உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 06

உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 06

மதியழகனும், தேன்மொழியும் காதலிப்பதாக இது வரை யாரிடமும் ஏன் அவர்கள் இருவருக்குள்ளேயே இன்னும் பகிர்ந்து கொண்டதில்லை.

 

இந்நிலையில் இழையினியின் இந்த நேரடி கேள்வி அவனை பதில் பேச முடியாமல் திக்குமுக்காட செய்திருந்தது.

 

“மதிண்ணா! பதில் சொல்லுண்ணா எப்போ நீயும், தேன்மொழியும் கல்யாணம் பண்ணிக்க போறீங்க?” 

 

“இ..இழை நீ இப்படி எல்லாம் விளையாடாதே!”

 

“அண்ணா நான் ஒன்றும் விளையாடவில்லை உண்மையாகத் தான் கேட்கிறேன் எனக்கு தேன்மொழியை அவ பிறந்ததிலிருந்தே தெரியும் அவளோடு ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி  ஒரு பொண்ணு அவ ஒருத்தரை மனதில் நினைத்தால் எப்படி எல்லாம் இருப்பா என்பது எனக்கு நல்லாவே தெரியும்ண்ணா! நான் என் அனுபவத்தில் இருந்து தான் இது எல்லாம் சொல்லுறேன் நானும் இப்படி பல ஆசைகளை மனதிற்குள் சுமந்த ஒரு பொண்ணு தான்!”

 

“இழைம்மா இப்போ எதற்கு பழைய விடயங்களை எல்லாம் பேசிட்டு அதை விடு”

 

“சரி நான் பழைய விடயங்களை பேசல புதிய விடயத்திற்கே வர்றேன் நான் கேட்டதற்கு பதில் சொல்லு”

 

“……..” மதியழகனின் அமைதி இழையினியை சிறிது நேரம் யோசிக்க செய்யவே தற்காலிகமாக தன் கேள்வியை வேறு விதமாக அவனிடம் கேட்கத் தொடங்கினாள் அவனது தங்கை.

 

“தேன்மொழி இப்போ ஃபைனல் இயர் தானே? எப்போ அவளுக்கு இந்த படிப்பு முடியும்?”

 

“அடுத்த வாரம் ஃபைனல் எக்ஸாம் இருக்கு என்று சொன்னா”

 

“சரி தேன்மொழியோட எக்ஸாம் முடிந்து ஒரு மாதம் தான் உனக்கு டைம் அதற்கிடையில் நீங்களாகவே இந்த விடயத்தைப் பற்றி வீட்டில் பேசி கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணணும் இல்லை என்றால் நான் சரியா ஒரு மாதம் கழித்த அடுத்த நாள் அப்பாவுக்கு போன் பண்ணி இந்த விடயத்தைப் பற்றி சொல்லி மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய்ய சொல்லி விடுவேன்”

 

“இழைம்மா ப்ளீஸ்டா ஏன் இப்படி பேசுற? நான் ஒண்ணும் இதை வீட்டில் சொல்ல முடியாமல் சொல்லாமல் இல்லை இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று தான் சொல்லாமல் இருக்கேன்”

 

“அது தான் ஏன்? ஒரு பொண்ணு மனதில் ஆசையை வளர்த்து விட்டு நீ இப்படி பின் வாங்குவது சரி இல்லைண்ணா எல்லா ஆசைப்பட்ட விடயங்களையும் கண் முன்னால் கொண்டு வந்து வைத்து விட்டு திடீரென அதெல்லாம் பறித்துட்டுப் போற வலி எனக்கு நல்லாவே தெரியும் அந்த வலி இன்னொரு பொண்ணுக்கு வேண்டாம்ண்ணா நம்ம குடும்பத்துக்கு ஒரு இழையினியே போதும்! இன்னொரு இழையினி வேண்டாம்ண்ணா!” தடுமாற்றத்துடன் ஒலித்த தன் தங்கையின் குரல் கேட்டு கலங்கிப் போன மதியழகன்

 

“ஏன்டா இழைம்மா இப்படி எல்லாம் பேசுற? உனக்கு தேன்மொழி மேல் இருக்கும் அதே அக்கறை தான் எனக்கும் இருக்கு நீ தேன்மொழிக்காக இவ்வளவு தூரம் யோசிக்குற தானே? அதேமாதிரி தான் அவளும் உனக்காக யோசிப்பா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு நாங்க ஆசைப்படக் கூடாதா?”

 

“…….”

 

“சரி நான் தேன்மொழியை கல்யாணம் பண்ணுறது பற்றி இப்போவே வீட்டில் இருக்குறவங்க கிட்ட பேசுறேன் ஆனா ஒரு கன்டிஷன்!” கட்டளையாக பதிலளிக்க

 

 மறுமுனையில் இழையினி 

“கன்டிஷனா? என்ன அது?” குழப்பமாக கேட்டாள்.

 

“பெரிய கன்டிஷன் எல்லாம் இல்லை ஒரேயொரு வேண்டுகோள் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னா நீ பழைய மாதிரி இங்கே நம்ம வீட்டுக்கு வந்து இருக்கணும் பழைய அந்த கசப்பான சம்பவங்களை மறந்து உன்னை நல்ல ஒரு  வாழ்க்கைக்கு தயாராக்கி கொள்ளணும் அதோடு பழைய மாதிரி எல்லோர் கூடவும் பேசணும் பழகணும் எல்லோர் கூடவும்!” எல்லோர் கூடவும் என்ற வார்த்தையில் மதியழகன் கொடுத்த அழுத்தம் யாருக்கு என்பதை புரிந்து கொண்ட இழையினி 

 

“ஏன்ணா யாருமே என்னைப் புரிந்து கொள்ளாமல் பேசுறீங்க? எனக்கு அங்கே இருக்கும் ஒவ்வொரு நொடியும் அம்மா என்னை பற்றி நினைத்து நினைத்து வருந்தி கண்ணீரை விட்டது தான் ஞாபகம் வருது அதற்கு காரணம் யாரு என்று உனக்கும் தெரியும் அப்படி இருந்தும் நீ இப்படி பேசுறது சரி இல்லைண்ணா” வருத்தத்துடன் கூறவும் 

 

அவளது தமையன் நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டவாறே

“நீ சொல்லுறது எல்லாம் சரி தான் இழைம்மா! தாத்தா அன்னைக்கு பண்ணது ரொம்ப பெரிய தப்பு தான் அதை நாங்க எல்லோருமே சொல்லிட்டோம் அதை நினைத்து தாத்தா இன்னைக்கு வரைக்கும் தனக்குள்ளேயே வருந்திட்டு இருக்காரு அது உனக்கு தெரியுமா?”என்று கேட்டான்.

 

“எல்லாம் முடிந்த பிறகு வருந்தி என்னண்ணா பலன்? இழந்ததை எல்லாம் திரும்பி எடுக்கவா முடியும்? கண்ணாடியைக் கீழே போட்டு உடைத்து விட்டு திரும்ப ஒட்ட வைக்க முடியுமா? இல்லை ஒட்ட வைத்தால் நல்லா தான் இருக்குமா? ” இழையினி விரக்தியாக புன்னகைத்த படியே கேட்க

 

“இழந்ததை எடுக்க முடியாது தான் இழை! நீ சொன்ன மாதிரி உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்து பார்க்க நன்றாக இருக்காது தான் ஆனா அந்த விரிசல்களுக்கு மேல் அலங்காரம் பண்ணினால் முன்னாடி இருந்ததை விட அந்த கண்ணாடி இன்னமும் அழகாகி விடும் அது உனக்கு தெரியுமா?” பதிலுக்கு தன் கேள்வியால் அவளை சிந்திக்க வைத்தான் அவளது பாசமிகு அண்ணன்.

 

“இழைம்மா! நான் கண்ணாடியில் இருந்த விரிசல்களுக்கு அலங்காரம் பண்ணுவதாக சொன்னது பழையதை மறந்து புதிய விடயங்களை ஏற்றுக் கொள்ளுவதை!”

 

“………”

 

“தாத்தா அன்னைக்கு அப்படி பண்ணியதால் உனக்கு வேறு ஏதாவது பெரிய விடயம் கிடைக்க இருக்கலாம் தானே? அம்மா இறந்தது உன்னை விட, என்னை விட தாத்தாவைத் தான் இன்னைக்கு வரைக்கும் ரொம்ப பாதிக்குது அவரோட முதல் குழந்தை நம்ம அம்மா! உனக்கே நல்லா தெரியும் தாத்தாவிற்கு ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் மேல் தான் பாசம் அதிகம் அந்த பாசம் தான் உன்னோட கல்யாணத்தை அன்னைக்கு நிறுத்துவதற்கும் காரணம் அதைப் புரிந்து கொள்ளும்மா இழை!” 

 

“ஆனா அண்ணா எனக்கு கண்ணை மூடினாலே பழைய விடயங்கள் தானே திரும்பத் திரும்ப வருகிறது வெளியாட்களோட குத்தல் பேச்சு, அம்மாவோட கண்ணீர்! இதை எப்படிண்ணா நான் மறப்பேன்?” 

 

“அதற்கு காரணம் உன் மனது! நீ எப்போ அந்த விடயத்தை விட்டு கடந்து வருகிறாயோ அப்போ தான் அந்த விடயங்கள் உன்னை விட்டு போகும் ஒருவேளை உனக்காக பிறந்தவன் இந்த பையனாக இல்லாமல் இருந்து இருக்கலாம் அதனால் கூட இப்படி நடந்து இருக்கலாம் இல்லையா? அந்த கோணத்தில் நீ யோசிக்கவே இல்லையா இழைம்மா! உனக்காக பிறந்தவன் இப்போ உன்னை தேடி கூட திரியலாம் இல்லை உன்னை பார்த்து கூட இருக்கலாம் இல்லை உனக்காக காத்துக் கொண்டு கூட இருக்கலாம்”  மதியழகன் கூறிய எதுவும் பலத்த சிந்தனையோடு அமர்ந்திருந்த இழையினிக்கு முழுமையாக உள்வாங்கிக் கொள்ளப்படாமல் அப்படியே பின் தங்கி போனது.

 

நீண்ட நேரமாக இழையினியிடமிருந்து பதில் வராமல் போகவே 

“இழைம்மா!” மதியழகன் தயக்கத்துடன் அவளை அழைத்தான்.

 

“சொல்லுண்ணா!” உணர்ச்சி துடைக்கப்பட்டு ஒலித்த அவளது குரலிலேயே அவள் தற்போது என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது.

 

“நீ இந்த இரண்டு வருடங்களில் என் கூட இவ்வளவு நேரம் பேசுனது இல்லைடா! அது தான் எல்லாவற்றையும் மொத்தமாக சேர்த்து வைத்து பேசிட்டேன் அண்ணா ஏதாவது மனது நோகும் படி பேசியிருந்தால் மன்னிச்சுக்கோம்மா!” 

 

“அய்யோ! இல்லைண்ணா அப்படி எல்லாம் எதுவும் இல்லை நானும் கொஞ்சம் உங்க கூட சரியாக பேசி இருக்கணும்” இழையினியிடமிருந்து அந்த மனமாற்றமான வார்த்தைகள் கோடி சந்தோஷத்தை அள்ளி வழங்கியது போல கண்களை மூடி தன் கன்னத்தில் வழிந்த ஆனந்த கண்ணீரை துடைத்து கொண்டான் மதியழகன்.

 

“நீ நான் சொன்ன உன் கல்யாண விடயத்தை பற்றி மட்டும் இப்போதைக்கு கொஞ்சம் யோசிண்ணா நான் நாளைக்கு பேசுறேன்” அவனது பதிலை எதிர்பார்க்காமலேயே தொலைபேசி அழைப்பை நிறுத்தியவள் தன் தலையை பிடித்து கொள்ள அப்போது தான் தன் மறுகையில் இருந்த பொன் ஆதவனின் தொலைபேசி இலக்கம் எழுதப்பட்ட காகிதத்தை பார்த்தாள்.

 

“அய்யோ! இதைப் பற்றி கேட்க மறந்து விட்டேனே!” தன் தலையில் தட்டிக் கொண்டு மீண்டும் மதியழகனின் எண்களை அழுத்தியவள் 

 

“இல்லை! இல்லை! அண்ணா கிட்ட இதை பற்றி கேட்க வேண்டாம் ஒருவேளை ஆதவன் என்னைக் குழப்புவதற்காக மதி பெயரை யூஸ் பண்ணி நான் அதை சீரியஸாக எடுத்துக் கேட்க போய் அண்ணா வேறு மாதிரி ஏதாவது பண்ண போயிட்டாங்கன்னா? ஏற்கனவே அவனோட கல்யாணப் பேச்சை எடுத்ததற்கு எனக்கும் ஏதாவது பண்ணணும்னு சொல்லுறான் இல்லை! இல்லை! வேண்டாம்! அண்ணா கிட்ட கேட்க வேண்டாம் வேற யாரு கிட்ட!” அந்த இலக்கத்தை அழித்து விட்டு தன் தொலைபேசியை மீண்டும் அது இருந்த இடத்தில் வைத்து விட்டு கன்னத்தை தட்டியபடியே யோசித்து கொண்டிருந்தாள்.

 

அப்போது தான் காலையில் விஜியின் தந்தை செல்வம் ஆதவனையும், அவனது நண்பனையும் விஜயாவுக்கு தெரிந்தவர்கள் என்று கூறியது நினைவு வந்தது.

 

“அங்கிள் காலையில் விஜி தானே அவங்களை பேக்டரிக்கு அனுப்பி வைத்ததாக சொன்னாங்க அப்படின்னா விஜிக்கு ஆதவனைப் பற்றி ஏதோ ஒரு விடயம் தெரிந்து இருக்கணும் இல்லை என்றால் நேற்று அவ்வளவு தூரம் கோபப்பட்டவ இன்னைக்கு இவ்வளவு சாதாரணமாக அவங்களை அனுப்பி வைத்து இருக்க மாட்டாளே! விஜிக்கு போன் பண்ணி கேட்கலாம்” தனக்குள்ளேயே பேசிக் கொண்டு தன் தொலைபேசியை எடுத்து விஜியின் எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டவள் சுவற்றில் இருந்த கடிகாரத்தை திரும்பி பார்க்க அது பதினொரு மணியை நெருங்கி கொண்டிருந்தது.

 

“அச்சோ! பதினொரு மணி ஆகப் போகிறதா? ஒருவேளை விஜி தூங்கி இருப்பாளோ? பரவாயில்லை அவ தூக்கத்தை கலைத்தாவது இந்த குழப்பத்திற்கு பதில் கண்டுபிடிக்கணும்” என்று நினைத்தவாறே இழையினி தன் தொலைபேசியை பார்த்து கொண்டிருக்க மறுபுறம் விஜயா அப்போது தான் ஆழ்ந்த உறக்கத்தை தேடிப் பிடித்து தன் வசப்படுத்தி கொண்டு மெல்ல கண்ணயர்ந்து இருந்தாள்.

 

அவள் கண்ணயர்ந்த நேரம் சரியாக அவளது தொலைபேசி ஒலிக்க கண்களை பாதி திறந்த வண்ணம் அதை தன் கையில் எடுத்து பார்த்தவள் இழையினியின் பெயரைப் பார்த்ததும் முற்றாக துயில் கலைந்து எழுந்து அமர்ந்தாள்.

 

“அச்சோ! இழை போன் பண்ணுறாளே! என்னடா இன்னும் போனைக் காணலேயேன்னு நினைச்சேன் கால் பண்ணிட்டா! ராத்திரி பதினோரு மணி வரைக்கும் மேடம் ஆதவனைப் பற்றி தான் யோசிச்சுட்டு இருந்துருக்கா போல! இப்ப அவ கண்டிப்பா காலையில் ஆதவன் பேக்டரிக்கு வந்ததைப் பற்றி தான் கேட்கப்போறா! இப்ப நான் எப்படி சமாளிக்குறது? அந்த ஆதவன் வேற அவரு சொல்லாம எதையும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரே! என்ன செய்யுறது?” தன் கையில் இருந்த தொலைபேசியை சிறிது நேரம் பார்த்து யோசித்தவள்

 

“விஜி உன் நடிப்பு திறமையை இப்ப தான் நீ காட்டப்போற! ஆதவன் இழையோட பேசுன பிறகு எல்லாத்தையும் சொல்லி இழை காலில் விழுந்துடு இப்போதைக்கு சமாளிச்சுடு ராஜாத்தி!” தனக்குள்ளேயே கூறிக் கொண்டு 

 

தூக்கத்தில் இருப்பது போல் தன் குரலையும் சரி செய்து கொண்டு

“ஹலோ! என்ன இழை இந்த நேரத்தில போன் பண்ணிருக்க?” என்று கேட்டாள்.

 

“ஸாரி விஜி தூங்கிட்டு இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணிட்டேன் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அது தான் இந்த டைம் போன் பண்ணேன் ஒண்ணும் தப்பா எடுத்துக்க வேண்டாம்”

 

“பரவாயில்லை இழை! நீ சொல்லு என்ன விஷயம்?” 

 

“நேற்று நம்ம பார்க்கில் இரண்டு பேரைப் பார்த்தோம் இல்லையா உனக்கு அவங்களை ஞாபகம் இருக்கா?”

 

“பார்க்கில் எவ்வளவோ பேரைப் பார்த்தோம் அதில் நீ யாரை சொல்லுற?” யோசிப்பது போல பாவனை செய்து கொண்டே விஜி இழுக்க

 

மறுமுனையில் இழையினி

“எருமை! எருமை! அதற்கிடையில் மறந்துட்டியா? நேற்று நான் தெரியாமல் இடித்தேன்னு சொல்லி இரண்டு பேர் கிட்ட பிரச்சினை ஆனதே அவங்களை சொல்லுறேன்” கோபமாக கூறவும் 

 

விஜியோ தன் மனதிற்குள்

‘அய்யோ! கடவுளே! யாருன்னு கேட்டதுக்கே இப்படி ஏசுறா (திட்டுவது தான் இலங்கை பேச்சு வழக்கில் இப்படி கூறப்படும்) இதுல நானும் அவங்களுக்கு கூட்டுன்னு தெரிஞ்சா இவ சாமி ஆடிடுவாளே!’ என்று புலம்பிக் கொண்டே

 

“ஆஹ்! ஆமா! ஆமா! ஞாபகம் வந்துட்டு ஆக்சூவலி நான் உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும் அவங்க நேத்து நம்மளை பார்க்கத்தான் அங்கே வந்தாங்களாம் என் பிரண்ட் வாணி நாம அங்கே இருந்து வந்த பிறகு எனக்கு போன் பண்ணி சொன்னா அவங்க அவளுக்கு தெரிஞ்சவங்க தானாம் நான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் ஸாரிம்மா” என்று கூறினாள்.

 

“நம்மளை பார்க்கவா எதற்கு?” இழையினி இன்னமும் நம்பமுடியாமல் கேட்க மறுமுனையில் விஜி அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

“ஹலோ! விஜி!”

 

“ஆஹ்! இழை அது… அது அவங்க டீ எஸ்டேட், பேக்டரி பத்தி எல்லாம் தகவல் சேகரிக்குறாங்களாம் அவங்க எஸ்டேட்டில் விளைச்சல் குறைஞ்சுடுச்சாம் அது தான் அவங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்க மூலமா பேக்டரி நடத்துற ஆளுங்களை சந்திச்சு பேசுறாங்களாம் அதுமாதிரி தான்  நம்ம கிட்டயும் அதெல்லாம் பத்தி கேட்க வந்தாங்களாம் நேத்து ராத்திரியே இதைப் பற்றி நான் உனக்கு சொல்லி இருக்கணும் ஸாரி டா இழை! அவங்களை காலையில் பேக்டரிக்கு கூட்டிட்டு வந்து இதைப் பத்தி சொல்லலாம்னு நினைச்சேன் ஆனா அதற்குள்ள எனக்கு கொஞ்சம் சுகமில்லாம போயிடுச்சு” வாயில் வந்த காரணங்களை எல்லாம் சேர்த்து விஜயா இழையினியின் கேள்விக்கு பதில் அளிக்க அதைக் கேட்டு மறுமுனையில் இருந்தவள் இன்னமும் குழம்பிப் போனாள்.

 

‘விஜி சொல்வதைப் பார்த்தால் அவங்க பேக்டரி விடயத்தை பற்றி பேசணும்னு சொல்லி தான் என்னை சந்திக்க வந்த மாதிரி தான் இருக்கு அப்போ ஆதவனைப் பற்றி விஜிக்கு தெரியாது தான் போல!’ இழையினி இங்கே இப்படி சிந்தித்து கொண்டிருக்க 

 

மறுபுறம் விஜி

‘ஐ யம் ரியலி சாரி இழை! இப்போதைக்கு என்னால நடந்த எல்லாத்தையும் முழுசா சொல்ல முடியாது எல்லாம் சரியா நடந்து ஆதவனும், நீயும் ஒண்ணா கல்யாண மேடையில் நிற்கும் போது இதையெல்லாம் சொல்லி உன் கால்ல விழுந்துடுவேன் இப்போதைக்கு என்னை மன்னிச்சுடுடா இழை! ஆதவன் பண்ணுறது எல்லாம் உன்னோட சந்தோஷமான வாழ்க்கைக்காக தான்!’ மனதிற்குள் நினைத்துக் கொண்டே

 

 மனதினுள் சொல்வதாக நினைத்து

“ஐ யம் ஸாரி இழை!” தன்னையும் அறியாமல் சத்தமாக சொல்லி விட

 

“இதற்கு எதற்கு விஜி ஸாரி? பரவாயில்லை!” என்ற இழையினியின் கூற்றில் நாக்கை கடித்து கொண்டு தன் தலையை தட்டிக் கொண்டாள்.

 

“சரி விஜி நீ தூங்கு நாளைக்கு காலையில் பேக்டரியில் மீட் பண்ணலாம்”

 

“ஓகே இழை பாய்!” வேகமாக அந்த அழைப்பை துண்டித்தவள் தன் அருகில் இருந்த பாட்டிலில் இருந்த தண்ணீர் ஒட்டுமொத்தத்தையும் துளி விடாமல் ஒரே மூச்சில் பருகி முடித்தாள்.

 

“அய்யோ! யப்பா! ஒரு நாளைக்கே இப்படி நாக்கு தள்ளுதே! இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பொய்யை காப்பாற்றணுமோ?” தன்னை ஆசையாக தழுவிய தூக்கம் தூரம் போய் விட்ட கவலையில் விஜி தன் தலையில் கையை வைத்து கொண்டு அமர்ந்திருக்க 

 

மறுபுறம் இழையினி பொன் ஆதவன் கொடுத்து விட்டுச் சென்ற அவனது தொலைபேசி இலக்கத்தை தன் தொலைபேசியில் அழுத்தி விட்டு அந்த அழைப்பை மேற்கொள்வதா? இல்லையா? என்று யோசித்து கொண்டு அமர்ந்திருந்தாள்……….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!