உயிரோவியம் நீயடி பெண்ணே – 4

love-quotes-couples-hold-my-heart

உயிரோவியம் நீயடி பெண்ணே – 4

4

அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சையை செய்தவள், ஓய்வறைக்குச் சென்று, அலுப்புத் தீர முகத்தைக் கழுவிக் கொண்டு தனது அறைக்குச் சென்றாள். “ஓகே சுஜி.. நெக்ஸ்ட் ஸ்டார்ட் பண்ணு.. யூ கேன் டூ இட்..” தனக்குள் சொல்லிக் கொண்டு, அடுத்து வந்த கர்பிணியைப் பரிசோதிக்கத் துவங்கினாள்.  

“பேபி நல்லா இருக்கு.. இதே மெடிசின ஃபாலோ பண்ணிக்கோங்க.. அடுத்து உங்களுக்கு ஆறாவது மாச ஸ்கேன் இருக்கு.. இந்த டேட்ல இந்த ஸ்கான் சென்டர்ல போய் பார்த்துட்டு வாங்க.. மத்தப்படி எல்லாமே நார்மலா இருக்கு..” அவர்களை பரிசோதித்து, புன்னகை முகமாகவே அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லி அனுப்பி விட்டு, நர்ஸ் கொண்டு வந்த காபியைக் கையில் வைத்துக் கொண்டு,

“அடுத்த பேஷன்ட்டை வரச் சொல்லுங்க..” என்று சொல்லிக் கொண்டே, தனது காபியை உரிஞ்சியப்படி, விலகி இருந்த திரையின் வழியாக உள்ளே  நுழைந்தவர்களைப் பார்த்தவள், உதட்டில் இருந்த காபிக் கப்பை மறந்து திகைத்துப் போனாள்.. உள்ளே வரும்பொழுதே ப்ரதாப், சூர்யாவிற்கு அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

“ஒரு நிமிஷம்.. மேடம் இதோ கூப்பிடுவாங்க.” நர்ஸ் சொல்லிவிட்டு, சுஜியைப் பார்த்தவள் குழம்பிப் போனாள்.. எப்பொழுதும் சாந்தம் தவழும் அந்த முகத்தில், இன்று பதட்டமும், குழப்பமும், வலியும் தெரிய, கையில் இருந்த காபியைக் கூட குடிக்காமல், சிலையென அமர்ந்திருந்தவளைப் பார்த்தவள், குழப்பத்துடன்,

“மேடம்.. என்னாச்சு? ஏன் காபியைக் குடிக்கல? சூடு ஆறிப் போச்சா? ஏன் முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு?” நர்ஸ் கேட்க, அந்தக் கேள்வியில் தன்னைச் சமாளித்துக் கொண்டவள், தலையை உலுக்கிக் கொண்டாள்.

“இல்ல.. இல்ல.. நான் குடிக்கிற பெர்பெக்ட் சூடு தான்.. ஏதோ யோசனைக்குப் போயிட்டேன்..” என்று சமாளித்தவள், வேகமாக அந்த காபியை குடித்துவிட்டு, ஒரு பெருமூச்சுடன், தனது முகத்தைத் துடைத்துக் கொண்டு,   

“அவங்கள உள்ள வரச் சொல்லுங்க..” சுஜிதா குரல் கொடுக்க, அவள் தான் மருத்துவர் என்பது தெரியாதது போல, அவர்களும் ஒரு பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தனர்..

ப்ரதாப், ஜைஷ்ணவி இருவரின் மனதின் ஒரு ஓரத்திலும், அவளுக்கு திருமணம் ஆகி இருக்குமோ என்ற பயம் பிடித்துக் கொண்டிருக்க, மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு, மெதுவாக உள்ளே நுழைந்தனர்..

அதுவரை ஜைஷ்ணவியின் நல்ல செய்தி என்று நினைத்து, வீடியோ காலில் அவர்கள் உள்ளே செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவன், சுஜிதாவின் குரலில் மின்னல் அடித்தாற் போல எழுந்து அமர்ந்தான்.  

“மாமா.. யாரு இப்போ பேசினது?” அமைதியாக இருக்க முடியாமல் அவன் கேட்க, அதற்கு பதில் சொல்லாத ப்ரதாப், சுஜிதாவின் முன்னே இருந்த இருக்கையின் அருகே சென்று அமரவும், பாக்கெட்டில் இருந்த மொபைலின் கேமிரா வழியாக, நெஞ்சம் படபடக்க தனது  கண் முன்னே தெரிந்தவளைப் பார்த்தவனுக்கு தனது கண்களை நம்ப முடியாமல் போனது.

தான் தூக்க கலக்கத்தில் இருக்கிறோம் என்று நினைத்து கண்களை கசக்கிக் கொண்டு அவன் மீண்டும் பார்க்க, தனது கண் முன்னால் தெரிந்த உருவத்தைப் பார்த்தவன், நீண்ட நெடு வருடங்களுக்குப் பிறகு பார்த்த அவளைக் கண்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கத் துவங்கினான்.  

“மாமா..” சூர்யாவின் குரல், ப்ளூ டூத்தின் வழியாக ஹை டெசிபலில் ஒலிக்க, அதைக் கேட்டு காதில் கொயின் என்று சத்தம் வரவும், ப்ரதாப் பல்லைக் கடித்தான்.

உள்ளே நுழைந்த ஜைஷ்ணவி, “சுஜி.. நீ.. நீயா?” திகைப்பாக அழைப்பது போல அழைக்க,

“அ… அ.. அக்கா.. நீங்க? நீங்க இங்க எங்க?” என்று திணறிய சுஜிதாவைப் பார்த்த ப்ரதாப்பிற்கு புன்னகை அரும்பியது..

அதற்குள் போனில், “மாமா.. மாமா.. என் சுஜி.. சுஜி.. நான் கனவு காணலையே..” பேச்சு வராமல் திணறியவன்,

“ஹே என் சுஜியை நான் பார்த்துட்டேன்.. என் சுஜியை நான் பார்த்துட்டேன்..” என்று அழுகையும், சந்தோஷமுமாக குதிக்க, ப்ரதாப் தொண்டையைக் கனைத்து அவனை நிகழ்வுக்கு கொண்டு வந்தான்..  

“மாமா என்னோட சுஜி.. அங்க தான் இருக்காளா? நீங்க அவளைத் தான் பார்க்கப் போனீங்களா? தெரிஞ்சு தான் போனீங்களா? தெரியாம போனீங்களா? மாமா.. ஏதாவது சொல்லுங்க.. ப்ளீஸ் சொல்லுங்க மாமா.. என் சுஜியை எப்படி கண்டுப்பிடிச்சீங்க? மாமா எனக்கு அவளோட குரலை கேட்கணும்.. மாமா.. மாமா..” வார்த்தை வராமல் திக்கியவன், முடிந்தால் மொபைலின் வழியே குதித்து விடுவான் போல பரபரக்க, அவனது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ப்ரதாப் நிற்க,  

“சுஜி.. நீ இங்கயா இருக்க? இந்த ஊருக்கு நீ எப்போ வந்த? நான் இங்க அந்து அஞ்சு வருஷம் ஆகுது..” ஜைஷ்ணவியின் குரல் நடுங்கியது.

“அக்கா.. நான் இங்க வந்து ரொம்ப வருஷமாச்சு.. இன்டர்ன் பண்றதுல இருந்தே இந்த ஊர்ல தான் இருக்கேன்க்கா.. நீங்க எப்படி இருக்கீங்க? நீங்க இந்த ஊருல எப்படி?” சுஜிதா கேட்க,   

“இதோ இவர் என் ஹஸ்பன்ட்.. நான் கல்யாணம் ஆன அப்பறம் இந்த ஊருக்கு வந்துட்டேன் சுஜி.. நான் நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்க? உன்னைப் பத்தி நினைக்காத நாளே இல்ல.. உன்னை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்..” நடிக்கலாம் என்று சொல்லிக் கொண்டு உள்ளே வந்தாலும், அவளை நேரில் பார்த்த ஜைஷ்ணவியும் உணர்ச்சி வசத்தில் பேசத் துவங்க, தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து ஜைஷ்ணவியின் கையைப் பிடித்துக் கொண்டவள்,

“நானும் உங்களை மிஸ் பண்ணுவேன் அக்கா.. ஏதாவது கணக்கு பார்க்கும்போது உங்க நியாபகம் வராம இருக்காது..” என்றவள், அவளது கன்னத்தை வருடி,

“ஹையோ எங்க ஜைஷ்ணவி அக்கா இன்னும் ரொம்ப க்யூட்டா ஆகிட்டாங்க.. சொல்லுங்கக்கா எப்படி இருக்கீங்க?” புன்னகையுடன் கேட்டு, ஜைஷ்ணவியின் கன்னத்தைக் கிள்ளியவள்,   

“இவரு தான் அண்ணாவா? செம ஸ்மார்ட்டா இருக்காரு. என்னைப் பத்தி சொல்லி இருக்கீங்களா?” ஜைஷ்ணவியுடன் கேட்டுக் கொண்டே,

“ஹாய் அண்ணா.. நான் சுஜிதா.. சின்னப் பிள்ளைல இவங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்தேன்.. இப்போ இங்க டாக்டரா இருக்கேன்.. கண்டிப்பா அக்கா என்னை சரியான வாலுன்னு சொல்லி இருப்பாங்க..” தன்னையே புன்னகையுடன் அறிமுகப்படுத்திக் கொள்ளவும், அதைக் கேட்ட சூர்யாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது..

“ஹே.. யார ஸ்மார்ட்டுங்கற? பிச்சிடுவேன்..” அவன் பேச, அதற்கு பதில் சொல்ல முடியாமல்,

‘என் மச்சானுக்கு என் மேல எவ்வளவு பொசசிவ்? விட்டா சண்டைப் போடுவான் போல..’ ப்ரதாப் நினைத்துக் கொள்ள,  

“என்னைப் பத்தி கேட்கறாளா பாரு? இவ சின்னப்பிள்ளைல இருந்தாளாம்.. இப்போ மட்டும் ரொம்ப பெரிய பொண்ணு ஆகிட்டாளா? அப்படியே தான் இருக்கா.. என் சுஜி அப்படியே தான் இருக்கா..” கண்ணீர் வழிய சூர்யா தன் பாட்டிற்குப் பேசிக் கொண்டிருக்க, ப்ரதாப்பிற்கு அவனை நினைத்து பாவமாக இருந்தது..

பிரதாப் பதில் சொல்லாமல் நிற்கவும், ஜைஷ்ணவியை அவள் கேள்வியாகப் பார்க்க, ஜைஷ்ணவி அவனது கையில் இடித்தாள்..

“என்னங்க அவ கேட்கறா.. நீங்க பதில் பேசாம நிக்கறீங்க?” அவனை இந்த உலகிற்கு இழுத்து வரவும்,                

“ஹாய் மா.. சாரி.. ஜைஷு சொன்னதை வச்சு நீங்க ரொம்ப பெரிய பொண்ணுன்னு நினைச்சேன். க்யூட் லிட்டில் சிஸ்டர் போல இருக்கவும், கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்.. அது தான்.. ஜைஷு உங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்கா.. அவளோட பெஸ்ட் ஸ்டுடென்டாமே நீங்க? அவ்வளவு சூப்பரா படிப்பீங்களாமே..” ப்ரதாப் சொல்லவும், ஒரு அழகிய புன்னகையை சிந்தியவள்,

“அதெல்லாம் சும்மா சொல்லி இருப்பாங்க.. அப்போ எல்லாம் நான் சரியான வாலு..” என்றவள்,  

“சொல்லுங்கக்கா.. என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க? எதுக்கு ஹாஸ்பிடல்க்கு? உடம்புக்கு என்னக்கா?” கேள்வியாக ஜைஷ்ணவியைப் பார்க்க, ஜைஷ்ணவி தான் வந்த விஷயத்தைச் சொல்லத் துவங்கினாள்.

“எங்களுக்கு மேரேஜ் ஆகி எட்டு வருஷம் ஆகுது சுஜி.. இன்னும் குழந்தை இல்ல.. முன்ன வீட்ல சொன்னாங்கன்னு பக்கத்துல டாக்டர் கிட்ட போனோம்.. ஆனா.. அவங்க கொடுத்த மருந்து எனக்கு அலர்ஜி ஆகி ரொம்ப கஷ்டமா போச்சு.. அப்பறம் இவரு ட்ரீட்மெண்ட் எல்லாம் ஒண்ணும் வேண்டாம்ன்னு சொல்லிட்டார். ஆனா. வருஷம் தான் ஆகுது.. ஒண்ணுமே இல்ல. அது தான்..” தயங்கித் தயங்கி, தலையை குனிந்த நிலையில் ஜைஷ்ணவி சொல்லச் சொல்ல, அவளது கண்களில் கண்ணீர் இறங்க, சுஜிதாவின் உள்ளுக்குள் எதுவோ அழுத்துவது போல இருக்க, அவசரமாக அவளது கையைப் பிடித்துக் கொண்டாள்..

அவளது கைகள் ஒரு மாதிரி சில்லிட, “சுஜி..” என்று ஜைஷ்ணவி அழைக்க, தன்னை சுதாரித்துக் கொண்டவள், 

“அக்கா.. இதுக்கு எல்லாம் அழலாமா? முதல்ல கண்ணைத் துடைங்க.. நமக்கு ட்ரீட்மென்ட்டுக்கு போறதுக்கு முன்னால மனசுல தைரியமும் நம்பிக்கையும் வேணும்.. அது தான் ட்ரீட்மெண்ட்ல முதல் மருந்து.. என்ன?” என்று கேட்டவள், அவள் தலையசைக்கவும்,

“சரி.. இப்போ ஏதாவது ஸ்கான் இல்ல டெஸ்ட் ஏற்கனவே எடுத்து இருக்கீங்களா? அப்படி அலர்ஜி ஆகற அளவுக்கு என்ன மருந்து கொடுத்தாங்க?” என்று கேட்டுக் கொண்டே, ஜைஷ்ணவி கொடுத்த ரிப்போர்ட்களை வாங்கிப் பார்க்கத் துவங்கினாள்..

வலது கை அந்த ரிப்போர்ட்களில் குறிப்பு எடுக்க, இடது கை அவளது கழுத்தில் இருந்த ஒரு மெல்லிய சங்கியிலில் இருந்த மோதிரத்தை பிடித்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஜைஷ்ணவிக்கு அதிர்ச்சியுடன் கண்கள் கலங்கிப் போனது.. அவள் ப்ரதாப்பை நிமிர்ந்துப் பார்க்க, அந்தச் சங்கிலியைப் பார்த்த சூர்யாவோ, விம்மத் துவங்கினான்.

“என்னோட செயினை இன்னும் பத்திரமா போட்டுட்டு இருக்கா.. என்னை அவ மறக்கலையா?” அவனது குரல் அவ்வளவு வலியுடன் வந்தது.  

“உங்க ஸ்கான் ரிப்போர்ட்ல எல்லாமே நார்மலா தானே இருக்கு. ப்ளட் டெஸ்ட் எல்லாமும் நார்மல் தான்.. ஆனா இந்த மெடிசின் சிலருக்கு ஒத்துக்காது.. மே பி அதுனால கூட உங்களுக்கு அலர்ஜி வந்திருக்கலாம்.. அவங்க என்ன சொன்னாங்க?” சுஜிதா கேட்க,

“அவங்களும் அது தான் சொன்னாங்க. அலர்ஜிக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்க.. அப்பறம் நான் போகல.. இவரு தான் அலர்ஜின்னா வேண்டான்னு சொல்லிட்டாங்க..” என்று சொன்ன ஜைஷ்ணவி அவளை எதிர்ப்பார்ப்புடன் பார்க்க, பேனாவைத் தட்டிக் கொண்டே சுஜிதா சேரில் சாய்ந்து அமர்ந்து, மீண்டும் அந்த ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்டுகளைப் பார்க்கத் துவங்கினாள்..

“உங்க லாஸ்ட் பீரியட்ஸ் டேட் சொல்லுங்க..” என்று கேட்டவள், அவள் சொன்னதும், அதை கணக்கு பார்ப்பதற்காக அவளது டேபிளில் இருந்த சிறிய கேலண்டரைப் பார்க்க, ஜைஷ்ணவியின் பார்வை அவளைத் தொடர்ந்த பொழுது, டேபிளில் இருந்த சிறிய குழந்தை பொம்மையின் மேல் விழுந்தது.

அதில் பேனாவினால் ‘சுஜா (SuJa)’ என்று ஆங்கிலத்தில் எழுதி இருக்க, அதைப் பார்த்தவள், சுஜிதாவை ஆர்வமாகப் பார்த்தாள்..

“மாமா.. மாமா.. ஐ லவ் யூ.. லவ் யூ மாமா.. ஹையோ என் சுஜி என்னம்மா பேசறா.. கண்கொள்ளா காட்சியா இருக்கு.. இவ்வளவு வருஷத்துக்கு அப்பறம் அவளோட தரிசனம் எனக்கு இப்படியா கிடைக்கணும்? அந்த கெத்தப் பாருங்க.. என் தங்க மயிலே.. உம்மா..” சூர்யா ரசித்துக் கொண்டிருக்க, அவனுக்கு பதில் சொல்ல முடியாமல், தன்னிடம் இருந்த பேகில் இருந்த ஜைஷ்ணவியின் போனை எடுத்தவன், 

“கொஞ்சம் பேசாம இரேண்டா.. நீ வேற நடுல. நான் அவ சொல்றதை கவனிக்கிறதா இல்ல நீ பேசறதை கவனிக்கிறதா?” அதில் இருந்து அவனுக்கு மெசேஜ் செய்ய, சூர்யாவிடம் இருந்து ‘சாரி’ என்ற பதில் வந்தது..

“ஹ்ம்ம். ஓகேக்கா.. நான் இப்போ சும்மா ஒரு நார்மல் ஸ்கேன் பண்ணிப் பார்த்துடறேன்.. ஒரு டேப்லெட் எழுதித் தரேன்.. அது சத்து மாத்திரை தான்.. அது போட ஸ்டார்ட் பண்ணுங்க.. சில டெஸ்ட் எல்லாம் எழுதித் தரேன்.. ஒருவேளை இந்த டைம் பீரியட்ஸ் ஆகிட்டா, செகண்ட் டே வந்து நான் தர டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு என்னை வந்து பாருங்கக்கா.. நாம அந்த மந்த்ல இருந்து ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணலாம்.. கவலைப்படாதீங்க. சீக்கிரம் ஒரு ஜூனியர நீங்க பார்க்கலாம்..” என்று நம்பிக்கைத் தந்தவள்,

“அதோ அங்க வாங்க.. ஸ்கான் பார்க்கலாம்..” என்று அழைக்க, ஜைஷ்ணவி அவளுடன் சென்றாள்..

ப்ரதாப் அங்கிருந்த பொருட்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுது அவளது டேபிளில் தத்து எடுப்பதற்காக பதியப்படும் படிவம் இருக்க, அதில் அவளது பெயரையும், அவளது முகவரியையும் நிரப்பி இருப்பதையும் பார்த்தவன் அதிர்ந்துப் போனான்..

“இவ மனசுல என்ன இருக்கு? எதுக்கு இப்போ இந்த ஃபார்ம் வாங்கி வச்சிருக்கா? இவளுக்கா? இவளுக்கு எதுக்கு? இவளைப் பார்த்தா கல்யாணம் ஆனது போலவே இல்லையே..” என்று யோசித்துக் கொண்டே, வீடியோவை ஆஃப் செய்துவிட்டு, நைசாக படம் எடுத்துக் கொண்டவன், அதன் மேலே வைக்கப்பட்டிருந்த ஒரு குழந்தையின் பொம்மையைப் பார்த்தான். அதில் குறித்திருந்த பெயரைப் பார்த்தவன்,  தனக்குள் புன்னகைத்துக் கொண்டு, அதையும் படம் பிடித்துக் கொண்டான்.   

ஜைஷ்ணவியை பரிசோதித்தவள், அதில் திருப்தி கொண்டு, “அக்கா.. எவ்ரிதிங் இஸ் பெர்பெக்ட்.. நீங்க சரிப் பண்ணிக்கிட்டு அங்க வாங்க.. நான் சொல்றேன்..” என்றவள், க்ளைவுசை கையில் இருந்து எடுத்துக் கொண்டே வெளியில் வர, மீண்டும் தனது மொபைலை பாக்கெட்டில் போட்டுக் கொண்டவன், அவர்களைத் திரும்பிப் பார்க்க, ப்ரதாப்பின் மொபைலின் வழியே சூர்யா அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்..

“எப்படி இருக்காம்மா.. ஒண்ணும் பிரச்சனை இல்லையே.” கவலையாக ப்ரதாப் கேட்க,

“இல்லண்ணா எல்லாமே சரியா தான் இருக்கு. இதுக்கும் மேல நாம அடுத்த லெவல் ட்ரீட்மெண்ட் தான் பார்க்கணும்..” என்றவள், ஜைஷ்ணவியும் வரவும்,

“இதுக்கு நாங்க மெடிக்கல் டெர்ம்ஸ்ல அன்எக்ஸ்ப்ளைன்ட் இன்பர்டிலிட்டின்னு சொல்லுவோம். காரணமே இல்லாம கரு உண்டாகாம இருக்கறது..  ஒண்ணுமே பிரச்சனை இல்ல.. யூடெரஸ் எல்லாம் நல்லா இருக்கு.. நீங்க நான் சொன்ன மாத்திரை சாப்பிடுங்க.. எந்த அலர்ஜியும் வராது.. அதே போல டெஸ்ட் எடுத்துட்டு வாங்க.. நாம பார்க்கலாம்.. உங்களுக்கு அலர்ஜி ஆகாதது போல மருந்து கொடுத்து என்ன செய்யறதுன்னு பார்க்கலாம்..” என்றவள், தனது டேபிளில் இருந்த டெஸ்ட்கள் குறிக்கப்படும் பேடை எடுத்து, அதில் டிக் செய்துக் கொடுத்து விட்டு,

“உங்க ரெண்டு பேரோட டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் எடுத்தும் ரொம்ப நாளாச்சு இல்ல.. அதனால இப்போ நாம ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால புதுசா ஒண்ணு நம்ம ரெஃபரன்ஸ்க்கு எடுத்துக்கலாம்.” என்றவள், அவளிடம் மருந்து சீட்டை நீட்ட, அதைப் பெற்றுக் கொண்டவள்,   

“சுஜி.. அப்படியே உன்னோட போன் நம்பரையும் தா சுஜி.. ஏதாவது அவசரம்னா.. டவுட்ன்னா கேட்கலாம்ல.. அதுக்குத் தான்..” ஜைஷ்ணவி கேட்கவும், அவளைப் பார்த்து உதட்டைக் கடித்து, தனது செயினை ஒருமுறை அழுத்தி விடுவித்தவள், ஒருபெருமூச்சுடன் தனது நம்பரை அந்த ப்ரெஸ்க்ரிப்ஷனில் எழுதிக் கொடுக்க, ஜைஷ்ணவி அதை வாங்கிக் கொண்டு அவளை ஏக்கமாகப் பார்த்தாள்..

“தேங்க்ஸ் சுஜி.. கண்டிப்பா எனக்கு குழந்தை பிறக்கும்ல.. எனக்கு யாரோட பேச்சையும் கேட்க முடியல.. எல்லாருமே என்னை ரொம்ப பேசறாங்க..” தொண்டையடைக்க மீண்டும் அவள் கேட்கவும், ப்ரதாப் அவளது கையை அழுத்த, அதைப் பார்த்த சுஜிதா புன்னகைத்து,   அவளது அருகே வந்து தோளோடு அணைத்துக் கொண்டாள்.

“கண்டிப்பா அக்கா.. நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும்.. நம்பிக்கை.. அண்ணா மாதிரி ஒரு சப்போர்ட்டிவ் ஹஸ்பன்ட் கிடைச்சு இருக்க அப்போ யாரு வேணா என்ன வேணா பேசிட்டு போகட்டும்.. விடுங்க.. நாம பார்த்துக்கலாம்..” என்று தைரியம் சொல்ல,

“அதைத் தான் சொல்றேன். அப்படி இல்லைன்னா என்ன ஒரு குழந்தையை எடுத்து நாம வளர்த்துக்கலாம்ன்னு சொல்றேன்.. கேட்க மாட்டேங்கிறா..” ப்ரதாப் சொல்லவும், ஒரு சில நொடிகள் அவளது முகம் வாடி, பின் உடனே சரி செய்துக் கொண்டு புன்னகைக்கவும், அவளது கழுத்தில் இருந்த செயினை ஜைஷ்ணவி எடுத்துப் பார்க்க, அதைச் சட்டென்று அவளிடம் இருந்து பிடுங்கியவள், பதட்டத்துடன் தனது சட்டையின் உள்ளே திணித்துக் கொண்டாலும், அவளது கண்கள் கலக்கத்துடன் ஜைஷ்ணவியை நோக்கி யாசிக்கத் துவங்கியது..  

அதைக் காணப் பொறுக்காதவள், அவளது கன்னத்தைத் தட்டி, “இது…” என்று தொடங்கும் நேரம்,    

என் சிரிப்பு உடைஞ்சி சிதறிக்கெடக்கு…

எப்போ வருவ எடுத்துக்க…

உன் நினைப்பில் மனசு கதறிக்கெடக்கு…

என்னக் கொஞ்சம் சேத்துக்க…

மனசு வாசனை வீசும் திசையில

உன்னத் தேடி ஓடுனேன்

கலைஞ்ச காத்துல எந்த மூச்சு

உன்னக்காட்டும் தேடுனேன்

 

அவளது செல்போன் குரல் கொடுக்கவும், அதைக் கேட்டவள், முகம் கசங்க, ஜைஷ்ணவியையேப் பார்க்க, ஒருமுறை அடித்து ஓய்ந்த அவளது செல்போன் மீண்டும் இசைக்கத் துவங்கியது..

சூர்யாவின் அழு குரலில், முதலில் மீண்ட ப்ரதாப், “சுஜி.. செல் அடிக்குது பாருங்க..” என்று சொல்ல, தலையை உலுக்கிக் கொண்டவள், வேகமாக ஜைஷ்ணவியிடம் இருந்து நகர்ந்து, போனை எடுத்து,

“ஹலோ.. ஹான் சொல்லுங்க ராஜிம்மா..” என்றவள், அந்தப் பக்கம் கேட்ட கேள்வியில்,

“இல்ல.. ஒண்ணும் பிரச்சனை இல்ல.. அந்த சர்ஜரி நல்லா போச்சு..” என்று பேசத் துவங்க, அதற்கு மேல் அவளை தொல்லை செய்யாமல், ஜைஷ்ணவி தலையசைத்து விடைப்பெறவும்,

“ராஜிம்மா.. ஒரு நிமிஷம்..” என்றவள்,

“அக்கா.. உங்க நம்பர் தாங்க.. நீங்க மட்டும் என் நம்பர் வாங்கிக்கிட்டீங்க? மெசேஜ் வந்தா நான் யாருன்னு கண்டுப்பிடிக்கிறது?” என்று கேட்கவும், ஜைஷ்ணவி புன்னகையுடன் அவளது நம்பரை அங்கிருந்த நோட்பேடில் எழுதி வைக்க,

“சூப்பர்க்கா. நான் அப்பறம் ராத்திரிக்கு மேல மெசேஜ் பண்றேன்.. பை அக்கா.. டேக் கேர்..” என்றவள், அவர்களுக்கு விடை கொடுத்து, தொடர்ந்து பேசத் துவங்க, ப்ரதாப்பிற்கு அவளது ரிங்க்டோனைக் கேட்டு தொண்டையடைக்க, அதை விட, அந்தப் பாடலைக் கேட்ட சூர்யாவிற்கு அழுகை வெடித்தது..

அவன் தேம்பிக் கொண்டிருக்க, வெளியில் வந்த ஜைஷ்ணவி, ப்ரதாப் இருவரின் மனமும் கனத்துக் கொண்டிருந்தது. அதுவும் அவளது முகம், சூர்யா சம்மந்தப்பட்ட ஒன்றைப் பற்றி பேச வரும்பொழுது கசங்கிய விதம், அவளை கவனித்துக் கொண்டிருந்த ப்ரதாப்பிற்கு வருத்தத்தைக் கொடுத்தது..

அவர்கள் இருவரும் அமைதியாக இருக்கவும், “ஹலோ.. ஹலோ..” என்று சூர்யா அங்கு கத்திக் கொண்டிருக்க,

“வெளிய வந்து கால் பண்றேன் சூர்யா.. கொஞ்சம் பொறுமையா இரு.. முகத்தை கழுவிக் கிட்டு வந்து உட்காரு.. நான் வரேன்.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்ற ப்ரதாப், அவனிடம் சொல்லிக் கொண்டே, பில்லை கட்டிவிட்டு, அங்கிருந்த லேபில் மீதி விவரங்களைக் கேட்டுக் கொண்டு, வண்டியின் அருகே வந்தனர்..

ஜைஷ்ணவி அமைதியாக வரவும், “ஜைஷு.. என்ன ஆச்சு? ஏன் அமைதியா வர?” ப்ரதாப் கேட்க,

“சூர்யாவைப் பத்தி ஒரு வார்த்தை அவ கேட்கலையேங்க.. அவன் மேல அவ அவ்வளவு கோபமா இருக்காளா?” வருத்தமாகக் கேட்க, மறுப்பாக தலையசைத்த ப்ரதாப்,

“உன் தம்பி அவளைப் பார்த்து கதறின கதறல் ஒரு பக்கம் நான் கேட்டுட்டு இருந்தேன். மறுபக்கம் அவ அமைதியா இருந்தாலும், அவ முகம் சொல்ல முடியாத வலியைக் காட்டினதையும் கவனிச்சேன்.. நீ அந்த செயினைப் பிடிச்ச போது அவ முகத்துல அவ்வளவு பயமும் பதட்டமும் தெரிஞ்சது.. அதை விட அந்த பாட்டு.. அவ பாவம்.. அவ என்ன நினைச்சு அவனைப் பத்தி கேட்கலையோ? அவ மனசுல என்ன வலி இருக்குன்னு நமக்கு என்ன தெரியும்? உன் தம்பி அடிக்கடி என் வாய்.. என் குடினாலன்னு சொல்றான்.. அந்த குடினால அவன் என்ன செஞ்சான்னு யாருக்கு தெரியும்? நான் அவன்கிட்ட பேசறேன்.. சரி.. உனக்கு அதுக்கும் மேல வேற ஏதாவது தெரியுமா?” ப்ரதாப் கேட்க,

“ரெண்டு பேருக்கும் என்ன சண்டைன்னு தெரியலைங்க.. அவ எம்பிபிஸ் படிக்க கோயம்பத்தூர் போன பிறகு அவங்க அம்மா, அவங்க அப்பா கூட மஸ்கட்ல போய் ஒரு நாலு அஞ்சு மாசம் போல இருந்துட்டு வாருவாங்க. அவங்க அப்பா அங்க தான் வேலை செஞ்சிக்கிட்டு இருந்தார்..

சுஜி நயன்த்துக்கு இங்க வந்து ஸ்கூல்ல சேர்ற வரை அங்க தான் எல்லாரும் ஒண்ணா இருந்தாங்க. அப்பறம் இவளோட படிப்புக்காக அவங்க அம்மாவும் சுஜியும் இங்க வீடு கட்டிக்கிட்டு வந்துட்டாங்க. இவ படிக்க அந்த ஊருக்குப் போனதும் அவங்களும் இங்க வீட்டைக் காலி பண்ணிட்டு அங்க அவளுக்கு காலேஜ் பக்கத்துலையே ஒரு வீட்டை பார்த்து செட் பண்ணி வச்சிட்டு மஸ்கட் போயிட்டாங்க..

அவ அங்க போனதுனால ரெண்டு பேருக்கும் அடிக்கடி நேர்ல பார்க்க முடியாததுனால இவன் சில வாரம் அவளைப் பார்க்க காலேஜ் படிக்கும் போது ப்ரெண்ட்ஸ் கூட க்ரூப் ஸ்டடி பண்றேன்னும்.. சென்னைல ஆபிஸ்ல ஜாயின் பண்ணின அப்பறமும் வீக்கென்ட்ல அவளைப் பார்க்க கோயம்பத்தூர் போவான்.. அப்பறம் தான் இவனுக்கு யூஎஸ்ல படிக்க இடம் கிடைக்கவும், அவன் போயிட்டான்.  

அவங்க வீடு காலி பண்ணிட்டு இருந்த பொழுது தான், எங்க அம்மா சுஜியோட அம்மா கூட சண்டைப் போட்டு, சுஜியைப் பத்தி ரொம்ப மோசமா பேசிட்டாங்க. ஆனா.. அதுக்கு அப்பறம் அவங்க இங்க வரவே இல்ல..” ஜைஷ்ணவி விஷயத்தைச் சொல்ல, ப்ரதாப் திகைத்துப் போனான்..

“ஒருவேளை உங்க அம்மா பேசினதுனால..” அவன் சொல்லி முடிப்பதற்குள்,

“இல்ல.. இல்ல.. அதுக்கு அப்பறம் யூ.எஸ். போற வரை ரெண்டு வருஷமா அவன் அவளைப் பார்க்க போயிட்டு தானே இருந்தான்..” அவசரமாக அவள் சொல்லவும்,

“அப்படி என்ன உங்க அம்மாவுக்கு வாய்ன்னு கேட்கறேன்? அவங்க அப்பா அப்போ இவங்க கூட இல்லையா?” அவன் சற்று கோபமாகக் கேட்க,

“அந்த வீடு கட்டத் துவங்கினதுல இருந்தே எங்க அம்மா சும்மா எதையாவது வம்பு இழுத்துக்கிட்டு இருப்பாங்க. அப்பா தான் அவங்களை கொஞ்சம் அடக்கி வச்சு இருந்தாரு.. அந்த தடவ வீடு காலி பண்ணிட்டு இருக்கும்போது, லாரில சாமான் ஏத்தும் போது ஒரு பேப்பர் எங்க வாசல்ல வந்து விழுந்திருச்சு.. அதுக்கு சண்டைப் போட்டு.. அவங்க அம்மா காதுபடவே, ‘அம்மா அப்பா ஊர்ல இல்லாம, ஒரு பொண்ணை தனியா வீடெடுத்து தங்க வச்சிட்டு பெரிய கனவு எல்லாம் கண்டுக்கிட்டு இருக்காங்க.. பாரு.. கடைசியில படிக்காம பசங்க கூட ஊரைச் சுத்திட்டு ஏமாத்த போறா.. என்ன காசு இருந்து என்ன செய்யறது? பொண்ணு கெட்டது கெட்டது தானேன்னு ஒரு மாதிரி பேசிட்டாங்க..” என்று சொல்லவும் ப்ரதாப் பல்லைக் கடித்தான்.

“அதோட விட்டாங்களா? பொண்ணு கூட இல்லாம இந்த அம்மாவுக்கு வயசான காலத்துல இப்போ என்ன அப்பா கூட தனிக் குடித்தனம்ன்னு எல்லாம் மோசமா பேசிட்டாங்க.. அதுக்கு சுஜியோட அம்மா கோபமா யாரைப் பத்தி என்ன பேசறீங்கன்னு கேட்டதுக்கு.. உன்னைப் பத்தி தான்னு புரிஞ்சா சரி.. பொட்ட பிள்ளைய தனியா விட்டுட்டு உங்களுக்கு வெளிநாட்டுல என்ன கொண்டாட்டம்ன்னு எல்லாம் பேசிட்டாங்க.. அதோட அவங்க காலி பண்ணிக்கிட்டு வீட்டை வாடகைக்கு விட்டுட்டு போயிட்டாங்க.. எனக்குத் தெரிஞ்சு அவங்க அம்மா, அதை சுஜிக்கிட்ட சொல்லலைன்னு நினைக்கிறேன்.. ஏன்னா சுஜி அதைப் பத்தி சூர்யாக்கிட்ட எதுவுமே கேட்கல..” ஜைஷ்ணவி கண்ணீருடன் சொல்ல, ப்ரதாப் அவளது கையைத் தட்டிக் கொடுத்தான்.

“அவங்க வீட்டைக் காலி பண்ணிட்டு போன அப்பறம் சுஜியை நான் பார்க்கற வாய்ப்பே இல்ல.. சூர்யா போயிட்டு வரும்போது அவங்க எடுத்துக்கற போட்டோல தான் பார்ப்பேன். அவன் யூ.எஸ். போன அப்பறம், அவ எப்படி இருக்கான்னு கேட்க, போன் பண்ணின அப்போ தான் அவளோட நம்பர் ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்துச்சு. அப்போ தான் இவன்கிட்ட கேட்டதுக்கு சண்டைப் போட்டு வந்துட்டேன்னு சொல்லி, அவளைச் சமாதானம் செய்யச் சொன்னான்.

சரி அவங்க அம்மாகிட்ட பேசி,  வாங்கலாம்ன்னு நான் அவங்க வீட்ல வாடகைக்கு இருந்தவங்க கிட்ட கேட்டேன்.. அதுக்கு அவங்க யாருக்கும் போன் நம்பர் தரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்கன்னு சொன்னாங்க.

யூ.எஸ்.ல இருந்து என் கல்யாணத்துக்கு வந்தவனும், அவளை கான்டாக்ட் பண்ற எல்லா வழியையும் அடைச்சிட்டான்னு புலம்பிட்டு இருந்தான்.. அவளோட மெயில், ஸ்கைப், பேஸ்புக் எல்லாமே அவ க்ளோஸ் பண்ணிட்டா. என்னால அவகிட்ட பேச முடியலன்னு புலம்பிட்டு இருந்தான்.. ஒருநாள் ஏதேதோ சாக்கு சொல்லி அவளைப் பார்க்க அவ காலேஜ்க்கு கிளம்பிப் போனான்.” அவள் சொல்லவும்,

“அவ இவனைப் பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டாளா?” படபடப்பாக ப்ரதாப் கேட்க,  

“இல்ல.. அன்னைக்கு டுயூட்டி டாக்டர்ஸ் எல்லாம் ஸ்ட்ரைக் பண்ணிட்டு இருந்ததுனால செக்யூரிட்டி ரீசன்னு சொல்லி இவனை உள்ளே விடல.. வெளிய வந்த ஒண்ணு ரெண்டு டாக்டர்ஸ் கிட்டயும் அவ பேரைச் சொல்லிக் கேட்டதுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க போல.. எதுவுமே செய்ய முடியாம, வீட்டையும் கண்டுப்பிடிக்க முடியாம திரும்ப வந்துட்டான்.

அப்பறம் அவனுக்கும் அங்க லாட்டரியில விசா கிடைக்காம ரொம்ப டென்ஷன் ஆகிருச்சு. அவனால நாலு வருஷத்துக்கு இந்தியா வரவே முடியல.. வந்த அப்போவும் விசாரிச்சா அவளைப் பத்தி யாருக்குமே தெரியல. அவங்க காலேஜ்ல சில டாக்டர்ஸ்கிட்ட விசாரிச்ச பொழுதும், ‘அவங்களுக்கா வேணும்னா அவங்க கான்டாக்ட் பண்ணுவாங்க.. நாங்க யாரோட பெர்சனல் டீட்டைல்சும் தர முடியாது’ன்னு சொல்லிட்டாங்க..  

அப்பறமும் அவ பேரைப் போட்டு நெட்ல தேடித் பார்த்த பொழுதும், அவனால அவளைக் கண்டு பிடிக்க முடியல.. அவ எப்பவுமே ஹார்ட் சர்ஜன் ஆகணும்ன்னு சொல்லிட்டு இருப்பா போல.. அதனால அவன் அந்த இதுல அவளைத் தேடிட்டு இருந்தான்.. கடைசியில அவ கைனகாலஜி படிச்சு இருக்கா.. அவன் இதை எதிர்பார்த்தே இருக்க மாட்டான்..” வண்டியில் ஜைஷ்ணவி சொல்லிக் கொண்டே வர, ப்ரதாப்பின் மனதினில் ஆயிரம் யோசனைகள் ஓடத் துவங்கி இருந்தது.

‘அப்படி கண்காணாம போற அளவுக்கு என்ன பண்ணி இருப்பான்?’ என்ற கேள்விகள் மனதினில் அணிவகுக்க, வீட்டிற்குச் சென்று, ஜைஷ்ணவியை விட்டுவிட்டு,

“நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டு, சென்றவன், அவனுக்காக காத்திருந்த சூர்யாவிற்கு அழைத்தான்..    

error: Content is protected !!