உயிரோவியம் நீயடி பெண்ணே – 11

உயிரோவியம் நீயடி பெண்ணே – 11
11
எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்
என்று காத்து கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது
எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு
இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்
துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடுஎன் உயிரை மட்டும் விட்டுவிடு
சூர்யா ஊருக்கு வந்து நாட்கள் அதன் வேகத்தில் ஓடி இருந்தது. ஒருவாரம் கடந்த நிலையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவனின் காதுகளில் விழுந்த பாடலில் உறக்கம் களைந்து கண்களை விழித்தவன், ஓடிக் கொண்டிருந்த பேனை வெறித்துக் கொண்டு கிடந்தான்..
அசைவின்றிப் படுத்துக் கிடந்தவனை எட்டிப் பார்த்த ப்ரதாப், “சூர்யா எழுந்துட்டியா? ஏண்டா ஜெட்லாக்னா நைட் டைம் நீ எழுந்திருக்கணும் இல்லடா.. இப்படி இந்தியா டைம்மையும் சேர்த்து நீ தூங்கி எழுந்துக்கற? என்ன தான்டா உன்னோட பயாலஜிக்கல் சிஸ்டம்?” என்று கிண்டல் செய்ய, சோம்பலாக கண்களை மூடிக் கொண்டே,
“எழுந்து என்ன செய்யப் போறேன் மாமா? மறுபடியும் வீட்டைச் சுத்திட்டு வந்து சாப்பிட்டு தூங்க போறேன்.. வெறுப்பா இருக்கு.. அது தான் தூங்கித் தூங்கி சலிக்கறேன்..” என்றவனின் கண்களில் நிராசை வழிய,
“டேய் அவக்கிட்ட போய் பேசுடா சூர்யா.. இந்தப் பாட்டைக் கேட்டியா? அவ இன்னும் உன்னை தான் நினைச்சிட்டு இருக்காடா.. போடா.. எனக்கு உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்குடா.. நான் அவகிட்ட நீ இங்க இருக்கேன்னு போய் சொல்லப் போறேன்டா.. என்னால உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்க முடியல..” அவனை உலுக்கிக் கொண்டே ஜைஷ்ணவி சொல்லவும், ப்ரதாப் அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்..
“ஜைஷு.. நீ டென்ஷன் ஆகாம இரு.. அவன் பேசுவான்.. அவனுக்கு கொஞ்சம் அவளைப் பார்க்கறதுக்கு தயக்கமா இருக்கு.. அது அவங்களோட அந்த பிரிவுனால வந்தது.. அவ்வளவு தான்.. அவங்களே மெல்ல சரி பண்ணிப்பாங்க. நீ கொஞ்சம் டென்ஷன் பண்ணிக்காம இரும்மா.. எனக்கு உன்னோட ஹெல்த் ரொம்ப முக்கியம்..” அவளது தலையை வருடிக் கொண்டே சமாதானம் செய்ய,
“அப்போ எல்லாம் அவ அடிக்கடி இந்த பாட்டை போட்டுக் கேட்பாங்க.. அது இவனுக்கு போடற பாட்டு.. இவன் அவக்கிட்ட பேசணும்னா ஒரு பாட்டு போடுவான்.. பாட்டுலேயே ரெண்டு பேரும் பேசிப்பாங்க.. ரெண்டு பேருமே எப்படி இருப்பாங்க தெரியுமா? இப்போ இப்படி யாரோ போல இருக்கறதைப் பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்கு..” அவனது தோளில் சாய்ந்து அழ, அவளைத் தட்டிக் கொடுத்தவன்,
“கண்டிப்பா எல்லாமே சரியா போகும். இத்தனை நாளா அவ எங்க இருக்கான்னு தெரியாம இருந்தது இப்போ தெரிஞ்சிடுச்சு.. இனிமே அவன் பார்த்துப்பான்.. நீ கவலைப்படாதே என்ன? எப்போ அவ வேற வாழ்க்கைன்னு நகராம இருக்காளோ அப்போவே அவ சூர்யா மேல வச்சிருக்கற அன்பு மாறவே இல்ல.. இந்தச் சண்டை பிணக்கம் எல்லாம் அவனை நேர்ல பார்க்கற வரை தான். அதெல்லாம் இழுத்து பிடிக்க முடியாது.” என்று சமாதானம் செய்யவும்,
தனது கண்களைத் துடைத்துக் கொண்டு, அவளது கையைத் தட்டிக் கொடுத்த சூர்யா, “திரும்பவும் சூர்யா முதல்ல இருந்து ஆரம்பிக்கப் போறான் ஜைஷு.. என்னை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பு.. வெற்றியோட மாலையும் கழுத்துமா அவளைக் கூட்டிட்டு வரேன்..” என்று சொல்லவும், அவனது தலையில் அடித்தவள்,
“எப்படி ப்ளேட் காட்டி அவளை மிரட்டினையே அப்படியா?” என்று கேலி செய்ய,
“இப்போ ப்ளேட் காட்டினா அவ என் கழுத்துல ஸ்கால்பெல் வச்சு ஒரே கோடு போட்டுடுவா.. நான் பாவம்..” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் சொல்ல, ஜைஷ்ணவி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“முதல்ல அப்பாக்கிட்ட நீ இங்க வந்த விஷயத்தை சொல்லு.. அவங்க உன்னை மிச்சிகன்ல தேடிட்டு இருக்காங்க.. அப்பா பாவம்டா.. நீ பேசியே ஒரு மாசத்துக்கு மேல ஆகுதுன்னு புலம்பிட்டு இருந்தார்.” என்று கேலி செய்யவும், உச்சுக் கொட்டியவன்,
“நான் போய் ரெப்ரெஷ் ஆகி டிபன் சாப்பிட்டு திரும்ப தூங்கறேன்.. இப்படி தூங்கி எவ்வளவு வருஷமாச்சு தெரியுமா? கடைசியா அவ கூட தூங்கினது..” என்று சொல்லிக் கொண்டே, பாத்ரூமினுள் செல்ல, ஜைஷ்ணவி திகைத்து ப்ரதாப்பைப் பார்த்தாள்..
‘மச்சான் உளறி மாட்றானே. இவ என்னைக் கேள்வி கேட்டா நான் வேற என்ன பதில் சொல்றது?’ என்று நினைத்துக் கொண்டவன்,
“ஜைஷு.. எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு.. நான் கிளம்பறேன்..” என்றபடி அந்த அறையை விட்டு வெளியில் செல்ல, ஜைஷ்ணவி அவன் பின்னோடு சென்றாள்..
“ஏங்க? அவன் இப்போ சொன்னதுக்கும் அன்னைக்கு நீங்க விளையாட்டா அத்தைன்னு ஏதாவது குழந்தை ஓடி வரும்ன்னு சொன்னதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?” அவனைப் பிடித்து நிறுத்தி, கூர்மையுடன் கேட்க, தோளைக் குலுக்கி, அவளது கன்னத்தை வருடிக் கொண்டே,
“ஜைஷு.. சிலது எல்லாம் நான் உன்கிட்ட சொல்லாம விட்டேன்னா அது உன்னோட நல்லதுக்கு தான் இருக்கும்ன்னு புரிஞ்சிக்கோ.. மனசைப் போட்டு குழப்பிக்காம போய் புக்ஸ் படிச்சிக்கிட்டே ஜாலியா பாட்டைக் கேளு.. எனக்கு சீக்கிரம் உன்னைப் போல ஒரு குட்டிப் பாப்பா வேணும்..” என்றபடி அவளது நெற்றியில் இதழ் பதித்தவன், தனது அலுவலகத்திற்குத் தயாராகத் துவங்கினான்..
கீழே ஓடிக் கொண்டிருந்த பாடல்களைக் கேட்ட ஜைஷ்ணவிக்கோ தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.. ப்ரதாப்பிற்கு உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், கதவைத் திறந்து வேகமாக படிகளில் இறங்க, ப்ரதாப் அவள் பின்னோடு ஓடிச் சென்றான்.
சுஜிதாவின் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டு அவள் காத்திருக்க, “ஜைஷு.. என்ன பண்ணிட்டு இருக்க? நீ எதையாவது கேட்டு இப்போ இருக்கற நிலைமையை மோசம் பண்ணிடாதே.. அவனே பார்த்துப்பான்..” ப்ரதாப் அவளைப் பிடித்து இழுக்க, அதற்குள் கதவைத் திறந்த சுஜிதா, அங்கு பதட்டத்துடன் நின்றுக் கொண்டிருந்த ப்ரதாப்பையும், படபடப்பாக நின்றுக் கொண்டிருந்த ஜைஷ்ணவியையும் கேள்வியாகப் பார்த்தாள்.
சில நொடிகளின் அமைதிக்குப் பிறகு, “அக்கா.. வாங்கக்கா.. என்னாச்சு? நீங்க டென்ஷனா இருக்கற மாதிரி இருக்கீங்களே.. ஏதாவது ப்ராப்லமா?” என்றபடி கதவை மேலும் திறக்க, ஜைஷ்ணவி திருதிருவென விழித்துக் கொண்டு ப்ரதாப்பைப் பார்க்க, அவனோ அவளைப் பார்த்து பல்லைக் கடித்தான்.
“என்னாச்சு ரெண்டு பேருமே இப்படி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு இருக்கீங்க? உள்ள வாங்க ரெண்டு பேரும்.. ஏதாவது பிரச்சனையா?” அவள் கேட்க,
“சுஜி.. காலையில நீ சாப்பிட்டயா? என்ன செஞ்சிருக்க?” ஜைஷ்ணவி கேட்க, ப்ரதாப்பிற்கு நின்றிருந்த மூச்சு வெளியில் வந்தது..
“ஹையோ இதுக்கா இப்படி மூச்சு வாங்க ஓடி வந்தீங்க? நான் காலையிலேயே ஒரு சர்ஜரிக்கு போயிட்டு வந்து கொஞ்சம் ரிலாக்ஸ்டா பாட்டு கேட்டுட்டு புக் படிச்சிட்டு இருந்தேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிடல் கேண்டீன்ல சாப்பிட்டுப்பேன்க்கா? ஏன்? என்னாச்சு?” அவளது பதிலில்,
“எதுக்கு காண்டீன்ல சாப்பிடணும் சுஜி.. இரு நான் உனக்கு சூடா செஞ்சு எடுத்துட்டு வரேன்.. ஒழுங்கா சாப்பிட்டு ஹாஸ்பிடல் கிளம்பு..” என்று மிரட்ட, ப்ரதாப்பிற்கு தனது மனைவியைப் பார்த்து புன்னகை அரும்பியது..
அவளது மிரட்டலில் சுஜிதா திகைத்து, “அக்கா.. அதெல்லாம் வேண்டாம்க்கா. நான் தான் ரெண்டு நாளா மாவு வாங்கிட்டு வரணும்ன்னு நினைச்சு மறந்து போயிடறேன்.. இன்னைக்கு வாங்கிடுவேன்.. கேண்டீன்ல கூட நல்லா இருக்கும்..” அவள் தயங்க, ஜைஷ்ணவி அவளைப் பார்த்து முறைத்தாள்…
“ஓ.. நாங்க எல்லாம் அவ்வளவு அந்நியமா போயிட்டோம்ல? சரி.. சரி.. அப்படியே இருங்க.. நான் வரேன்..” என்றவள், வேகமாக வெளியில் செல்ல, ப்ரதாப் சுஜிதாவின் முகத்தைப் பார்க்க, அடிப்பட்ட குழந்தையென அவள் நின்றுக் கொண்டிருந்தாள்.
“அக்கா… ப்ளீஸ் கோவிச்சுக்காதீங்கக்கா.. நீங்க சொல்றதுக்காக இன்னைக்கு ஒரு நாளைக்கு நான் சாப்பிடறேன்.. நீங்க ஏன் ஸ்ட்ரைன் பண்ணிக்கறீங்க? ப்ளீஸ்க்கா புரிஞ்சிக்கோங்க..” அவள் தயங்கித் தயங்கிக் கேட்க,
“ஹ்ம்ம்.. எனக்கு என்ன ஸ்ட்ரைன் இருக்கு? இப்போ எனக்கு இருக்கற ஒரே வேலை சமைக்கிறது மட்டும் தான்.. அதுவே பாதி நேரம் இவங்க தான் பார்த்துக்கறாங்க.. சமைக்கிறது பெரிய விஷயமா? நைட்டுக்கும் நான் உனக்கு வச்சிடறேன்.. நீ வந்து சாப்பிடு என்ன? வள்ளிம்மா கிட்ட தான் சாவி இருக்கே.. அவங்க வேலை செய்யும் போது நான் உனக்கு டிபன் வச்சிடறேன்.. நீ வந்து சாப்பிடுவியாம்.. இப்போ நான் உனக்கு சூடா சாப்பிட எடுத்துட்டு வரேன்..” சொல்லிக் கொண்டே நகர முற்பட, சுஜிதா அவளது கையைப் பிடித்துக் கொண்டாள்..
“அக்கா.. ப்ளீஸ்க்கா சொன்னா கேளுங்க.. நான் இத்தனை நாளா இப்படி தானேக்கா சாப்பிட்டேன்.. இனிமேலும் அப்படியே இருக்கட்டுமே.. நீங்க சொல்றீங்கன்னு நான் இப்போ மட்டும் சாப்பிடறேன்.. ப்ளீஸ்க்கா.. புரிஞ்சிக்கோங்க..” மீண்டும் அவள் கெஞ்ச, ப்ரதாப் அமைதியாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, ஜைஷ்ணவி ப்ரதாப்பை முறைத்தாள்.
“நீங்க என்ன இங்க நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க? உங்க தங்கைன்னு சொன்னா போதுமா? அவ சாப்பிட மாட்டேன்னு சொல்றா.. நீங்க கல்லுக் குண்டு மாதிரி நின்னு பார்த்துக்கிட்டே இருக்கீங்க? எல்லாம் வாய் மட்டும் தான் போல..” அவனையும் பேச்சில் இழுக்க, அவளைக் கண்கள் விரியப் பார்த்தவன்,
“பாரு சுஜி. என்னை எப்படி மிரட்டறான்னு.. உங்க அண்ணனுக்கு ஒரு வாய் கஞ்சியாவது கிடைக்க வழி பண்ணும்மா.. அவ சொல்றதுக்கு ஒத்துக்கோ.. இல்ல.. நீ சரின்னு சொல்ற வரை எனக்கும் சாப்பாடு போட மாட்டா.. எனக்கு வெளிய சாப்பிட்டா சுத்தமா ஒத்துக்காது.. அதுவும் இவ சமைச்சு என் நாக்கு வேற நீண்டு போச்சா? அதனால வெளிய சாப்பிடவும் பிடிக்க மாட்டேங்குது..” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லவும், சுஜிதா அவனைப் பார்த்து விழித்தாள்..
“ஏன் என்னைப் புரிஞ்சிக்கவே மாட்டேங்கறீங்க?” அவள் முணுமுணுக்க,
“அவ சாப்பிடறேன்னு சொன்னா தான் உங்களுக்கு செய்வேன்.. இல்ல உங்களுக்கும் கிடையாது.. கேட்டு சொல்லுங்க.. நான் மாடிக்கு போறேன்..” என்ற ஜைஷ்ணவி கடகடவென்று படிகளில் ஏறிச் செல்ல, ப்ரதாப் சுஜிதாவைப் பார்த்தான்..
“அண்ணா.. நீங்களாவது அவங்கக்கிட்ட சொல்லுங்களேன்..” சுஜிதா இழுக்க,
“அது ஒண்ணும் இல்ல சுஜி.. அவளும் பிசியா ஓடிட்டு இருந்தவ இல்லையா? நான் யூ.எஸ். போன பொழுது என் கூட வரதுக்காக அவ வேலையை விட்டுட்டு வந்துட்டா. அப்பறம் ட்ரீட்மெண்ட் அது இதுன்னு அவ வேலைக்கு போகல.. வீட்டுல தனியா இருக்கா.. இப்போ உன்னைப் பார்த்ததுல அவளுக்கு அவ்வளவு சந்தோசம்.. அது தான்..” அவன் விளக்க, சுஜிதாவோ, “நீங்களுமா?” என்று முணுமுணுத்து, கண்கள் கலங்க அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் சொன்னது அவனது காதில் நன்றாகவே விழுந்தது.. “என்ன செய்யறதும்மா? சாப்ட்வேர்ல இருக்கறவங்களுக்கு ஆன்சைட் எல்லாம் ஒரு கனவு வாய்ப்பு. சீக்கிரம் லைஃப்ல செட்டில் ஆகணும், ப்ரோஃபைல்ல போட்டா அது நமக்கு ஒரு நல்ல ரெகக்னிஷனைக் கொடுக்கும். அடுத்த வேலைக்கு சேரும் போது அதெல்லாம் நமக்கு பாஸிடிவ்வா இருக்கும்… சம்பளம் அதிகமா கிடைக்கும்ன்னு அதை விடாம பிடிச்சிட்டு ஓட தானே வேண்டி இருக்கு. எல்லாமே எதிர்காலத்துக்காகத் தானே.. பொண்டாட்டி பிள்ளைங்களை எந்தக் குறையும் இல்லாம வசதியா வச்சுக்கணும்ன்னு தான் எங்களைப் போல உள்ளவங்க அதை விடாம பிடிச்சுக்கறோம். வாழ்க்கையில மேல வர ஏதாவது ஒரு சின்ன வாய்ப்பு கிடைச்சாலும் அதைப் பிடிச்சுக்கிட்டு மேல ஏறத் தானே பார்க்க வேண்டி இருக்கு.. எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது இல்லையே..” அப்பொழுது சூர்யா எடுத்த முடிவிற்கும் சேர்த்து பொதுப்படையாகச் சொல்லிவிட்டு,
“ஜைஷு.. உன்னை ரொம்ப மிஸ் பண்ணினா.. உன்னைப் பத்தி நிறைய சொல்லி இருக்கா. நான் உன்னைப் பார்த்ததும் தங்கைன்னு சொல்ல அதுவும் ஒரு காரணம்.. நான் உன்னை இப்போ தான் பார்த்தாலும்.. நீ எனக்கு ரொம்ப பரிச்சயம்.. அவங்க வீட்ல இருக்கறவங்களை விட உன்னைப் பத்தி பேசினது அதிகம்..
‘சுஜி பெரிய சர்ஜன் ஆகி இருப்பான்னு எங்கயாவது ஹாஸ்பிடல் பார்த்தா சொல்லுவா. அவ தான் என்னோட ஃபர்ஸ்ட் அன்ட் பெஸ்ட் ஸ்டுடென்ட் தெரியுமா’ன்னு அவளுக்கு அவ்வளவு பெருமை. நீ எங்க இருக்கன்னு தெரியலன்னு அவளுக்கு ரொம்ப வருத்தம்.. இப்போ உன்னைப் பார்க்கவும், அதுவும் ஒரே இடத்துல வீடு இருக்கவும் அவளுக்கு சந்தோசம் தாங்கல..” தனது மனைவியைப் பற்றிய அவனது புரிதலில், ஜைஷ்ணவியை நினைத்து மகிழ்ந்தாலும், சுஜிதாவிற்கு சூர்யாவின் நினைவு வந்து தொண்டையடைத்தது.
அவள் அப்பொழுதும் அமைதியாக நிற்கவும், “நீ வீட்ல இருக்கன்னு தெரிஞ்சதும் அவ உன்னைப் பார்க்க வந்துட்டா. வா சுஜி சாப்பிட போகலாம்.. அவளுக்கு அது ஸ்ட்ரைன் இல்ல.. அவளுக்கு சமைக்கிறது ரொம்ப பிடிச்ச வேலை.. உனக்கே தெரியுமே..” சுஜிதாவை அவன் சமாதானம் செய்ய, அவளோ அவனையேப் பார்த்துக் கொண்டு நின்றாள்..
“என்னம்மா பதில் சொல்ல மாட்டேங்கிற?” ப்ரதாப் கேட்க,
“ஹ்ம்ம். நான் பாதி நாள் எப்போ வரேன், போறேன்னே தெரியாது.. சில நாள் வீட்டுக்கு கூட வராம அங்கேயே தங்கிடுவேன்.. காலையில வந்து குளிச்சிட்டு போவேன். அப்படி இருக்க.. அக்கா எனக்காக செஞ்சு வச்சிட்டு வெயிட் பண்ணனும். ப்ளீஸ் அக்காவுக்காக இன்னைக்கு ஒரு நாள் மட்டும் சாப்பிடறேனே.. தினமும் எல்லாம் வேண்டாம்..” அவள் இழுக்க, ஒரு பெருமூச்சை வெளியிட்டவன்,
“இதுக்கும் மேல எனக்கு சொல்றதுக்கு எதுவுமே இல்லம்மா.. உன்னை ஃபோர்ஸ் பண்றது போல இருந்தா சாரி.. அப்பறம் உன் இஷ்டம்மா.. டேக் கேர்..” என்று சொல்லிவிட்டு நகர முற்பட, அவனது அன்பில் நெகிழ்ந்தவள்,
“இல்லண்ணா.. நான் சாப்பிடறேன்.. நானே மேல வரேன்..” என்று ஒப்புக் கொள்ளவும், சில நொடிகள் திகைத்த ப்ரதாப், சட்டென்று சுதாரித்து,
“ரொம்ப சந்தோசம்மா.. நீ பூட்டிட்டு வா.. நான் மேல போய் சொல்லி வைக்கிறேன்..” என்றவன், வேகமாக படிகளில் ஏற, சுஜிதாவிற்கு நெஞ்சம் படபடத்துப் போனது.
அவளுக்கும் ஜைஷ்ணவியைப் பார்த்ததில் மகிழ்ச்சி தான். ஆனால் அவர்களது வீட்டிற்குச் செல்வது தேவை இல்லாத சில நினைவுகளை கிளறி, மனதினில் வலியை தரும் என்று பயந்தாள். சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, என்றாவது ஒரு நாள் அவனது குடும்பப் புகைப்படத்தையோ, அல்லது அவனது மனைவியை, குழந்தைகளைப் பற்றிய பேச்சுளோ வரக் கூடும் என்று நினைத்தவளுக்கோ, அதைத் தாங்கத் தான் மனதில் சக்தியும், தைரியமும் இல்லாமல் போனது..
ஏதேதோ நினைவுகள் மோத, மெல்ல அவள் படிகளில் ஏற, ஜைஷ்ணவி அவளுக்காக வாயிலில் காத்திருந்தாள்.. அவளை வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்ற ப்ரதாப்,
“டேய் மச்சான்.. அப்படியே உள்ளேயே இரு.. இல்ல வெளிய வரதுன்னா சொல்லிட்டு வா. திடீர்ன்னு வந்து எங்களுக்கு ஹார்ட் அட்டாக் கொடுக்காதே.. எனக்கு தாங்காது..” என்று சொல்ல, கண்ணாடியின் முன் நின்று தனது தலையைத் துவட்டியப் படி கோதிக் கொண்டிருந்தவன்,
“ஏன்? என்ன விஷயம்? நீங்க வர்க் ஃபார் ஹோமா? நான் வேணா அப்படியே கொஞ்சம் வெளிய போயிட்டு என் பொண்டாட்டியைப் பார்த்துட்டு வரேன்..” சூர்யா கேலி செய்ய, அவனது முதுகில் ஒன்று போட்டவன்,
“நீ எங்கயும் போக வேண்டாம்.. இந்த ரூமுக்குள்ளயே இருந்தா போதும்.. ஏன்னா என் பொண்டாட்டி உன் பொண்டாட்டியை போய் சாப்பிட கூப்பிட்டு வந்திருக்கா. யுவர் பொண்டாட்டி இஸ் ஆன் தி ஸ்டெப்ஸ்.. எப்போ வேணா உள்ள வரலாம்..” ப்ரதாப் கேலி செய்ய,
“என்னது?” சூர்யா ஆச்சரியத்துடன் திரும்பினான்..
“என்ன என்னது? அவ வரேன்னு சொல்லிட்டா.. உங்க அக்கா அவளால ஆனது அவளை நம்ம வீட்டுக்கு வர வைக்க ப்ளான் பண்ணி இருக்கா.. இனிமே நீ தான் பிக்கப் பண்ணனும்..” அவன் சொல்லவும்,
“ஹையோ.. எனக்கு பசிக்குது.. நேத்து நைட்டும் சாப்பிடல.. அவ வந்தா என்ன? நான் பாட்டுக்கு ஒரு ஓரமா உட்கார்ந்து சாப்பிடறேனே.. வேணா ஒரு மச்சம் வச்சிட்டு வரவா.. இல்ல மாஸ்க் போட்டு வந்து சாப்பிடவா? இல்ல கூலர்ஸ்..” சூர்யா கேட்க, ப்ரதாப் தலையில் தட்டிக் கொண்டு,
“அப்படியே பெரிய இவன் பாரு. அதெல்லாம் வச்சா அவளுக்கு தெரியாது?” என்று பல்லைக் கடிக்க, சூர்யா அவனது கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினான்.
“அடச்சை. இதுக்குத் தான் வெளிய வராதேன்னு சொன்னேன்.. நாங்க இல்லாத போது நீ பேசிட்டு, அப்பறம் எங்களுக்கு இந்த ஹார்ட் அட்டாக் எல்லாம் கொடு என்ன?” என்று கேட்கும் நேரம், ‘வா சுஜி..’ என்ற ஜைஷ்ணவியின் குரல் கேட்கவும், சூர்யா அவசரமாக தலை சீவத் துவங்கினான்..
“என்னடா என்னவோ வெளிய போய் அவளை அப்படியே கட்டிப்பிடிச்சு வரவேற்க போற மாதிரி ரெடி ஆகற?” அவன் கேலி செய்ய,
“உங்களுக்கு எல்லாம் என்னைப் பார்த்தா கேலியா இருக்கு இல்ல.. எல்லாம் என் நேரம். நீங்க போய் அவளைப் பாருங்க. ஆனா.. எனக்கு எப்படியாவது ஒரே ஒரு காபி மட்டும் வேணும் மாமா.. நிஜமாவே ரொம்ப பசிக்குது..” என்று கெஞ்ச,
“சரி.. நான் பார்க்கறேன்..” என்ற ப்ரதாப், அந்த அறைக் கதவை மூடி விட்டு வெளியில் செல்ல, சுஜிதா தயங்கியபடி ஹாலில் நின்றிருந்தாள்.
“வாம்மா.. என்ன இப்படி தயங்கி நின்னுட்டு இருக்க? உள்ள வா.. சாப்பிடலாம்..” ப்ரதாப் அழைக்க, சுஜிதா அவனைப் பார்த்து தலையசைத்தாள்.. அவளுக்கு தட்டை எடுத்து வைக்க, ஜைஷ்ணவி பரிமாரத் துவங்கினாள்.
சுஜிதா உண்ணத் துவங்க, “ஒரு நிமிஷம் வரேன்..” என்ற ப்ரதாப் காபியைக் கலந்துக் கொண்டு வரவும், அவனைக் குழப்பமாகப் பார்த்து,
“ஏண்ணா சாப்பிடறதுக்கு முன்னால காபியைக் குடிக்கறீங்க? சாப்பிட்டு குடிச்சா ஃபில்லா இருக்குமே?” என்று கேட்க,
“அது எனக்கு சில சமயம் இப்படி தனியா போய் குடிச்சு பழக்கம்மா.. அது தான். வரேன் இரும்மா..” என்றவன், சூர்யா இருந்த அறைக்குள் நுழைய, ஜைஷு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு சுஜிதாவைப் பார்த்தாள்.
“தனியா காபியை குடிக்கனுமா?” புரியாமல் ஜைஷ்ணவியை அவள் பார்க்க,
“அவரு அப்பப்போ அப்படித் தான்.. தனியா போய் குடிச்சிட்டு வருவார்.” சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, அவளுக்கு பரிமாற, ஜைஷ்ணவி சொன்னது அப்பொழுதும் புரியாமல் முழித்தவள், அதற்கு மேல் அதைப் பற்றிக் கேட்காமல்,
“அக்கா.. நீங்களும் சாப்பிடுங்க.. டைம் ஆச்சு.” சுஜிதா சொல்லவும்,
“இல்ல.. நான் கொஞ்ச நேரம் ஆகட்டும் சுஜி.. நானும் இப்போ தான் எழுந்து காபி குடிச்சேன்.. ஆமா.. உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்ன்னு நினைச்சேன்.. ராஜேஸ்வரி டாக்டர் உனக்கு ரொம்ப க்ளோசா?” என்று கேட்க, தலையைக் குனிந்தபடி மண்டையை மேலும் கீழும் அசைத்தவள்,
“அவங்க எனக்கு கார்டியன் ஏஞ்சல் அக்கா.. என்னை எங்க அம்மாவுக்கு அப்பறமா ரொம்ப நாளைக்கு ஒரு குஞ்சுப் பறவையை இறகுக்குள்ள வச்சு பாதுகாக்கறது போல பாதுகாத்தாங்க. எனக்கு இன்னொரு அம்மா.” அதைச் சொல்லும்பொழுதே சுஜிதாவின் கைகள் உணவை அளக்கத் துவங்க, ஜைஷு அவளது முகத்தைப் பிடித்து நிமிர்த்தினாள்.
அப்பொழுதும் அவளது இமைகள் தழைந்தே இருக்க, “நான் செகண்ட் இயர் எக்ஸாம்க்கு முன்னால பிசிகலி அன்ட் மெண்டலி ரொம்ப டிஸ்டர்ப் ஆகி இருந்தேன். அப்போ என்னைப் பார்த்துக்கிட்டது இவங்க தான்.. அம்மாவுக்கு சொன்னா கஷ்டப்படுவாங்கன்னு சொல்லத் தயங்கற விஷயம் கூட அவங்கக்கிட்ட சொல்லுவேன். பாதி நாள் நான் அவங்க வீட்டுல தான் இருந்தேன்.. அவங்க ஹஸ்பன்ட்டும் எனக்கு ரொம்ப சப்போர்டிவ்வா இருப்பாங்க. அவங்களுக்கு நான் ஒரு பொண்ணு மாதிரி.. அவங்களால தான் நான் கைனகாலாஜி எடுத்தேன்..” என்ற சுஜிதாவின் கண்களில் கண்ணீர் இறங்கத் துவங்க, அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டவள், ஜைஷ்ணவி அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே,
“சரிக்கா. நான் கிளம்பறேன்.. சாப்பாடு ரொம்ப டேஸ்டியா இருந்தது.. சொன்னா கேளுங்கக்கா. நைட்க்கு எல்லாம் வேண்டாம்.. ப்ளீஸ்..” என்று கெஞ்ச, அவளது கையைத் தட்டிக் கொடுத்தாள்.
“ப்ளீஸ் சுஜி.. நான் செஞ்சு வைக்கிறேன்.. சாப்பிடு.. சொன்னா கேளு.. முன்ன இருந்ததுக்கு நீ இப்போ எப்படி இளைச்சு இருக்கத் தெரியுமா? அதுக்கு நீ ஒழுங்கா சாப்பிடாதது தான் காரணம். வைக்கிறதை ஒழுங்கா சாப்பிடு.. இல்ல நான் வந்து ஊட்டி விடுவேன்..” ஜைஷ்ணவி மிரட்டவும், மெல்லிய புன்னகையைச் சிந்தியவளின் செல்போன் இசைக்க, அதை எடுத்து,
“இதோ ஒரு அஞ்சு நிமிஷம் வந்துடுவேன்மா.. கிளம்பிட்டேன்..” சொல்லிக் கொண்டே கையைக் கழுவிக் கொண்டவள்,
“அக்கா.. நான் வரேன்.. டைம் ஆச்சு..” என்றபடி ஹாலில் அமர்ந்திருந்த ப்ரதாப்பை கவனிக்காமல் ஓடிச் செல்ல, ஜைஷ்ணவி அவளைப் பார்த்து தலையசைத்தபடி ப்ரதாப்பைத் திரும்பிப் பார்க்க, அவன் இருந்த நிலையைப் பார்த்தவள், அவளது அருகில் வந்தாள்.
“என்னங்க? என்ன ஆச்சு?” அவனது தலையைக் கோதியபடி ஜைஷ்ணவி கேட்க, ஒரு பெருமூச்சுடன் தலையசைத்தவன்,
“ஒண்ணும் இல்ல ஜைஷு.. நான் சாப்பிட்டு ஆபிஸ்க்கு கிளம்பறேன்..” என்றவன்,
“சூர்யா..” என்று அழைக்க, சுஜிதா வந்ததில் இருந்தே காதை அவளது பேச்சில் பதித்து இருந்த சூர்யாவிற்கு, அவள் ஜைஷ்ணவியிடம் கூறியதைக் கேட்டு, முகத்தில் யாரோ வெந்நீரை கொட்டியது போல இருந்தது..
அமைதியாக இருவரும் உண்டு எழுந்துக் கொள்ள, “ஜைஷு நாம கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாமா? மனசே ஒரு மாதிரி இருக்கு.” சூர்யா கேட்க, ஜைஷ்ணவி யோசனையுடன் ப்ரதாப்பைப் பார்த்துக் கொண்டே தலையசைத்தாள்.
“சூர்யா எப்போ நீ சுஜி கிட்ட பேசப் போற? ரொம்ப லேட் பண்ணாம பேசறது நல்லது.. இல்ல அவளை விட்டுடு.. நான் ஏதாவது அவளை சரி பண்ணப் பார்க்கறேன்..” இறுகிய குரலில் ப்ரதாப் சொல்ல, அவனைப் பார்த்தவன்,
“சீக்கிரமே சரி பண்ணறேன் மாமா..” என்றவன், தனது அறைக்குச் சென்று வெளியில் செல்லும் உடைக்கு மாறி வர, ஜைஷ்ணவியும் தயாராகி வந்தாள்..
“காரை எடுத்துக்கோ சூர்யா..” ப்ரதாப் சொல்லவும், சரியென்று தலையசைத்தவன், ஜைஷ்ணவியுடன் புறப்பட்டான்.