உயிரோவியம் நீயடி பெண்ணே – 12

உயிரோவியம் நீயடி பெண்ணே – 12
12
மருத்துவமனைக்கு வந்த சுஜிதா, நேராக ராஜேஸ்வரியின் அருகில் சென்று நின்றாள்.. அவளது முகத்தைப் பார்த்த ராஜேஸ்வரி, அவளுக்கு ஒரு சாக்லேட்டை எடுத்து வைக்க, அதை எடுத்து வேகமாக உண்டவள், நடந்த அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.
அதைக் கேட்டுச் சிரித்த ராஜேஸ்வரி, “அப்போ உன்னோட நாத்தனார் உனக்கு சமைச்சுத் தந்து இனிமே உன்னைப் பார்த்துக்கறேன்னு சொன்னாங்களா?” என்று கேட்டுச் சிரிக்க, சுஜிதாவின் முகம் வாடியது..
“அவன் கூட தானே நீ இன்னும் மானசீகமா குடும்பம் நடத்திட்டு இருக்க? என்ன துணிச்சல் இருந்தா நீ அடாப்ஷன்க்கு ரெஜிஸ்டர் பண்ற அளவுக்கு போவ? அதை நான் கிழிச்சுப் போடலைன்னா உன் வாழ்க்கை என்ன ஆகி இருக்கும்? குழந்தையைத் தத்து எடுக்கறதை நான் தப்புன்னு சொல்லலை..
ஆனா.. இப்படி கல்யாணமே பண்ணிக்காம, அவனை நினைச்சு வாழறதுக்காக இப்படி செய்யறது தப்புன்னு சொல்றேன்.. இங்க ஹாஸ்பிடல்ல நீ கமிட்டட்ன்னு சொல்லி இருக்கறது எல்லாம் சரி தான்.. அதுக்குன்னு? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா? இப்போ எல்லாம் நல்லா இருக்கும்.. ஆனா.. காலம் போகப் போக லைஃப் சலிச்சுப் போயிடும்.. உனக்கு என்ன வயசாகுதுன்னு இப்படி என்னவோ துறவி போல இருக்க? உனக்கான ஃபீலிங்க்ஸ் எல்லாம்..” அவர் சொல்லி முடிப்பதற்குள், அவள் எதுவோ சொல்ல வாயைத் திறக்க, அவளைக் கைக் காட்டித் தடுத்தவர்,
“ஹே.. நானும் உன் வயசை எல்லாம் தாண்டி தான் வந்திருக்கேன்.. உன்னோட தனிமை எந்த அளவுக்கு இருக்குன்னு உன் தலைகாணில காய்ந்து இருக்கற கண்ணீர்க் கரையில தெரியும். உன் முகத்தைப் பார்த்தா எனக்குத் தெரியாதா? சும்மா எனக்கு எதுவுமே இல்ல.. அப்படியே அவனை நினைச்சிட்டே வாழ்ந்துட்டு போயிடுவேன்னு எல்லாம் டயலாக் அடிக்காதே.. போதும்.. கேட்டு கேட்டு காது புளிக்குது.. ஒண்ணா நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொல்லு.. இல்லையா.. அவனைத் தேட ஒத்துக்கோ.. கண்டிப்பா அவன் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான்..” அவர் காட்டமாகச் சொல்ல, சுஜிதா கண்ணீருடன் அவரைப் பார்த்தாள்.
அவளது கண்ணீர் அவரை அசைத்துப் பார்க்க, “எனக்கு என்னவோ நீ சூர்யாவைப் பத்தி நீ சொன்னதை எல்லாம் வச்சுப் பார்க்கும்போது அவனும் இன்னும் உன்னை நினைச்சிட்டு இருப்பான்னு தான் தோணுது சுஜி. உன்னையே சுத்திச் சுத்தி வந்தவன் எப்படி வேற ஒருத்தியை கல்யாணம் செய்துப்பான்? அப்படி அவனுக்கு கல்யாணம் ஆகி இருந்தா உன்னைப் பார்க்க அவனோட அக்கா சங்கடப்பட்டு விலகிப் போயிருக்கனும். அவ அப்படி செய்யாம உன்னை அந்த கவனி கவனிக்கிறா.. உன்னையே சுத்திச் சுத்தி வரா..
ஒருவேளை அவனுக்கு கல்யாணம் ஆகி இருந்ததுன்னா உன்னை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்க மாட்டாங்க.. ஏன்னா நாளபின்ன அவன் வந்தான்னா.. நீ அவங்க வீட்ல இருந்தா பிரச்சனை ஆகும் இல்ல.. அதுனால எனக்கு என்னவோ அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நீ சொல்ற விஷயம் நெருடுது.. ஒருவேளை உன்னை அவன் தேடி வந்திருந்தா கூட உன்னை ஈசியா கண்டுப்பிடிச்சு இருக்க முடியாதே.. அந்த அளவுக்கு இல்ல எல்லாத்தையும் மாத்தி வச்சிருக்க?” தனது மனதைப் பகிர, சுஜிதா அவரது தோள் சாய்ந்தாள்.
அவளது கன்னத்தை வருடிக் கொண்டே, “சுஜு… நீ ஓகே சொல்லு.. நான் போய் ஜைஷ்ணவிகிட்ட பேசி அவனோட நம்பரை வாங்கிட்டு வரேன்.. இல்ல கல்யாணத்துக்கு பேசிட்டே வரேன்.. சொல்லுடா.. உன்னை இப்படி பார்க்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த ஒரு வாரமா உன் முகமே ரொம்ப டல் அடிக்கிற மாதிரி இருக்கு.. எனக்கு உன் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கணும்.. நீயும் புருஷன் குழந்தைக் குட்டின்னு சந்தோசமா இருந்தா தானே நாங்க எல்லாம் நிம்மதியா இருக்க முடியும்..” அவளது தலையை வருடிக் கொண்டேச் சொல்ல, சுஜிதா அவரது முகத்தைப் பார்த்தாள்.
“ராஜிம்மா.. எனக்கு இந்த கொஞ்ச நாளாவே யாரோ என்னைப் பார்த்துட்டே இருக்கிறது போல ஃபீல் ஆகுது.. முன்னால சூர்யா பார்க்கும்போது எனக்கு அப்படி இருக்கும்.. நான் வீட்டுல இருந்து வெளிய காலடி எடுத்து வச்சாலே சூர்யா என்னை ஃபாலோ பண்ணிட்டே இருப்பாங்க. அப்போ நான் திரும்பிப் பார்க்காமையே எனக்கு சூர்யா இருக்கற ஃபீல் இருக்கும். இத்தனை நாளா இல்லாம எனக்கு இப்போ மறுபடியும் அந்த ஃபீலிங் வருது.. ஏன்னே தெரியல.. சூர்யா இங்க இல்லையே.. ஆனா.. சூர்யாவோட நினைப்பாவே இருக்கு ராஜிம்மா..” குழப்பமாகக் கேட்க,
“ஹ்ம்ம்.. ஜைஷ்ணவி உன்னைப் பார்த்துட்டா இல்ல.. கூடிய சீக்கிரம் வருவான்.” கேலி போலச் சொன்னவர், அவளது கன்னத்தில் அடித்து,
“போ.. போய் வேலையைப் பாரு.. பேஷன்ட்ஸ் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..” என்று சொல்ல, அவரை விட்டு எழுந்து நின்றவள்,
“திஸ் இஸ் மை ராஜிம்மா.. நான் போய் வேலையைப் பார்க்கறேன்..” என்றபடி இரண்டடி நகர்ந்தவள், அவரைத் திரும்பிப் பார்த்து,
“ஆனா.. நீங்க தான் இன்னும் அந்த சூர்யாவுக்கு கல்யாணம் ஆகலைன்னு நம்பிட்டு இருக்கீங்க.. அவங்க அம்மா தான் அந்த கா..யு.. கூட யூ.எஸ்.லையே கல்யாணம்ன்னு அவ்வளவு பெருமையா சொல்லி இருக்காங்களே.. அது உண்மையா இல்லைன்னா சூர்யா என்னைத் தேடி இருக்க மாட்டாங்களா? என்னை விட அந்த காயு தானே அவங்களுக்கும் முக்கியமா இருந்தா.. நான் எல்லாம் அவங்க நியாபகத்துல இருப்பேனோ என்னவோ? பழைய டைரி மெமரீஸ்ல பரண்ல போயிருப்பேன்.. நீங்க வேற..” நக்கலாகச் சொன்னவள்,
“என்னால தான் சூர்யா இருந்த சோன்ல யாரையுமே நெருங்க விட முடியல. என்னோட உலகம் சூர்யாவோடவே நின்னுப் போனா மாதிரி இருக்கு.. வாழ்க்கைல எதுவுமே பிடிக்கல.. சூர்யாவோட இருந்த அந்த ஆறு வருஷம் தான் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்னு நினைக்கிறேன்.. அவங்க கூட சண்டை போட்டு, கெஞ்சி கொஞ்சின்னு ரொம்ப நல்லா இருந்தது.. ஆனா அதும் அப்படியே முடிஞ்சிப் போச்சு..
ஆனா.. இப்போ? நானும் டைவர்ட் பண்ண என்ன என்னவோ செய்யறேன்.. என்னால அதுல இருந்து வரவே முடியலையே.. நான் என்ன செய்வேன்? வர வர வெறுப்பா இருக்கு.. நான் வாழறதுக்கும் ஏதாவது அர்த்தம் வேணும்ல. என்னவோ நானும் உயிர் வாழறேன்னு வாழ்ந்துட்டு இருக்கேன். அட்லீஸ்ட் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தாளாவது என் வாழ்க்கையில ஒரு பிடிப்பு இருக்கும்ன்னு பார்த்தேன்.. அதுக்கும் நீங்க விட மாட்டேங்கறீங்க.
எங்க அம்மாவும் நீங்களும் ஏன் தான் இப்படி இருக்கீங்களோ? சலிப்பா இருக்கு.. போங்க என்னவோ பண்ணுங்க.. நான் இப்படியே இருந்துட்டு போறேன்..” என்று சலித்துக் கொண்டவள், மீண்டும் கதவு வரைச் சென்று,
“பத்து வருஷம் ராஜிம்மா.. பத்து வருஷமாச்சு.. அவரு என்னை விட்டுப் போய் பத்து வருஷமாச்சு.. இன்னமும் நான் அவரோட மனசுல இருப்பேன்னு நீங்க நினைக்கறீங்க பாருங்க.. உங்களை என்ன சொல்றதுன்னே தெரியல..” அழுகையில் அவளது உதடுகள் துடிக்கத் துவங்கியது..
“ஏன் சுஜி.. உனக்கும் அதே பத்து வருஷம் ஆச்சே.. ஆனா.. நீ இன்னும் அவனை நினைச்சிட்டு தானே இருக்க? அப்போ அவன் மட்டும் இருக்க மாட்டான்னு எப்படிச் சொல்ற? அதும் தவிர, நீ தான் அந்த ஊரை விட்டு வந்துட்ட.. உன்னை அடையற எல்லா வழியையும் அடைச்சிட்டயே. அப்பறம் அவன் உன்னை ரீச் பண்ண நினைச்சு இருந்தாலும் முடியாது இல்ல. அதோட உன்னை அவன் தேடலைன்னு உனக்குத் தெரியுமா? எதுக்கும் ஜைஷ்ணவிகிட்ட பேசிப் பாரேன். உன்னோட எல்லா குழப்பத்துக்கும் விடைக் கிடைக்கும்..” அவரது நம்பிக்கையை விடாமல் கேட்க,
“அக்கா இது வரை அவரைப் பத்தி எதுவுமே பேசல.. அதுல இருந்தே தெரியல.. அதைத் தவிர சூர்யா கடைசியா பேசினதும் என்னால மறக்க முடியாது.. என் முகத்தைக் கூட பார்க்க பிடிக்கலைன்னு சொல்லிட்டு போனாரு.. இன்னமும் எனக்கு அதே முகம் தான் இருக்கு.. நான் தான் லூசு போல லவ் பண்ணி இருக்கேன் போல.. யாரையுமே நம்பவும் முடியல.. அவரை மறக்கவும் முடியல.. கடைசி நாளை நானும் நினைக்காம தான் அந்த நினைவுகள்ல, அவர் கூட வாழ்ந்துட்டு இருக்கேன். என்னை இப்படியே விட்டுடுங்க..” சொல்லிவிட்டு, சோர்வுடன் தனது அறைக்குச் செல்ல, ராஜேஸ்வரி அவளையேப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
அவளது பதிலில் அவருக்கு சிரிப்பே வந்தது.. ‘ஹ்ம்ம்.. சூர்யா வந்து நின்னா.. என்கிட்டே சூர்யா வந்துட்டான்னு சொல்லி இளிச்சுட்டு வருவ இல்ல.. அப்போ வச்சுக்கறேன்..’ மனதினில் சொல்லிக் கொண்டவர், தனது ஆசை நிராசையாகி விடக் கூடாதே என்ற பயத்தில் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்..
சுஜிதாவை அவர் சந்தித்தது ஒரு கசப்பான சூழலில்.. முதன்முதலில் தொலைந்த குழந்தை போல தனது முன்பு வந்து நின்றவளைப் பார்த்தவருக்கு கோபம் தான் வந்தது.. அதற்குப் பிறகு சந்தித்த நிகழ்வின் தாக்கத்தில் அவளைப் பார்த்து அவருக்கு இரக்கமே சுரந்தது.. அவளுடன் பழகிய சிறிது நாட்களிலேயே அவளை மிகவும் பிடித்துவிட, தனது மகளாகவே பார்க்கத் துவங்கினார்..
அவளுக்கு நேரம் கிடைக்கும்பொழுது எல்லாம் தனது க்ளினிக்கிற்கு வந்து, தனக்கு உதவியாக இருந்ததும் அல்லாமல், அதே நேரம் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்களுடன் மேல் படிப்பிற்கும் சேர்ந்தாள். அதிலும் சிறந்த முறையில் தேர்ச்சிப் பெற்று, இன்று நல்ல மருத்துவராக பெயர் பெற்றதில் அவருக்கு மிகுந்த பெருமை..
ஆனாலும் அவளது வாழ்வு முழுமை பெறாமல், வெறுமையாக இருப்பதில் அவருக்கு மிகுந்த வருத்தம்.. அந்த வயதிற்கான உணர்வுகள் அனைத்தையும் மறந்து, அவள் இப்படி இருப்பது அவருக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.. நூற்றில் ஒரு பங்காக, தனது நம்பிக்கைப் பொய்யாய் போய், அவள் சொல்வது போல அவனுக்கு திருமணம் நடந்திருந்தால்? அவளது வாழ்க்கை? இப்படியே தனிமரமாக அவள் நின்று விடுவாளோ என்ற பயம் மனதைப் பிடித்து அழுத்த, தலையைப் பிடித்துக் கொண்டார்.. அவளது வாழ்வை சரி செய்யக் கூடியவன் ஒருவன் மட்டுமே.. இத்தனை நாட்களாக யாரைத் தொடர்புக் கொண்டு அவளது வாழ்வை சரி செய்வது என்று திகைத்து இருந்தவருக்கு, இப்பொழுதோ ஒரு வழி கிடைக்க, அதை விட்டுவிடாமல் தொடர நினைத்தார்..
அவளது பெற்றவர்களின் எந்த வித வற்புறுத்தலையும் பொருட்படுத்தாமல், அவள் தனது வாழ்விற்கு துணையாய் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க நினைத்து, அதை அவள் செயல்படுத்தவும் விழைய, அவருக்கு அழைத்த அர்ச்சனா கதறித் தீர்த்தார்.
ஒரு தாயாய் அர்ச்சனாவின் கதறலைப் புரிந்துக் கொண்டவர், தான் பார்த்துக் கொள்வதாக அவருக்கு வாக்கு கொடுத்து, அதன் முதல்படியாக, அவள் வாங்கி இருந்த படிவத்தை கிழித்து எறிந்தார்.. அவளது வாழ்விற்கு என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது தான், அவளது அறையில் ஜைஷ்ணவியைப் பார்த்தது.. ஜைஷ்ணவியின் நம்பரை பேஷன்ட் பதிவேட்டில் இருந்து எடுத்துத் தரச் சொல்லி ரிசப்ஷன் பெண்ணிடம் அன்று காலை தான் கூறிவிட்டும் வந்திருந்தார்..
எப்படியாவது அவளது கண்களின் முன்னால் சூர்யாவைக் கொண்டு வந்து நிறுத்திவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டவர், சுஜிதாவிற்குத் தெரியாமல் ஜைஷ்ணவியை சந்திக்க முடிவெடுத்தார்..
ஜைஷ்ணவியுடன் மாலிற்குச் சென்ற சூர்யா, அமைதியாகவே வளம் வர, உடன் வந்தவளோ அவனது முகத்தைப் பார்த்தாள். அதில் பலவிதப் யோசனைகள் ஓடிக் கொண்டிருப்பது தெரிய, அந்த அமைதியைக் கலைக்க எண்ணியவள், “சூர்யா.. நீ ஏதாவது பெரிய தப்பா பண்ணிட்டயாடா?” என்று கேட்க, ஒரு சில நொடிகள் தயங்கி நின்று அவளைப் பார்த்தவன், மண்டையை ‘ஆம்’ என்பது போல அசைத்தான்..
“மாமாவுக்கு எல்லாம் தெரியுமா? அது தான் அவரு அவ்வளவு கோபப்பட்டாரா?” என்று கேட்க, அதற்கும் ‘ஆம்’ என்று தலையசைக்க,
“என்கிட்டே சொன்னா நான் டென்ஷன் ஆவேனா?” என்று கேட்க, அதற்கும் ‘ஆம்’ என்று தலையசைக்க, அவனைப் பிடித்து நிறுத்தினாள்.
அவளது முகத்தைப் பார்க்காமல் அவன் தவிர்த்து, “எனக்கு சுஜிக்கிட்ட போய் நேரா நிக்கவே வெட்கமா இருக்கு ஜைஷு.. அவ என்னை கேவலமா பார்ப்பாளா? என்கிட்டே பேசுவாளா? என்னைப் பார்த்தா பேசற அவ கண்ணு பேசுமா? எதுவுமே தெரியாம எனக்கு பயமா இருக்கு.. எங்க எப்படித் தொடங்கறதுன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன். அவ இல்லாம எனக்கு வாழ்க்கை இல்லடி..” அவன் சொல்லவும், ஜைஷ்ணவி அவனை முறைத்தாள்.
“குடிச்சிட்டு சண்டைப் போட்டேன்னு சொன்ன இல்ல. அப்போ இருந்த தைரியம் இப்போ எங்க போச்சு? எனக்கு அதெல்லாம் தெரியாது.. அவ கால்ல கையில விழுந்தாவது அவளை சமாதானப்படுத்து.. எனக்கு உன் கல்யாணம் இன்னும் ஆறு மாசத்துல நடக்கணும்..” கடுமையாக அவள் சொல்ல, சூர்யா மெல்ல புன்னகைத்தான்.
“பேசாம அவளை நான் நம்ம வீட்டுக்கு கடத்திட்டு வந்திறவா?” வம்பிற்காக அவன் கேட்க, அவனது கையில் ஒன்று போட்டவள்,
“உங்க மாமா சொன்னதை கேட்ட இல்ல.. அவரே வேற மாப்பிள்ளை பார்த்து அவளுக்கு கல்யாணம் செய்து வச்சிருவாரு. ஏதோ செய்யக் கூடாத காரியம் செஞ்சு வச்சிருக்கன்னு மட்டும் தெரியுது. அதைச் சொன்னா நான் ஆகற டென்ஷன்ல என்னோட மைன்ட் பாதிக்குற அளவுக்கு பண்ணி இருக்கன்னு தெரியுது.. ஆனா.. அது மட்டும் எனக்குத் தெரிஞ்சது..” அவனை மிரட்ட,
“என்னை வீட்டை விட்டு துரத்தி உன் முகத்துல முழிக்காதேன்னு சொன்னாலும் சொல்லுவ..” என்றவன், அங்கிருந்த திரையரங்கிற்கு சென்றான்..
“என்னடா படம் பார்க்கப் போறோமா?” அவள் கேட்க,
“ஹ்ம்ம்.. ஏதாவது படம் பார்த்துட்டு சாப்பிட்டு வீட்டுக்குப் போகலாம்.. சாயந்திரம் அவளுக்கு நான் டிபன் செஞ்சு கொண்டு போய் வைக்கிறேன். எனக்கு அவ வீட்ல சிலது எல்லாம் பார்க்கணும்.. பார்த்தா தான் எனக்கு அடுத்த ஸ்டெப் தைரியமா எடுத்து வைக்க முடியும்..” என்றவன், இருவருக்குமாக டிக்கெட்டை வாங்கிக் கொண்டு, ஒரு பாப்கார்னுடன் சென்று அமர்ந்தான்.. படம் ஓடிக் கொண்டிருந்தாலும், சூர்யாவின் மனது முழுவதும் சுஜிதாவை எதிர்கொள்வதில் இருந்தது..
‘அன்னைக்கு குடிச்சிட்டு தேவை இல்லாதது எல்லாம் பேசி அவளை வருத்திட்டேன். என்ன எல்லாம் பேசி அவளை வருத்தி இருக்கேன்.. என் சுஜி எனக்கு வேணும்.. நான் அவளை இனிமே பத்திரமா பார்த்துக்கறேன். எனக்கு இன்னொரு சான்ஸ் வேணும்.. அதை நான் தவற விட மாட்டேன்..’ என்று வேண்டிக் கொண்டே, சுஜிதா தன்னை நேராக பார்க்கும் நொடிக்காக காத்திருந்தான்..
காலையில் பார்க்க வேண்டிய அனைத்து பேஷண்டுகளையும் பார்த்து முடித்த சுஜிதா, நேராக ராஜேஸ்வரியின் அருகே சென்று நின்றாள்.. “ராஜிம்மா.. நிஜமா உங்களுக்கு இன்னுமா சூர்யா என்னைத் தேடி வருவாங்கன்னு நம்பிக்கை இருக்கு? அப்படியே அவரு வந்தாலும் எனக்கு அவர் பேசினதை எப்படி மறக்க முடியும்? மறக்கற அளவுக்கா யூ.எஸ். போற வெறில செய்துட்டு போனார்? அவரு வருவாருன்னு வேற கனவு கண்டுக்கிட்டு இருக்கீங்க? என்னை என் வழியில விடுங்களேன்..” சலிப்பாக கூறியவள், அமைதியாக அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,
“நான் வீட்டுக்கு போயிட்டு வரேன்..” எனவும், அவர் தலையசைக்க, வேகமாக மருத்துவனையை விட்டு வெளியில் சென்று, தனது அறைக்குள் புகுந்தவள், தனது தலையணைக்கு அடியில் இருந்த அவனது புகைப்படத்தை எடுத்து வருடிக் கொடுக்க, அவளது கண்ணீர் தலையணையை நனைத்தது..
சுஜிதா கிளம்பியவுடன் ரிசப்ஷனில் இருந்து ஜைஷ்ணவியின் நம்பரை வாங்கிக் கொண்ட ராஜேஸ்வரி, ‘நான் எப்படியாவது ஜைஷ்ணவிகிட்ட பேசிடறேன்.. சுஜிதாவோட வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கற மாதிரி எந்த ஒரு விஷயமும் சொல்லிடக் கூடாது கடவுளே.. என் பொண்ணை நல்லபடியா வாழ வழி செய்.’ என்று வேண்டிக் கொண்டே, தனது காருக்கு வந்தவர், ஜைஷ்ணவிக்கு அழைத்தார்..
அவளது செல்போன் எடுக்கப்படாமல் போய்க் கொண்டிருக்கவும், அவர் மீண்டும் முயற்சி செய்ய, அடுத்த இரண்டாவது முயற்சியில் போனை எடுத்தவள், “ஹலோ.. யாருங்க?” என்று கேட்க, ராஜேஸ்வரிகோ அங்கு கேட்ட சத்தத்தில் பேச முடியாமல் போனது..
“ஹலோ.. நான் டாக்டர் ராஜேஸ்வரி பேசறேன்.. நீங்க ஜைஷ்ணவி தானே..” அவரது குரலைக் கேட்டவள், சூர்யாவைப் பார்த்துவிட்டு அவசரமாக வெளியில் வர, சூர்யா குழப்பத்துடன் பார்த்தான்.
“ஹலோ சொல்லுங்க மேடம்.. நான் ஜைஷ்ணவி தான்.” படபடப்பாக அவள் சொல்லவும்,
“நீங்க தியேட்டர்ல இருக்கீங்க போல இருக்கே.. ரொம்ப சத்தமா இருக்கு. நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணல தானே.. எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.. நாளைக்கு நீங்க ஃப்ரீயா? நான் சுஜி ஹாஸ்பிடல் போனதும் உங்க வீட்டுக்கு வரேன்.. ரொம்ப முக்கியமான விஷயம்.” அவசரமாக அவர் சொல்லவும், ஜைஷ்ணவி குழம்பிப் போனாள்.
“கண்டிப்பா பேசலாம் மேடம். நாங்க வீட்ல தான் இருப்போம்.. நீங்க வாங்க..” படபடப்பான அவளது பதிலில்,
“ரொம்ப தேங்க்ஸ்ங்க.. நான் உங்க நம்பரை ஹாஸ்பிடல் ரெகார்ட்ஸ்ல இருந்து எடுத்தேன்.. போன்ல பேசற விஷயம் இல்ல.. நேர்ல வரேன்.. நீங்க உங்க டைம் என்ஜாய் பண்ணுங்க.. பை.. நாளைக்கு பார்ப்போம்..” என்றபடி போனை வைத்துவிட, ஜைஷ்ணவி யோசனையுடன் வந்து அமர்ந்தாள்..
சூர்யா அவளைப் பார்க்க, தனது போனில் அவரது பெயரை பதிந்துவிட்டு அவனிடம் காட்ட, “என்னாச்சு? ஏதாவது முக்கியமான விஷயமா?” குழப்பமாகக் கேட்க,
“தெரியல சூர்யா.. நாளைக்கு காலையில சுஜி ஹாஸ்பிடல்க்கு போனதும் வரேன்னு சொன்னாங்க.. வந்தா தான் தெரியும்.. சுஜி பத்தி ஏதாவது பேசுவாங்களோ?” என்று யோசனையுடன் கேட்க, சூர்யா தலையை அசைத்தான்.. அதற்குப் பிறகு இருவரும் படத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.. காரை நிறுத்திவிட்டு, படிகளில் ஏறியவன், சுஜிதாவின் வீட்டின் முன்பு மாட்டி இருந்த அந்த மணியை மென்மையாகத் தட்டி, “நான் வீட்டுக்கு வந்துட்டேன் சுஜி..” என்று சொல்லிக் கொண்டே தனது வீட்டிற்குச் சென்றவன்,
“ஜைஷு. மறக்காம வேலை செஞ்சு முடிஞ்ச உடனே, அந்த அம்மாவை இங்க சாவியைக் கொடுத்துட்டு போகச் சொல்லச் சொல்லி சுஜிக்கு மெசேஜ் பண்ணிடு..” என்று அவளுக்கு நினைவுப்படுத்தி, ஒரு குளியலைப் போட்டுவிட்டு, இரவு உணவை தயார் செய்யத் துவங்கினான்..
ஜைஷ்ணவி அவனை ஆச்சரியமாகப் பார்க்க, “என் ஆளுக்கு ஆலு பரோட்டான்னா ரொம்ப பிடிக்கும். அது தான் செய்யப் போறேன்.. நானே கொண்டு போய் வச்சிட்டும் வரேன்..” என்றவன், வேகமாக செய்யத் துவங்க, ஜைஷ்ணவி அவனுடன் பேசிக் கொண்டே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“நீ யூ.எஸ். போனதுக்கு சமையல் நல்லா செய்யக் கத்துக்கிட்ட போல..” ஜைஷு கேலி செய்ய, சிரித்துக் கொண்டே தனது மொபைலை எடுத்து ஸ்வீட்டை ஆர்டர் செய்தான்..
“பார்டா.. உங்க வீட்டம்மாவுக்கு ஸ்வீட்டோட இன்னைக்கு சாப்பாடு வைக்கப் போறீங்களா?” கேலியாக அவள் கேட்க,
“ஆமா ஜைஷு.. நான் அவளுக்கு ரொம்ப நாள் கழிச்சு சமைக்கிறேன்ல.. அது தான் ஸ்வீட்டோட செகண்ட் இன்னிங்க்ஸ் தொடங்கறேன்..” என்றவன், தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டான்.
“என்னடா? உன் முகமே சரி இல்ல.. உன் சிரிப்பு அதை விட மோசமா இருக்கு..” என்று கேட்க,
“அன்னிக்கு கோபத்துல நான் என்ன உனக்கு பெட்டி தூக்கணுமான்னு எல்லாம் கேட்டு இருக்கேன்.. இப்போ அதோட சுகம் புரியுது.. அன்னைக்கு என் வாயில சாத்தான் தான் இருந்தது போல.” தன்னையே நொந்துக் கொண்டவன், வேகமாக அனைத்தையும் செய்யத் துவங்கினான்.
வீட்டிற்கு வந்து, சூர்யாவின் புகைப்படத்தை வருடியபடி படுத்திருந்தவள், அப்படியே கண்ணயர்ந்துவிட, அவளது அலாரம் அவளது கடமையை நினைவுப்படுத்தியது.. மெல்ல எழுந்து முகம் கழுவி, மருத்துவமனைக்குச் செல்ல தயாரானவள், ஜைஷ்ணவி அனுப்பிய மெசேஜ்களைப் பார்த்துவிட்டு,
“இந்த அக்கா ஏன் தான் சொன்னா கேட்கவே மாட்டேங்கிறாங்களோ? அப்போ எப்படி இந்த சமையல்கட்டுலயே குடி இருப்பாங்களோ அப்படித் தான் இப்போவும் இருக்காங்க..” என்று புலம்பிக் கொண்டவள், வேலை செய்ய வள்ளி வரவும்,
“வள்ளிம்மா.. நீங்க வேலையை முடிச்சிட்டு மாடியில அக்காக்கிட்ட உங்க சாவியைக் கொடுத்திருங்க.. அக்கா நைட்டுக்கு எனக்கு சாப்பிட வைக்கறேன்னு சொன்னாங்க.. நான் ஹாஸ்பிடல் கிளம்பறேன்.. மறக்காம கொடுத்திருங்க..” என்று சொல்லிவிட்டு, அவள் மருத்துவனைக்குக் கிளம்பிச் சென்றாள்.
வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும், ஜைஷ்ணவி சென்று கதவைத் திறக்கவும், வேலை செய்யும் பெண்மணி உள்ளே வந்தபடி, “கீழ டாக்டரம்மா இந்த சாவியை உங்கக்கிட்ட கொடுக்கச் சொன்னாங்க..” என்று சாவியைக் கொடுத்துவிட்டு, அவர்களது வீட்டில் வேலையை முடித்துவிட்டுச் செல்ல, சூர்யா அனைத்தையும் முடித்துவிட்டு, அவளுக்காக வாங்கி வந்திருந்த ஹாட்கேசில் போட்டு எடுத்துக் கொண்டு சுஜியின் வீட்டில் அடியெடுத்து வைத்தான்.