உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 07

உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 07

துன்கிந்த நீர்வீழ்ச்சி

 

துன் என்பது சிங்களத்தில் துளிகளைக் குறிக்கும் அதேபோல் இந்த துன்கிந்த என்பதன் அர்த்தம் புகைமூட்டம் நிறைந்த நீர்த்தளிகளின் சாரல்.

 

இந்த நீர்வீழ்ச்சிக்கு இன்னுமொரு பெயரும் உண்டு திருமணப் பெண்ணின் தலையில் அணியும் நீண்ட முக்காடு போன்ற நீர்வீழ்ச்சி ஆம் பார்ப்பதற்கு இந்த நீர்வீழ்ச்சி அந்த முக்காடு போன்ற அமைப்பில் தான் மலையில் இருந்து பாய்ந்து கொண்டிருக்கும்.

 

பொன் ஆதவன் இலங்கைக்கு வந்த புதிதில் ராஜா அவனை தங்கள் பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள இடங்களை சுற்றி காட்டுவதாக கூறி இந்த இடத்திற்கு அழைத்து வந்ததன் பிறகு மறுபடியும் அவன் இன்று தான் இங்கே வந்திருக்கிறான் அதுவும் தன் மனதை கொள்ளை கொண்ட தன் காதல் இழையினியுடன்.

 

அவளது தோளைச் சுற்றி இவனது கரங்கள் அழுத்தமாகப் பற்றி இருக்க அவளது தலையோ அவனது தோளில் வாகாக சாய்ந்திருந்தது.

 

நீர்வீழ்ச்சி வெண்ணிற சாரலாக கொட்டும் காட்சியை இழையினி ரசனையோடு பார்த்துக் கொண்டிருக்க ஆதவனோ அவள் ஆவல் நிறைந்த முகத்தை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“ஆதவன் இந்த இடம் ரொம்ப அழகாக இருக்கு!” சிறு குழந்தையைப் போல குதூகலமாக கூறியவளை மேலும் தன்னோடு அணைத்துக் கொண்டவன் 

 

“ஒரு அழகே இன்னொரு அழகை வர்ணிக்கிறதே! அடடே ஆச்சரியக்குறி” சிரித்துக் கொண்டே கூறவும் அவளோ செல்லமாக அவனது தோளில் தட்டி விட்டு மீண்டும் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.

 

அமைதியான சூழல், கை வளைவில் தன் மனதிற்கு இனியவள், சுற்றிலும் குளிரைப் பரப்பும் காற்று என்ற நிலை ஆதவனது காதல் மனதைத் தூண்ட தன்னோடு ஒன்றிப் போய் நின்ற இழையினியின் முகத்தை ஆசையோடு பார்த்துக் கொண்டவன் மெல்ல மெல்ல அவளை நெருங்க அந்த நேரம் பார்த்து சரியாக அவனது தொலைபேசியும் சிணுங்கியது.

 

“சிவபூஜையில் கரடி!” முணுமுணுத்துக் கொண்டே ஆதவன் தன் தொலைபேசியை எடுத்து பார்க்க அதில் இழையினி என்று பெயர் வரவும் குழப்பமாக தன் கை வளைவில் நின்றவளைப் பார்த்தவன் தன் கண்களை கசக்கி கொண்டு மீண்டும் பார்க்க நீர்வீழ்ச்சி இருந்த இடம் காணாமல் போய் சுற்றிலும் கும்மிருட்டாக இருந்தது.

 

“அய்யோ! என் கண்ணுக்கு என்ன ஆச்சு?” பதட்டத்துடன் மீண்டும் அவன் தன் கண்களை நன்றாக துடைத்து விட்டு திறந்து பார்க்க அப்போதும் அதே இருட்டான சூழல் தான் அவனை சுற்றி இருந்தது.

 

அந்த இருட்டில் தன் கைகளால் அவன் துளாவ மேஜை போன்று ஒரு பொருள் தட்டுப்படவே அதை பிடித்து மேலும் துளாவ விளக்கு ஒன்றின் சுவிட்ச் அவன் கைகளுக்குள் தட்டுப்பட்டது.

 

பதட்டத்துடன் அவசரமாக அவன் அந்த விளக்கைப் போட்டு விட்டு சுற்றிலும் திரும்பி பார்க்க அந்த இடம் அவனது தங்கும் அறையாக இருக்கவே அப்போது தான் அவனுக்கு எல்லாம் பிடிபட்டது.

 

இழையினியைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்ததால் கனவிலும் அவள் வந்திருக்கிறாள் என்பதை நினைத்து தன் தலையில் தட்டிக் கொண்டவன்

“பரவாயில்லை கனவாக இருந்தாலும் இதுவும் நல்லா தான் இருக்கு” புன்னகையுடன் தன் கையில் இருந்த தொலைபேசியை அவன் திருப்பி பார்க்க அதில் இழையினியிடமிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.

 

“இழை! திங்க் ஆஃப் தி டெவில் இல்லை இல்லை அவள் டெவில் இல்லை மை ஏஞ்சல்!” இங்கே ஆதவன் காதல் வசனம் பேசிக் கொண்டிருக்க மறுபுறம் இழையினி அவன் தூங்கியிருக்க கூடும் என்ற எண்ணத்தோடு அந்த அழைப்பை துண்டித்திருந்தாள்.

 

ரசனையோடு காதல் உலகில் பேசிக் கொண்டே ஆதவன் அந்த அழைப்பை எடுக்க தன் கையை வைக்க சட்டென்று அந்த அழைப்பு இல்லாமல் போனது.

 

“அய்யோ! நான் லவ் டயலாக் பேசிட்டு வர்றதுக்குள்ள போன் கட் ஆகிடுச்சே! ஆதவா! ஏன்டா இப்படி பண்ணுற? அவளே மனசு மாறி உனக்கு கால் பண்ணி இருக்கா அதையும் இப்படி கோட்டை விட்டுட்டியே! இப்போவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல உடனே போனை எடுத்து பேசு” தனக்குத்தானே அறிவுரை சொல்வது போல் கூறிக் கொண்டு அவன் மீண்டும் இழையினியை அழைக்க மறுபுறம் தன் கையில் இருந்த காகிதத்தையே பார்த்து கொண்டிருந்தவள் அதிலிருந்த எண்ணில் இருந்து அழைப்பு வருவதைப் பார்த்ததும் கண்களை மூடி தன்னைத் திடப்படுத்தி கொண்டு அந்த அழைப்பை எடுத்து பேசத் தொடங்கினாள்.

 

“ஹலோ! இழையினி!” ஆர்வமாக ஒலித்த ஆதவனின் குரல் கேட்டு சற்று குழப்பம் கொண்டவள்

 

“ஆ..ஆத…பொன் ஆதவன் தானே பேசுறீங்க?” என்று கேட்டாள்.

 

“அப்போ யாருன்னு தெரியாமல் தான் போன் பண்ணீங்களா இழையினி மேடம்?”

 

“இ.. இல்லை நீங்க என் பெயரை அது வந்து இல்லை என் நம்பர் அது”

 

“ஹலோ! ஹலோ! மேடம் வெயிட் எதற்கு இவ்வளவு பதட்டம்? கொஞ்சம் ஆறுதலாகவே பேசுங்க இப்போவே இப்படி பதட்டப்பட்டால் அப்புறம் பின்னாடி நான் சொல்லப் போற விடயங்களை எல்லாம் கேட்டு டென்ஷன் ஆகி பதட்டப்பட முடியாமல் போய் விடும் அதோடு நான் ஒண்ணும் ஐந்து நிமிடத்தில் மறைந்து போய்விட மாட்டேன் இங்கேயே தான் இருப்பேன்” ஆதவன் சிரித்துக் கொண்டே கூறவும்

 

மறுமுனையில் அதைக் கேட்ட இழையினி 

‘அய்யோ! ரொம்ப மொக்க போடுறானே!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே

 

“இல்லை இன்னைக்கு காலையில் தானே நீங்க உங்க போன் நம்பரை என்கிட்ட தந்தீங்க அதுவும் நான் என் நம்பரை உங்க கிட்ட தரவே இல்லை அப்புறம் எப்படி என் நம்பர் உங்களுக்கு தெரியும்?” குழப்பத்தோடு வினவினாள்.

 

“இதற்கு தானா இவ்வளவு பதட்டம்? ஏன் இழையினி மேடம் நேற்று பார்த்த உங்களை இன்னைக்கு நேரில் சந்திக்க முடிந்த எனக்கு உங்களோட போன் நம்பரை கண்டுபிடிக்க முடியாதா? என்ன?”

 

“அதுவும் சரிதான்”

 

“அப்புறம் இழையினி மேடம் நான் வந்து போனதிலிருந்து என்னைப் பற்றியே யோசித்துட்டு இருந்தீங்க போல இருக்கு! இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்கீங்க?” 

“அ.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை”

 

“அப்படியா? சரி சரி நான் நம்பிட்டேன் அப்புறம் சொல்லுங்க எப்போ மீட் பண்ணலாம்?” 

 

“மீட்டிங்கா? எதற்கு?” 

 

“பின்ன எப்படி நான் எதற்காக உங்களைத் தேடி வந்தேன், உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்ன்னு விவரமாக சொல்ல முடியும் சொல்லுங்க? இங்கே பாருங்க இழையினி மேடம் இது நம்ம இரண்டு பேரோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் அதை இப்படி போனில் பேசுவது சரியாக இருக்குமா இல்லை தானே?”

 

“என்னங்க நீங்க விட்டால் என்னென்னவோ பேசுறீங்க? இரண்டு பேரோட வாழ்க்கை அது இதுன்னு!” இழையினியின் குரல் சற்று கண்டிப்போடு ஒலிக்கவும் 

 

முகம் கொள்ளாப் புன்னகையுடன் நன்கு வாகாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்ட ஆதவன்

“அடிக்கடி நீங்க இப்படி டென்ஷன் ஆகக்கூடாது இழையினி மேடம் சரி இப்போ சொல்லுங்க நாம எத்தனை பேரு பேசிட்டு இருக்கோம்?” என்று கேட்க அவளோ 

 

‘ஒருவேளை லூசாக இருப்பானோ?’ என்ற எண்ணத்தோடு மறுமுனையில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

“சும்மா சொல்லுங்க இழையினி மேடம்”

 

“நீ.. நீங்களும் நானும் தான்”

 

“அதே தான் நானும் சொன்னேன் நீங்களும், நானும் தானே பேசிட்டு இருக்கோம் அப்போ நம்ம இரண்டு பேரோட வாழ்க்கை விஷயம் தானே?”

 

“ஆமா ஆனா நீங்க அப்…”

 

“இதோ பாருங்க இழையினி மேடம் உங்களைப் பற்றி எனக்கு எப்படி தெரியும்? நான் எதற்காக உங்களையே தேடி தேடி வர்றேன் இதற்கு எல்லாம் பதில் சொல்ல நான் தயார் ஆனா அது போனில் சொல்ல கூடிய அளவுக்கு சின்ன விஷயம் இல்லை கொஞ்சம் விவரமாக தான் பேசணும் அதற்காக தான் நான் உங்களை சந்திக்கிறேன்னு சொல்லுறேன் வேறு எந்த தப்பான எண்ணத்தோடும் இல்லை இல்லை உங்களுக்கு என்னை தனியாக சந்தித்து பேச பயம்ன்னா சொல்லுங்க உங்க பேக்டரிக்கே வர்றேன் பேசலாம்”

 

“இல்லை! இல்லை! பேக்டரியில் வேண்டாம் அது சரியாக இருக்காது வேலை செய்யும் இடத்தில் சொந்த விஷயங்களை பேசுவது சரி இல்லை” அவசரமாக மறுத்து சொன்னவளின் குரல் கேட்டு ஆதவனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

 

“அப்போ நீங்க மீட் பண்ண ரெடி இடம் தான் சொல்ல முடியல அப்படித்தானே?” ஆதவனின் கேள்வியில் இழையினி தன் உதட்டை கடித்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

“நீங்க தயங்குவதில் தப்பேயில்லை இழையினி மேடம் திடீர்னு ஒரு பையன் வந்து என்னை உங்களுக்கு தெரியும் அதைப் பற்றி பேசணும்னு சொன்னா யாராக இருந்தாலும் யோசிப்பாங்க தான் நான் அதை முன்னாடியே புரிந்து இருந்ததால் தான் என்னோட போன் நம்பரைத் தந்து விட்டு என் கிட்ட உங்க நம்பர் இருக்கும் விடயத்தை சொல்லாமலேயே போனேன் உங்களுக்கு எப்போ என் மீது நம்பிக்கை வருதோ அப்போ பேசுங்கன்னு சொல்லித் தான் சொன்னேன் நீங்களும் இப்போவே போன் பண்ணவும் என்னடா இவ்வளவு சீக்கிரத்தில் நம்ம மேல் நம்பிக்கை வந்துடுச்சோன்னு நினைச்சேன் ஆனா எல்லாம் மாறிடுச்சு சரி இப்போ சொல்லுங்க நான் என்ன பண்ணனும்?” 

 

“………”

 

“இழையினி மேடம் லைனில் இருக்கீங்களா?”

 

“ஹான்… இருக்கேன்! அது வந்து பொதுவாக நான் வீக் டேஸில் எங்கேயும் வெளியே வர்றது இல்லை வீக் என்ட்ஸ் காலையில் நான் இருக்கும் ஏரியாவில் உள்ள மலைக்கு சென்று விட்டு வந்து வீட்டில் தான் இருப்பேன் வெளியே எங்கேயும் போகமாட்டேன்”

 

“இது போதுமே! இந்த சனிக்கிழமை நீங்க மலையேறப் போகும் போது நானும் வர்றேன் அந்த நேரமே பேசிக் கொள்ளலாம் எல்லாக் குழப்பங்களும் தீர்ந்து போய் விடும் சரி தானே? அப்போதும் உங்களுக்கு பயமாக இருந்தால் உங்க பிரண்ட், அவங்க அப்பா எல்லோரையும் துணைக்கு கூட்டிட்டு வாங்க நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்”

 

“இல்லை பரவாயில்லை நான் வர்றேன் அப்போவே பேசலாம்”

 

“சரி காலையில் ஒரு பத்து மணிக்கு வந்தால் போதும் தானே? எந்த மலைக்கு போவீங்க? உங்க ஏரியாவில் இருக்கும் தி ஃபேமஸ் மவுண்டெயின் ‘கொண்டகல’ மலைக்கு தானே?”

 

“பத்து மணிக்கா? அந்த டைம் நான் வீட்டுக்கு திரும்பி வந்துடுவேனே காலையில் சூரிய உதயத்தைப் பார்க்கத்தான் நான் மலையேறிப் போவேன் இங்கே இருந்து எப்படியும் காலையில் நான்கு மணிக்கு போவேன்” சிறிது நேரத்திற்கு முன்னர் அவன் நேரில் சந்தித்து பேசுவதாக கூறியதற்கே ஆயிரம் முறை யோசித்தவள் இப்போது அதை எல்லாம் மறந்து இயல்பாக அவனோடு பேச ஆரம்பித்திருந்தாள்.

 

“வாட்? நைட் நாலு மணிக்கா?” ஆதவன் அதிர்ச்சியாக தன்னை மறந்து சத்தமிட 

 

மறுமுனையில் புன்னகைத்து கொண்ட இழையினி

“நைட் இல்லைங்க அதிகாலையில்” என்று திருத்தவும்

 

அவனோ

“எனக்கு இரண்டும் ஒண்ணு தாங்க” என்று புலம்பியபடியே கன்னத்தில் கையை வைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.

 

“ஹலோ! என்னங்க ஆச்சு? உங்களுக்கு கஷ்டம்னா விடுங்க இன்னொரு நாள் பார்க்கலாம்” ஆதவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து விட்டு அவள் இயல்பாக கூறவும் மறுபுறம் அவசரமாக மறுப்பாக ஒலித்தது அவனது குரல்.

 

“அய்யய்யோ! இல்லை! இல்லை! நீங்களே இப்போ தான் மனசு மாறி பேசுவதற்கு வாய்ப்பு தந்து இருக்கீங்க அதைப் போய் நான் தவறவிடுவேனா? இந்த சனிக்கிழமை நான் வர்றேன் இந்த இரண்டரை வருடங்களாக உங்க கிட்ட பேச நினைத்ததை எல்லாம் பேசுறேன் அதற்கு அப்புறம் அந்த ஆண்டவன் விட்ட வழி!” ஆதவனின் இயல்பான பேச்சில் இழையினியும் மனதளவில் சிறிது இலகுவாக உணர்ந்தாள்.

 

இவ்வளவு நேரமும் பதிலுக்கு பதில் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவர்கள் இப்போது அமைதியாகி விட ஆதவனுக்கு அந்த அமைதி கூட சுகமாக இருந்தது.

 

மறுபுறம் இழையினி அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் தன் பார்வையை அந்த அறை முழுவதும் தவிப்போடு சுழல விட்டுக் கொண்டிருக்க அவள் தவிப்பை இல்லாமல் ஆக்குவது போல ஆதவன் பேச ஆரம்பித்தான்.

 

“சரி இழையினி மேடம் ரொம்ப நேரம் ஆச்சு நீங்க தூங்குங்க இந்த சனிக்கிழமை உங்களோட எல்லாக் கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் என்னிடமிருந்து நிச்சயமாக உங்களுக்கு பதில் கிடைக்கும் சரியா?” 

 

“ம்ம்ம்ம்ம் சரி பார்க்கலாம்” இழையினி சிறிது குழப்பம் நீங்கியவளாக அந்த அழைப்பை துண்டிக்க இங்கே ஆதவனும் தன் தொலைபேசியை மேஜை மீது வைத்து விட்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவாறே தன் கண்களை மூடிக் கொண்டான்.

 

அவனது மூடிய விழிகளுக்குள் திருமண அலங்காரத்தில் நிறைந்து போய் இருந்த மண்டபமும், மணமேடையில் மாலையும், கழுத்துமாக கண்கள் கலங்க அதிர்ச்சியாக நின்றிருந்த இழையினியின் பிம்பமுமே மீண்டும் மீண்டும் தெரிந்தது.

 

“ஐ யம் ஸாரி இழை!” மூடிய விழிகளுக்குள் தெரிந்த தன் மனம் கவர்ந்தவளின் விம்பத்திடம் ஆதவன் மன்னிப்பு வேண்டியபடி அமர்ந்திருக்க அந்த விம்பத்தின் நிஜமானவளோ கட்டிலில் அமர்ந்திருந்த படி தன் அன்னையின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

“அம்மா! ரொம்ப நாளுக்கு அப்புறம் என் மனசு ரொம்ப இலேசாக இருக்குற மாதிரி இருக்கும்மா அது ஏன்னு தெரியல ஆனா இதேமாதிரி எப்போதும் இருந்தால் நல்லா இருக்கும்னு தோணுதும்மா” சட்டென்று கலங்க போன தன் கண்களை மூடி அந்த கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள் தான் அமர்ந்திருந்த நிலையிலேயே பின்னோக்கி சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

 

இழையினியின் இமைகள் இரண்டும் மூடியிருக்க அந்த இமைகளின் பின்னால் பல்வேறு சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைகட்டி செல்ல ஆரம்பித்தது.

 

செந்தமிழ் இல்லத்தில் தன் சிறு வயது நினைவலைகள், வளர்ந்த பின்னர் அங்கே தனக்காக காத்திருந்த ஆனந்தமான தருணங்கள் என்று சந்தோஷமாக அவள் நினைவுகள் பின்னோக்கி செல்கையில் 

‘இந்த கல்யாணம் இனி நடக்காது! எல்லோரும் இங்கே இருந்து போங்க! இழையினி மேடையில் இருந்து எழுந்திரு!’ அசோகனின் குரல் வெவ்வேறு பாவனைகளில் ஒலிக்க இழையினி வேகமாக தன் கண்களை திறந்து கொண்டாள்.

 

அசோகனின் கோபமான முகமும், தன் தந்தையின் கலங்கிப் போன தோற்றமும், தன் அன்னையின் அதிர்ச்சியான தோற்றமும் மீண்டும் மீண்டும் அவள் முன்னால் வந்து நின்று கொண்டு அவளை இம்சை செய்ய அவள் கண்களோ அந்த விம்பங்களை அளிக்க கண்ணீரை சிந்த ஆரம்பித்தது.

 

‘ஏன் தாத்தா இப்படி பண்ணீங்க?’ கண்ணீரோடு அந்த அறையின் ஜன்னல் வழியாக தெரிந்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த இழையினியின் மனதோ மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை நோக்கி அவளை இழுத்துக் கொண்டு சென்றது…..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!