார்.
அவரை அடக்கிய விஸ்வநாதன், அவரையே கொல்லி வைக்க செய்து அனைத்தையும் முடித்து விட்டு வீடு திரும்பும் போது, “கொஞ்ச நாள் சூர்யாவை எங்ககூட வச்சிருக்கோம்” என கேட்கவும், சரி என்றவர்கள், “யாரையும் தொல்லை பண்ண கூடாது. சமத்தாக இருக்கனும்” என அவனிடம் கூறிவிட்டு கிளம்பினர். அவர்கள் இருவர் மனமுமே மிகுந்த வருத்தத்தில் இருந்தது.
கற்பகத்திற்க்கோ எங்கு இவர் அண்ணன் பாசம் என்று சொத்தை அவருக்கும் பங்கு கொடுக்க நினைப்பாரோ என்றே உழன்றது. மேலும் ஏனோ அவருக்கு சூர்யாவை பிடிக்காமல் போனது.
அந்த காலத்தில் ஆண் குழந்தை பிறந்தால் தானே பெரிதாக பேசுவார்கள். ஆதலால் தனக்கு இரண்டும் பெண்கள், அவர்களுக்கு ஒற்றை பிள்ளை அதுவும் ஆண் பிள்ளையென பொறாமை கொண்டார். தானே ஒரு பெண். இப்படி நினைக்கக் கூடாது என்பது கூட அவருக்கு தெரியவில்லை!
அவன் தங்கைகளோடு பேசும் போது கீர்த்தியை கொஞ்சம் மிரட்ட அவள் முதலில் அண்ணன் என பேசினாலும் பின் கொஞ்சம் ஒதுங்கி கொண்டாள்.
ஆனால் ப்ரீத்தி அன்னை பேச்சு அந்த பிஞ்சு வயதிலும் காதில் போட்டுக் கொள்ளாமல் அண்ணனுடன் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
கீர்த்தி மீதும் அதே பாசம், பேச ஆசை இருந்த போதும் அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை போல என மனதுக்குள் நினைத்தான்.
அதேசமயம் தன் சித்திக்கு கண்டிப்பாக தன்னை பிடிக்கவில்லை என அவர் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் திட்டும்போது புரிய, சில நாட்களில் அங்கிருந்து தன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு பிரதானமாக இருந்தது.
ஆனால் அவன் அப்போது அறியவில்லை தான் அங்குதான் சில பல வருடங்கள் இருக்கப் போகிறோம் என!
வாசு, “இன்னும் சில நாள் இருந்துட்டு போடா. நானே கூட்டிட்டு போய் விடுறேன்” என சமாதானம் செய்தும் அவன் அதை மறுத்து அழுது பிரள, அண்ணனிடம் தெரிவிக்கவும் அவர்கள் விரைந்து கிளம்பினர்.
தன் அன்னை, தந்தையை ஆவலாகக் காணவும், அவர்களுடன் சென்றுவிடவும் அவன் காத்திருக்க, கிட்டியதோ அவர்கள் வந்த பேருந்து விபத்து என்ற செய்தியே.
அடித்து பிடித்து அனைவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனை செல்ல, தேவகி விபத்து நடந்த இடத்திலேயே இறந்துவிட்டார் என்றும், விஸ்வநாதன் தன் இறுதி நொடிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்றும் அறிந்த வாசுதேவன் மிகவும் வருத்தம் கொண்டார்.
தனக்கிருக்கும் ஒரு நிலம் பற்றி கூறியவர் மகனை வளர்க்க பயன்படுத்திக்க சொல்ல, அவரை கடிந்து கொண்டவர், “அவன் எனக்கும் புள்ள தான் ண்ணே நான் பாத்துக்கறேன்” என அழுக,
அவர் பேச்சில் நம்பிக்கை பெற்றவர் அருகில் அழுது கொண்டிருக்கும் மகனின் தலையில் நீவிகொடுத்து விட்டு விண்ணுலகை அடைந்தார்.
சூர்யாவிற்கு முதலில் என்ன நடந்தது என்றே புரியவில்லை. அவனுக்கு புரிய அதை ஏற்று கொள்ளவே இயலவில்லை. அழுது அழுது காய்ச்சலே வந்து விட்டது.
தன்னை அழைத்து செல்ல வந்தவர்கள், இனி எப்போதும் தன்னை அழைத்து செல்லப் போவதில்லை என மெது மெதுவாக புரிய, அவர்கள் அன்று கூறியது போல யாருக்கும் தொல்லை கொடுக்காமல் இருக்க முடிவு செய்தான்.
சூர்யாவிற்கு காய்ச்சல் வந்த போதே, அவனை திட்ட, சித்தியை எண்ணியவன், அழுவதைக் குறைத்தான்.
காலம் யாருக்கும் காத்திருக்காமல் செல்ல, அவன் குடும்பத்தில் அனைவரிடமும் அன்பாக இருந்தாலும் மனதுக்குள் ஒரு ஒதுக்கம் இருந்து கொண்டே இருந்தது.
அவன் சித்தியின் பேச்சால் அந்த ஒதுக்கம் ஏற்பட்டிருக்கலாம்! அவன் மனம் தனக்கு என யாரும் இல்லை என்றே நினைத்தது.
கீர்த்திக்கும் தன்னை பிடிக்காது என நினைப்பு இருந்ததால் அதன் பின் அவளிடம் அதிகம் பேச முயன்றதில்லை. அந்த வீட்டுக்கு அவன் பேச்சு அனைத்தும் ப்ரீத்தியிடம் மட்டுமே அதிகம் இருக்கும்.
அவளுக்கும் அண்ணன் என்றால் கொள்ளை பிரியம். யாருக்குத்தான் அண்ணன் என்றால் பிடிக்காது!
கற்பகம் திட்டுவதால் அவன் அவளிடம் விலகி இருக்க முயன்றும் கூட அதனை எளிதாக தகர்த்து விடுவாள் அவள் குறும்பு பேச்சால். எவ்வளவோ முயன்றும் ஒரு கட்டத்தில் சலித்து போன கற்பகம் விட்டுவிட்டார்.
“அவன்கிட்ட பேசுன நாக்குல சூடு வச்சிருவேன்டி” என மிரட்ட,
“ம்ம்… அம்மா வைக்குறது தான் வைக்குற கைல, கால்ல எங்காச்சும் வைம்மா. நாக்குல வெச்சா எப்படி சாப்புடுறதாம்?” என கேள்வி கேட்டு அவர் கோபத்தை ஏற்றிவிட்டு முறைப்பை பெற்று கொண்டாள்.
இன்னொரு முறை திட்டும்போது,
“அவன்கிட்ட பேசுனினா கால உடைச்சுடுவேன்” என,
“ஐ… சூப்பர் ம்மா… அப்படி நடந்தா ஸ்கூல்க்கு ஒரு மாசம் லீவு போட்டுடலாம்ல. டெஸ்ட், கிளாஸ்னு அந்த தொல்லை கொஞ்ச நாள் இல்லாம சந்தோஷமா இருப்பேன். என்ன கால் தான் வலிக்கும். ஒன்னு பண்ணுங்க லைட்டா உடைங்க; நான் ஹெவியா பெர்ஃபார்ம்மன்ஸ் பண்ணி அதிக நாள் லீவு போட்டுறேன்” என சிரிக்கவும் அவளை என்ன செய்ய என உண்மையாகவே கற்பகத்திற்கு புரிபடவில்லை. மேலும் திட்டி விட்டு கடந்துவிட்டார்.
அவர் இத்தனை பேசாமலே திட்டாமலே அவர் மூத்த பெண் அவனிடம் விலகி இருக்கிறாள் என பெருமை பட்டுக்கொள்வார்.
கீர்த்திக்கு உண்மையிலேயே சூர்யாவை நிரம்ப பிடிக்கும். ஆனால் அவள் அன்னையையும் பிடிக்கும். அவள் பேசினால் அவனுக்கும் சேர்த்து திட்டு கிடைக்கும் என்பதால் கொஞ்சம் தள்ளியிருக்க, காலப்போக்கில் அது பழக்கமாகிப் போனது.
சூர்யா – ப்ரீத்தி குறும்பான பேச்சைக் காணும் போது அவளுக்கு ஏக்கமாகவே இருக்கும். ஆனாலும் அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல், பார்த்து ரசித்து விட்டு சென்று விடுவாள்.
ஒருமுறை அவன் கோவில் சென்ற போது மூவருக்கும் வாங்கி வந்த ஒரு செம்பு மோதிரமும், கருப்பு நிற சாமிக் கயிரும் வருடங்கள் பல சென்றும் இன்றும் அவள் கையில் உள்ளது!
சூர்யாவிடம் ஆதி சிறுவயதிலிருந்தே நன்றாக பேசுவான். ஆனாலும் அவன் பெற்றோருக்கு (கற்பகம் அண்ணன்) தன்னை பிடிக்காது எனவும் அறிவான்.
பன்னிரண்டாம் வகுப்பை முடித்து விட்டு கல்லூரி செல்லும் சமயம் வர, அவன் சித்தி திட்டல் அதிகமானது.
இந்த திட்டல்கள் எல்லாம் வாசதேவன் வேலை சென்றுவிட்ட பின்னே நிகழும். அதை தன் சித்தப்பாவிடம் கூறவும் மாட்டான். ப்ரீத்தி கூற முற்ப்பட்டாலும் தடுத்து விடுவான்.
சில சமயம் அவள் கூறிவிடும்போது, அவர் மனைவியை அழைத்துக் கண்டிக்க, “அவன என் புள்ள மாறிதான வளக்குறேன். எனக்கு திட்ட உரிமை இல்லையா?” என நீலிக்கண்ணீர் வடித்து கணவனை சமாளித்துவிடுவார். சூர்யாவும் ஒரு கசப்பான புன்னகையோடு அதனைக் கடந்து விடுவான்.
ஏற்கனவே, வீட்டில் “வெட்டியாக உண்ணுகிறான்” என வசை பாடியவர், அவன் கல்லூரி சேர்க்கை என வரும்போது, “அடுத்தவங்க காசுல எப்படி தான் எல்லாத்தையும் பண்ணிக்க தோணுதோ?” என திட்ட,
சூர்யா, “படிப்பே வேண்டாம். தான் வேலைக்கு செல்கிறேன்” என அவரிடம் கூறினான். அவனை கண்டித்தவர் என்ன சொல்லியும் அவன் சமாதானம் ஆகவில்லை.
ஓரளவிற்கு அவன் மனம் அவருக்கு புரிந்தது. என்னதான் அவன் வீட்டில் அனைவரிடமும் பாசமாக இருந்தாலும் இன்னுமே ஒரு ஒதுக்கதோடு தான் இருக்கிறான் என அறிவார்.
அவன் படிப்புக்காக எத்தனை பேசியும் அவன் மறுப்பதைக் கண்டவர், வேறு வழியில்லாமல் அவர் அண்ணன் அவனுக்கென விட்டுச் சென்ற சொத்து பற்றி கூறினார்.
அது விவசாய நிலம் என்ற போதும், இப்போது அது சிட்டியாக மாறி வரும் இடத்தில் இருந்ததால், நல்ல விலைக்கு போகும், அதை விற்றால் நல்ல தொகை வரும்.
எனவே, “அதை எனக்கு கொடுத்ததா நினைச்சி நான் தரும் பணத்தில் படி, நீ படித்து வேலைக்கு போன பின் அத கொடு போதும்” என, அவனும் சம்மதித்து படித்தான்.
என்னதான் மனைவி செய்யும் காரியம், பேச்சு எதும் அவர் அறியாமல் போனாலும், கற்பத்திற்கு சொத்து மீது ஆசை உண்டு என அறிவார்.
எனவே இத்தனை நாள் அவனை வளர்த்ததற்கு தாமே இதை வைத்துக் கொள்ளலாம் என அவர் எதும் கூறி விடுவார் என்றே அதனை மறைத்தார்.
அவன் பதினெட்டு வயது வந்த பின், பேச்சை பத்திரமாக எழுதி கொண்டனர்; சூர்யா வேண்டுகோள் படி.
அவன் பள்ளியில் எடுத்த மதிப்பெண்ணால் கிடைத்த சலுகையாலும், ஸ்காலர்ஷிப்பாலும் தான் அவன் கல்லூரி பீஸ் கட்டுவது போல கூறிவிட அதற்கு மேல் அவன் படிப்பு பற்றி கற்பகம் எதுவும் கூற வில்லை.
அவனும் பார்ட் டைம்மாக வேலைக்கு சென்று அந்த காசில் காய்கறி வாங்கி, முடிந்த அளவு அவன் உழைப்பில் சாப்பிடவேண்டும் என்பதை செயல்படுத்தினான்.
அவருக்கு அந்த காசும் மிச்சம் என கற்பகம் நினைக்க, வாசு அவனை தடுத்தும், “ஒரு எஸ்பிரியென்ஸ் சித்தப்பா” என்று அவர் வாயை அடைத்தான்.
யுஜி மற்றும் பிஜி அந்த ஊரிலிருக்கும் கல்லூரியில் முடித்தவன் வெளியே ஹாஸ்டலில் பி.எட் சேர்ந்தான்.
குடும்பத்தில் அனைவரையும் பிடித்தாலும், ப்ரீத்தியிடம் மட்டும் அவனுக்கு மனதளவில் நெருக்கம் உண்டு. ஆனாலும் அவனை அன்பாக பார்த்துக்கொள்ள, அவனுக்கு ஆறுதல் சொல்ல, அவனை தோளில் சாய்த்துக் கொள்ள யாருமில்லையென்ற நினைப்பு இருந்து கொண்டே தான் இருந்தது.
அதை உடைக்க ஒருத்தி வருகிறாள். அவளுக்காக அனைத்தையும் விடுத்து சில முடிவு எடுப்போம், அவள் வந்த பின் தன்னை பார்த்துக்கொள்ள உரிமையாய் சண்டையிட யாருமில்லை என்ற நினைப்பே எழாத வகையில் தன் வாழ்க்கை இருக்கும் என அப்போது அவனுக்கு தெரியவில்லை.
தொடரும்…