உன் காதல் என் தேடல்

உன் காதல் என் தேடல்

தேடல் – 2

மறுநாள் தோழிகள் இருவரும் வழக்கம் போல இல்லாமல் எம்.டி வருகிறார் என்று சீக்கிரம் கிளம்பி ஆஃபிஸ் வந்தனர். ஆனால், வந்த முதல் நாளே முக்கிய மீட்டிங் என்று எம்.டி வெளியே சென்றிருக்க. நிலாவும்,யாழினியும் தங்கள் வேலையைத் தொடங்கினர். மாலை நேரம் யாழினி வேலை விஷயமாக வெளியே சென்றவள் நேராக வீட்டுக்கு வந்து விடுகிறேன் என்று நிலாவிடம் சொல்லிவிட்டுச் செல்ல, நிலா மாலையில் தன் வேலைகளை முடித்தவள் காஃபி குடிக்கக் கேன்டீன் போனாள். அங்கே  நிலாவுடன் வேலை செய்யும் பெண்கள் சிலர் புது எம்.டி யின் அழகை வர்ணித்துக் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

“ஏய் நிலா! நீ புது எம்.டி பாத்தியா டி? ஸ்ஸ்ஸப்பா!! செம்ம சுப்பரா இருந்தார் டி. செம்ம ஸ்மார்ட், என்ன ஹைட், என்ன பாடி, ம்ம்ம் சும்மா பாக்க அப்டியே சினிமா ஹீரோ மாதிரி இருந்தாரு” என்று அவனைப் புகழ்ந்து தள்ளினர்.

நிலா,”ஏய் ஏய் போதும் டி. ரொம்ப ஓவரா போகுது. காது வலிக்குது மா. மீ பாவம்” என்று கிண்டலடிக்க அந்தப் பெண்களில் ஒருத்தியான ஷாலினி, “ம்ம்ம் நீ இன்னு அவரைப் பாக்கல இல்ல? அதுதான் இப்படிப் பேசுற. ஒருதரம் மட்டும் நீ அவரைப் பாரு” என்று தொடங்கியவள். “ஏய்! ஏய்! நிலா! அங்க பாரு டி. அவர் தான் டி நம்ம புது எம்.டி துருவ் நந்தன்” என்க, நிலா அவன் முழுப்பெயர் துருவ் நந்தன், நம்ம ஒனர் பையன் என்று கேட்டதும் அதிர்ந்தவள் உடனே திரும்பிப் பார்க்க, அவள் இதயம் ஒருநிமிடம் வேலை நிறுத்தம் செய்து விட, அல்லி மலர் கண்கள் இரண்டும் இருட்டிக் கொண்டு வந்தது, துருவ்வையே இமைக்காமல் பார்த்தவள் “அ… அவர் பேர் என்ன சொன்ன ஷாலினி” என்று கனத்த குரலில் கேட்க, “அவர் பேர் துருவ் நந்தன், நம்ம கம்பெனி ஓனரோட பையன் டி” என்றதுமே நிலாவின் மனது, பூட்டிய அறையில் தனியே விடப்பட்ட குழந்தைபோல் கதிகலங்கி விட்டது.

முகில்நிலாவின் விழிகள் கண்ணீர் மழையைப் பொழியவில்லை. ஆனால், அதற்கு பதிலாக அவள் இதயம் ரத்தத்தையே வடித்துக் கொண்டிருந்தது. அந்த நொடியே உயிர் போய்விடக் கூடாதா! என்ற விரக்தி அவள் மனதில் எழுந்தது. இதுவரை ‘துருவ்’ என்று அவன் பெயர் உச்சரிக்கும்போது அவள் இதழோடு சேர்த்து இதயம் வரை தித்திக்கும், ஆனால், இன்று ‘துருவ் நந்தன்’ என்று அவன் முழுப்பெயரை உச்சரிக்கும் போது உயிரின் அடிவேர் வரைக்கும் கசந்தது. உயிரற்ற உடல் போல் அங்கிருந்து நகர்ந்தவளுக்கு அந்த நேரம் தாய்மடி அரவணைப்பு தேவைப்பட அவள் கால்கள் தானாக யாழினியை தேடிச் சென்றது.

வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு வாசலைப் பார்த்த யாழினி இருண்டு போய் இருந்த நிலாவின் முகம் பார்த்ததும் அதிர்ந்தவள் “ஏய் நிலா! என்னடி இது? ஏன் முகம் இப்டி இருண்டு போயிருக்கு? கண்ணெல்லாம் ஒருமாதிரி கலங்கி இருக்கு? என்னடி? என்ன ஆச்சு உனக்கு”? என்று பதறிய யாழினியை நிலா நிமிர்ந்து பார்க்க அவள் கண்களில் அத்தனை வெறுமை.

“யாழி நா…”

“நா இன்னைக்குத் துருவ்வை பா… பா… பார்த்தேன் யாழி” என்று திக்கித் திணறி சொல்ல, யாழினிக்கு அவள் காதுகளையே நம்ம முடியவில்லை. 

“ஏய் என்னடி சொல்ற? உண்மையாவா? எங்க டி அவனைப் பார்த்த? உன்னைத் தேடி வந்தானா? எங்க டி இருக்கான்?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக.

“துருவ்வோட முழுப்பேரு துருவ்நந்தன். அவன் தான் நம்ம புது எம்.டி” என்ற நிலாவின் குரல் தழுதழுக்க, மெதுவாக ஆரம்பித்த விசும்பல் யாழினி காதைக் கிழிக்கும் அளவு பெரும் குரலெடுத்து சத்தமாக வெடிக்க, கால்மடக்கி தன் முகத்தைக் கால் முட்டியில் புதைத்து கதறி அழும் நிலாவை சமாதானம் செய்யக்கூடத் தோன்றாமல் தலையில் இடி விழுந்தது போல் உறைந்து நின்ற யாழினி, நிலா அருகில் அமர்ந்தவள். “அப்ப உன்னோட துருவ் தான் நம்ம எம்.டியா நிலா? அவன் பேரு துருவ் நந்தன்னா? அப்போ…? ஐயோ! அப்டின்னா இதுக்கு அர்த்தம்” என்று தொடங்கியது தான் தாமதம் நிலா முட்டியில் முகத்தைப் புதைத்தபடியே இருந்தவள் சட்டென யாழினி வயிற்றைக் கட்டிகொண்டு வெடித்து அழ ஆரம்பிக்க, யாழினிக்கு பைத்தியம் பிடிக்காதது ஒன்று தான் குறை.

எவ்வளவு நேரம் தோழிகள் இருவரும் அப்படியே இருந்தனர் என்று தெரியவில்லை. தன் மடியில் தலைவைத்து சிறுகுழந்தை போல் தேம்பித் தேம்பி அழும் நிலாவின் தலையை மென்மையாக வருடிய யாழினி, “இனிமே நம்ம என்ன பண்றது நிலா? நம்ம நெனச்சு வந்தது ஒன்னு, இங்க நடந்தது ஒன்னு, இனி நம்மால எதுவும் செய்யமுடியாது. பேசாமல் நம்ம நாளைக்கே ஊருக்கு கெளம்பி போய்டுவோம்” என்று யாழினி சொல்லி முடிக்கும் முன் வெடுக்கென எழுந்து அமர்ந்த நிலா “நா எங்கயும் வரமாட்டேன்” என்று கண்களை துடைத்துக் கொண்டே அழும் குரலில் சொல்லும் நிலாவைப் பாரக்க யாழினிக்கு “ஐயோ” என்றிருந்தது.

“நீ என்ன பேசுறன்னு புரிஞ்சு தான் பேசுறயா நிலா? இதுக்கு மேல இங்க இருந்து நம்ம என்ன செய்யப்போறோம்னு நீயே சொல்லு? நீ எதைத் தேடி இங்க வந்தியோ அதுக்கான பதில் ஏதோ ஒரு வகையில துருவ் மூலமா கெடச்சிடுச்சே. அப்றம் இங்க இருந்து என்ன சாதிக்கப் போற நீ”? என்ற யாழினியை நிதானமாகப் பார்த்த நிலா, “பாதி உண்மை தான தெரிஞ்சிருக்கு. மீதியையும் நான் தெரிஞ்சுக்கணும். அதோட அந்த உண்மைக்குச் சொந்தமான ஆளையும் நா பாக்கணும் யாழினி” என்றவளை யாழினி வெட்டவ குத்தவ என்று பார்த்தவள்.

“லூசு மாதிரி பேசாத நிலா. இனிமே அந்த ஆளைப்பார்த்து நமக்கு என்னாகப் போகுது? ஒருவேளை நீ நெனச்ச மாதிரி இல்லாம, அவர் எந்தத் தப்பும் செய்யலன்னு வச்சிக்கிட்டாளும் இப்ப அதனால ஒரு பிரயோஜனமும் இல்லையே டி. இப்ப பிரச்சனை உனக்கும். அந்த ஆளுக்கும் இல்ல… உன் லட்சியத்துக்கும், உன் காதலுக்கும் நடுவுல இல்ல நடக்குது? இது ரெண்டுல எது நடந்தாலும் பிரச்சனையும், மனவேதனையும் உனக்குத் தான்டி. உன்னோட காதல் ஜெயிச்சாலும் உன்னோட வாழ்க்கை நிம்மதியா இருக்காது. ஒருவேளை உன் லட்சியம் ஜெயிச்சாலும் சாகுறவரை நீ ஒவ்வொரு நிமிஷமும் செத்து செத்து பொழைக்கணும் டி” என்று யாழினி நிலாவின் எதிர்காலத்தை நினைத்து ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து கவலைப்பட்டாள்.

“எனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை யாழி. எனக்கு என்னோட காதலை விட என்னோட லட்சியம் தான் முக்கியம். அதுக்காக காலம் முழுக்க நான் அழுதுட்டே இருக்கணும்னாலும் எனக்கு ஓகே தான். ஒருவேளை துருவ்வை நா பாக்காமலே இருந்திருந்தாலும் வாழ்க்கை பூரா அவனையே நெனச்சு அழுதுட்டு தானே இருந்திருப்பேன்” என்று சொன்ன அடுத்த நிமிடம் யாழினி கை நிலாவின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது.

“செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்! ஏன்டி உன் மனசுல என்ன பெரிய தியாகின்னு நெனப்பா? ஓடிப்போன அந்த நாய மறந்து தொலைன்னு நானும் வருஷக்கணக்கா சொல்லிட்டிருக்கேன். நீதான் அவரு நல்லவரு, வல்லவரு, நாளும் தெரிஞ்சவருன்னு கதை கதைய விட்ட… ஒரு நாள் என்னைத் தேடி வருவாருன்னு டைலாக் வேற விட்டுட்டு திரிஞ்ச? இப்ப என்னடானா? காலம்பூரா அந்தக் கழுதைய நெனச்சிட்டே இருப்பேன்னு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே சொல்லுவ? என்ன கொழுப்பு டி உனக்கு? இல்ல இல்ல உன்னை இப்டியே விட்டா சரி வராது. மரியாதையா நீ இப்பவே ஊருக்குக் கெளம்பு. இல்ல நான் இப்பவே அம்மாக்கு ஃபோன் பண்ணி, நீ எதுக்கு இங்க வேலைக்கு வந்திருக்கேன்னு சொல்லிடுவேன்” என்ற யாழினி கோபத்தில் கொதிக்க.

“நீ அம்மாகிட்ட பேசிட்டு ஃபோனை வைக்குறதுக்குள்ள என்னோட உயிர் இந்த உடம்பை விட்டு போய்டும் யாழி. அப்றம் உன் இஷ்டம்” என்ற நிலாவை இயலாமையோடு பார்த்த யாழினி தலையில் கைவைத்துத் தரையில் அமர்ந்துவிட நிலா மெதுவாக அவள் அருகில் வந்தவள்,” நா துருவ்வை மறந்துடுறேன் யாழி” என்று வறண்ட குரலில் சொல்ல, யாழினிக்குச் சிரிப்பு தான் வந்தது. 

அவளுக்குத் தெரியும் நிலா துருவ்வை தன் உயிரைவிட அதிகமாக நேசிக்கிறாள் என்று. அவள் வாழ்க்கையின் அந்த முக்கியமான மூன்றாம் நபர் அவன் தான். சொல்லாமல் கொள்ளாமல் துருவ் நிலாவை விட்டுச் சென்று வருஷம் இரண்டாகி விட்டது. அவன் சென்றப் பிறகு அவனைப் பற்றி விசாரித்ததில் அவன் அவனைப் பற்றிச் சொன்ன அனைத்து தகவலும் பொய் என்று தெரிந்தது. இருந்தும் நிலா துருவ் மீது சிறிதும் சந்தேகம் கொள்ளவில்லை. யாழினி பலமுறை திட்டி கூட இன்று வரை அவன் சொல்லாமல் சென்றதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கும் என்று யாழினியிடம் சண்டை போடும் நிலா. அவள் துருவ்வை மறப்பதா? நடக்கும் காரியமா இது? என்று யோசித்தவள் “நீ சொல்றது உனக்கே காமெடியா இல்ல நிலா? எனக்குத் தெரியும் டி உன்னோட மனசு. அவனைத் தூர இருந்து பார்த்தாலே, அம்மாவ பாத்ததும் ஓடுற குழந்தை மாதிரி, உனக்கு முன்ன உன் மனசு அவன்கிட்ட ஓடிடும். இதுல ஒரே ஆஃபீஸ்ல, அவன் பக்கத்துல, கூடவே வேலை செஞ்சிட்டு அவனை நீ மறக்கப்போற? அப்டி தானே?”

“நீ என்னைக் கிண்டல் பண்றேன்னு எனக்கு நல்லா புரியுது யாழி. ஆனா, இந்த விஷயத்தில் நீ நெனைக்கிறது தப்புன்னு நான் நிரூபிச்சுக் காட்றேன். இனி துருவ்… என்னோட மனசுலயும் இல்ல, வாழ்க்கையிலயும் இல்ல” என்றவள் தன் அறைக்குச் சென்று கதவடைத்துக் கொள்ள யாழினியின் நிலை தான் பாவமாகி விட்டது.

அறைக்கதவை இழுத்து அடைக்க முடிந்த நிலாவுக்கு அவள் காதல் கொண்ட மனதின் கதவை அடைக்க இயலவில்லை. என்றாவது ஒருநாள் துருவ் தன்னைத் தேடி வருவான் என்று நம்பிக்கையோடு நாட்களைக் கடந்து வந்தவளுக்கு இனி துருவ் அவள் மொத்த வாழ்க்கையிலும் இல்லை என்ற பேரதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அழுது வடிந்து கலங்கிய கண்களை மூடியபடி கட்டிலில் படுத்தவளின் விழி இமைகளுக்குள் வந்து நின்று சில்மிஷம் செய்தான் அவள் மறக்க நினைக்கும் மாயக்கள்ளன் துருவ்.

நான்கு வருடங்களுக்கு முன்,

அன்று முகில் நிலவிற்கு கல்லூரியில் முதல் நாள். தான் ஆசைப்பட்ட படிப்புப் படிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் கல்லூரியில் அடியெடுத்து வைத்தாள் நிலா.

முதல் நாள் என்பதால் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வார்கள் என்று மறைந்து, பதுங்கி மெதுவாக நடந்து சென்றவள் உதடுகள் யாழினியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது.

”இந்த யாழி பிசாசுக்கு இந்த நேரம் பார்த்தா உடம்பு முடியாம போகணும். இப்டி நான் தனியா காலேஜ் வரமாதிரி ஆகிடுச்சே. அவ மட்டும் கூட இருந்திருந்த நா இப்டி பயந்து பயந்து வரவேண்டி இருந்திருக்காது. என்ன இருந்தாலும் அவ தைரியம் எனக்கு வராது” என்று புலம்பியபடி நடந்தவள் பதுங்கிப் பதுங்கி மாடிப்படி ஏறும் போது கால் தடுக்கி கீழே விழ, “ஐயோ அம்மா!!” என்று கத்தியபடி முகத்தைக் கைகொண்டு இறுக்கி மூடிக் கொள்ள, இரு வலிய கரங்கள் அவளைப் பூப்போல் ஏந்திக்கொண்டது. ஒரு நிமிடம் என்ன நடந்ததென்று நிலாவுக்கே விளங்கவில்லை. 

மெதுவாக ஒரு கையை மட்டும் மெதுவாக இறக்கி, ஒரு கண்ணால் பார்க்க, அங்கு அழகாய் தேவகுமாரன் போல் ஆண்மை நிறைந்த முகம் அவள் விழிகளுக்குத் தெரிந்தது. “ஐயோ கடவுளே! இது என்ன தேவகுமாரன் எல்லாம் என் கண்ணுக்குத் தெரியுறாங்க, ஒருவேளை கீழ விழுந்ததுல நான் செத்துகித்துப் போய்ட்டனா? இப்ப நா சொர்க்கத்துல இருக்கேனா? இவரு தேவதூதனா? அதான் இவரு செம்ம அழகா இருக்காரு, ஸ்ப்பா என்ன ஹான்சமா இருக்காரு. என்றவள் தன் ஆள்காட்டி விரல் கொண்டு கன்னத்தில் தட்டி யோசித்தவள்… “இரு…இரு நாம் எப்டி சொர்கத்துல? அதுக்கு வாய்ப்பில்லயே? நம்ம அப்டி ஒரு நல்லது எதும் செஞ்சதில்லயே? அப்றம் எப்டி? அப்ப இவரும் மனுஷன் தானா? என்ன மாதிரி இப்ப தான் செத்திருப்பாரு போல, எமலோகம் போக வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்காரு போல, உயிரோடு இருக்கும்போது என் கண்ணுலபடாம, இப்டி செத்ததுக்கு அப்றம் இந்தச் சூப்பர் பீஸை கண்ணுல காட்டுறாரே இந்த கடவுள்! ஓஓஓ மை காட்”!! வொய் திஸ் கொலவெறி” என்று வாய்விட்டு புலம்பியவள். அதை சொல்லி முடிக்கும் முன் தரையில் விழுந்து கிடந்தாள். இடுப்பை பிடித்துக் கொண்டு “அம்மாஆஆஆஆ” என்று கத்த “ஏய் வாய மூடு” என்று உதட்டில் ஆள்காட்டி விரல் வைத்து அவன் அதட்டியதில் கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டாள்.

”ஒரு செகண்ட்ல எவ்ளோ பேசுற நீ! ஒரு நிமிஷத்துல சொர்க்கம், நரகம், எமலோகம்னு எல்லா இடத்துக்கும் டிராவல் பண்ற” என்றவன் அவள் கன்னத்தை நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ள, “மம்மீஈஈஈ” என்று நிலா அலற “ம்ம்ம் கிள்ளுனது வலிக்குதில்ல? அப்ப நீ இன்னும் சாகல உயிரோட தான் இருக்க… புரியுதா?” என்று மீண்டும் அவள் கன்னத்தில் கிள்ள, “ஆஆஆஆ”வெனக் கத்தியவள் “புரியுது புரியுது நல்லாவே புரியுது. அது ஒன்னு இல்லீங்க, அவளோ உயரத்தில் இருந்து விழுந்தேனா அதான் ஒருவேள செத்து போய்டேனோன்னு ஒரு சின்ன டவுட்டு”.

“அவளோ உயரம்” என்று நக்கலாகச் சொன்னவன் “கொஞ்சம் அப்டிக்காத் திரும்பி அந்த உயரத்த கொஞ்சம் பாரு” என்க.

 நிலா மெதுவாகத் திரும்பி பார்த்தாள். அவளது கண்கள் முட்டக்கண்ணு முழியழகி என்று வர்ணிக்கும் அளவு விரிய. அவன் புறம் திரும்பியவள் “ஈஈஈ” என்று இளித்த படியே அவனைப் பார்க்க “வெறும் நாலு படிக்கட்டு அதுல ஒழுங்கா ஏறத் தெரியாம கீழ விழுந்து மண்ணக் கவ்விட்டு என்ன பேச்சு பேசுற நீ. இதுல என்னை சைட் வேற அடிக்கிற! உன்ன என்ன செய்யலாம்” என்றவன் அவளை முறைக்க.

“சாரிங்க, சீனியர்ஸ் ராகிங் பண்ணுவாங்கனு பயத்தோடவே வந்தேனா, அதான் பாக்காம கீழ விழுந்துட்டேன்” என்றவள் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டாள்.

“ம்ம்ம் சரி சரி! மூஞ்ச அப்டி வைக்காத. இனியாச்சும் பாத்து ஒழுக்கப்போ” என்றதும் நிலா திரும்பித் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தபடியே நடக்க, அவன் விழிகளும் போகும் நிலாவையே பின் தொடர்ந்தது. விழும்போது அவள் இடையைத் தாங்கிப் பிடித்த தன் கைகளை  பார்க்க. அவள் போட்டிருந்த உடையைத் தாண்டி அவன் உணர்ந்த அவளது இடையின் ஸ்பரிசம் அவன் கைகளில் மெல்லிய குறுகுறுப்பை ஏற்படுத்த, அவள் உடலில் இருந்து வந்த அவளது சோப்பின் வாசனை, காற்றில் பறந்து வந்து அவன் கன்னம் உரசிய அவளது தலைமுடி, பாரதிராஜா ஹீரோயின் ஸ்டைலில் ஒரு கையை மெதுவாக இறக்கி, ஒரு கண்ணால் தன்னை ரசித்துப் பார்த்த அவள் நேத்திரங்களை நினைக்கும் போது, அனுமதி இல்லாமலே அவன் இதழ்களில் புன்சிரிப்பு மலர, அவள் அமைதியாக அவன் மனதில் வந்து அலுங்காமல் குலுங்காமல் பதிந்து விட்டாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!