உயிரோவியம் நீயடி பெண்ணே – 17

உயிரோவியம் நீயடி பெண்ணே – 17
17
வாய்க்கு வந்த பாடலை முணுமுணுத்துக்கொண்டே படிகளில் தாவி ஏறி வந்தவனைப் பார்த்த ப்ரதாப், “என்ன சார் சந்தோஷமா வரீங்க? டாக்டரம்மா ஊசி போடலையோ?” கேலியாகக் கேட்க, தலையை இடம் வலமாக அசைத்தவன், அவனைப் பிடித்து ஒரு சுற்றுச் சுற்றி,
“ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் சுஜி கூட உட்கார்ந்து சாப்பிட்டேன் மாமா.. அதுவும் அவ கூட சண்டைப் போட்டுக்கிட்டே சாப்பிட்டது ரொம்ப சந்தோஷமா இருந்தது..” மனம் நிறைந்துச் சொன்னவன், தனது அறைக்குச் சென்று கட்டிலில் விழுந்து, ஒரு தலையணையை அணைத்தபடி கண்களை மூடிக் கொண்டான்..
மூடிய விழிகளுக்குள் அவளது ஒவ்வொரு அசைவுகளும் மனதினில் வந்து மோத, அவனது உதடுகள் புன்னகையில் விரிந்தது..
“என்ன சார் ட்ரீம் எல்லாம் பலமா இருக்கு? சுஜி சாதாரணமா பேசினாளாடா? சீக்கிரம் கல்யாண தேதியை பிக்ஸ் பண்ணிடலாமா?” ஆவலாக ஜைஷ்ணவி கேட்க,
“உனக்கு கொஞ்சம் பேராசை தான்.. அதுக்கு இன்னும் கொஞ்சம் டைம் ஆகும். ரொம்ப நாளைக்கு அப்பறம் மனசு ரொம்ப லைட்டா இருக்குடி அக்கா..” என்றவன், கண்களைத் திறந்து அவளைப் பார்த்து புன்னகைத்து, அவளது தலையை கலைத்துவிட்டான்.
“எரும.. எரும.. எதுக்குடா தலையை கலைக்கிற?” என்று அவனை அடிக்க, எழுந்து அமர்ந்த சூர்யா அவளது கைகளைத் தடுக்க, இருவரும் மனம் விட்டுச் சிரித்து சிறுபிள்ளையென விளையாடினர். ப்ரதாப் தனது மனைவியைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு,
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்டாட்டியை அடிப்ப? கீழ உன் பொண்டாட்டி கிட்ட போய் அடி வாங்கு..” என்றபடி, ஜைஷ்ணவியை இழுத்துக் கொண்டு அவன் செல்ல,
“பொசசிவ்வு? பொச பொச..” என்று கிண்டல் செய்ய, ப்ரதாப் பழிப்புக் காட்டிவிட்டு நகர,
“குட் நைட் மாமா..” என்ற கேலிக் குரல் அவர்களைப் பின்தொடர்ந்தது..
மறுநாள் காலையில், சுஜிதாவைக் காணும் ஆவலில் வேகமாக எழுந்தவன், அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருக்க, பிரதாப் அவனைக் கேள்வியாகப் பார்த்தான். அவனைப் பார்த்துக் கொண்டே, காலை உணவை எடுத்துக் கொண்டு சூர்யா படிகளில் இறங்க, “பாரேன் உன் தம்பி அடி வாங்க என்ன வேகமா போகுதுன்னு.. இருந்தாலும் அவனுக்கு தைரியம் ரொம்ப அதிகம் தான்..” ப்ரதாப் கேலி செய்ய, அவனது மூக்கோடு மூக்கை உரசிக் கொண்டே,
“அவன்.. அவன் பொழப்பை பார்த்துப்பான்.. இப்போ நாம நம்ம வேலையைப் பார்ப்போமா? அவனை சீண்டறதை விட்டுட்டு சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க.. ஹாஸ்பிடல் போகணும்.. இன்னைக்கு சண்டேங்கறதால சீக்கிரம் வரச் சொல்லி அவ மெசேஜ் அனுப்பி இருக்கா. நம்ம டர்ன் அவளை ஹாஸ்பிடல்ல பார்க்க வேண்டியது இருக்கு..” கேலியாக சொல்லிக் கொண்டே எம்பி அவனது கன்னத்தைக் கடித்து விட்டு, சமயலறையில் புகுந்துக் கொள்ள,
அவளைத் தொடர்ந்து சென்று அணைத்துக் கொண்டவன், “உன் தம்பி ஏற்கனவே என்னை ஓவரா ஓட்டிட்டு இருக்கான்.. இப்போ மட்டும் வந்தான்னு வை.. அவ்வளவு தான்.. பொங்கி பொங்கல் வைப்பான்..” என்று கேலி செய்ய,
“அதெல்லாம் அவன் இப்போ வர மாட்டான். அவன் அடிவாங்கிட்டு வர எல்லாம் இன்னும் லேட் ஆகும்.. உங்க மச்சானைப் பத்தி இன்னும் புரியலையா?” அவனுடன் சேர்ந்து ஜைஷ்ணவியும் கேலி செய்ய,
“ஹஹஹா.. அக்காவே கேலி செய்யறதை என் மச்சான் கேட்டா அவ்வளவு தான்.. சரி.. நான் போய் குளிச்சிட்டு வரேன்.. கோவிலுக்கு போயிட்டு நாம ஹாஸ்பிடல் போகலாம்.. இல்ல அவனோட சேர்ந்து நாமளும் பெஞ்ச் மேல நிக்கணும்..” என்று சொன்னவன், குளியறைக்குள் புகுந்துக் கொள்ள, ஜைஷ்ணவி ஒரு பெருமூச்சுடன் தனது ரிப்போர்ட்டுகள் அனைத்தையும் எடுத்து வைத்தாள்.
படிகளில் இறங்கிச் சென்ற சூர்யாவின் இதழ்கள் மெல்லிய புன்னகையை சிந்திக் கொண்டிருந்தது.. முன்தினம் இரவு அவளுடன் அமர்ந்து உண்டது, அவளது கண்கள் அவனது முகத்தில் அடிக்கடி படிந்து விலகியதில் அவனுக்கு மனதினில் அவ்வளவு நிம்மதி.. அந்தப் பார்வைக்காக ஏங்கிய வருடங்கள் எத்தனை? அதற்கான தவிப்புகள் எவ்வளவு? அத்தனை தவிப்புகளும், அவளது ஒரே பார்வையில் காணாமல் போன்றதொரு உணர்வு..
இரவில் சுகமானதொரு உறக்கம்.. மனதினில் தோன்றிய உற்சாகத்துடன் அவளுக்கு காலை உணவை எடுத்துக் கொண்டு படிகளில் இறங்கியவனுக்கு, பூட்டிய கதவே வரவேற்றது..
மனதினில் அவ்வளவு நேரம் எழுந்திருந்த ஆவல் வடிய, அவனது முகம் சுருங்கியது.. ‘காலையிலேயே சாப்பிடாம இவ எங்க ஹாஸ்பிடல் கிளம்பிப் போயிட்டா? ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே..’ மனதினில் நினைத்துக் கொண்டே, வெளியில் தொங்கிக் கொண்டிருந்த பால் பையைப் பார்த்தான்.
அந்தப் பால் எடுக்கப்படாமல் இருப்பதைப் பார்த்து, “ஓ.. மேடம் இன்னும் பால் கூட எடுக்கலையா? அப்போ காலையிலேயே ஹாஸ்பிடல்க்கு போயிட்டாளா? அதுவும் சண்டேவும் அதுவுமா அவ்வளவு சீக்கிரம்?” என்று நினைத்துக் கொண்டு, வேகமாக மாடிக்குச் செல்ல, அங்கு ப்ரதாப் அவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டவன் தலையில் அடித்துக் கொண்டு, அவளது வீட்டின் சாவியை எடுத்துக் கொண்டு புலம்பிய படி கீழே வந்தான்.
“ஒரு ஆளு சிக்கிட்டான்னு இவங்களுக்கு எவ்வளவு கொண்டாட்டம்? நம்மளை காமெடி பீசா இல்ல வச்சு சிரிச்சிட்டு இருக்காங்க..” என்று புலம்பிக் கொண்டே, பையில் இருந்த பாலை எடுக்க, அதில் ஒரு பேப்பர் ஒட்டிக் கொண்டு வந்தது..
“காலைல ஹாஸ்பிடல்க்கு போக வேண்டிய வேலை இருக்கு.. போயிட்டு வந்து சாப்பிடறேன்.. ஏற்கனவே லேட் ஆகிடுச்சு.” மொட்டையாக ஒரு குறுஞ்செய்தி இருக்க, அதைப் பார்த்த சூர்யாவிற்கு ஒரு பக்கம் வலி எழுந்தாலும், மறுப்பக்கம்,
‘நான் தான் வருவேன்னு என்னை நல்லா புரிஞ்சி வச்சிருக்கடி என் சுஜிக்குட்டி.. நீ எங்க போனா என்ன? இதோ ஐம் கம்மிங்..’ மனதினில் அவளிடம் சொன்னவன், தன்னை அந்த அளவு அவள் புரிந்து வைத்திருப்பதில் எட்டிப்பார்த்த சிறு சுணக்கமும் ஓடிப் போக, பாலை ப்ரிட்ஜில் வைத்துவிட்டு, அவளது டப்பாவை எடுத்துக் கொண்டு நேராக ஹாஸ்பிடலுக்குச் சென்றான்..
ஹாஸ்பிடலுக்குச் சென்றவன், அவளது அறை அமைதியாக இருக்கவும், ‘ஒருவேளை ஆப்ரேஷன் தியேட்டர்ல இருப்பாளோ?’ என்ற யோசனையுடன் ராஜேஸ்வரிக்கு அழைக்க, அவரது அழைப்பும் எடுக்கப்படாமல் போய்க் கொண்டிருக்க,
‘அப்படித் தான் போல..’ என்றபடி காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்து அவளுக்காக காத்திருக்கத் துவங்கினான்.
அவனைப் பார்த்து விட்டு, அவனது அருகில் வந்த அவளது நர்ஸ், “சார்.. நீங்க யாரைப் பார்க்கணும்?” என்று கேட்க,
“டாக்டர் சுஜிதாவைப் பார்க்கணும்.. அவங்க எங்க இருக்காங்க?” என்று கேட்க, அவனது கையில் இருந்த டப்பாவையும், அவனையும் பார்த்துவிட்டு,
“அவங்க ஓ.டி.ல இருக்காங்க சார்.. அனேகமா ஆப்ரேஷன் முடிச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்கன்னு நினைக்கறேன்..” என்று சொல்லவும்,
“தேங்க்ஸ்..” என்றபடி சூர்யா மீண்டும் தனது மொபைலைப் பார்க்கத் துவங்க, சற்று நகர்ந்து விட்டு, மீண்டும் அவனது அருகில் வந்தவள், ஆவல் உந்த,
“சார்.. அவங்க வந்தா உங்களை யாருன்னு சொல்றது?” என்று கேட்க,
“ஹ்ம்ம்.. சூர்யான்னு சொல்லுங்க..” என்றவன், அந்தப் பெண்ணின் கண்கள் விரியவும், கேள்வியாகப் பார்த்து புருவத்தை உயர்த்த,
“நீங்க.. நீங்க.. மேடமோட வுட்பீ தானே.. ஜெயசூர்யா சார்.. யூ.எஸ்.ல இருந்து வந்திருக்கீங்க தானே?” மகிழ்ச்சியும், ஆவலுமாக அந்தப் பெண் கேட்க, அவள் கேட்ட விதத்தில் முதலில் திகைத்த சூர்யா, பின் மெல்ல புன்னகைத்து, ‘ஆம்’ என்று தலையசைத்தான்.
அவனுக்கு தன்னைப்பற்றி மருத்துவமனையில், இந்த அளவிற்கு சுஜிதா தெரிய விட்டு இருப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி.. எழுந்து அங்கேயே ஒரு குத்தாட்டம் போட்டு துள்ளிக் குதிக்க வேண்டும் போல வெறியே எழ, தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்தான்.
“ஓ.. உங்க மேடம் என்னைப் பத்தி சொல்லி இருக்காங்களா?” ஆவலாக சூர்யா பேச்சுக் கொடுக்க,
“ஹான்.. சொல்லி இருக்காங்களே.. ஒருதடவ ஒரு டாக்டர் அவங்க கல்யாண இன்விடேஷன் கொடுத்துட்டு, மேடம்கிட்ட உங்களுக்கு எப்போ கல்யாணம்ன்னு கேட்ட பொழுது உங்களைப் பத்திச் சொன்னாங்க.. அப்படித் தான் தெரியும்.. வருஷத்துல பத்து நாள் வெகேஷனுக்கு வெளிநாட்டுக்கு உங்களைப் பார்க்க வருவாங்களே..” அந்த நர்ஸ் சொல்லவும், தலையை அப்படியும் இப்படியும் அசைத்து,
‘அடிப்பாவி.. லீவ்க்கு என்னைப் பார்க்க வரேன்னு தான் சொல்லிட்டு வந்திருக்கியா? இல்ல இவங்களா அப்படி நினைச்சுக்கிட்டு அப்படிச் சொல்றாங்களா?’ தனக்குள் கேட்டுக் கொண்டவன், அதற்கு எந்த பதிலையும் சொல்லாமல், புன்னகைத்து வைக்க, அந்த நேரம் அவனது செல்போன் குரல் கொடுத்தது..
அந்தப் பெண்ணைப் பார்த்து தலையசைத்துவிட்டு, தனது போனை எடுத்தவன், அழைத்திருந்த விமலிடம் பேசிக் கொண்டிருக்க, காட்டுத் தீ போல அவன் வந்திருக்கும் விஷயம் அங்குப் பரவத் துவங்கியது. அனைவரின் பார்வையும், பாராதது போல அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது..
அவனது பின்னால் இருந்த போஸ்டர்கள் கண்ணில் படவும், விமல் அவனைக் கேலி செய்துக் கொண்டிருக்க, “அடேய்.. போதும் ஓவரா ஓட்டிட்டு இருக்க.. இங்க மேடம் வந்து என்னை பிச்சுப் போடாம இருந்தா சரி.. நானே கொஞ்சம் பீதியில தான் இருக்கேன்..” சிரித்தபடி அவன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்..
‘ஹையோ.. செம ஸ்மார்ட்டா இருக்கார் இல்ல.. இப்படி ஒரு பிசி நாளுல ஒரு ரெண்டு பேர் உட்கார்ந்து சிரிச்சு பேசிட்டு இருந்தா போதும்.. நம்ம டயர்ட் எல்லாம் காணாம போயிடும்.. கண்ணுல குளுகுளுன்னு பார்த்துக்கிட்டே வேலை செஞ்சிடலாம்..’ இரண்டு பெண்கள் பேசிக் கொண்டே படிகளில் ஏற, அப்பொழுது படிகளில் ராஜேஸ்வரியுடன் இறங்கிக் கொண்டிருந்த சுஜிதா, அவர்கள் பேசுவதைக் கேட்டு ராஜேஸ்வரியை கேலியாகப் பார்த்தாள்.
“இன்னைக்கு யாரோட ஹஸ்பன்ட் இவங்க கண்ணுல சிக்கி இருக்காங்கன்னே தெரியலையே.. இவங்க பார்த்தே இல்ல அவரைக் கரைச்சிடுவாங்க.. ஹையோ பாவம் அவங்க வைஃப்..” என்று கேலி செய்துக் கொண்டே வர, அதைக் கேட்ட ராஜேஸ்வரியும்
“பாவம் சின்னப் பிள்ளைங்க. ஏதோ வேலை செய்யற களைப்பு தெரியாம சைட் அடிச்சிட்டு போறாங்க.. விடு.” என்றபடி சிரித்தார்..
அப்பொழுது சுஜிதாவின் அசிஸ்டன்ட் நர்ஸ் சூர்யாவிற்கு உபசரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள், ராஜேஸ்வரியைப் பார்த்து முழிக்க, ராஜேஸ்வரியின் புன்னகை விரிந்தது.
“ஹாஹஹா.. அவங்க கரைய வைக்கிறது உன் புருஷனைப் போலவே.. உபசாரம் எல்லாம் பலமா இருக்கு..” என்று கேலி செய்துவிட்டு, வேகமாக சூர்யாவின் அருகில் செல்ல, விமலுடன் பேசிக் கொண்டிருந்தவன், அவரை நிமிர்ந்துப் பார்த்து புன்னகைத்து விட்டு, விமலிடம் விடைப்பெற்று போனை வைத்தவனின் அருகில் அமர்ந்தவர்,
“என்ன காலையிலேயே இங்க உட்கார்ந்து காபி குடிச்சிட்டு இருக்க? என்ன விஷயம்? ஜைஷ்ணவி காபி போட்டுத் தரலையா?” என்று கேலி செய்ய,
“அவ போட்டுத் தரலைனாலும் நானே போட்டு குடிச்சிடுவேன்.. இது சுஜிதாவோட பியான்சி ஸ்பெஷல்..” என்று கண்சிமிட்ட, ராஜேஸ்வரி உரிமையுடன் அவனது தோளில் ஒன்று வைத்தார்..
“பாருடா… இது நல்லா இருக்கே.. அப்போ அடிக்கடி வந்து குடிச்சிட்டு போ..” என்று சிரிக்க, அவர்களை அதிசயமாகப் பார்த்துக் கொண்டே சுஜிதா அவர்களது அருகில் வந்தாள்.
“சுஜி காலையில சாப்பிடாம வந்துட்டா ஆன்ட்டி.. அது தான் அவளுக்கு டிபன் எடுத்துட்டு வந்தேன்.. பார்த்தா அவ தியேட்டர்ல இருக்கான்னு சொன்னாங்க.. அது தான் அப்படியே வெயிட் பண்ணி கொடுத்துட்டு போகலாம்ன்னு..” அவன் சொல்லி முடிக்கும்பொழுது, ‘ஹுக்கும்..’ சுஜிதா தொண்டையைக் கணைத்தாள்.
சூர்யா நிமிர்ந்துப் பார்க்கவும், “நான் தான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடறேன்னு சொல்லி பால் பேக்ல ஸ்லிப் போட்டு இருந்தேனேம்மா..” என்று ராஜேஸ்வரியிடம் பதில் சொல்ல,
“போயிட்டு வந்துடறேன்னு போட்டு இருந்த? எப்போன்னு போட்டியா? காலையில ரொம்ப நேரம் எல்லாம் சாப்பிடாம இருக்கக் கூடாது.. முதல்ல என் நம்பரை நோட் பண்ணிக்கோ.. அதுல மெசேஜ் அனுப்பு.. நான் பார்த்துட்டு அதுக்கு தகுந்து ப்ளான் பண்றேன்..” என்று சொல்லிவிட்டு, அவள் சிலையென நின்றுக் கொண்டிருக்கவும்,
“அந்த பேப்பர் மேலேயே பால் போட்டு அது ஈரம் ஆகி.. அதை படிக்கிறதுக்குள்ள ரொம்ப கஷ்டமா போச்சு.. அது தான் கேட்கறேன்.. நீ உன் நம்பரைத் தரலைனாலும் என் நம்பரை நோட் பண்ணிக்கோ..” என்றவன், தனது நம்பரை வேகமாகச் சொல்ல, சுஜிதா அவனைத் திகைப்புடன் பார்த்தாள்..
“என்ன பார்க்கற?” புரியாமல் அவன் கேட்க,
“ஒண்ணும் இல்ல.. நான் இனிமே மெசேஜ் பண்றேன்..” என்றவளைச் சுரண்டிய ராஜேஸ்வரி, அங்கு அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சில நர்ஸ்களைக் கண் காட்ட, சுஜிதா சூர்யாவைப் பார்த்தாள்.
“உள்ள வாங்க.. இங்க எல்லாருமே உங்களை வேடிக்கைப் பார்த்துட்டு இருக்காங்க..” என்றபடி தனது அறைக்குள் நுழைய,
“அது தான் நான் வந்ததுல இருந்தே பார்த்துட்டு இருக்காங்களே.. எனக்கும் கொஞ்சம் டைம் பாஸ் ஆச்சு ஆன்ட்டி.. நாளைக்கும் காபி குடிக்க வரலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்..” என்று சொல்லிக் கொண்டே அவள் பின்னோடு நுழைய, ராஜேஸ்வரி சிரிக்க, சுஜிதாவின் பார்வை அனலைக் கக்கியது..
அவன் ராஜேஸ்வரியைப் பார்த்து இளித்து வைக்க, “உனக்கு வாய் கொழுப்பு இருக்கு பாரு..” என்றுபடி தோளைத் தட்ட, மீண்டும் அவளிடம் இருந்து ஒரு கனைப்புச் சத்தம்..
இருவரும் அவளைப் பார்க்க, “சாரி.. நான் அக்காவுக்கு காலைல எதுவும் வேண்டாம்ன்னு மெசேஜ் செய்திருக்கணும்.. மறந்துட்டேன்.. கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்.. ராஜிம்மா கால் செய்யவும் தான் எழுந்து அவசரமா ஓடி வந்தேன்..” அவனிடம் விளக்கம் சொல்லிவிட்டு அவன் கொண்டு வந்த டப்பாவைப் பார்க்க, அதை அவளது டேபிளில் வைத்தவன்,
“அவ இங்க வர கிளம்பிட்டு இருக்கா.. அதனால நான் தான் எடுத்துட்டு வந்தேன்.. சாப்பிட்டு அடுத்த வேலையைப் பாரு.. ரொம்ப டைம் ஆச்சு..” எனவும்,
“ஆமா.. எனக்கும் பசிக்குது.. நீ சாப்பிட்டயா?” சூர்யாவிடம் கேட்டபடி ராஜேஸ்வரியும் அமர,
“ஹ்ம்ம்.. போய் தான் சாப்பிடணும் ஆன்ட்டி.. எனக்கு பசிக்கல.. காலையில எப்பவுமே போற போக்குல எதையாவது சாப்பிட்டு ஆபிஸ் போவேன்.. அப்படியே பழகிப் போச்சு..” என்ற சூர்யாவைப் பார்த்துக் கொண்டே கையைக் கழுவிக் கொண்டு அமர்ந்தவளுக்கு, தனது முந்தய வழக்கமாக, இயல்பாக டப்பாவைத் திறந்து வைத்தான்..
“யாரோ எனக்கு பெட்டி தூக்க எல்லாம் முடியாதுன்னு சொன்னாங்க.. இப்போ டப்பா தூக்கிட்டு வந்து இருக்காங்க ராஜிம்மா..” நக்கலாக தனது உணவுப் பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரியிடம் சொல்ல, அவள் சொன்னதைக் கேட்ட ராஜேஸ்வரி அவளை முறைக்க, சூர்யாவோ சுஜிதாவின் எதிரில் இருந்த சேரில் அமர்ந்து, கையைக் கட்டிக் கொண்டு, அவளை கூர்மையுடன் பார்த்தான்.
அவனது பார்வையில் சுஜிதா உதட்டைக் கடித்துக் கொண்டு தலைகுனிய, அவளது முகத்தை நிமிர்த்தியவன், “ஆமா அப்போ ஏதோ கோபத்துல சொல்லிட்டேன் தான்.. அப்படி சொன்னது தப்பு தான்.. அன்னைக்கு செஞ்சதுக்கு, பேசினதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு பத்து வருஷமா தண்டனையை அனுபவிச்சிட்டேன்.. கொடுத்த தண்டனை போதாதுன்னு தோணிச்சுன்னா உன் வார்த்தையால என்னைக் கொல்லு.. வாங்கிக்கறேன்.. அதைத் தவிர எனக்கு வேற என்ன செய்யறதுன்னு தெரியல? கொட்டின வார்த்தையை அல்ல முடியாது.. ஒரு டைம் மிஷின் இருந்தா சொல்லு.. அதைப் போய் திருத்தி சரிப்பண்ணிட்டு வரேன்.. அதுவும் இல்லையே. என்னால இப்போ வேற சாரி கேட்கறதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்?” அவளிடமே கேட்க, சுஜிதா பதில் பேசாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
தனது தலையை நீவி விட்டுக் கொண்டு, ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், “நான் இன்னைக்கு ஊருக்கு போயிட்டு ஒரு ரெண்டு நாள்ல வரேன்.. திரும்ப எங்கயோ விட்டுட்டு போயிட்டேன்னு நினைச்சிடாதே.. நீ கிடைக்கிறதுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. நீ இங்க தான் இருக்கன்னு தெரியவும், இங்கயே வந்துட்டேன்.. நான் வேலையை விட்டுட்டு இங்க வந்தது கூட இன்னும் எங்க அப்பாவுக்கு சொல்லவே இல்ல.. ஜைஷு தான் சொல்லி இருக்கா.. என் மேல அவரு வச்சிருக்கற பாசத்துக்காகவாவது ஒரு வார்த்தை நேர்ல போய் சொல்லிட்டு வரணும்..” அவன் சொல்லவும், சுஜிதா அதிர்ந்துப் பார்க்க, தலையை மேலும் கீழும் அசைத்தவன்,
“அவரு திட்டி கேட்டு இருந்தா கூட பரவால்ல.. ‘ஏன்டா நீ இங்க வந்து பத்து நாள் ஆகுதாமே.. அப்பாக்கிட்ட ஒரு வார்த்தை உனக்கு சொல்லத் தோணலையா’ன்னு ரொம்ப வருத்தமா கேட்டுட்டார்.. அது தான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. போய் அவரைப் பார்த்துட்டு வந்துடறேன்..” என்றவன், சுஜிதாவைப் பார்க்க, அவளோ உணர்ச்சித் துடைத்த முகத்துடன் பதில் பேசாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, தோளைக் குலுக்கியவன்,
“எங்க அம்மா உன்னைப் பேசினது எல்லாம் தப்பு தான்.. அதோட நம்ம கல்யாணத்துக்கு பிறகு, எங்க அம்மா கூட நீ இருக்க வேண்டாம்ன்னு தான் நான் யூ.எஸ். போக..” என்று தொடங்கி பெருமூச்சுடன் அதை நிறுத்திவிட்டு,
“சரி.. சாப்பிட்டு வேலையைப் பாரு.. நானும் கிளம்பறேன்.. மதிய ட்ரைன்ல போயிட்டு வந்துடறேன்..” என்றவன், அவனையே பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரியைப் பார்த்து தலையசைத்துவிட்டு வெளியில் நடக்க, சுஜிதா அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்..
முன்தினம் அவன் வந்துவிட்டுச் சென்றதும், ராஜேஸ்வரியிடம், தான் சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொண்டு, அவர்களையும் அனுப்பிவிட்டு, தனது அறைக்குச் சென்றவளின், உள்ளத்தில் ஏனோ அவ்வளவு ஒரு அமைதி..
‘அது என்ன என் வைஃப்.. என் வைஃப்ன்னு யாரையோ சொல்லிட்டு இருக்க? அப்போ நீ யாரு?’ அவனது கேள்வி மனதினில் ஓராயிரம் முறையாக வந்து மோத, மனதினில் இத்தனை நாட்களாக அடைத்து கிடந்த பாரம் மெல்ல விலகி, இதயம் பஞ்சு போல இருந்தது..
அவளை அறியாமலே அவளது இதழ்கள் புன்னகையை பூசிக் கொள்ள, தனது அறைக்குச் சென்று அவனது புகைப்படங்களுடன் தஞ்சம் புகுந்தவள், அப்படியே ஆழ்ந்து உறங்கியும் போனாள்.
காலையில் ராஜேஸ்வரி அழைத்த பிறகே உறக்கம் களைந்தவளுக்கு, அன்றைய வேலைகள் நினைவுக்கு வர அவசரமாக கிளம்பி மருத்துவமனைக்குச் சென்றாள்.. திரும்ப வந்த பொழுது சூர்யாவைப் பார்த்ததும் அவளது மனதினில் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் தான் இருந்தது. அவன் உணவைக் கொண்டு வைக்கவும், தன்னையே அறியாமல் அவள் பேசிவிட, அதற்கு அவன் சொன்னவைகள் மனதினில் வட்டமிடத் துவங்கியது..
ராஜேஷ்வரி அவளைப் பிடித்து உலுக்க, “சூர்யா சொல்லாம நிறுத்திட்டு போனது என்ன ராஜிம்மா? என்னவோ யூ.எஸ். போனது எனக்காகன்னு ஏதோ சொல்ல தொடங்கி நிறுத்திட்டாங்களே..” என்று கேட்க, ராஜேஸ்வரி ‘ஆம்..’ என்று தலையசைத்தார்.
“அது.. அவன் யூ.எஸ்.ல போய் படிச்சு முடிக்கும்போது நீ இங்க படிச்சு முடிச்சிடுவ.. அப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னை அங்க கூட்டிட்டு போய், உன்னோட ஹையர் ஸ்டடீசை அங்க படிக்க வச்சு, அங்கேயே சந்தோஷமா செட்டில் ஆகலாம்ன்னு அவன் பிளான் பண்ணி இருந்தானாம். உன்னை, கல்யாணத்துக்கு அப்பறம், அவங்க அம்மாவை மீட் பண்ணாத மாதிரி பார்த்துக்க, அப்படி பிளான் பண்ணி இருந்தேன்னு சொன்னான்.” ராஜேஸ்வரி அவன் விட்டுச் சென்றதை சொல்லி முடிக்க, சுஜிதா அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
அவளது பார்வையை புறம் தள்ளியவர், “அவன் வேலையையே விட்டு வந்துட்டேன்னு வேற சொல்றானே.. அவன் மனசுல என்ன தான் இருக்கு? என்ன பண்ணிட்டு இருக்கான்? இங்க வேலை கிடைக்குமா? நிறைய பேரை வேலையை விட்டுத் தூக்கறாங்கன்னு எல்லாம் கேள்விப்படறோமே.. இது என்ன இவன் இப்படி பைத்தியக்காரத்தனம் செய்யறான்..” அந்தச் செய்தி புதிதாக இருக்க, ராஜேஸ்வரியும் சற்று தடுமாறி புலம்பத் துவங்கினார்..
உணவு தொண்டைக் குழியில் இறங்க மறுக்க, சுஜிதா திணறிக் கொண்டு இருந்தாள்.. “ஹ்ம்ம்.. சாப்பிடு.. இன்னைக்கு நாம சொல்லி இருக்கற கொஞ்சம் பேர் ஃபாலிகுலர் ஸ்டடிக்கு வருவாங்க.. முடிச்சிட்டு வீட்டுக்குப் போகலாம்..” எனவும், மெல்ல கொறித்துக் கொண்டிருந்தவள், சட்டென்று நிமிர்ந்து,
“இது சூர்யா செஞ்சிருக்காங்கன்னு நினைக்கிறேன் ராஜிம்மா.. தோசை எனக்கு பிடிச்ச மாதிரி ஊத்தப்பம் போல இருக்கு.. எனக்கு இப்படி தான் டிபன் பாக்ஸ்ல தோசை சாப்பிட பிடிக்கும்ன்னு எங்க அம்மாவுக்கு அப்பறமா சூர்யாவுக்குத் தான் தெரியும்..” என்றவளுக்கு, அடக்க முடியாமல் கண்ணீர் வழிந்தது..
ராஜேஸ்வரி அவளது தலையை வருட, “ரெண்டு பேருமே சந்தோஷமா தானே இருந்தோம்? நடுவுல ஏன் அப்படி எல்லாம் நடந்தது? ஏன் எங்க விதி இப்படி ஆட்டம் காட்டுது? எனக்கு சூர்யா பேசப் பேச என்னோவோ மனசு பிசையுது ராஜிம்மா.. ஏன்?” என்று நொந்துக் கொள்ள,
“குட்டி.. அழக் கூடாது.. சீக்கிரமே எல்லாம் சரி ஆகிடும்.. அது தான் அவன் வந்துட்டான் இல்ல..” என்று சமாதானம் செய்தவர், அவளது கண்களைத் துடைக்க,
“என்னால அன்னைக்கு நடந்தது மறக்க முடியலையே.. நான் என்ன செய்யறது?” பரிதாபமாகக் கேட்டவளைப் பார்த்து சிரித்தவர்,
“நீயும் தானே அவனை பேசின? அவனும் பேசினான்.. எல்லாம் முடிஞ்சுப் போச்சு.. அவனும் தன்னோட தப்பை உணர்ந்து இவ்வளவு இறங்கி வந்திருக்கானே.. நீயும் முயற்சி பண்ணு.. இன்னமும் அதையே மனசுல வச்சுக்கிட்டு எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்கப் போற?” என்றவர், நர்ஸ் வந்து நிற்கவும், திரும்பிப் பார்த்துவிட்டு,
“நான் பார்த்துட்டு இருக்கேன்.. முகத்தைக் கழுவிக்கிட்டு நீ வா..” என்று நகர்ந்துச் செல்ல, வேகமாக உண்டுவிட்டு, அன்றைய வேலையை கவனிக்கத் துவங்கினாள்..
குறிப்பிட்டிருந்த மிக முக்கியமான சில பேரை மட்டும் இருவரும் பரிசோதிக்க, அவர்களில் ஒருவராக ஜைஷ்ணவியும் பிரதாப்பும் வந்தனர்..
“ஆல் ஃபைன் அக்கா.. இந்த டேபிலட் எல்லாம் ஸ்ட்ராட் பண்ணுங்க.. உங்களுக்கு ஏதாவது அன்ஈசியா இருந்தா உடனே எனக்கு சொல்லுங்க.. மோஸ்டா எதுவும் ஆகக் கூடாது.. ஏற்கனவே ஹிஸ்டரி இருக்கறதுனால ஒரு எச்சரிக்கைக்குச் சொல்றேன்..” சுஜிதா சொல்லவும், ஜைஷ்ணவி தலையசைத்துக் கேட்க,
“ஒண்ணும் இல்லைக்கா.. நாம ஒரு கை பார்த்துடலாம்.. நீங்க அதையே நினைச்சு டென்ஷனாக வேண்டாம். ஜாலியா இருங்க..” என்று அவளுக்கு தைரியம் சொல்ல, ஜைஷ்ணவி புன்னகையுடன் எழுந்துக் கொண்டாள்..
“தேங்க்ஸ் சுஜி.. மனசுக்கு கொஞ்சம் தைரியமா இருக்கு.. தேங்க் யூ சோ மச்..” என்று சொன்னவள், வேறெதுவும் பேசாமல் விடைப்பெற்று வெளியில் செல்ல, ஜைஷ்ணவியின் செல்போன் இசைத்தது..
“என்னடா அதுக்குள்ள கிளம்பிட்ட? நான் நைட் போவன்னு இல்ல நினைச்சேன்?” தனது அறையில் இருந்து வெளியில் வந்தவளுக்கு, ஜைஷ்ணவியின் குரல் காதில் விழுந்து, காற்றோடு மறைய, மெல்ல அவர்களுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தாள்.
“நீ நம்ம வீட்ல தங்கியே எவ்வளவு வருஷம் ஆகுதுடா? இப்போவாவது போய் ரெண்டு மூணு நாள் இருந்துட்டு வாயேன்.. அப்பா சந்தோஷப்படுவாங்க..” ஜைஷ்ணவி சொல்ல,
“நான் அப்பாவை இங்க கூட்டிட்டு வந்து அவர் கூட இருக்கேன்.. சரியா?” என்ற அவனது பதிலுக்கு,
“நீ இருக்கியே.. உனக்கே இது ஓவரா இல்ல.. இருந்தாலும் உனக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம் ஆகாதுடா.. நீ என் கல்யாணத்துக்கு அப்பறம் நம்ம வீட்ல வந்து தங்கினதே இல்ல.. யாரோ கெஸ்ட் போல நடுல ஒரு நாள் வந்துட்டு போயிட்ட? ஏண்டா இப்படி பண்ணிட்டு இருக்க? அப்பா கூட இருந்துட்டு தான் வாயேன்.. அவரும் ரொம்ப ஃபீல் பண்றாரு இல்ல..” தொண்டையடைக்க ஜைஷ்ணவி கேட்க,
“பார்க்கறேன்.. இப்போ நான் கிளம்பிட்டேன்.. பை..” என்று போனை வைக்க, அதுவரை அமைதியாக இருந்த ப்ரதாப் அவளை கேள்வியாகப் பார்க்க, சூர்யா சொன்னவற்றை கடகடவென்று சொல்லி முடித்தவள்,
“பாருங்க.. ஒரே நாளுல இங்க திரும்பி வரானா இல்லையான்னு.. சுஜியை எங்க அம்மா அப்படி பேசினதுக்கு அப்பறம் எங்க அம்மாக்கிட்ட பேசறதையே விட்டுட்டான்.. யூ.எஸ்.க்கு போன அப்பறம் அங்க வந்து தங்கறது கூட இல்ல.. திமிரு பிடிச்சவன்.. கிட்டத்தட்ட அஞ்சு வருஷத்துக்கு அப்பறம் ஊருக்கு போறான்..” என்று திட்டிக் கொண்டே நடக்க, அதைக் கேட்ட சுஜிதாவோ அதிர்ந்து நின்றிருந்தாள்..