உயிரோவியம் நீயடி பெண்ணே – 7

20200715052029-jichang

உயிரோவியம் நீயடி பெண்ணே – 7

7

ஒரு நள்ளிரவு நேரமது.. அந்த நள்ளிரவு நேரத்தில் காரில் இருந்து பெட்டியை இறக்கிக் கொண்டிருந்தான் சூர்யா.. “என்னடா இத்தனை பெட்டியை தூக்கிட்டு வந்திருக்க? இங்கயே ஒட்டு மொத்தமா வந்துட்டியா?” ப்ரதாப் கேலி செய்ய,

“இப்போதைக்கு முழுசா இல்ல மாமா.. ஆனா.. முக்கியமான பொருள் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்.. கொஞ்சம் திங்க்ஸ் பேக் பண்ணி வச்சிட்டு கார்கோல போடுன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்..” என்றவன், இரண்டு பெட்டியையும் கீழே எடுத்து வைத்துவிட்டு, தனது லாப்டாப் பையை மாட்டிக் கொண்டு, மற்றொரு சிறிய பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு திரும்பியவன், சிலையென நின்றான்..

அங்கு அவள்.. அவனது தேவதை.. அந்த நள்ளிரவு நேரத்தில், தனது பையுடன் அவசரமாக படிகளில் இறங்கி வர, நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு நேரில் அவளைப் பார்த்தவன், சிலையென நின்றான்..   

“ஹான்.. சிஸ்டர் இதோ வீட்டை விட்டுக் கிளம்பிட்டேன்.. ரெண்டு நிமிஷத்துல நான் ஹாஸ்பிடல்ல இருப்பேன்.. நீங்க அவங்களை லேபர் ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுங்க..” என்று பேசிக் கொண்டே அவனைக் கடந்து செல்ல, அவளது நடையின் வேகத்தைப் பார்த்தவனின் கண்களில் கண்ணீர்.

“சுஜி..” இதயம் அவளது பெயரை இன்பமாக உச்சரிக்க, அவனது மனதோ அவளது பின்னோடு சென்றது.. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் பெட்டியை அப்படியே கீழே விட்டவன், இயந்திரம் போல அவளைப் பின்தொடர்ந்துச் சென்றான்.

அவனைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட ப்ரதாப், அவனது பெட்டியை ஓரமாக வைத்துவிட்டு, காரை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு சூர்யாவிற்காக காத்திருந்தான்..

வேகமாக நடந்த சுஜிதாவை சூர்யா பின்தொடர்ந்துச் செல்ல, சற்று தூரம் சென்று, தன்னை யாரோ பின்தொடர்வது போல இருக்கவும், சுஜி தனது ஹான்ட்பேகில் கையை நுழைத்தபடி, நின்றுத் திரும்பிப் பார்க்க, சட்டென்று சுதாரித்த சூர்யா, ஒரு காரின் பின்னால் ஒளிந்துக் கொண்டான்..

சுற்றி முற்றிப் பார்த்தவள், யாரும் இல்லமால் போகவும், மீண்டும் தனது நடையை வேகமாக தொடர்ந்து, ஹாஸ்பிடலுக்குள் நுழையவும், தனது தலையை கோதிக் கொண்டே, கண்களைத் துடைத்துக் கொண்டவன், மீண்டும் அவள் உள்ளே சென்ற மருத்துவமனையை திரும்பிப் பார்த்து விட்டு மெல்ல நடந்து வந்தான்..      

இத்தனை வருடங்களாகத் தவமாய் தவமிருந்து, கண்கள் பார்க்கக் காத்திருந்த ஓவியம்.. இத்தனை வருடங்களும் இதயம் துடித்ததற்கான அர்த்தம்.. ஒவ்வொரு முறை இதயம் துடிக்கும்பொழுதும் ஓங்கி குரல் கொடுக்கும் பெயர்.. அவனது உயிரின் உயிரானவளைப் பார்த்ததும், கண்கள் உடைப்பெடுக்க, மெல்ல திரும்பி நடந்து வீட்டிற்கு அருகில் வந்தான்.. அவனைப் பார்த்துக் கொண்டு ப்ரதாப் நிற்க, கண்களைத் துடைத்துக் கொண்டவன், ப்ரதாப்பின் அருகில் இருந்த பெட்டியை கைகளில் எடுத்துக் கொண்டான்..         

அவனது முகத்தையே ப்ரதாப் பார்த்துக் கொண்டிருக்க, சூர்யாவோ சுஜிதாவைப் பார்த்த நொடிகளில் உறைந்து இருந்தான்.. கம்பீரமாக.. அந்த நள்ளிரவிலும், தனது கடமையைச் செய்வதற்காக, சிறிது கூட பயமே இல்லாமல் செல்பவளைப் பார்த்தவனின் மனதினில் அவ்வளவு பெருமிதம்..

தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு, அவன் மெல்லப் படியேற, “ஏண்டா லிப்ட்ல போகலாம்ல? இப்போ இத்தனையையும் தூக்கிட்டு ஏறப் போறியா?” ப்ரதாப் கேட்க,

“ம்ப்ச்.. நான் மெல்ல ஏறி வரேனே.. செகண்ட் ப்ளோர் தானே வீடு? நீங்க வேணா எல்லாத்தையும் எடுத்துட்டு லிப்ட்ல போங்க மாமா.. நான் மெல்ல நடந்து வரேன். எனக்கு கொஞ்சம் நேரம் இப்படியே இருக்கணும்..” சூர்யா சொல்லிவிட்டு மெல்ல படிகளில் ஏற,

“ஏண்டா இந்த காதல் வந்தா இப்படித் தான் இருப்பீங்களோ? அவ நடந்த தடத்துலையே போகணுமோ?” கேலி செய்துக் கொண்டே லிப்டில் பெட்டிகளை வைத்தவன், உள்ளே சென்று இரண்டாவது தள பட்டனை அமுக்கிவிட்டு, மெல்ல சூர்யாவுடன் படியேறினான்..

இத்தனை வருடங்களுக்குப் பிறகு, அவளைப் பார்த்த அந்த நொடிகளை ரசித்துக் கொண்டு வந்தவனை தொல்லை செய்யாமல் அவனுடன் ஏறிய ப்ரதாப், சுஜிதாவின் வீட்டின் அருகே வரவும்,         

“இதோ இது தான் சுஜியோட வீடு..” என்று காட்ட, அவளது வீட்டின் வாசலை திரும்பிப் பார்த்தவன், அதில் தொங்கிக் கொண்டிருந்த மணியைப் பார்த்து, கைகள் நடுங்க வருடிக் கொடுத்தான். சின்னச் சின்னதாக கண்ணாடிகளினாலான இதயங்களைக் கோர்த்து செய்யப்பட்டிருந்த, கதவில் தொங்கவிடப்படும் மணி அது..     

“என்னடா?” ப்ரதாப் கேட்க,

“இது அவ காலேஜ்க்கு போன பொழுது தனியா வீடு பார்த்து தான் தங்கினா.. நாங்க முதல்முறையா அப்போ தான் பிரிஞ்சு இருந்தோம்.. என்னோட நியாபகமா வைச்சிக்கோன்னு இதை வாங்கித் தந்தேன்..” என்றவன், அந்த மணியை மென்மையாக வருடிவிட்டு, ஒரு பெருமூச்சுடன்,

“இதுல போகனுமா?” என்று கேட்டுக் கொண்டே படிகளில் ஏறினான்..

அவனுக்காக ஜைஷ்ணவி காத்திருக்க, அவன் கதவில் கை வைக்கவும், வேகமாக கதவைத் திறந்தவள், அங்கு நின்றிருந்தவனை அடிக்கத் துவங்கினாள்..

“என்னடா நினைச்சிட்டு இருக்க? எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு? நீ இங்க வந்து எவ்வளவு வருஷமாச்சுன்னு உனக்கு நியாபகம் இருக்கா?” அழுதுக் கொண்டே அவள் கேட்க, அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன்,

“சாரிடி ஜைஷு. சாரி.. எனக்கு இங்க வரவே பிடிக்கல.. அது தான் அப்படியே அங்கேயே இருந்துட்டேன்.. இங்க வந்து மட்டும் நான் என்ன செய்யப் போறேன்னு தோணிச்சு.. இப்போ அப்படி இல்லையே. அது தான் தொலைஞ்ச என் வாழ்க்கையைத் தேடி வந்துட்டேன்..” என்றவன், அவளது தலையில் தட்டி,            

“வந்த உடனே என்னோட டாக்டர் மேடம்மைப் பார்த்துட்டேன் தெரியுமா? அன்னைக்கு வீடியோ கால்ல பார்த்ததை விட இன்னைக்கு எப்படி இருந்தாத் தெரியுமா?” அவன் கேட்க, அவனை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றவள், அவனை நன்றாக மொத்தத் துவங்கினாள்.

“உனக்கு எல்லாம் திமிருடா..” என்றபடி அவனது வயிற்றில் குத்த,   

“இரு ஜைஷு. நான் என்னோட பெட்டியை எடுத்துக்கிட்டு வரேன்.. அது தனியா லிப்ட்ல வருது..” என்றவன், தனது பெட்டிகளை எடுத்துக் கொண்டு வர, சூடாக காபியைக் கலந்துக் கொண்டு வந்து அவனிடம் தந்தவள்,

“சுஜிதாவைப் பார்த்தியாடா? அவ உன்னைப் பார்த்தாளா? ஏதாவது பேசினாளா?” படபடப்பாகக் கேட்டவள், அவனது முகத்தைப் பார்த்து வாயை மூடிக் கொண்டாள்..

காபியை உறிஞ்சிக் கொண்டே, “அவ பார்த்து என்னை செருப்பால அடிக்காம இருந்தா சரி.. அவளை நான் தான் பார்த்தேன்.. அவ என்னைப் பார்க்கலை. அதை விடு.. முதல்ல நீங்க எல்லாம் இங்க குடி வந்தது அவளுக்குத் தெரியுமா?” என்று கேட்க, ஜைஷ்ணவி உதட்டைப் பிதுக்கினாள்.

“எங்க.. மேடம் ரொம்ப பிசியா இருக்காங்க.. நாளைக்கு காலையில டெஸ்ட்டுக்கு போகணும். அப்போ பார்த்தா தான் உண்டு..” என்றவள், அவனது அருகே அமர்ந்து, அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்..

அவளது கையை வருடிக் கொண்டே சூர்யா அமைதியாக அமர்ந்திருக்க, ப்ரதாப், பாசமலர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்..

“ஜைஷு.. நீ நல்லா ரெஸ்ட் எடு.. நான் வந்துட்டேன் இல்ல. நான் உன்னைப் பார்த்துக்கறேன்.. எதுக்கும் கவலைப்படாதே என்ன? சீக்கிரம் பிள்ளைய பெத்துக் கொடு. நான் விளையாடணும்.. லைஃப் ரொம்ப போர் அடிக்குது.. நானும் ரொம்ப பிசியா இருக்கணும் இல்ல.” சூர்யா அவளை வம்பு வளர்க்க, ப்ரதாப் அவனை முறைத்துக் கொண்டே,

“ஏன் ஜைஷு.. நாம சுஜி வீட்டுக்கு போன பொழுது ஒரு குழந்தையைப் பார்த்தோம்ல..” என்று கேட்க, ஜைஷ்ணவி விழிக்க, சூர்யா பதறி,

“இல்லையே. நானும் தானே வீடியோ கால்ல இருந்தேன்.. அப்போ பார்க்கலையே.” அவசரமாகக் கேட்க, எழுந்துக் கொண்டு சோம்பல் முறித்தவாறே,

“நாங்க பார்த்ததை நீ பார்க்கல.. சார் ரொம்ப பிசியா இருக்கனுமாமே..” நக்கலாகக் கேட்டவன், சூர்யா அவனைப் பாவமாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே,

“போய் தூங்குங்க சார்.. நாளையில இருந்து உங்களுக்கு நிறைய வாட்ச்மேன் வேலை பார்க்க வேண்டியது இருக்கும்.. எனக்கும் தூக்கம் வருது.. காலையில டெஸ்ட் கொடுக்கப் போகணும்..” என்றவன், ‘குட் நைட்’ என்றபடி தனது அறைக்குள் செல்ல, சூர்யா ஜைஷ்ணவியின் கையை அழுத்தினான்.

“நீயும் போய் படுத்துத் தூங்கு.. ரெஸ்ட் எடு.. காலையில பார்க்கலாம்.. நாளைல இருந்து நான் சமைக்கிறேன்.. சோ ஜாலியா இரு..” என்றவன், மெல்ல எழுந்து மாடிப்படியின் அருகே சென்று நிற்க, அறையில் இருந்து எட்டிப் பார்த்த ப்ரதாப்,

“உனக்கு அந்த ரூம் ரெடி பண்ணி இருக்கு சூர்யா.. அந்த ரூமோட பால்கனில இருந்து பார்த்தா ரோடு நல்லா தெரியும்.. அதனால கதவை சாத்திட்டு ரூமுக்கு போய் நீ செய்யப் போற வேலையைக் கண்டின்யூ பண்ணு..” என்று விட்டுச் செல்ல,

“தேங்க்ஸ் மாமா.. யூ ஆர் சோ ஸ்வீட்..” என்றவன், அவன் காட்டிய அறைக்குள் நுழைந்து, தனது பொருட்களை வைத்துவிட்டு, பால்கனிக்குச் சென்று நின்றான்.      

அவ்வப்பொழுது அவனது பார்வை, அந்த மருத்துவமனையின் பாதையை நோக்கி சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பியது. அவள் வரும் பாதையைப் பார்த்துக் கொண்டே, பால்கனியிலேயே அமர்ந்து அவனது பெட்டியைப் பிரித்து, அங்கு காலியாக இருந்த அலமாரியில் தனது உடையை அடுக்கி விட்டும் வந்தான்.. மீண்டும் தனது தேவதையைக் காண அவன் ஆவலாக காத்திருக்க, அவனைக் காக்க வைத்த இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, சற்று அயர்ச்சியுடன் அவள் நடந்து வர, அவளுக்குத் துணையாக அந்த மருத்துவமனைக் காவலரும் வந்தார்.

அந்த தெருவிளக்கின் ஒளியிலும் அழகு மயிலாக வந்தவளைப் பார்த்தவனின் கண்கள் அவளிடமே ஒட்டிக் கொண்டது.. மெல்ல நடந்து வந்தவளுக்கு ஊசி துளைக்கும் உணர்வு.. அவள் மேலே நிமிர்ந்துப் பார்க்க, சூர்யா சட்டென்று நகர்ந்துக் கொண்டான்..

புருவத்தைச் சுருக்கி கீழே குனிந்தவள், மீண்டும் எதுவோ தோன்ற மேலே நிமிர்ந்துப் பார்க்க, பால்கனியின் இருட்டில், அவனது உருவம் தெரியாமல் போனது.. அருகில் திரும்பி, அந்த காவலருக்கு நன்றி கூறியவள், மீண்டும் எதுவோ தோன்ற மேலே நிமிர்ந்துப் பார்க்க, அதைப் பார்த்த சூர்யாவின் இதழ்களில் புன்னகை..

“என்னடா சுஜி.. நான் பார்க்கறேன்னு உனக்குத் தெரியுதா? இல்ல சும்மா மேல பார்க்கறியா? நான் உன்னைக் கண்டுப்பிடிச்சிட்டேன் சுஜி.. ஒருவழியா நீ இருக்கற இடத்தைக் கண்டுப்பிடிச்சிட்டேன்.. இனிமே உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன். காசு பணம்ன்னு ஓடி ஓடி ரொம்ப களைச்சு, சலிச்சு போயிட்டேன்..

அந்த ஓட்டம் ஓடறதும் கூட நீ என் கூட இல்லாம அர்த்தமே இல்லன்னு ரெண்டே மாசத்துல நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன்.. நான் அன்னைக்கு செஞ்சதுக்கான தண்டனையா இந்த பத்து வருஷம் போயிடுச்சு.. என் உயிராவது உன் மடியில போகணும்ன்னு ஆசைப்படறேன்டி. அதுவாது நடக்குமா?” அந்த பால்கனியின் க்ரில்லில் தனது நெற்றியை முட்டிக் கொண்டே, அவளிடம் மானசீகமாகப் பேசிக் கொண்டிருக்க, சுஜிதாவின் மனதினில் எதுவோ போராட்டம்..

யாரோ தன்னை உற்று பார்ப்பது போன்ற ஒரு உணர்வு.. இத்தனை நாட்களில் இல்லாத அந்த உணர்வில் மெல்ல அவள் படிகளில் ஏறுவதற்காக காலை வைக்க, அந்தப் படிகளின் தொடக்கத்தில் இருந்த ஃப்ளைட்டின் டேக் அவளது கவனத்தைக் கவர்ந்தது.

‘ஹ்ம்ம்.. அம்மாவும் அப்பாவும் சப்ரைசா வந்திருக்காங்களா?’ தனக்குள் கேட்டுக் கொண்டே, அந்த ஃப்ளைட்டின் டேகை எடுத்துப் பார்த்தவளின் கண்களை நொடிகளில் கண்ணீர் மறைத்தது..

‘கோபால கிருஷ்ணன் ஜெயசூர்..’ அந்த ப்ரிண்டில் முடிக்கப்படாத பெயரைப் பார்த்தவளுக்கு நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொள்ளத் துவங்கியது..

‘சூர்யா.. சூர்யா இங்க எப்படி?’ அந்த டேக்கைப் பார்த்துக் கொண்டே அவள் படியேற, அவளது ஒரு மனதோ,

‘இல்ல.. அது அவங்களா இருக்காது? அவங்க இங்க எதுக்கு வரப் போறாங்க?’ தனது ஆசை கொண்ட மனதிற்கு சமாதானம் சொல்லிக் கொண்டவள், அந்தப் பெயரை வருடிக் கொண்டே, தனது வீட்டின் முன்பு சென்று நின்றாள்.        

வீட்டின் கதவைத் தனது சாவியைக் கொண்டு திறந்தவள், வாயிலில் மாட்டி இருந்த அந்த இதயங்களை வருடினாள்.. எப்பொழுதும் வீட்டில் நுழையும் பொழுது சொல்லும், ‘சூர்யா நான் வந்துட்டேன்..’ என்பதை மனதினில் சொன்னவள், நேராகச் சென்று குளித்துவிட்டு, பெட்டில் விழுந்து கண்களை மூடிக் கொள்ள, மூடிய கண்களுக்குள் அவன் வந்தான்..

மொட்டை மாடியின் டேங்கின் மேலே படிப்பது போல தனது புத்தகங்களை வைத்துக் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சூர்யா அமர்ந்திருந்தான்.. தங்கள் புது வீட்டின் மொட்டை மாடியில், ஆசையாக வாங்கி அடுக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தவளைப் பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான்.. அவளிடம் பேச அவனது மனம் குறுகுறுக்க, ஒரு பேப்பரை எடுத்து ‘ஹாய்… உன் பேர் என்ன?’ என்று எழுதி அவள் இருந்த இடத்திற்கு பேப்பர் ஏவுகணையை ஏவ, அது அவளது காலடியில் சென்று சரியாக விழுந்தது.  

அதைப் பார்த்தவள், யாரு அதை அனுப்பியது என்று நிமிர்ந்தவளது கண்ணில் பட்டான். டேங்கின் மீது அமர்ந்துக் கொண்டிருந்தவனை திகைப்புடன் பார்க்க, சூர்யா அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

அவனை அதிசய பிறவி போல அவள் பார்த்துக் கொண்டிருக்க, ‘எடு’ என்று அவன் சைகைக் காட்ட, சுஜிதா திகைப்புடன் மாட்டேன் என்று தலையசைக்கவும், தனது பாக்ஸில் இருந்த ஒரு பாக்கெட் ப்ளேடை எடுத்து அவளை நோக்கி நீட்டி, ‘எடு..’ என்று மீண்டும் மிரட்ட, அவளது முகம் பதட்டத்தைத் தத்தெடுத்தது..

‘எடு..’ மீண்டும் அவன் கத்தியைக் காட்ட, தனது கையில் இருந்த பூவாளியைக் கீழே வைத்தவள், கைகள் நடுங்க அதை எடுத்துப் பார்த்து அவனைப் பரிதாபமாகப் பார்க்க, ‘என்ன?’ என்று அவன் சைகையில் கேட்டான்..

அவள் திருதிருவென்று விழித்துக் கொண்டு நிற்க, ‘சொல்லு..’ மீண்டும் கத்தியைக் காட்டி மிரட்டல்.

“சுஜிதா..” அவள் மெல்ல பதில் சொல்ல,

“ஹான்.. கேட்கல.. கொஞ்சம் சத்தமா சொல்லு..” அவன் கத்திக் கேட்கவும், அவள் பதில் சொல்ல வாயெடுத்த நேரம்,

‘சுஜி.. தண்ணி ஊத்தி முடிச்சிட்டா கீழ வா.. நாம கடைக்கு போயிட்டு வரலாம்.. உனக்கு ஸ்கூலுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் வாங்கணும்..’ அர்ச்சனா குரல் கொடுக்க, சூர்யாவைப் பார்த்தவள்,

‘இதோ வரேன்மா..’ என்றபடி அந்தப் பேப்பரை எடுத்து கசக்கிப் போட்டு விட்டு கீழே ஓடிச் செல்ல, தனது தலையைத் தட்டிக் கொண்டு, ‘சுஜியா? சுஜிதாவா?’ அவளது பெயரைத் தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

அன்றைய இரவு, தனது வீட்டின் வாசலில் தனது நண்பனுடன் அவன் நின்று பேசிக் கொண்டிருக்க, “சுஜி குட்டா.. நேரா ஹாண்டில் பார பிடி.. வளைச்சன்னா விழுந்துடுவ.. மெல்ல போ.. புது சைக்கில் பழகற வரை அப்பா உன்னைப் பிடிச்சுக்கறேன்..” என்ற குரல் கேட்கவும், நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தவனின் கவனம் அவள் பக்கம் திரும்பியது..

“அப்பா.. நான் என்ன புதுசாவா சைக்கிள் ஓட்டறேன்? ஏற்கனவே ஓட்டி இருக்கேன் இல்ல.. இங்க என்னவோ இந்த சைக்கிள நானா திருப்பாம அதுவா திரும்புதுப்பா.. நான் என்ன செய்யட்டும்? ஒருவேளை சைக்கிள் சரி இல்லையோ? இல்ல ரோடு சரி இல்லையோ?” அவள் கேட்க, சூர்யா அவளைப் பார்த்துச் சிரித்தான்..

“குட்டா.. வாய் பேசாம நேரா பிடி.. நீ தான் ஆட்டற.. முதல்ல மெல்ல ஓட்டு.. பள்ளம் மேடு எல்லாம் பார்த்துப்போ..” என்றபடி அவளது தந்தை அவள் பின்னோடு ஓடிக் கொண்டிருக்கவும்,

“நீங்க என்னை விடுங்க.. நானே ஓட்டிட்டு வரேன்.. என்னவோ சின்னப் பாப்பா போல கூடவே வரீங்க?” என்று சொல்லிக் கொண்டே சைக்கிளில் வேகமெடுத்தவள், அடுத்த இரண்டாவது நிமிடம் ஒரு பள்ளத்தில் தடுமாறி விழுந்திருந்தாள்..

“குட்டா..” என்றபடி அவளது தந்தை அவளது அருகில் செல்ல, அதற்குள் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த சூர்யா அவளது அருகில் ஓடிச் சென்று அவளைத் தூக்கி விட்டான்..

“இங்க இப்போ தானே ரோடு நோண்டி போட்டு இருக்காங்க.. பார்த்து பகல்ல ஓட்டிப் பழகலாம்ல.. மெல்ல.. எழுந்திரு.. எங்கயாவது அடிப்பட்டு இருக்கா?” என்று அவளிடம் கேட்டுக் கொண்டே, சைக்கிளைத் தூக்க, அதற்குள் அவளது அருகில் ஓடி வந்திருந்த அவளது தந்தை,  

“வேண்டாம் குட்டா. நீ இங்க சைக்கிள்ல எல்லாம் ஸ்கூல்க்கு போக வேண்டாம்.. உன்னை அனுப்பிட்டு நான் அங்க பயந்துட்டு இருக்க முடியாது.. பேசாம நீ ஆட்டோல போ.. இல்ல அம்மா கூட போயிட்டு வா..” கையைத் தட்டிக் கொண்டு நின்றிருந்தவளது கையைத் தெருவிளக்கில் ஆராய்ந்துக் கொண்டே அவர் சொல்ல,

“தேங்க்ஸ் அண்ணா..” என்றவள், அவனிடம் இருந்து சைக்கிளை வாங்கிக் கொண்டு, ஹாண்டில் பாரைப் பார்க்க, அது சற்று வளைந்திருக்கவும்,

“அப்பா..” என்றபடி தனது தந்தையின் முகம் பார்க்க, அருகில் நின்றவனோ,

“இரு.. நான் சரி பண்ணித் தரேன்.. இனிமே பகல்ல ஓட்டு..” என்று மீண்டும் சொல்லிக் கொண்டே, அந்த ஹாண்டில் பாரை நேர்ப்படுத்தி அவளிடம் வண்டியைத் தர, அதைப் பெற்றுக் கொண்டவள், சரியென்று தலையசைத்துக் கொண்டே, தனது தந்தையைப் பார்க்க,

“தேங்க்ஸ்ப்பா.. நானும் அது தான் சொல்றேன்.. கேட்டா தானே..” என்றபடி அவளது கையில் இருந்த சைக்கிளை வாங்கித் தள்ளியபடி அவளுடன் நடந்தவர்,  

“அங்க நம்ம அபார்ட்மெண்ட்ல ஓட்டறா மாதிரி கண்ணை மூடிட்டு ஓட்ட முடியாது குட்டா.. அங்க கிஷோர் கூட ரேஸ் ஓட்டறது போல எல்லாம் செஞ்சிடாதே.. புரிஞ்சிக்கோ.. காலையில ஓட்டு..” என்றவருக்கு அவள் கேட்டைத் திறந்துவிட, அவர் வண்டியை உள்ளே தள்ளிக் கொண்டுச் செல்லவும், கேட்டை மூட வந்தவளின் பார்வை அங்கு நின்று அவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவின் மீது பதிந்தது. அவளது பார்வைக்கு காத்திருந்தவன், அவளைப் பார்த்து புன்னகைக்கவும், ஒரு மெல்லிய புன்னகையுடன் வீட்டின் உள்ளே சென்றாள்..

இரவு நெடுநேரம் கதைப் புத்தகத்தைப் படித்துவிட்டு, மறுநாள் காலையில் தாமதமாக எழுந்தவளை இழுத்துக் கொண்டு, இருவருமே அவளைப் புதிதாக சேர்த்திருந்த பள்ளிக்குச் சென்றனர்.. அவர்கள் கொடுத்த புத்தகங்களை வாங்கியதும் வேறொரு அறையைக் காட்டி, ‘அங்க யூனிபார்ம், ஷூ எல்லாம் வாங்கிக்கோங்க..” என்று சொல்லவும், பள்ளியைச் சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே அவர்கள் காட்டிய அறைக்குச் சென்றனர். மாணவர்கள் சிலர் அங்கு விளையாடிக் கொண்டிருக்க, அப்பொழுது அவளது மேல் ஒரு பந்து வந்து விழுந்தது.

அனிச்சை செயலாக அவள் பந்தைத் தட்டிவிட்டு, அதை கையில் எடுத்து தூக்கிப் போடுவதற்காக பார்க்க, அப்பொழுது அவளது முன்பு ஓடி வந்து அவன் நின்றான்..

“நீங்களா?” அவனைப் பார்த்து அவள் விழிக்க,

“நீயும் இந்த ஸ்கூல்ல தான் சேர்ந்து இருக்கியா?” முகம் பூரிக்க அவன் கேட்கவும், சுஜி தனது தந்தையைப் பார்த்தாள்.  

“ஆமாப்பா.. சுஜியையும் இங்க தான் சேர்த்து இருக்கோம்.. கொஞ்சம் அப்பப்போ அவளைப் பார்த்துக்கோப்பா.. அவளுக்கு புது இடம்.. இந்த ஊர் அவளுக்கு அவ்வளவா பழக்கம் இல்ல..” அவளது தந்தை வாசுதேவன் சொல்லவும், அர்ச்சனா அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்.

“என்ன அர்ச்சு பார்க்கற? நம்ம பக்கத்து வீட்டுல இருக்கற பையன்.. நேத்து குட்டா விழுந்த பொழுது தூக்கி விட்டாங்கன்னு சொன்னேன் இல்ல.. அந்தப் பையன்.. பேரு..” என்று இழுத்தவர், அப்பொழுது தான் அவனது பெயரைத் தான் இதுவரை கேட்காததை உணர்ந்து, அவனைப் பார்க்க,

“ஜெயசூர்யா அங்கிள்.. இங்க தான் ட்வெல்த் படிக்கறேன்..” என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், வாசுதேவன் அவனது தோளைத் தட்டி புன்னகைத்தார்..    

“இவ சுஜிதா.. இங்க நயன்த் சேர்ந்திருக்கா தம்பி.. கொஞ்சம் பார்த்துக்கோங்க..” மீண்டும் சொல்ல, அவரிடம் தலையசைத்தவன், சுஜிதா பாலை கையில் வைத்துக் கொண்டு அமைதியாக நிற்கவும், தனது கையை அவளிடம் நீட்டி,   

“சாரி.. பாஸ்கெட்ல போட்டது பிடிக்கப் போன போது கை பட்டு வந்திருச்சு.. அடி ஒண்ணும் படலை தானே..” என்று கேட்க, அவள் தலையசைத்துக் கொண்டே பந்தை அவனிடம் நீட்டவும், அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டவன்,

“பை அங்கிள்.. அப்பறம் பார்க்கலாம்..” என்றபடி, பந்தைத் தட்டிக் கொண்டே, விளையாடச் செல்ல, தனது தந்தையிடம் பதிவிசாக நின்றுப் பேசியவனைப் பார்த்தவளுக்கு சிரிப்பு பொங்கியது.  

“சரி.. வாங்க.. நாம சீக்கிரம் வாங்கிட்டு கிளம்பலாம்.. சாயந்திரம் பாட்டி வீட்டுக்கு போற வேலை இருக்கு..” என்றவர், அவர்களை அழைத்துக் கொண்டு நடக்க, சுஜிதா அவர்களுடன் நடந்தபடி, அவனைத் திரும்பிப் பார்க்க, பாலைத் தட்டிக் கொண்டே சூர்யாவின் பார்வையும் அவள் மீதே இருந்தது. வேகமாக தலையை உலுக்கிக் கொண்டு, தனது தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தாலும், அவளது முதுகில் எதுவோ குத்தும் உணர்வு.. அந்த அறைக்குள் செல்லும் பொழுது எதற்சையாக பார்ப்பது போல அவள் திரும்பிப் பார்க்க, சூர்யாவும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

error: Content is protected !!