உயிரோவியம் நீயடி பெண்ணே – 13

உயிரோவியம் நீயடி பெண்ணே – 13
13
சுஜிதாவிற்கு உணவை எடுத்துக் கொண்டு அவளது வீட்டின் உள்ளே சென்ற சூர்யா, ஆழ்ந்த ஒரு மூச்சை இழுத்துவிட்ட படி, சுற்றி பார்வையை ஓட்டினான்.. ஹாலில் எந்தப் பொருளுமே இல்லாமல் ஒரு ஓரத்தில் கிடந்த சிறிய வட்ட வடிவிலான டைனிங் டேபிலையும், அதில் இருந்த இரண்டே இரண்டு சேர்களையும் பார்த்தவன்,
“இவ என்ன இந்த வீட்டை கெஸ்ட் ஹவ்ஸா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காளா? அவளுக்கு தான் சோபால சாஞ்சு டிவி பார்க்கறது ரொம்ப பிடிக்குமே.. அதை எப்படி விட்டுக் கொடுத்தா?” தனக்குள் பேசிக் கொண்டே, தான் கொண்டு வந்த டப்பாக்களை அந்த டைனிங் டேபிளின் மீது வைத்துவிட்டு, அவளுக்காக வாங்கி வந்திருந்த கிச்சஸ் சாக்லெட்டுகளை வைத்தவன்,
“இதை வாயில போட்டு, லிப்ஸ்ல தெரியற மாதிரி குழப்பி, என்னை எவ்வளவு கடுப்பு ஏத்துவ? அது பார்க்கறதுக்கு அவ்வளவு அழகா இருக்கும். இப்போ நீ சாப்பிடறதை நான் எப்படி பார்ப்பேன்? ஹ்ம்ம்.. கூடிய சீக்கிரம் பார்க்கறேன்.. இப்போ என்னை நினைச்சுக்கிட்டே இதைச் சாப்பிடு..” என்று அவளிடம் பேசியவன், மெல்ல அங்கிருந்த புகைப்படங்களைப் பார்த்து, தனது மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
தனது புகைப்படங்களைத் தேடி ஒவ்வொரு இடமாக சுற்றி வந்தவன், மெல்ல அவளது அறைக்குள் நுழைந்து, தன்னைப் போலவே தலையணையின் அடியில் வைத்திருக்கிறாளா என்று பார்ப்பதற்காக அவளது தலையணையை எடுக்கப் போக, அதில் அவளது கண்ணீரின் ஈரம். அதை மெல்ல வருடியவனின் நெஞ்சில் வலி மிக எழுந்தது..
அந்த வலி, கண்களின் கண்ணீராக இறங்கத் துவங்கியது.. ‘இனிமே உன்னை அழ விட மாட்டேன்டி.. என்னை மன்னிச்சிரு..’ என்று சொல்லிக் கொண்டவன், தனது கண்களைத் துடைத்துக் கொண்டு, அதன் அடியில் தனது புகைப்படத்தைத் தேடத் துவங்கினான்.
தலையணை, போர்வையின் அடியில் என்றுத் தேடியவன், எங்கும் தனது புகைப்படம் தென்படாமல் போகவும், ‘என்னை நிஜமாவே ரொம்ப வெறுத்துட்டாளா?’ என்ற எண்ணம் தோன்ற, அந்த நினைவே அவனது நெஞ்சத்தை வலிக்கச் செய்து, அவனது உடல் வியர்க்கத் துவங்கியது..
தனது முகத்தைத் துடைத்துக் கொண்டவன், “உன் கோபத்தைக் கூடத் தாங்கிப்பேன்டி சுஜி. உன்னோட வெறுப்பான பார்வையை என்னால தாங்கிக்கவே முடியாது.. அப்படி மட்டும் என்னைப் பார்த்துடாதே.. நான் இத்தனை வருஷம் உயிரோட இருந்ததுக்கே அர்த்தம் இருக்காதுடி.. அப்படியே செத்துப் போயிடுவேன்..” அவளிடம் மனதினில் கெஞ்சியவன், கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்ப, அங்கிருந்த டிரெஸ்ஸிங் டேபிளின் மீது அவனது கண்கள் பதிந்து, சுருங்கி இருந்த நெஞ்சம் மலர்ந்தது..
அவளது புகைப்படத்தைச் சுற்றி, தனக்காக அவள் எப்பொழுதும் வாங்கும் சென்ட் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதை வருடியவன், அதை எடுத்து தன் மீது தெளித்துக் கொண்டான்..
“ஹ்ம்ம்.. இந்த ஸ்ப்ரேவை மாத்தவே மனசு வர மாட்டேங்குதுடி. உனக்கு அந்த ஸ்மெல் எவ்வளவு பிடிக்கும்ன்னு எனக்குத் தெரியும்..” நேரில் அவள் நிற்பது போலவே அவளிடம் பேசிக் கொண்டே அவளது புகைப்படத்தை வருடியவன்,
“இந்த ஸ்ப்ரே போட்டா நீ என் கூட இருக்கறது போலவே இருக்கும் தெரியுமா? அதுக்காகவே இந்த பிரான்ட்டை தேடித் தேடி வாங்குவேன். அதை தீரவிடாம பிரசாதம் போல யூஸ் பண்ணுவேன். இன்னமும் நீ எனக்கு கடைசியா வாங்கிக் கொடுத்த பாட்டிலை நான் பத்திரமா வச்சு இருக்கேன் தெரியுமா? அது தீர்ந்து போனாலும் எனக்குத் தூக்கிப் போட மனசே வரல..” அவளது புகைப்படத்திடம் சொன்னவன்,
“இங்க என்னடான்னா எனக்காக கடையை வச்சு நடத்திட்டு இருக்க? இதுல ஒண்ணை நான் எடுத்துக்கவா? இல்ல.. நீயே தர வரை வெயிட் பண்ணவா?” சிறுகுழந்தை போலவே கேட்டவன், அதை மேலும் தன் மீது தெளித்துக் கொண்டு, தன்னுடைய சட்டையை நுகர்ந்துப் பார்த்தான்..
“என்ன சொல்லு. நீ எனக்காக செலெக்ட் செய்யறது எல்லாம் பெஸ்ட்டா தான் இருக்கும்.. என்னைப் போல..” என்றபடி அந்த புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்து, கீழே வைக்கப் போக, அவளது புகைப்படத்தின் பின்னால் இருந்து ஒரு புகைப்படம் விழ, அதை எடுத்துப் பார்த்தவனின் நெஞ்சம் விம்மத் துவங்கியது..
அது அவனது புகைப்படம்.. தன்னுடைய புகைப்படத்தைப் பார்த்தவனின் மனது ரக்கைக் கட்டிப் பறக்கத் துவங்கியது. “சுஜி.. சுஜி.. என்னை வெறுக்கல.. இதோ என் போட்டோ இருக்கு.. அவ என்னைக் குப்பையில தூக்கிப் போடல.” கண்ணீரும் புன்னகையுமாக அவளது புகைப்படத்திற்கு முத்தமிட்டுக் கொண்டிருக்க, அவனை வெகுநேரம் காணாமல் ஜைஷ்ணவி அங்கு வந்தாள்..
“சூர்யா..” அவள் குரல் கொடுக்க விழையும் நேரம், அவனது அழு குரல் கேட்டு, அவனிடம் விரைந்தவள், அவனது தோளைத் தொட, அவளைத் திரும்பிப் பார்த்து, தனது தோளோடு அணைத்துக் கொண்டவன்,
“சுஜி.. இன்னமும் என் போட்டோவை வச்சிருக்காடி.. அவ என்னை வெறுக்கல..” என்று தேம்பியவனின் முதுகை அவள் தட்டிக் கொடுக்க, புகைப்படத்தை அவள் வைத்தது போலவே வைத்துவிட்டு, அந்த அறையைப் பார்த்தவன், அவசரமாகத் தேடத் துவங்கினான்..
“என்னடா பார்க்கற?” ஜைஷ்ணவி கேட்க,
“இல்ல. என்னோட ஒரு போட்டோ தான் வச்சிருக்காளா? இல்ல என்னைப் போலவே நிறைய வச்சிருக்காளான்னு பார்க்கறேன்..” என்றவன், அவனது அறையில், தான் எங்கெங்கு வைத்திருக்கிறானோ அந்த இடத்தில் எல்லாம் அவளது அறையில் தேட, ஜைஷ்ணவி அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவன் எடுத்துப் பார்த்த புகைப்படத்தை எல்லாம் பார்த்தவள், “எப்படிடா? அவ வச்சிருக்கற இடத்தை எல்லாம் சரியா கண்டுப்பிடிக்கற?” என்று கேட்க,
“என் ரூம்ல நானும் இங்க தானே எங்க போட்டோவை எல்லாம் வச்சிருக்கேன்.. என் பொண்டாட்டியை எனக்குத் தெரியாதா?” என்றவன், பெட்டின் அடியில் இருந்த இழுப்பறையைத் திறந்து, அதில் இருந்து தலைகாணி உறையை எடுத்து மாற்ற முற்பட,
“ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கடா சூர்யா.. இப்போ மாத்தினா அவ வந்து உன்னை கொல்லப் போறா..” ஜைஷ்ணவி அவனை மிரட்ட,
“ஆமால.. நான் மட்டும் இப்போ மாத்தினேன்.. ராத்திரியே மாடிக்கு வந்து ஒருத்தி கதவைத் தட்டி பத்திரகாளி ஆட்டம் போடுவா. தலைகாணி ஈரமா இருக்கேன்னு பார்த்தேன்.” தலையைச் சொரிந்துக் கொண்டே அவளிடம் கேலிப் போல சொன்னவன், அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு ஏறினான்..
இரவு உணவை உண்டுவிட்டு அனைவரும் உறங்கிய பிறகு, தனது அறைக்குச் சென்று படுத்துக் கொண்ட சூர்யாவின் காதுகள் கீழே சுஜிதாவின் அசைவுகளுக்காக காத்திருந்தது..
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து கதவைத் திறந்த சுஜிதாவின் நாசிகளில் முதலில் எட்டியது அந்த ஸ்ப்ரேயின் மனம் தான்.. தனது மூக்கை தேய்த்து விட்டு, நுகர்ந்துக் கொண்டே அறையினுள் சென்றவளுக்கு, அந்த செண்டின் நெடி மிகவும் அதிகமாகவே தாக்க, “எப்படி இந்த ஸ்மெல் இவ்வளவு வருது.. ஈவெனிங் கிளம்பும்போது கூட எப்பவும் போல நான் கொஞ்சம் தானே கைல தேச்சுக்கிட்டேன். அது இவ்வளவு வராதே. இப்போ எப்படி?” என்று யோசித்துக் கொண்டே, தனது டிரெஸ்ஸிங் டேபிளின் அருகே சென்றவளுக்கு மேலும் குழப்பமே அதிகமாகியது..
“வள்ளிம்மா இதை எல்லாம் எடுக்க மாட்டாங்களே.. அப்பறம் எப்படி இவ்வளவு ஸ்மெல் அதிகமா இருக்கு? நானா இந்த அளவுக்கு இன்னைக்கு அடிச்சு இருக்கேன்?” விடை தெரியாமலேயே குழம்பியவள், ஒன்றும் செய்யத் தோன்றாமல், குளியறைக்குள் புகுந்துக் கொண்டாள்..
குளித்து விட்டு வந்தவளுக்கு பசி வயிற்றைக் கிள்ள, முகத்தைத் துடைத்துக் கொண்டே டைனிங் டேபிளின் அருகே சென்றவளுக்கு, சூர்யா வைத்திருந்த சாக்கலேட்டுகள் கண்ணில் பட, தொப்பென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்..
‘சூர்யா..’ அவளது இதயம் வேகமாக அடித்துக் கொள்ள, இதழ்கள் அந்தப் பெயரைத் தானாக உச்சரித்தது..
‘சூர்யா? சூர்யா வந்தாங்களா?’ ஒரு மனது அவனது வரவை எதிர்ப்பார்க்க, மற்றொரு மனமோ ஏமாற்றத்தை ஏற்கத் தயங்கி, அந்த எண்ணத்தை ஒதுக்கி, அங்கிருந்த சாக்கலேட்டுகளை வெறிக்கத் துவங்கியது.
‘இந்த ஜைஷு அக்கா ஏன் இப்படி அவரை நினைவுப்படுத்தற மாதிரியே எல்லாம் செய்யறாங்க?’ என்று நொடித்துக் கொண்டவளின் இன்னொரு மனதோ,
‘ஆமா.. அப்படியே நீ அவங்களை மறந்துட்டு தான் சுத்தற பாரு.. போடி.. போ..’ என்று அதட்ட, தனது மொபைலில் பாடலை ஓட விட்டுக் கொண்டு, மெல்ல அவனது நினைவுகளுடனே உண்டு முடித்தாள்.
“அது எப்படி இந்த அக்காக்கு எனக்கு இது பிடிக்கும்ன்னு தெரியும். இந்த சூர்யா ஓட்டை வாய் எல்லாத்தையும் போய் அக்காகிட்ட சொல்லி இருப்பாங்க போல.. அது தான் செஞ்சி இருக்காங்க. டேஸ்ட் அப்படியே வாயில நிக்குது.. ரொம்ப நாளாச்சு இப்படி ஒரு சாப்பாடை சாப்பிட்டு.. முன்னை விட அக்கா இப்போ நல்லா செய்யறாங்களே.. அண்ணா லக்கி தான்..” தனக்குள் சொல்லிக் கொண்டவள், அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு, அங்கு வைத்திருந்த சாக்லெட்டுகளை எடுத்துக் கொண்டு தனது அறைக்கு வந்தாள்.
அவளது இருபதாவது பிறந்தநாளுக்கு பரிசாக அவன் அனுப்பி இருந்த இருபது கதைப் புத்தகங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு தலையணையில் சாய்ந்து அமர்ந்தவளின் விரல்கள் அந்தப் புத்தகத்தை வருடியது. அத்தனையும் அவன் தனக்காக தேடித் தேடி வாங்கிய கதைப் புத்தகங்கள்.. திரும்பத் திரும்ப படிக்கத் தெவிட்டாத கதைகள்.. அவனது நினைவுகளுக்குள் புதைய நினைத்தவளுக்கு அந்தக் கதை புத்தகம் தான் சரணாலயம். வாயில் சாக்லேட்டைப் போட்டுக் குதப்பத் துவங்கிவளுக்கு சூர்யாவின் நினைவுகள்.
தனது காதலை அவனிடம் கூறிய பிறகு, அவளது பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் வரவும், அவளது தந்தை வாசுதேவன், அவளுடன் இருப்பதற்காக வந்திருந்தார்.. அப்பொழுது அவளுக்கு பிடித்த அந்த சாக்கலேட்டை அவர் வாங்கிக் கொண்டு வந்திருக்க, அவனுக்கு ஒரு பங்கை கொடுத்தவள், வேண்டுமென்றே மாடியில் படிக்கும்பொழுது, வாயில் போட்டு குதப்பி, நாவால் உதட்டை வருடிக் காட்ட, அதை தூரத்தில் இருந்து பார்த்தவனோ,
“சுஜி கடுப்பேத்தாத சுஜி.. நான் பாட்டுக்கு அப்பாவியா நின்னு உன்னை வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கேன்.. இப்படி நீ சாக்கலேட் சாப்பிட்டு என்னை வெறுப்பேத்தினா நான் என்ன செய்வேன்? எக்ஸாம் முடியற வரை பக்கத்துல வர மாட்டேன்னு சொல்லிட்டு, இப்படி எல்லாம் பண்ணினா சின்னப்பிள்ள நான் பாவமில்ல? இப்படியே தாவி குதிச்சு அங்க வரவா?” அவளது முகத்தைப் பார்த்த சூர்யாவோ தவித்துப் போனான்.
காதலைச் சொல்லிய பிறகு, படிப்பில் கவனம் செலுத்த இருவருமே சந்திக்கக் கூடாது என்று ஜைஷ்ணவி கட்டளையிட்டிருக்க, அவள் பள்ளிக்குச் செல்லும் நேரங்களில் மொட்டை மாடியில் இருவரும் இப்படி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவன் தாவி வருவதாகச் சொல்ல, “ஏன் தம்பி.. கையில தொட்டில் கட்டி இருக்கறது போதாதா? காலுலயும் கட்டணுமா?” கேலியாக அவள் கேட்க,
“ரொம்ப பண்ணாதே சுஜி.. நீ வேற அங்க நின்னு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க? நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்.. அப்படியே ஜைஷு வரதுக்குள்ள ஒரு அஞ்சு நிமிஷம் வாயேன்.. உன்னைப் பக்கத்துல பார்த்து கொஞ்சம் கொஞ்சிக்கறேன்.. உன்னைப் பக்கத்துல பார்த்து ஒரு வாரம் ஆச்சு. ரொம்ப ஆசையா இருக்குடி என் தங்க மயிலே..” முகத்தைச் சுருக்கி அவன் கெஞ்ச,
“நான் வரத்துக்குள்ள என்ன செய்யணும்?” ஜைஷ்ணவியின் குரல் கேட்க,
“ஹையோ அக்கா..” என்ற சுஜிதா கீழே அமர்ந்துக் கொள்ள, சூர்யா அவளைப் பார்த்து விழித்தான்..
“நீ எப்போ வந்த?” தலையை சொறிந்துக் கொண்டே அவன் கேட்க,
“ஹான்.. இங்க இருந்து தாவிக் குதிக்கறேன்னு சொன்னியே அப்போவே வந்துட்டா.. அவ அங்க படிக்கிறா சரி.. நீ என்ன செஞ்சிட்டு இருக்க? அவளை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கியா?” ஜைஷ்ணவி மிரட்ட,
“யாரு? நானு அவளை டிஸ்டர்ப் பண்றேன்? எங்க அவளை எழுந்து என்ன பண்ணிட்டு இருக்கான்னு காட்டச் சொல்லு.. அவ தான் என்னை டிஸ்டர்ப் பண்றா.. இந்த அப்பாவியைப் பிடிச்சு கேள்வி கேட்கற?” சூர்யா அவளையும் போட்டுக் கொடுக்க, ‘சுஜி..’ ஜைஷ்ணவி குரல் கொடுத்தாள்..
அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, உதட்டில் இருந்த சாக்கலேட்களை துடைத்துக் கொண்டு, சுஜிதா எழுந்து நிற்க, அவளது முகத்தைப் பார்த்த சூர்யா, ‘அடிப்பாவி..’ என்று முணுமுணுக்க, குழப்பமாக அவனைப் பார்த்தவள்,
“அவளுக்கு என்ன? அவ பாட்டுக்கு தானே படிச்சிட்டு இருக்கா?” என்று கேட்க, சுஜிதா கண்களை விரித்து,
“ஆமாக்கா.. நான் பாட்டுக்கு சிவனேன்னு கீழ ஹால்ல நடந்துக்கிட்டு படிச்சிட்டு இருக்கேன்.. சூர்யா தான் என்னைப் பார்க்கணும்ன்னு மேல வரச் சொன்னாங்க..” என்று சொல்லவும், சூர்யா வாயில் கையை வைத்து அவளைப் பார்த்து முறைக்க, அவனைப் பார்த்து கண்ணடித்தவள்,
“நான் போயிட்டு டீ குடிச்சிட்டு ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டு படிக்கறேன் அக்கா.. பை..” என்றவள், அமைதியின் சுவரூபமாக கீழே இறங்கிச் செல்ல, சூர்யாவின் தோளில் அடித்தவள், கீழே செல்லுமாறு கைக் காட்ட, தனது மொபைலை எடுத்து அவளைக் கடிப்பது போல மெசேஜ் செய்து விட்டுத் தனது அறைக்குச் சென்றவன், தனது தேர்வுகளுக்கு படிக்கத் துவங்கினான்..
இருவரின் நினைவுகளும் அந்த நாளில் சிக்கி இருக்க, தலையனையில் சரிந்தவள், மெல்ல அந்த நினைவுகளோடு கதையைப் படிக்கத் துவங்க, அதே நினைவுகளோடு படுத்துக் கொண்ட சூர்யாவிற்கோ, அன்றைய மன அலைப்புறுதலில் உறக்கம் கண்களைத் தழுவியது.
ப்ரதாப் வீட்டிற்கு வந்ததும், அவனுக்கு உணவை எடுத்து வைத்த ஜைஷ்ணவி, ராஜேஸ்வரி பேசிய விஷயத்தைச் சொல்லவும், “ஹ்ம்ம்.. அவங்க இவ்வளவு முயற்சி செய்யறாங்கன்னா சுஜி பக்கம் ஏதாவது கொஞ்சம் பாசிடிவ் சைன் இருக்கணும்.. நாளைக்கு வரட்டும் பார்க்கலாம்..” என்று அவளை சமாதானம் செய்து, அவளது குழப்பமான மனநிலையை மாற்றினான்..
மறுநாளைய பொழுதிற்கு ஒவ்வொருவரும் ஒருவித மனநிலையில் காத்திருந்தனர்.
காலையில் ஜைஷ்ணவி நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, வழக்கம் போல நேரத்திலேயே விழித்துக் கொண்டவன், ஜைஷ்ணவிக்கு உதவியாக அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க, பாத்திரம் உருளும் சத்தத்தில் விழித்துக் கொண்ட ப்ரதாப், கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து வந்தான்..
“என்னடா சீக்கிரம் எழுந்துட்டியா? என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்க, அவனிடம் காபியை நீட்டி,
“தூக்கம் வரல மாமா.. நைட் சீக்கிரம் தூங்கிட்டேன் போல.. நான் போய் குளிச்சிட்டு வரேன்..” என்றவன், குளிக்கச் சென்றுவிட, அவனது முகத்தைப் பார்த்த ப்ரதாப்பிற்கு, அவனது மனதின் போராட்டம் புரிவதாய்..
நன்றாக உறங்கி எழுந்து வந்த ஜைஷ்ணவியின் தலையை வருடிய ப்ரதாப், “உன் தம்பி சமைச்சிட்டான்.. நானும் போய் குளிச்சிட்டு வரேன்..” என்றவன், அவனது அறைக்குள் நுழைய, ப்ரதாப்பின் முகத்தைப் பார்த்த ஜைஷ்ணவி,
“ஹ்ம்ம்.. அவன் என்னடான்னா அதுக்குள்ள சமையலையே முடிச்சிட்டான்.. இவரு முகமே சரி இல்ல.. ரெண்டு பேரும் என்ன தான் நினைச்சிட்டு இருக்காங்க? இவங்க விஷயத்தை சொல்லிட்டா கூட பரவால்ல போல இருக்கு.. இப்படி மறைக்கிறது தான் டென்ஷனா இருக்கு..” என்று புலம்பிக் கொண்டே, அடுப்பங்கரையை சுத்தம் செய்யச் சென்றவள், அதுவும் சுத்தமாக இருக்கவும், சுஜிதாவிற்கு உணவை எடுத்துக் கொண்டுச் சென்றாள்.
“சொன்ன பேச்சைக் கேட்காம நீங்க ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிட்டு இருக்கீங்க அக்கா..” சுஜிதா கோபமாகச் சிணுங்க, ஜைஷ்ணவி உதட்டைப் பிதுக்கினாள்.
“அதெல்லாம் ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.. ஒழுங்கா சாப்பிட்டு தெம்பா போய் வேலையைப் பாரு.. நானும் போய் என் புருஷனை கவனிக்கிறேன்..” என்றவளின் இடையைப் பிடித்து தனது சிறு வயது வழக்கம் போலக் கிள்ள, ‘ஹா..’ என்றபடி ஜைஷ்ணவி துள்ளிக் குதிக்க, அவளைப் பார்த்து கலுக்கென்று சிரித்தவள்,
“இன்னும் அப்படியே இருக்கீங்கக்கா.. அண்ணா பாவம்..” என்று கிண்டல் செய்ய, அவளது கன்னத்தில் தட்டி,
“ஹான்.. அதெல்லாம் அவரு ஒண்ணும் பாவமில்ல..” முகம் சிவக்கச் சொன்னவள், சுஜிதா கேலியாகச் சிரிக்கவும், மூக்கைச் சுருக்கி அழகு காட்டியவள்,
“சரி.. சாப்பிட்டு கிளம்பு.. நான் போய் வீட்ல ஏதாவது வேலை இருந்தா செய்யறேன்..” என்று சொல்லிவிட்டு நகர, சுஜிதா ‘அக்கா..’ என்று அவளைத் தேக்கினாள்.
ஜைஷு திரும்பிப் பார்க்க, “அக்கா நைட் டின்னர் ரொம்ப சூப்பரா இருந்தது.. ஆனா.. எதுக்கு ஸ்வீட் எல்லாம் வாங்கி வச்சிருக்கீங்க? கூடவே சாக்லேட்டும்..” அதைச் சொல்லும்பொழுது அவளது குரல் உள்ளே இறங்கிவிட,
“உனக்கு சாக்கலேட்ன்னா பிடிக்கும் தானே.. அதனால தான் வச்சேன்.. சரி சுஜி டைம் ஆச்சு.. அவரு சாப்பிட வந்திருவாரு.. நான் கிளம்பறேன்..” என்று சொல்லிவிட்டு வாயில் கதவின் அருகில் சென்றவள், அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு படிகளில் ஏற, சுஜிதா அவள் கொடுத்த உணவை உண்ணத் துவங்கினாள்.
ப்ரதாப் அவளுக்கும் உணவை எடுத்து வைத்து காத்திருக்க, “அவன் சாப்பிட்டானா?” அவளது கேள்விக்கு,
“இல்ல. அவன் பால்கனில சுஜியைப் பார்க்கறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கான்..” அவன் சொல்லவும், பெருமூச்சுடன் உண்டவள், செய்ய ஒன்றுமில்லாமல் ராஜேஸ்வரியின் வரவுக்காக காத்திருந்தாள்..