உயிரின் ஒலி(ளி)யே 3

உயிரின் ஒலி(ளி)யே 3

ஏசியின் குளிரையும் மீறி அந்த நேர்காணல் அறை சூடாகிக் கொண்டிருந்தது.

அந்த கொதிப்பிற்கு காரணம் அந்த இருவரின் உஷ்ணப் பார்வையே.

நடந்து முடிந்திருந்த நேர்காணலில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தான் இருவருக்குள்ளேயும் அப்படி ஒரு மோதல்.

“மிஸ் அதிதி. ஒரு டெக்னிக்கல் லீடா சொல்றேன், அந்த பையன் கிட்டே நல்ல டெக்னிகல் நோலேஜ் இருக்கு. அவனை செலக்ட் பண்ணலாம்”

“மிஸ்டர் ராஜ். ஒரு எச்.ஆரா செல்றேன், அந்த பொண்ணு கிட்டே நல்லா புரிஞ்சுக்கிற சக்தி இருக்கு. அவளாலே இந்த புது சூழ்நிலையை சமாளிக்க  முடியும்”

“நோ அந்த பையன் தான்”  ராஜ் விடாப்பிடியாக நிற்க, “இல்லை அந்த பொண்ணு தான்” என அதிதி இன்னொருபுறம் விடாமல் நின்றாள்.

எதிரும் புதிருமாய் நின்றுக் கொண்டிருந்த இருவரையும் மாறி மாறி பீதியோடு பார்த்தான் விக்ரம்.

விக்ரம், டெஸ்டிங் டீம்மின் ஹெட்டாக நான்கு வருடங்களாக பணிபுரிகிறான்.

அவனுக்கு தமிழும் கன்னடமும் சரளமாக பேச வரும். தீரனும் ராஜ்ஜும் சென்னையில் இருக்கும் சமயங்களில் இவன் தான் பெங்களூர் அலுவலகத்தைப் பார்த்துக் கொள்வான். ராஜ்ஜின் நெருங்கிய நண்பனும் கூட.

இதுவரை ராஜ் எல்லோரிடமும் அமைதியான அணுகுமுறையை கடைப்பிடித்து தான் பார்த்திருக்கிறான்.

ஆனால் அதிதியிடம் மட்டும் இப்படி ஏட்டிக்கு போட்டியாக நிற்கும் இந்த ராஜ், அவனுக்கு மிகப் புதியவன்.

தப்பு பெருசா இல்லை பேன்ட் பெருசா என்னும் ரீதியில் இவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்தால் இன்றைக்குள் முடிவெடுக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

இவர்கள் இருவரின் அடிதடியும் நிறுத்தும் சமாதான கீதமாய் ஒலித்தது விக்ரமின் குரல்.

“நாம பேசாம ரெண்டு பேரையும் வேலைக்கு எடுத்துக்கலாமே” விக்ரம் சொன்ன தற்காலிக தீர்வில் இருவரும் யோசனையுடன் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துவிட்டு பிறகு சரி என்ற சமாதானத்திற்கு வந்தனர்.

“அப்பாடா! ஒருவழியா இப்பவாவது முடிவுக்கு வந்தாங்களே” விக்ரமிடம் ஏகத்துக்கும் பெருமூச்சு.

அந்த நேர்காணல் அறையை விட்டு வெளியே வந்த அதிதி, ராஜ்ஜையே உக்கிரமாக முறைத்துக் கொண்டு திரும்ப எதிர்பாராதவிதமாய் அவளது கால் அருகிலிருந்த நாற்காலியில் முட்டிக் கொண்டது.

“ஐயோ” என அவள் சட்டென்று அலற ராஜ்ஜின் முகத்தில் ஏக்கர் கணக்கில் எகத்தாளம்.

“ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே” என்ற பாடலை உதடுகளில் விசிலடித்தபடி  அவளைப் பார்த்து சிரிக்க அதிதியோ கண்களை விரித்துப் பார்த்தாள்.

உன்னால் விசிலடிக்க முடியுமா? விழிகளாலேயே கேள்வி கேட்டாள் அதிதி.

அந்த கேள்வியைப் படித்தவன் “வாய் பேச முடியாதவங்களாலேயும் விசிலடிக்க முடியும்” என்று சைகையால் சொல்லிவிட்டு “மயிலைப் பிடிச்சு காலை உடைச்சு” என்ற பாடலை ஹம் செய்தபடியே முன்னே சென்றான். 

அவனையே  ஆச்சர்யத்தோடும் அதிர்வோடும் தொடர்ந்தது அதிதியின் விழிகள்.

அவன் சென்ற திசை நோக்கி  அடுத்த எட்டை வைக்க கால்களில் வலி பின்னியது. சுணக்கத்தோடு நடக்க முயன்றவளின் தோளை ஆதரவாய் தாங்கிப் பிடித்தது ஒரு கரம்.

நிமிர்ந்துப் பார்க்க அருகில் விக்ரம்.

“ரொம்ப வலிக்குதா?” என்றவனின் கண்களிலோ அக்கறையின் மின்னல்.

“நோ பெருசா அடிப்படல. ஐ கேன் மேனேஜ்” அதிதியிடம் விலக முயலும் பாங்கு.

“நோ அதிதி. அவ்வளவு தூரம் உங்களாலே தனியா போக முடியாது. நான் ஹெல்ப் பண்றேன்” விக்ரம் ஆதரவாய் பிடித்தபடி நடக்கத் துவங்க அதிதியால் அதற்கு மேலும் மறுக்க முடியவில்லை.

அப்படி மறுத்தால் நாகரீகமாவும் இருக்காது! 

அவனுடன் இணைந்து நடந்து வந்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் விழுந்தது ஐயோ என்ற சப்தம்.

அதிதியும் அவளுக்கு முன்னே சென்று கொண்டிருந்த ராஜ்ஜும் வேகமாக திரும்பிப் பார்க்க, அங்கே ஆதினி காலில் அடிப்பட்டு நிற்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள்.

சட்டென்று பதற்றமான ராஜ் வேகமாக ஓடிச் சென்று அவளது காலைப் பார்க்க ஆதினியின் முகத்திலோ வலியின் வீரியம்.

அவள் முகத்தைப் பார்த்தவன் நொடியும் தாமதியாமல் சட்டென அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.

இதைப் பார்த்த மொத்த அலுவலகமே அதிர்ச்சியில் உறைந்துப் போனது.

ஆனால் ராஜ் அதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை. அவன் எண்ணமெல்லாம் ஆதினியின் மீது மட்டுமே இருந்தது.

அவளை பத்திரமாக தூக்கி சென்று அவளது  இருக்கையில் அமர வைத்தவன் “வலிக்குதா” என்று டைப் செய்து காண்பிக்க “வலிக்கலை” என்று மறுத்து தலையசைத்தாள். ஆனால் முகம் மட்டும் வலிக்கிறது என்ற உண்மையை மறைக்காமல் பறைசாற்றியது.

“ஒரு நிமிஷம் ஆதினி. இதோ வந்துடுறேன்” என மீண்டும் டைப் செய்துவிட்டு வேகமாய்  சென்ற ராஜ், கையில் ஆயில்மென்ட்டோடு திரும்ப வந்தான்.

அவளது பாதத்தை எடுத்து அவளுக்கு வலிக்காமல் மருந்தைப் போட அதிதியோ ‘இங்கே என்ன தான்டா நடக்குது’ என்ற ரீதியில் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு தன் கணினிபுறம் திரும்பிக் கொண்டாள்.

ராஜ், அவளது காயத்திற்கு மருந்திட்டுவிட்டு “ஆர் யூ ஓகே. முடியலைனா சொல்லு ஆதினி. வீட்டுக்கு போகலாம்” என சொல்ல 

ஆதினியோ, “நோ சார். ஐ யம் ஓகே ” என்று மறுத்து தலையசைத்தாள்.

“ஐ யம் நாட் சார் டூ யூ. கால் மீ ராஜ்” அவன் டைப் செய்து காண்பித்ததைப் பார்த்து

ஆதினியிடம் புன்முறுவல்.

மனம் லேசான உணர்வுடன் “நோ ராஜ். ஐ யம் ஃபைன். தேங்க்ஸ் அகெய்ன் ஃபார் எவ்ரிதிங்” என்றவள் மீண்டும் அழுத்தி சொல்ல அவனோ மென்புன்னகையோடு கண்ணையும் முகத்தையும் சுருக்கி குறும்பாய் பார்த்துவிட்டு  திரும்பினான்.

கணினியே கதியென கிடந்த அதிதியைப் பார்த்ததும் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து அழுத்தம் குடிக்கொண்டது.

வேகமாக அவளருகில் சென்றவன்  ஆயில்மென்ட்டை வைத்துவிட்டு மேஜையைத் தட்டினான்.

நிமிர்ந்து அவனையும் ஆயில்மென்ட்டையும் ஒரு பார்வைப் பார்த்தவள் மீண்டும் கணினிப்பக்கம் திரும்பிக் கொள்ள அவனுக்குள் எரிச்சல் மூண்டது.

“மேடம், ஆயில்மென்ட்டை கொடுக்க தான் முடியும். போட்டு விடுவேனுலாம் எதிர் பார்க்காதீங்க” என்று டைப் செய்துவிட்டு நக்கலாக பார்க்க அதிதிக்குள்ளோ கோபம் பலமடங்காக எகிறியது.

“மிஸ்டர் உங்க ஆயில்மென்ட்டை எடுத்துட்டு நகர்ந்து போறீங்களா. எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு கணினியில் பார்வையை பதிக்க அவனும் அடுத்து வற்புறுத்தாது அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

‘அப்பாடா போயிட்டானா! வலி உசுரை போகுது. ஆயில்மென்ட்டை எடுத்து போடுவோம்’ என திரும்பி மேஜையைப் பார்க்க அங்கே ஆயில்மென்ட்டை காணவில்லை.

‘அடப்பாவி உண்மையாவே தூக்கிட்டு போயிட்டானா’ என யோசித்தபடி ராஜ் அறையை எட்டிப் பார்க்க அவனோ ஆயில்மென்ட்டை கையில் ஆட்டியபடி அவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான்.

‘சே வலியிலே இப்போ போய் அவன் கிட்டே ஆயில்மென்ட் கேட்டா அசிங்கம் அதிதி. ஈவினிங் போகும் போது மெடிக்கல் ரூம்லே வாங்கிட்டு போயிடலாம்’ என யோசித்துக் கொண்டிருந்தவளின் மேஜையில் ஆயில்மென்ட்டை வைத்தது ஒரு கரம்.

நிமிர்ந்துப் பார்க்க ஆதினி.

“இதைப் போட்டுட்டு வொர்க் பாருங்க. வலி கொஞ்சம் குறையும்” என்றவளை புன்முறுவலோடும் சங்கடத்துடனும் பார்த்தாள்.

“ஆதினி காயம்பட்ட காலோட ஏன் எழுந்து வந்தீங்க. அங்கே இருந்து தூக்கிப் போட்டு இருந்தா நான் கேட்ச் பிடிச்சு இருப்பேன்ல.” என்றாள் அவள் மீது ஊறிய அக்கறையோடு.

“ஆமாம்ல இப்படி பண்ணியிருக்கலாம்ல. ஏன் எனக்கு தோணாம போச்சு?” என்று ஆதினி யோசனையாய் நெற்றியில் தட்டிக் கொள்ள அதிதியோ அவளைப் பார்த்து நட்பாய் சிரித்தாள்.

ஆதினி எழுந்து வந்தததைக் கண்ணாடி திரை வழியே கண்ட ராஜ் வேகமாக அங்கே வந்து அதிதியைப் பார்த்து முறைத்தான்.

“ஏன் அவளை ஸ்ட்ரெயின் பண்ண வெச்ச? நான் தான் அப்பவே ஆயில்மென்ட்டை நீட்டுனேன்ல. அப்போ பெருசா சீனை போட்டுட்டு, இப்போ ஆதினியை எழுந்து வர வெச்சு இருக்க” என்று வாயசைக்க அதிதிக்கோ எங்காவது போய் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

ராஜ் வாயசைத்ததை மொழிப்பெயர்க்க முடியாமல் ஆதினி அவனையே குழப்பமாக பார்த்தாள்.

அதிதியோ இப்போது ஏதாவது பதில் பேசினால் அதில் ஆதினி செய்த உதவியை ததவறாக சித்தரித்துவிடுவது போல ஆகிவிடுமே என்று எண்ணி ராஜ் பேசியது எதற்கும் பதில் பேசவில்லை.

அவள் இதழ்களில் அழுத்தமான மௌனகோடு.

ஆதினியை கையில் தாங்கிக் கொண்டவன் அவளை இருக்கையில் அமரவைத்துவிட்டு, “இனி ஆஃபிஸ் முடியுற வரை எழுந்துக்கக்கூடாது. ஹெல்ப் வேணும்னா என்னைக் கூப்பிடு ஓகே வா?” எனக் கேட்க ஆமோதிப்போடு தலையசைத்தாள்.

அவளைப் பார்த்து புன்னகைத்தவன் நேராக அதிதியிடம் கோபமுகத்தோடு  வந்தான்.

“அவளை கஷ்டப்படுத்துனா என்னை நீ வேற மாதிரி பார்ப்ப. பீ கேர்ஃபுல்” டைப் செய்துவிட்டு கோபமாக கை ஆட்டி எச்சரித்தவனைப் பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தாள்.

“மிஸ்டர்.ராஜ் நான் எப்பவும் உங்களை வேற மாதிரி தான் பார்த்துட்டு இருக்கேன்.  அதை முதலிலே புரிஞ்சுக்கோங்க. உங்களை மாதிரி நான் என்ன முசுடா? என் ப்ரெண்ட் கூட எப்படி பேசணும், எப்படி பேசக்கூடாதுனு நீங்க பாடம் எடுக்க வேண்டாம். கிளம்புங்க” என்று அவனைப் போலவே டைப் செய்துவிட்டு எதிரில் நின்றவனை மதியாமல் வேலையில் மூழ்கத் துவங்கிவிட்டாள்.

‘காலையிலே எழுந்து என்ன தான் தாய்-சி பண்ணாலும் உடம்புலே மட்டும் கொழுப்பு குறையுதா பாரு’ மனதுக்குள் முணுமுணுத்தபடியே கதவை அறைந்து சாய்ந்துவிட்டு வெளியே சென்றவனை திருப்தியோடு பார்த்துவிட்டு திரும்பினாள்.

ஆதினிக்கு அவர்கள் இருவர் பேசியது புரியவில்லை. ஆனால் தன்னால் தான் ஏதோ பிரச்சனை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.

“ஏதும் ப்ராப்ளமா?” தயங்கியபடி ஆதினி இழுக்க, “நோ மா. எந்த ப்ராப்ளமும் இல்லை” என்று மறுத்த அதிதி எதிரில் இருந்த அந்த பெண்ணையே தன் கண்களால் அளவெடுத்தாள்.

இளவயதுக்கே உரிய முழுப் புன்னகை அந்த பெண்ணின் முகத்தில் இல்லை.

தன்னை அலங்கரித்துக் கொள்ளும் எந்த முனைப்பாடும் அவளிடம் இல்லை. மாறாக அழகாக இருந்த தன் உருவத்தையே அழகு குறைத்து காட்டும்விதமாய் உடுத்தியிருந்தாள்.

இவள் ஏன் இப்படி இருக்கிறாள்?

கேள்வியுடனே தன் வேலையில் மூழ்கத் துவங்கினாள்.

நேரம் சரியாக ஏழைத் தொட்டதும் வேகமாக ராஜ் அந்த அறைக்குள்ளே வந்தான்.

“இந்த காலோட பஸ்லே போக வேண்டாம். ஐ வில் டிராப் யூ” என குறுஞ்செய்தியில் கேட்டவனின் வார்த்தைகளை மறுக்க தோன்றவில்லை ஆதினிக்கு.

தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்ப முயன்றவள் யோசனையுடன் திரும்பி அதிதியைப் பார்த்தாள்.

“உங்களுக்கும் அடிப்பட்டு இருக்கே. எங்களோட வரீங்களா?” தயக்கமாய் கேட்ட ஆதினியை மெல்லிய சிரிப்போடு பார்த்தவள், “இட்ஸ் ஓகே. ஐ கேன் மேனேஜ்” என்று மறுத்தாள்.

வலியோடு நடந்து சென்றவளின் மீது மொழிப் பெயர்க்க முடியாத பார்வையை வீசிவிட்டு ஆதினியை  தன் தோள்களில் தாங்கியவன் மெல்ல காரை நோக்கி கூட்டி சென்றான்.

அவளை உள்ளே அமர வைத்துவிட்டு காரை உயிர்ப்பிக்க அதுவோ சீற துவங்கியது.

வண்டி ஓட்டிக் கொண்டிருப்பவனால் தன்னுடன் டைப் செய்தபடியே காரை ஓட்ட முடியாது என உணர்ந்தவள் மௌனத்தைக் கையாண்டாள்.

ஆனால் அந்த குறிப்பிட்ட இடத்தை நெருங்க நெருங்க ஆதினியால் மௌனத்தைக் கையாள முடியவில்லை.

அதிக போக்குவரத்து நெரிசலில்லாத அந்த ஒற்றையடி சாலை அவள் இதயத்தில் ஏதேதோ நினைவுகளை கீறிவிட முகத்தில் அதுவரை இருந்த சந்தோஷரேகை முற்றிலும் அழிந்துப் போனது.

ராஜ்ஜின் தோளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவள் “இந்த இடம் நியாபகம் இருக்கா ராஜ். இங்கே தானே நான் உங்களை முதல்முறையா பார்த்தேன்” என்றாள் குரல் உடைய.

அவனிடமும் பெரும் தடுமாற்றம்.

அவளது தலையை வாஞ்சையாய் கோதியவனின் இதயத்திலோ அந்த நாளைய நினைவுகள் எழும்ப வருத்தத்தோடு காரைவிட்டு வெளியே வந்து நின்றான்.

அலுவலகத்திலிருந்து கிளம்பிய அந்த பேருந்து குறிப்பிட்ட அந்த ஒற்றையடி பாதையைத் தொடும் போது அதிதியின் கண்கள் தன்னிச்சையாக வெளியே நோக்கியது. அவள் எப்போதும் அந்த இடத்தை நெருங்கும் போது வெளியே எட்டிப் பார்த்துவிடுவாள்.

இன்றும் அதே போல எட்டிப் பார்க்க அங்கே ராஜ் வருத்தத்தோடு காரில் சாய்ந்தபடி நின்றுக் கொண்டிருந்தான்.

எந்த இடத்தில் தனக்கும் அவனுக்கும் விரிசல் விழத் துவங்கியதோ அதே இடத்தில் நின்று கொண்டிருந்தவனைக் கண்டு அதிதியின் இதழ்களில் கசப்பான புன்னகை.

Leave a Reply

error: Content is protected !!