உருகிடும் உயிர்மெய்கள் 1

உருகிடும் உயிர்மெய்கள் 1
அத்தியாயம் – 1
சென்னை மெரீனா… பல அரசியல் தலைவர்களின் நினைவாலயங்கள், முக்கியமான அரசு அலுவலகங்களைக் கொண்டிருக்கும் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள உலகின் மிக நீளமான இரண்டாவது கடற்கரை.
மாலை நேரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொழுதுபோக்கவும் தத்தம் பிழைப்பைப் பார்க்கவும் கூட்டம் கூட்டமாய் வந்துபோகும் இடம்.
அன்று மாலையும் ஜெகஜோதியாய் காட்சியளிக்க, சற்று தூரத்தில் சில சிறுவர் சிறுமியரோடு விளையாடிக் கொண்டிருந்த தன் இரண்டரை வயது மகள் பூஜாவைப் பார்வையால் தழுவிக் கொண்டாள் நேத்ரா.
ஜனசந்தடியான இடங்களைத் தவிர்த்து சற்று ஒதுங்கி வந்து மணலில் அமரந்திருந்தாள்.
இருள் மெல்ல மெல்ல கவியத் துவங்க, கடல்காற்று போட்டிருந்த உடையோடு போட்டி போட்டு பரபரக்க, முகத்தில் மோதிய முடிக்கற்றைகளை ஒதுக்கியவளின் கவனம் பாதி குழந்தையின் மீதும் மீதி சமீபகாலமாக மாறத் துவங்கியுள்ள கணவனின் நடவடிக்கைகள் மீதும் குவிந்திருந்தது.
“பூஜா, அம்மா முன்னாடியே விளையாடு. தூரமாப் போகக் கூடாது.” சற்றே தூரமாய் ஓடி விளையாடிய மகளை அதட்டியவளுக்கு, எப்போதும் போல எண்ணம் ஓடியது.
‘அப்படியே அவ அப்பாவ மாதிரி! எப்ப பாரு ஃபிரெண்ட்ஸ் பிரெண்ட்ஸ். பொண்டாட்டி பிள்ளையவிட அவருக்கு ஃபிரெண்ட்ஸ்தான் முக்கியம். அம்மாவைவிட இவளுக்கும் ஃபிரெண்ட்ஸ்தான் முக்கியம்.
வந்து ஒருமணி நேரத்துல இத்தனை பசங்களை ஃபிரெண்டு புடிச்சு விளையாடுறா.’ நொடித்துக் கொண்டாலும் பிள்ளையை நினைத்து பெருமைதான் அவளுக்கு.
அழகும் அறிவும் ஒருசேர வாய்த்த குழந்தை. ஏனோ சில நாட்களாக காரணம் தெரியாமல் தவித்துத் தத்தளிக்கும் மனதுக்கு அருமருந்து அவள்.
தண்ணீர் குடிக்க அருகே வந்த குழந்தைக்கு வைத்திருந்த திண்பண்டத்தைக் கொடுத்து, தண்ணீர் புகட்டி வாயைத் துடைத்துவிட்டவள்,
“பூஜா, கிளம்பலாமா? நைட் ஆகிடுச்சி வீட்டுக்குப் போகனும்ல.”
“ம்மா… ம்மா… ப்ளீஸ். இன்னும் கொஞ்ச நேரம்.”
மூக்கைச் சுருக்கி உதட்டைச் சுழித்து மகள் கேட்ட அழகில் புன்னகை சிந்தியவள் தலையசைக்க, இருளில் ஒளிரும் பந்தை எடுத்துக்கொண்டு ஓடியது சின்னச் சிட்டு.
“ரொம்ப தூரம் போகாத!” அவள் குரல் காற்றில் கரைந்து தேய்வதாய்…
மசமசப்பான இருளில் தொலைவில் தெரிந்த அடிவானில் பார்வையை பதித்தாள்.
வார இறுதிகளில் கூட சாக்குகள் கூறி வீடு தங்காமல் வெளியே சுற்றும் அவளது கணவன் ரவீந்தர், இரவுகளில் வீடு திரும்ப வெகுநேரம் எடுத்துக் கொள்வதும், சமீபமாய் அடிக்கடி பார்ட்டி என்று குடித்துவிட்டு வருவதும், கேட்டால் அலட்சியமாய் பதில் சொல்வதும் வெகுவாய் வருத்தியிருந்தது அவளை.
ரவீந்தரும் நேத்ராவும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்கள் திருமணத்துக்கு ரவீந்தர் வீட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்ப, அனைவரையும் எதிர்த்து நேத்ராவை பதிவுத் திருமணம் செய்து கொண்டான் ரவி.
தனியே வீடு எடுத்து காதல் மனைவியை வெகு சந்தோஷமாகவும் வைத்துக் கொண்டான். பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்த அவனுக்கு அது எளிதாகவும் இருந்தது.
இளம் தம்பதிகள் காதலில் திளைத்து வாழ்க்கையை அனுபவிக்க, ஆரம்பத்தில் அவர்களது திருமணத்தை எதிர்த்தாலும் பூஜா பிறந்த பிறகு பேத்தியின் முகத்துக்காக மகனையும் மருமகளையும் ஏற்றுக் கொண்டனர் ரவீந்தரின் வீட்டில்.
விசேஷ நாட்களில் மாமியார் வீட்டுக்குப் போகவர என்று இருந்தாலும் இப்போதுவரை தனிக்குடித்தனம்தான். ஒன்றாக வந்துவிடச் சொல்லி அவர்களும் சொல்லவில்லை, இவர்களும் போகவில்லை.
நேத்ராவிற்கு பெற்றோர்கள் இல்லை. பள்ளிப் பருவத்திலேயே பெற்றோரை இழந்தவள் அவள்.
உடன் பிறந்த அண்ணன் அண்ணியின் பராமரிப்பில் இருந்தவளுக்குத் திருமணம் ஆனதும், அவளது அண்ணனுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு வர, மனைவியோடு வெளிநாட்டில் செட்டில் ஆனவனை கடைசியாய் பார்த்தது பூஜா பிறந்தபோதுதான்.
தங்கையின் நலனை சில மாதங்களுக்கு ஒருமுறை ஃபோனில் அழைத்து விசாரிப்பதோடு அண்ணனின் பாசம் நின்றுவிடும். அண்ணிக்கு அதுவும் கிடையாது.
ஆதரவும் அனுசரணையும் ரவியிடம் மட்டும்தான்… ஆனால் அது முழுதாய் கிடைக்காததே பிரச்சனை.
இன்று காலையில் கூட ரவியோடு பலத்த வாக்குவாதம்.
“ச்சே…! மனுஷன் இருப்பானா இந்த வீட்ல? வரவர வீட்டுக்கு வரக்கூடப் பிடிக்கல” என்றபடி கோபமாய் வெளியேறியவன் மாலைவரை வீடு திரும்பவில்லை. இவளது அலைபேசி அழைப்புகளையும் எடுக்கவில்லை.
குழந்தையோடு மெரினா செல்வதாய் இவள் அனுப்பியிருந்த மெஸேஜை பார்த்ததற்கு அடையாளம் மட்டும் நீலநிறமாய் காட்ட, ரிப்ளை ஏதுமில்லை.
கடல்காற்றில் மனப்புழுக்கம் தீரலாம் என்று தோன்ற குழந்தையோடு வந்திருந்தாள்.
குடும்பமாய் சந்தோஷமாய் வெளியே சென்ற நாட்கள் என்றோ வெகுகாலத்திற்கு முன்பு நடந்ததாய் தோற்றம் காட்டியது.
அப்படியே அவனை எங்காவது அழைத்தாலும்,
“வாரம் முழுக்க ஆஃபீஸ்ல வேலை நெட்டி முறியுது. சன்டே ஒருநாள்தான் எனக்கு ஃபிரியா இருக்கு. இன்னைக்கும் கோவிலுக்கு வா. பீச்சுக்கு வான்னு கூப்பிடாத.”
“சரி, எங்கயும் போக வேண்டாம். சிக்கன் எடுத்து வச்சிருக்கேன். நல்லா சமைச்சு சாப்பிட்டு வீட்லயே இருப்போம். ரொம்ப நாளாச்சுங்க நீங்க சன்டே வீட்ல சாப்பிட்டு.”
“வாரம் முழுக்க உன் சமையல்தான சாப்பிடறேன். அதென்ன சன்டே மட்டும் ஸ்பெஷல். அன்னைக்கு ஒருநாள்தான் என் ஃபிரெண்ட்ஸோட ஸ்பென்ட் பண்ண முடியும். நான் வெளியில போறேன்.”
அலட்சியமாய் வந்தன வார்த்தைகள். கோபமும் ஏமாற்றமும் போட்டி போட்டாலும் அடக்கிக்கொண்டு,
“சரி, நீங்க எங்க போறீங்களோ அங்க எங்களையும் கூட்டிட்டு போங்க. நாங்களும் வரோம்.”
“ஏன்? பக்கத்து வீட்டு மாமியையும் கூப்பிட்டுக்கோயேன். லூசு…! நான் போறது ஃபிரெண்ட்ஸோட லாங் டிரைவ். அப்படியே பப் போயிட்டு வருவேன். நீயும் அங்க வரியா?”
நக்கலும் நையாண்டியுமாய் கேட்பவனை முறைப்பதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை அவளால். மேலும் மேலும் வாக்குவாதம் முற்றினால் அன்றையநாள் சண்டையில்தான் முடியும்.
மனக்கொதிப்பைத் தோழி ஒருத்தியிடம் சொல்லிப் புலம்ப,
“இங்க பாரு… நாள் முழுக்க வீட்ல சும்மாவே உட்கார்ந்து இருந்தா இப்படிதான் தேவையில்லாதத மனசுல போட்டு குழப்பிக்குவ. பேசாம வேலைக்குப் போக ட்ரை பண்ணு. நீயும் பிசியாகிடுவ. தேவையில்லாத சிந்தனைகள் இருக்காது. ரவியையும் டார்ச்சர் பண்ண மாட்ட.”
“நான் ரவிய டார்ச்சர் பண்றேனா?” அழுகையும் கோபமுமாய் கேட்க…
“நீ ஒத்துக்கலைன்னாலும் அதான் நிஜம். கல்யாணம் முடிஞ்ச புதுசுல இருந்த மாதிரி ஆம்பிளைங்க எப்பவும் பொண்டாட்டி பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கமாட்டாங்க நேத்ரா.
வாரம் முழுக்க உழைக்கிறவருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் வெளிய போறது ரிலாக்ஸா இருக்கும்னா போயிட்டு வரட்டுமே. நீ ஏன் தடுக்கற? சண்டை போடுற?”
“…”
“வாரத்துல ஒருநாள் ரெண்டுநாள் குடிக்கறதெல்லாம் இப்ப சர்வசாதாரணம்.”
“…”
“நீதான் தேவையில்லாம எதையெதையோ யோசிச்சு உன்னையே குழப்பிக்கிற நேத்ரா. பூஜாவுக்கு ப்ளே ஸ்கூல் சேர்க்கற வயசுதான. அவளை ஸ்கூல் சேர்த்துட்டு நீ பார்ட்டைம் ஜாப் மாதிரி ஏதாவது ட்ரை பண்ணு.”
கல்லூரி படிக்கும்போதே காதல். படிப்பு முழுதாய் முடியும் முன்னே திருமணம். படிப்பு முடிந்த கையோடு குழந்தை, அதன் பராமரிப்பு என வாழ்க்கை ஓடியிருக்க,
‘பேருக்காய் வாங்கிய ஒற்றை டிகிரியை வைத்துக்கொண்டு என்ன வேலைக்குப் போக முடியும்?’ ஆயாசமாய் தோன்றினாலும் தோழியின் யோசனை மனதுக்கு சரியாய்பட்டதால் அன்றிரவே கணவனிடம் பேசிப் பார்த்தாள் நேத்ரா.
இரவின் தனிமையில் கூடல் களிப்பில் படுத்திருக்கும் கணவன் மார்பில் சாய்ந்தபடி தன் எண்ணத்தைக்கூற…
“இப்ப நீ வேலைக்குப் போக அப்படி என்ன அவசியம் நேத்ரா? தேவைக்கு அதிகமாவே நான் சம்பாதிக்கிறேன். நீ ஃபிரியா பாப்புவ பார்த்துக்கிட்டு இருந்தா போதாதா?
ஏன் தேவையில்லாத டென்ஷனை உன் தலையில ஏத்திக்கிற? உனக்கு ரொம்ப போரடிச்சா நாம வேணா அடுத்த பேபிக்கு ட்ரை பண்ணுவோமா டார்லிங்?” என்றபடி இழைந்தவனிடம் மேற்கொண்டு பேசமுடியவில்லை அவளால்.
வேலைக்குப் போகதான் அனுமதி கிடைக்கவில்லை, மேற்கொண்டு ஏதாவது படிக்கலாமென்று அவனிடம் பேசி தொலைதூர கல்வி முறையில் மேற்படிப்பில் சேர,
நான்கு வருடங்களாய் தொடர்பற்றுப் போயிருந்த பாடங்கள் வேற்றுகிரக மொழியாய் அவளை மிரட்டியதுதான் மிச்சம்.
கணவனின் நடவடிக்கைகள் சாதாரணமாய் அனைவரின் வீட்டிலும் நடப்பது போலதான், நாம்தான் தவறாய் நினைக்கிறோம் போல என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டவளுக்கு, அது அப்படியல்ல என்று மண்டையில் அடித்துப் புரிய வைத்தது இன்று காலையில் நிகழ்ந்த நிகழ்வு.
வழக்கம் போல ஞாயிறு காலையிலேயே வெளியே கிளம்புவதாய் கூறியவன் குளிக்கச் சென்றிருக்க, விடாமல் அலறிய அவனது அலைபேசி அழைப்பை எடுத்திருந்தாள் நேத்ரா.
‘பி.ஆர் காலிங்’ என்ற அழைப்பைப் பார்த்தவளுக்கு யாரந்த பிஆர் என்று தோன்ற, அழைப்பை ஏற்றதும் காதில் வந்து மோதிய குரல் அதுவொரு பெண் என்பதைப் புரியவைத்தது.
எதிர்புறம் பேசுவது யார் என்பதைக்கூட கருத்தில் கொள்ளாமல், தன்போக்கில் பேசிச் சென்ற அந்த குரல் நேத்ராவின் உள்ளத்தில் பிரளயத்தையே உண்டாக்கியது.
“ரவி டார்லிங்… எப்ப எனக்கு ஓகே சொல்லுவ. எவ்வளவு நாளா ஏமாத்துற? இன்னைக்கு சன்டே நாம அவுட்டிங் போலாமா?” என்று கொஞ்சலாய் ஆரம்பித்து அந்த குரல் பேசிக்கொண்டே போக, அலைபேசி நழுவியதுகூடத் தெரியாமல் அதிர்ந்து நின்றிருந்தாள் நேத்ரா.
குளித்து வெளியே வந்த ரவியைப் பார்த்து தன்னிலை மீண்டவள், புயலை உள்ளடக்கிய குரலில், “யார் அது பி.ஆர்?”
நேத்ராவின் குரல் மாறுபாட்டில் கூர்மையாய் அவளைப் பார்த்தவன், “ஃபோன் வந்துதா? எனக்கு வர்ற காலை நீயேன் அட்டென் பண்ற?” எரிந்து விழ… அவனை கோபமாய் நோக்கியவள்,
“பிஆர்ங்கறது யாருன்னு கேட்டேன்?”
“ம்ப்ச்… ப்ரீத்தி, என் ஆஃபீஸ் கொலீக். என்னோட ஃபிரெண்டு. போதுமா விளக்கம்?”
“ஃபிரெண்டு ஃபிரெண்டு ஃபிரெண்டு… யாரைக் கேட்டாலும் ஃபிரெண்டு? எவ்வளவு பொய் சொல்வீங்க ரவி? ஒரு ஃபிரெண்டு கூட பேசற மாதிரி அவ பேசல.” கோபத்தில் வெடித்த நேத்ராவை நோக்கியவன்,
“லுக், அவ ஃபாரின்ல படிச்சு வளர்ந்த பொண்ணு. அவ வளர்ந்த கல்ச்சர் வேற. எல்லாரோடையும் நல்லா ஜோவியலா பழகுவா. மத்தபடி தப்பான பொண்ணு இல்ல. நீ எதையாவது தப்பா கற்பனை பண்ணாத.”
இவ்வளவு விளக்கம் கொடுத்ததே அதிகம் என்பது போல அலட்சியமாய் அவன் நகர, விடாமல் அவனை இழுத்து வைத்து சண்டையிட்டதன் விளைவு,
“ச்சே! மனுஷன் இருப்பானா இந்த வீட்ல? வரவர வீட்டுக்கு வரக்கூடப் பிடிக்கல” என்றபடி வெளியேறியிருந்தான் ரவி.
தன்னைமீறி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள், சுற்றுப்புறம் வெகுவாய் இருட்டியிருக்கவும் குழந்தையை அழைத்துக்கொண்டு கிளம்புவோம் என்றெண்ணியபடி சற்றே தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை நோக்கி நடந்தாள்.
மங்கலாய் சோடியம் விளக்கு வெளிச்சத்தில் சிறிதும் பெரிதுமாய் ஏழெட்டுப் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களுக்கு நடுவே பூஜாவைக் காணாமல் திகைத்துப் போனாள்.
சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் பூஜா கண்ணில் படாமல் போக, உள்ளுக்குள் பயம் பந்தாய் கிளம்பியது. அங்கே விளையாடிய சிறுவர்களிடம்,
“பூ…பூஜா இ…இங்க பூஜான்னு ஒரு பாப்பா விளையாடினாளே. பிங்க் கலர் ஃபிராக் போட்டிருந்தாளே. அவ எங்க? யாராவது பார்த்தீங்களா?”
“இங்கதான் விளையாடினா ஆன்ட்டி. பால் வச்சு விளையாடினா.”
“இந்த பக்கம் போனா”
“இல்ல அந்த பக்கம் பசங்களோட விளையாடினா” குழந்தைகள் ஆளுக்கொரு பக்கமாய் கைகாட்ட, பதட்டத்தோடு அனைத்துபுறமும் தேடிப் பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எங்கு தேடியும் குழந்தையைக் காணோம்! இவளது அழுகையும் தவிப்பும் பார்த்து அங்கிருந்த சிலரும் குழந்தையைத் தேட, அனைவருக்கும் தோல்வியே கிட்டியது.
“பூஜா… எங்கடா போன? அம்மாகிட்ட வந்துடு செல்லம்…” அழுகையோடு அரற்றியவளுக்கு அடுத்து என்ன செய்வது என்பதுகூடப் புரியாத நிலை. பதட்டத்தில் மயக்கமே வரும் போலிருந்தது.
அழுகையோடு ரவிக்கு அழைக்க, அழைப்பை எடுக்க மறுத்த கணவனை என்ன செய்வது என்று புரியாமல், வாட்ஸ்ஆப்பைத் திறந்து,
“ரவி, பீச்ல விளையாடிக்கிட்டு இருந்த நம்ப பாப்பாவக் காணோம். எனக்கு என்ன பண்றதுன்னே புரியல. பீளீஸ் ரவி ஃபோன் அட்டென் பண்ணி பேசுங்க.” அழுகையோடு வாய்ஸ் மெஸேஜ் ஒன்றை அனுப்பி வைத்தாள்.
அடுத்த சில நொடிகளில் மெஸேஜ் பார்க்கப்பட்டதற்கான அடையாளம் வர, அடுத்த ஓரிரு நொடிகளில் நேத்ராவுக்கு அழைத்திருந்தான் ரவி.
—தொடரும்…