உயிரோவியம் நீயடி பெண்ணே – 18

உயிரோவியம் நீயடி பெண்ணே – 18
18
“மேடம்.. மேடம்.. என்ன ஆச்சு? அவங்களைக் கூப்பிடணுமா?” சிலையென ஜைஷ்ணவி பேசுவதைக் கேட்டு பின்தொடர்ந்துக் கொண்டிருந்த சுஜிதாவிடம், அந்த மருத்துவமனையின் வாட்ச்மேன் கேட்க, அதில் கவனம் கலைந்தவள், சட்டென்று நின்றாள். அவர் கேள்வியாகப் பார்த்ததும், மறுப்பாக தலையசைத்துவிட்டு, வேகமாக தனது அறைக்குச் சென்றாள்.
தனது வேலையை முடித்துவிட்டு, ராஜேஸ்வரி அவளைக் காண வர, அவரது மடியில் சாய்ந்தவள், ஜைஷ்ணவி பேசியதைச் தொண்டையடைக்க சொல்லி முடித்தாள். அவளது தலையை வருடிக் கொண்டே, “அவன் இத்தனை வருஷத்துல இந்தியா வந்ததே ரெண்டு முறைதானாம்.. அதுவும் ஜைஷ்ணவி கல்யாணத்துக்கு ஒரு வாரம் வந்தவன், அந்த பிசிலையும் உன்னைத் தேடி கோயம்பத்தூர் வந்திருக்கான். அப்பறம் அவனோட விசா பிரச்சனையால அவனால இங்க வர முடியாத சூழ்நிலை.. எல்லாம் சரியாகி வந்த பொழுதும், அந்த ஒரு வாரமும் உன்னைத் தேடி தான் சுத்தி இருக்கான்..” சூர்யாவை சொன்னதை ராஜேஸ்வரி சொல்லவும், திகைப்புடன் சுஜிதா அவரது முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“உங்களுக்கு எப்படி ராஜிம்மா தெரியும்?” குழப்பமாகக் கேட்க,
“நான் சூர்யாவைப் பார்த்து நேத்தே பேசிட்டேன்..” ஒரு மெல்லிய புன்னகையுடன் ராஜேஸ்வரி சொல்லவும், பட்டென்று எழுந்து அமர்ந்தவள்,
“நேத்து தண்ணிப் பிரச்னைன்னு சொன்னது எல்லாம் பொய்யா? அவ்வளவு சந்தோஷமா நீங்க வந்தது சூர்யாவைப் பார்த்து பேசிட்டு தானா?” ஆவலும், ஏக்கமும், தவிப்புமாக கேட்க, அவரோ புன்னகையுடன் தலையசைத்தார்..
“ஆமா.. நான் அவனை ப்ளான் பண்ணி எல்லாம் மீட் பண்ணல.. எதர்ச்சையா தான் மீட் பண்ணினோம். அவனைப் பார்த்த உடனே நான் கேட்ட முதல் கேள்வி..” அவர் சொல்லிக் கொண்டே வர,
“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சான்னு தானே..” கண்ணீருடன் அவள் கேட்க, அவரோ ‘ஆம்’ என்று தலையைசத்தார்..
“என்ன பதில் சொன்னாங்க ராஜிம்மா? எப்படி ரியாக்ட் பண்ணினாங்க?” அவளது குரலில் அவ்வளவு ஆர்வம்.
“கேட்டவுடனே என்னை ஒருமாதிரி பார்த்துக்கிட்டே.. ‘ஆகிடுச்சு.. என் வைஃப் கைனகாலஜிஸ்ட்டா இருக்கா’ன்னு சொன்ன உடனே இத்தனை நாள் உன்னோட வாழ்க்கையை நினைச்சு மனசுல அழுத்திட்டு இருந்த பாரம் எல்லாம் போய் அப்படியே சாஞ்சிடேன்..” அவளது தலையை கோதிக் கொண்டே கண்ணீருடன் சொன்னவர், அவன் கூறியவற்றை சொல்லி முடித்தார்.
“அவன் சுத்தமா அந்த நேரம் நடந்ததை எல்லாம் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல சுஜி.. நான் சொன்ன உடனே தவிச்சு போயிட்டான். அப்பறம் இப்போ தான் நீ கிடைச்ச உடனே வந்தேன்னு சொன்னான்.. ஆனா.. வேலையை விட்டு வந்திருப்பான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல. இனிமே என்ன செய்யப் போறான்?” வருத்தமாகச் சொன்னவர் அவளது முகத்தை நிமிர்த்தி,
“அவன் மட்டும் இந்த பத்து வருஷம் நிம்மதியா இருந்திருப்பான்னு நினைக்கறியாடா கண்ணம்மா?” என்று கேட்க, அவளை அறியாமலயே அவளது தலை தானாக இல்லை என்று அசைந்தது..
“என்னவோ மனசு வலிக்குது ராஜிம்மா.. வார்த்தையால சொல்லத் தெரியல.. ஒருமாதிரி சூர்யாவைப் பார்த்து சந்தோஷமாவும் இருக்கு.. ஆனா.. ஏனோ பேச வார்த்தைகளே வரல.. ஒருமாதிரி ரொம்ப தூரமா போனது போல இருக்கு.. ஆனா பத்து வருஷ கதையும் பேசணும் ரொம்ப ஆசியாவும் இருக்கு. நான் என்ன செய்யட்டும்?” பரிதாபமாகக் கேட்க, அவளைப் பார்த்தவர்,
“நீ இன்னமும் அந்த சண்டைக்கும் காதலுக்கும் இடையில சிக்கிட்டு இருக்க.. அவன் மேல நீ வச்சிருக்கற பாசம் உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்குது.. அவன் கூட போட்ட சண்டை அவன் கிட்ட பேச தடுக்குது.. அது தான்.. அதை மறந்துட்டு பேசப் பாரு.. எல்லாமே சரியா இருக்கும்..” என்று அறிவுரை சொல்லவும், தலையை அசைத்தவள்,
“முயற்சி செய்யறேன் ராஜிம்மா.. இப்போ நான் வீட்டுக்குப் போறேன்.. எனக்கு தலைவலிக்குது..” என்று சொன்னவள், கிளம்பிச் செல்ல, ராஜேஸ்வரி பெருமூச்சுடன் அவர்களது நல்வாழ்விற்கு வேண்டிக்கொண்டார்.
ரயில் வண்டியில் ஏறி அமர்ந்தவனுக்கும் சரி.. தனது வீட்டிற்குச் சென்று படுக்கையில் விழுந்து, அவனது சட்டையை எடுத்து அணைத்துக் கொண்டு, கண்களை மூடிக்கிடந்தவளுக்கும் சரி.. இருவரின் எண்ணங்களும் அவர்கள் பிரிந்த தினத்தை நோக்கி பயணிக்கத் துவங்கி இருந்தது.. நினைக்க வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த எண்ணங்கள் அவர்கள் அனுமதி இன்றியே மனதினில் அணிவகுக்கத் துவங்கி இருந்தது..
பன்னிரண்டாம் வகுப்பின் முடிவுகள் வர இன்னமும் இரண்டு தினங்கள் மட்டுமே இருக்க, சுஜிதா ஊரில் இருந்து அன்று வருவதாக இருந்தது.. காலையில் இருந்தே, அவர்களது வீட்டை பலமுறை நோட்டம் விட்ட சூர்யா, அவளது செல்லிற்கு முயன்றான்.
‘காலையில ப்ளைட் வந்திருந்தாலும் அவ இத்தனை நேரம் வந்திருக்கணுமே.. மதியத்துக்கு மேல ஆகிருச்சே? ஏன் இன்னும் வரல? போனும் எடுக்கலயே..’ என்று தவிக்கத் துவங்கினான்..
‘ஒருவேளை அங்கேயே ஜாயின் பண்ண ப்ளான் பண்றாங்களா? ஹையோ அப்போ நான் என்ன செய்வேன்? ஹையோ கடவுளே..’ மனதினில் அந்த நினைவே அதிர்ச்சியைக் கொடுக்க,
‘இல்லையே.. அப்படி சேர ப்ளான் இருந்தா அவ எதுக்கு இங்க வந்தா? மெடிசின் படிக்கணும்ன்னு தானே குறிக்கோளோட வந்திருக்கா.. கடவுள் எனக்காக அவ மனசுல ஏற்படுத்தின குறிக்கோள்..’ ஒருநிலையில் இல்லாமல் பலவற்றையும் யோசித்துக் கொண்டு அலைந்துக் கொண்டிருக்க, ஜைஷ்ணவியோ அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
“உனக்கு என்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கா என்ன? அவ ஒரு மாசம் அங்க இருந்தது கூட அவ்வளவு கஷ்டமா இல்ல ஜைஷு. ஆனா இன்னைக்கு வரேன்னு சொல்லிட்டு அவகிட்ட இருந்த எந்தத் தகவலும் இல்லை பாரு.. அவ ஊருக்கு வந்துட்டாளா இல்லையான்னு தெரியாம தான் ரொம்ப ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்சா பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு.. இப்போ நான் என்ன செய்யட்டும்?” தலையைப் பிடித்துக் கொண்டு சொன்னவனைப் பார்த்தவளுக்கு பரிதாபமாக இருந்தது..
அவனை மேலும் சோதித்த சில மணித்துளிகளுக்குப் பிறகு, அவனது செல்போன் குரல் கொடுக்க, அவசரமாக அதில் வந்திருந்த செய்தியைப் பார்த்தவனுக்கு மனதினில் அப்படி ஒரு நிம்மதி..
‘மை டியர் கண்ணா.. மிஸ்ஸிங் மீ? இன்னும் கொஞ்ச நேரம் மிஸ் பண்ணுங்க.. நாங்க வந்துட்டே இருக்கோம்.. கிஷோர்க்கு காலேஜ்ல ஒரு சீட் ரிசர்வ் செய்துட்டு அப்படியே தெரிஞ்சவங்க மூலமா ஒரு வீடு பார்த்துட்டு கிளம்ப லேட் ஆகிருச்சு.. மீ டூ மிஸ் யூ எ லாட் செல்லப்பா.. இன்னும் ஒரு மணி நேரம் ரெண்டு பேருமே மிஸ் பண்ணுவோம்..’ என்ற செய்தியை அனுப்பி இருக்க, அதைப் பார்த்தவனின் இதழ்களில் புன்னகை விரிந்தது..
‘அவளை மிஸ் பண்ணனுமாம்ல.. கொழுப்பு.. வா உன்னை கவனிச்சுக்கறேன்..” செல்லமாகத் திட்டிக் கொண்டவனின் இதயம், அவளது வரவை எண்ணி வேகமாகத் துடிக்கத் துவங்கியது.
ஒரு மணிநேரம் யுகமாகக் கடக்க, கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும், அவசரமாக ஓடிச் சென்று தனது வண்டியை எடுத்தவன், “ஜைஷு நான் வெளிய போயிட்டு வரேன்..” என்று குரல் கொடுக்க, காரில் இருந்து பெட்டியை இறக்கிக் கொண்டிருந்தவள், புன்னகையுடன் அவனை எட்டிப் பார்த்தாள்.
அவளைப் பார்த்ததும் முகம் பிரகாசமுற, ‘ஐ லவ் யூ..’ என்று வாயசைக்க, அதைப் புரிந்துக் கொண்டவள், ‘நானும்..’ என்று வாசயைத்து, உதட்டைக் குவித்துக் கண்ணடிக்க, அவளது மகிழ்ச்சி அவனது முகத்திலும் பிரதிபலித்தது.
பெட்டியை எடுத்துக் கொண்டிருந்தவளின் அருகே மெல்லச் சென்றவன், “தங்கமே..” என்று அழைக்கவும், மங்கையின் கடைவிழிப் பார்வை புன்னகையுடன் அவன் மீது படிய,
“ஐ மிஸ்ட் யூ..” என்றவன் தனது வண்டியை முடுக்க, சுஜிதாவின் இதழ்களும் புன்னகையில் விரிந்தது..
அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, ஒரு பெட்டியை கொண்டு உள்ளே வைத்துவிட்டு வந்தவளுடன் வந்த கிஷோர், தெருமுனை வரைச் சென்று திரும்பி வந்த சூர்யாவைக் கூர்மையுடன் பார்த்தான்..
“இவரு தான் உங்க ஹீரோவா?” நக்கலாக அவன் கேட்க, அவனது முதுகில் ஒன்று போட்டவள்,
“இது மட்டும் சூர்யா காதுல விழுந்திருக்கணும்..” சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, அவர்கள் அருகில் வந்து சூர்யா நிற்க,
“ஏன் அவங்க காதுல விழுந்தா என்ன செய்வாங்க? தலையை சீவிடுவாங்களோ?” அருகில் நின்றிருந்தவனைப் பார்த்துக் கேட்க, சுஜிதா கிஷோரை முறைக்க, சூர்யா சுஜிதாவைப் பார்த்தான்..
“இங்க என்ன ரோட் சைட் ரோமியோ போல நின்னு லுக்கு விட்டுட்டு இருக்கீங்க? ஏதோ மறந்துட்டு திரும்ப எடுக்க வந்திருக்கீங்க போல இருக்கே.. அதை எடுத்துட்டு போக வேண்டிய இடத்துக்கு போங்க.. அதை விட்டுட்டு இங்க என்ன வேடிக்கை?” நக்கலாக கேட்க, சுஜிதா அவனைத் திகைப்புடன் பார்த்தாள்.
அவளைப் பிடித்து நகர்த்தியவன், “இங்க நின்னு உனக்கு என்ன வேடிக்கை? உள்ள போ.. நானே பெட்டி எல்லாம் எடுத்துட்டு வரேன்..” என்று சொல்லவும், சுஜி குழப்பத்துடன் அவனைப் பார்க்க, சூர்யாவோ கொலைவெறியுடன் கிஷோரை முறைத்துக் கொண்டிருந்தான்..
“ஹே.. அவளை உள்ளப் போகச் சொல்ல நீ யாரு? நாங்க பார்த்து எவ்வளவு நாள் ஆகுது தெரியுமா?” சூர்யா கேட்க,
“என்ன சுஜி இதெல்லாம்? இவங்க சொல்றது எல்லாம் உண்மையா?” கிஷோரின் குரலில், சுஜிதா சூர்யாவைக் கெஞ்சலுடன் பார்த்துவிட்டு,
“டேய்.. நீ பெட்டியை எடுத்துட்டு உள்ள போடா. என்னவோ ஓவரா சீனப் போட்டுட்டு இருக்க? உள்ள வந்து சிக்கினன்னு வைய்யேன் உன்னை என்ன செய்வேன்னே தெரியாது..” என்று அதட்டியவள், சூர்யாவைப் பார்த்து புன்னகையுடன்,
“அவனுக்கு டயர்ட்ல கொஞ்சம் மெண்டல் டிஸ்டர்ப் ஆகி இருக்குன்னு நினைக்கிறேன்.. உள்ள போய் கட்டையை எடுத்து ஒரு காட்டு காட்டினா சரியா போயிடும்.. நான் அப்பறம் வரேன்..” என்று சொல்லவும், கிஷோரை முறைத்துவிட்டு, சூர்யா வண்டியைத் திருப்பிச் செல்ல, ஒரு பெரிய போரை தடுத்த அயர்ச்சியுடன், பெருமூச்சை வெளியிட்டு, கிஷோரைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றாள்.
“என்ன என்னை மெண்டல்ன்னு சொல்ற?” கிஷோர் பொருமிக் கொண்டே செல்ல,
“பின்ன என்ன? உனக்கு சூர்யாவைப் பத்தி தெரியும்ல.. இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் பார்க்கற.. எதுக்கு இப்படி பேசி வம்பு வளர்க்கற? கிஷோர்.. ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ..” அவளது முகம் வாடிவிட, கிஷோர் அவளைப் புரியாமல் பார்த்தான்.
“எனக்கு, நீயா அவங்களான்னு தேர்ந்தெடுக்கற நிலைமையில கொண்டு போய் நிறுத்திடாதே. எனக்கு நீ பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்னா.. சூர்யா உயிர். ரெண்டு பேரையும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது. அந்த தர்மசங்கடத்தை உன் விளையாட்டுத்தனத்துனால கொண்டு வந்திடாதே.. என்னோட விஷயத்துல சூர்யா கொஞ்சம் சென்சிடிவ்.. பொசசிவ் தான்.. நானும் அப்படி தான். ப்ளீஸ்டா.. இதுல எல்லாம் விளையாட்டு வேண்டாம்..” அவனிடம் கெஞ்சிக் கேட்க,
“சாரி சுஜி.. நான் ஏதோ விளையாட்டுட்கு தான் அப்படி செஞ்சேன்.. சரி விடு.. நெக்ஸ்ட் டைம் நான் அவங்களை மீட் பண்ணும்போது சாரி கேட்டு தோஸ்து ஆகிடறேன்..” என்றவனைப் பார்த்தவள், அமைதியாக மீதி பைகளை எடுக்க, அர்ச்சனா அவளுக்கு சூடாக டீ போட்டு வைத்திருந்தார்..
“ஹே.. நாளைக்கு எனக்கு ஊரைச் சுத்தி காட்டு.. இங்க சினிமா தியேட்டர் எல்லாம் எப்படி இருக்கும்? படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு இல்ல.. போகலாமா? இப்போ புது படம் வந்திருக்கே..” டீயை குடித்துக் கொண்டிருந்தவளிடம் கிஷோர் கேட்க, சுஜிதா அவனைப் பார்த்து முழித்தாள்.
‘இவன் சூர்யாவுக்கும் எனக்கும் சண்டை வர வைக்காம விட மாட்டான் போல இருக்கே..’ அவனை வெறித்து, மனதினில் பேச,
“நாங்க எல்லாம் ரெஸ்ட் எடுக்கறோம்.. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க..” கிஷோரின் தந்தை சொல்ல, வாசுதேவனும் அதற்கு ஒத்து ஊத,
“நானும் அர்ச்சனாவும் கடைக்கு போறோம்..” கிஷோரின் தாய் அறிவிக்க, கிஷோர் புன்னகையுடன் சுஜிதாவைப் பார்த்தான்..
அனைவரும் ஓய்வெடுக்கச் செல்ல, சூர்யாவிடம் இருந்து சுஜிக்கு மெசேஜ் வரவும், “அம்மா.. நான் போய் ஜைஷு அக்காவைப் பார்த்துட்டு வரேன்..” என்றபடி அங்கிருந்து நழுவ, அவளைப் பார்த்த கிஷோர் கேலியாக சிரித்தான்..
அவனைப் பார்த்து பழிப்புக் காட்டிவிட்டு, வேகமாக சூர்யாவைக் காண ஓட, “சுஜி.. உனக்கு துணைக்கு நானும் வரவா?” கிஷோர் வம்பு வளர்க்க, அவனைக் பார்த்து கையெடுத்து கும்பிட்டு, சூர்யாவைக் காணும் ஆவலில் அவர்களது வீட்டின் உள்ளே நுழைந்தாள்..
“என் தங்கக்கட்டி..” அவள் உள்ளே நுழைந்ததும் அவளைப் பிடித்து இழுத்தவன், அவளது முகமெங்கும் முத்தமிட்டு,
“லவ் யூ டி சுஜி.. உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.. நீ காலேஜ்க்கு போனா நான் என்ன செய்யப் போறேன்?” என்றபடி அவளை அணைத்துக் கொள்ள, அவனது தோளில் வாகாக சாய்ந்தவள்,
“நானும் தான்.. இந்த கிஷோர் வேற எல்லாம் தெரிஞ்சும் வம்பு வளர்த்துட்டு இருக்கான்..” என்று சிணுங்க,
“அவனைப் பத்தி பேசாதே..” கடுப்புடன் சொன்னவன், அவளது இரு கன்னங்களையும் பிடித்துக் கொண்டு, ஆசைத் தீர அவளது முகத்தைப் பார்க்க, அவனது பார்வையில் சுஜிதா கண்களைத் தழைத்துக் கொண்டாள்..
அவளது இமைகளில் மென்மையாக இதழ் பதித்தவன், “ஜைஷு நமக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுத்துட்டு வெளிய போயிருக்கா..” அவளை அழைத்துக் கொண்டு சோபாவில் சென்று அமர்ந்தவனின் கன்னத்தில் இதழ் பதித்தவள்,
“இத்தனை வருஷம் அங்க இருந்திருக்கேன்.. இந்த ஒரு மாசம் எனக்கு இருக்க முடியல தெரியுமா? மறுபடியும் அடுத்த வாரம் போயிட்டு, கவுன்சிலிங் போது வரலாம்ன்னு அம்மா சொன்னாங்க..” என்றவளது விரல்களுடன் விரல் கோர்த்துக் கொண்டு,
“என்னடி இப்படிச் சொல்ற? பேசாம நானும் ஊரைச் சுத்தி பார்க்கற மாதிரி உங்க ஊருக்கு வந்துடவா?” பரிதாபமாகக் கேட்க,
“மறுபடியும் ஒரு மாசம் தானே சூர்யா.. இந்த ஒரு வாரம் என்ஜாய் பண்ணலாம்..” என்றவள், ஊருக்குச் சென்று வந்த கதையைப் பேசத் துவங்கினாள்..
சிறிது நேரம் பேசிய பிறகு, ஜைஷுவும் அவர்களுடன் வந்து இணைய, “நாளைக்கு கிஷோர் சினிமா போகலாம்ன்னு சொன்னான்.. அம்மா அப்பா எல்லாம் வரலைன்னு சொல்லிட்டாங்க. நீங்க வரீங்களா சூர்யா?” என்று கேட்க,
“ஏன் நான் வரக் கூடாதா?” ஜைஷ்ணவி வம்பு வளர்க்கவும்,
“அப்போ ரெண்டு தனி தனி டிக்கெட்டா வாங்கி உன்னை அவன் கூட உட்கார்த்தி வச்சிருவேன்.. ஓகே வா..” சூர்யாவின் கேள்விக்கு,
“போடா.. நீங்களே படம் பாருங்க.. எனக்கு நாளைக்கு வேலை இருக்கு..” என்றவள், நாசுக்காக விலகிக் கொள்ள, சூர்யா சுஜிதாவைப் பார்த்து கண்ணடித்தான்.
“நான் போய் டிக்கெட் வாங்கிடறேன் சுஜி.. நீங்க கிளம்பி வாங்க.. இந்தத் தெருமுனை வரைக்கும் தான் அவன் உன் வண்டியில வரலாம். அதுக்கு அப்பறம் அவன் என் கூட தான் வரணும்.. புரியுதா?” கடுப்புடன் சூர்யா சொல்ல, சுஜிதா சிரிக்கத் துவங்கினாள்..
“இந்த பொசசிவ் பார்க்க கூட அழகா இருக்கு.. ஐ லவ் இட்.. சரி.. நான் அக்காவை பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு வந்தேன்.. அந்த பெருச்சாலி வேற நக்கலா சிரிச்சது.. நான் கிளம்பறேன்..” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, வாயிலில் இருந்து ‘சுஜி..’ என்று கிஷோர் குரல் கொடுக்க, சூர்யா பல்லைக் கடித்தான்.
“இவனை கொல்லப் போறேன் பார்த்துக்கோ.. வரேண்டி நாளைக்கு வச்சு செய்யறேன்..” அவளிடம் கருவிக் கொண்டே வெளியில் எட்டிப் பார்த்தவன்,
“சுஜியா? சுஜி எங்க இங்க வந்தா?” தன் பங்கிற்கு சூர்யாவும் அவனை வம்பு வளர்க்க, கிஷோர் குழம்பிப் போனான்.
“இங்க வரலையா? ஜைஷு அக்காவைப் பார்க்க வரேன்னு தானே வந்தா?” சிறிது பதட்டமாகக் கேட்க, சூர்யாவின் முதுகில் தட்டியவள்,
“உங்கள..” என்று குரல் கொடுத்து,
“நாங்க இங்க தான் இருக்கேன் கிஷோர்..” என்று எட்டிப் பார்க்க, பெருமூச்சை வெளியிட்டவன், சூர்யாவை முறைத்து,
“கொஞ்ச நேரத்துல கன்ப்யூஸ் ஆகிட்டேன்.. வா போகலாம்.. எனக்கு போர் அடிக்குது..” அவன் அழைக்க, சுஜிதா சூர்யாவைப் பரிதாபமாகப் பார்த்தாள்.. அவளது பார்வையைப் பார்த்தவன்,
“வரியா கிஷோர் நாம கிரிக்கெட் விளையாடலாம்..” என்று அழைக்க, சுஜிதாவைப் பார்த்த கிஷோரும், சூர்யாவிடம் நட்புக்கரம் நீட்ட, கையைக் குலுக்கிக் கொண்டவர்கள் இருவரும், உடனேயே விளையாடத் துவங்கினர்..
“சுஜி.. சும்மா நிக்காம பாலை எடுத்துப் போடு..” கிஷோர் அவளிடம் சொல்லவும்,
“எல்லாம் என் நேரம்.. நீங்க விளையாட நான் பால் எடுத்து போடணுமா?” புலம்பிக் கொண்டே அவர்களுடன் விளையாடத் துவங்க, சிறிது நேரத்தில் வசுந்தரா வேலை முடித்து வீட்டிற்கு வந்தார்..
இரண்டு ஆண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தவளைப் பார்த்துக் கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தவர், “கொஞ்சமாவது பசங்களோட விளையாடறோம்ன்னு இருக்கான்னு பாரு.. வீட்ல அடக்க ஒடுக்கமா உட்கார வேண்டாமா? இதுல இவ டாக்டர்க்கு வேற படிக்கப் போறாளாம்..” என்று பேசிக் கொண்டே செல்ல, அதைக் கேட்ட ஜைஷ்ணவி திகைத்துப் போனாள்.
“என்னம்மா பேசற? அவ விளையாடறதுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? நானும் இவ்வளவு நேரம் நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு இப்போ தான் உள்ளே வந்தேன். அவளும் என் கூட நின்னுட்டு இருந்தா.. இவனுங்க தான் பாலைப் பொறுக்கிப் போடுன்னு சொன்னாங்க? இப்போ அவ விளையாடறதுல என்ன குறை கண்டுட்ட? இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்..” என்றவள், தலையை இடம் வலமாக அசைத்துக் கொண்டே, உள்ளே நுழைந்த தனது தந்தையிடம் செல்ல,
“அது யாரும்மா சூர்யா கூட புதுசா ஒரு பையன் விளையாடறான்..” என்று கேட்டவர், அவள் பதில் சொல்வதற்கு முன்பே,
“என்ன சொல்லு.. சுஜி வந்த உடனே தான் நம்ம தெருவுக்கே உயிர் வந்தா மாதிரி இருக்கு.. அவ குரல் கேட்காம இந்த ஒரு மாசம் ஒரு மாதிரி இருந்தது..” மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே, தனது பாக்கெட்டில் இருந்த பொருட்களை எடுத்து வைத்தவரிடம்,
“சுஜியோட மஸ்கட்ல படிச்சவன் போல.. இப்போ கோயம்புத்தூர்ல பி.இ. சேர வந்திருக்கான்.. இன்னைக்கு அவனுக்கு சீட்டு போட்டுட்டு வந்திருப்பாங்க போல..” ஜைஷ்ணவி சொல்லவும், தலையசைத்து கேட்டுக் கொண்டவர், வெளியில் சென்று வேடிக்கைப் பார்க்கத் துவங்கினார்.
அவரைப் பார்த்தவள், “ஹலோ அங்கிள்..” என்று கையசைக்க,
“ஹாய் டாக்டர்.. எப்படி இருக்க? நாளனைக்கு ரிசல்ட் வருதா? நீ வந்த அப்பறம் தான் இந்த இடத்துக்கே உயிர் வந்தா போல இருக்கு.. உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்..” அவர் சொல்லவும், கிஷோருக்கு பந்து போட வந்த சூர்யா, வந்த வேகத்திலேயே நின்று, அவரைத் திகைப்பாக பார்த்தான்.
“நானும் தான் அங்கிள்.. உங்க மொக்க ஜோக் எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணினேன்.. எங்க ரெண்டு எடுத்து விடுங்க.. கேட்டுட்டு இதுங்களுக்கு பால் எடுத்துப் போடறேன்.. இவங்க விளையாடுவாங்களாம் நான் பந்து எடுத்துப் போடணுமாம்.. வேணும்ன்னா அவங்களே எடுத்துக்கட்டும்..” சுஜிதாவின் பதிலில், சூர்யா அவளைத் திகைப்பாகப் பார்க்க, அவனைப் பார்த்து சிரித்தவள்,
“நான் சனிக்கிழமை அம்மா கூட கோவிலுக்கு போவேன் இல்ல.. அங்க அம்மா பூஜைல இருப்பாங்க.. நானும் அங்கிளும் மொக்கை போட்டுட்டு இருப்போம்..” அவளது பதிலில், சூர்யாவிற்கு திகைப்பே மிஞ்சியது..
“அடப்பாவிங்களா.. இந்த விஷயம் எனக்குத் தெரியாம போயிருச்சே..” அவன் வருத்தப்பட,
“ஏன் தெரிஞ்சா நீங்களும் போய் மொக்கைப் போட்டுட்டு இருந்திருப்பீங்களோ? முடிஞ்சு போன விஷயத்துக்கு எதுக்கு மத்தளம் கொட்டிட்டு இருக்கீங்க? இப்போ பால் போடுங்க.. நான் வின் பண்ண இன்னும் ரெண்டு ரன் தான் இருக்கு..” கிஷோரின் குரலில் அவனை முறைத்தவன், மீண்டும் விளையாடத் துவங்க, சுஜிதா நைசாக ஜைஷ்ணவியின் அருகில் நின்றாள்.
“இவன் எதுக்கும்மா அவ்வளவு கோபப்படறான்?” சூர்யாவின் தந்தைக் கேட்க, ஜைஷ்ணவி சிரித்து வைக்க, அவரைப் பார்த்த சுஜிதா,
“அது வேற ஒண்ணும் இல்ல அங்கிள்.. உங்களுக்கு இவ்வளவு க்யூட் பிரெண்ட்டான்னு சூர்யாவுக்கு பொறாமை..” என்று கேலி செய்தவள்,
“எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு அங்கிள்.. நான் தூங்கப் போறேன்..” நைசாக நழுவி வீட்டிற்குள் செல்ல, கோபாலகிருஷ்ணனின் இதழ்களில் மெல்லிய புன்னகை..
மறுநாள் சுஜிதாவும் கிஷோரும் தியேட்டருக்கு செல்வதற்காக கிளம்பி வெளியில் வர, சூர்யா தனது வண்டியுடன் காத்திருந்தான். சுஜிதா கேள்வியாக அவனைப் பார்க்க, “வா கிஷோர்.. என் கூட பைக்ல வா.. அவ எங்கயாவது உன்னை கீழ தள்ளி கையை உடைச்சிடப் போறா..” என்று சொல்லவும், சுஜிதாவைப் பார்த்த கிஷோர் சூர்யாவின் பைக்கில் ஏறிக் கொள்ள, சுஜிதா அவனை முறைத்துக் கொண்டே, தனது வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றாள்..
தியேட்டருக்கு சென்று வண்டியை நிறுத்திவிட்டு அரங்கிற்குச் சென்றதும், இரண்டு பெரிய பாக்கெட் பாப்கார்னை வாங்கிக் கொண்டவன், ஒன்றை கிஷோரின் கையில் கொடுத்துவிட்டு, சீட் நம்பரைப் பார்த்து ஒரு இருக்கையில் அமர்ந்தவன்,
“கிஷோர்.. உன்னோட டிக்கெட் பின் சீட்ல இருக்கு. நீ அங்க உட்கார்ந்துக்கோ.. நானும் சுஜியும் இங்க உட்கார்ந்துக்கறோம்.. ப்ளீஸ்..” என்று கேட்க, கிஷோர் அவனை முறைத்துக் கொண்டே,
“ஏன் நீங்க பின்னால போய் உட்கார வேண்டியது தானே.. நான் இந்த ஊருக்குப் புதுசு.. எனக்கு பயமா இருக்கு..” என்று பதில் சொல்ல,
“உன்னை என்ன தனியாவா விட்டுட்டோம்? ஒரு மாசம் நானும் அவளும் பார்த்துக்கல.. அதோட மறுபடியும் ஒரு மாசம் அங்க தானே இருக்கப் போறா.. ஒரு பையனோட மனசு ஒரு பையனுக்கு புரியணும் இல்ல.. நீ என்ன இப்படி இருக்க? நீ இன்னும் வளரணும் தம்பி..” எனவும், பேச வார்த்தைகள் இன்றி, அமைதியாக கிஷோர் தலையில் அடித்துக் கொண்டு, பின் சீட்டில் சென்று அமர்ந்தான்.
இருவரும் படம் பார்த்தனரோ இல்லையோ, அவனது தோளில் சுஜிதா சாய்ந்துக் கொண்டு கதை பேச, அந்த மூன்று மணி நேரமும் இருவரும் தங்களது உலகில் லயித்து இருந்தனர்..
படம் முடித்து வெளியில் வந்த பொழுதோ, கிஷோர் இருவரையும் முறைத்துக் கொண்டிருக்க, “உனக்கு வண்டி ஓட்டத் தெரியுமா?” சூர்யாவின் கேள்விக்கு,
“அவனுக்கு தெரியாது சூர்யா.. இந்த லீவ்ல எனக்கு சொல்லித் தந்தா போல அவனுக்கும் சொல்லிக் கொடுங்க..” சுஜிதாவின் பதிலில்,
“அடப்பாவிங்களா.. இது எப்போ நடந்தது? நான் அர்ச்சனா ஆன்ட்டி தானே கத்துத் தந்தாங்கன்னு நினைச்சேன்..” என்றவன்,
“அது சரி.. ரெண்டு பேரும் பின்னால ஒருத்தன கூட்டிட்டு வந்து உட்கார்த்தி வச்சோமே. அவனை திரும்பியாவது பார்க்கணும்ன்னு தோனிச்சா? நானும் பார்ப்பீங்கன்னு பார்த்துட்டு இருந்தா படம் முடிஞ்சதும் வீட்டுக்குப் போக என்னைத் தேடறீங்க?” என்று பல்லைக் கடிக்க, சுஜிதா விழித்துக் கொண்டே சூர்யாவைப் பார்க்க, சூர்யாவோ சுஜிதாவின் கையை இறுகக் கோர்த்துக் கொண்டு,
“அது அவளோட நேர்ல பேசி ஒரு மாசம் ஆச்சு.. அது தான்.. சரி.. வீட்டுக்குப் போகலாமா?” என்று கேட்க, இருவரும் தலையசைக்கவும், வந்தது போலவே மூவரும் திரும்பி வந்தனர்.
கிஷோரோ சுஜிதாவையேப் பார்த்துக் கொண்டிருக்க, அவளது கண்களோ கனவில் மிதந்துக் கொண்டு, இதழ்கள் அவளை அறியாமலே புன்னகையை சிந்திக் கொண்டிருந்தது..
மறுநாள் காலையிலேயே அனைவரின் முகத்திலும் அப்படி ஒரு டென்ஷன்.. உறக்கம் வராமல் எழுந்துக் கொண்ட சூர்யா, சுஜிதாவின் மெசேஜிற்காக காத்திருக்கத் துவங்கினான்..
அன்று சுஜிதா மற்றும் கிஷோரின் ரிசல்டுகள் வெளிவரும் நாள். அன்றய இரவு முழுவதும் உறக்கம் வராமல் சூர்யாவிடம் அவள் புலம்பிக் கொண்டிருக்க, “நீ எல்லாம் சூப்பரா மார்க் வாங்குவ சுஜி.. டென்ஷன் ஆகாம தூங்கு..” என்று அவனும் சமாதானம் செய்துக் கொண்டிருந்தான்.. ரிசல்டுகள் வெளியிடப்படும் நேரத்தில், கண்களை மூடி அவள் வேண்டிக் கொண்டிருக்க, அனைவரும் புடை சூழ வாசுதேவன் கணிணியில் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதே டென்ஷனுடன் சூர்யாவும் ஜைஷ்ணவியும் அவளது ரிசல்ட்டை தங்களது வீட்டில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இன்னும் எவ்வளவு நேரம்ப்பா பார்ப்ப?” கண்களை மூடிக் கொண்டே சுஜிதா கேட்க,
“லோட் ஆகிட்டு இருக்கு குட்டா..” என்றவர், அவளது மதிப்பெண்களை பார்த்து, ஆனந்த அதிர்ச்சியை சமாளித்து வாயைத் திறந்து சொல்வதற்குள், “ஹே..” என்ற சூர்யாவின் குரல் கேட்க, கிஷோர் அவளது தோளைத் தட்ட, சுஜிதாவிற்கு படபடக்கத் துவங்கியது.
அவளது மதிப்பெண்களை சத்தமாக வாசுதேவன் படிக்க, கண்களில் கண்ணீருடன் அர்ச்சனா அவளது கன்னத்தில் முத்தம் கொடுக்க, “குட்டா.. கலக்கிட்ட போ.. கங்க்ராட்ஸ்..” மகிழ்ச்சியில் அவளைத் தூக்கிச் சுற்றி, தனது கழுத்தில் இருந்த சங்கிலியைக் கழட்டி அவளது கழுத்தில் அணிவித்து, அர்ச்சனா வைத்திருந்த இனிப்பை எடுத்து அவளது வாயில் திணித்தவர், தனது நண்பன் கிஷோரின் மதிப்பெண்களையும் பார்க்கவும், அதில் கவனம் பதித்தார்..
“ஹே.. கங்க்ராட்ஸ்டா.. நீயும் கலக்கிட்ட போ.. செம மார்க் வாங்கி இருக்கீங்க ரெண்டு பேரும். இன்னைக்கு ட்ரீட் தான்..” அவனுக்கும் அனைவரும் வாழ்த்துச் சொல்ல, அவர்களது வீட்டின் தொலைப்பேசி ஒலிக்கத் துவங்கியது..
“உனக்குத் தான் ஸ்கூல்ல இருந்து கால் பண்ணி இருப்பாங்க..” வாசுதேவன் சொல்லவும், போனை எடுத்தவள், தலைமை ஆசிரியை கூறிய வாழ்த்துச் செய்திக்கு பதில் சொல்லி, போனை வைத்தவளின் மொபைல் தனது பணியைச் செய்யத் துவங்கியது..
அதற்கு பதில் சொல்லிக் கொண்டே அவர்களது வீட்டின் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டவள், “அம்மா.. நான் ஜைஷு அக்காக்கிட்டயும் சூர்யாக்கிட்டயும் சொல்லிட்டு வந்திடறேன்..” என்று கிளம்ப, அவளது கையில் ஒரு ஸ்வீட் டப்பாவை கொடுத்து அனுப்பிய அர்ச்சனாவைப் பார்த்து கிஷோர் கேலியாக புன்னகைக்க, அவளோ மகிழ்ச்சியுடன் சூர்யாவைக் காணச் சென்றாள்.. சுஜிதா வீட்டிற்குள் நுழையும் பொழுதே, பலூனை வெடித்து சூர்யா ஆரவாரத்துடன் அவளை வரவேற்றான்.
“அடிச்சு தூள் கிளப்பிட்டடி என் தங்கமே.. சான்சே இல்ல.. எல்லா மெயின் சப்ஜெக்ட்லயும் ஃபுல் மார்க்ஸ்.. ஸ்டேட் ரேன்க் வாங்கி இருக்க.. கங்க்ராட்ஸ்டா என் பட்டு..” அவளது கன்னத்தைப் பிடித்து சந்தோஷத்தில் அவன் ஆர்பரிக்க, அவளது தோளைத் தட்டிய ஜைஷுவும் தனது வாழ்த்தைக் கூறினாள்.
“ஸ்கூல்ல இருந்து போன் வந்தாச்சு தானே.. நீ போயிட்டு வா.. நான் கொஞ்ச நேரத்துல வந்து அங்க வெயிட் பண்றேன்.. நாம ஒரு இடத்துக்கு போகலாம்.. ஹையோ எனக்கு செம ஹாப்பியா இருக்கு..” சூர்யா சொல்லவும், மகிழ்ச்சியுடன் தலையசைத்து கேட்டுக் கொண்டவள்,
“சரி.. நான் வெயிட் பண்றேன்..” என்றவள், இருவரிடமும் விடைப்பெற்று, தனது பெற்றவர்களுடன் பள்ளிக்குச் சென்று, அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் சந்தித்துவிட்டு வெளியில் வர, சூர்யா அவளுக்காக காத்திருந்தான்.
அவனைப் பார்த்த ஸ்ருதி, சுஜிதாவைப் பார்த்து கையைச் சுரண்ட, “அம்மா நான் கொஞ்ச நேரம் ஸ்ருதி கூட பேசிட்டு வரேன்.. அவ கூட மொக்கைப் போட்டு ரொம்ப நாள் ஆச்சு..” என்று சொல்லவும், ஸ்ருதி சுஜிதாவைப் பார்த்து மனதினில் ‘பொய்’ என்று வாய் மீது விரலை வைக்க, அவளது அன்னையோ,
“சரிடா. பேசிட்டு சீக்கிரம் சாப்பிட வந்திடு.. உனக்கும் கிஷோருக்கும் இன்னைக்கு ட்ரீட் வச்சிடலாம்..” என்று சொல்லிவிட்டு, விடைப்பெற்றுச் செல்ல, ஸ்ருதியைப் பார்த்து கண் சிமிட்டி விடைப்பெற்று, சூர்யாவின் அருகில் சென்றாள்.
“ஆல் டன்? போகலாமா?” ஆவலாக சூர்யா கேட்க,
“எங்க போகப் போறோம்?” மகிழ்ச்சியுடன் சுஜிதாவும் கேட்கவும்,
“வண்டியில ஏறு.. நான் கூட்டிட்டு போறேன்..” எனவும், வண்டியில் ஏறியவளை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த முருகன் கோவிலுக்குச் சென்றான். கோவிலின் வாயிலில் இறங்கியவள்,
“ஹையோ என் சூர்யா என்ன இவ்வளவு பக்திமானா ஆகிட்டாங்களா? ஆனா.. யாருமே இல்லையே.. சன்னதி பூட்டி இருக்கே..” கேலி செய்து விட்டு, அவனைக் கேள்வியுடன் பார்க்க,
“மூடி இருந்தா என்ன? சாமி தெரியுது இல்ல..” என்று கேட்கவும், தலையை ஒப்புதலாக அசைத்தவள், கண்களை மூடி வணங்கத் துவங்கினாள். அப்பொழுது அவளது கழுத்தினில் எதுவோ படவும், கண்களைத் திறந்துப் பார்த்தவள் திகைத்து சூர்யாவின் முகத்தைப் பார்த்தாள்..
“என்ன சூர்யா இது?” திகைத்து கேட்கையிலேயே,
“நீ டாப்பா மார்க் வாங்கினதுக்கு என்னோட கிஃப்ட்.. இதை விட உனக்கு என்ன தரதுன்னு எனக்குத் தெரியல..” என்றபடி தனது செயினை அவளுக்கு அணிவித்து முடிக்க, சுஜிதா தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
“இவரு பெரிய ராஜா.. பாராட்ட அப்படியே கழுத்துல இருக்கறதை கழட்டித் தருவாரு..” கேலியாக சொல்லிக்கொண்டே அதை கழட்ட முற்பட, அவளது முகத்தைக் கூர்மையுடன் பார்த்தவன்,
“ஏன் நான் உனக்கு ராஜா இல்லையா? நான் உன்னை என்னோட ராணியா தானே நினைச்சிட்டு இருக்கேன்?” சூர்யாவின் குரலில் திகைத்து அவனைப் பார்த்தாள்.
“நீ கொஞ்சம் கூட முயற்சியை விடாம.. டைவர்ட் ஆகாம படிச்சு இவ்வளவு மார்க் வாங்கி இருக்கறது எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? என்னோட சந்தோஷத்தை எனக்கு எப்படி காட்டறதுன்னே தெரியலடி. என் செல்லக்குட்டி ஸ்டேட் ரேன்க் வாங்கி இருக்கா. அதுக்கு நான் இதைக் கூட செய்யலைன்னா எப்படி?” என்று கேட்டவன்,
“நம்ம லவ் பண்ண தொடங்கின அப்பறம் நடக்கற முதல் பெரிய ஹாப்பி மொமன்ட். அந்த சந்தோஷ தருணத்தை நாம காலம் முழுசும் நியாபகம் வச்சுக்க வேண்டாமா? நமக்குள்ள இருக்கறது பிரிக்க முடியாத சொந்தம்ன்னு, இதை பார்க்கும் போது எல்லாம் நமக்கு நியாபகப்படுத்தும் இல்லையா?” என்று கேட்க, சுஜிதா வார்த்தைகளின்றி தலையை அசைத்தாள்.
“எங்க அப்பாவோட செயின் போலவே இருக்கு பாருங்க சூர்யா.. காலையில அப்பாவும் மார்க் வந்ததும் அவரு போட்டுட்டு இருந்த செயினக் கழட்டி எனக்கு போட்டு விட்டார்..” என்று காலையில் மார்க் வந்ததும், இனிப்பை வாயில் திணித்து, தனது கழுத்தில் இருந்து கழட்டி அவளுக்கு அணிவித்திருந்ததைக் காட்ட,
அவளது தலையை மென்மையாக அழுத்தியவன், “நானும் உன்னை உங்க அப்பா மாதிரி ஒரு ராஜகுமாரி போல பார்த்துக்கணும்ன்னு நினைக்கிறேன் இல்ல.. அதனால கூட இப்படி ஒரே மாதிரி அமையுதோ?” என்று யோசிக்க, அவள் சிரித்துக் கொண்டே பழிப்பிக் காட்டவும், அவளது கையைப் பிடித்துக் கொண்டவன்,
“நான் உனக்கு மட்டுமே சொந்தம்ன்னு சொல்ற ஒரு சின்ன அடையாளம். இதை எப்பவுமே கழட்டாதே என்ன?” என்று கேட்க, சுஜிதா கண்கள் கலங்க தலையசைத்தாள்.
“நான் டைம் பாஸ்க்கு லவ் பண்ணிட்டு விட்டுட்டு போக எல்லாம் நினைக்கல சுஜி.. உன்னை என்னோட உயிரா நினைக்கிறேன்.. கடைசி வரை உன்னோட சந்தோஷமா வாழணும்ன்னு ஆசைப்படறேன்.. நம்மளோட சந்தோஷமான தருணங்களோட நியாபகச் சின்னங்கள் ஒவ்வொன்னும் நம்மக்கிட்ட இருக்கட்டும் என்ன? நம்ம பிள்ளைங்க கிட்ட அதை எல்லாம் காட்டி நிறைய கதை சொல்லணும். இப்படி நிறைய கனவு கண்டு வச்சிருக்கேன்.. இது உன் கழுத்துல இருந்தா நீ படிக்க வேற ஊருக்கு போனாலும் நான் உன்னோடவே இருப்பேன்ல.. என் மனசு உன்கிட்ட தான் இருக்கும்.” அவன் சொல்லச் சொல்ல அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சுஜிதாவின் கண்களில் கண்ணீர் வழிய, அவளது கண்களைத் துடைத்து, அவளது கன்னத்தைத் தட்டினான்..
“சூர்யா.. இது.. அங்கிள் நீங்க மார்க் வாங்கினதுக்கு வாங்கிக் கொடுத்தது..” தயக்கத்துடன் அவள் இழுக்க,
“ஆமா.. என்னோட பொண்டாட்டிக்கு நான் தரேன்.. அவ்வளவு தான்.. சரி.. உங்க வீட்ல எல்லாரும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. நாம போகலாமா? கிஷோர் என்ன மார்க் வாங்கி இருக்கான்?” என்று கேட்க, அவனது கையேடு கைக் கோர்த்துக் கொண்டு, அவனிடம் பேசிக் கொண்டே நடந்தாள்..
வீட்டிற்குச் சென்றவளுக்கு அடுத்து வேறு யோசிக்க நேரமில்லாமல் விருந்து அமர்களப்பட, “சோ.. டாக்டர் சுஜிதாவுக்கு சீட் கன்ஃபார்ம் ஆகிடுச்சு.. எந்த காலேஜ்ல சேரப் போறேன்னு பார்த்து வை. எவ்வளவு செலவானாலும் சரி.. நான் படிக்க வைக்கிறேன்.. இது உன்னோட கனவு.. அதை நிறைவேத்த வேண்டியது என்னோட கடமை..” நெகிழ்ச்சியாக அவளை அணைத்துக் கொண்டு சொன்ன வாசுதேவனிடம் அவள் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க, அர்ச்சனா அவளை நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“எந்த ஊருக்குப் போனாலும் குட்டாவை ஹாஸ்டல்ல எல்லாம் விட வேண்டாம்.. அங்க சாப்பாடு எல்லாம் சரியா இருக்குமோ என்னவோ? அந்த ரூம் உனக்கு வசதியா இல்லைன்னா படிக்கவே கஷ்டமாகிடும். என் செல்லப் பொண்ணு எதுக்குமே கஷ்டப்படக் கூடாது.. சும்மா ஹாஸ்டல் எல்லாம் இருந்தா ரேகிங் அது இதுன்னு வேற தேவை இல்லாத மனசு கஷ்டம். அதனால எந்த காலேஜ் கிடைக்குதோ அங்க பக்கத்துலையே ஒரு வீடு பார்த்து அங்க ஷிஃப்ட் ஆகிக்கலாம். அது தான் அவளுக்கும் சரியா இருக்கும்.. சமைக்க, வீட்டு வேலை செய்ய எல்லாம் ஆள் வச்சுக்கலாம்..” வாசுதேவன் முடிவாகச் சொல்ல, அர்ச்சனா தனது கணவரை நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஆமா.. அது தான் சரி.. நாம கிஷோர்க்கு ப்ளான் பண்ணினா போல ரெண்டு பேருக்கும் பக்கமா வீடு பார்த்துட்டா.. ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கும். வேலை செய்ய ஒரே ஆளா பார்த்துடலாம்..” கிஷோரின் தந்தை தனது திட்டத்தைச் சொல்லவும், பெற்றவர்கள் ஒருமனதாக அதை ஒப்புக் கொண்டனர்..
“அப்பா.. நான் ஒண்ணு சொல்றேன்.. அதைக் கொஞ்சம் கேளுங்களேன்.. எப்படியும் எனக்கு துணைக்கு கிஷோர் இருக்கப் போறான் இல்ல.. அதனால அம்மா உங்க கூட அங்க இருக்கட்டுமே. நீங்களும் அங்க தனியா சமைச்சு சாப்பிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கீங்களே.. அம்மா ஃபுல்லா இங்கயே இல்லாம அப்பப்போ என் கூட வந்து இருந்துட்டு போகட்டுமே. நானும் பெரிய பொண்ணு ஆகிட்டு வரேன் இல்ல.. இனிமே தனியா மேனேஜ் பண்ணிப்பேன்..” என்று சொல்ல,
“குட்டா.. நீ இப்போ தான் காலேஜ் போகப் போற.. பெரிய பொண்ணு எல்லாம் ஆகல..” அவசரமாக வாசுதேவன் மறுக்க, கிஷோர் சிரிக்கத் துவங்கினான்.
“ஏன் அங்கிள்.. இப்போ நானும் சுஜியும் ஒரே வயசு தானே.. என்னை மட்டும் வீடு பார்த்து தனியா தங்க வைக்க ப்ளான் பண்ணும்போது இப்படி நீங்க எதுவுமே சொல்லவே இல்லையே.. அவளுக்கு அப்படிச் சொல்றீங்க? இவ சின்னப் பொண்ணா? விட்டா ஊரையே விலைக்கு வித்துட்டு வருவா..” கிஷோர் கேலி செய்ய, அர்ச்சனா சுஜிதாவைத் திகைத்துப் பார்க்கும் பொழுதே,
“என்னம்மா அப்படிப் பார்க்கற?” சுஜிதாவின் கேள்விக்கு,
“நீ என்ன அவ்வளவு பெரிய பொண்ணாகிட்டயா?” அவர் கேட்க, அவரது தோளில் சாய்ந்தவள்,
“அர்ச்சு.. யூ மிஸ் அப்பா தானே.. அப்பாவும் உன்னோட சமையலை ரொம்ப மிஸ் பண்றாங்க.. அப்பா இளைச்சு போயிட்டார்ம்மா.. அப்பாவுக்கும் வயசாகுது இல்லம்மா.. இனிமே அப்பாவோட ஹெல்த் பத்தியும் நாம மனசுல வச்சுக்கணும் இல்ல.. அதனால தான் இந்த ஐடியா சொல்றேன்..” ரகசியமாக அவள் சொல்ல, அவர்களது அருகில் அதைக் கேட்டுக் கொண்டிருந்த கிஷோரின் தாய், அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு,
“எப்படி யோசிச்சு இருக்காப் பாரேன். நம்ம குட்டி பொண்ணு சுஜி இப்போ ரொம்ப வளர்ந்துட்டா..” என்று அவளது கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு,
“நாம மாத்தி மாத்தி இங்க இருந்துக்கலாம் அர்ச்சனா.. அவ சொல்றதும் நியாயம் தானே.. அண்ணாவும் அங்க தனியா வேலைக்கு நடுவுல சமைச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கார். அது தான் இங்க கிஷோர் இருக்கான் இல்ல.. ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துப்பாங்க..” கிஷோரின் தாய் சொல்லவும், சில பல வாதாடல்களுக்குப் பிறகு, ஒருவழியாக அவள் சொன்னதற்கு அர்ச்சனாவும் வாசுதேவனும் ஒப்புக் கொண்டனர்..
மறுநாள் காலையில் கண் விழித்து சோம்பலாக அமர்ந்திருந்த சுஜிதாவின் காதுகளில் வசுந்தராவின் குரல் வந்து விழ, கண்களைத் துடைத்துக் கொண்டவள், ‘என்னாச்சு? ஏன் இவங்க காலையிலேயே சத்தம் போட்டுட்டு இருக்காங்க? யாரை?’ என்று நினைத்துக் கொண்டிருக்க, அவரைத் தொடர்ந்து சூர்யாவின் குரலும் கேட்டது.
‘சூர்யா??’ சுஜிதா நினைக்கையிலேயே,
“அது தான் எங்க விழுந்ததுன்னு தெரியலைன்னு சொல்றேன் இல்லம்மா.. திரும்பத் திரும்ப எங்க எங்கன்னா நான் என்ன செய்யட்டும்? நானும் தேடிப் பார்த்துட்டேன்.. தெரியல..” சூர்யாவின் குரலில் தூக்கி வாரிப் போட்டு எழுந்துக் கொண்டவள், அவசரமாக மாடிக்கு சென்று நின்றாள்.
“உனக்கு கழுத்துல இருந்த செயின் எங்க விழுந்ததுன்னு தெரியாத அளவுக்கு அப்படி என்ன வானத்துல கோட்டை கட்டற நினைப்பு? எல்லாம் மித மிஞ்சி இருக்கு. நீ சம்பாதிச்சு இருந்தன்னா அதோட அருமை தெரியும். உங்க அப்பா உனக்கு ஆசையா வாங்கிப் போட்டார் இல்ல.. உனக்கு அப்படி தான் இருக்கும்.. எங்கயாவது வீட்டுல விழுந்திருக்கான்னு தேடு.. எப்போ இருந்து காணும்ன்னு கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்றியா?” வசுந்தராவின் குரலில், சுஜிதா தவிக்கத் துவங்கினாள்.
“நான் தான் நேத்து இருந்தே காணும்ன்னு சொல்றேன் இல்ல. நேத்து க்ரவுண்ட்ல விளையாடின இடத்துலேயும் தேடிட்டேன்.. கிடைக்கல..” சூர்யா சொல்லவும்,
“அது தான் அவன் தேடிட்டேன்னு சொல்றானே வசுந்தரா.. எதுக்கு இப்படி ஊருக்கே கேட்கற மாதிரி சத்தம் போட்டுட்டு இருக்க? பையன் தோளுக்கு மேல வளர்ந்துட்டான்.. இதுக்கும் மேல இப்படி சத்தம் போடறது தப்பு.. நல்லா இல்ல. அவன் தெரியாம துளைச்சு இருப்பான்.. பேசாம போ.. ஏதோ பெருசா வர வேண்டியது இப்படி போச்சுன்னு எடுத்துப்போம்..” கோபாலகிருஷ்ணனின் குரல் அவரை அடக்க முற்பட்டது.
“என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க? அவன் சம்பாதிச்சு வாங்கி இருந்தா அந்த மதிப்பு தெரியும்.. எப்படி கொஞ்சம் கூட தொலைச்ச பதட்டமே இல்லாம நிக்கறான் பாருங்க.. எல்லாம் நீங்க கொடுக்கற இடம்..” அவரது குரலில் கடுப்பானவன்,
“உங்களுக்கு நான் அதுக்கும் மேல அஞ்சு மடங்கு சம்பாதிச்சு வாங்கித் தரேன். போதுமா? இப்போ என்னை ஆளை விடுங்க.. எனக்கு ப்ராஜெக்ட்க்கு போகணும்.. இன்னும் ஒரு வாரத்துல முடிச்சு நான் பிரிண்ட் எடுக்கணும்.” என்றவன், தனது பையை எடுத்துக் கொண்டு வெளியில் செல்ல, சுஜிதா யோசனையுடன் படி இறங்கி வந்தாள்.
அவளுக்கு எதிரில் வந்த கிஷோர், “என்ன உங்க ஆளு காலையிலேயே இப்படி திட்டு வாங்கிட்டு போறாரு? எப்பவுமே இப்படித் தானா? கழுத்துல போட்டுட்டு இருக்கற செயின ஒழுங்கா பார்த்துக்க முடியல.. உன்னை?” நக்கலாக இழுக்க, அவனை முறைத்தவள்,
அதைக் கண்டுக் கொள்ளாமல், “கிஷோர் வரியா வெளிய போயிட்டு வரலாம்.. சும்மா ஊரைச் சுத்திட்டு வரோம்ன்னு சொல்லிட்டு போகலாம்..” படபடப்பாகக் கேட்க, அவளது கையோ அவன் அணிவித்திருந்த செயினை வருடிக் கொண்டிருந்தது..
“ஹே என்ன ரெண்டு செயின் ஒரே மாதிரி இருக்கு..” என்று கேட்கவும், அவசரமாக ஒன்றை அவள் தனது சுடிதாரின் உள்ளே திணித்துக் கொள்ள,
தனது வாயில் போட்டுக் கொண்டவன், “அடிப்பாவி.. எங்கயோ விழுந்து காணாம போன செயின் இங்க இருக்கா? ஆனாலும் ரொம்ப அழுத்தம்.. பிடி கொடுக்காம பதில் சொல்றான்..” நக்கலடிக்க,
“உங்க காதலுக்கு நான் என்ன ஊறுகாயா? என்னை இழுத்துட்டு சுத்தற? அவன் என்னடான்னா என்னவோ நான் உன்னை அவன்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போற மாதிரி லுக் விடறான்.. கொலைவெறியில பார்க்கறான்.. என்னால முடியாது போ..” என்று சொல்லவும்,
“டேய்.. ப்ளீஸ்டா.. ப்ளீஸ்டா.. சூர்யா ரொம்ப டென்ஷனா கிளம்பிப் போனது போல இருக்கு. எனக்கு அவங்களைப் பார்த்து பேசணும்.. ப்ளீஸ்.. என் கூட வாயேன்..” என்று சொல்ல, அவளது கெஞ்சல்களுக்கு மனம் இறங்கியவன், அவளுடன் கிளம்ப சம்மதிக்க, இருவரும் வேகமாக காலை உணவை முடித்துக் கொண்டு, சூர்யாவின் ப்ராஜக்ட் சென்டரை நோக்கிச் சென்றனர்..