உயிரோவியம் நீயே பெண்ணே – 2

beautiful-hd-love-couple-image-with-love-quotes

உயிரோவியம் நீயே பெண்ணே – 2

2

எமர்ஜன்சி அறையில் இருந்த டேபிளில் அமர்ந்த சுஜிதா, ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து படிக்கத் துவங்கினாள்.. அவளது வழக்கப்படி ஓரமாக குறிப்பெடுத்துக் கொண்டிருக்க, அவளது கைகள் கழுத்தில் இருந்த மெல்லிய சங்கிலியில் இருந்த டாலரையும், அதில் கோர்த்திருந்த மோதிரத்தையும் வருடிக் கொண்டே படிக்க, அங்கிருந்த அந்தப் பெண் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

படித்துக் கொண்டே நிமிர்ந்துப் பார்த்தவள், “எந்த பயமும் வேண்டாம்.. பேபி நல்லா இருக்காங்க.. நீங்க டென்ஷன் ஆகாம தூங்குங்க..” அந்தப் பெண்மணிக்கு தைரியம் சொல்ல, அந்தப் பெண்மணி புன்னகையுடன் கண்களை மூடிக் கொண்டாள்.  

அவளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தவள், தனது படிப்பைத் தொடர, அவளது கண்கள் உறக்கத்திற்கு கெஞ்சியது. முகத்தைக் கழுவிக் கொண்டு மீண்டும் படிக்க அமர்ந்தவள், அதில் மூழ்கியும் போனாள்.   

“மேடம்.. நேத்து நைட் சிசேரியன்க்கு அட்மிட் ஆன பேஷன்ட்டுக்கு வலி எடுக்க ஸ்டார்ட் ஆகி இருக்கு மேடம்.. இப்போ நாம என்ன செய்யறது?” படித்துக் கொண்டிருந்த சுஜிதாவிடம் ஒரு நர்ஸ் கேட்க,

“ஏன் சிசேரியன் செய்யறோம்ன்னு சொன்னோம்? ஏதாவது காம்ப்ளிகேஷனா?” கேட்டுக் கொண்டே, அவளது நடையை எட்டிப் போட,

“இல்ல மேடம்.. பேஷன்ட் தான் லேபர் பெயின தாங்க முடியாதுன்னு சொல்லி ரெக்வெஸ்ட் பண்ணிக்கிட்டாங்க.. ராஜேஸ்வரி மேடமும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க. அவங்க ஹஸ்பன்ட் சொன்னதுக்கு கூட கேட்கல.. அது தான் இன்னைக்கு சிசேரியன் பிக்ஸ் பண்ணி இருந்தது.. இப்போ வலி வந்திருச்சு மேடம்..” நர்ஸ் விளக்கம் சொல்ல, ஒரு பெருமூச்சுடன் அந்த பேஷன்டைக் காணச் சென்றாள்..

“டாக்டர் ரொம்ப வலிக்குது.. ப்ளீஸ்.. எனக்கு உடனே சிசேரியன் செஞ்சிடுங்க.. என்னால இந்த வலியை பொறுத்துக்க முடியல..” அந்தப் பெண் சொல்ல,

“ஹ்ம்ம்.. இதோ பார்க்கறேன்.. இந்த அளவுக்கு சட்டுன்னு பெயின் வந்திருக்குன்னா உங்களுக்கு மவுத் ஓபன் ஆகி இருக்க சேன்ஸ் இருக்கு. அதைப் பார்த்துட்டு நாம டிசைட் பண்ணலாம்..” அந்தப் பெண்ணிற்கு ஆறுதலாகச் சொன்னவள், அடுத்து சில பரிசோதனைகளைச் செய்து விட்டு, தனது சீனியர் டாக்டருக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல,

“உனக்குத் தெரியாததா சுஜிதா.. அவங்களுக்கு நார்மல் ஆகற சேன்ஸ் நிறைய இருக்கு. அவங்க தான் கேட்காம சிசேரியன் செஞ்சிக்கிட்டே தீருவேன்னு சொல்லிட்டாங்க. இப்போ பாரு.. மெல்ல பேசி நார்மல் ட்ரை பண்ணு.. அவங்க ஹஸ்பன்ட்க்கும் சொல்லிடும்மா..” என்று சொல்லிவிட, மெல்ல அந்த பெண்மணியிடம் சென்று நின்றாள்..

“மேடம்.. ஆல்மோஸ்ட் மவுத் ஓபன் ஆகிடுச்சு.. இன்னும் கொஞ்ச நேரம் நாங்க சொல்றதைக் கேட்டா குழந்தை வெளிய வந்திரும்..” என்று சொல்ல,

“இல்ல.. எனக்கு சிசேரியனே ரெடி பண்ணிடுங்க.. என்னால முடியல..” அந்தப் பெண் வலியில் முனக,

“மேடம்.. ஆச்சு இதோ இன்னும் கொஞ்ச நேரம் தான்.. நாங்க அனஸ்தீசியா டாக்டர கூப்பிட்டு.. அவங்க வரதுக்குள்ள பிறந்திடும்…” என்று சமாதானப்படுத்த, அந்தப் பெண் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க,

“சரி.. சரி.. நாங்க முதல்ல உங்களை லேபர் ரூமுக்கு மாத்திடறோம். சைட்ல அனஸ்தீசியா டாக்டர ரீச் பண்ண ட்ரை பண்றோம்.. நீங்க கொஞ்சம் கோவாபரேட் பண்ணுங்க.. இல்லன்னா நாங்களும் வேற என்ன செய்யறது சொல்லுங்க?” என்று சொல்லிக் கொண்டே, நர்சைப் பார்த்தவள், தலையசைக்க, அந்தப் பெண்ணும் புரிந்ததற்கு அடையாளமாய் வேகமாக செயல்பட்டு, அந்தப் பெண்ணை லேபர் அறைக்கு மாற்ற, அங்கு கையைப் பிசைந்துக் கொண்டு நின்றிருந்த அவளது கணவனிடம் சுஜிதா சென்றாள்.

“சார்… அவங்களுக்கு இப்போ சிசேரியன் செய்யற அளவுக்கு கூட டைம் தாங்காது.. குழந்தை இன்னும் கொஞ்ச நேரத்துல வெளிய வந்திரும்.. ஒரு அரை மணி நேரம் கூட ஆகாதுங்க. சிசேரியன் இப்போ ஆப்ஷனா எடுக்கறது எனக்கு அவ்வளவு சரின்னு படல.. நேச்சுரலாவே ஆகும் போது நாம ஏன் அவங்களைப் போட்டு கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கணும்? இல்ல எங்களுக்கு அது தான் வேணும்ன்னா சொல்லுங்க.. நாங்க செய்யறோம்.. இதுல உங்க கன்சன்ட் ரொம்ப முக்கியம்..” சுஜிதா மென்மையாக எடுத்துச் சொல்ல,

“நானும் அது தான் சொன்னேன் மேடம்.. அவ தான் கேட்கவே இல்ல.. எனக்கு பிரச்சனை இல்ல. நார்மல் பண்ண முடியும்ன்னா செஞ்சிடுங்க..” அவளது கணவன் சம்மதம் சொல்லும் நேரம்,

“மேடம்.. குழந்தைத் தலை லைட்டா தெரியுது.. வெளிய வர ஆரம்பிச்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.. நீங்க வாங்க..” ஓடி வந்த நர்ஸ் சொல்லவும்,

“இதோ வரேன்..” என்ற சுஜிதா, அவளது கணவனைப் பார்த்து தலையசைத்துவிட்டு அவசரமாக ஓடினாள்..

“மேடம்.. இதோ கொஞ்சம் புஷ் பண்ணுங்க.. பேபி வெளிய வந்திருச்சு.. புஷ்.. புஷ்.. இன்னும் கொஞ்சம் தான்..” நர்ஸ் அந்தப் பெண்ணின் கையைப் பிடிக்க, அதற்கு மேல் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்தப் பெண்ணும் அவர்கள் சொல்வதைச் செய்யத் துவங்கினாள்.

குழந்தையின் தலை வெளியில் வரவும், அதைப் பிடித்து குழந்தையை எடுத்தவள், தொப்புள் கொடியை வெட்டி கிளிப் போட்டுவிட்டு, தாயிடம் இருந்து பிரிந்து வந்ததில் அழுதுக் கொண்டிருந்த அந்த பிஞ்சைக் கைகளில் ஏந்தினாள்.. 

உதிரம் சிந்தும் அந்த பிஞ்சை, கண்கள் கலங்க பார்த்தவள், அதன் கன்னத்தை வருடி, “உங்களுக்கு பையன் பிறந்திருக்கான் பாருங்க..” சந்தோஷமாக அந்தப் பெண்ணிடம் சொல்ல, அந்தப் பெண் அயர்ச்சியுடன் புன்னகைக்கவும், குழந்தையைத் தூக்கி அவரிடம் காட்டி,

“க்ளீன் பண்ணிட்டு சிஸ்டர் உங்க கிட்டயும் உங்க ஹஸ்பன்ட் கிட்டயும் காட்டுவாங்க.. அப்பறம் நீங்க குழந்தையை நிறைய கொஞ்சலாம்.. இப்போ அவ்வளவு தான் வலி.. இதுக்குப் போய் சிசேரியன் பண்றேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க.. அது செஞ்சா நீங்க எழுந்து நடக்கவே மூணு நாலு நாள் ஆகும்.. அப்பறம் உங்க குழந்தையை தூக்கி கொஞ்சி பால் கொடுக்க கூட உங்களுக்கு ஒருத்தர் ஹெல்ப் வேணும்.. இப்போ அப்படி இல்லையே..” அந்தப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டே, அவளுக்கு செய்ய வேண்டிய மீதி வேலைகளை முடித்தவள், அந்தப் பெண்ணின் அருகில் சென்று,

“இந்த ட்ரிப்ஸ் முடியற வரை நீங்க இங்க இருங்க.. அப்பறம் ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க.. குழந்தை ரொம்ப ஹெல்தியா இருக்கான்.. இப்போ கொஞ்ச நேரம் அப்படியே தூங்கிக்கோங்க..” என்று இதமாகச் சொல்லிவிட்டு, வெளியில் செல்ல, அந்த நர்ஸ் சுஜிதாவை நெகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்..  

“ரொம்ப நல்ல டாக்டர் இல்ல..” அந்தப் பெண், நர்ஸ் கொண்டு வந்துக் கொடுத்த குழந்தையை கைகளில் ஏந்திக் கொஞ்சியபடி கேட்க,

“ஹ்ம்ம்.. ஆமா.. அவங்களுக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும்..” என்ற நர்ஸ், அவளது கையில் உறங்கி இருந்த குழந்தையை வாங்கி அருகில் இருந்த தொட்டிலில் கிடத்தினாள். அந்தப் பெண்ணின் கணவன் அவளுக்கு நன்றி சொல்ல, அதை புன்னகை முகமாக ஏற்றுக் கொண்டவள்,

“பேபிய பார்த்தீங்களா? உங்க வைஃப் இப்போ ரொம்ப ஹாப்பியா இருக்காங்க.. கொஞ்ச நேரத்துல ரூமுக்கு மாத்திருவாங்க..” என்று சொல்லிவிட்டு, இரவு எமர்ஜென்ஸியில் அனுமதித்திருந்த பெண்மணியைப் பார்த்துவிட்டு, தனது அறைக்குச் சென்று அமர்ந்தாள்..

அப்படியே அந்த டேபிளில் சாய்ந்து அமர்ந்தவள், கைகளில் சொடக்கெடுத்து, சோம்பல் முறித்துவிட்டு, கண்களை மூடிக் கொள்ள, மனதிற்குள் புயலென எழுந்தது எண்ணங்கள். ‘ம்ப்ச்.. சுஜி.. இப்போ எதுவும் நினைக்காதே.. பேசாம ட்யூட்டி டாக்டர் கிட்ட சொல்லிட்டு வீட்டுக்குப் போய் தூங்கிரு.. இதுக்கும் மேல நீ முழிச்சு இருந்தா ஆபத்து..” தனக்கே சொல்லிக் கொண்டவள், அங்கு எமர்ஜன்சியில் இருந்த மற்றொரு டாக்டரிடம், நர்சிமுடம் சொல்லிவிட்டு, மருத்துவமனையில் இருந்து நடந்தே செல்லும் தொலைவில் இருந்த தனது வீட்டிற்குச் சென்றாள்..

நேராக குளியலறைக்குள் சென்று, சூடான நீரில் குளித்துவிட்டு, தொப்பென்று கட்டிலில் விழுந்தவள், அன்றைய வேலையின் அயர்ச்சி காரணமாக அப்படியே உறங்கியும் போனாள்..     

மறுநாளையப் பொழுது அவளது கடிகாரத்தின் அலாரம் ஒலியுடன் துவங்கியது. அவசரமாக எழுந்து குளித்து விட்டு, மருத்துவனைக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தவளின் செல்போன் இசைக்கத் துவங்கியது..

இதழில் புன்னகையுடன், “வேதாளம் மாதிரி தினமும் இந்த டைம்க்கு விடாம கால் செஞ்சிட வேண்டியது.. செஞ்சிட்டா மட்டும் நானும் சரின்னு சொல்லிடப் போறேன் பாருங்க. இவங்களுக்கு வேற வேலை இல்ல.. ஆனாலும் இவங்க முயற்சியைப் பாராட்டியே தீரனும்..” என்று சலித்துக் கொண்டே போனை எடுத்தவள்,

“நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்பொழுது பிசியாக இருப்பதால் சிறிது நேரத்திற்கு பிறகு டயல் செய்யவும்..” என்று குரல் கொடுக்க,

“எடு அந்த உருட்டு கட்டைய.. குரல் மாத்திப் பேசினா எங்களுக்கு யாரு பேசறதுன்னு தெரியாதாக்கும்.. நீங்க பிசின்னு எனக்குத் தெரியும் தான்.. அதுக்காக காலையிலேயே வா.. நீ வீட்ல தானே இருக்க.. என் கூட கொஞ்சம் பேசிட்டு போ.. நாம ஹலோக்கு மேல பேசி ஒரு வாரத்துக்கும் மேல ஆகுது..” அவளது தாய் அர்ச்சனா கோபமாகச் சொல்ல, சுஜிதாவின் இதழ்களில் புன்னகை விரிந்தது..

“அம்மா.. நான் இன்னைக்கு ஹலோ தாண்டி நிறைய பேசிட்டேன்..” அவள் வம்பு வளர்க்க,

“என்ன பேசின அப்படி?” அர்ச்சனா கடுப்பானார்.

“அது தான்ம்மா.. நீங்கள் தொடர்பு..” அவள் துவங்கவுமே, அர்ச்சனா பல்லைக் கடிக்க, அதை கேட்ட சுஜிதா உதட்டைப் பிதுக்கி,  

“சரி.. சீக்கிரம் பேச வேண்டியது பேசுங்க.. நான் சொல்ல வேண்டியது சொல்லிடறேன்.. இதெல்லாம் நமக்கு புதுசா அர்ச்சு?” அவரிடம் இருந்து என்ன கேள்வி வரும் என்று தெரிந்துக் கொண்டு விளையாட்டாகச் சொன்னவள், கப்பில் பாலை நிரப்பி ஓவனின் வைத்துவிட்டு, அலமாரியைத் திறந்து காபிப் பொடியை எடுக்க, அர்ச்சனா ஒரு போருக்கு தயாராவது போல தயாரானார்.

“அப்பா இன்னைக்கு சும்மா அப்படியே மேட்ரிமோனி சைட் பார்த்துட்டு இருந்த பொழுது, ஒரு பையனோட ப்ரோபைல் பார்த்தாங்க.” அவர் சொல்லி முடிப்பதற்குள்,

“ஏன்ம்மா உன் தொல்லைத் தாங்காம அப்பா வேற யாராவது பொண்ணைப் பார்க்கறாரா? பார்த்தும்மா அப்பாவுக்கு அறுபதாவது கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்துடப் போறார்.. எதுக்கும் அவர் அந்த மேட்ரிமோனி சைட்ல என்ன பார்க்கறான்னு கொஞ்சம் நல்லா கவனி..” அவள் பேச்சை திசைத் திருப்ப, அர்ச்சனா விடுவாரா என்ன?

“அப்பா பார்த்தது ஒரு பையனன்னு சொன்னேன் சுஜி.. பையன் பார்க்க லட்சணமா இருக்கான்.. பையனும் ஆர்த்தோ சர்ஜனா இருக்கான். உனக்கு அப்பா அந்த லிங்க்கை மெசேஜ் செய்யறேன்னு சொன்னார்.. பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்றியா? நாங்க பேசிப் பார்க்கறோம்.” இதமாக பதமாக அவர் கேட்க, அவரது குரலில் ஏக்கம் வழிந்தது..

“அம்மா.. ஆர்த்தோ சர்ஜனா?” சுஜிதா இழுக்க,

“ஆமாடாம்மா.. ஆர்த்தோ சர்ஜன் தான்.. பையன் பார்க்க நல்லா இருக்கான். நீ பார்க்கறியா?” அவளது அந்த சிறு கேள்விக்கே அவர் பரவசமாக, அவரை நினைத்து மனதிற்குள் கலங்கினாள்.. 

ஆனாலும்.. “ம்மா.. அந்த ஆர்த்தோ சர்ஜன் ரொம்ப பாவம்மா.. பிழைச்சு போகட்டுமே.. அவரு பாட்டுக்கு நாலு பேருக்கு காலு கையில கட்டுப் போட்டுக்கிட்டு நிம்மதியா இருக்கட்டுமே.. குறுக்க நான் போய் எதுக்கு அவர டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேனே.. குடும்பம் குட்டின்னு வந்துட்டா நான் என் வேலையை கவனிக்க முடியாதும்மா.. எனக்கு என் வேலை முக்கியம்ல.. என்னை நம்பி இந்த உலகத்துல பிறக்கப் போற குழந்தைங்க எவ்வளவு பேர் இருக்காங்களோ?” கேலியாக முடித்தவள், தான் சுட வைத்த கப்பில் காபியை கலந்து எடுத்துக் கொண்டு, தனது சிறிய டைனிங் டேபிள் நாற்காலியில் அமர, அர்ச்சனாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது..

“இந்த மாசம் உனக்கு பிறந்த நாள் வருதுன்னு நியாபகம் இருக்கா? இந்தப் பிறந்த நாள் வந்தா உனக்கு முப்பது முடிஞ்சு முப்பத்தி ஒண்ணு தொடங்கப் போகுது. எப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்போ குழந்தை குட்டின்னு குடும்பம் நடத்தறதா உனக்கு உத்தேசம்? சொல்லுடி.. சொல்லு.. எனக்கு இன்னைக்கு ஒண்ணுல ரெண்டு தெரிஞ்சே ஆகணும்..” அழுகை வெடிக்க அவர் கேட்க, சூடான காபியை உறிஞ்சிக் குடித்தவள்,

“ம்மா.. இந்த பர்த்டேக்கு நான் ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம்ன்னு இருக்கேன்.. அதுக்காக இந்த வாரம் நல்ல நாள் பார்த்து ஒரு ஃபார்ம் பில் பண்ணி ரெஜிஸ்டர் செய்யலாம்ன்னு இருக்கேன்..” மின்னாமல் முழங்காமல் அவரது தலையில் இடியை இறக்கியவள், தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு, கைப்பையுடன் மருத்துவனைக்குக் கிளம்பினாள்..

“ஹே.. என்னடி? என்ன சொல்லிட்டு இருக்க? குழந்தையைத் தத்து எடுக்கப் போறியா? என்ன உளறல் இது?” அர்ச்சனாவின் படபடப்பை போனின் வழியே உணர்ந்தவள்,

“அம்மா.. கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதைக் கேளு..” அவரை சமாதானப்படுத்த முயல,

“எங்களுக்கு நீ ஒரே பொண்ணு சுஜி.. நாங்க உன் கல்யாணத்தைப் பார்க்கணும்ன்னு எவ்வளவு ஆசையா வெயிட் பண்ணிட்டு இருக்கோம் தெரியுமா? ஒவ்வொரு கல்யாணத்துக்கும் போகும்போதும், இதை விட என் பொண்ணோட கல்யாணத்தை நல்லா செய்யணும்ன்னு எல்லாம் கனவு கண்டுக்கிட்டு இருக்கோம் சுஜி.. நீ இப்படி எங்க ஆணி வேரையே அசைச்சுப் பார்க்கறியே? நாங்க இதுக்கு ஒத்துக்குவோம்ன்னு நீ நினைக்கிறயா?” படபடப்பாக அவர் கேட்க, சுஜிதாவின் தொண்டை அடைத்தது..

“அப்படி இல்லம்மா.. உனக்கு நான் தத்தெடுக்கற குழந்தை வேண்டாம்ன்னா நான் வேற என்ன செய்யட்டும்? நானே ஐவிஃஎப்ல  பெத்துக்க முடியாதேம்மா..” சம்பந்தமே இல்லாமல் அவள் புலம்ப, அர்ச்சனா தலையிலேயே அடித்துக் கொண்டார்.

“ஏண்டி இப்படி கிறுக்குத்தனமா பேசிட்டு இருக்க? உனக்கு இன்னைக்கு என்ன தாண்டி ஆச்சு?” என்று கேட்டவர், அவசரமாக,

“ஏன் சுஜி.. நீ யாரையாவது லவ் பண்ணி அவங்க உன்னை ஏமாத்திட்டு.. இல்ல பிரேக்கப் பண்ணிட்டு போயிட்டாங்களா? நீ அவங்களை மறக்க முடியாம கல்யாணத்தை வேண்டாம்ன்னு சொல்றியா? எதா இருந்தாலும் சொல்லு சுஜி.. அது யாருன்னு சொல்லு நாங்க பேசிப் பார்க்கறோம்.. இல்லையா.. நாங்க மாப்பிள்ளை பார்த்து உனக்கு சொல்றோம்.. நீ பேசிப் பாரு.. உனக்கு பிடிச்சி இருந்தா சொல்லு மேல பேசலாம். எப்படி என் ஐடியா?” ஆவலாகக் கேட்க, அவர் கேட்ட கேள்வியில் சுஜிதாவின் நடை ஒரு நிமிடம் தயங்கி, சில நொடிகளில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு தனது நடையை எட்டிப் போட்டாள்.

“ஹான் அப்பறம் இந்தக் கதை நல்லா இருக்கே..” என்று கேலி செய்தவள், ‘சுஜி…’ அர்ச்சனா அவளை அதட்ட,

“அதெல்லாம் சரிம்மா.. நீங்க சொல்ற பையனை பார்க்கறேன்.. பிடிக்குது பிடிக்கலை எல்லாம் அப்பறம்.. ஆனா.. நீங்க பேரன் பேத்தியை பார்க்கணும்ன்னு சொல்றீங்க இல்லையா? ஒருவேளை எனக்கு அந்த பாக்கியமே இல்லைன்னா? ஒருவேளை எனக்கு தாயாகற தகுதியே இல்லைன்னா. அப்பறம் இந்த கல்யாணத்துல என்னம்மா பிரயோஜனம்? நீங்க சொல்ற பையனை பிடிச்சு தான் என்ன யூஸ் சொல்லுங்க?” இந்த பேச்சை அத்தோடு முடித்து விட அவள் இவ்வாறு சொல்ல, அர்ச்சனா அதிர்ந்து போனார்.  

“என்ன சுஜி.. என்ன சொல்ற நீ? என்னடி காலையில இருந்து ஏறுக்கு மாறா உளறிக்கிட்டு இருக்க?” நொந்த குரலில் அவர் கேட்க,

“தெரியலம்மா.. நான் சொல்றதைப் புரிஞ்சிக்கோ.. இதோட இந்தப் பேச்சை விடேன்.. எனக்கு ஒரு நல்ல நாளா சொல்லு.. நான் குழந்தைக்கு ரெஜிஸ்டர் பண்ணி வைக்கிறேன்.. நமக்கு எல்லாம் பிடிச்சா மாதிரி குழந்தையைத் தேடி நாம தத்து எடுத்துட்டு வரலாம்.. என்ன சொல்றீங்க? அந்த பாப்பாவ நீங்களும் இங்க என் கூட வந்து இருந்து வளர்த்துக் கொடுங்க.. ஏன்னா எனக்கு பாப்பாவையும் பார்த்துக்கிட்டு, ஹாஸ்பிடல் போறது வரது எல்லாம் கஷ்டமா இருக்கும்ல..” என்று கேட்டவள், அனைவருக்கும் காலை வாழ்த்தைச் சொல்வது கேட்க, அது அவள் மருத்துமனைக்குள் நுழைந்ததை அர்ச்சனாவிற்கு உணர்த்தியது.

நேராக இரவு அனுமதித்திருந்த பெண்ணைக் காண அவள் செல்ல, “என்ன என் ஐடியா ஓகே தானே.. சீக்கிரம் சொல்லுங்க.. நான் ஃபார்ம் வாங்கச் சொல்றேன்..” என்று கேட்டுக் கொண்டே, உறங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு,

“அவங்களுக்கு ப்ளீடிங் ஸ்டாப் ஆகிடுச்சு தானே?” தனது அன்னையுடன் பேசிக் கொண்டிருந்ததை மறந்துவிட்டு, தனது வேலையை கவனிக்கத் துவங்க, அதற்கு மேல் அவளிடம் பேசுவது கடினம் என்று புரிந்துக் கொண்ட அர்ச்சனாவும் போனை வைத்துவிட, சுஜிதா தனது வேலையில் மூழ்கிப் போனாள்..

அமெரிக்கா மாகாணத்தில் இருந்த ஒரு பப்பின் இரவு நேரமது.. நண்பர்களுடன் அமர்ந்து மதுவை அருந்திக் கொண்டே, சூர்யா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது அமைதி அவனது உடன் பணிபுரியும் நண்பர்களுக்கு பழக்கமானது தான்.. மற்ற நேரங்களில் இயல்பாக பேசிச் சிரிப்பவன், மதுவை அருந்தும் பொழுது அமைதியாகி விடுவான். அது ஏனோ மது அருந்துபவர்களின் இயல்புக்கு எதிர்மரையானது தான்..

அப்பொழுது அவர்கள் அருகில் வந்த அவர்களது பக்கத்து குடியிருப்பில் வசிக்கும் பெண், சூர்யாவின் அருகில் வந்து தயங்கி நின்றாள். அவளைக் கண்டுக் கொள்ளாமல் சூர்யா அந்த கோப்பையை கையில் வைத்துக் கொண்டு, தனது மொபைலில், கூகிளில் எதையோ அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தான்..

“சூர்யா.. ஐ வான்ட் டு டாக் டு யூ ஃபார் எ ஃபீயூ மினிட்ஸ்..” சூர்யாவின் அருகில் வந்து நின்றவள், அவனிடம் கேட்க, சூர்யா அவளைக் கேள்வியாகப் பார்த்தான்..

“என்ன? என்ன பேசணும்?” அவனும் பதிலை ஆங்கிலத்திலேயே கேட்க,

“அது.. அது வந்து.. என் பேர் ரியா சவுத்ரி… என்னோட பேரன்ட்ஸ் மும்பைல இருக்காங்க.. நாம வேற வேற ஸ்டேட்டா இருக்கலாம்.. ஆனா.. நாம ஒரே நாட்டுல இருந்து வந்திருக்கோம்.. அதனால..” அந்தப் பெண் இழுக்க,

“அதனால..” அவனும் கேள்வியாக இழுக்க, அந்தப் பெண் தயங்கி நின்றாள்..

சூர்யா மீண்டும் அவள் சொல்ல வந்ததைப் பற்றிக் கேட்காமல் அமைதியாக தனது மொபைலைப் பார்க்க, “ஐம் ஃபாலோயிங் யு ஃபார் மோர் தான் சிக்ஸ் மந்த்ஸ்.. ஐம் இன் லவ் வித் யூ.. வில் யூ மேரி மீ? (நான் உங்களை ஆறு மாசமா பார்த்துட்டு இருக்கேன். உங்களை நான் விரும்பறேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களா?)” பட்டென்று அந்தப் பெண் கேட்க,             

“சாரி..” சூர்யா ஒற்றை வார்த்தையில் பதில் கூறினான்..

“ஹான்.. புரியல..” அந்தப் பெண் குழப்பமாகவும், படபடப்புமாக கேட்க, தலையை இடம் வலமாக அசைத்தவன்,

“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு. நான் என் மனைவியை உயிருக்கு உயிரா லவ் பண்ணிட்டு இருக்கேன். நான் சிங்கள் இல்ல. சோ சாரி..” சூர்யாவின் பதிலில், அவன் சொன்னதைக் கேட்ட அவனது நண்பர் கூட்டம் மொத்தமும் அதிர்ந்து போனது..

“சூர்யா..” அவனது நண்பர்கள் கூச்சலிட,

“எஸ்.. ஐம் மேரீட்.. என் வைஃப் ஒரு டாக்டர்.” என்றவன், அதற்கு மேல் சொல்ல முடியாமல் தொண்டையடைக்க, கையில் இருந்த கோப்பையில் இருந்த மதுவை ஒரே மடக்கில் குடித்துவிட்டு, மீதம் இருந்த பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து நடக்கத் துவங்க, அவனோடு சில வருடங்களாக ஒரே வீட்டில், வசிக்கும் நண்பனுமே அதிர்ந்து தான் போனான்..

error: Content is protected !!