உயிரோவியம் நீயடி பெண்ணே – 15

உயிரோவியம் நீயடி பெண்ணே – 15
15
“என்ன சூர்யா.. அப்படியே இப்போவே வந்து அவளை மீட் பண்ணப் போறியா?” கிண்டலாக ராஜேஸ்வரி கேட்க,
“ஹ்ம்ம்.. பண்ணலாம் தான்.. ஆனா.. ஹாஸ்பிடல்ல வேண்டாம்.. எங்கயாவது சப்புன்னு கன்னத்துல அரைஞ்சிட்டான்னு வைங்க.. கொஞ்சம் சங்கடமா போகும்..” என்றவன் அவர் திகைப்பாக பார்க்கும்பொழுதே,
“எனக்கு இல்ல.. அவளுக்கு.. அடிச்சிட்டு ஃபீல் பண்ணுவா.. நாங்க ஊர்ல இருந்து கிளம்பும் பொழுதே எல்லாத்துக்கும் ரெடி ஆகிட்டு தானே வந்திருக்கோம்..” என்றவன், கலங்கிய தனது கண்களைத் தழைத்துக் கொண்டு,
“இதுக்கும் மேல அவ இல்லாம இருக்க முடியாது.. அவ எனக்கு வேணும் அவ்வளவு தான்..” என்றவன், மருத்துவமனை வரவும், அன்று போலவே நின்று அவளது பெயர் இருந்த பலகையைப் பார்த்து ரசித்துவிட்டு,
“நான் வரேன் ஆன்ட்டி.. நான் வேற வீட்டைப் பூட்டிட்டு வந்திருக்கேன்.. அக்கா மாமா வீட்டுக்கு வந்துடுவாங்க..” என்றவன், அவர் தலையசைக்கவும், திரும்பி வீட்டிற்கு நடக்க, அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரி, மகிழ்ச்சியுடன் சுஜிதாவைத் தேடிச் சென்றார்.
அனைவருக்கும் காலை வாழ்த்தைச் சொல்லிக் கொண்டே வேகமாக உள்ளே வந்தவர், சுஜிதாவின் அறைக் கதவைத் தட்டிவிட்டு திறக்க, அவள் ஒரு கர்ப்பிணியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“குட் மார்னிங் சுஜி.. நான் வந்துட்டேன்..” முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு, கதவடைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்று தனது பணியைத் துவங்க, அவரது முகத்தைப் பார்த்த சுஜிதாவோ, குழம்பிப் போய் நர்சைப் பார்த்தாள்.
“என்னாச்சு மேடம்?” அவள் கேட்க,
“இல்ல.. தண்ணிப் பிரச்சனையில டென்ஷனா வருவாங்கன்னு பார்த்தா ரொம்ப சந்தோஷமா இல்ல வராங்க?” என்று கேலி செய்ய, அதைக் கேட்டு செவிலியர் சிரிக்க,
“ஹ்ம்ம்.. அப்பறம் போய் விசாரிப்போம்..” என்று சொன்னவள், அவள் பார்த்துக் கொண்டிருந்த பெண்மணி சிரிக்கவும், அவளைப் பார்த்து புன்னகைத்து,
“வாழ்த்துக்கள் ப்ரியா. உங்களுக்கு ட்வின்ஸ் உண்டாகி இருக்கு. பேபிஸ் ரெண்டுமே நல்லா இருக்கு. கொஞ்சம் ஸ்ட்ரைன் பண்ணாம ரெஸ்ட்லையே இருங்க..” புன்னகையுடன் சொன்னவள், அவர்களுக்கான மருந்துகளை எழுதிக் கொடுத்து, உணவு முறையைச் சொல்லி அனுப்பி வைக்க, அவளது அருகில் வந்த செவிலியர்,
“மேடம் இன்னைக்கு இது ரெண்டாவது ட்வின்ஸ்..” எனவும், ‘ஆமாம்ல’ மகிழ்ச்சியுடன் கேட்டவள், அடுத்து வந்தவர்களை உற்சாகத்துடன் கவனிக்கத் துவங்கினாள்.
அன்றைய சனிக்கிழமை தினத்தில் எப்பொழுதையும் விட சற்று கூட்டம் அதிகமாக இருக்க, அதையும் தாண்டி மனதினில் ஏதோ ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது. அனைவரையும் பார்த்து முடிக்க மாலையாகிவிட, உற்சாகமாக ராஜேஸ்வரியைத் தேடி ஓடினாள்..
சூர்யா அமைதியாக டிவி பார்த்துக் கொண்டிருக்க, வெளியில் சென்றுவிட்டு வந்த ஜைஷ்ணவி உறங்கி விடவும், ப்ரதாப் சூர்யாவின் அருகில் வந்து அமர்ந்தான்.
“என்னடா பேசிட்டியா? நானும் நீ வந்ததுல இருந்தே முகத்தைப் பார்க்கறேன்.. ரொம்ப ஒரு மாதிரியா இருக்கு. என்ன சொன்னாங்க? உன்னை விட்டுட்டு அவ வேற பையன பார்க்க ஓகே சொல்லிட்டாளா?” என்று கேட்க, சூர்யா ப்ரதாப்பைப் பரிதாபமாகப் பார்த்தான்.
“எப்போ ஃப்ளைட் ஏறப் போற?” வேண்டுமென்றே அவனை வம்பு வளர்க்க, சூர்யா தனது தலையைப் பிடித்துக் கொண்டான்.
அதற்கு மேல் விளையாடாமல் ப்ரதாப் அவனது தோளை அழுத்த, “நாம நினைச்சதுக்கு எல்லாம் மேல நடந்திருக்கு மாமா..” என்றவன், ராஜேஸ்வரி கூறிய அனைத்தையும் சொல்லி முடித்து, ஜைஷ்ணவிக்கு கேட்காத அளவு, வாயை மூடிக் கொண்டு அழ, ப்ரதாப் தலையைப் பிடித்துக் கொண்டான்.
இருவரிடமும் அப்படி ஒரு அமைதி. “நான் ரொம்ப கேவலமானவன் இல்ல மாமா? ரொம்ப சுயநலம் பிடிச்சவன். அவ கூட சண்டைப் போட்ட அப்பறம் மறுபடியும் போய் அவளைச் சமாதானம் செய்யாம, ஈகோல நான் பாட்டுக்கு கிளம்பிப் போயிட்டேன்.. அவளைப் பத்தி நான் ஏன் அந்த நேரம் நினைக்காம போனேன்? அவக்கிட்ட ஒரு வார்த்தை பேசி இருக்கணும் இல்ல? எனக்குள்ள சாத்தான் தான் புகுந்து இருக்கும் போல..” என்று நொந்துக் கொள்ள, ப்ரதாப் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான்.
“அது அப்படி இல்ல.. நாம எல்லாம் ஒரு கட்டத்துல வாழ்க்கை ரேஸ்ல ஓட ஆரம்பிச்சிடறோம். சம்பாதிக்கணும், சீக்கிரம் செட்டில் ஆகணும்ன்னு நினைக்கிறோம். அதுக்கு ஈசியான வழியா ஏதாவது ஆன்சைட் வேலையைத் தேடி பிடிச்சுக்கறோம்.
நானும் அப்படித் தானே, உடம்பு சரி இல்லாத அம்மா சரியாகிடுவாங்க.. அது ஏதோ சும்மா ஜுரம் தான்.. ஒண்ணும் ஆகிடாதுன்னு எங்க அண்ணன் கிட்ட விட்டு போனேன். இந்த வாய்ப்பை விட்டா மறுபடியும் கிடைக்காதுன்னு போனேன். கடைசியில என்னால அவங்க முகத்தைக் கூட பார்க்க முடியல.. நான் போய் அங்க இறங்கறதுக்குள்ள அவங்க போயிட்டாங்க. உடனே திரும்பி வரவும் முடியாம மாட்டிக்கிட்டு.. ம்ப்ச்.. என்னோட இதுல ஜைஷு ‘என்னைப் பிரிச்சு கூட்டிட்டு போயிட்டா’ன்னு தேவை இல்லாத திட்டு வேற..” தனது அனுபவத்தைச் சொல்லி அவனைத் தட்டிக் கொடுத்துத் தேற்றியவன்,
“சரி.. விடு.. ஆகறது ஆகிப் போச்சு.. இதுக்கும் மேல அடுத்து என்ன செய்யறதுன்னு பார்க்கணும். இப்படியே வருத்தப்பட்டு அழுதுட்டு இருந்தா சரிப்படாது. சீக்கிரம் அவளைப் போய் பார்த்து பேசி, சமாதானம் பண்ணு.” அவன் சொல்லவும், தலையசைத்த சூர்யா,
“அவ எந்த தைரியத்துல எங்க குழந்தையை பெத்துக்கணும்ன்னு நினைச்சா மாமா? எனக்கு அதைக் கேட்டதுமே உள்ளுக்குள்ள என்னவோ போல ஆகிருச்சு.. ஆனாலும் என்கிட்ட இப்படின்னு ஒரு வார்த்தை அவ பேசலையே மாமா.. அழுத்தம்.. அராத்து.. பிடிவாதம்..” என்று புலம்ப, ப்ரதாப்பின் இதழ்களில் ஒரு சிறு புன்னகை.
“செய்யறது எல்லாம் செஞ்சிட்டு அவளைத் திட்டற பாரேன்.. உன்னை..” என்று ஒரு செல்ல அடியை வைத்தவன்,
“சரி.. அவளை எப்போ பார்க்கப் போற?” என்று கேட்க,
“நாளைக்கு சண்டே.. நாளைக்கு பார்க்கலாம்ன்னு இருக்கேன். என்னைப் பார்த்துட்டு அவ டென்ஷன்ல ஹாஸ்பிடல் போக வேண்டாம்ல.. பாவம் பேஷண்ட்ஸ்.. பார்ப்போம்.. நாளைக்கு பார்க்க முடியலைன்னா சாயந்திரம் வீடு புகுந்துட வேண்டியது தான்..” என்ற சூர்யா,
“நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்.. மனசு கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு..” என்று சொல்லிவிட்டு, பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றான்..
வேலை முடிந்ததும் நேராக ராஜேஸ்வரியிடம் ஓடிய சுஜிதா, “ராஜிம்மா…” என்றபடி அவரது அருகில் சென்று அமர, அவளது முகத்தைப் பார்த்தவர், காலையில் அவள் பார்த்த அதே மகிழ்ச்சியான முகத்துடன்,
“வரியா நாம பீச்சுக்கு போயிட்டு அப்படியே டின்னர் சாப்பிட்டு வரலாம்? நாம போகும்போது அப்பா ஃப்ரீயா இருந்தா அவரையும் வரச் சொல்லலாம்..” உற்சாகமாக ராஜேஸ்வரி சொல்ல, அவரது முகத்தைப் பார்த்தவள், யோசனையுடன் தனது தாடையைத் தடவினாள்.
“என்ன அப்படி பார்க்கற?” அவர் கேட்க,
“ஆமா.. காலையில தண்ணிப் பிரச்னையில கொலைவெறியில வருவீங்கன்னு பார்த்தா ஒரே புன்னகை அரசியா வந்தீங்க? என்ன விஷயம்? அப்பாவை நல்லா வேலை வாங்கி விட்டு வந்துட்டீங்களா? இப்போ அதுக்கு சமாதானமா தான் பீச் ப்ளானா?” குறும்பாக அவள் கேட்க, அவளது காதைப் பிடித்து திருகி விட்டு, மெல்ல அவளது கன்னத்தை வருடியவர், அவளது முகத்தையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்..
“என்னம்மா அப்படி பார்க்கறீங்க? எங்கயாவது கண்ணு மூக்கு எல்லாம் இடம் மாறி இருக்கா?” தனது முகத்தைத் தொட்டுப் பார்த்து அவள் கேலி செய்ய,
“இனிமே இடம் மாறினாலும் மாறும்.. எங்களை எல்லாம் நியாபகம் இருக்குமான்னு கூட தெரியல..” அவரது கேலிக்கு சிரித்து,
“சரி.. சொல்லுங்க உங்க சந்தோஷத்துக்கு என்ன காரணம்?” அவள் வம்பு வளர்க்க,
“உன் முகமும் தான் இன்னைக்கு ரொம்ப மலர்வா இருக்கு? அதுக்கு என்ன காரணம்?” பதிலுக்கு அவரும் வம்பு வளர்க்க,
“தெரியல ராஜிம்மா.. காலையில இன்னைக்கு நாம பண்ணின ஐ.யூ.ஐ.ல ரெண்டு பேருக்கு ட்வின்ஸ் ஃபார்ம் ஆகி இருக்கு. அது ஒரு மாதிரி காலையில இருந்தே மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. சரி.. நீங்க சொல்லுங்க..” என்று கேட்கவும், தோளைக் குலுக்கியவர்,
“எனக்கும் மனசு அப்படியே துள்ளிக் குதுக்கணும் போல இருக்கு.. அது தான் பீச்சுக்கு போகலாமான்னு கேட்டேன்.. இனிமே ஃப்ரீ தானே. நாளைக்கு காலையில கொஞ்ச நேரம் வேலை இருக்கு.. அப்பறம் ஃப்ரீ தான்.. ஏதாவது ப்ளான் பண்ணலாமா? லஞ்ச்க்கு எங்கயாவது போகலாம்..” அவரது திட்டம் நீளவும், சந்தோஷமாக சுஜிதா தலையசைத்தாள்.
“போகலாமேம்மா.. நான் ஜைஷு அக்காக்கு மெசேஜ் பண்ணிட்டு வரேன். பாவம் அக்கா.. எனக்காக நைட்க்கு டின்னர் எல்லாம் செஞ்சிட்டு இருப்பாங்க..” சுஜிதா சொல்லவும்,
“ஆமா.. ஆமா.. பாவம் உனக்காக அவங்க செஞ்சிட்டு இருப்பாங்க.. அப்பறம் கோவிச்சுக்கப் போறாங்க.. ஏமாந்து போவாங்க..” கேலியாக சொல்ல, அவரை சந்தேகமாகப் பார்த்துவிட்டு அவரது முகத்தில் தெரிந்த கேலியில் அவளும் சிரிக்கவும், தனது மொபைலை எடுத்து தனது கணவரிடம் பேசிவிட்டு, சுஜிதாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
“அப்பா நேரா கேப்ல அங்க ஹோட்டல்க்கு வரேன்னு சொல்லிட்டார்.. நாம முன்னால போகலாம்..” பேசிக் கொண்டே இருவரும் ஒரு ஹோட்டலுக்குச் செல்ல, ராஜேஸ்வரியின் கணவர் ராமச்சந்திரனும் வந்து சேர்ந்தார்.
“என்ன இன்னைக்கு பெரிய டாக்டர்ஸ் எல்லாம் ஃப்ரீயா இருக்கீங்க? நான் தான் வேலை இல்லாம இருக்கேன் போல..” அவர்களை வம்பு வளர்த்துக் கொண்டே வந்து அமர்ந்தவர், அவர்கள் ஆர்டர் செய்திருந்த ஸ்நாக்சை உண்ண,
“ஆமா ஆமா.. நாங்க எல்லாம் ரொம்ப பிசி..” சுஜிதா சொல்லவும், தனது மனைவியின் முகத்தைப் பார்த்தவர், அதில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்டுக் கொண்டு, கேள்வியாக அவரைப் பார்க்க, சுஜிதாவைக் கண் காட்டிவிட்டு,
“கூட்டம் வரதுக்குள்ள பீச்க்கு போகலாம். அங்க நான் ஓடியாடி விளையாடினா கூட யாரும் கண்டுக்க கூடாது..” என்றபடி தனது பையை எழுந்துக் கொள்ள, மூவருமாக பீச்சிற்குச் சென்றனர்..
வழக்கமாக இப்படி ஓய்வு கிடைக்கும் பொழுது, மூவருமாக சேர்ந்து பீச்சிற்குச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்பொழுது தம்பதியருக்கு தனிமையளித்துவிட்டு, சிறிது நேரம் அலைகளில் சென்று நிற்பது சுஜிதாவின் வழக்கம்.
அதன்படி ராஜேஸ்வரியிடம் தனது பையைக் கொடுத்துவிட்டு, கையைக் கட்டிக் கொண்டு அலைகளில் சென்று நின்று, சுஜிதா கடலை வெறித்துக் கொண்டிருக்க, ராஜேஸ்வரி அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தார்..
“என்ன இன்னைக்கு உன் முகத்துல எக்ஸ்ட்ரா பல்ப் எரியுது? என்ன விஷயம்?” ராமச்சந்திரன் கேட்டது தான் தாமதம், கடகடவென்று சூர்யாவைப் பார்த்து பேசியதைப் பற்றிக் கூறி முடித்தார்..
“ஹே.. நிஜமாவா? சூர்யா இங்க தான் இருக்கானா? அவளைத் தேடி வந்துட்டானா?” சந்தோஷத்தில் அவரது குரல் உயர்ந்து ஒலிக்க, ராஜேஸ்வரி அவரது கையை அழுத்தி அடக்கினார்.
“இன்னும் அவன் அவளைப் பார்க்க சங்கடப்பட்டுட்டு இருக்கான்.. பாவம்..” அவர் வருந்த,
“அந்தப் பையனோட நம்பர் இருந்தா அவனை இங்க வரச் சொல்லேன்.. ரெண்டு பேரும் மீட் பண்ணினா சுஜியால சத்தம் போட முடியாது இல்ல.. அவனும் அவகிட்ட பேசட்டும்.. ரெண்டு பேருக்கும் கொஞ்சம் பேச நிலைமை சரியா இருக்குமே..” ஆவலாக அவர் கேட்க, அவரது மனையாட்டியோ நாக்கைக் கடித்துக் கொண்டு தனது தலையில் தட்டிக் கொண்டார்.
“அவனைப் பார்த்த சந்தோஷத்துல நான் வாங்க மறந்துட்டேன்.. அவனோட அக்கா நம்பர் இருக்கு.. அவக்கிட்ட வேணா கேட்டு வாங்கறேன்..” அவர் சொல்லவும், தலையசைத்த ராமச்சந்திரன்,
“ஹ்ம்ம்.. பார்ப்போம்.. எதுக்கும் வேணா கூப்பிட்டு கேட்டுப் பாரு.. அவன் வந்து அவங்களா பேசித் தீர்க்கட்டும்.. இவ்வளவு வருஷத்துக்கு அப்பறமும் அவளைத் தேடி அவன் வந்ததே ரொம்ப சந்தோசமா இருக்கு.. கண்டிப்பா ரொம்ப நல்லப்பையன் தான்.. அவளை நல்லா பார்த்துப்பான்..” மனநிறைவுடன் சொன்னவர், ராஜேஸ்வரியிடம் வேறு விஷயங்கள் பேசிக் கொண்டு அமர்ந்திருக்க, சிறிது நேரம் நின்று விட்டு, சுஜிதா அவர்களது அருகில் வந்து அமர்ந்தாள்.
ஏனோ அவளது மனதினில் ஒரு இனம் புரியாத அமைதி.. என்றுமே அலைகளில் அவனது நினைவுடன் நின்றுவிட்டு வரும்பொழுது சிறிது நேரத்திற்கு அவனது அருகாமையைத் தேடி மனது தவிக்கும்.
இன்றோ ஏனோ மனதினில் இருந்த அமைதி ராஜேஸ்வரியைப் பார்த்துப் புன்னகைக்கவும் வைத்தது.. தனது பையில் இருந்த ஒரு புத்தகத்தையும், மனதிற்கினிய பாடல்கள் கேட்க வசதியாக காதில் ஹெட்போன்ஸ்சையும் மாட்டிக் கொண்டு அவர்களுக்கு சிறிது இடைவேளை விட்டு அமர்ந்தாள்.
ராஜேஸ்வரி அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “ரொம்ப நல்ல பையன் தான். அவ மேல உயிரையே வச்சிருக்கான். இவ பட்டக் கஷ்டத்தை எல்லாம் கேட்டு துடிச்சுப் போயிட்டான்.. என்னால தான் அவளுக்கு இவ்வளவு கஷ்டம்ன்னு கதறித் தீர்த்துட்டான். பார்க்கவே பாவமா இருந்தது.. அவன் நம்பரை இவக்கிட்ட வாங்கி ஏன் தனக்கு போன் செய்யலைன்னு கேட்டான். நியாயம் தானே.. அப்போவே நாம எப்படியாவது இவக்கிட்ட அவனோட நம்பரை வாங்கி பேசி இருக்கணுமோ? அவன் வந்து இவ இருந்த வீட்டுல எல்லாம் தேடி வேற இருக்கான்.. பாவம்..” என்று வருந்த, ராமச்சந்திரனும் ஒருபெருமூச்சுடன் சுஜிதாவைப் பார்த்துவிட்டு தலையசைத்தார்.
“நீங்க சொன்னது போல போன் நம்பர் வாங்கிட்டு வந்திருந்தா அவனை வரச் சொ…ல்…லி..” அவர் இழுக்க, ராமச்சந்திரன் ராஜேஸ்வரியை கேள்வியாகப் பார்த்தார்.
“என்ன பேச்சு பாதியிலேயே தொங்குது?” அவர் கிண்டலடிக்க,
“அதோ.. அதோ.. அது தான் சூர்யா.. அவன்.. அவனே தான்..” திகைத்த, காற்றாகி விட்ட குரலில் சொல்ல, ராமச்சந்திரனின் பார்வை சூர்யாவை நோக்கித் திரும்பியது.
அவன் அணிந்திருந்த பேண்டை முழங்கால் வரை ஏற்றி விட்டு, கரையின் ஓரம் வந்து மோதும் அலைகளில், சோகமே உருவாக நடந்து வந்துக் கொண்டிருந்தான்..
அவனது கவனம் அங்கு இல்லை என்பதை அவனது முகமே காட்டியது. கடலை வெறித்துக் கொண்டு மெல்ல நடந்துக் கொண்டிருந்தவனின் கால் சட்டை, நன்றாக நனைந்திருந்ததில் இருந்தே அவன் வெகுநேரமாக அங்கு இருப்பது புரிந்தது.
“நல்லாத் தெரியுமா?” உறுதி செய்துக் கொள்ள கேட்டத் தனது கணவரை முறைத்தவர்,
“காலையில அவ்வளவு நேரம் பேசிட்டு வந்திருக்கேன்.. நீங்க என்னடான்னா இந்தக் கேள்வியைக் கேட்கறீங்க? உங்களுக்கே இது நியாயமா இருக்கா?” என்று கேலி போலக் கேட்க, தலையசைத்த ராமச்சந்திரனின் பார்வை அவனையேத் தொடர்ந்துக் கொண்டிருந்தது..
மெல்ல நடந்து வந்து ஓரிடத்தில் நின்றவன், தனது பாக்கெட்டில் கையை நுழைத்துக் கொண்டு, கடலை வெறிக்கத் துவங்கினான். அவனது மனம் முழுவதும், நடந்த நிகழ்வுகளிலும், சுஜிதா அனுபவித்ததாக ராஜேஸ்வரி கூறிய கஷ்டங்களுமே சுழன்றுக் கொண்டிருந்தது.. அதை விட அவள் தன்னைத் தேடாதது மனதை மிகவும் வருத்தியது. கடலலைகளைப் போல அவனது மனதிலும் அந்த காட்சிகள் ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தது.
ப்ரதாப்பிடம் சொல்லிவிட்டு கிளம்பியவன், நேராக ஒரு டாட்டூ போடும் நிலையத்தில் சென்று நின்றான். அவனது வழக்கம் போல தனது மனவலியைக் குறைப்பதற்காக கையில் ஒரு டாட்டூவைக் குத்திக் கொண்டவனுக்கு அப்பொழுதும் மனதின் வலி குறையாமல் போனது.. வீட்டிற்குச் செல்லப் பிடிக்காமல், நேராக பீச்சிற்கு வந்தவன், கால் போகும் போக்கில் நடந்துக் கொண்டிருந்தான். இறுதியில் அஸ்தமனமாகும் சூரியனை வெறித்துக் கொண்டே வந்தவன், ஓரிடத்தில் அப்படியே நின்றான்.
‘இன்னைக்கோட இந்த கஷ்டம் எல்லாம் போய் நாளைக்கு விடியல் புதுசா இருக்காதா?’ மனதினில் நொந்துக் கொண்டே சிலையென நின்றுக் கொண்டிருக்க, ராஜேஸ்வரியைப் பார்த்து விட்டு எழுந்துக் கொண்ட ராமச்சந்திரன், மெல்ல அவனது அருகில் சென்று நின்றார்..
“ஹலோ சூர்யா..” ராமச்சந்திரன் குரல் கொடுக்க, சூர்யாவின் கவனம் அங்கு இல்லாததால் அவனது தோளைத் தொட்டு, அவர் அழைக்கவும், திடுக்கிட்டுத் திரும்பியவன், அவரைக் குழப்பமாகப் பார்த்தான்.
“என்னைப் பார்க்காம கொஞ்சம் திரும்பியே நில்லுங்களேன்.. ஏன்னா உங்க உயிர் பின்னால தான் உட்கார்ந்து இருக்கு.. அது கூடத் தெரியாம கடலைப் பார்த்து சைட் அடிச்சிட்டு இருக்கீங்க? நீங்க எல்லாம் என்னத்தை லவ் பண்ணி கல்யாணம் செய்து குப்பை கொட்டப் போறீங்களோ?” கேலி போலச் சொல்ல, டக்கென்றுத் திரும்பிப் பார்த்த சூர்யாவின் பார்வை கரையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த சுஜிதாவின் மீது படிந்தது.
அத்தனை நேரம் அலைந்துக் கொண்டிருந்த மனது ஓரிடத்தில் நிலைக் கொண்டு, அவளிடமே ஒட்டிக் கொண்டது.
“பார்டா.. இங்க ஒருத்தன் மெனக்கெட்டு வந்து அடையாளம் கண்டு விஷயத்தை சொல்லி இருக்கேன்.. ஒரு தேங்க்ஸ் சொல்லாம.. என்னை யாருன்னு கூடக் கேட்காம.. அப்படியே திரும்பி சைட் அடிக்கிறதை?” அவர் கேலி செய்யவும், சூர்யா அவரைப் பார்த்து புன்னகைத்தான்..
“சார்.. நீங்க? உங்களுக்கு என்னைத் தெரியுமா? இல்ல நாம எப்போவாவது மீட் பண்ணி இருக்கோமா?” அப்பொழுது தான் அவர் கேட்டதில் நியாயம் புரிந்து, அவன் குழப்பமாகக் கேட்க, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர்,
“இன்னைக்கு அவங்க ரெண்டு பேருக்கும் வேலை முடிஞ்சிடுச்சு.. கொஞ்சம் ஃப்ரீ.. அதனால பீச்க்கு போகலாம்ன்னு பிளான் பண்ணினாங்க. அது தான் வந்தோம்.. பார்த்தா நீங்களும் இங்க வந்திருக்கீங்க? வந்து ரொம்ப நேரம் ஆச்சோ?” அவர் கேட்கவும், மண்டையை அசைத்தவன், மீண்டும் சுஜிதாவைத் திரும்பிப் பார்த்தான்.
“அவ கூட போய் பேசறீங்களா?” வாஞ்சையாக கேட்டவரின் கேள்விக்கு, மறுப்பாக தலையசைத்தவன், அமைதியாக நின்றான்.
“சூர்யா.. இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி தயங்கிட்டு இருக்கப் போறீங்க? அவ கூட போய் பேசுங்களேன். அவ இங்க தானே இருக்கா? இப்போ போய் பேசினா அவ அமைதியா பேச வாய்ப்பிருக்கே..” என்று கேட்க, அவரது கேள்வியில் சிரித்தவன்,
“இல்ல.. எனக்குப் புரியல.. அவ அமைதியா பேசுவான்னு நீங்க எல்லாம் நம்பறீங்களா?” அவளைப் புரிந்தவனாய் கேட்டவன், அவளை மீண்டும் திரும்பிப் பார்த்து விட்டு,
“இன்னைக்கு எனக்கு கொஞ்சம் மனசு சரி இல்லை.. அவகிட்ட என்னால சரியா பேச முடியாது.. மனசு எல்லாம் ரொம்ப ஒரு மாதிரி இருக்கு. முதல்ல நான் சரி ஆகணும். அப்பறம் தான் அவளை சமாதானப்படுத்தி, சரி செய்ய முடியும்.. எங்க இருந்து தொடங்கறதுன்னு யோச்சிட்டு இருக்கேன்..” என்றபடி அவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“இன்னுமா இந்த புக்கை அவ படிச்சு முடிக்கல?” என்று தனக்குள் பேசிக் கொள்ள, அதைக் கேட்டவரோ,
“ஏன் இந்த புக்கை அவ பத்து வருஷமாவா படிச்சிட்டு இருக்கா?” ராமச்சந்திரன் புரியாமல் கேட்க,
“அவ படிச்சு முடிச்சு இருப்பா.. திரும்பத் திரும்ப படிக்கிறாளா இருக்கும்..” கேலி போலச் சொல்ல, பெரியவருக்கோ ஆவல் தொற்றிக் கொண்டது..
“இருங்க நான் போய் கேட்டு வரேன்..” என்றவர், சூர்யா எதிர்ப்பார்க்காத பொழுது வேகமாக சுஜிதாவின் அருகில் சென்று அமர, சுஜிதா அவரை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“இந்த புக்கை நீ எத்தனாவது தடவ படிக்கிற சுஜி?” அவர் கேட்கவும்,
“ஏன்ப்பா? நான் இதை இப்போ பதினோறாவது தடவ படிக்கறேன். ஏன் திடீர்ன்னு இந்த டவுட்?” அவள் கேள்வியாகப் பார்க்க,
“இல்ல. நான் கூப்பிடக் கூப்பிட கவனிக்காம ரொம்ப முழிகிப் போய் படிச்சிட்டு இருந்தியா. அது தான் கேட்டேன்..” என்று சமாளிக்க, அந்தப் புத்தகத்தை மென்மையாக வருடிக் கொடுத்தவள்,
“ஹ்ம்ம்.. இது சூர்யா எனக்காக தேடித் தேடி வாங்கித் தந்தது. கதை ரொம்ப நல்லா இருக்கும்..” என்ற பதிலைக் கேட்டவர், ராஜேஸ்வரியைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிவிட்டு, மீண்டும் சூர்யாவின் அருகிலேயே சென்று நிற்க, சுஜிதா ராஜேஸ்வரியைத் திரும்பிப் பார்த்தாள்.
“நீ சொன்னது சரி தான்…” கேலி போலச் சொல்லியவர்,
“உன் நம்பரை கொடு சூர்யா.. காலையில என் புத்திசாலிப் பொண்டாட்டி வாங்காம வந்துட்டா..” என்றபடி மறக்காமல் நம்பரை வாங்கிக் கொண்டவர், தனது நம்பரையும் அவனுக்குக் கொடுத்தார்.
“நீங்க யூ.எஸ்.ல என்ன வேலை செய்துட்டு இருந்தீங்க சூர்யா?” என்று பொதுவாக பேசி, அவனைப் பற்றித் தெரிந்துக் கொண்டவர்,
“ஹ்ம்ம்.. உங்களுக்கும் ஒரு மாதிரி அப்போ முழுசா அவளை இங்க வந்து தேட முடியாத அளவு கஷ்ட காலம் தான்.. எல்லாம் சரி பண்ணிடலாம்..” அவனுக்கு ஆறுதலாக சொல்லிவிட்டு, அவனிடம் பொதுவாக பேசிக் கொண்டே அவரும் அலையில் நின்றார்.
“என்னம்மா? எதுக்கு அப்பா வந்து இந்த புக் பத்தி கேட்டுட்டு போறார்? எப்பவுமே இல்லாம அப்பா அலைல ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்காரே?” என்று கேட்டுக் கொண்டே அவரைத் திரும்பிப் பார்த்த சுஜிதாவின் பார்வையில் விழுந்தது சூர்யாவின் முதுகுப்புறம்.. அவனை அவளுக்குத் தெரியாதா? ஆயிரம் பேருக்கு நடுவிலும் அவனைக் கண்டுப்பிடிப்பவளாயிற்றே!!
அவனது முதுகுப்புறத்தைப் பார்த்ததுமே அவளது மனதினில் ஒரு அதிர்வு.. சிறு நடுக்கம் உடலில் ஓடி மறைய, தனது ஆசை கொண்ட மனதை அடக்கி, அது அவன் தானா என்று உறுதி செய்துக் கொள்வதற்காக சற்று எட்டி அவனது முகத்தைப் பார்ப்பதற்காக அவள் முயன்றுக் கொண்டிருக்க, ராஜேஸ்வரிக்கும் மனதினில் ஒரு சிறு பதட்டம் தொற்றிக் கொண்டது..
“என்ன சுஜி அங்க பார்த்துட்டு இருக்க?” ராஜேஸ்வரி கேட்க,
“ராஜிம்மா.. அங்க… அங்க நிக்கறது சூர்யா மாதிரி இருக்கு.. அதோ.. அப்பா பக்கத்துல..” சுஜிதாவின் கைகள் நடுங்க, அவளது மனதோ அவனைக் கண்டு படபடக்கத் துவங்கியது..
“என் கண்ணுக்கு தான் சூர்யா போல இருக்கா? ம்மா.. அது சூர்யா தானே..” தனது புத்தகத்தையும் செல்போனையும் மறந்து எழுந்து நின்றவள், ராமச்சந்திரனின் அருகில் இருந்த நபரை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க,
“என்னது? அது தான் சூர்யாவா? அப்போ இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்க? போய் பேசு..” அவர் சொல்லவும், குழப்பமாக அவரைப் பார்த்து,
“சூர்யாவுக்கு இன்னும் கொஞ்சம் உடம்பு இருக்கும் ராஜிம்மா.. கொஞ்சம் ஒல்லியா இருக்கற மாதிரி இருக்கு.. ஏன்?” என்றவளின் பார்வை என்னவோ படபடக்கும் இதயத்துடன் அவன் மீது தான் பதிந்திருந்தது..
எக்கி எக்கி அவனது முகத்தைப் பார்த்து உறுதி செய்துக் கொள்ள அவள் விழைய, ராஜேஸ்வரிக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.. “சுஜி.. ஒருவேளை சூர்யா இங்க வந்தா என்ன செய்வ?” மெதுவாக அவர் கேட்க,
“சூர்யாவா? ராஜிம்மா.. சூர்யா இங்க ஏன் தனியா வரணும்? அவரோட வைஃப், குழந்தைங்க, ஜைஷு அக்கா எல்லாரும் தானே வந்திருப்பாங்க? இங்க இவரு தனியா இல்ல நின்னுட்டு இருக்காரு?” குழப்பமாகக் கேட்டவள், சூர்யாவை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தவள், மீண்டும் ராஜேஸ்வரியின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டு,
“இல்ல.. அது தான் நான் அவரோட வாழ்க்கைல இல்லைன்னு ஆகிடுச்சே.. அப்பறம் அவரைப் பத்தி என்ன பேச்சு?” விரக்தியாக அவள் கேட்க, ராஜேஸ்வரிக்கு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது..
அவரிடம் தனது படபடப்பைக் காட்டிக் கொள்ளாமல், புத்தகம் படிப்பது போல கீழே குனிந்தவளின் பார்வை, மீண்டும் மீண்டும் அவனைத் தழுவி மீண்டுக் கொண்டிருந்தது..
ராஜேஸ்வரி அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, ராமச்சந்திரனோ சூர்யாவுடன் நன்றாக நின்று பேசிக் கொண்டிருந்தார்.. “என்ன ராஜிம்மா.. அப்பா அங்கயே ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்காங்க?” மீண்டும் கேட்க, ராஜேஸ்வரி உதட்டைப் பிதுக்கி, அவளது தலையை வருடிக் கொடுத்தார்.
“என்ன சூர்யா உங்க ஆருயிர் ஏன் இன்னும் உங்களைப் பார்க்கல? ஒருவேளை உங்களை அடையாளம் தெரியலையோ?” என்று கேட்டபடி அவர் திரும்பிப் பார்க்க, அவருடன் அவளைத் திரும்பிப் பார்த்த சூர்யா,
“கண்டிப்பா கண்டு பிடிச்சு இருப்பா.. ஒருவேளை நான் எங்க இங்க வந்து இருக்கப் போறேன்னு நினைச்சிட்டு வேணா இருக்கலாம்..” என்றபடி மீண்டும் கடலைப் பார்த்து திரும்பிக் கொண்டவனின் பார்வையும் அவளை அடிக்கடித் தழுவிக் கொண்டிருந்தது.
மனம் முழுவதும் அவளுடன் பேசும் ஆவலும், அவளது கையைக் கோர்த்துக் கொண்டு, அந்த கடலலையில் கால்கள் நனைய பேசிக் கொண்டே நடக்க வேண்டும் என்ற ஆசையும் எழ, ‘ஹ்ம்ம்..’ ஒரு பெருமூச்சுடன் அந்த ஆசையைக் அப்போதைக்கு விரட்டினான்..
சுஜிதாவின் மனதும் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் அவளது விழிகள் ராமச்சந்திரனின் அருகில் நின்றுக் கொண்டிருந்த சூர்யாவின் மீது படிந்து மீள, “நான் போய் அது யாருன்னு பார்த்துட்டு வரேன்..” அதற்கு மேல் பொறுக்க முடியாமல், ராஜேஸ்வரி எழுந்து வேகமாக அவர்கள் அருகில் செல்ல,
“ஹையோ ராஜிம்மா.. வேண்டாம்..” அது சூர்யா தான் என்பது உறுதியாகி விடுமோ என்ற படபடப்பில் சுஜிதாவின் குரல் உயர்ந்துக் கேட்கவும், சூர்யா திரும்பிப் பார்க்க, அவனைப் பார்த்தவளோ அப்படியே உறைந்து நின்றாள்.
சுஜிதாவைப் பார்த்தவன், அருகில் இருந்த ராஜேஸ்வரியை கேள்வியாகப் பார்த்துவிட்டு, மீண்டும் சுஜியைப் பார்த்துக் கொண்டே அவளது அருகில் நெருங்க, உதடுகள் துடிக்க, கண்கள் கண்ணீரை சுரக்க சுஜிதா அவனையே வெறித்துக் கொண்டு நின்றாள்..
“ஹ..லோ. Dr. சுஜிதா.. எப்படி இருக்கீங்க? லாங் டைம் நோ சீ.. எங்க போய் ஒளிஞ்சுக்கிட்டு ஆட்டம் காட்டறீங்க? அது தான் நான் வந்துட்டேன் இல்ல.. சீக்கிரமே மறுபடியும் மீட் பண்ணலாம்.. அடிக்கடி மீட் பண்ணலாம்.. இப்போ நான் கிளம்பறேன்.. டைம் ஆச்சு.. என்னைக் காணும்ன்னு ஜைஷு பயப்படுவா..” என்றவன், அவள் திகைத்து வெறித்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு,
‘என்னை விட்டு ஓடி போக முடியுமா?
இனி முடியுமா?
நாம் இருவர் அல்ல ஒருவர் என்று தெரியுமா?” என்று பாடிக் கொண்டே நகர்ந்துச் செல்ல, அவன் கூறிய வார்த்தைகளில் தெளிந்த சுஜிதா, தொய்ந்து அமர்ந்தாள்..