உயிரோவியம் நீயடி பெண்ணே – 10

20b5165ec70f4cc401f4a84e9c702b19

உயிரோவியம் நீயடி பெண்ணே – 10

10 

அடுத்த பள்ளியாண்டிற்கான வகுப்புகள் துவங்கி நடக்க, நாட்கள் மிகவும் வேகமாக ஓடி மறந்துக் கொண்டிருந்தது. தனது லட்சியப் படிப்பான மருத்துவ படிப்பில், எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில், சுஜிதா தனது முழு முயற்சியையும், முழு கவனத்தையும் படிப்பதில் பதிக்கத் துவங்கி இருந்தாள்.

ஒருநாள் மாலை அவள் பள்ளியை விட்டு வெளியில் வந்த பொழுது, சூர்யா தனது நண்பர்களுடன் நின்றுப் பேசிக் கொண்டிருந்தான். தனது சைக்கிளை தள்ளிக் கொண்டு ஸ்ருஷ்டியுடன் பேசிக் கொண்டே வெளியில் வந்தவள், அவனை அதிசயமாகப் பார்த்து, கண்களாலேயே என்னவென்றுக் கேட்க, அவனது நண்பர்களிடம் இருந்து நகர்ந்து வந்தவன்,

“நீ பாஸ் பண்ணினதுக்கு ட்ரீட் தரேன்னு சொன்னனே சுஜி.. அது தான் கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன்.. என்ன ஐஸ்க்ரீம் சாப்பிடப் போகலாமா?” அவன் கேட்க,

“இப்போவா? என்ன திடீர்ன்னு?” அவள் குழப்பமாகக் கேட்க,

“ரொம்ப நாள் பெண்டிங் இல்ல சுஜி. அது தான் இன்னைக்கு போகலாம்ன்னு. இல்ல.. சுமை ஏறிக்கிட்டே போகும்.. தாங்காது..” அவன் சொல்ல, சுஜிதா பேந்த விழித்துக் கொண்டு நின்றாள்..

“சூர்யா டைரெக்ட்டா சொல்லு.. சிஸ்டர்க்கு புரியல பாரு.” அவளது முகத்தைப் பார்த்த அவனது நண்பன் ஒருவன் குரல் கொடுக்க, சுஜிதா அவனைப் பார்த்துவிட்டு, கேள்வியாக சூர்யாவைப் பார்க்க, சூர்யா அவனை முறைத்துக் கொண்டிருந்தான்..

“என்னாச்சு சூர்யா?” சுஜிதா புரியாமல் கேட்க,

“இல்ல சுஜி.. ஏற்கனவே நான் உனக்குத் தர வேண்டிய ட்ரீட் இருக்கு.. அதோட நீ மார்க் வாங்கினதுக்கு உனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தரேன்னு சொன்னது ஒண்ணு வேற பாக்கி இருக்கு.. இப்போ நீ படிக்கிறதைப் பார்த்தா நான் உனக்கு அடுத்து தரது பெருசா தான் தரணும் போல.. எல்லாமா சேர்ந்து தரதுன்னா எனக்கு பாக்கெட் மணி போதாது.. அதனால தான் இப்போவே போய் கணக்கைத் தீர்த்துக்கலாம்ன்னு சொல்றேன்.. வா.. போகலாம்.” என்று அழைக்க, சுஜிதா தயங்கி நின்றாள்.

“என்னாச்சு?” அவன் கேட்க,  

“இல்ல.. அக்கா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..” என்று இழுக்க, உடனே தனது செல்லை எடுத்தவன், ஜைஷ்ணவிக்கு அழைத்தான்..

“ஜைஷு.. நான் சுஜியை கொஞ்சம் வெளிய கூட்டிட்டு போறேன்.. இன்னைக்கு ஒருநாளைக்கு அவளுக்கு லீவ் கொடு..” என்று சொல்லவும்,

“டேய்.. என்னடா பொசுக்குன்னு இப்படி சொல்ற? ஜாக்கிரதைடா.. ரெண்டு பேரும் சீக்கிரம் வந்திருங்க..” என்று அவள் பதில் சொல்லவும், சிரித்துக் கொண்டே போனை வைத்தவன்,

“இப்போ போகலாமா?” என்று கேட்க, அவனைப் பார்த்துக் கொண்டே தலையசைத்தவள், தனது சைக்கிள் ஸ்டாண்ட்டை எடுக்க,

“இல்ல.. நீ என் கூட வண்டியில வா.. இதை என் ஃப்ரெண்ட்  கொண்டு போய் நம்ம வீட்டு பக்கத்துல இருக்கற கடையில நிறுத்திடுவான்.. நாம போகும்போது எடுத்துக்கலாம்..” எனவும், அவனது நண்பன் அவளிடம்  இருந்து சைக்கிளை வாங்கிக் கொள்ள, சுஜிதா அமைதியாக சூர்யாவின் பைக்கில் ஏறிக் கொண்டாள்..

“சூர்யா.. நான் சும்மா தான் உங்களை ட்ரீட் கேட்டேன். அதுக்காக திடீர்ன்னு இப்படி பெருசா ப்ளான் செய்து எல்லாம் என்னைக் கூட்டிட்டு போக வேண்டாம்.. இட்ஸ் ஓகே..” தயங்கியபடி அவள் சொல்ல,

“இல்ல.. ட்ரீட்குன்னு இல்ல.. எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” சூர்யாவின் பதிலில் அவளது நெஞ்சம் படபடக்கத் துவங்கியது.. அருகில் இருந்த சிறிய வணிக வளாகத்தில் இருந்த ஒரு ஐஸ்க்ரீம் பார்லருக்கு அவளை அழைத்துச் சென்றான்.

அவள் சொல்லமலேயே அவளுக்கு பிடித்த ஐஸ்க்ரீமை வாங்கிக் கொண்டு, தனக்கொன்றையும் வாங்கிக் கொண்டவன், அவளது அருகே டேபிளில் வந்து அமர்ந்துக் கொண்டான்..

சுஜி அமைதியாக ஐஸ்க்ரீமை ஸ்பூனில் குத்திக் கொண்டிருக்க, “உனக்கு பிடிச்ச ப்ளேவர் தானே.. ஏன் சாப்பிடாம உட்கார்ந்து இருக்க?” என்று கேட்கவும், அவனது முகத்தைப் பார்த்தவள், ஒன்றும் இல்லை என்று தலையசைத்து, அதை உண்ணத் துவங்க,

“உன்னோட ஐஸ்க்ரீம் டேஸ்ட்டா இருக்கா?” அவன் கேட்கவும், அவள் தலை அசைக்க, அவளது கப்பில் இருந்த ஐஸ்க்ரீமை தனது ஸ்பூனில் எடுத்துக் கொண்டவன், அதை ருசி பார்த்து,

“ஆமா.. நல்லா தான் இருக்கு.. என்னோடது டேஸ்ட் பார்க்கறியா?” என்றபடி தன்னுடைய ஐஸ்க்ரீமை நீட்டவும், சுஜிதா வேண்டாம் என்று தலையசைத்தாள்.

“இப்போ எதுக்கு இப்படி சைலென்ட்டா இருக்க? எப்போப் பாரு என்கிட்டே ஏட்டிக்கு போட்டியா சண்டைப் போடுவ தானே. இப்போ பேசு.. உன்னோட அமைதி எனக்கு ரொம்ப ஒரு மாதிரி இருக்கு சுஜி..” என்றபடி அவளது முகத்தைப் பார்க்க,

“வீட்டுக்குப் போகலாமா? எனக்கு ஒரு மாதிரி இருக்கு..” மெல்லிய குரலில் அவள் சொல்லவும், அவளது கையை எடுத்து தனது கைக்குள் பொத்திக் கொள்ள, பெண்ணவளோ அவனது முகத்தை கலக்கத்துடன் பார்த்தாள்.  

“சுஜி.. உன் கூட இப்படியே சண்டைப் போட்டுக்கிட்டு.. நீ என்னைச் சீண்டவே செய்யற குறும்புத்தனத்தை ரசிச்சுக்கிட்டு.. அப்பப்போ காட்டற உன்னோட வெளிப்படையான அன்புல நனைஞ்சிக்கிட்டு கடைசி வரைக்கும் வாழணும்ன்னு ஆசைப்படறேன்.. அதெல்லாம் நடக்குமா?” என்று கேட்க, சுஜிதா அவனைப் பார்த்து திகைத்தாள்..

“சூர்யா..” அவள் இழுக்க,

“என்ன சுஜி? அப்படி எல்லாம் என் மனசுல எதுவும் இல்லைன்னு சொல்லப் போறியா என்ன?” என்று கேட்டவன், அவள் பதில் சொல்வதற்கு முன்பே,

“அவசரப்பட்டு எந்த பதிலையும் இப்போவே சொல்லணும்ன்னு இல்லை சுஜி.. நீ எவ்வளவு வேணா டைம் எடுத்துக்கோ.. நீ காலேஜ் சேர்ந்துட்டு கூட எங்கிட்டச் சொல்லு.. நான் வெயிட் பண்றேன்.. ஆனா.. நான் உன்னை நினைச்சிட்டு இருக்கேன்னு மட்டும் நியாபகம் வச்சிக்கோ.. வேற யாரும் முந்திக்கிறதுக்கு முன்னால நான் முந்திக்கறேன்.. அவ்வளவு தான்..” என்று சொன்னவன், அவளது கண்களில் கண்ணீர் வழியவும், அதைத் துடைத்துவிட்டு,

“ஏன் சுஜி அழற? என்னைப் பிடிக்கலையா?” பாவமாக அவன் கேட்க, ‘இல்லை’ என்று மறுப்பாக அவள் தலையசைக்க, ‘இல்லையா?’ அவனது குரல் காற்றாக தான் வெளி வந்தது..

“ம்ப்ச்.. சூர்யா.. அப்படி இல்ல..” மெல்லிய குரலில் சொன்னவள்,

“இப்போ என்ன திடீர்ன்னு?” என்று கேட்க, அவளது கையுடன் தனது கையைக் கோர்த்துக் கொண்டவன், 

“சுஜி.. என் மனசுல இந்த ஒரு வருஷமா அழுத்திக்கிட்டு இருந்ததை தான் இப்போ சொல்றேன் சுஜி.. நீ படிச்சு முடிச்ச உடனே சொல்லி இருக்கலாம் தான்.. ஆனா.. என்னோட தங்க மயிலை எனக்கு வேணும். அவக்கிட்ட நான் தான் முதல்ல காதலைச் சொல்லணும். யாரும் எனக்கு முந்திடக் கூடாதுன்னு நினைச்சேன். அது தான் சொல்லிட்டேன்.. நீ உன் டைம் எடுத்துக்கோ.. இப்போவே ஒத்துக்கணும்ன்னு இல்ல என்ன?” என்றவன், தனது ஐஸ்க்ரீமை ஒரே வாயில் முழுங்கிவிட்டு, அவளைப் பார்க்க, சுஜிதா இன்னமும் நீர்த்துப் போன ஐஸ்க்ரீமுடன் அமர்ந்திருக்க,  

“உனக்கு ஐஸ்க்ரீம் பிடிக்கும்ன்னு தானே இங்க கூட்டிட்டு வந்தேன்.. பாரு.. ஐஸ்க்ரீம் மில்க்ஷேக்கா மாறிடுச்சு.. போதும் இதைச் சாப்பிட வேண்டாம்..” என்றவன்,

“வீட்டுக்குப் போகலாமா?” என்று கேட்க, அவள் அவசரமாகத் தலையசைத்து எழுந்து நின்றாள். அவளைப் பார்த்துச் சிரித்து, அவளுடன் கிளம்பியவன், அவளது சைக்கிளை அந்தக் கடையில் இருந்து எடுத்துக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டவள், அவசரமாக வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்த, ‘உப்ப்’ என்று தனது மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவன், அவளைப் பின்தொடர்ந்துச் சென்றான்..

அவளது மனதினில் எழுந்த படபடப்பு இன்னும் அடங்க மறுப்பதாய்.. வயிற்றுக்குள் ஏதோ ஒரு வித உணர்வு.. வீட்டுப் பாடத்தை செய்ய எடுத்தவளுக்கோ, அதை செய்ய முடியாமல் சூர்யாவின் நினைவுகளே முட்டி மோதிக் கொண்டு நின்றது..

தனது காதலைச் சொல்லும்பொழுது அவனது முகமும் கண்களும், வார்த்தையால் அவன் சொல்லாத ஆயிரம் உணர்வுகளைச் சொல்ல, அவளது நெஞ்சின் படபடப்பு அதிவேகமாககியது. அந்த துடிப்பின் கணம் தாங்காமலேயே அவளது கண்கள் கண்ணீரைச் சுரந்தது.

அவனது கையின் அழுத்தத்தில் அந்தப் படபடப்பு குறைய,  இப்பொழுதும் அந்தக் கதகதப்பை உணர்ந்துக் கொண்டிருந்தது அவளது கைகள். அந்த இடத்தில் தனது இதழ்களால் உரசியவள், அவனது வார்த்தைகளிலேயே உழன்று, படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் தடுமாறினாள்.

எவ்வளவு முயன்றும் அவளது கவனம்  அவனைச் சுற்றியே இருக்க, வீட்டுப் பாடத்தை செய்ய முடியாமல் தடுமாறியள், நோட்டின் மீதே தலைக் கவிழ்ந்துப் படுத்துக் கொண்டாள்.   

“சுஜி ஹோம்வர்க் முடிச்சிட்டா சாப்பிட வா..” அர்ச்சனாவின் குரலில், திடுக்கிட்டு நிமிர்ந்தவள், தனது நோட்டைப் பார்க்க, அதில் அவள் எழுதிய ஒரே ஒரு வரி மட்டுமே இருக்க, சுஜிதா நடுங்கிப் போனாள். கடிகாரத்தைப் பார்த்தவளுக்கு அதை விட மனது அதிர்ந்தது. மணி ஒன்பதைக் கடந்திருக்க, இன்னமும் தான் வீட்டுப் பாடத்தை முடிக்காமல், துவங்கிய இடத்திலேயே இருந்ததில் அவளது கண்கள் கலங்கத் துவங்கியது..

வீட்டினுள்ளேயே நிலைக்கொள்ளாமல் சுற்றி வந்தவள், அதற்கு மேல் முடியாமல் அர்ச்சனா கொடுத்த தோசையை கொரித்துவிட்டு, “எனக்கு ரொம்ப தலைவலிக்குது.. நான் தூங்கறேன்மா..” என்றபடி, தனது அறைக்குள் சென்று படுத்துக் கொண்டு, அவனது எண்ணங்களை விரட்ட, கண்களை இறுக மூடிக் கொள்ள, அவளது கண்களில் இருந்து அடக்க முடியாமல் கண்ணீர் வழிந்தது..

தனது கவனம் படிப்பில் இருந்து சிதறுவதை நினைத்து அழத் துவங்கியவள், எதை எதையோ நினைத்து கண்ணீரில் கரைந்து, அப்படியே உறங்கியும் போனாள்..

காலையில் வழக்கம் போல அதிகாலையில் எழுபவளும் எழாமல் உறங்கிக் கொண்டிருக்க, சிறிது நேரம் உறங்கட்டும் என்று அர்ச்சனா அவளை எழுப்பாமல் விட்டார். விழிப்பு வந்து விழித்துக் கொண்டவள், அரக்கப் பறக்க பள்ளிக்குக் கிளம்பி வர, அவளது முகத்தைப் பார்த்த அர்ச்சனாவிற்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.. “ஏண்டி இப்படி முகம் எல்லாம் வீங்கற அளவுக்கு அழுது இருக்க? என்னடி ஆச்சு?” படபடப்பாகக் கேட்க,

“இல்லம்மா நேத்து டெஸ்ட்டை நான் ஒழுங்கா செய்யல.. தலைவலின்னு நான் ஹோம்வர்க் கூட செய்யலம்மா.. நைட் எவ்வளவோ ட்ரை பண்ணினேன்.. என்னால முடியல.. அது தான். ராத்திரி மிஸ் திட்டுவாங்களோன்னு பயம் வந்திருச்சு..” என்றபடி அவரது மடியில் படுத்துக் கொண்டு அழத் துவங்க, அவளது தலையைக் கோதிக் கொடுத்தவர்,

“இன்னைக்கு ஒரு நாளைக்கு பேசாம லீவ் போட்டு வேலை எல்லாம் முடி.. கொஞ்சம் ரெஸ்ட் எடு.. இப்படியே நீ ஸ்கூல்க்கு போக வேண்டாம். மூஞ்சி எல்லாம் ரொம்ப வீங்கி இருக்கு. எங்கயாவது ஜுரம் வரப் போகுது..” என்று சொல்லி விடவும், அன்றைய மனநிலையில் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாதவள், தனது அறைக்குச் சென்று மீண்டும் படுத்துக் கொண்டாள். அப்படியே அவள் உறங்கியும் விட, நன்றாக அவள் உறங்கி எழட்டும் என்று அவளது அன்னையும் காத்திருந்தார்..

இங்கு காதலைச் சொன்னவனோ, மாலையில் இருந்து அவளைக் காணாமல் தவித்துப் போனான்.. காலையில் பள்ளிக்குச் செல்லும்பொழுதும், மாலையிலும், அவளைப் பார்க்க எண்ணிக் காத்திருக்க, அவனுக்கு ஏமாற்றமே மிஞ்ச, நேராக ஜைஷ்ணவியிடம் உதவிக்குச் சென்று நின்றான்..

“என்னடா?” அவளிடம் வந்து எதுவும் சொல்லாமல் தயங்கி நின்றவனைப் பார்த்து அவள் கேட்க,

“ஜைஷு.. சுஜிக்கிட்ட நேத்து பேசிட்டேன்டி.. நேத்து வீட்டுக்கு போனவ அதுக்கு அப்பறம் கண்ணுல படவே இல்ல. இன்னைக்கு காலையில ஸ்கூல்க்கு கூட அவ போகல போல. சைக்கிள் வீட்ல தான் இருக்கு. எனக்கு பயமா இருக்கு ஜைஷு.. அவ டாக்டர்க்கு படிக்கணும்ன்னு தானே இங்க வந்து ஜாயின் பண்ணி இருக்கா.. எங்க நான் இந்த லவ் சொன்னதுனால அவ அதை விட்டு அவங்க அப்பா ஊருக்கே போயிடப் போறான்னு பயமா இருக்கு. நான் இப்போ என்ன செய்யட்டும்?” செய்வதறியாது அவன் கேட்க, ஜைஷ்ணவி தலையில் அடித்துக் கொண்டாள்.

“நினைச்சேன்.. நீ நேத்து அவ கூட ஐஸ்க்ரீம் சாப்பிட போறேன்னு சொல்லும்போதே நினைச்சேன்.. ரொம்ப நாளாவே உன்னை நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன்.. அவ இங்க ட்யூஷன் வந்தா அவளையே கண்ணு கொட்டாம பார்க்கறதும்.. அவ மாடிக்கு படிக்க போனா மாடியில படிக்கறேன்னு அவகிட்ட மொக்கைப் போட்டுக்கிட்டு குடி இருக்கறதும்.. அவ பின்னாலேயே ஸ்கூல்க்கு போகும்போதே நினைச்சேன்.. அதுசரி.. இதெல்லாம் அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு உனக்குத் தெரியுமா?” என்று நக்கலாகக் கேட்க,

“ஜைஷு.. அம்மாவுக்கு தெரிஞ்சா வீண் பிரச்சனை தான். ஆனா.. என்னைக்காவது ஒரு நாளைக்கு அது தெரிஞ்சு தான் ஆகணும்.. அப்போ அதைத் தெரிஞ்சிக்கட்டும்.. எனக்கு இன்னைக்கான வழியைச் சொல்லு.. எனக்கு அவளைப் பார்க்கணும்.. ஒருவேளை அவ இன்னைக்கு ட்யூஷன் வந்தா.. ஒரு அஞ்சு நிமிஷம் அவக்கிட்ட பேசிக்கறேன் ஜைஷு.. அதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணு ஆனா.. உனக்கு இந்த விஷயம் தெரிஞ்சது போல காட்டிக்காதே.. ப்ளீஸ்..” என்று கெஞ்ச, ஜைஷ்ணவி அவனது முகத்தைப் பார்த்து மனம் இறங்கினாள்..

“சரி. அவ வந்தா நான் உனக்கு ஒரு அஞ்சு நிமிஷம் டைம் தரேன். பேசிக்கோ..” என்றவள், சுஜிதாவின் வரவுக்காக காத்திருக்க, அவர்களை ஏமாற்றாமல் சுஜிதாவும் ட்யூஷனுக்கு வந்தாள்..

அவர்களது வீட்டின் கேட் திறக்கும் சத்தத்தைத் தொடர்ந்து, “அம்மா. நான் ட்யூஷன் போயிட்டு வரேன்..” என்ற அவளது குரல் கேட்க, சூர்யாவிற்கு நின்றிருந்த மூச்சு வெளியில் வந்தது..

“ஜைஷு.. ஜைஷு அவ வாரா..” அவன் பரபரக்க,

“வரட்டும்டா.. வந்தா நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்திருவேன்னு உட்கார்த்தி வச்சிக்கோ.. சீக்கிரம் பேசி முடிச்சிடு.. அம்மா ட்யூட்டி முடிச்சிட்டு வந்திறப் போறாங்க..” என்று எச்சரிக்கை செய்துவிட்டு, அவள் கிட்சனுக்குச் செல்ல, கதவைத் திறந்த சூர்யாவைப் பார்த்ததும் சுஜிதாவின் கண்கள் கலங்கத் துவங்கியது..

அவளது முகத்தைப் பார்த்தவன், தன்னையே நொந்துக் கொண்டு, “ஒரு அஞ்சு நிமிஷம்.. ஜைஷு வந்திருவா.. நீ வந்து உட்காரு..” என்றவன், அவள் குனிந்த தலையை நிமிராமல் அமர்ந்திருக்கவும்,

“சுஜி.. இப்போ எதுக்கு இப்படி கண்ணு முகம் எல்லாம் வீங்கற அளவுக்கு அழுது இருக்க? என்ன ஆச்சு?” என்று கேட்க, அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்க்காமல், உதட்டைக் கடித்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்கவும்,

“இங்கப் பாரு சுஜி.. நான் நேத்து உன்கிட்ட சொன்னதுக்காக அழுதிருந்தன்னா ஐம் சாரி.. எனக்கும் மனசுல சொல்லாம வச்சுட்டு இருக்க முடியல.. அது தான் சொல்லிட்டேன்.. என் மனசுல என்ன இருக்குன்னு உனக்கும் தெரியணும்ல. அதுக்கா இப்படி அழுத?” உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவன் கேட்க, அவள் மறுப்பாக தலையசைத்தாள்..

அவளது தலையுருட்டலைப் பார்த்தவன், “அப்போ அதுக்கு இல்லைன்னா எதுக்கு இப்படி அழுத?” படபடப்பாக அவன் கேட்க,

“எனக்கு நேத்து போய் எதுவுமே படிக்க முடியல.. ஹோம்வர்க் எதுவுமே செய்யாம உட்கார்ந்து இருந்தேன்.. ஒன்பது மணி வரை ஒரு லைன் கூட முழுசா முடிக்கல.. அது தான் அழுதேன்..” எனவும், சூர்யா என்ன பதில் சொல்வதென்று புரியாமல் திகைத்தான்.  

அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவள், “எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே அம்மாவும் அப்பாவும் ஒருத்தரை ஒருத்தர் விட்டு இருக்க மாட்டாங்க.. ஊருக்கு கூட அப்பாவுக்கு எப்போ லீவ் கிடைக்குதோ அப்போ தான் அம்மாவும் வருவாங்க.. நான் பிறக்கும்போது கூட அப்பாவை விட்டுட்டு ஊருக்கு போக மாட்டேன்னு அங்கேயே டெலிவரிக்கு இருந்தாங்க.. ஆனா.. இப்போ எனக்காக.. என்னோட படிப்புக்காக.. அம்மா, அப்பாவை விட்டு இங்க வந்து என் கூட இருக்காங்க.. அது அவங்களுக்கு எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்குத் தெரியும்..” அவள் சொல்லிக் கொண்டே வர, சூர்யா புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க,

“அப்படி அவங்க எனக்காக எல்லாம் செய்யும் போது, நான் இப்படி லவ்ன்னு எல்லாம் டைவர்ட் ஆகி படிப்பை கோட்டை விட்டா, எனக்காக அவங்க பிரிஞ்சிருக்கற இந்த பிரிவுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்ல..” அவள் கேட்கவும், நெஞ்சம் தொண்டைக் குழியில் வந்து துடித்தாலும், சூர்யா ‘ஆம்’ என்று தலையசைத்தான்..

“அதனால இப்போ இதெல்லாம் வேண்டாமே சூர்யா.. எனக்கு எந்த டைவர்ஷனும் இல்லாம படிக்கணும்.. இப்போதைக்கு அவங்களுக்கு கஷ்டம் கொடுக்காம நல்ல மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைக்கிற போல மார்க் வாங்க நான் கான்சன்ட்ரேட் பண்றேனே.. இப்படி டைவர்ட் ஆகி எதுவுமே செய்யாம சும்மா உட்கார்ந்து இருந்தா மார்க் வராதே..” என்று கேட்க, சூர்யா ‘ஆம்’ என்று மீண்டும் யோசனையுடன் தலையசைத்தான்..

‘இப்போ இதெல்லாம் வேண்டாம்ன்னு தானே சூர்யா சொல்றா.. உன்னை வேண்டவே வேண்டாம்ன்னு சொல்லலையே.. அவ ரொம்ப அழறா பாரு.. பாவம் முகம் எல்லாம் ரொம்ப வீங்கி போயிருக்கு.. அவளை சமாதானப்படுத்து சூர்யா…’ தனக்குள் சொல்லிக் கொண்டவன்,

“சரிடா சுஜி.. நான் இனிமே உன்னை இதைப் பத்தி பேசி, டைவர்ட் பண்ண மாட்டேன்.. ஓகே வா? நீ நல்லா படிச்சு காலேஜ் ஜாயின் பண்ணு.. ஆனா.. உன்னை நினைச்சு ஒரு ஹார்ட் துடிச்சிட்டு இருக்குன்னு மட்டும் இந்த டாக்டரம்மா நியாபகம் வச்சுக்கிட்டா போதும்.. என்ன?” என்று கேட்கவும், சுஜிதாவின் இதழ்களில் மெல்ல ஒரு புன்னகை உதயமானது.  

“சரி.. நீ வீட்டுக்கு போய் நேத்து விட்ட ஹோம்வர்க் எல்லாம் முடிச்சிடுவியாம்.. என்னோட சுஜி ரொம்ப குட் கேர்ளாம்.. இனிமே இப்படி அழ மாட்டாளாம். இப்படி ஒரு நாள் முழுசா கண்ணுல படாம என்னைத் தவிக்க விட மாட்டாளாம்.. அப்படி தானே..” என்று கேட்கவும், அவள் தலையை அசைக்க, அவளது தலையை செல்லமாகத் தட்டினான்.  

சுஜிதா அவனைப் பார்த்து புன்னகைக்கவும், “இருந்தாலும் என் சீட் கன்ஃபார்ம்மா? இல்ல வெயிட்டிங் லிஸ்ட்டான்னு சொல்லி இருக்கலாம்.. இப்படி சுத்தி வளைச்சு, கவுன்ட்டர நான் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான் ஓபன் பண்ணுவேன்னு சொல்லி இருக்க வேண்டாம்..” புலம்பிக் கொண்டே அவன் எழுந்துக் கொண்டு,

“இருந்தாலும்.. இப்போ இதெல்லாம் வேண்டாம் சூர்யான்னு சொன்னதுனால, நான் என் சீட்டு கன்பார்ம்ன்னு எடுத்துக்கறேன்.. இனிமே இப்படி முகம் வீங்கற அளவுக்கு அழுதன்னு வைய்யேன்.. நான் உன்னை என்ன செய்வேன்னே தெரியாது.. ஒழுங்கா படிச்சு டாப் மெடிக்கல் காலேஜ்ல சீட் வாங்கப் பாரு..” என்று மிரட்ட, அத்தனை நேரம் அழுதுக் கொண்டிருந்ததை மறந்தவள் சுஜிதா புன்னகைக்க, அவளது கன்னத்தைத் தட்டி,

“திஸ் இஸ் மை சுஜி.. இங்க நந்தி வந்துடும்.. நான் கிளம்பறேன்..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, ‘இதோ வந்துட்டேன் சுஜி..’ என்று வந்த ஜைஷ்ணவி, அவன் சொன்னதைக் கேட்டு அவனை முறைத்துக் கொண்டே,

“உனக்கு காபி வச்சிருக்கேன்.. போய் குடி..” என்றுவிட்டு, சுஜியுடன் அமர, அவளைப் பார்த்துக் கொண்டே சூர்யா காபியை குடித்துவிட்டு, தனது லாப்டாப்பில் கேம் விளையாடத் துவங்கினான்.

நாட்கள் அதன் போக்கில் ஓடத் துவங்க, அவள் ட்யூஷனுக்கு வரும்பொழுது அடிக்கடி, ஜைஷ்ணவியிடம், “ஜைஷு ஒரு சீட்டு வாங்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பஸ்ல சீட்டு போடறதுக்கு அடிச்சுப் பிடிச்சு தான் ஏறணும். ஏன் ஒரு ட்ரைன்ல போறதுக்கும் முன்பதிவு ரொம்ப முக்கியம்.. ஏன் அந்த வானத்துல பறக்கற ப்ளைட்டுக்கே..”

“டிக்கெட் வேணும்.. அது தானே.. ஹையோ இதைக் கேட்டு கேட்டு போர் அடிக்குதுடா.. நீ இப்படியே பேசிட்டு இருந்தன்னு வையேன் உனக்கு பரலோக சீட் கன்ஃபார்ம்..” ஜைஷுவின் பதிலடிக்கு, சுஜிதா கலுக்கென்று சிரிப்பதும், அவளை முறைத்துக் கொண்டே அவன் நகர்வதும் வழக்கமாக மாறி இருந்தது..

ஜைஷ்ணவியும் ஒரு பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்துவிட, சில நாட்கள் அவள் வரத் தாமதமாகும் நாட்களில் அவளுடைய சந்தேகங்களை சூர்யா சொல்லிக் கொடுப்பான்.. இயற்பியல், வேதியல் பாடங்களிலும் அவளுடைய சந்தேகங்களையும் அவன் சொல்லித் தருவதும் வழக்கமாக மாறியது..

இப்படியாக நாட்கள் செல்ல, அன்று சூர்யாவின் பிறந்தநாள்.. “அம்மா.. எனக்கு ஒரு கிப்ட் வாங்கணும். போய் வாங்கிட்டு வரலாமா? பக்கத்து வீட்ல சூர்யா இருக்காங்க இல்ல. இன்னைக்கு அவங்களுக்கு பர்த்டே.. அப்படியே ஒரு கேக்கும் வாங்கலாமா?” அவள் கேட்கவும்,

“ஓ.. அப்படியா? சரி நாம போய் வாங்கிட்டு வரலாம்.. அவனுக்கு என்ன ப்ளேவர் க்ரீம் பிடிக்கும்ன்னு தெரிஞ்சா இன்னும் நல்லா இருக்கும்.. பிடிக்காததை வாங்கிட்டா ரெண்டு பேருக்குமே சங்கடம்ல..” அவள் சொன்னதும் உடனே ஒப்புக் கொண்ட அர்ச்சனா  கேட்கவும், உதட்டைப் பிதுக்கியவள்,

“வாம்மா அங்க போய் பார்த்துக்கலாம்.. நீயே என்ன கிஃப்ட் வாங்கலாம்ன்னு எனக்கு செலக்ட் பண்ணு..” என்றவள், அர்ச்சனாவுடன் சென்று கேக்கை வாங்கிக் கொண்டு, அவரது ஆலோசனைப்படி ஒரு வேல்ட்டையும் வாங்கிக் கொண்டு வந்தவள்,   ட்யூஷனுக்குச் செல்ல, சூர்யாவோ நண்பர்களுடன் ஊர்ச் சுற்றச் சென்றிருந்தான்.

அவனது வருகைக்காக அவள் அவ்வப்பொழுது வாசலைப் பார்க்க, “என்னாச்சு சுஜி? இன்னைக்கு என்ன வாசலை இப்படி பார்த்துட்டு இருக்க?” ஜைஷ்ணவி கேட்க,

“இன்னைக்கு சூர்யாவுக்கு பர்த்டே இல்ல.. அவங்களுக்கு கேக் வாங்கிட்டு வந்தேன். வந்தா கொடுக்கலாம்ன்னு பார்த்தேன்.. லேட்டா வருவேன்னு சொன்னாங்களா அக்கா?” சுஜிதா கேட்கவும், ஜைஷ்ணவி சூர்யாவை நினைத்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.

‘சீட்டு வேணும்.. சீட்டு வேணும்ன்னு கட்சில ஆளுங்க அடிச்சுக்கற போல அடிச்சுக்க வேண்டியது.. இப்படி முக்கியமான டைம்ல கோட்டை விட்டுட்டு நிக்கறியே கோட்டைச் சாமி.. உன் சீட்டு வெயிட்டிங் லிஸ்ட்ல தான் போகப் போகுது..’ மானசீகமாக அவனைக் கிண்டல் செய்தவள்,

“அவரு இன்னைக்கு காலேஜ்ல ப்ரெண்ட்ஸ்க்கு எல்லாம் ட்ரீட் தந்துட்டு ஊரைச் சுத்திட்டு தான் வருவேன்னு சொல்லிட்டு போய் இருக்காரு.. அவன் வர லேட் ஆகும்..” ஜைஷ்ணவி சொல்லவும், அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமல் அவளிடம் அந்தப் பையை நீட்டிய சுஜிதா,

“இது அவங்க வந்தா கொடுத்துடுங்க அக்கா..” எனவும், அதை வாங்கி அவனது அறையில் வைத்துவிட்டு வந்தவள்,

“அவன் வந்ததும் நான் கொடுத்துடறேன் சுஜி.. அப்பறம் அவன் உன்கிட்ட பேசுவான்..” என்றபடி அவளுக்குப் பாடத்தை சொல்லித் தர, அதற்கு மேல் அவளும் படிப்பில் மூழ்கினாள்..

இரவில் வீட்டுற்கு வந்தவனோ, அவனது அறையில் இருந்த கேக்கைப் பார்த்ததும், “என்ன ஜைஷு.. என் மேல இவ்வளவு அக்கறையா? இவ்வளவு அழகான கேக்.. காட்பரி சாக்லேட்.. வாலட்  எல்லாம் வாங்கி சப்ரைசா வச்சிருக்க?” என்று கேட்கவும், தலையில் அடித்துக் கொண்ட அவனது தமக்கை,

“உனக்கு எல்லாம் சீட்டு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்டா அம்பி.. போய் அந்தத் தடிமாடுங்க கூட ஊரைச் சுத்து.. அதுங்க வேணா பஸ்ல சீட்டு போட்டுத் தரும்.. உன்னால அது மட்டும் தான் முடியும்..” என்றவள் தனது கையில் இருந்த கதைப் புத்தகத்தில் முழுகிப் போக, அவள் சொன்னதைக் கேட்டவன், அவசரமாகச் சென்று அந்தக் கவரை ஆராய, அந்த கேக் பாக்ஸின் அடியில் ஒரு க்ரீடிங் கார்டும் இருக்கவும், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்..

“ஹையோ ஜைஷு.. இதை இன்னைக்கு இப்படி மிஸ் பண்ணிட்டேனே.. அவ எனக்காக வெயிட் பண்ணி இருப்பா இல்ல.. ப்ளீஸ்.. ப்ளீஸ் ஜைஷு.. அவங்க அம்மாவுக்கு போன் பண்ணி அவளை மொட்டை மாடிக்கு வரச் சொல்லேன்.. ஒரு டூ மினிட்ஸ்..” என்று கெஞ்ச, அவனது கையில் அடித்தவள்,

“எனக்கு அடி வாங்கி வைக்காம இருக்க மாட்ட போல? என்னன்னு சொல்லிடா அவளை வரச் சொல்றது? அதும் இருட்டின அப்பறம்?” என்று கேட்க, அவளைப் பார்த்து முறைத்தவன், தனது ம்யூசிக் சிஸ்டத்தை இயக்கினான்..

ஜைஷ்ணவி அவனை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருக்க, அதில் சிடியைப் போட்டவன், ஒரு ஒரு பாடலாக மாற்றிக் கொண்டே வந்து, இறுதியில்,

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

கொஞ்சிப் பேசக்  கூடாதா

அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூறல் போடாதா?

 

என்ற பாடலை சத்தமாக, இரண்டுமுறை ஒலிக்க விட்டவன், சுஜிதாவின் வீட்டு லான்ட்லைன் நம்பருக்கு அழைக்கத் துவங்க, ஜைஷ்ணவி அவனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..  

அர்ச்சனா கிட்சனில் இருந்த நேரம் போன் அடிக்கவும், அவர் எடுக்க வருவதற்குள் அவசரமாக வந்து போனை எடுத்த சுஜிதா, அவனது ‘ஹலோ’ என்ற குரலைக் கேட்டதும், அவனுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு,

“இப்போ என்ன பேசணும்ன்னு இந்தப் பாட்டை இப்படி சத்தமா போட்டுட்டு இருக்கீங்க? நான் படிக்க வேண்டாமா?” என்று கேட்க,

“நான் உனக்காக தான் இந்த பாட்டு போடறேன்னு தெரிஞ்சதா சுஜி?” ரகசியக் குரலில் கேட்டவன், ‘ம்ம்..’ அவளது மெல்லிய குரலில், உள்ளம் துள்ள,  

“சாரிம்மா.. நான் ப்ரெண்ட்ஸ் கூட வெளிய போயிருந்தேன்.. அதனால தான் நீ வந்த பொழுது இல்ல.. சரி.. இப்போ ஒரு ரெண்டு நிமிஷம் மேல வாயேன்..” அவன் அழைக்க,

“என்னது இந்த நேரத்துலையா? எனக்கு இருட்டுல பயமா இருக்கும்..” அவள் பதட்டப்பட,

“நான் மேல வெயிட் பண்ணிட்டு இருக்கேன் சுஜி.. பயப்படாம வா..” அவன் அழைக்கவும், சுஜிதா ஒப்புக் கொள்ள, அவள் வருவதற்குள் வேகமாக கேக்குடன் மாடிக்குச் சென்றவன், அவள் வந்ததும், மொட்டை மாடியின் கைப்பிடி சுவரின் மீது கேக்கை வைத்து, அதை வெட்டி தனது வாயில் போட்டுக் கொள்ள, சுஜிதா புன்னகையுடன் கைத் தட்டினாள்..

சூர்யாவின் மனதிற்குள் அப்படி ஒரு சந்தோசம்.. “திஸ் இஸ் மை பெஸ்ட் பர்த்டே சுஜி.. ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கு.. வாலட் கூட ரொம்ப அழகா இருக்கு.. நான் பத்திரமா வச்சுக்கறேன்..” அவன் மனம் நிறைந்துச் சொல்லவும், சுஜிதா அவனைப் பார்த்து கண் சிமிட்டி,

“அம்மாவுக்குத் தெரியாம மாடிக்கு வந்தேன்.. அம்மா தேடப் போறாங்க.. நான் கீழ போறேன்.. பை..” என்றபடி அவள் படிகளில் ஓடிச் செல்ல, அவள் கொடுத்த க்ரீடிங் கார்டை வருடி,

“ஐ லவ் யூடி சுஜி..” என்று சொல்லிக் கொண்டே, கைப்பிடி சுவரின் மீது அமர்ந்து, கேக்கை உண்டுக் கொண்டிருக்க, அவனைத் தேடிக் கொண்டு ஜைஷ்ணவி மாடிக்கு வந்தாள்.

“அடப்பாவி.. இங்கயே உட்கார்ந்து பலகாரம் பண்ணிக்கிட்டு இருக்க? எனக்கு கொஞ்சம் கொடு.. அவளுக்கும் கொஞ்சம் எடுத்து வை.. நாளைக்கு வந்தா தரலாம் இல்ல? விட்டா டேஸ்ட்டா இருக்குன்னு நைட் டின்னர்க்கு இதையே முடிப்ப போல இருக்கே..” என்று கேலி செய்ய, அவளது தோளில் கையைப் போட்டு தனது அருகில் இழுத்தவன்,

“இருக்கற சந்தோஷத்துல அப்படி செஞ்சாலும் செய்வேன்.. இந்த கிரீட்டிங் கார்டைப் பாரு.. அவ சொல்லாம நான் தான் அவ உயிருன்னு சொல்லி இருக்கா..” என்றபடி கிரீட்டிங் கார்டை அவளது கையில் கொடுத்தவன், கனவுலோகத்திற்குச் செல்ல,

“ரொம்ப முத்திருச்சு.. இங்க என்னால படிக்க முடியாது.. நான் கீழ போய் படிக்கறேன்..” என்றவள், தலையில் அடித்துக் கொண்டு கேக்கை கீழே எடுத்துக் கொண்டு செல்ல, சூர்யா அவள் பின்னோடு ஓடிச் சென்றான்..

தெளிந்த நீரோடையாக நாட்கள் ஓடிச் செல்ல, சுஜிதா பன்னிரண்டாம் வகுப்பின் இறுதியில் இருந்தாள்.. அன்று அவர்களுக்கான ஃபேர்வல் விழா நடக்க இருந்தது.. காலையிலேயே தலைக்குக் குளித்து, தளர பின்னலிட்டு, அர்ச்சனாவின் உதவியுடன் அன்று அவள் உடுத்துவதற்காக வாங்கி இருந்த மைசூர் சில்க் புடவையை கட்டிக் கொண்டு தயாராக இருக்க, அவளைப் பார்த்த அர்ச்சனாவின் கண்கள் கலங்கியது.

“ரொம்ப அழகா இருக்கடி. நீ ஒண்ணும் சைக்கிளை ஓட்டிட்டு போக வேண்டாம்.. நான் உன்னை டிராப் பண்றேன்..” அவர் சொல்ல,

“ஹையோ.. இங்க மதர் சென்டிமென்ட்ல ஒருத்தங்க பின்னி பெடல் எடுக்கறாங்களே..” என்று அவரைக் கேலி செய்துக் கொண்டே, தனது பையை எடுத்துக் கொண்டு அவள் கிளம்ப, அவளது விழிகள் எப்பொழுதும் அவள் வெளியில் வரும் நேரம் அவளைத் தொடரத் தயாராக நிற்கும் சூர்யாவைத் தேடியது.

அன்று வசுந்தரா, (சூர்யாவின் தயார்) காலையில் தாமதமாக எழுந்திருந்த காரணத்தினால், அவனது காலை உணவு தாமதமாகிக் கொண்டிருக்க, சுஜிதாவின் வீட்டு கேட் திறக்கும் சத்தம் கேட்கவும், சூர்யா பரபரக்கத் துவங்கினான்..

“என்னம்மா இப்படி லேட்டா காலையில சாப்பாடு கொடுத்தா நான் என்ன ஃபர்ஸ்ட் ஹவர் லேட்டாவா போறது?” என்று கேட்க,

“நேத்து லேட்டா வந்து தூங்கினது டயர்டா இருந்ததுன்னு கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்.. நீ எத்தனை நாளைக்கு லேட்டா எழுந்து சாப்பிடமா கூட கிளம்பி இருக்க? அதெல்லாம் உனக்கு கண்ணுக்குத் தெரியாதே.” அவர் சத்தமிட்டுக் கொண்டே தோசைகளைப் போட, இரண்டு தோசைகளை உண்டு முடித்தவன், ‘போதும்..’ என்று அவசரமாகக் கிளம்ப, அதற்குள் அவளை பள்ளியில் விட்டுவிட்டு அர்ச்சனாவும் வீட்டிற்குத் திரும்பி இருந்தார்.

அவரைப் பார்த்ததும், அவனுக்கு மேலும் பரபரப்புத் தொற்றிக் கொள்ள, ‘ஹையோ இன்னைக்கு அவளுக்கு பேர்வெல் வேற. புடவை எல்லாம் கட்டி இருப்பா.. அவளைப் பார்க்கலாம்ன்னு காலையிலேயே சீக்கிரம் ரெடி ஆனா அம்மா இப்படி சொதப்பிட்டாங்களே.. இப்போ அவ ஸ்கூல் உள்ள போயிருப்பா.. அப்போ அவ புடவையில எப்படி இருப்பான்னு இப்போ பார்க்க முடியாதா?’ காதல் கொண்ட மனம் தவிக்க, மனதினில் புலம்பிக் கொண்டே, தனது வண்டியை எடுத்த எடுப்பில் வேகமாக விரட்டிக் கொண்டுச் செல்ல, அவன் போகும் வேகத்தைப் பார்த்த அர்ச்சனா, கவலைக் கொண்டார்..

‘கொஞ்சம் சீக்கிரம் கிளம்பாம இப்படி போனா என்ன ஆகறது?’ அவர் புலம்பிக் கொண்டே தனது வீட்டின் உள்ளேச் செல்ல, அங்கு அவரது மகளோ, தனது சூரியனின் வரவிற்காக காத்திருந்தாள்.

அர்ச்சனா அவளைக் கொண்டு விட்டதும், “நீ கிளம்பும்மா.. நான் எங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்ததும் சேர்ந்து உள்ளப் போறேன்..” என்று அர்ச்சனாவை அனுப்பி விட்டு, சூர்யாவை பார்த்துக் கொண்டு கேட்டின் அருகிலேயே நின்றாள்.

சூர்யா வருவதற்குள் ஸ்ருஷ்டியும் வந்து விடவும், “இன்னும் கொஞ்ச நேரம் இங்க நிக்கலாமா?” அவளைப் பார்த்து கெஞ்சலுடன் கேட்க,

“ஹ்ம்ம்.. நிப்போமே.. என்ன உங்க ஆளு இங்க எங்கயாவது நின்னுட்டு இருக்காரா? இல்ல நிக்கச் சொன்னாரா?” அவள் கேலி செய்ய,

“இல்ல.. இன்னும் வரல.. காலையில வீட்டுலையும் பார்க்க முடியல.. அது தான் அவங்களைப் பார்த்துட்டு உள்ளப் போகலாம்ன்னு. முதல் தடவ புடவை கட்டி இருக்கேன் இல்ல.. அது தான்..” சுஜிதா இழுக்கவும், அவளை மேலிருந்து கீழாக பார்த்தவள்,

“ஹ்ம்ம்.. நடத்துங்க நடத்துங்க.. சார் வந்தா.. அப்படியே உங்க அழகுல மயங்கி விழுந்திருவாங்க..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரம், வண்டி கிரீச்சிடும் சத்தமும், அதனைத் தொடர்ந்து, ‘டமால்’, ‘ஏய்..’, ‘அம்மா..’ என்ற சத்தமும் கேட்க, பள்ளியின் கேட்டின் அருகில் நின்றுக் கொண்டிருந்த சுஜிதா திரும்பிப் பார்க்க, வண்டியுடன் சூர்யா கீழே கிடந்தான்..

“ஹையோ.. சூர்யா..” அவள் பதறி கேட்டை விட்டு வெளியே செல்ல முயல, அவளைத் தடுத்த வாயில் காவலர்,

“எங்கம்மா போற? உள்ளப் போம்மா.. இப்போ வெளிய போறதை ப்ரின்சிபால் பார்த்தா என்னைத் தான் கேள்வி கேட்பாங்க.. என் வேலைக்கே வேட்டு வச்சுடுவ போல இருக்கே..” என்று சத்தமிட, சுஜிதா கெஞ்சத் துவங்கினாள்..

“அண்ணா.. அவரு எங்க பக்கத்து வீட்ல இருக்கறவங்க தான்.. நான் போய் என்னன்னு பார்த்துட்டு வரேன்.. ப்ளீஸ்ண்ணா.. ரெண்டு நிமிஷம் பார்த்துட்டு வரேன்.. அவரு அங்க அடிப்பட்டு கிடக்கறாங்கண்ணா..” என்று கெஞ்ச, அவரோ விடவே முடியாது என்று விடாப்பிடியாக நின்றார்..

அதற்குள் அங்கிருந்தவர்கள் சூர்யாவைத் தூக்கி விட, சுஜிதாவோ அவனது அருகே செல்லத் தவித்துக் கொண்டிருந்தாள்.. அவளது உடல் நடுங்கிக் கொண்டிருக்க, கையில், காலில், சிராய்த்து, ரத்தம் கசிந்துக் கொண்டிருக்க, அவனை அனைவரும் ஓரமாக கூட்டிச் சென்று அவனை ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்..

தவிப்புடன் சுஜிதா அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுது உள்ளே நுழைந்த அவளது ஆசிரியை, “என்ன எல்லாம் இங்க நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கீங்க? உள்ள போங்க.. ப்ரேயர்க்கு டைம் ஆகுது.. கண்ணு மண்ணு தெரியாம வண்டி ஓட்டிக்கிட்டு வந்து விழுந்து இருக்கான். நல்லவேளை தலையில எல்லாம் அடிப்படல..” அங்கு நின்றுக் கொண்டிருந்தவளிடம் சொல்லிக் கொண்டே, உள்ளே செல்லுமாறு கைக் காட்ட, அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தடுமாறியவள், அவனைப் பார்த்துக் கொண்டே மெல்ல நடக்க, 

“டைம் ஆச்சு.. உள்ள சீக்கிரம் போங்க..” என்று அதட்டிய வாயில் காவலர், பள்ளியின் கேட்டை மூடத் துவங்க, சுஜிதா வேறு வழியின்றி வகுப்பிற்குச் சென்றாள்..

பிரிவுபச்சார நிகழ்ச்சியில் மகிழ்ச்சியும், கண்ணீரும் நிரம்பி வழிய, சுஜிதாவின் நினைவு மொத்தமாக ஒருவனிடம் மட்டும் தான் இருந்தது. இன்னமும் அவன் காலையில் விழுந்துக் கிடந்ததே அவளது கண் முன்னால் விரிய, வீட்டிற்கு செல்லும் நேரத்திற்காக காத்திருக்கத் துவங்கினாள்.

ஒருவழியாக அனைத்தும் முடிந்து, அர்ச்சனாவுடன் வீட்டிற்கு வர, “ஜைஷு ஓட தம்பி சூர்யா இருக்கான்ல.. காலேஜ்க்கு கிளம்பிப் போனவன் ஒரு மணி நேரத்துல கையில கட்டு போட்டுட்டு அவன் ப்ரெண்ட்ஸ் கூட திரும்பி வந்தான். காலையில காலேஜ்க்கு போகும் போது எங்கயோ ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு போல.

நான் மாடியில துணி உணர்த்தும் போது அவங்க அம்மா அப்படி சத்தம் போட்டுட்டு இருந்தாங்க. மதியம் பார்த்தா அவங்களோட வண்டி சத்தம் கேட்டுச்சு.. ட்யூட்டிக்கு கிளம்பிப் போயிட்டாங்க போல. அப்பறம் மதியத்துக்கு மேல ஜைஷு லீவ் போட்டுட்டு வந்துட்டா.. இப்போ உன்னைக் கூப்பிடக் கிளம்பும்போது அவனோட வண்டி இருந்த நிலைமையைப் பார்த்து அவன் எப்படி இருக்கான்னு கேட்டேன்..” என்று கதைச் சொல்லவும், சுஜிதா தவிக்கத் துவங்கினாள்.  

“ஹையோ என்னம்மா ஆச்சு? அடி ரொம்ப பெருசா இருக்கா?” பதட்டமாகக் கேட்க,

“கையில மைல்ட் ப்ராக்சராம்.. முட்டியில கொஞ்சம் தேச்சு இருக்கும் போல.. நல்லவேளை தலையில எல்லாம் அடிப்படல.. காலையில வேகமா வண்டியை எடுத்தப் போதே நினைச்சேன். அதே போல ஆகிடுச்சு.. என்ன வேகமோ போ இந்தப் பசங்களுக்கு.. கொஞ்சம் சீக்கிரம் எழுந்து காலேஜ்க்கு கிளம்பினா தான் என்ன?” என்று புலம்பிக் கொண்டே வர, வீட்டில் வண்டியை நிறுத்தியதும்,

“நான் போய் அவங்களைப் பார்த்துட்டு வரேன்மா..” என்றவள், அர்ச்சனாவின் பதிலை எதிர்ப்பார்க்காமல், சூர்யாவைக் காண ஓடினாள்..

முட்டியில் நன்றாக அடிபட்டு கட்டு போட்டிருந்தனர். அவன் விழுந்த வேகத்தில் அனிச்சைச் செயலாக கையை ஊனவும், அந்த வேகத்தில்  லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க, கைக்கு தொட்டில் கட்டி அனுப்பி இருந்தனர் மருத்துவர்கள்.. தோள்பட்டையிலும் நன்றாக சிராய்த்து அங்கும் மருந்திடப்பட்டிருக்க, கையிலாத பனியனை அணிந்துக் கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தவனைப் பார்த்தவள், ஓடிச் சென்று அவன் முன்பு சென்று நின்றாள்..

இன்னமும் அவளது மனதிற்குள் காலையில் கண்ட காட்சியின் நடுக்கம் குறைய மறுப்பதாய்.. அவனது தலைமுதல் கால் வரை கண்களால் வருடியவள், இதோ அதோ என்று முட்டிக் கொண்டிருந்த கண்ணீரை உள்ளிழுத்தபடி,

“வண்டியில அப்படி என்ன வேகம் உங்களுக்கு? ஒழுங்கா பார்த்துப் போகத் தெரியாதா? கொஞ்சம் சீக்கிரமா கிளம்பினா தான் என்ன? அப்படி என்ன சோம்பேறித்தனம்? ஏதோ இதோட போச்சு.. பின்னால பெரிய வண்டி ஏதாவது வந்திருந்தா என்ன ஆகி இருக்கும்? கொஞ்சமாவது எங்களை எல்லாம் பத்தி நினைச்சுப் பார்த்தீங்களா? அப்படி என்ன பொறுப்பு இல்லாம?” அவளது படபடப்பில் குரல் உயர்ந்து ஒலிக்க, அவனுக்கு ஹார்லிக்ஸ் கலந்துக் கொண்டிருந்த ஜைஷ்ணவி அவனை எட்டிப் பார்த்தாள்..

சூர்யா அமைதியாக அவளையேப் பார்த்துக் கொண்டிருக்கவும், “என்ன பதில் பேசாம உட்கார்ந்து இருக்கீங்க? காலையில நீங்க விழுந்ததைப் பார்த்தது இன்னும் எனக்கு உள்ளுக்குள்ள நடுங்கிட்டு இருக்குத் தெரியுமா? நான் அப்படி பயந்து போயிட்டேன்.. என்னை அந்த வாட்ச்மேன் வெளிய விடவே இல்ல.. நீங்க என்னடான்னா அப்படி வந்து விழுந்துட்டு இங்க ஹாயா டிவி பார்த்துட்டு இருக்கீங்க?” அவளது கண்களில் கண்ணீர் இறங்கத் துவங்க, தனது வலது கையால் அவளது கையைப் பிடித்து தனது அருகில் இழுத்தவன்,

“எனக்கு ஒண்ணும் இல்லடா.. சின்ன அடி தான்.. இது கூட ஒரு வாரம் கொஞ்சம் கையை அசைக்காம இருக்கறதுக்காகப் போட்டது தான்.. ரொம்ப ரொம்ப மைல்ட் ப்ராக்ச்சர் தான்.. பெருசா பயப்பட ஒண்ணும் இல்ல..” என்று சமாதானம் செய்ய, சுஜிதா தனது கண்களைத் துடைத்துக் கொண்டாள்.                 

“உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா? எதுக்கு அவ்வளவு வேகமா வந்தீங்க?” அவள் கோபமாகக் கேட்க,

“உன்னைப் புடவையில பார்க்கத் தான்.. முதன்முதலா என்னோட சுஜி புடவை கட்டி இருக்கறதை நான் எப்படியாவது பார்த்துடணும்ன்னு நினைச்சேன்.. ஆனா.. நான் இங்க இருந்து கிளம்பும்போதே உங்க அம்மா உன்னை விட்டுட்டு திரும்பி வந்துட்டாங்க.. எங்க நீ உள்ள போயிடுவியோன்னு தான் அவ்வளவு வேகமா வந்தேன்.. ஆனா.. நீ எனக்காக தானே கேட் கிட்ட நின்னுட்டு இருந்த? நான் உன்னைப் பார்த்தேன்.. என்ன கொஞ்ச நேரம் சேர்த்து உன்னையே பார்த்துட்டேனா.. அதுல முன்னால இருந்த ஆட்டோவை கவனிக்கல.. அது தான்.. லாஸ்ட் மினிட்ல பார்த்து ப்ரேக் அடிச்சு விழுந்துட்டேன்..” அவன் கதை சொல்ல, சுஜிதா அவனைப் பார்த்து முறைத்தாள்..

“காலையில பார்க்க முடியலைன்னா சாயந்திரம் வந்துட்டு போறேன்.. அப்படி என்ன உங்களுக்கு அவசரம்? இப்போ எப்படி வந்து உட்கார்ந்து இருக்கீங்க பாருங்க..” உதடுகள் நடுங்க அவள் கேட்க,

“எனக்கு அடிப்பட்டா உனக்கு ஏன் சுஜி இப்படி நடுங்குது? அப்போ எனக்கு சீட் கன்ஃபார்ம் பண்ணிட்டியா? கவுண்டர் ஓபன் பண்ணிட்டியா?” ரகசியமாகக் கேட்க,

“யோவ்.. அறிவு இருக்காய்யா உனக்கு? கவுண்டர் ஒரே தடவ தான் திறக்கும். அது திறந்து டிக்கெட்டை எப்பவோ போட்டாச்சு. அது கூடத் தெரியாம நீங்க எல்லாம்? அது சொன்னா தான் தெரியுமா? புரிஞ்சிக்க முடியாதா? சும்மா சும்மா சீட்டு சீட்டுன்னு உயிரை எடுத்துட்டு இருக்கீங்க?” என்று கடுப்புடன் கேட்கவும், அதைக் கேட்ட சூர்யா முதலில் திகைத்து, பின்பு சிரித்துக் கொண்டே, அவளை மேலும் தன் பக்கம் இழுத்து, தனது அருகில் அமர்த்திக் கொண்டவன்,

“புரியாம இல்ல.. உன் வாயால கேட்கணும்ன்னு ஆசைப்பட்டேன் அவ்வளவு தான் என் கண்மணியே..” என்று கண்ணடித்துச் சிரிக்க, அவள் உதட்டைக் கடித்து தலைகுனியவும், அவளது கன்னங்களைத் தாங்கியவன், மூக்கின் நுனியில் தனது மூக்கைக் கொண்டு உரசி,

“இனி ‘நீ’ என்பது இல்லை.. ‘நான்’ என்பதும் இல்லை.. ‘நாம்’ என்பது மட்டுமே உண்மையடி பெண்ணே..” என்று ரகசியக் குரலில் சொல்ல, சுஜிதாவின் கன்னங்கள் சூடேறியது..    

அவளை ரசித்துக் கொண்டு அவன் அமர்ந்திருக்க, “ஹே.. சூர்யா கங்க்ராட்ஸ்டா.. கீழ விழுந்து புதையல் எடுத்ததுல ஒரு பெரிய புதையலே கிடைச்சிருக்குன்னு சொல்லு..” ஜைஷ்ணவி கேலி செய்துக் கொண்டே இருவருக்கும் ஹார்லிக்சை கலந்துக் கொண்டு வரவும், சுஜிதா சட்டென்று அவனது அருகில் இருந்து எழுந்துக் கொள்ள, ஜைஷ்ணவியைத் திரும்பிப் பார்த்தவன்,

“ராங் டைம் என்ட்ரி கொடுக்கற ஜைஷு நீ.. அந்த ஹார்லிக்சை அவளுக்கு சீக்கிரம் கொடு.. என்னை விட அவ தான் கீழ விழுந்து வாரினவ மாதிரி இருக்கா..” என்றவன், ஹார்லிக்சை வாங்கி அவளிடம் கொடுத்தபடி,

“புடவையில ரொம்ப அழகா இருக்க..” என்று ரகசியமாகச் சொல்ல, அவனது குரல் கொடுத்த தக்கத்தில், தலையை குனிந்தபடி ஜைஷ்ணவி கொடுத்த ஹார்லிக்சை ஒரே மடக்கில் சூடாக குடித்து முடித்தவள்,

“நான் வீட்டுக்குப் போரேன்..” என்றபடி ஓடிச் செல்ல,

“ஹே மெதுவா போ.. புடவையைக் கட்டிக்கிட்டு நீ புதையல் எடுக்காதே.. எக்ஸாம் வேற வருது..” சூர்யா குரல் கொடுக்க,

“நான் ஒண்ணும் சூர்யா இல்ல.. வானத்தைப் பார்த்துக்கிட்டே வண்டியை ஓட்டி புதையல் எடுக்க..” என்று கேலி செய்து, பழிப்புக் காட்டிக் கொண்டே அவள் செல்ல, சூர்யா புன்னகையுடன் அவனைப் பார்க்க, அவனது தோளில் தட்டியவள்,

“அவளுக்கு எக்ஸாம் வருது.. சோ பேசறது எல்லாம் லிமிட்டோட நிறுத்திக்கோ.. அவளை டிஸ்ட்ராக்ட் பண்ணாதே..” என்று விட்டுச் செல்ல, சூர்யா தனது காதல் கைக் கூடிய சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனான்..         

நெஞ்சம் படபடக்க வீட்டிற்கு வந்தவள், தனது அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டு, அறைக்குள் சென்று, தனது கணினியை இயக்கி பாடலை ஓடவிட்டு, தனது பெட்டில் விழுந்தாள்..

சட்டென நனைந்தது நெஞ்சம்

சர்க்கரை ஆனது கண்ணீர்

இன்பம் இன்பம் ஒரு துன்பம்

துன்பம் எத்தனை பேரின்பம்!

உடலுக்குள் மல்லிகை தூரல்

என் உயிருக்குள் மெல்லிய கீறல்

சுகமாய் சுகமாய் கொள்ளையிடு

என் உயிரை மட்டும் விட்டுவிடு!

error: Content is protected !!