உயிரோவியம் நீயடி பெண்ணே – 16

உயிரோவியம் நீயடி பெண்ணே – 16
16
கனவில் கூட எதிர்ப்பார்க்காத நிகழ்வு அது. தனது கண் முன்னால் சூர்யா இருப்பதை நம்ப முடியாமல் திகைத்து சிலையென நின்றிருந்தாள். அதுவும் அவன் தன்னிடம் பேசிவிட்டுச் சென்றதில், தனது சக்திகள் எல்லாம் வடிந்தது போல தொய்ந்து அமர்ந்தாள். அவனிடம் தான் என்ன எதிர்ப்பார்த்தோம், எதிர்ப்பார்க்கிறோம் என்றே புரியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.
சில நொடிகளில் மூளை மெல்ல வேலை செய்யத் தோன்றியதும் அவளுக்கு முதலில் தோன்றியது சூர்யாவின் நடவடிக்கை. தன்னைப் பார்த்தவன் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தது வேறு அவளது மனதினில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது..
அவன் இயல்பாக பாடிக் கொண்டே செல்ல, அந்தப் பாடலின் பொருள் புரிந்தவளோ, அப்படியே மண்ணில் அமர்ந்து, போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது கண்களில் கண்ணீர் வழிய, ‘சூர்யா..’ இதயத்தின் ஒவ்வொரு செல்களும் அவனது பெயரை உச்சரிக்க, மூளையின் செல்களோ, அவசரமாக அவனது உருவத்தைப் பதிவிடத் துவங்கி இருந்தது.. தனது கண்களைத் துடைத்துக் கொண்டவள், இத்தனை வருடங்களுக்குப் பிறகு, கனவாக அல்லாமல், நிஜத்தில், தனது கண்களின் முன்னால் நிற்கும் அவனை இமைத் தட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..
இமைத் தட்டி விழித்தால், கனவாக மறைந்து விடுவானோ என்ற நடுக்கம்.. அவனது அருகாமையும், குரலும் அவளது உள்ளுக்குள் அதிர்வலைகளை உற்பத்தி செய்திருக்க, “சீக்கிரம் மீட் பண்ணலாம்..” என்ற வார்த்தைகள் ஏனோ தித்தித்தது..
அவனுக்குத் திருமணம் ஆனதை மறந்து, அவனைச் சந்திக்கும் தருணத்தை எதிர்நோக்கத் துவங்கி இருந்தது மனது.. ‘சூர்யா.. என் சூர்யா.. என்னை இன்னும் மறக்கல..’ மனதின் கூக்குரல், அந்த அலைகலின் இரைச்சலை விட அதிகமாய் கேட்க, தலையைக் கோதிக் கொண்டே, தன்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டு செல்லும் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“ராஜிம்மா.. சூர்யா..” சிறு குழந்தையென அவனைக் கைக் காட்டிச் சொல்ல, ராஜி அவளது தலையைத் தனது வயிற்றோடு அணைத்துக் கொண்டார்..
அவரது இடையைக் கட்டிக் கொண்டவள், “ராஜிம்மா.. நான் கனவு எதுவும் காணலையே..” என்று திணற, அவளது தலையை வருடிக் கொடுத்தவர்,
“ஆமாடா.. சூர்யா தான்.. உன்னோட சூர்யாவே தான்.. நீ கனவு எதுவும் காணலைடா.. அவன் நிஜமா தான் உன் உன்கிட்ட பேசிட்டு போறான்..” தான் பெறாத மகளது வாழ்வு சரியாகி விடும் என்ற மகிழ்ச்சியில், அவரது தொண்டை அடைக்க, இருவரின் மனநிலையையும் புரிந்த ராமச்சந்திரன்,
“வாடா சுஜி.. நாம அங்க ஓரமா உட்கார்ந்துக்கலாம்.. எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கறாங்க பாரு.. முதல்ல கண்ணைத் துடைச்சிக்கோ..” என்று சமாதானம் செய்ய, கண்களைத் துடைத்துக் கொண்டு, பிரமை பிடித்தவள் போல தனது பையையும், மொபைலையும் மறந்து, அவனைக் கண்ட நிமிடத்தில் உறைந்து வாழ எண்ணியவளைப் போல காரை நோக்கி நடக்கத் துவங்க, அவளைப் பார்த்த இருவருமே திகைத்துப் போயினர்..
“சுஜி.. சுஜி..” ராஜேஸ்வரியின் குரல் காற்றில் கரைய, அவசரமாக அவளது புத்தகத்தையும் மொபைலையும் எடுத்து அவளது பையில் போட்டுக் கொண்டு பின்தொடர, ராமச்சந்திரன் அவர்களுடன் நடந்தார்..
தனது கண்முன்னால் தோன்றிய சூர்யாவின் உருவத்தை மனப் பெட்டகத்தில் சேகரிக்கத் துவங்கியவள், வேறு எந்த நினைவுமின்றி, தனது கால் போன போக்கில் நடந்துக் கொண்டிருந்தாள். அவளது கால்கள் இயந்திரம் போல அவர்கள் கார் நிறுத்தி இருந்த இடத்தை நோக்கிச் செல்ல, அவளது அமைதியைக் கெடுக்க விரும்பாத இருவரும் அவளுடன் நடந்தனர்.
காரின் அருகில் சென்றதும் திகைத்து நின்றவள், சுற்றுப்புறம் உணர்ந்து, மற்ற இருவரையும் தேட, அவளது அருகில் நின்றிருந்த இருவரையும் பார்த்தவள், பேந்த விழித்தாள்.
அவளது நிலையைப் பார்த்த ராஜேஸ்வரி, “சுஜி.. என்னடா பண்ணிட்டு இருக்க?” பதட்டமாகக் கேட்க, மறுப்பாக தலையசைத்தவள், கார்க் கதவைத் திறக்க விழைய, ராஜேஸ்வரி காரை அன்லாக் செய்யவும், அதில் ஏறி அமர்ந்து, கண்களை மூடிக் கொண்டாள்.
ராஜேஸ்வரி, ராமச்சந்திரனைப் பார்க்க, கண்களை மூடித் திறந்து தனது மனைவியை அமைதிப்படுத்தியவர் காரை எடுத்தார்.. சிறிது தூரம் கார் சென்றதும், கண்களைத் திறந்தவள், “அப்பா.. நீங்க அங்க நின்னுக்கிட்டு சூர்யா கூட தான் பேசிட்டு இருந்தீங்களா? அதனால தான் எப்பவும் போல இல்லாம அவ்வளவு நேரம் தண்ணியில நின்னுட்டு இருந்தீங்களா? சூர்யா.. உங்கக்கிட்ட பேசினாங்களா?” மெல்லிய குரலில் கேட்க, ராமச்சந்திரன் மறுப்பாக தலையசைத்தார்..
“ஹ்ம்ம்..” என்று மண்டையை அசைத்தவளுக்கு, அந்த நிமிடங்கள் உறைந்து விடாதா என்று ஏங்கிக் துவங்கினாள். அவளது அதிர்வில் இருந்து மீள நேரம் கொடுத்து, பெரியவர்கள் இருவரும் அமைதியாக வீட்டை நோக்கி சென்றனர்.
சில நிமிடங்கள் கடந்து, ராஜேஸ்வரியின் முகத்தைப் பார்த்தவள், “ம்மா.. ஜைஷு அக்கா வெயிட் பண்ணுவான்னு சொல்லிட்டு போறாங்க.. ஏன் அவங்க வைஃப் வெயிட் பண்ண மாட்டாங்களா? இவங்க ஏன் தனியா பீச்சுக்கு வந்திருக்காங்க?” மீண்டும் தனது மனதை ரணமாக்குவதற்கு, அந்தக் கேள்வியைக் கேட்க,
“ஜைஷு வெயிட் பண்ணிட்டு இருப்பான்னு அவன் தெளிவா தானே சொல்லிட்டு போறான்? அவனுக்கு கல்யாணம் ஆகி இருந்தா.. என் வைஃப் வெயிட் பண்ணிட்டு இருப்பான்னு இல்ல சொல்லிட்டு போயிருப்பான்? அப்படித் தானேங்க?” என்று தனது கணவரிடம் கேட்க, ராமச்சந்திரன் பலமாக தலையசைத்தார்.
சுஜிதா கேள்வியாக ராஜேஸ்வரியைப் பார்க்க, “நான் சொன்னது போல அவனுக்கு கல்யாணம் ஆகலைன்னு எனக்குத் தோணுது சுஜி.. உனக்கு ஏன் கொஞ்சம் கூட அப்படித் தோணவே இல்ல? உன்னை மறந்து அவன் கல்யாணம் பண்ணி இருப்பான்னு நீ நினைக்கிறது தெரிஞ்சா சூர்யா ரொம்ப ஃபீல் பண்ணப் போறான்..” அப்பொழுதும் விடாமல் ராஜேஸ்வரி கேட்க, அவரது தோளில் சாய்ந்து, கண்களை மூடிக் கொண்டவளின் மனம் அவனைச் சந்தித்த அந்த ஒரு சில நிமிடங்களை மீண்டும் அசைப்போடத் துவங்கியது..
‘சூர்யா ரொம்ப இளைச்சிட்டாங்களே? அவங்க கையில ஏதோ கட்டு போட்டு இருந்தா போல இருக்கே? ஏன் முகம் எல்லாம் அவ்வளவு டல்லா இருக்கு? என் சூர்யாவோட கண்ணும் முகமும் அப்படி சிரிச்சிட்டு இருக்குமே.. இப்போ அந்த முகம் ஏன் இவ்வளவு வாடி இருக்கு? மொத்த சோகத்தையும் தாங்கிட்டு இருக்கறது போல இல்ல இருக்காங்க.. என்ன ஆச்சு அவங்களுக்கு?’ பலகேள்விகள் மனதினில் அணிவகுக்க, அதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியவனோ, பல்வேறு எண்ணங்களின் சுழலில் சிக்கிக் கொண்டிருந்தான்.
‘லூசு.. லூசு.. அவ உன்கிட்ட வந்தும், நின்னு பேசாம இப்படி ஓடி வந்திருக்க? உன்னை எல்லாம் என்ன சொல்றது? நீ குட்டிப் பாப்பா பாரு.. ஜைஷு தேடுவான்னு சொல்லிட்டு வந்திருக்க.. அசிங்கமா இல்ல.. நீ எல்லாம் சாமியாரா போக தான் லாயக்கு.. உனக்கு எதுக்குடா லவ்வு? பத்து வருஷம் அப்பறம் கிடைச்ச புதையல் போல அவ உனக்கு திரும்ப கண்ணுல பட்டு இருக்கா.. அவளை அப்படியே தாவி கட்டிப்பிடிச்சு அடி வாங்கிட்டு வராம.. இப்படி ஓடி வந்திருக்கியே.. உன்னை எல்லாம்.. இதுக்கு தான் நீ யூ.எஸ்.ல இருந்து கிளம்பி வந்தியா?” என்று தன்னையே திட்டிக் கொண்டவன், நேராக வீட்டை நோக்கிச் சென்றான்.
தன்னைப் பார்த்ததும், அவளுடைய கண்கள் விரிந்ததையும், இத்தனை வருடங்கள் கழித்து, தன்னைப் பின் பக்கம் பார்த்தே அடையாளம் கண்டுக் கொண்டு, தனது அருகில் வந்ததையும் நினைத்தவனுக்கு, மனதில் அவ்வளவு சந்தோசம்.. தனது சந்தோஷத்தை பைக்கை ஒரு முறுக்கு முறுக்கி வேகத்தைக் கூட்டி அனுபவித்தவன், மீண்டும் வேகத்தை மட்டுப்படுத்தி, மிதமான வேகத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்..
‘என்னோட தங்கமயிலு எவ்வளவு க்யூட்டா இருக்கா.. உன்னை அப்படியே கொஞ்சணும் போல இருக்குடி.. ஹ்ம்ம்.. இப்போ உன் மேல கை வச்சேன்.. என்னை நீ கொன்னே போடுவ.. ஆனாலும் இன்னும் உன் பன்னு கன்னம் அப்படியே தாண்டி இருக்கு.. என் தங்கக் குட்டி..’ அவளைக் கொஞ்சிக் கொண்டே படிகளில் ஏறியவன், சுஜிதாவின் வீட்டின் கதவில் தொங்க விடப்பட்டிருந்த மணியை அடித்து விட்டு,
“உன்னோட சூர்யா வந்துட்டேன்..” என்றபடி, மனதினில் தோன்றிய உற்சாகத்துடன் படிகளில் தாவி ஏறி, ஜைஷுவின் வீட்டின் கதவைத் தட்டி விட்டு நின்றான்.
ப்ரதாப் கதவைத் திறக்கவும், “ஹலோ மாம்ஸ்..” என்றபடி அவனது கன்னத்தைத் தட்டிவிட்டு, வீட்டினுள்ளே நுழைய, அவனது கையில் இருந்த கட்டை கவனித்த ப்ரதாப், பதட்டத்துடன் கையை ஆராயத் துவங்கினான்.
“சூர்யா.. என்னடா இது? என்ன ஆச்சு?” பதட்டமாக அவன் கேட்க,
“ஒண்ணும் இல்ல மாமா.. சும்மா தான்..” என்றவன், தனது கையில் கட்டி இருந்த கட்டை அகற்றிக் காட்ட, அதைப் பார்த்த ப்ரதாப் திகைப்பாக அவனது முகத்தைப் பார்த்தான்.
“ஏண்டா இப்படி? வலிக்கலையா?” அவனது கையில் பொறிக்கப்பட்டிருந்த டாட்டூவில், ‘JS’ என்ற எழுத்துக்களின் நடுவில் ECG அலைவரிசை போல இருப்பதைப் பார்த்துக் கேட்க, சூர்யா மறுப்பாக தலையசைத்தான்.
“சிவந்து இருக்கேடா? ஒண்ணும் ஆகாதா? என்னடா இது தேவை இல்லாத வேலை?” பதட்டமாக ப்ரதாப் கேட்க,
“இன்னைக்கு ஒரு நாள் அப்படி தான் இருக்கும் மாமா.. நாளைக்கு சரியா போயிடும்..” என்று சொல்லிக் கொண்டே, துவாலையை எடுக்க, அவனைப் பார்த்துக் கொண்டிருந்த ஜைஷ்ணவி,
“அப்படியே எல்லாம் தெரிஞ்சவன் போல பேசாதே.. இப்போ எதுக்கு இப்படி பண்ணி இருக்க? லூசாடா நீ? எப்படி வலிக்கும் தெரியுமா? ஊசி குத்தறது போல இருக்கும்ன்னு கேள்விப்பட்டு இருக்கேன்.. சிலருக்கு அலர்ஜி ஆகுமாமே.. கிறுக்காடா நீ?” என்று சத்தமிட, அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டி,
“அதுக்கு தானே போட்டேன்..” என்றவன், தனது டி-ஷர்ட்டைக் கழட்டி அவளிடம் தனது இரண்டு கைகளின் புஜத்திலும் போட்டிருந்த மற்ற நான்கு டாட்டூக்களையும், நெஞ்சில் இருந்த ஒரு டாட்டூவையும் காட்டிவிட்டு அமைதியாக குளிக்கச் செல்ல, ப்ரதாப்பும் ஜைஷ்ணவியும் வார்த்தைகள் இன்றி நின்றனர்.
அவன் குளித்துவிட்டு வந்ததும் அவனைப் பிடித்த ப்ரதாப், “என்னடா இதெல்லாம்? ஏண்டா இப்படி பண்ணிட்டு இருக்க? ஆமா.. இது என்ன இது?” அவனது நெஞ்சின் மீது பல் தடம் பதிந்தது போல இருந்ததைச் சுட்டிக் காட்டிக் கேட்க, சூர்யா அவனைப் பார்த்துக் கண்ணடித்தான்.
“அடப்பாவிகளா..” என்று வாயைப் பொத்திக் கொண்ட ப்ரதாப், சூர்யா தலையைத் துவட்டிக் கொண்டே கண்ணாடியின் முன்பு நிற்க,
“என்னடா இவ்வளவு போட்டு இருக்க? வலிக்கலையா? அதும் நெஞ்சுல..” ப்ரதாப்பின் உடல் சிலிர்த்தது..
“மனசு ரொம்ப வலிக்கும் போது இப்படி டாட்டூ போடுவேன் மாமா.. ஏதோ ஒரு வகை ஆறுதல்.. எனக்கான மருந்து.. அதும் இந்த ஹார்ட் டாட்டூவ நெஞ்சுல எங்க பேரோட குத்தின அப்பறம் மனசுல என்னவோ சொல்லத் தெரியாத அளவுக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா? அந்த அடையாளம் மறைஞ்சிடக் கூடாதுன்னு தான் அந்தத் காயம் ஆறின உடனே, அந்த வடு மேல இப்படி போட்டேன்..” என்றவன், சட்டையை அணிந்துக் கொள்ள, ப்ரதாப் அவனைப் பிடித்து அமர வைத்தான்.
“எனக்கு இதெல்லாம் பைத்தியக்காரத்தனம் தாண்டா.. உன்னோட அன்பை இப்படி குத்திக்கிட்டு நிரூபிக்கணும்ன்னு இல்ல.. அதை விடு.. இவ்வளவு நேரம் எங்கடா போன? வரும்போது உன் முகமெல்லாம் ஒரே லைட் போட்டா மாதிரி இருந்தது? என்னடா விஷயம்? திரும்பவும் இந்த டாட்டூ போட்டதுனாலன்னு சொன்ன.. உன்னை பிச்சிருவேன்..” எனவும், அவனைப் பார்த்து சிரித்த சூர்யா, தனது கையை எடுத்து நெஞ்சில் குத்தி, இதய வடிவம் போல செய்துக் காட்ட, ஜைஷ்ணவி அவனது கையில் காபியைக் கொடுத்தாள்.
“நான் என்னோட உயிரைப் பார்த்துட்டு வந்தேன்.. அதனால கூட இருக்கலாம்..” `என்று பீடிகைப் போட, அவனது முதுகில் ஒன்று போட்ட ஜைஷ்ணவி, அவனை முறைத்தாள்.
“எதுக்கு இப்படி அடிக்கிற? இரு அப்பாக்கிட்டயே சொல்றேன்..” சிறுபிள்ளைப் போல அவன் சொல்ல,
“எங்க போனன்னு சொல்லுடா.. இல்ல இப்போ உன்னை நான் கொல்லப் போறேன்..” என்ற தமக்கையைப் பார்த்துச் சிரித்தவன்,
“நான் இங்க இருந்து கிளம்பி, நேரா டாட்டூ போட்டுட்டு பீச்ல போய் நின்னுட்டு இருந்தேனா? அப்போ..” என்றவன், நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, ப்ரதாப் அவனது தோளைத் தட்டினான்.
“ஹே.. அப்போ உன்னோட கண்ணாமூச்சி ஆட்டம் முடிஞ்சதா? அப்பறம் என்ன? போய் நேரா பார்த்து பேசிட்டு வா..” சந்தோஷத்துடன் சொல்ல,
“அவ வரட்டும் நான் போய் பார்க்கறேன்.. இப்போ நாம ஹோட்டல்ல ஆர்டர் செய்து சாப்பிடலாமா? நான் அவளுக்கும் சேர்த்து, பிடிச்சதா ஆர்டர் செய்யறேன்..” என்றவன், உணவை ஆர்டர் செய்துவிட்டு, அவளது வரவிற்காக காத்திருக்கத் துவங்கினான்.
காரில் வந்துக் கொண்டிருந்தவளுக்கோ பல கேள்விகள் அணிவகுத்துக் கொண்டிருந்தது.. அவ்வப்பொழுது ராஜேஸ்வரியின் முகத்தைப் பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொள்ள, ராஜேஸ்வரி அவளது கையைத் தட்டிக் கொடுத்தார்..
“என்னடா சுஜி?” ஆறுதலாகக் கேட்க,
“ஒண்ணும் இல்ல ராஜிம்மா..” என்றவளின் அமைதியைக் குலைக்காமல், அவள் யோசிக்க அமைதியை வழங்கியபடி, வீட்டைச் சென்று அடைந்தனர்…
அவளை எதிர்ப்பார்த்து, ஜன்னலின் அருகே சூர்யா நின்றுக் கொள்ள, காரில் இருந்து இறங்கியவளின் இதயம் புதிதாகத் துடிக்கத் துவங்கியது. முதன்முதலில் தனது காதலியை எதிர்கொள்ளும் நிலையில் இருந்த சூர்யாவிற்கோ, படபடப்புத் தொற்றிக் கொண்டது..
காரில் இருந்து கீழே இறங்கியவளின் பார்வை, தன்னிச்சையாக மேலே நின்றுக் கொண்டிருந்த சூர்யாவைத் தீண்டியது. மனதினில் பொத்திப் பாதுகாத்த நினைவுகள் பசுமையோடு வளம் வரத் துவங்கியது..
அந்த நினைவுகளின் தாக்கத்தில், விழிகள் அவனிடமே ஒட்டிக் கொள்ள, நின்ற இடத்திலேயே உறைந்து நின்றாள். தன்னைக் கட்டிப் போடும் அந்த விழிகளில், பலவருடங்களுக்குப் பிறகு ஆனந்தமாக கட்டுண்டு அவன் நிற்க, இருவரின் இதயமும் அவர்களது பெயரை ஓங்கி உச்சரித்தது.
தங்களது இணையைக் கண்டுக் கொண்ட மகிழ்ச்சியில், இரு விழிகளும் ஒன்றோறொன்று பின்னிப் பிணைந்து நிற்க, சுஜிதாவின் பையை எடுத்துக் கொண்ட ராஜேஸ்வரி, மேலே நிமிர்ந்து சூர்யாவைப் பார்த்துவிட்டு, ஒரு புன்னகையுடன் படிகளில் ஏறிச் செல்ல, அவர்களது பின்னோடு வந்த ராமச்சந்திரனும் அவரைத் தொடர்ந்தார்..
நொடிகள் நிமிடங்களாகக் கடந்துக் கொண்டிருக்க, வெகுநேரமாக சூர்யாவைக் காணாது, “சூர்யா..” என்று அழைத்தபடி வந்த ப்ரதாப்பின் குரலில், தன்னிலைப் பெற்று அவன் திரும்ப, கீழே எட்டிப்பார்த்த ப்ரதாப்,
“ஓ.. தேவி தரிசனமா? நடத்துங்க நடத்துங்க..” என்று கிண்டல் செய்ய, ப்ரதாப்பின் குரலில் தன்னை மீட்டுக் கொண்டவள், வேகமாக படிகளில் ஏற, சூர்யா ப்ரதாப்பை முறைத்தான்..
“இப்போ தான் கொஞ்சம் அப்படி இப்படின்னு கண்ணும் கண்ணும் நோக்கியா பண்ணிட்டு இருந்தேன்.. அதுக்குள்ள இப்படி நந்தி போல வந்து கெடுத்தா நான் என்ன செய்யறது?” கடுப்புடன் சூர்யா கேட்க, ப்ரதாப் தோளைக் குலுக்கினான்.
“சாப்பாடு வந்திருச்சு.. மச்சானுக்கு பசிக்குமேன்னு கூப்பிட வந்தேன் பாரு.. என்னைச் சொல்லணும்… சூ..டு.. ஆறிப் போறதுக்குள்ள.. அவளுக்கு கொண்டு போய் கொடுத்து, வாங்க வேண்டியது எல்லாம் வாங்கிட்டு வா..” என்று சொல்லவும்,
சிரித்துக் கொண்டே தலையை அசைத்த சூர்யா, “ஒருத்தன் அடி வாங்கறதுல இங்க இருக்கறவங்களுக்கு என்ன சந்தோசம்டா சாமி..” ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டுக் கொண்டவன், உணவை கையில் எடுத்துக் கொள்ள,
“சூர்யா..” என்று அழைத்த ஜைஷ்ணவி, தனது கட்டை விரலை உயர்த்திக் காட்ட, தனது நெஞ்சை நீவி விட்டுக் கொண்டு, சூர்யா படிகளில் இறங்கினான்.
“இந்த ஜைஷுவுக்கு என்ன இது இருந்தா, அடி வாங்கப் போற எனக்கு கட்டை விரல காட்டி ஆல் தி பெஸ்ட்ன்னு சொல்லுவா.. தம்பி மேல கொஞ்சமாவது அன்பிருக்கா பாரு..” என்று திட்டிக் கொண்டே, அவளது வீட்டின் முன்பு சென்று நிற்க, வீடே மிகவும் அமைதியாக இருந்தது..
“என்னடா இது வீடே இவ்வளவு அமைதியா இருக்கு?” தனக்குள் கேட்டுக் கொண்டே, க்ரில்லின் வழியே மெல்ல எட்டிப் பார்க்க, ராமச்சந்திரனும் ராஜேஸ்வரியும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
“என்னடா ஆச்சு? மேடம் பத்திரகாளி அவதாரம் எடுத்துட்டாங்களா?” தனக்குள் கேட்டுக் கொண்டே, ‘ஆன்ட்டி..’ என்று மெல்லிய குரலில் அழைக்க, அவனது குரலைக் கேட்ட ராஜேஸ்வரி, வேகமாக வந்து கதவைத் திறந்தார்..
அந்த நேரம் அவனை எதிர்ப்பார்க்காதவர் திருதிருவென்று விழித்தபடி, “சூர்யா.. என்னாச்சு?” அவனது கையில் இருந்த பையையும் அவனையும் பார்க்க,
“ஒண்ணும் இல்ல. சுஜிக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தேன்.. என்னாச்சு? ஏன் ரெண்டு பேரும் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க?” அவனது இதழ்களில் ஒரு பக்கம் புன்னகை வரத் துடித்துக் கொண்டிருக்க,
“சிரிப்பு வருது இல்ல.. சிரிச்சிடு.. எங்களைப் பார்த்தா கேலியா இருக்கா?” என்று கேட்ட ராஜேஸ்வரி, அவன் சிரிக்கவும், அவனை நெகிழ்ச்சியாகப் பார்த்து,
“ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். எங்களுக்கு அது தான் வேணும்..” என்று சொல்ல, சூர்யா இசைவாக தலையசைத்தான்.
“அவ எங்க ஆன்ட்டி? வீடே இவ்வளவு அமைதியா இருக்கு.. நான் எதிர்பார்த்து வந்ததே வேறயாச்சே..” மெல்லிய குரலில் அவன் கேட்க, அவளது அறையைக் கைக் காட்டியவர்,
“உனக்கு கொழுப்பு இருக்குப் பாரு..” பத்திரம் காட்டியவர், அவன் சிரிக்கவும்,
“வந்தவ நேரா உள்ள போய் பெட்ல விழுந்துக் கிடக்கா.. நாங்க அவளை எதுவும் டிஸ்டர்ப்பும் செய்யல.. அவளைத் தனியா விட்டுட்டு கிளம்பவும் மனசு வரல.. அது தான் இப்படி உட்கார்ந்து இருக்கோம்..” என்று சொல்ல, அவரைப் பார்த்து புன்னகைத்தவன், மெல்ல அவளது அறையின் அருகே சென்று நின்றான்.
ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு, அவளது அறைக்கதவை இரண்டு முறை தட்டி, “சுஜி.. எழுந்து சாப்பிட வா..” என்று அழைக்க, அவனது குரலைக் கேட்டதும், சுரத்தின்றிக் கிடந்தவளின் காதுகள் கூர்மை பெற, அந்தக் குரல் உடலில் அதிர்வலையைக் கொடுத்தது என்பது என்னவோ உண்மை..
“சூர்யா..” மெல்ல அவள் எழுந்து அமர,
“நான் உன் கூட சாப்பிடலாம்ன்னு சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன் சுஜி.. கொஞ்சம் வெளிய வாயேன்.. எனக்கு ரொம்ப பசிக்குது.. இல்ல நான் வேணும்னாலும் தட்டை எடுத்துட்டு உள்ள வரேன்.. ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்.. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு..” அவன் சொல்லவும், பெரியவர்கள் இருவரும் அவனை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு, ஆவலாய் சுஜிதாவின் அறைக்கதவைப் பார்க்க, அத்தனை நேரம் அவனை திடீரென்று பார்த்ததில் ஸ்தம்பித்து இருந்தவள், வேகமாக அறைக் கதவைத் திறந்தாள்..
தனது முன்பு கனவாக அல்லாமல், ரத்தமும் சதையுமாக நின்றுக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்தவளுக்கு, அழுகையும் ஆத்திரமும் வெடிக்க, “நீங்க எதுக்கு இப்போ இங்க வந்து நின்னுட்டு இருக்கீங்க? என் கூட எதுக்கு சாப்பிடணும்? உங்க வைஃப் கூட போய் உட்கார்ந்து சாப்பிடுங்க..” என்று சத்தமிட, அவளது நெற்றியில் விழுந்திருந்த கற்றை முடியை உரிமையுடன் ஒதுக்கியவன்,
“அதுக்காக தானே வந்திருக்கேன்..” என, அந்தச் சொல்லில் திகைத்து அவனைப் பார்த்தாள். புருவத்தை உயர்த்தி கேள்வியாக அவளைப் பார்த்தவன்,
“முதல்ல போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா.. கடல் காத்துல முகம் எல்லாம் பிசு பிசுன்னு இருக்கு..” என்று சொல்லி, அவளது தோளைப் பிடித்து குளியறையின் அருகே விட்டுவிட்டு, வேகமாக அறையில் இருந்து வெளியில் வந்து,
“நீங்க எல்லாம் சாப்பிடாம இப்படி நேரா வந்து இருக்கீங்களே.. உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க.. நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்.. ஆர்டர் செஞ்சா லேட் ஆகிடப் போகுது..” என்று கேட்கவும்,
“அதெல்லாம் வேண்டாம் சூர்யா.. நேரா இங்க வந்ததும் ஆர்டர் பண்ணிட்டேன்.. நீ இங்க உட்காரு..” என்ற ராமச்சந்திரன், எழுந்துக் கொள்ள, மறுப்பாக தலையசைத்தவன், அவர்கள் அருகில் இருந்த சுவற்றில் சாய்ந்து, சம்மணமிட்டு அமர்ந்துக் கொள்ள, அவனது தோளைத் தட்டியவர்,
“இப்படி ஆரம்பமே அதிரடியா இறங்கி இருக்க? கொஞ்சம் பார்த்து பொறுமையா பேசு.. அவ பட்ட கஷ்டங்கள் அப்படி இல்லையா?” மெல்லக் கேட்கவும், மீண்டும் ஒரு மறுப்பான தலையசைப்புடன், அவரைப் பார்த்து புன்னகைத்தான்..
“சுஜிக்கிட்ட சில சமயம் கொஞ்சிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது.. இப்படி தான் செய்யணும்.. அப்போ தான் சொன்ன பேச்சைக் கேட்பா.. இப்போ நான் கொஞ்சி கெஞ்சிட்டு இருந்தேன்னா.. அவ சாப்பிட வர மாட்டா..” அவர் பக்கம் சாய்ந்து ரகசியமாகச் சொல்ல, ராமச்சந்திரன் ‘அப்படியா?’ என்று கேட்கவும், தலையை மேலும் கீழும் அசைத்தவன், அவளது அறையை எட்டிப் பார்க்க, அவளோ அவன் விட்ட இடத்திலேயே சிலையென நின்றுக் கொண்டிருந்தாள்.
“சுஜி.. நான் காலையில இருந்து சாப்பிடவே இல்ல.. இப்போ ரொம்ப பசிக்குது.. உன் கூட சாப்பிடலாம்ன்னு ஆசையா வந்திருக்கேன் சுஜி.. சீக்கிரம் வாயேன்..” அவன் அழைக்க, அவனைப் பார்த்து முறைத்தவள்,
“என்னை ஏன் கூப்பிடறீங்கன்னு கேட்டேனே?” சுஜிதா அங்கிருந்தே கேட்க,
“உன்னைக் கூப்பிடாம யாரைக் கூப்பிடணும்?” அவன் கேட்டு முடிப்பதற்குள்,
“உங்க வைஃப்..” பட்டென்று சொல்ல,
“அதனால தானே உன்னை கூப்பிடறேன்.. ஆமா.. அது என்ன என் வைஃப்.. என் வைஃப்ன்னு சொல்லிட்டு இருக்க? அப்போ நீ யாரு?” சூர்யா நக்கலாகக் கேட்க, சுஜிதா அவனைப் பார்த்து முறைத்தாள்.
“ஏன் முறைக்கிற? ஆமா.. நீ என் வைஃப்ன்னு யாரைச் சொல்லிட்டு இருக்க? ஹான்.. நீ எப்போவாவது என் கல்யாணத்துக்கு வந்தியா? இல்ல போட்டோ கீட்டோ பார்த்தியா?” என்று கேட்க, அவள் வெறித்துக் கொண்டிருக்கும் பொழுதே,
“எனக்கே தெரியாம என் கல்யாணத்துக்கு வந்து அட்சதை தூவி, மொய் வச்சிட்டு போனியா? நான் உன்னைப் பார்க்கவே இல்லையே? ஆனா.. உனக்கு ஒரு உண்மை புரியலையே.. என் கல்யாணம் நீ இல்லாம எப்படி நடந்து இருக்கும்? கனவுலையா?” இடக்காக அவன் கேட்க, சுஜிதா திகைத்து நின்றாள்..
“என்ன உளறர்றீங்க?” பல்லைக் கடித்துக் கொண்டே பதில் சொல்ல, அவளது அருகில் சென்று, கழுத்தில் இருந்த சங்கிலியை தனது சுட்டு விரலால் எடுத்துப் பார்த்துவிட்டு, உதட்டைப் பிதுக்கி,
“இந்த செயினை நான் உனக்குப் போடும்போது, நாம பேசினது உனக்கு நியாபகம் இருந்தா நீ அப்படி சொல்லி இருக்க மாட்ட.. நான் அப்போ விளையாட்டுக்கு சொல்லலைன்னும் உனக்குத் தெரியும்..” அவன் சொல்லவும், உதட்டைக் கடித்துக் கொண்டு அவள் தலைகுனிய,
“நீ மறக்கலன்னு எனக்குத் தெரியும்.. நானும் எதுவும் மறக்கலைப்பா.. ஒவ்வொரு நிமிஷமும் நான் நம்ம சேர்ந்திருந்த நொடிகளைத் தான் நினைச்சிட்டு இருப்பேன்.. ஆமா நீ ஏன் கல்யாணம் செய்துக்கல?” நக்கலாக அவன் கேட்க, சுஜிதா அவனை முறைத்தாள்.
“என்ன முறைக்கிற? உன்னால கல்யாணம் பண்ணிக்காம தனியா இருக்க முடியும்ன்னா.. ஏன் நான் இருக்க மாட்டேனா? இல்ல என்னைப் பத்தி நீ புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா?” அவனது குரலில் வருத்தம் இழையோடவும், சுஜிதா அவனை நிமிர்ந்துப் பார்க்க, ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்டவன்,
“நம்ம பஞ்சாயத்தை அப்பறம் வச்சிக்கலாம்.. இப்போ நம்மளால பெரியவங்க ரெண்டு பேரும் சாப்பிடாம இருக்காங்க.. நேரம் ஆகுது.. முகத்தை கழுவிட்டு வா.. நாம அப்பறம் பேசித் தீர்த்துக்கலாம்..” என்று சொல்ல, பெரியவர்களின் பெயரை இழுத்ததும், அமைதியாக குளியறைக்குள் புகவும், ‘உஃப்..’ என்று நின்றிருந்த பெருமூச்சை இழுத்துவிட்டவன், அவளது டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்த சென்ட்டை எடுத்து தன் மீது தெளித்துக் கொண்டு,
“எங்கேயும் காதல்.. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச..” பாடிக் கொண்டே வந்தவனை இருவரும் கவலையுடன் பார்க்க, அவர்களைப் பார்த்து இதமாக புன்னகைத்தவன்,
“சீக்கிரம் எல்லாம் சரி பண்ணிடறேன் ஆன்ட்டி.. நீங்க கவலைப்படாதீங்க.. வாங்க சாப்பிடலாம்..” என்றபடி, கிச்சனுக்குச் சென்று, தட்டுகளை எடுத்து வைக்க, அவனுக்கு ராஜேஸ்வரி உதவி செய்யத் துவங்கினார்.. எந்தத் தயக்கமும் இன்றி சுஜிதாவின் வீட்டில் சூர்யா பொருட்களை எடுப்பதைப் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ராமச்சந்திரன், டேபிளில் தாளம் போடத் துவங்கினார்.
தன்னை சுத்தப்படுத்தி, உடை மாற்றி வந்தவள், சூர்யாவின் எதிர்புறமாக, ராஜேஸ்வரியின் அருகே அமர்ந்துக் கொண்டாள். சூர்யா கொண்டு வந்திருந்த தட்டில் தனதைத் தேடிய பிறகு, சூர்யாவிடம் அந்த தட்டைப் பார்த்தவள், “அது என் தட்டு..” என்று சிறுபிள்ளைப் போலச் சொல்ல,
உணவுப் பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டிருந்தவன், அதை அப்படியே வைத்துவிட்டு, அந்தத் தட்டை ஆராய, தனது உதட்டைக் கடித்துக் கொண்டு அமைதியானாள்.
ராஜேஸ்வரி கேள்வியாகப் பார்க்க, “ஒண்ணும் இல்ல..” என்றபடி சூர்யாவை இறைஞ்சும் பார்வை பார்த்தவள், அவசரமாக மற்றொரு தட்டை எடுத்து வைத்துக் கொண்டு, அவன் பாதி பிரித்து வைத்திருந்த பொட்டலத்தை எடுத்து பரிமாறத் துவங்கினாள். அவளைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள, நால்வருமாக அமைதியாக உண்ணத் துவங்கினர்.
“ஏன் சுஜி.. உனக்கு எப்பவுமே உன்னைச் சுத்தி நான் எங்கையாவது இருந்தா நான் பார்க்கறா மாதிரியே தோணுமே.. இப்போ உன் பக்கத்துல தான் இருக்கேன்னு தோணவே இல்லையா?” அவன் சட்டென்று கேட்டதில் சுஜிதாவிற்கு புரையேற, அதைப் பார்த்த ராஜேஸ்வரியின் வாய்ப் பூட்டு அவிழ்ந்தது.
“அதெல்லாம் அவளுக்கு எப்படி தோணாம இருக்கும்? நீ வந்த அன்னைக்கே உன் பெட்டியில இருந்த டேக் தான் அவ கையில கிடைச்சிடுச்சே.. அதோட அவளுக்கு யாரோ அடிக்கடி தன்னைப் பார்த்துட்டே இருக்கறது போல இருந்துச்சாம்..” கதைச் சொல்லத் துவங்க,
“ரா..ஜீ..ம்மா..” சுஜிதா பல்லைக் கடிக்க, சூர்யா அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தி, உதட்டைப் பிதுக்கிவிட்டு, வேகமாக உண்ணத் துவங்கினான்.
அவளுக்குப் பிடித்த உணவை இன்னமும் மறக்காமல், அவன் வாங்கியது ஒரு பக்கம் மனதிற்குச் சில்லென்ற உணர்வைத் தர, சுஜிதாவின் கண்கள் சூர்யாவை தழுவி மீண்டது..
சட்டென்று நினைவு வர, அவனது கையில் கட்டிடப்பட்டிருந்த இடத்திற்கு அவளது பார்வைச் செல்ல, அங்கு இருந்த டாட்டூவைப் பார்த்தவளின் கண்கள் திகைப்புடன் அவனது முகத்தில் பதிந்தது..
“ராஜிம்மா..” அருகில் இருந்த ராஜேஸ்வரியின் கையைச் சுரண்ட, அவர் திரும்பிப் பார்க்கவும், சூர்யாவின் கையைக் கண்களால் சுட்டிக் காட்டினாள்.
அதைப் பார்த்த ராஜேஸ்வரியும் திகைத்து, “சூர்யா.. கையில என்ன அது?” என்று கேட்க, தனது கையைத் திருப்பிப் பார்த்துவிட்டு, சுஜிதாவைப் பார்த்தவன்,
“இது இன்னைக்கு புதுசா போட்டதால அப்படி இருக்கு. நாளைக்கு சரியா போயிடும்..” என்றவன், சுஜிதா அவனைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே, உண்டு முடித்து எழ, சரியாக அந்த நேரம் ப்ரதாப் அவனுக்கு அழைத்தான்.
“டேய் மச்சான்.. எங்கடா காணாம போன?” எடுத்ததும் ப்ரதாப் கேட்க,
“ஹஹஹா.. நான் இங்க தான் சுஜி கூட இருக்கேன் மாமா.. இப்போ தான் சாப்பிட்டேன்.. கொஞ்ச நேரத்துல வரேன்..” என்றவன், சுஜிதாவைப் பார்க்க, அவளோ குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்..
அவளது தலையை மெல்ல வருடியவன், அவள் முன்பு அமர்ந்து, “நான் இனிமே இங்க தான் இருக்கப் போறேன்..” என்று சொல்லவும், சுஜிதா திகைத்து அவனைப் பார்க்க,
அவளைப் பார்த்து புன்னகைத்து, “இங்கன்னா.. இந்தியால தான் அதுவும் சென்னைல தான் இருக்கப் போறேன்னு சொல்ல வந்தேன்.. நீ கிடைக்கணும்ன்னு தான் இத்தனை நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். கிடைச்ச உடனே கிளம்பி வந்துட்டேன்.” என்று சொன்னவன்,
“எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.. மெண்டலி நான் ரொம்ப ட்ரைன்னா இருக்கேன்.. இன்னைக்கு ரொம்ப லாங் டே.. போய் நல்லா தூங்கிட்டு காலையில ப்ரெஷ்ஷா வரேன்..” என்றபடி அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு, தனது பாக்கெட்டில் இருந்த கிஸ்சஸ் சாக்லேட்களை எடுத்து அவளது கையில் வைத்துவிட்டு,
“பார்க்கலாம் ஆன்ட்டி.. பார்க்கலாம் அங்கிள்.. ஸ்வீட் ட்ரீம்ஸ் சுஜி..” விடப்பெற்றுக் கிளம்ப, சுஜிதா போகும் அவனையேப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.