உயிரோவியம் நீயடி பெண்ணே – 14

4fbcdcfe3dc9f5f5f147cc7deb8dd81a

உயிரோவியம் நீயடி பெண்ணே – 14

14           

சுஜிதா மருத்துவமனைக்குக் கிளம்பவும், அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே, ஹாலிற்கு வர ப்ரதாப் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான்.

“அது தான் அவளோட சீனியர் டாக்டர் அக்காவைக் கூப்பிட்டு, தானா மீட் பண்ணனும்ன்னு சொல்லி இருக்காங்களே.. அவங்க சொல்ற விஷயம் நல்லதா இருக்கும்ன்னு நாம நினைப்போமே.. சும்மா அவங்க இப்போ எதுக்கு ஜைஷு நம்பரைத் தேடி எடுத்து இருக்க போறாங்க? உங்களைச் சேர்த்து வைக்க தான் அவங்களும் முயற்சி செய்யறாங்கன்னு நம்புவோம்.. எப்படியாவது ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்திடுங்கடா.. போதும் நீ பால்கனில நின்னு அவளை வேடிக்கைப் பார்க்கறது.. எனக்கு அதைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு..” என்று சொல்லி அவனைத் தேற்ற,  

“அவளுக்கு நீ செஞ்ச டிபன் ரொம்பப் பிடிச்சு இருந்ததாம். இவரு ரொம்ப லக்கியாம்.. அவ சொன்னா..” ஜைஷு சொல்லவும், மண்டையை அசைத்தவன், இதயம் படபடவென்று துடிக்க, ஹாலில் நடைப்பயிலத் துவங்கினான்..

“சூர்யா..” அவனது முகத்தைப் பார்த்த ப்ரதாப், அவனை சமாதானப்படுத்த முயல,

“எனக்கு இப்போ பிபி பார்த்தா எகுறி இருக்கும்.. நெஞ்செல்லாம் படபடன்னு இருக்கு.. இப்படியே ஹார்ட் வெடிச்சு செத்துடுவேன் போல இருக்கு..” எனவும், ‘ஹேய்..’ என்று ஜைஷ்ணவியும் ப்ரதாப்பும் அதட்ட, தோளைக் குலுக்கியவன், ராஜேஸ்வரியின் வரவுக்காக காத்திருந்தான்..

மருத்துவமனைக்குச் சுஜிதா வந்துவிட்டதை தனது நர்சிடம் உறுதிப்படுத்திக் கொண்ட ராஜேஸ்வரி, அவளுக்கு கால் செய்து, “சுஜும்மா.. நான் வரதுக்கு ஒரு அரை மணி நேரம் லேட் ஆகும்.. இங்க காலையில தண்ணி வராம ரொம்ப பிரச்சனை ஆகிடுச்சு.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா.. நான் ஓடி வந்துடறேன்..” சிறிது பதட்டத்துடன் சொல்லவும்,

“சரி ராஜிம்மா.. நான் பார்த்துக்கறேன்.. நீங்க மெதுவா வாங்க.. அங்க ரொம்ப தண்ணி கஷ்டமா இருந்தா வேணா நம்ம வீட்டுல வந்து குளிச்சிட்டு வாங்க..” அவள் சொல்லவும்,

“இல்ல.. அது கொஞ்சம் சரி பண்ணியாச்சு.. கொஞ்சம் வேலை முடிச்சிட்டு ஓடி வந்துடறேன்..” என்றபடி போனை வைத்தவர், நேராக லிப்ட்டின் உள்ளே சென்று, படபடக்கும் இதயத்துடன் சுஜிதா சொன்னதை வைத்து அந்தத் தளத்திற்குச் சென்றார்.

‘எங்க வீட்டுக்கு மேல் வீடு காலியா இருந்தது இல்ல..’ சுஜிதாவின் குரல் ஒலிக்க, அதை வைத்து, அந்த வீட்டின் கதவை தட்டிவிட்டு காத்திருந்தார்..

உள்ளிருந்த அனைவருமே அவரது வரவுக்காக காத்திருக்க, கதவு தட்டப்படவும், அவசரமாக ஓடிச் சென்று சூர்யா கதவைத் திறந்தான். அந்த கதவு திறக்கும் ஒரு சில நொடிகளுக்குள் தான் பேச வேண்டிய அனைத்தையும் மனதினில் யோசித்துக் கொண்டவர், ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டு ஜைஷ்ணவியுடன் பேசக் காத்திருந்தார்..

திறக்கும் கதவிற்கு பின்னால் அவர் ஜைஷ்ணவியை எதிர்ப்பார்த்துக் காத்திருக்க, கதவைத் திறந்த சூர்யாவைப் பார்த்தவருக்கு மூச்சு தப்பிப் போனது.

அவரது கண்கள் சாசராக விரிய, “சூ…ர்..யா…” தான் காண்பது கனவா? நினைவா? என்று புரியாமல் அவர் பேந்த விழிக்க,

“மேடம்.. நான் சூர்யா தான்.. உள்ள வாங்க.. நீங்க டாக்டர் ராஜிம்மா தானே..” சூர்யா, அவரை உள்ளே அழைத்து விட்டு, அவரைக் கேள்வி கேட்க, இன்னமும் திகைப்பு விலகாதவர், இத்தனை வருடங்கள் மண்டையைக் குடைந்துக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டார்..

“சூர்யா.. சூர்யா. உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா?” அவர் கேட்டு வைக்க, அவரது அந்தக் கேள்வியில் அவன் அதிர்ந்து நின்றான். அவனது அந்த ஒரு சில நொடிகளின் தாமதத்தில், அவன் சொல்லப் போகும் பதிலைக் கேட்கக் காத்திருந்த நெஞ்சின் படபடப்பில், ராஜேஸ்வரிக்கு வேர்வை வழிந்துக் கொண்டிருந்தது..

அதிர்ந்து நின்றாலும், அவனது தலை தானாக மேலும் கீழும் அசைய, “எ..ன்..ன? நிஜமாவா?” அவரது வார்த்தைகள் காற்றாகத் தான் வந்தது.. அவரது முகத்தில் சட்டென்று கலக்கம் உண்டாக, ஏமாற்றத்தில் அவரது கண்களில் கண்ணீர் சரம் கோர்க்கத் துவங்கியது..

அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டே, “என்னோட வைஃப் டாக்டரா இருக்காங்க.. கைனகாலஜிஸ்ட்..” அவனது பதிலில், மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த பயம் சட்டென்று விலக,  அப்படியே தொய்ந்து சுவற்றில் சாய்ந்தவர், ‘சூர்யா..’ என்று காற்றாகத் தான் முனகினார்..

அவரது கண்களில் அவரை அறியாமலேயே கண்ணீர் வழியத் துவங்க, அவரது முகத்தைப் பார்த்தவன், “மேடம் ஏன் வெளியவே நின்னுட்டு இருக்கீங்க? உள்ள வாங்க மேடம்.. அப்பறம் என்னோட டாக்டரம்மா என்கிட்டே வந்து ‘ஏன் எங்க ராஜிம்மாவை வெளியவே நிக்க வச்சுப் பேசுனீங்க?’ன்னு சண்டைப் போடுவா. இனிமே எல்லாம் எனக்கு அவக்கிட்ட சண்டைப் போட மனசுல தெம்பும் தைரியமும் இல்ல.. அதனால உள்ள வாங்க மேடம்.. நாம உள்ள போய் பேசலாம்..” அவன் அழைக்க, அவன் சொன்ன விதத்தில் மெல்லிய புன்னகையைச் சிந்தியவர், கண்களைத் துடைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தார்.   

“ஆன்ட்டின்னு கூப்பிடுங்க சூர்யா..” என்றபடி வீட்டின் உள்ளே வந்தவர், ஜைஷுவைப் பார்த்து நலம் விசாரித்தார்..        

“ரிப்போர்ட்ஸ் எல்லாம் பார்த்தேன்மா. இந்த தடவ பாலிகுலர் ஸ்டடி பண்ணிட்டு நாம நெக்ஸ்ட் ட்ரீட்மென்ட் பார்க்கலாம். கண்டிப்பா கூடிய சீக்கிரம் இந்த வீட்ல குவா குவா சத்தம் கேட்க வைக்கலாம்..” என்று அவர் புன்னகை முகத்துடன் சொல்லவும், ஜைஷ்ணவி அவரைப் பார்த்து புன்னகைத்தாள்..

“எனக்கு சுஜியைப் பார்த்த உடனே நம்பிக்கை வந்திருச்சு மேடம்..” என்றவள்,

“இதோ காபி கொண்டு வரேன்..” என்று எழுந்துக் கொள்ள, ராஜேஸ்வரி அதை மறுத்தார்..

“வேண்டாம்மா.. நான் இப்போ தான் சாப்பிட்டு வந்தேன்.. நான் உங்களைப் வந்து பார்த்துட்டு சூர்யாவைப் பத்தி விசாரிச்சிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்.. பார்த்தா சூர்யாவே இங்க இருக்கார்.. என்னோட வேலை இன்னும் கொஞ்சம் ஈசியா போச்சு.. எனக்கு கொஞ்சம் சூர்யா கூட பேசணும். அவ்வளவு தான்.. ஒரு அரைமணி நேரம் சுஜிதாவை பார்த்துக்கச் சொல்லிட்டு தான் வந்திருக்கேன்.. ஹாஸ்பிடல் போகணும்..” அவர் சொல்லவும், சூர்யா அவரைக் கேள்வியாகப் பார்க்க,

“சரி மேடம் அப்போ நீங்க அவன்கிட்ட பேசிட்டு இருங்க.. நானும் ஜைஷுவும் கொஞ்சம் கடைக்கு போயிட்டு வரோம்..” என்ற ப்ரதாப்பைப் பார்த்து ஜைஷு முறைக்க, அவன் பார்த்த பார்வையில் அமைதியாக ஜைஷ்ணவி கிளம்பினாள்.

அவர்கள் கிளம்பியதும், அவருக்குத் தண்ணீரை கொடுத்துவிட்டு, ஒரு காபியையும் கலந்துக் கொண்டு வந்துக் கொடுத்த சூர்யா, “உங்களைப் பார்த்தா ரொம்ப களைச்சு போய் இருக்கற மாதிரி இருக்கு. கொஞ்சம் குடிங்க நாம பேசலாம். எனக்கும் உங்கக்கிட்ட நிறைய பேசணும்.. என் சுஜியைப் பத்தி நிறைய கேட்கணும்.. இந்த பத்து வருஷம் அவளைப் பத்தி கேட்காம பைத்தியம் பிடிச்ச போல இருந்த எனக்கு அவளைப் பத்தி கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு..” சூர்யா சொல்லச் சொல்ல, அவனது தொண்டையடைத்து, கண்கள் கலங்க, அவசரமாகத் துடைத்துக் கொண்டான்..

அவனைப் பார்த்த ராஜேஸ்வரிக்கு மிகவும் பாவமாக இருந்தது.. அவன் சுஜிதாவைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று சொல்லிய பொழுது, அவனது ஏக்கமும், சுஜி மீது அவன் வைத்திருந்த காதலும் புரிய, அவர் சூர்யாவை வாஞ்சையுடன் பார்த்தார்..               

“உங்க மாமாவுக்கு உங்களைப் பத்தி எல்லாம் தெரியுமா?” அவர் கேட்க,

“அக்காவுக்கு முழுசா தெரியாது.. ஆனா மாமாவுக்கு எல்லாமே தெரியும்.. மாமா சுஜியைப் பார்த்துட்டு வந்த அன்னைக்கு என்கிட்டே கேட்டு, என்னை கடிச்சு குதறிட்டார்.. மேடம்.. சுஜி.. சுஜி.. அப்பறம்..” அவன் கேட்கத் தயங்க, ராஜேஸ்வரி அவனே பேசட்டும் என்று அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தனது உதட்டைக் கடித்துக் கொண்டவன், “நான் சுஜி கூட சண்டைப் போட்டு போன அப்பறம் அவ ரொம்ப கஷ்டப்பட்டாளா? நான்.. நான் அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல ஆன்ட்டி.. அவ என்னைத் தேடினாளா? என்னால காண்டாக்ட் பண்ண முடியாத அளவுக்கு அவ போன் நம்பர், ஸ்கைப் ஐடி, எல்லாமே மாத்திட்டா.. சொல்லுங்க ஆன்ட்டி அவ என்னைப் பத்தி பேசினாளா? என் மேல ரொம்ப கோபமா இருக்காளா? நான் போய் பேசினா என்கிட்டே பேசுவாளா? அவ என்னை வெறுத்துடலையே?” தவிப்புடன் அவன் கேட்க, ராஜேஸ்வரி பதில் சொல்லாமல் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தார்..                      

திடீரென்று “மேடம்.. ஆமா.. யாரு எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னா? ஏன் என்னைப் பார்த்ததும் அந்தக் கேள்வியைக் கேட்டீங்க?” குழப்பமாக சூர்யா கேட்க,

“சுஜி.. சுஜி தான் சொன்னா? நிஜமாவே உங்களுக்கு கல்யாணம் ஆகலையா? அப்பறம் ஏன் அவங்க அப்படிச் சொன்னாங்க?” அவர் குழப்பமாக மீண்டும் கேட்கவும்,  சூர்யா தலையை இடம் வலமாக அசைத்தான்..

“தெரியலையே.. அது எப்படி நான் என் சுஜியை விட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிப்பேன்? அது எப்படி அப்படி ஒரு நியூஸ் வந்துச்சு?” சூர்யா அவரையே கேள்விக் கேட்க, ராஜேஸ்வரி, அவசரமாக,

“காயூ.. அந்த காயத்ரி..” மெல்லிய குரலில் சொல்ல, சூர்யா தலையிலேயே அடித்துக் கொண்டான்.  

“அவ எனக்கு கசின்.. நான் அவளை நல்ல ஃப்ரெண்ட்டா தான் நினைக்கிறேன்.. எங்க அம்மாவுக்கு தான் அவளை எனக்குக் கல்யாணம் பண்ணித் தரணும்ன்னு ஆசை.. அவங்க ஆசையை எல்லாம் நான் நிறைவேத்திட்டு இருக்க முடியுமா? நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.

நான் சுஜி கிடைக்கிற வரை இந்த ஊர் பக்கமே வரக் கூடாதுங்கற முடிவுல தான் இருந்தேன். இன்னமும் நான் ஊருக்கு வந்ததை எங்க அம்மாக்கிட்ட சொல்லல.” அவன் விளக்கம் சொல்லவும், ராஜேஸ்வரி இப்பொழுது தலையில் அடித்துக் கொண்டார்.   

“என்னாச்சு மேடம்?” அவன் புரியாமல் கேட்க,

“சூர்யா.. சுஜி உங்களுக்கும் காயத்திரிக்கும்..” அவர் சொல்லி முடிப்பதற்குள்,

“கா..யூ.. அவ அப்படித் தான் சொல்லி இருப்பா..” என்று அவன் திருத்த, அவரது இதழ்களில் புன்னகை..

“ஹ்ம்ம்.. ஆமா.. அவ அப்படித் தான் சொன்னா..” என்று சிரித்துவிட்டு, அவன் கொடுத்த காபியை ஒரு மடக்கு குடிக்க,

“யாராவது அப்படிச் சொன்னா அவ நம்பலாமா? நான் சண்டைப் போட்டா அப்படியேவா போயிடுவேன். இல்ல இருக்கற இடம் தெரியாம போயிட்டா நான் என்ன ஆவேன்னு யோசிச்சு பார்த்தாளா? அவளைத் தேடி கூட வர மாட்டேன்னு நினைச்சுட்டாளா?” குரல் நடுங்க அவன் கேட்க, அவரோ உதட்டைப் பிதுக்கினார்..    

“நீங்களும் காயத்திரி ப்ரபோஸ் பண்ணினான்னு எல்லாம் சொல்லவும், அவ அதை உண்மைன்னு நினைச்சிட்டா போல.  அதுல தான் அவ ரொம்ப உடைஞ்சு போயிட்டா.. அதுவரை அவ பட்ட கஷ்டத்தை விட.. அவங்க அம்மா வந்து அந்த விஷயத்தைச் சொன்ன பொழுது, அவ அழுத அழுகை தெரியுமா? அவளை நான் அன்னைக்கு தூக்க மாத்திரை கொடுத்து தான் தூங்க வச்சேன்.. இல்ல நெஞ்சு வலிக்குது. நான் செத்துப் போயிடுவேன் போல இருக்கேன்னு தவிச்சுட்டா தெரியுமா?” என்று அவர் கேட்க, அவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.  

“அவங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எல்லாம் தெரிஞ்சா அவங்க ரொம்ப  கஷ்டப்படுவாங்கன்னு நடந்த எதையுமே அவங்களுக்குக் காட்டாம அவங்க முன்னால சாதாரணமா சிரிச்சு பேசிட்டு இருந்தா. போன் பேசி வச்சதும் அந்த நேரம் அவங்கக்கிட்ட காட்டாத வலியை சேர்த்து வச்சு அழுவா.. அவ பட்ட வலி என்னன்னு உங்களுக்குத் தெரியுமா சூர்யா? உங்களுக்கு என்ன ஆம்பளைங்க.. குடிச்சிட்டு சண்டைப் போட்டுட்டு, வாய்க்கு வந்ததைப் பேசிட்டுப் போயிட்டீங்க. உங்களுக்கு எதுவும் இல்லை.. ஆனா.. அவ தானே தனியா எல்லாம் அனுபவிச்சா..” அவர் சொல்லவும், சூர்யாவின் இதயம் படபடக்கத் துவங்கியது..

“மேடம்.. மேடம்.. சுஜிக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டு, நடுக்கத்துடன் அவரது முன்பு முட்டிப் போட்டு அமர்ந்தான்.

அவனது கண்களில் கண்ணீர் வழிய, தனது கேள்விக்கு அவர் சொல்லப் போகும் பதிலை உணர்ந்தவன் போல, தொய்ந்து தரையில் அமர்ந்தான்..

“அவ மேல இவ்வளவு அன்பு வச்சு இருக்கற நீ ஏன் சூர்யா அவளை விட்டுட்டு யூ.எஸ் போன? உனக்கு அவளை விட யூ.எஸ் ரொம்ப முக்கியமா போச்சா? அதை விட நீங்க செஞ்சிட்டு போன காரியத்தோட விளைவு உங்களுக்குத் தெரியுமா?” அவர் கோபமாகக் கேட்க, சூர்யா தலையைக் குனிந்துக் கொண்டான்.

“அப்படி என்ன அந்த வயசுல உங்களுக்கு செல்ஃப் கண்ட்ரோல் இல்லாம போச்சு? உங்க அம்மா அப்பா உங்க மேல வச்சு இருக்கற நம்பிக்கையை விட, உங்க ரெண்டு பேரோட ஆசை முக்கியமா போச்சா?” கண்ணீருடனும் கோபத்துடனும் ராஜேஸ்வரி கேட்க, சூர்யா தனது முகத்திலேயே அடித்துக் கொண்டான்.

“ஹையோ அப்போ நான் அதெல்லாம் யோசிக்கலையே.. புத்தியில அப்போ அதெல்லாம் உரைக்கலையே.. இப்போ இத்தனை வருஷத்துக்கு அப்பறம், மாமா நீ செஞ்சிட்டு வந்த காரியத்தோட விளைவு தெரியுமான்னு கேட்கற வரை இந்த மரமண்டைக்கு, அப்படி ஒரு சாத்தியம் இருக்குன்னு புரியாம போச்சே.. நான் என்ன செய்வேன்?” தனது கையைத் தரையில் அடித்துக் கொண்டு அவன் உயிரை வெறுத்த குரலில் கதற, அவரோ இன்னமும் கோபம் அடங்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்..

“அப்படி என்ன வெளிநாடு மேல மோகம்? அவளை கஷ்டப்பட வச்சிட்டு போகணும்னு உங்களுக்கு என்ன அப்படி ஒரு ஆசை? சரி.. படிக்க போறீங்க.. நல்ல ப்யூச்சருக்கு அது வேணும் தான். நான் இல்லைன்னு சொல்லல.. ஆனா.. அதை அவக்கிட்ட சொல்லணும் இல்ல.. அது தானே நீங்க அவளுக்கு கொடுக்கற மரியாதை.. நான் சொல்றது உங்க காதலியா.. உங்களோட தன்னோட வாழ்க்கையை பகிர்ந்துக்க தயாரா இருக்கற பொண்ணுக்கு நீங்க கொடுக்கற மரியாதை.

பெர்மிஷன் கேட்க வேண்டாம்.. ஆனா.. அவக்கிட்ட ஒரு வார்த்தை ஏன் சொல்லல? அப்போ அவ உங்களுக்கு முக்கியம் இல்லையா? ஏன் அவ இடம் மாறினது எல்லாம் சொல்லலைன்னு நீங்க கேட்டீங்க இல்ல.. அவ மட்டும் உங்கக்கிட்ட ஏன் எல்லாமே சொல்லிட்டு இருக்கணும்?” இன்னமும் கோபமடங்காமல் அவர் கேட்க, சூர்யா கண்ணீருடன் அவரைப் பார்த்தான்.           

“இல்ல மேடம் அது அப்படி இல்ல.. உங்களுக்கே தெரியும்ன்னு நினைக்கிறேன் சுஜிக்கு ஃபாரின் எல்லாம் அவ்வளவு பிடிக்காது.. ஆளுக்கு ஒரு திசைல இருக்க வேண்டி இருக்கு என்ன வாழ்க்கைன்னு சொல்லுவா.. ஒருவேளை நான் அவக்கிட்ட சொல்லி, அவ என்னை போகக் கூடாதுன்னு சொல்லிட்டா… அவளை மீறிப் போற மாதிரி ஆகிடப் போகுதுன்னு தான் நான் முன்னாலேயே சொல்லல.. எல்லாம் பண்ணிட்டு சொன்னா அவ தடுக்க மாட்டான்னு நினைச்சேன்.. ஆனா.. அன்னைக்கு ரொம்ப வார்த்தை தடிச்சு போச்சு.. எல்லாம் என்னைச் சொல்லணும். அப்போ இதெல்லாம் புரியல.. இப்போ புரியுது.. வலிக்க வலிக்கப் புரியுது.. நான் வேற ஒரு ப்ளான் போட்டேன்.. கடவுளோட ப்ளான் வேறயா இருந்து இருக்கு..” என்றவன், தலையை நீவிக் கொள்ள,

“என்ன பிளான்?” அவர் புரியாமல் கேட்டார்.    

“நான் சுஜி இங்க படிச்சு முடிச்சதும், அவளோட ஹையர் ஸ்டடீஸ்க்கு அவளை அங்க கூட்டிட்டு போயிடலாம்ன்னு இருந்தேன்.. அங்கேயே நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு, எங்க குழந்தைங்களோட சந்தோஷமா வாழணும்ன்னு எல்லாம் கனவு கண்டுக்கிட்டு இருந்தேன்..” அவன் சொல்லவும், ராஜேஸ்வரி திகைத்துப் பார்க்க,  

“எங்களுக்கு கல்யாணம் ஆன அப்பறம் என்ன தான் சுஜி பிசியா இருந்தாலும், எங்க அம்மாவை அடிக்கடி மீட் பண்றது போல இருக்கும். அதைத் தடுக்க என்ன வழின்னு யோசிச்சேன்.. இந்தியால இருந்தா எப்படியும் வருஷம் ஒரு தடவ ரெண்டு தடவ அவங்க கூட இருக்கறது போல இருக்கும்.. அதனால ரொம்ப சந்திக்க முடியாத இடத்துக்கு போகலாம்ன்னு நினைச்சு தான் அப்படி ஒரு முடிவு எடுத்தேன். எனக்கு வேற வழி தெரியல.. அவளை நான் நல்லா பார்த்துக்கணும். சந்தோஷமா வச்சுக்கணும்ன்னு நினைச்சேனே அது தப்பா? ஆனா.. அந்த ஆசையே எங்களைப் பிரிக்க காரணமா போச்சே.. இத்தனை வருஷம் ரெண்டு பேருமே வலியோட இருந்திருக்கோமே.” என்று கதறத் துவங்கினான்.  

ராஜேஸ்வரி அவனது தோளை அழுத்த, “நான் யூ.எஸ் போயிட்டா திரும்ப அவளை எப்போ பார்க்க ரொம்ப நாள் ஆகும்ன்னு தான்  அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ண நினைச்சு அந்த வீக் என்ட் போனேன்.. அப்படில்லாம் நடக்கும்ன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சே பார்க்கல.. எல்லாம் என் தப்பு தான். நான் அன்னைக்கு குடிச்சு இருக்கக் கூடாது.. குடிச்சுட்டு வார்த்தையை விட்டு இருக்கக் கூடாது. எல்லாம் என் தப்பு தான். அவளை நல்லபடியா பார்த்துக்க நினைச்ச நானே குழிக்குள்ள தள்ளி விட்டுட்டேன்..” தனது தலையிலேயே அடித்துக்கொண்டு அழுதவனை தேற்ற வழி தெரியாமல் ராஜேஸ்வரி தடுமாறினார்.

“சொல்லுங்க மேடம் சுஜிக்கு என்ன ஆச்சு? அவ ரொம்ப கஷ்டப்பட்டாளா? அவ என்னைத் தேடலையா?” சூர்யா கேட்கவும், ராஜேஸ்வரி அனைத்தையும் சொல்ல, சூர்யா அதிர்ந்து அவரைப் பார்த்தான்.

“உங்கக்கிட்ட சண்டை போட்டு அவ டேப்லட் சாப்பிடவே மறந்துட்டா.. அதுல அவங்க அம்மாவும் திடீர்ன்னு ஒரு விழாவுக்காக வரவும், அவளால உடனே வர முடியாம ஒருவாரத்து கிட்ட ஆகிடுச்சு. அப்போ வந்து என்கிட்டே ஏதாவது செய்யுங்கன்னு சொன்ன அப்போ எனக்கு கோபம் தான் வந்தது.. கண்டபடி அவளை திட்டி அனுப்பிட்டேன்..” அவர் சொல்லச் சொல்ல, சூர்யாவின் உள்ளம் பதறத் துவங்கியது..

தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தவனின் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருக்க, ‘எந்த மாதிரி நிலைமையில உன்னை விட்டுட்டு போயிருக்கேன்டி..’ தன்னையே நொந்துக் கொள்ள, அன்றைய கொஞ்சல் பேச்சுக்கள் அவனது நினைவினில் ஆட, ராஜேஸ்வரியைப் பாவமாகப் பார்த்தான்.      

அவனது முகத்தையே அவர் பார்த்துக் கொண்டிருக்க, பதில் பேசாம முடியாமல் அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு மெளனமாக அமர்ந்திருந்தான். “அப்படி என்ன பொறுப்பு இல்லாமன்னு உங்களையும் சேர்த்து தான் திட்டினேன்..” அவர் சொல்லவும், சூர்யா சம்மதமாக தலையசைத்தான்.

“பொறுப்பே இல்லாம தான் நான் இருந்துட்டேன்.. அறிவு கெட்டு போச்சு..” அவன் தன்னையே நொந்துக் கொள்ள,   

“அன்னைக்கு அப்படி வந்தவ, பதினைஞ்சு இருபது நாளுக்குள்ளேயே எப்படியாவது எனக்கு இந்தக் குழந்தையை காப்பாத்திக் கொடுங்க.. எனக்கு இந்தக் குழந்தை வேணும் வந்து அழுதுக்கிட்டு நிக்கறா..” அவர் சொல்ல, சூர்யா அவரை ஏக்கமாகப் பார்க்க, ராஜேஸ்வரி மறுப்பாக தலையசைத்தார்..

“அப்போவே எல்லாம் கை மீறிப் போயிடுச்சு.. ஏர்லி ப்ரெக்னன்சி..” அவர் சொல்லி முடிப்பதற்குள் ‘ஹையோ.’ என்று சூர்யா அலறினான்..

“என்னால எதுவுமே செய்ய முடியாத நிலைமையில தான் அவ வந்தா. எங்களோட குழந்தையை நான் ஒழுங்கா பார்த்துக்கல. அது தான் இப்படி ஆகிப் போச்சுன்னு அவ அழுத அழுகை இருக்கே.. எனக்கு இன்னைக்கு நினைச்சாலும் மனசெல்லாம் பதறும்..” ராஜேஸ்வரி சொல்லச் சொல்ல, அவனது மனதினில் அந்தக் காட்சி விரிய,  

“சுஜி..” சூர்யா அரற்றினான்.  

“எனக்கு என்ன புரியலைன்னா.. அந்தக் குழந்தையை, அந்த நேரத்துல, எப்படி, எந்த தைரியத்துல காப்பாத்துங்கன்னு கெஞ்சினா? வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்ன்னு அவ யோசிச்சாளா இல்லையா? கடவுளுக்கே வெளிச்சம்.. அவளுக்கு அப்போ இருந்த நினைப்பு எல்லாம் அந்தக் குழந்தை வேணும்.. அது மட்டும் தான்..” என்றவர் சூர்யாவின் முகத்தைப் பார்க்க,

“எதுவுமே செய்ய முடியலையா? எல்லாம் நான் செஞ்ச பாவம்..” என்று நொந்துக் கொள்ள, அவர் மறுப்பாக தலையசைத்தார்.

“இல்ல. முடியல..” என்றவர், கண்களைத் துடைத்துக் கொண்டு, பரிதாபமாக அமர்ந்திருந்த சூர்யாவைப் பார்த்து,

“அபார்ட் ஆன ஸ்ட்ரெஸ்.. உங்கக் கூட சண்டை போட்டு பிரிஞ்சது. .அதுக்கு உட்கார்ந்து அழக் கூட முடியாம அவங்க அப்பா அம்மாவுக்காக உள்ளுக்குள்ள போட்டு புதைச்சிட்டு சுத்தினது.. அத்தனை நாள் சொல்லாம, அப்போன்னு அர்ச்சனா, வீடு காலி செய்யும் போது உங்க அம்மா அவளைப் பத்தி பேசினதை எல்லாம் சொல்ல, அந்த வார்த்தைகளோட தாக்கம்.. அவங்க பேரண்ட்சை ஏமாத்திட்டோம்ன்னு அந்த குற்ற உணர்ச்சி எல்லாம் சேர்ந்து அவ ரொம்ப மன அழுத்தத்துக்கு ஆளாகிட்டா. ரொம்ப நாளைக்கு தூங்காம ஒரு மாதிரி நைட் எல்லாம் நடந்துக்கிட்டு, கண்ணு எல்லாம் உள்ள போய் ஒரு மாதிரி ஆகிட்டா.. அதுல அவளுக்கு ஹார்மோனல் இன்பால்ன்ஸ் ஆகி, ஒரு மாசத்துக்கு கண்டின்யூவா ப்ளீட் ஆகிட்டு இருந்துச்சு.. ஹெவி ப்ளட் ஃப்ளோனால ஒரு தடவ வீட்டுல மயங்கி விழுந்து இருந்தா..

எதற்சையா நான் அங்க போனேன்.. அப்பறம் தான் அவளைத் தனியா விடாம எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டேன். அப்பறம் தான் எங்க வீட்டுக்கு பக்கத்துலையே அவளை கூட்டிட்டு போயிட்டேன். கிஷோர் தான் அவன் கூட இருந்தான்.. அவனும் அப்பறம் எங்க வீட்டுக்கு பக்கத்துலையே வந்துட்டான்.. மெல்ல மெல்ல தான் அவ இயல்புக்கு வந்தா..” என்றவரின் கையைப் பிடித்துக் கொண்டவன்,            

“எங்க குழந்தையை நானே இப்படி ஆக விட்டுட்டேனே.. என் சுஜி கூட நான் இல்லாம போயிட்டேனே.. சுஜி எப்படி அதை எல்லாம் தனியா தாங்கினா? நானே அவளை இப்படி கஷ்டப்படுத்திட்டேனே..” துடித்துப் போய் சூர்யா புலம்ப, ராஜேஸ்வரி அவனது கையைத் தட்டிக் கொடுத்தார்..

“என்ன செய்யறது சூர்யா? எல்லாமே விதி.. அந்த நேரம் அவ தவிச்ச தவிப்பைப் பார்த்த எனக்கு அவளை அப்படியே விட மனசு இல்ல. அதுவும் அவங்க வீட்ல அவளோட நிலைமை தெரிஞ்சா கண்டிப்பா தனியா விடாம அர்ச்சனா அவங்க அப்பாவை விட்டுட்டு வந்துடுவாங்கங்கற ஒரே காரணத்துக்காக அவ அவங்கக்கிட்ட எதையுமே காட்டிக்கல..” எனவும், தலையை அசைத்த சூர்யா,

“அவங்க அம்மா அப்பா பிரிஞ்சு இருந்தா அவளுக்கு பிடிக்காது.. அர்ச்சனா ஆன்ட்டி அவங்க அப்பாவை ரொம்ப மிஸ் பண்றாங்கன்னு சொல்லி ரொம்ப ஃபீல் பண்ணுவா.. அவங்க அப்பா இருந்தா அவங்களுக்கு ப்ரைவசி கொடுத்துட்டு, என்னைப் பார்க்க எங்க வீட்டுக்கு வந்திடுவா என் தங்க மயிலு..” அதைச் சொல்லும்பொழுதே, அவளது புரிதலில் அவனது முகத்தில் அவ்வளவு பெருமை..

சில நொடிகள் அமைதிக்குப் பிறகு, “நீங்களாவது என்னோட போன் நம்பரை வாங்கி என்கிட்டே சொல்லி இருக்கலாம்ல மேடம்.. நான் கண்டிப்பா ஓடி வந்திருப்பேன்.. அவகிட்ட சண்டைப் போட்டு என் கோபம் எல்லாம் அங்க போய் செட்டில் ஆகற வரை கூடத் தாங்கல. நான் அவளை அப்போவே தேடத் தொடங்கிட்டேன். பேசக் கூப்பிட்டா அவ போன் ரீச் ஆகவே இல்ல.. அவங்க அம்மா நம்பரை கூட மாத்தி வச்சிருக்கா.. நான் வேற என்ன தான் செய்யட்டும்?” சிறுபிள்ளைப் போல கேட்டவனைப் பார்த்து மெல்லிய புன்னகையைச் சிந்தியவர்,    

“அவ அடத்தை பத்தி உனக்குத் தெரியாதா? கொடுக்கல.. கிஷோர் கூட கேட்டுப் பார்த்தான்..” என்று சொல்லவும், ‘ஹ்ம்ம்’ என்று அமைதியாக அமர்ந்தான்..

சில நொடிகளுக்குப் பிறகு, “அப்பறம்” என்று அவன் கேட்க,

“கொஞ்ச நாள் அவ எங்க வீட்ல இருந்து காலேஜ்க்கு போயிட்டு வந்தா.. அவளை டைவர்ட் பண்ண, ‘ஃப்ரீயா இருக்கும்பொழுது எல்லாம் என் கூட க்ளினிக்ல ஹெல்ப்புக்கு வாயேன்’னு சொன்னேன்.. அவ ரொம்ப சந்தோஷமா வந்தா.. அவளுக்கு அது ரொம்ப ரிலீப்பா இருந்தது.. அதோட அவ நல்லா படிச்சா. எங்களுக்கு அவ பொண்ணாவே ஆகிட்டா..” பெருமையாகச் சொன்னவர்,

“இவ்வளவு குழந்தைங்களை ஏந்தற எனக்கு ஒரு வாரிசு இல்லையேங்கற எங்க குறையை அவ போக்கிட்டா.. அவளும் படிச்சு முடிச்சிட்டு கைனகாலஜி டாக்டர் ஆகிட்டா.. என்னைப் போலவே ஒவ்வொரு குழந்தையை கையில ஏந்தும் பொழுதும், அந்தக் குழந்தைங்க குரலை கேட்கும்பொழுது எல்லாம் ஒரு சந்தோசம். எனக்கு தான் அவ இப்படியே நின்னுடப் போறாளேன்னு மனசுக்குள்ள அடிச்சுக்கும்.. நான் அவளைப் பார்த்துக்கறதுனால அர்ச்சனாவுக்கும் ரொம்ப ஆறுதல்.” அவன் பதில் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கவும், தனது கையில் இருந்த காபியை குடித்து முடிக்கவும்,

“அப்பறம் எப்படி எல்லாருமே சென்னைக்கு வந்தீங்க?” பதில் தெரிந்துக் கொள்ளும் ஆவலில் அவன் கேட்க,

“என் ஹஸ்பன்ட் ஒரு கார்டியாக் சர்ஜன்.. இங்க ஒரு ஹாஸ்பிடல்ல நல்ல ஆஃபர் வந்தது.. அதே போல எனக்கும் இந்த ஹாஸ்பிடல்ல கிடைச்சதுன்னு ரெண்டு பேரும் இங்க வந்துட்டோம்.. அப்போ அவ இன்டர்ன் பண்ணிட்டு இருந்தா.. அதனால ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு அவ எங்கக் கூட இங்கயே வந்துட்டா.. அப்படியே நல்ல மார்க்ஸ்ல மேல படிச்சு.. என் கூட ஹாஸ்பிடல்க்கே வந்துட்டா.. இப்போ ரொம்ப கெட்டிக்கார டாக்டர்ன்னு பேர் வாங்கி இருக்கா.. உங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கறதைப் பார்க்கணும்.. இப்போ அடுத்து எனக்கு அது தான் வேணும்..” என்று சொல்லி முடிக்க, சூர்யா குற்ற உணர்வில் குறுகிப் போனான்..

“இவ்வளவு நடந்தும் அவ என்கிட்டே பேசவே இல்லயே மேடம்.. நான் அவளுக்கு அவ்வளவு வெறுத்துட்டேனா? அவ என்னைக் கொஞ்சம் கூடத் தேடவே இல்லையே.. நான் அவ பட்ட கஷ்டத்தை எல்லாம் கேட்கவா உயிர் வாழ்ந்துட்டு இருந்தேன்?” நொந்துப் போய் அவன் கேட்க, அவனது தோளை அழுத்தி,

“ஏன் சூர்யா அவளைத் தேடி இவ்வளவு நாளா வரல? ஏன் அவளை இவ்வளவு நாளா தவிக்க விட்ட? சூர்யா அவ உன்னை வெளிய தான் தேடல.. ஆனா.. அவ உன் கூடத் தான் வாழ்ந்துட்டு இருக்கா. எங்க ஹாஸ்பிடலைப் பொறுத்தவரை அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிருச்சு.. அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவர் வெளிநாட்டுல இருக்கார்.. வருஷம் பத்து நாள் வெகேஷன்ல் அவ அவங்க அம்மா அப்பாவைப் போய் பார்த்துட்டு வருவா.. வரும்போது முகம் நல்ல சந்தோஷமா இருக்கும். அதனால இங்க எல்லாரும் அவரை மீட் பண்ணிட்டு வரான்னு நினைச்சுப்பாங்க.. அதாவது உன்னை.. அவளும் அதை அப்படியே விட்டுட்டா..” என்று சொல்லவும், சூர்யாவின் முகத்தில் மெல்லிய சந்தோசம் குமிழிடத் துவங்க, அவனது முகத்தைப் பார்த்தவரோ,     

“ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க. நீங்க தான் அவ ஹஸ்பன்ட். ஆனா.. உன்னை அவ ஏத்துக்கறது கஷ்டம்..” என்று உதட்டைப் பிதுக்க, சூர்யா பரிதாபப் பார்வையை அவர் மீது வீசினான்.

“இப்படி ஒரே வார்த்தையில என்னைத் தொபுக்கடீர்ன்னு கீழ போட்டுட்டீங்களே..” அவன் கேட்க,  

“அவளால நீங்க பேசின கடைசி வார்த்தைகளையும் மறக்க முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கா. உங்களை நேர்ல பார்த்தா என்ன சொல்றான்னு பார்ப்போம்..” என்று சொல்லவும், அவனது முகம் தொங்கிப் போனது.

“பைத்தியம் போல குழந்தையை தத்து எடுத்துக்கறேன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்கா சூர்யா.. அவளோட கோபம் கிடக்கட்டும்.. ஆனா.. உன்னைப் பார்த்தா அவ ரொம்ப சந்தோஷப்படுவா சூர்யா. வந்து நாளாகுதுன்னு ஆகுதுன்னு சொல்ற? ஏன் அவளை வந்து பார்க்கவே இல்ல.. ஏன் அவளைத் தேடி வர இவ்வளவு வருஷமாச்சு?  எப்படியாவது அவளைப் பேசி சம்மதிக்க வை.. அவ தனக்குள்ளேயே எல்லாத்தையும் வச்சுக்கிட்டு கஷ்டப்படறது போதும்.. அவளை சரி பண்ணி, ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்.. சீக்கிரம் செய் சூர்யா..” சூர்யாவிடம் அவர் கெஞ்ச, சூர்யா அவரது கையைப் பொத்திக் கொண்டான்.               

“அவ தான் போன் நம்பரை எல்லாம் மாத்தி, சோஷியல் மீடியா அக்கவுன்ட் எல்லாம் க்ளோஸ் பண்ணி வச்சு என்னைப் பாடாய் படுத்திட்டாளே. அவளை என்னால எப்படியும் காண்டாக்ட் பண்ண முடியல.. என் ஃப்ரெண்ட்டை விட்டு நான் அவளைப் போய் காலேஜ்ல பார்க்கச் சொன்னேன்.. அவனால அவளை கண்டுப்பிடிக்க முடியல. எங்க பக்கத்துல இருந்த அவங்க வீட்டையும் அவங்க ரிலேடிவ்வை வச்சு வாடகைக்கு விட்டுட்டு, யாருக்கும் போன் நம்பரைத் தரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க..” சூர்யா சொல்ல, அவர் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். 

“ஜைஷு கல்யாணத்துக்கு வந்த பொழுது நான் அவளைத் தேடி காலேஜ்க்கும் போனேனே.. அப்போ இன்டர்ன் டாக்டர்ஸ் எல்லாம் ஸ்ட்ரைக்ல இருக்காங்கன்னு போலீஸ் எல்லாம் பேஷன்ட்ஸ் தவிர யாரையுமே உள்ளே விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. அவ தங்கி இருந்த வீட்டுக்கு போனா அவ வேற வீட்டுக்கு போயிட்டான்னு சொன்னாங்க.. திரும்பவும் நான் என் ப்ரெண்ட்டை விட்டு தேடின பொழுது அவ காலேஜ் மாறிட்டான்னு சொல்லிட்டாங்க..” என்று உதட்டைப் பிதுக்கியவன், ராஜேஸ்வரி கேள்வியாகப் பார்க்கும்பொழுதே,

“எனக்கு யூ.எஸ்ல இருந்து வர முடியாத சூழ்நிலை.. படிச்சு முடிச்சு வேலை கிடைச்சும் லாட்டரியில விசா கிடைக்கவே இல்ல.. நான் ஒவ்வொரு வருஷமும் லாட்டரில ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தேன். நாலு வருஷம் தொடர்ந்து எனக்கு கிடைக்காம போயிடுச்சு.. அப்பறம் வேற கோர்ஸ் சேர்ந்து விசா வாங்கிட்டு அங்க இருந்தேன்.. எப்போ வேலை போகும், சுஜியையும் கண்டுப்பிடிக்க முடியாம அடுத்து வாழ்க்கைல என்னன்னு தெரியாம பைத்தியம் பிடிச்சது போல சுத்திட்டு இருந்தேன்.” என்றவன், தலையைக் கோதிக் கொண்டு,  

“சைட்ல அவ படிக்கறேன்னு சொல்லிட்டு இருந்த ப்ரான்ச்ல எல்லாம் அவ பேரைப் போட்டு கூகிள்ல தேடிட்டே இருந்தேன். அவ கார்டியாக் சர்ஜனா இருப்பா.. இல்ல ஆர்த்தோ பீடிக் டாக்டரா இருப்பான்னு நினைச்சு தேடிட்டு இருந்தேன். இப்படி அவ கைனகாலாஜி டாக்டரா இருப்பான்னு நான் யோசிச்சது கூட இல்ல.. அக்கா அன்னைக்கு என்கிட்டே பார்த்துச் சொல்லலைன்னா எனக்கு இப்போவும் தெரிஞ்சு இருக்குமான்னு தெரியாது..” என்றவனின் இதழ்களில் ஒரு வித புன்னகை.

“அக்கா இங்க ட்ரீட்மெண்ட்டுக்கு வரேன்னு சொன்ன பொழுது கூட நான் அவக்கிட்ட விளையாட்டா, ‘அவங்கக்கிட்ட மூணு குழந்தையா வேணும்ன்னு கேளு.. நான் ஒண்ணை வளர்க்கறேன்’னு சொல்லிட்டு இருந்தேன்..” எனவும்,

“இதுலயும் ஒரே போலவா?” என்று அவர் சலித்துக் கொள்ள,

மண்டையை அசைத்தவன், “அவ இங்க வந்தது கடவுள் எனக்கு என் சுஜியைக் கண்ணுல காட்டத் தான்னு நான் நம்பறேன்.. இவ்வளவு நாள் என் எங்களைத் தவிக்க விட்ட கடவுள் இப்போ கண்ணைத் திறந்துட்டார்.. இனிமே நான் அவளை விட்டு எங்கயும் போக மாட்டேன்.. இனிமே அவளை நான் தனியா விடவே மாட்டேன்..” உணர்ச்சிப் பெருக்கில் சூர்யா சொல்லவும், ராஜேஸ்வரி அவனது கையைத் தட்டிக் கொடுத்தார்..   

“இதோ அவ கிடைச்சதும் எல்லாத்தையும் மூட்டை கட்டிக்கிட்டு அவளைத் தேடி ஓடி வந்துட்டேன்.. இங்க வந்து ஒரு பத்து நாள் போல  ஆகுது.. அவ இங்க இருக்கான்னு தெரிஞ்சு தான் நான் மாமாவை இங்க வீட்டை மாத்துங்கன்னு சொல்லிட்டேன்.. எனக்கு அவ வேணும் மேடம்.. என்னோட உயிரைத் தேடி வந்துட்டேன்..” அவன் சொல்லச் சொல்ல, அவனது முகமும் கசங்கியது.

“அவளுக்கு உள்ளுணர்வு சொன்னது சரியா தான் இருக்கு..” ராஜேஸ்வரி கேலியாகச் சொல்ல,

“என்ன? என்ன சொன்னா?” சூர்யா கேட்டு ஆவலாக அவரது முகத்தைப் பார்த்தான்.

“அது இந்த கொஞ்ச நாளா யாரோ அவளைப் பார்க்கறது போல இருக்காம்.. ‘சூர்யா என்னைப் பார்த்தா தான் எனக்கு அப்படி இருக்கும்.. இப்போ ரொம்ப நாளைக்கு அப்பறம் அந்த ஃபீல் இருக்கு’ன்னு சொன்னா.. அப்போ நீங்க தான் அவளைப் பார்த்ததா?” ஆவலாக ராஜேஸ்வரி கேட்க, சூர்யா ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

“நான் இங்க வந்து இறங்கின உடனேயே அவளைப் பார்த்துட்டேன்.. ஆனா.. எனக்குத் தான் அவ முன்னால போய் நிக்கவே வெட்கமா இருந்தது. எப்படி அவளை ஃபேஸ் பண்றதுன்னு தெரியாம தைரியத்தை சேர்த்து வச்சிட்டு இருக்கேன்..” என்றவன், தலையைக் குனிந்துக் கொள்ள, ராஜேஸ்வரி பெருமூச்சுடன் சூர்யாவைப் பார்த்தார்..

“அவ மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க? அப்பறம் ஏன் சூர்யா அப்படி நடந்தீங்க? போங்க சூர்யா..” என்று சலித்துக் கொண்டவர்,

“ஆனா.. ஒண்ணு சொல்லணும்.. எப்படித் தான் ரெண்டு பேரும் எல்லாத்துலயும் ஒரே போல இருக்கீங்களோ? அவளும் சில சமயம் நான் ரொம்ப பேசிட்டேனான்னு கேட்டுப்பா? நீங்களும் உங்க மேலே பழி போட்டுக்கறீங்க..” போலியாக அவர் சலித்துக் கொள்ள,

“எங்க வேவ்லென்த் அப்படி. நான் சொல்ல நினைக்கிறதை அவ சொல்லுவா.. என் செல்லப் பொண்டாட்டி..” என்றவனை எழுப்பி தனது அருகில் அமர்த்திக் கொண்டவர்,  

“சீக்கிரம் என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்களுக்கு பேரன் பேத்தியை பெத்துக் கொடுங்க.. நாங்களும் எவ்வளவு நாளைக்கு உங்க டார்ச்சரை தாங்கறது? நாங்க பாட்டுக்கு கொஞ்சிட்டு இருக்கோம்.. நீங்க சண்டையோ கொஞ்சலோ ஏதோ செய்துக்கோங்க..” என்று கேட்க, சூர்யாவின் இதழ்களில் மெல்லிய புன்னகை உதயமானது..

“நான் மறுபடியும் முதல்ல இருந்து தொடங்கணும் ஆன்ட்டி.. அப்போவே ரெண்டு வருஷம் வெயிட் பண்ணி அவக்கிட்ட லவ் சொன்னேன்.. அதுக்கே அழுது கரைஞ்சா. இப்போ.. என்னை அடிச்சு துவைப்பா.. கூட அவளுக்கு கையில ஸ்கால்பல் வேற இருக்கு..” அவன் சொல்லிக் கொண்டிருந்த சமயம், ராஜேஷ்வரியின் செல்போன் இசைத்தது.

“உங்க பொண்டாட்டி தான் கால் பண்றா..” அவனிடம் சொல்லிக் கொண்டே போனை எடுக்க,

“ராஜிம்மா.. என்னாச்சு இவ்வளவு நேரமா உங்களைக் காணும்? ஏதாவது ப்ராப்லமா?” என்று கேட்க,  

“இல்ல.. நான் இதோ உங்க வீட்டுக்கிட்ட இருக்கேன்.. வந்துடுவேன்..” என்றவர், போனை வைத்துவிட்டு, மணியைப் பார்த்தார்.

“ஓ.. நான் சொன்ன அரைமணி நேரத்துக்கு மேல ஆகிருச்சா? அது தான் என்னைத் தேடறா..” என்றவர்,

“சீக்கிரம் அவளை மீட் பண்ற வழியைப் பாருங்க.. இன்னும் எவ்வளவு நாளைக்கு கண்ணாமூச்சி ஆடுவீங்க?” என்று கேட்கவும், சூர்யா தலையைச் சொரிய, அவனைப் பார்த்து சிரித்தவர்,

“நான் போய் என் பொண்ணை கவனிக்கிறேன்.. ஹப்பாடா.. இப்போ தான் மனசுக்கே நிம்மதியா இருக்கு.. நான் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில உனக்கு கல்யாணம் ஆகி இருக்காதுன்னு சொன்னாலும், உங்க பொண்டாட்டி எந்த நம்பிக்கையில சொல்றீங்கன்னு கேட்டு பாஞ்சிக்கிட்டு வருவா.. நல்லவேளை என் நம்பிக்கை பொய்யா போகலை..” மனநிம்மதியுடன் சொன்னவர், அவனிடம் விடைப்பெற்று கிளம்ப,

“நான் உங்க கூட ஹாஸ்பிடல் வரை வரேன் ஆன்ட்டி..” என்றவன், வீட்டைப் பூட்டிவிட்டு, அவருடன் நடக்கத் துவங்கினான்.

error: Content is protected !!