உயிரின் ஒலி(ளி)யே 2

உயிரின் ஒலி(ளி)யே 2

உயிரின் ஒலியே – 2

வாழ்க்கை என்பது அப்படி தான், நாம் தேடித்தேடி தவித்து ஒரு கட்டத்தில் சோர்ந்துப் போய் அமரும் பொழுது ‘இது தானே நீ தேடியது’ என கேட்டு ஆனந்த அதிர்ச்சி அளிக்கும். 

அந்த அதிர்வில் தான் இப்போது ஆதினி சிக்கிக் கொண்டிருந்தாள். 

முன்று மாதங்களுக்கு முன்பு கல்லூரிப் படிப்பை முடித்த சித்திரப்பாவை அவள். 

அவள் விழிகளில், புதிய வனத்திற்குள் நுழைந்த மானின் மருட்சி. 

ஆனால் தற்போது அந்த ஆளறியா வனத்தில் கார்த்திக்ராஜ்ஜின் நிழல் இருப்பது, அவளுக்கு பெரும் ஆசுவாசமாய். 

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆதினியைப் பார்த்தவன் இதழ்களில் அரும்பிய முறுவலுடன் புருவமேட்டை உயர்த்தி என்னவென்று கேட்க சட்டென அவள் முகத்தில் மாறுதல். 

வேகமாக தலையை உதறி தன்னை மீட்டுக் கொண்டவளின் கண்களிலோ இப்போது விழிநீர் சூழ்ந்திருந்தது. 

அவனை மீண்டும் கண்டதும் என்னென்ன பேச வேண்டுமென ஏற்கெனவே ஒத்திகை பார்த்து வைத்திருந்தவளுக்கு இன்று அனைத்தும் மறந்துப் போக மௌனமாய் வெறித்தாள். 

கடலலைப் போல உள்ளிழுத்துக் கொண்ட குரலில், “தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்” என்றாள் கண்ணில் நீர் வழிய. 

அவளது கண்ணீரைத் துடைத்தவாறே தண்ணீரை எடுத்து அவளிடம் நீட்டிய ராஜ், கண்ணாடித்திரை வழியே தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அதிதியை வர சொல்லி கண்ணசைத்த நேரம் அவன் கைப்பேசியில் சிணுங்கல். 

எடுத்துப் பார்க்க மிகப் பெரிய கம்பெனியிடமிருந்து ப்ராஜெக்ட்டிற்கான  வாய்ப்பு மெயிலாக வந்து விழுந்திருந்தது. 

அதைக் கண்டு அவன் புருவங்களில் ஆச்சர்ய வளைவு. 

இந்த ப்ராஜெக்ட் மட்டும் கிடைத்துவிட்டால், வி.யூ டெக்னாலஜிஸ் தான் இன்சூரன்ஸ் கம்பெனிகளிலேயே முதன்மையானதாக மாறிவிடும். 

எப்படியாவது இந்த ப்ராஜெக்ட்டை பிடித்துவிட வேண்டும் என்ற வேட்கை அவனிற்குள் பலமாக குடிக் கொண்ட நேரம் அறைக்குள் அதிதி வந்தாள். 

அவளைக் கண்டதும் வேகமாக தட்டச்சு செய்து அவளின் முன்பு வைத்தான். 

அதில் இருந்த செய்திப்படி அதிதி அறையிலே இருக்கும் இன்னொரு காலியான இருக்கையை ஆதினிக்கு  கொடுக்க சொல்லியிருந்தான்.  பிறகு ப்ரெஷர்ஸ்கான இன்டர்வியூ நடத்துவதற்கு அதிதியை வரவும் சொல்லியிருந்தான். 

ஆதினியிடம் திரும்பியவள்,”உங்களுக்கு எனக்கு எதிரிலே இருக்கிற இடம் தான் இனி வொர்க்கிங் ப்ளேஸ். நாங்க இன்டர்வியூ முடிச்சுட்டு வந்துடுறோம்” என்று அதிதி சொல்ல தலையசைத்தாள் அவள்.

தன்னுடைய புதிய இருக்கைக்கு வந்து அமர்ந்த ஆதினி, முதல் வேலையாக 

ராஜ்ஜின் அறையைத் திரும்பி பார்க்க, அவனது உருவம் மிக கச்சிதமாக இவள் விழிகளுக்குள் விழுந்தது. 

‘என் கண்பார்வை படுற இடத்துலே தான் ராஜ் இருக்காங்க. பொருத்தமான இடம் தான்’  என மனதுக்குள் புன்னகைத்தவாறே அன்றைய நாளுக்கான வேலையைத் துவங்கினாள் ஆதினி

இங்கோ அதிதியும் ராஜ்ஜும் வேகமாக இன்டர்வியூ நடக்கும் இடத்திற்குள் நுழைந்தனர். 

கிட்டத்தட்ட இருபது பேருக்கு மேலே நேர்காணலை நடத்தி முடித்தவர்களுக்குள் அப்படியொரு சோர்வு. 

இன்னும் யார் தேர்வு பெற்றிருக்கிறார்கள் என்ற முடிவே எடுக்கவில்லை. 

சாப்பிட்ட பிறகு தான் அதற்கான தெம்பு வரும் எனத் தோன்ற அதிதியும் ராஜ்ஜும் ஒரே சமயத்தில் எழுந்து ஆதினியின் முன்பு வந்தனர். 

எதிரிலிருந்தவர்களை ஆதினி கேள்வியாகப் பார்க்க, “வாங்க லன்ச் சாப்பிட்டு வந்துட்டு வொர்க் கன்டினியூ பண்ணலாம்” என்று அதிதி அழைக்க அவளும் எழுந்துக் கொண்டாள். 

மூவரும் உணவை வாங்கிவிட்டு காலியாக இருந்த அந்த மூன்று நாற்காலியில் வரிசையாக அமர்ந்தனர். 

“எப்படி போகுது வொர்க் எல்லாம். எனி ட்ரபுள்” என அதிதி புன்னகைத்தபடி கேட்க ஆதினி இல்லையென்று மறுத்து தலையசைத்துவிட்டு ராஜ்ஜைப் பார்த்தாள். 

அவனிடம் மௌனப் புன்னகை மட்டும். 

“ராஜ் சார், நான் இந்த ஆஃபிஸ்லே ஜாயின் பண்ணும் போது உங்களைப் பார்க்கவே இல்லை. அப்போ வேற டி.எல் இருந்தாங்க. இன்னைக்கு உங்களை பார்த்ததும் அதிர்ச்சியிலே பேச்சே வரல” என ஆதினி சொல்ல ராஜ்ஜின் இதழ்களில் புன்னகை மட்டும். அவன் பதில் பேசவே இல்லை.  ஆனால் அவனுக்கு பதிலாக அதிதி பேசினாள். 

“நாங்க சென்னை ப்ரான்ச்ல இருந்து இப்போ தான் இரண்டு வாரத்துக்கு முன்னாடி இங்கே வந்தோம். நீங்களும் அதே டைம் லீவ் போட்டதாலே, எங்களை மீட் பண்ண முடியாம போயிடுச்சு” அதிதி விவரிக்க, மெல்ல ஆமோதித்த ஆதினி மீண்டும் ராஜ்ஜை நோக்கி திரும்பினாள். 

“தேங்க் காட். உங்களை ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன். நல்லவேளை நாம மறுபடியும் சந்திச்சுட்டோம்” என அவள் ராஜ்ஜைப் பார்த்து பேச அவனோ அதிதியிடம் திரும்பினான். 

சைகை மொழியில் ராஜ் பேசியதை அதிதி தன் இதழ்களால் மொழிப்பெயர்த்து சொல்ல துவங்கினாள்.

“ஆதினி, ராஜ் உங்களை எதுவும் வொர்ரி பண்ணிக்காம, நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு இயல்பா இருக்க சொல்றாங்க. இனி உங்களை ஹேப்பி ஃபேஸ்ஸோட பார்க்கனுமாம்” என்று அதிதி பேசபேச அந்த பெண்ணின் முகத்தில் ஒரு வித குழப்பம். 

ஏன் இவன் மௌனத்தை மட்டுமே கையாண்டு கொண்டு இருக்கின்றான்.

இவன் அதிகம் பேசமாட்டானா இல்லை பேசவேமாட்டானா? என்று நினைத்தவளுக்குள் சொல்ல முடியாத கலக்கம் குடிக் கொண்டது. 

கேட்கலாமா வேண்டாமா என பெண்டுலமாய் ஆடிக் கொண்டிருந்த அவள் நெஞ்சை கண்டு கொண்டவன் புன்னகையுடனே சைகையால் பேச வராது என்றான். 

அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஒரு சேர தாக்கியது ஆதினியை. 

எவ்வளவு பெரிய வலியை இவ்வளவு இயல்பாக சொல்கின்றான் இவன்!

“ஐ யம் சாரி எனக்கு நீங்க இப்படினு தெரியாது” என அவள் வார்த்தையின் வறட்சியில் தவிக்க ராஜ்ஜோ வேகமாக மறுத்து தலையசைத்துவிட்டு கண்களாலேயே ஆறுதல் சொல்லிவிட்டு உண்ணத் துவங்கினான். 

அதிதிக்கு உணவே இறங்கவில்லை. அவர்களிருவரும் பேசியத்தைக் கேட்டதும்  அவளது இதயம் இப்போது குழப்பத்தின் கூடாரமானது. 

மாறி மாறி இருவரையும் பார்த்தவள் பாதி உணவில் எழுந்துக் கொண்டு தன் அறைக்கு வந்துவிட்டாள். ஆனால் அவளின்  கவனம் வேலையில் செல்லவே இல்லை. 

அவளுடைய குழப்பம் எல்லாம், ஆதினிக்கு ராஜ்ஜைப் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனாலும் இத்தனை நாள் இவனைத் தேடிக் கொண்டிருப்பதாக சொல்கிறாளே.  எதற்காக? என்பதே. 

எல்லோருடனும்  ஒதுங்கி நிற்கும் ராஜ் இவளிடம் இயல்பாக பேசுகின்றானே, சிரிக்கின்றானே. எதனால், ஏன்? 

கேள்விக்குதிரைகளின் பாய்ச்சலில் அவளது மன மைதானம் அதிர்ந்து கொண்டிருந்த நேரம் அவளது அலைப்பேசியிலும் அதிர்வு. 

எடுத்துப் பார்க்க அவளது தங்கை மிதுரா தான் சென்னையிலிருந்து அழைத்து இருந்தாள்.

சட்டென அவளது முகத்தில் ஒளி கூடியது. வேகமாக அழைப்பை ஏற்றவள் “சொல்லு மிது” என்றாள். 

“அக்கா காலையிலே மறக்காம  தாய்-சி பண்ணியா? ஆர் யூ ஃபீலிங் ஓகே” 

“அதெல்லாம் பண்ணிட்டேன் மிது. ஐ யம் ஓகே நவ்.  நீ எப்படி இருக்க? சாப்பிட்டியா? அம்மா அப்பா எப்படி இருக்காங்க? அபி எப்படி இருக்கான்? சிற்பியை ஒழுங்கா பார்த்துக்கிறானா அவன்? நீ தீரனை கொஞ்சம் கேப் விட்டு அடிக்கிறியா? இல்லை பையன் இன்னும் விடாம அடிவாங்கிறானா?” என அதிதி மூச்சுவிடாமல் கேட்க இங்கோ மிதுராவுக்கு மூச்சு வாங்கியது. 

“அக்கா கொஞ்சம் மூச்சு விடு. நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம், சாப்பிட்டோம். தீரனை நானும், அபியை சிற்பியும் ஜாலியா அடிச்சு விளையாடிட்டு இருக்கோம். கொஞ்சநஞ்சமா பண்ணானுங்க அனுபவிக்கட்டும். ஆமாம் நீ எப்போ சென்னைக்கு வர?” என்று மிதுரா ஆர்வமாக கேட்டாள். 

“இந்த வாரம் சனிக்கிழமை வருவேன் மிது. எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு” ஏக்கம் தழும்பியது அதிதியின் குரலில். 

“எனக்கும் உன்னைப் பார்க்கணும் போல இருக்குகா. ஐ மிஸ் யூ” என்ற மிதுராவின் குரலிலும் சமஅளவு பரிதவிப்பு. 

“இப்போ மிஸ் யூ சொல்லி என்ன ப்ரயோஜனம். நான் பாட்டுக்கு சென்னையிலே சிவனேனு சுத்திட்டு இருந்து இருப்பேன்… என்னை ஏதேதோ டையலாக் பேசி இந்த உர்ராங்குட்டான்க்கு துணையா வர கன்வின்ஸ் பண்ணிட்டிங்களே. இப்படி  தனியா மாட்டிவிட்டுட்டிங்களே. இது நியாயமா?” என அதிதி நொடித்தபடி கேட்க அங்கே ராஜ்ஜும் அதே கேள்வியை தான் தீரனிடம் கேட்டுக் கொண்டிருந்தான். 

“டேய் தீரா, உண்மையை சொல்லு நீ வேணும்னு தானே அந்த குழப்படியான வீட்டை வாங்கி அதிதியை என் கூட தங்க வைச்சே” என வீடியோ காலில் ராஜ் சைகையில் கேட்க தீரனிடம் அசட்டு முழிப்பு. 

அதைக் கண்டவன் கோபமாக தீரனை முறைத்தான். 

“தெரியும்டா! இதை நீ தான் பண்ணி இருப்பேனு. அதிதியை கூட்டிட்டு போகலனா நான் மிதுராவை விட்டுட்டு பெங்களூருக்கு வந்துடுவேனு சொல்லி என்னை ப்ளாக்மெயில் பண்ணி அவளை என் கூட அனுப்பி வைச்சதைக் கூட பொறுத்துக்கிட்டேன். ஆனால் ஏன்டா இப்படி ஒரே வீட்டுலே ரெண்டு பேரையும் தங்கும்படியா செய்தே” என ராஜ் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு சைகையாலேயே தீரனைப் படிக்க சொன்னான். 

எடுத்துப் படித்த தீரன், “மச்சான் அது நீயும் அதிதியும் சேர்ந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சுடா அதான்” என தயங்கியபடி இழுத்தான்.

“தீரா ஐ யம் அகெய்ன் டெல்லிங். அதிதி இஸ் நாட் மை டைப். அவளுக்கும் எனக்கும் செட்டே ஆகாது” என்று ராஜ் தீர்க்கமாக முகத்தை வைத்துக் கொண்டு சைகையில் சொல்ல, தீரனின் முகத்தில் அப்பட்டமான சோர்வு. 

இவனை எப்படி தான் வழிக்கு கொண்டு வருவது? தெரியவில்லை அவனுக்கு. 

அதேப் போல தான் மிதுராவிற்கும் அதிதியை சமாளிப்பது எப்படி என்று தெரியவில்லை. 

விடாமல் ராஜ்ஜைப் பற்றி குற்றப்பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்த அதிதியை எண்ணி பெருமூச்சுவிட்டாள்.  ராஜ்ஜைப் பற்றி மிதுரா நன்கு அறிவாள். அவளது உயிர்த்தோழன் அவன்.

பல நேரங்களில் அவனது செயல்களில் தாயன்பு வெளிப்பட்டது உண்டு. ஆனால் அது ஏன் அதிதியின் கண்களுக்கு மட்டும் தெரியாமல் போனது என்ற ஆற்றாமையோடு பேசத் துவங்கினாள். 

“அக்கா உனக்கு ராஜ்ஜைப் பத்தி தெரியலை. அவங்க எவ்வளவு ஸ்வீட் தெரியுமா? நீ தான் எப்போ பார்த்தாலும் ராஜ் கிட்டே சண்டை போடுற” 

“ஏதே! அவன் ஸ்வீட், நீ பார்த்தே. ஏன்டி கடுப்பை கிளப்பாதே” என்றாள் அதிதி சலிப்பாக. 

“அக்கா உண்மையா தான் சொல்றேன். ராஜ் எவ்வளவு வலியை அனுபவிச்சு இருக்காங்க தெரியுமா? அதனாலே மே பீ அவங்க ரூடா தெரியலாம். ஆனால் ரொம்ப கிட்டே இருந்து பார்த்தா தான்  அவங்க எவ்வளவு அன்பானவங்கனு புரியும்” 

“நான் அவனை ரொம்ப கிட்டே பார்த்துட்டேன் மிது, எந்த ஆங்கில்ல இருந்து பார்த்தாலும் எனக்கு உர்ராங்குட்டானா தான் அவன் எனக்கு தெரியுறான்” 

“அக்கா ராஜ் ரொம்ப ஜெனியூன். நைஸ் கேரக்டர். நீ தான் சும்மா சும்மா குறை சொல்லிட்டு இருக்க” என்றாள் மிதுரா, ராஜ்ஜின் சார்பாக. 

“ஐயோ நான் குறை சொல்லைல! அவன் தான் நான் பார்க்கிற எல்லா வேலையிலேயும் வேணும்னே நொட்டை சொல்றான். சரியான கோளாறு கண்ணன்” என்றாள் அதிதி கடுப்பாக. 

“அக்கா என்ன தான் இருந்தாலும் ராஜ்ஜை கோளாறு கண்ணானுலாம் சொல்லக்கூடாது. நான் அப்புறம் சண்டைப் போடுவேன் சொல்லிட்டேன் ஆமாம்.” என்ற மிதுரா அதிதியை நினைத்துப் பெருமூச்சுவிட்டாள். 

மிதுராவின் இதயத்தில் ஒரே கேள்வி மட்டுமே. 

ஏன் பார்த்த முதல் நாளிலிருந்தே ராஜ்ஜும் அதிதியும் இப்படி  காரணமே இல்லாமல் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே. 

இங்கே மிதுரா மனதில் நினைத்த அதே கேள்வியை அங்கே தீரன், ராஜ்ஜிடம் கேட்டிருந்தான். 

“டேய் ராஜ். நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். சென்னையிலே முதல் நாள் நீயும் அதிதியும் மீட் பண்ணும் போது  எல்லாமே ஸ்மூத்தா தானே இருந்தது. ஆனால் நீ தான் வேணும்னே அதிதியை ட்ரைனினு சொல்லி வம்புக்கு இழுத்தே. எப்பவும் இப்படி பண்ண மாட்டியே. ஏன் அதிதி கிட்டே மட்டும் காரணம் இல்லாம சண்டைப் போடுற?” என்ற தீரனின் கேள்வியில் ராஜ்ஜின் முகத்தில் கடினமேறியது. 

“நாங்க காரணத்தோட தான் சண்டைப் போடுறோம் தீரா” என்றிவன் சொல்ல அங்கே மிதுராவோ அதிதியை கேள்வியால் குடைந்துக் கொண்டிருந்தாள். 

“ஓகே சொல்லு அப்படி என்ன காரணத்தோட அக்கா சண்டைப் போடுற. சென்னையிலே நீங்க மீட் பண்ணும் போது எந்த ப்ரச்சனையும் பெருசா நடக்கலையே. அப்புறம் ஏன்?” என மிதுரா கேட்க அதிதியின் குரலில் அழுத்தம். 

“யெஸ் மிதுரா, சென்னையிலே பெருசா எந்த பிரச்சனையும் நடக்கல, ஆனால் பெங்களூர்லே நடந்தது. வீ ஆல்ரெடி மெட் இன் பெங்களூர்” என்றாள் அதிதி தீர்க்கமாக. 

“ஏதே நீங்க ஒரு வருஷத்துக்கு முன்னாடியே பெங்களூர்லே மீட் பண்ணியிருக்காங்களா?” என தீரன் இங்கே ராஜ்ஜிடம் கேட்க அவன் அழுத்தமாக தலையசைத்தான். 

“வாட்?” என்ற இருவரின் குரலிலும்  அப்பட்டமான அதிர்ச்சி. 

ஆனால் அந்த அதிர்ச்சிக்கு காரணமான ராஜ்ஜின் முகத்திலும் அதிதியின் உதடுகளிலும் அதன் பின்பு அசாத்திய மௌனம்.

Leave a Reply

error: Content is protected !!