உனக்காக ஏதும் செய்வேன்

உனக்காக ஏதும் செய்வேன்
அத்தியாயம் – 13
மண்டபத்திலிருந்து வந்த பிறகு கீர்த்தியின் முகம் பல்வேறு சிந்தனைகளுக்குட்பட்டு ஒருவித அமைதியை பிரதிபலித்தது.
அவனுக்குமே மனதில் பல சிந்தனைகள் இருந்தது. ஆனாலும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
உணர்வுகளை எளிதாக கையாண்டு எப்போதும் போலவே முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டான்.
‘தவறு செய்தவர்கள்தான் வருந்த வேண்டும். தான் ஏன் வருந்த வேண்டும்?’ என நினைத்தாலும், அவன் மனதிலும் வருத்தம் இருந்தது என்பது உண்மையே.
‘நாம் போட்ட திட்டம் என்ன இப்போது நடப்பது என்ன? அங்கு சென்று வந்தபின் அவள் மனநிலை இப்படி மாறிவிட்டதே. இப்போது தான் நினைத்தது போல நடந்து கொண்டாலும் அதனை கவனிப்பாளா?’ என்றெல்லாம் மனதில் கேள்வியெழுந்தது.
‘அவள் என்னென்ன நினச்சு வருத்தமா இருக்கா, நாம இப்படி யோசிச்சிட்டு இருக்கோம்.’ என தன்னை கடிந்து கொண்டவன், தலையை துவட்டியவாறே அவர்கள் அறையின் குளியலறையிலிருந்து வெளியே வந்தான்.
அதைக்கூட உணராது கட்டிலில் உட்கார்ந்து அவர்களின் கல்யாண ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி.
நேற்றிருந்தது போல் இப்போது அவள் முகத்தில் வேதனையில்லை. அது அவனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
ஆனால் நேற்றைய அவள் வேதனை ‘தேவைதானா? இதற்கு அவன் தகுதியானவனா?’ என மனம் அவனை சாடமலும் இல்லை.
ஆனால் அவன் ஏன் அவனை மட்டுமே தவறு செய்தவனாக நினைக்கிறான்?
இரு கைகள் தட்டினால்தான் ஓசை வருமென்று தெரியவில்லையா?
தெரிந்தும் தெரியாதாது போல நடிக்கிறனா என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்!
அதற்குமேல் மனைவியின் அமைதியைக் காணப்பிடிக்காதவன், “ம்ம்க்கும்…” என குரலெழுப்ப, அதில் நினைவுக்கு வந்தவள் சட்டென கையில் இருந்ததை மூடி வைத்துவிட்டு அவனை பார்த்ததும் இயல்பாக இருக்க முயன்றாள்.
‘மனதுக்குள் இத்தனை வருத்தம் இருந்தும் தனக்கு பிடிக்காதென அத்தனையும் மறைக்கிறாளே!’ என அவளைக் கண்டு அவனுக்கு உருகிவிட்டது.
அதேசமயம் எப்படி அவளை இயல்புக்கு கொண்டுவருவதென்று அவனுக்குத் தெரியவில்லை.
‘தான் அவளை அந்தளவு கட்டுக்குள் வைத்து கொடுமை செய்கிறோமோ?’ எனவும் வருத்தமாகவும் இருந்தது.
அவனாலும் பெரிதாக அவளிடம் உரிமை எடுத்துக்கொள்ள இயலவில்லை.
என்னதான் அவளிடம் சற்று இயல்பாக இருந்தாலும், அவர்களிடையே ஒரு இடைவெளி இருந்தது நன்றாகவே புரிந்தது.
சில நொடி யோசனைக்குப் பின் தான் நினைத்த விஷயம் சிலவற்றை செய்துதான் இந்த இடைவெளியை குறைக்க முடியும் என புரிய, ‘தான் போட்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.’ என முடிவு செய்தான்.
திட்டத்தில் பாதியை விட்டுவிட்டு அவளிடம், “நேரமாகிருச்சு சாப்பாடு எடுத்து வை.” என்று கூற, தலையசைத்தவள் வெளியே சென்றுவிட, அவனும் தனது சீருடைய அணிந்துகொண்டு வெளியே வந்தான்.
அவன் கண்கள் அக்கறையாக அன்பாக அவளை மட்டுமே பார்த்தது. ஆனால் இன்றும் அவள் அதனை கவனிக்கவில்லை.
‘இவள் சோகம் நியாயப்படி கோபத்தை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தனக்கு வருத்தத்தை அல்லவா கொடுக்கிறது!’ என்பதை விந்தையாக நினைத்தான்.
அன்று இட்லி, உருளைக்கிழங்கு சாம்பார், சட்னி செய்திருந்தாள். அதை மெதுவாக உண்ண ஆரம்பித்தான்.
அவள் கவனம் இங்கு இல்லையென உணர்ந்தவன், “நல்லாருக்கு.” என, முதலில் என்ன கூறுகிறானென்று புரியாமல் விழித்தாள்.
அவன் மறுபடியும், “டிபன் நல்லாருக்குனு சொன்னேன்.” என இயல்பாகவும் சற்று மென்மையாக கூறினான்.
அவன் கூறிய வார்த்தைகள், அவள் சிந்தனைகளை தற்சமயம் பின்தள்ளியது.
அவன் தந்தையும் அகத்தியன் கூறியதை கேட்டு, இயல்பாக இருப்பதுபோல கட்டிக்கொண்டாலும், ‘நீ நடந்துடா மகனே.’ என மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.
இந்த இரு மாதத்தில் முதல்முறையாக சாப்பாடு பற்றி கூறுகிறான்.
ஆசையாசையாக சமைத்ததை ஒருமுறை சாப்பிட்டுவிட்டு ‘நல்லாருக்குன்னு சொல்லுவாரா?’ என எத்தனையோ முறை எதிர்பார்த்துள்ளாள்.
அப்படியிருக்க இன்று கணவன் கூறியதும் அதனைக் கேட்டு இனிமையான புன்னகையை சிந்தியவள், அவனுக்கு பரிமாறுவதை கவனிக்கலானாள்.
அவனுக்கு அவள் புன்னகை போதுமானதாக இருந்தது. அதேசமயம் ஆச்சர்யமாகவும் இருந்தது.
ஏனெனில்,
‘தான் இதை சொல்வதில் அவளுக்கு அப்படி என்ன சந்தோஷம்?
அவள் கவனத்தை மாற்றதானே கூறினேன்.
ஆனால் உடனே மகிழ்வாக புன்னகைக்கிறாளே?
அப்போ இதையும் இத்தன நாளா எதிர்பார்திருப்பாளோ?
நாம தான் வழக்கம் போல சாப்பிட்டு கிளம்பிடறோம்.
இனிமே தினமும் சாப்பாடு எப்படி இருக்குனு ஒரு வார்த்தை சொல்லணும்.
நமக்காக தான டேஸ்டா சமைச்சி தரா.’ என்றெல்லாம் நினைத்தவன் அவளை பார்த்துக்கொண்டே உணவை விழுங்கினான்.
வயிறாரா உண்டு முடித்தவனுக்கு, அவள் தன் பக்கத்தில் நின்றிருக்கும்போது ஒரு எண்ணம் தோன்றியது.
ஆனால் அது இப்போதைக்கு சற்று அதிகப்படியாகத் தோன்ற, தான் முதலில் தன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் பிறகு பார்க்கலாமென முடிவு செய்தவன் அவளிடமும், தந்தையிடமும் கூறிவிட்டு வேலைக்கு கிளம்பிவிட்டான்.
அவளும் மனதில் பல யோசனைகள் இருந்தாலும், மகிழ்ச்சியுடன் அவனை வழியனுப்பி வைத்தாள்.
»»»»
சூர்யா, மகாவிற்கு உடம்பு சரியில்லையென்பதால் அவளை விடுப்பு எடுக்க சொல்ல, “எனக்கு சரியாகிடுச்சுங்க. நான்…” என அவள் மறுக்க வர, அவன் முறைப்பில் அமைதியாகிப் போனாள்.
என்னதான் அவளிடம் அக்கறையாக பேசினாலும், அவனுடைய மனதில் கோபமும் இருந்து கொண்டேதான் இருந்தது.
அதனால் அவனிடம் மல்லுக்கட்ட முடியாதென புரிந்தவள் சமத்தாக சரி என்பதுபோல தலையசைத்தாள்.
அவள் முகபாவனையை பார்த்தவன், “நல்லா ரெஸ்ட் எடு. எதும் மறுபடி அப்படியிருந்தா உடனே எனக்கு போன் பண்ணு.”
அவள் மீண்டும் பவ்வியமாக தலையை ஆட்ட, அவள் முகத்தில் நடனமாடி கொண்டிருந்த சில கூந்தல் கற்றையை மென்மையாக ஒதுக்கியவன்,
“மூஞ்ச இப்படி வச்சிக்காதடி சகிக்கல.” எனவும் தன் அப்பாவித்தனத்தை தூக்கி தூரபோட்டவள் அவனை முறைத்து பார்த்தாள்.
“ம்ம் இதுதான் என் மகா.” என அவள் கன்னம் பற்றி செல்லம் கொஞ்ச, தன் மனநிலையை மாற்ற வம்பிழுக்கிறான் என புரிந்து சிரித்தாள்.
“பத்திரமா இரு.” என்று கூறிவிட்டு பேருந்து நிறுத்ததை நோக்கி நடை போட்டான்.
»»»»
மெல்லிய தூறல் வானிலிருந்து பூமியை நோக்கி வந்த வண்ணம் இருந்தது.
மழைக்காலத்தின் தொடக்கம் என்பதால் இரவு பெய்த லேசான மழையின் அறிகுறியாக ஆங்காங்கே குழியில் தண்ணீரும், வீடுகள் கடைகள் சாலையில் மழை வந்ததால் வெளியே ஈரமாக இருந்தது.
பேருந்து நிறுத்தத்தை வேகமாக நெருங்கியவன் கண்களில், இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த ஒருவன் அகப்பட்டான்.
ரெயின்கோட் உடுத்தி, தலைக்கவசம் அணிந்து, தன் கையிலிருந்த போனை நோண்டிகொண்டிருந்தான்.
அவனை பார்த்ததும் தெரிந்தவர் போல தோன்றினாலும், உண்மையில் யாரென உறுதியாக தெரியாததால் அவனைத் தாண்டி செல்ல,
“மாமா..” என்ற அழைப்பின் பரீட்சியமான குரலில் நின்றான்.
சூர்யா திரும்பி புருவம் சுருக்கி யாரென்பது போல பார்க்க, தன்னை அடையாளம் தெரியாமல் முழிக்கிறாரென புரிந்தது.
‘யாரென்று முன்பே பார்த்திருந்தால் தன் அழைப்புக்கு நின்றிருப்பாரா?’ என தோன்றாமலுமில்லை.
மெதுவாக தன் தலைக்கவசத்தை கழட்ட, அவன் முகம் பார்த்ததும் ‘நீதானா எதிர்பார்த்தேன்.’ என்பதுபோல ஒரு பாவனையை வெளிப்படுத்தியவன், மீண்டும் திரும்பிச் சென்றான்.
‘நாம எவ்ளோ நேரம் இங்க காத்துட்டு இருக்கோம் இவர்ட்ட பேச… அவ பாக்கற மாதிரி எவ்ளோ அசால்ட்டா பாக்கறாரு.’
‘நம்மாளுதான் அப்படினு நெனச்சா, அவ வீட்டாளுங்களும் அப்படியே இருக்காங்களே!’ என நினைத்தவன் அவன் நகர்வதைக் கண்டு, கைபேசியை பாண்ட்டில் போட்டவன், விரைந்து சென்று அவன் வழிமறித்தான்.
“கண்டுக்காம போறீங்க பாத்தீங்களா மாமா? நாம என்ன அப்படியா பழகிருக்கோம்! ரொம்ப நாள் கழிச்சு நம்ம மச்சானை பாக்குறமே ஒரு நாலு வார்த்தை பேசுவோம்னு இல்லை.”
(அத்தை பையன் என்பதால் அந்த முறை சொன்னானா என்றால் கண்டிப்பாக இல்லை. எதிர்காலத்தில் தங்கை கணவன் அல்லவா!)
“ஆனா நீங்க கண்டுக்காட்டியும் நான் விடமாட்டேன. எங்கிட்ட பேசிட்டுத்தான் போகணும்.” என சட்டமாகக் கூற, அவன் பேச்சை கேட்டு தலையில் அடித்துக்கொண்ட சூர்யா, மீண்டும் நகர அப்போதும் வழிமறித்தான்.
“டேய்! நவுருடா பஸ் வந்துடபோகுது. சும்மா விளையாடிகிட்டு.” என கடுப்பாக மொழிந்தான்.
“என்னது விளையாடுறான? ஏன் மாமா என்ன இன்சல்ட் பண்றீங்க? நான் எவ்ளோ பெரிய விஷயம் பேச வந்துருக்கேன். நீங்க என்னனா விளையாடுறேன்னு சொல்லறீங்க.”
“ப்ச்…”
“நீங்க என்னதான் சலிச்சிகிட்டாலும், ஒரு அஞ்சு நிமிஷம் உங்ககிட்ட பேசாம இந்த இடத்தவிட்டு நகரமாட்டேன். உங்களையும் போகவிடமாட்டேன்.” உறுதியாக கூறினான்.
“ஆதி…” என்று அழுத்தமாக ‘ஏன்டா இப்படி?’ என்பது போன்ற குரலில் அழைத்தான்.
“அப்பாடா பேர் ஞாபகம் இருக்கு. நான்கூட மறந்துருப்பீங்க சொல்லணுமோனு நெனச்சேன்.” என கிண்டலாக சொன்னாலும், ஒரு மாதிரி குரலில் கூறினான்.
அதை பொருட்படுத்தாதவனோ, “டைம் அச்சு ஆதி நான் கெளம்பனும். காலேஜ்க்கு லேட் ஆகுது. வழிவிடு.” என அதே பாட்டை மீண்டும் பாட,
“ஏன் மாமா ஏதோ ஸ்கூல் போற குழந்தை லேட் ஆகுதுனு சொல்ற மாதிரியே பேசறீங்க.” என குறும்பாக கேட்டு சிரித்தவன்,
“ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு போய்டறேன். லேட் ஆச்சுனா நானே காலேஜ்ல ட்ராப் பண்ணிடறேன்.” எனக்கூற, அவன் மறுக்க மீண்டும் மீண்டும் பேசி அவனை ஒத்துக்கொள்ள வைத்தான்.
“என்னடா பேசணும்?”
“நான் நேராவே விஷயத்துக்கு வரேன். நீங்க ஏன் மாமா அன்னைக்கு நான் அதை பண்ணலனு சொல்லல?”
‘நான் சொல்லிருந்தா மட்டும். அதும்போல சொல்ல விட்ருப்பாங்களா?’ என நினைத்தவன்,
“இப்போ இந்த கேள்வி தேவையா?”
“கண்டிப்பா.”
“டேய் போய் வேலைய பாருடா.”
“பதில் சொல்லுங்க போறேன்.” எனவும் சிறு நேரம் மௌனத்திற்கு பின்,
“அத சொன்னாதான் என் மேல நம்பிக்கை வருமாடா?அதும்போல நான் சொல்லிருந்தாலும் யாரும் நம்பிருக்கமாட்டாங்க.”
“யாரும்னு எல்லாத்தையும் சேத்தாதீங்க. கண்டிப்பா நீங்க அன்னைக்கு எதும் பேசலனாலும், அன்னைக்கு நடந்தது, சொன்னதை உங்க தங்கச்சிங்க நம்பிருக்க மாட்டாங்க. மாட்டாங்க என்ன? நம்பல. உங்களுக்கும் அது தெரியும்.” என அவன் கூற, சூர்யா எதும் பேசவில்லை.
“ஆனாலும் ஏன் இப்படி விலகி போறீங்க. ப்ரீத்தி ரொம்ப பீல் பண்றா.”
“தெரியும்…” சோர்வான குரலில் சொன்னான்.
“தெரியுமா?” என அவன் சற்று அதிர்ச்சியாக ‘அப்பறோம் ஏன்’ என்பது போல பார்க்க,
“ம்ம்… அவள் பீல் பண்ணா எனக்கு என்னடா? எனக்கு என் லைப்தான் முக்கியம்னு அன்னைக்கே சொல்லிட்டேனே. இப்போவும் அதேதான்.”
“நீங்க சொல்றதலாம் நம்புற மாதிரியா இருக்கு? உங்கள பத்தி தெரிஞ்சவங்க யாரும் நீங்க இப்படி பேசறத நம்பமாட்டாங்க.” என அவன் கூற, சூர்யாவின் உதடுகள் விரக்தியான ஒரு சிரிப்பை வெளிபடுத்தியது.
அவன் ஏன் அப்படி சிரிக்கிறான் என புரிந்தவன், “அவர் ஏதோ கோபத்துல தெரியாம வார்த்தையை விட்ருப்பாரு மாமா. அதை பெருசா எடுத்துக்காதீங்க.”
“…”
“எல்லாத்தையும் சரி பண்ணிடலாம் மாமா.” என அவன் ஆறுதலாக கூறினான்.
“எதையும் சரி பண்ண முடியாது ஆதி. சரி பண்ணவும் வேண்டாம். அந்த தப்ப நான் பண்ணலனாலும், என் மேலயும் கண்டிப்பா தப்பு இருக்கு. அத சரி பண்ண நெனச்சா தேவையில்லாத பிரச்சனைதான் வரும். இதை அப்படியே விட்டுடு. அவளையும் விட்டுட சொல்லு.” எனக்கூறினான்.
மனதுக்குள் ‘எல்லாம் சரியாகிடுவிடாதா?’ என்ற ஆசையிருந்தாலும், உண்மையில் அப்படி நடக்க எதையாவது செய்து, தங்கை வாழ்வில் மீண்டும் பிரச்சனை வர காரணமாகிவிட கூடாதென நினைத்தான்.
மேலும் இதனால் மகாவிற்கும் பிரச்சனையல்லவா?
அவளை விட்டு கொடுப்பதை விட, தானே கெட்டவனாக இருந்துவிட்டு போய்விடலாம் என்பதாலுமேதான் சூர்யா விலகி நின்றான்.
‘அவள விட்டுட சொல்லு.. ‘ என குறிப்பிட்ட ப்ரீத்தியை எண்ணிய ஆதியோ, ‘அவளாம் விடமாட்டா. தெரிஞ்சிகிட்டேன் நம்மகிட்ட சொல்றது.’ என நினைத்தான்.
“நான் கொஞ்சம் கவனமா இருந்திருந்தா இவ்ளோ பெரிய பிரச்சனை ஆகியிருக்காதில்ல.” என அவன் வருத்தமாக பேசினான்.
“இதுல உன் தப்பு எதும் இல்லடா. மத்தவங்க பண்ணதுக்கு நீ என்ன பண்ணுவ? விடு.”
“…”
“இதுலாம் ப்ரீத்திட்ட நீதான் சொன்னியா?” என கேட்க,
அவன், “ஆமா.” என்றான்.
உடனே, “அதுக்கு முன்னாடியும் அவளுக்கு உங்க மேல நம்பிக்கை இருந்துச்சு.” என வேகமாக கூறினான்.
‘அதும் தெரியும்.’ என நினைத்தவன், சிறு இடைவெளிக்கு பின், “அவகிட்ட பேச இப்போ என்னால முடியாது. அதான் அவாய்ட் பண்ணேன். நீ அவ சொன்னதாலும் வந்துருப்பனு தெரியும். அதான் உன்கிட்டவே சொல்லிட்டேன். இதை விட்ருங்க. உங்க வேலைய பாருங்க.” என்று கடைசி வாக்கியத்தை சற்று கண்டிப்போடு சொல்லியவன்,
“கிளம்புறேன்.” என்றுவிட்டு செல்ல, அவனும் சரி என்பது போல விடை கொடுத்துவிட்டு சூர்யா பேருந்தில் ஏறியதும், ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து கிளம்பினான்.
தொடரும்…